140. குற்ற உணர்வு (குணசீலத்துக் கதை)

 

140. குற்ற உணர்வு

(விகடன் 05.01.2024)



இரவு மணி 9.00. புத்தாண்டுப் பிறக்க இன்னும் மூன்று மணி நேரமே உள்ளது.

சீனியர் சப்ளையர் கணேசனுக்கு மனசு சரியில்லை.

குற்ற உணர்வில் புழுங்கிக் கொண்டிருந்தான்.

***

டிசம்பர் 31 - ‘புத்தாண்டு ஈவ்…

நகரத்தில் அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழியும் தினங்களில் இது முதன்மையானது.

‘ஆன் லைன் புக்கிங் செய்பவர்கள்…;

அழைப்பு - மெசேஜுக்காகஙக காத்திருப்போர்…; 

எப்போது அழைப்பார்களென்று ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் குடும்ப உறுப்பினர்கள் ; 

நண்பர் குழாம்கள்…!; காதல் ஜோடிகள்…!

எல்லோரும், வெறும் வாய்க்கு நேரடியாகவும், செல்போன் மூலமும், அரட்டை மென்றார்கள்.

***

“வீட்ல, ‘சோறு கொதிக்குது! அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணுங்கன்னுச் சொன்னாத், தட்டை தூக்க மூஞ்சீல அடிப்பாரே… உங்கப்பா, இங்கே மட்டும் மணிக்கணக்காக் காத்திருக்க முடியுதாமா…? - கிடைத்த வாய்ப்பில், ஒரு தாய் தன் குழந்தைகள் முன் கணவனைக் குத்திக் காட்டினாள்.

“வூட்ல நிம்மதியா தின்னுப்புட்டு, சாவகாசமா, ‘மிட் நைட் மாஸ் காட்டப் போயிருக்கலாம். சோத்துக்கு ‘கவாங்-கவாங்ன்னு காத்துக் கிடக்கணும்னு தலையெழுத்து…! - அலுத்துக்கொண்டார் ஒரு நானோஜெனேரியன்.

“நாளு கிழமைன்னா, வீட்டுல சமையல் செய்யக்கூடாது, ஓட்டல்ல திங்கணும்கற ‘கல்ச்சர் சமூகத்துக்கு நல்லதில்லே...! - புலம்பினார் ஒரு சமூக ஆர்வலர்.

***

‘சோளப்பொறி, ‘பாக்கெட் வருவல் எனக் கொறித்துப் கொண்டிருந்தன சில குழந்தைகள்.

“அடுத்தப் புத்தாண்டு ஈவ்க்காவது சோறு கிடைக்குமா?  - விரக்தியாகச் சிரித்தனர் சிலர்.

மோட்டார் காரினுள் அமர்ந்தும், பானட்டில் ப்ரஷ்டத்தைத் தாங்கியபடியும்,  ஆங்காங்கே கிடந்த நாற்காலிகளில் அட்டணக்கால் போட்டபடியும், சுவற்றில் சாய்ந்தபடியும், மெதுவாக உலவிக்கொண்டும், கைப்பேசியில் மூழ்கியிருந்தனர் பலர்.

***

“டோக்கன் நம்பர் 113, 114, 115, 116…

அழைத்த நாலு டோக்கன்களின் மூன்று உள்ளே சென்றுவிட்டது.

“115… 115… - இரண்டு மூன்று முறை ஏலம் போட்டதற்கு எந்தவித ரெஸ்பான்ஸுமில்லை.

“115 க்கு பதிலா, “வரலாமா...! வரலாமா...! என்று ஆலாய்ப் பறந்தது 117.

115 ன் இன்மை உறுதியானபின், சீனியாரிட்டிப்படி 117க்கு அனுமதி கிடைத்தது.

“இதே ரேஞ்சுலப்போனா, புத்தாண்டுலதான் நாம ‘லஞ்ச்தான் சாப்பிட முடியும்…! - வருத்தத்துடனும், கோபத்துடனும் ஆர்டரைக் ‘கான்சல் செய்துவிட்டுச்  சென்றனர் சிலர்.

***

காலையில் குற்ற உணர்வுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டது முதல் இப்போது வரை நடைபெற்ற நிகழ்வுகளெல்லாம் நினைவில் சினிமாத் திரைப் போல வந்தன.

வழக்கம் போலக் காலையில் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தான் கணேசன்.

