140. குற்ற உணர்வு (குணசீலத்துக் கதை)
140. குற்ற உணர்வு (விகடன் 05.01.2024) இரவு மணி 9.00. புத்தாண்டுப் பிறக்க இன்னும் மூன்று மணி நேரமே உள்ளது. சீனியர் சப்ளையர் கணேசனுக்கு மனசு சரியில்லை. குற்ற உணர்வில் புழுங்கிக் கொண்டிருந்தான். *** டிசம்பர் 31 - ‘புத்தாண்டு ஈவ்… ’ நகரத்தில் அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழியும் தினங்களில் இது முதன்மையானது. ‘ஆன் லைன் ’ புக்கிங் செய்பவர்கள்…; அழைப்பு - மெசேஜுக்காகஙக காத்திருப்போர்…; எப்போது அழைப்பார்களென்று ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் குடும்ப உறுப்பினர்கள் ; நண்பர் குழாம்கள்…!; காதல் ஜோடிகள்…! எல்லோரும், வெறும் வாய்க்கு நேரடியாகவும், செல்போன் மூலமும், அரட்டை மென்றார்கள். *** “வீட்ல, ‘சோறு கொதிக்குது! அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணுங்க ’ ன்னுச் சொன்னாத், தட்டை தூக்க மூஞ்சீல அடிப்பாரே… உங்கப்பா, இங்கே மட்டும் மணிக்கணக்காக் காத்திருக்க முடியுதாமா…? ” - கிடைத்த வாய்ப்பில், ஒரு தாய் தன் குழந்தைகள் முன் கணவனைக் குத்திக் காட்டினாள். “வூட்ல நிம்மதியா தின்னுப்புட்டு, சாவகாசமா, ‘மிட் நைட் மாஸ் ’ காட்டப் போயிருக்கலாம். சோத்துக்கு ‘கவாங்-கவாங் ’ ன்னு காத...