“ஏ பேமானி...! வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா...? - ‘சடர்ன் ப்ரேக் போட்டுத், தார்ச்சாலையில் ‘டயர் தேய நிறுத்திக், ‘கார் ஜன்னல் வழியாகத் தலைக், கைகளை நீட்டிப் பல்வேறு ‘டெஸிபெல்களில் திட்டினார்கள். அது கூட வருத்தமில்லை கணேசனுக்கு...;

‘இதோடு விடமாட்டார்கள்; கூடி உண்ணும்போதும், கோவில் குளமென்று உலவும்போதும்,  “ஒரு சாவுக் கிராக்கி, சைக்கிளை நம்மக் கார்ல விடப்பாத்தான் பாரு...! - என்று மாய்ந்து மாய்ந்துப் பேசுவார்கள். கேவலமாகப் பேசிப் பேசிச் சிரிப்பார்கள்.

‘தன்னை மையமாக வைத்து, எவேரோக், கூடிக் கதைக்கக் கருப் பொருளாகிவிட்டோமே...? - என்ற துக்கம் நெஞ்சை அடைத்தது.

வீட்டிலிருந்து வருத்தத்துடன் புறப்பட்டதால்,  ‘பேலன்ஸ் தவறிவிட்டது கணேசனுக்கு.

பல வருடங்களாக மிதி வண்டியில் செல்பவன்தான். ஒருபோதும் இப்படி நடந்ததில்லை. இதுவே முதல் அனுபவம் அவனுக்கு.

***

பணி புரியும் நட்சத்திர ஓட்டலுக்குள் நுழைந்தான் கணேசன்.

ஊதுபத்தி, தசாங்கம் புகைந்து மணக்க, சாட்டை மாலையும் கழுத்துமாய், பூவும் பொட்டுமாய், சர்வாலங்கார பூஷதையாய், சர்வ லக்ஷ்ணத்துடன், கையில் அன்னவெட்டி அலங்கரிக்கப், புன்முறுவலோடு ஜ்வலித்தபடி, அருள்பாலித்துக் கொண்டிருக்கும், ‘அன்ன-பூரணி சிலைக்கு முன் நின்று வழக்கம்போலக் கண்மூடிக்  கைக்கூப்பிக் கும்பிட்டான்.

கிண்ணத்திலிருந்தக் குங்குமத்தைக் கிள்ளி நெற்றியில் இட்டுக்கொண்டான்.

கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளிக்குக் கும்பிடு போட்டான்.

சமையலறைக்குள் நுழைந்தான். 

‘மெனுவை கவனமாக உள்வாங்கினான்.

***

தன் ஆளுகைக்குரிய மேஜைகளருகேச் சென்று, வாடிக்கையாளர்களுக்குக் கைக்கூப்பினான்.

கண்கள் ‘மெனு கார்ட்டை பார்த்தாலும், “என்ன இருக்கு? என்று அனிச்சையாகக் கேட்டனர் கஸ்டமர்கள்.

ஐட்டங்களைத் தெளிவாகவும் நிதானமாகவும் சொன்னான் கணேசன்.

ஆளாளுக்குச் சொன்ன ஆர்டர்களைக் கவனமாகக் குறித்துக் கொண்டான்.

ஆர்டரை படித்துக் காட்டினான்.

நீக்கல், சேர்த்தல் முடிந்து, இறுதிக் குறிப்புடன்  கிச்சனுக்குள் போனான்.

***

கொண்டுவந்ததில் சிலவற்றை முதல் மேசையில் வைத்தான்.

“கெனாக் காணும் சர்வர் இன்று…! - துடுக்காய்ப் பாடினான் ஒரு விடலை.

“சப்ளையர் இந்த உலகத்துலேயே இல்லே போல! ஹ..ஹ..ஹா...!;

“செகண்ட் ஷோவா இருக்கும்...! - இரட்டைப் பொருள்படச் சொல்லிச் சிரித்தான் ஒருவன்.

ஆளாளுக்குக் கலாய்த்தபோதுதான், தன் தவறு தெரிந்தது கணேசனுக்கு.

இரண்டாவது மேஜைக்கான ஆர்டரை முதல் மேஜையில் வைத்தற்காகச் ‘சாரி சொன்னான்.

***

 ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்...!- காலையில், வந்திருந்த விருந்தாளிகள் முன்னிலையில் மனைவி சுமதியைக் கோபத்தில் கத்திவிட்ட கணேசனுக்கு மனசு சரியில்லை.

அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல, செயல்களிலும் தொடர்ந்தது.

***

 “கணேசா, மொகம் வாட்டமாயிருக்கே..! ஏதும் ப்ரச்சனையா?  - சரக்கு மாஸ்டர் ஜம்பு, அக்கரையோடு விசாரித்தார்.

“ஹெல்த் நல்லாயிருக்கியோன்னோ?, - சுணக்கமா இருக்கயேனு கேட்டேன்.! - பாசத்துடன் விசாரித்தார் காபி மாஸ்டர், மருதநாயகம்.

“ராத்திரி தூக்கம் முளிப்போ..? - அர்த்த புஷ்டியுடன் கண்சிமிட்டினான்,  சப்ளையர் மாதவன்.

வழக்கமான வேகமில்லை, துள்ளலில்லை. சுறுசுறுப்பில்லை; வழக்கத்துக்கு மாறாக, மந்தமாயிருந்தது கணேசனின் செயல்பாடுகள்.

***

சாலையில், கார்ப் பிரயாணிகளிடம் திட்டு வாங்கி, அவமானப்பட்டான். 

இங்கு கஸ்டமர்களிடம் சிறுமைப்படுகிறான்.

‘இதுவரை இரண்டு கசப்பான அனுபவங்களைச் சம்பாதித்தாயிற்று;

பொழுது போவதற்குள் இன்னும் என்னனென்ன அவமானங்கள் காத்திருக்கிறதோ...? - மனசு மருகியது கணேசனுக்கு.

***

ஆங்கில வருடத்தின் கடைசீ நாளான இன்று. ‘ந்யூ இயர் ஈவ் ஆஃபர் வேறு.

அனைத்து ஓட்டல்களிலும் அலைமோதும் வாடிக்கையாளர்களின் கூட்டம்.

ஹோட்டல் நிர்வாகம் தாராளமாய் தினப்படியும், சம்பளமும், தருவதால், கூட்டம் அலைமோதும் சிறப்பு நாளில், தற்செயல் விடுப்பெடுக்கவும், மனசாட்சி இடம் கொடுக்கவில்லை கணேசனுக்கு.

***

 ‘கொஞ்சமாவது அறிவிறுக்காடி? என்று தொடங்கி கோபத்தில், கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் வீட்டிற்கு வந்திருந்த அக்கம்பக்கத்தார் முன், மனைவி சுமதியைச் சுள்ளென்றுப் பேசிவிட்ட நிகழ்வு, நினைவை விட்டு அகல மறுத்தது;

பதிலுக்கு ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசி, ஞாயப்படுத்தியோ; முகம் காட்டியோ; பாத்திரம்-பண்டங்களை வீசியெறிந்தோ, சுமதி எதிர் வினையாற்றியிருந்தால்கூட மனசு ஆறியிருக்கும்;

‘ஸாரி என்று சொல்லிவிட்டு, அமைதியாய், அவசரமாய். கர்ம யோகியாய் அவள் செயல்பட்டதுதான், குற்றவுணர்வை அதிகப்படுத்திக்கொண்டேயிருந்தது.

***

காலையில் நாவடக்கமின்றிப் பேசத் தூண்டிய அதே மனது, இப்போது “நீ அப்படிப் பேசியிருக்கக் கூடாது...! - என்றுக் குத்திக்காட்டுகிறது.

மனசின் குணமே இதுதான். நேரத்துக்குத் தகுந்தாற்போல் பேசும்; யோசிக்காமல் தோன்றியதைச் சொல்லிவிடும். செய்துவிடும்.

அதனால்தான், ‘மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்கிறதோ உலகநீதி.

***

மனசு மிகவும் நுட்பமானது.

சிக்கல்களும், குமுறல்களும், முரண்பாடுகளும் இயல்பாக மனதில் அரங்கேறுகின்றன.

சந்தேகமேயில்லை. ‘மனம் ஒரு குரங்குதான்..

மனதை அடக்கி ஆற்றுப்படுத்த ஒரே ஒரு ஆயுதம் ‘புத்தி மட்டும்தான்.

மூளையின் கட்டுப்பாட்டில் வருவதால், அறிவு பூர்வமாக யோசிக்கும் குணம் புத்திக்கு மட்டுமே உண்டு.

அதனால்தான் ‘புத்திமான் பலவான். என்கிறது ஆன்றோர் வாக்கு.

“புத்திர் பலம்... யஸோ தைர்யம் - என்று அனுமனிடம் பிரார்திப்பதும் அதனால்தானோ?

 “மனைவியிடம் ‘சாரி...! சொல்லிடு கணேசா! - என்றது புத்தி.

***

ஓட்டல்களைத் திறந்து வைத்துக்கொண்டு, கஸ்டமருக்காகக் காத்திருந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது.

‘ஆன்-லைன்-புக்கிங், ‘டோர்-டெலிவரியெல்லாம் நடைமுறைக்கு வந்தபிறகு, எல்லா ஓட்டல்களும் ‘பிஸி…!பிஸி…!பிஸி…!தான்.

‘ஹாட்-பாக், ‘கூல்-பாக்... - என உணவுப் பெட்டிப் பொருத்திய இரு சக்கர வாகனத்தில் சீருடையும் அடையாள-அட்டையுமாகப் பறக்கும் நடமாடும் சப்ளையர்கள்தான் இன்று பிரசித்தம்.

டெலிவரி செய்யும் ஏரியாவுக்குத் தகுந்தாற்போல், ‘பேட்டா கிடைக்கும் அவர்களுக்கு.

டேபிள்-சப்ளையர்கள் போல டிப்ஸ் கிடைக்காது என்பதால் , இந்த மொபைல் சப்ளையர்களுக்கு  டேபிள் சப்ளையர்களைவிடச் சம்பளமும் அதிகம்.

***

கஸ்டமர்களில், பேர்ப் பாதிக்கு மேல் ‘பார்சல், ‘டோர்-டெலிவரி என்பதால் சமாளிக்க முடிகிறது. அனைவருமே நாற்காலிகளில் அமர்ந்து சாப்பிட வந்தாலோ தாங்கவேத் தாங்காது.

நெற்றியில் விபூதிப் பட்டை, கழுத்தில் உத்தராட்சம், மணிக்கட்டில், சிகப்புக் கயிறு, சோடாப்புட்டிக் கண்ணாடி, கலைந்த தலை, என்ற சாமுத்திரிகா லட்சணத்துடன், நாலு முழம் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, காதில் பென்சில் செருகியபடி,  தோளில் தொங்கும் அழுக்குத் துண்டால் அவ்வப்போது, முகமும் மூக்கும் துடைத்துக்கொண்டே, “அண்ணனுக்கு ரெண்டு ஊத்தாப்பம்…! என்று, சாப்பாட்டு மேஜையருகே நின்று கஸ்டமர் மீது, வாய்சாரல் வீசக் கத்தும், சப்ளையர்களையெல்லாம் நாற்பது ஐம்பது வருஷத்துக்கு முந்தைய வார,மாத-இதழ்களில் வரையப்பட்ட நகைச்சுவை-கேரிகேச்சர்களிலும், கதைகளின் பின்புலத்திலும், சினிமாக் காட்சிகளிலும்தான் பார்க்க முடியும்.

***

‘கேட்டரிங்-டெக்னாலாஜி வளர்ந்து, பளிச் எனச் ‘சீருடை, ‘அடையாள அட்டை, கைகளில் ‘டாப் எனக் சப்ளையர்கள் தரம் உயர்ந்துவிட்டாலும், கஸ்டமர்கள் மட்டும் மாறியதாய்த் தெரியவில்லை.

கேட்டல், கேட்டதையேக் கேட்டல், புரியாமல் கேட்டல், சந்தேகமாய்க் கேட்டல் இப்படிக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் கஸ்டமர்கள்..;

“இதைக் ‘கேன்ஸல் பண்ணிடுங்க. இதைச் சேர்த்துகிடுங்க...! - என்று மாற்றி மாற்றிக் குழப்பும் கஸ்டமர்கள்.

புன்னகை ததும்பும் முகத்துடன் சப்ளையர்கள் ஒப்பிக்கும் ‘மெனுவோசை…;

அந்த மேசையில் உள்ளவர்களின் காதுகளில் மட்டும் விழும் அளவுக்கு, மிதமான குரலில், சொன்னதையே தொனி மாறாமல் சொல்லும் கிளிப்பிள்ளைகயாய் உலா வரும் சப்ளையர்கள்.

***

சுமாரான ஓசையுடன் பின்னணியில் இசைக்கும் மேல் நாட்டு இசை...;

தட்டு – டம்ளர்கள் – ஸ்பூன் – பவல்…இவைகளின் உரசலோசை...;

“ஏவ்...-பசித்த, புளிச்ச, நிதானமான, சத்தமான ஏப்பங்கள்...;

நேரிலும், கைப்பேசியிலும் கதைக்கும், விடலைகளின் பேச்சுக்கள்..!;

வெளியில் சாப்பிடக் காத்திருப்போரைப்பற்றிக் சிறிதும் கவலைப்படாமல், அரட்டயடித்தபடி, மசமசவெனப் பொழுது போக்கும், கஸ்டமர்கள்...;

ஆர்டர் தர ஆவல்படுவோர்...;

செய்த ஆர்டருக்காகக் காத்திருப்போர்...;

சாப்பிட்டபின்  'பில்' வேண்டிப் பரபரப்போர்...;

குழந்தைகளின் அழுகை..; விடலைகளின் வெடிச் சிரிப்புகள்...;

பெரிசுகளின் உரத்த முணுமுணுப்புகள்...;

காதலர்களின் கொஞ்சல்கள்...; காமுகர்களின் மிஞ்சல்கள்...;

பரபரப்பின் உச்சத்தில் இருந்தது ஓட்டல்.

ஒரு கஸ்டமர் நிதானமாகச் சொல்லும் மெனுவை குறித்துக் கொண்டிருந்தான் கணேசன்.

***

"ஏய்…! சப்ளையரே இங்கே வாடா..!"  ஓங்கி ஒலித்தது ஒரு குரல்.

காலத்திற்குச் சற்றும் பொருந்தாத அநாகரீகமான ‘ஹை டெஸிபிள் கத்தல்... அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.

‘‘அறிவிருக்காடா உனக்கு, ஆர்டர் சொல்லி, ஒரு மணி நேரம் ஆச்சு...! பாப்பாப் பசீல  சுருண்டுக் கெடக்கு. அங்கே வெட்டிக்கதை பேசிக்கிட்டிருக்கே...?"

சுள்ளென்ற முகத்துடன் சப்ளையரை, மூர்க்கமாய்க் கத்தினார் நடு வயதுக் கஸ்டமர்.

***

"அறிவிருக்காடீ ஒனக்கு, பாப்பாப் பசீல சுருண்டுக் கிடக்கு. பொறுப்பில்லாம வந்தவங்ககிட்டே அரட்டையடிச்சிக்கிட்டிருக்கே...!"

‘காலையில், கணேசன் நாலுபேர் மத்தியில் கடிந்துகொண்டபோது, “சாரிங்க...! - என்று சொன்னபடியே, அவசரமாய்க் குழந்தையின் பசியாற்ற சமையலரைக்குள் ஓடிய  மனைவி சுமதியைப்போல;

தன் சுயமரியாதைப் பற்றிக் கவலைப்படாமல், செய்த தவறுக்குச் "சாரி சார்!" என்று சொல்லிவிட்டுக், குழந்தையின் பசி தீர்க்க, அவசரமாய் கிச்சனுக்குள் ஓடினான் சப்ளையர் கணேசன்.

அந்தக் குழந்தையின் பசியாற்றினான்.

***

மணி 11.55

இன்னும் ஐந்து நிமிடங்களில் புத்தாண்டு பிறக்கப் போகிறது.

கணேசனின் செல்ஃபோன் சிணுங்கியது.

“ஸாரி சுமதி...! - என்றான் ஃபோன் செய்த சுமதியிடம். குரல் உடைந்து வந்தது கணேசனுக்கு.

“எதுக்குங்க? இயல்பாகக் கேட்டாள் சுமதி.

“காலைல உன்னை ஓவராப் பேசிட்டேன் சுமதி...!

“அதையெல்லாம் நான் உடனே மறந்துட்டேன்; தப்பு என்மேலயும் இருக்குதானே…அதையெல்லாம் விடுங்க புத்தாண்டு பிறக்கற நேரத்துல அதையெல்லாம் பேசுவாங்களா?

“விஷ் யூ ஹாப்பி நியூ இயர்...2024

***

கணேசனின் மனைவி புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூற, அதே நேரம், ஓட்டலில் இருந்த மொத்தக் கூட்டமும் நேரிலும், கைப் பேசியிலுமாக  வாழ்த்தொலிகள் எழுப்பினர்.

 ‘மறப்போம் மன்னிப்போம்.. என்ற தன் மனைவியின் குணம் கணேசனுக்கும் வைரலாய்த் தொற்ற, சற்று முன் ‘தன்னை அறிவிருக்காடா.. என்று கேட்ட கஸ்டமரை நோக்கி 2024 புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளச் சென்றான்.

 

అఅఅఅఅఅఅఅఅ

Comments

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை