காதல் நிவந்தம்...! (நாவல்)
காதல் நிவந்தம்
Kaadal Nivandham
நாவல்
Novel
Author:
ஜூனியர்
தேஜ்
Junior Tej
For more books
https://www.pustaka.co.in/home/author/junior-tej
பொருளடக்கம்
பெற்றோர்க்குச் சமர்பணம்
அணிந்துரை
வாழ்த்துரை
குரு வந்தனம்
என்னுரை
முக்கியக் கதா பாத்திரங்கள்
நாவல் சுருக்கம்
அத்தியாயம் – 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
பெற்றோர்க்குச் சமர்ப்பணம்
A ஜானகி V அருணாசலம் (தேஜ்)
குரு வணக்கம்
அணிந்துரை
தமிழ் இலக்கிய உலகில் நாவல்கள் என்பது வெறும் கற்பனைத்
தளங்கள் மட்டுமல்ல; அவை
சமூகத்தின் கண்ணாடி. தனிமனிதப் போராட்டங்களின் ஆவணம். அந்த வரிசையில்,
எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்கள் படைத்துள்ள ‘காதல்
நிவந்தம்’ நாவல்,
ஒரு சாதாரணப் பெண்ணின் அசாத்தியமான எழுச்சியையும்,
அவளது வெற்றிக்குத் தூணாக நின்ற காதலையும் மிக
நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஆசிரியர், மனித
மனங்களின் நுணுக்கமான உணர்வுகளை இந்த நாவலில் எழுத்துக்களாக வடித்திருக்கிறார்.
இந்த நாவலின் நாயகி சாவித்திரி. ஒரு சாதாரண சமையல் கலைஞர்
சுந்தரம் மற்றும் பருவதம் தம்பதியரின் மகள். நாவலின் தொடக்கமே ஒரு பேரிடியுடன்
நிகழ்கிறது.
சாவித்திரி தனது பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு
முடிவுகளுக்காகக் காத்திருக்கும் தருணத்தில், அவளது
தந்தை மாரடைப்பால் காலமாகிறார்.
ஒரு ஏழைக் குடும்பத்தின் முதுகெலும்பு முறியும்போது,
அந்தப் பெண்ணின் கல்விக்கனவுகள் சிதைந்துவிடுமோ
என்ற அச்சம் வாசகர்களுக்கும் எழுகிறது. ஆனால், சாவித்திரி
அந்தச் சோதனைகளை, தனது லட்சியத்திற்கான படிக்கட்டுகளாக மாற்றுகிறாள்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு, வறுமையும்
தனிமையும் வாட்டிய போதும் சாவித்திரி தளரவில்லை. “முயற்சி தன் மெய்வருத்தக் கூலி
தரும்” என்ற வள்ளுவன் வாக்கின் பிரதிநிதியாய், ஓயாத
உழைப்பைத் தனது மூலதனமாக்கினாள்.
அவளது வெற்றிக்குப் பின்னால் ஒரு பெரும் உந்துசக்தியாக
இருப்பது ‘கஜா’
எனும் கஜேந்திரன். “புத்தகத்தை,
அட்டை முதல் அட்டை வரை படி” என்று அவன்
கற்றுக்கொடுத்த தாரக மந்திரமே அவளை மாநில அளவில் ஒன்பதாவது இடத்தைப் பிடிக்க
வைத்தது.
தன்னுடைய தாய், தந்தை
இருவரையும் இழந்த போதிலும், அந்த
வலியைத் தனது லட்சியத்திற்காக உரமாக்கிக் கொள்கிறாள்.
இறுதியில், தான்
பிறந்து வளர்ந்த அதே மாவட்டத்திற்கே மாவட்ட ஆட்சியராக (District
Collector) பதவியேற்று வருவது,
ஒவ்வொரு வாசகனின் மனதிலும் ஒரு சிலிர்ப்பை
ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இந்த நாவலின் பலமே அதன் கதாபாத்திரங்கள் தான்:
சாவித்திரி: பொறுமை, நிதானம்
மற்றும் அசாத்தியமான அறிவுக்கூர்மை கொண்டவள். அதிகாரமிக்க பதவியில் அமர்ந்த
பின்பும், தனது
வேர்களை மறக்காமல் தனது பழைய பள்ளிக்கும் வீட்டிற்கும் செல்லும் அவளது குணம்
நெகிழ்ச்சியானது.
கஜா (கஜேந்திரன்): ஒரு உண்மையான வழிகாட்டி. ஏழ்மை நிலையிலும்
ஐ.டி.ஐ படித்து, பின்னர்
பொறியாளராக உயர்ந்து, சுயதொழில்
தொடங்கும் அவனது பயணம் உழைப்பிற்கு இலக்கணம். சாவித்திரியின் மேல் அவனுக்குள்ள
காதல் ஆரவாரமில்லாதது, ஆனால்
மிகவும் ஆழமானது.
சுந்தரம் & பருவதம்:
உழைப்பையே தெய்வமாகக் கருதும் பெற்றோர். சுந்தரத்தின் தொழில் தர்மமும்,
பருவதத்தின் மன உறுதியும் போற்றுதலுக்குரியவை.
குறிப்பாக, கணவன்
மறைந்த பின் பருவதம் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களும்,
அவற்றை அவள் கையாளும் விதமும் ஆசிரியரின் சமூகப்
பார்வையை வெளிப்படுத்துகின்றன.
ஆசிரியர் கதாபாத்திரங்களின் அகப்போராட்டங்களை மிக அழகாக
விவரித்துள்ளார். கணவனை இழந்த ஒரு பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவலங்கள்,
நந்தகுமார் போன்ற அயோக்கியர்களின் கீழ்த்தரமான
எண்ணங்கள் போன்றவற்றை எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்.
அதே சமயம், சாவித்திரி
தனது பதவியைப் பயன்படுத்தி சாரங்கன் போன்ற சமூக விரோதிகளுக்குப் பாடம் புகட்டுவது
நீதியின் வெற்றியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
‘நிவந்தம்’
என்றால் கோவிலுக்கு அளிக்கப்படும் கொடை அல்லது
அறக்கட்டளை என்று பொருள்.
இந்த நாவலில், சாவித்திரியின்
வெற்றி என்பது அவளது காதலன் கஜா அவளுக்கு அளித்த அறிவுக் கொடை. அதேபோல்,
இறுதியில் சாவித்திரி தனது காதலைத்
தெரிவிக்கும்போது, அது
ஒரு சாதாரண காதலாக இல்லாமல், இரு
உயர்ந்த உள்ளங்களின் சங்கமமாகத் திகழ்கிறது.
“நீ மாவட்ட ஆட்சியர்,
நான் ஒரு கார் மெக்கானிக்” என்று கஜா
தயங்கும்போது, சாவித்திரி
காட்டும் உறுதி காதலுக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறது.
ஜூனியர் தேஜ் அவர்களின் இந்த நாவல்,
வெறும் பொழுதுபோக்குக் கதையல்ல;
இது ஒரு வாழ்க்கை வழிகாட்டி. வறுமை,
இழப்பு, ஏளனம்
போன்ற பல்வேறு தடைகளையெல்லாம் தாண்டி ஒரு பெண் எப்படி உயர முடியும் என்பதற்குச்
சாவித்திரி ஒரு முன்மாதிரி.
எளிமையான தமிழ் நடை, விறுவிறுப்பான
கதைக்களம், ஆழமான
கருத்துக்கள் என ‘காதல்
நிவந்தம்’ வாசகர்களின்
நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த நாவல் வெற்றியடையவும், ஆசிரியர்
இன்னும் பல சிறந்த படைப்புகளைத் தமிழ் உலகிற்கு வழங்கவும் எனது மனமார்ந்த
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
கவிமுகில்
சுரேஷ்
cell:8610422455
வாழ்த்துரை
சுகுமார் கவி, மைசூர்
கவிஞர் & எழுத்தாளர்.
பல புதினங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டவைகளாக
அமைகின்றன. ஆனால், சில
புதினங்கள் வாழ்க்கையின் சாராம்சத்தை உள்ளங்கை நெல்லிக்கனியென உணர்த்தி,
வாசகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து
விடுகின்றன.
அந்த அரிய வகைப் படைப்புகளின் வரிசையில் எழுத்தாளர் ஜூனியர்
தேஜ் அவர்களின் “காதல் நிவந்தம்” புதினம் இடம் பெறுகிறது.
உறவுகளின் யதார்த்தமும் உண்மையை உரைக்கும் கதைக்களமும்
அமைத்து தனது எளிமையான சொல்லாடல்களில் இந்த கதையை அழகாய் நகர்த்திய விதத்திலும்
நிச்சயமாக நாவலாசியர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.
கதையின் ஆரம்பமே சோகமயமாக, நம்மை
கதைக்குள் கொண்டு வந்துவிடுகிறது. ‘அந்த
ஏழை குடும்பம் அந்த சூழலில் இருந்து எப்படி வெளி வரப்போகிறது...’ என்ற தவிப்பையும்
எதிர்பார்ப்பினையும் படிப்பவர் மனதில் அழுத்தமாய் ஏற்படுத்தி விடுகிறார்
கதாசிரியர்.
கதாபாத்திரங்களின் நெடிய போராட்டமே கதையின் கருவாக, சம்பவங்களைத்
திறம்பட கட்டமைத்து, கதையை நகர்த்தி சென்ற விதம் இந்நாவலுக்கு உயிரூட்டுகிறது.
சாவித்திரி, கஜா,
பருவதம், சுந்தரம்,
சாரங்கன் என புதினத்தில் வரும் ஒவ்வொரு
கதாபாத்திரமும் மிகவும் இயல்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
தாய்க்கும் மகளுக்கும் இடையே இழையும் பாசத்தின் வலிமையை பருவதம்
– சாவித்திரி மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
தந்தையின் திடீர் மறைவிற்கு பின் எப்படியெல்லாம் சாவித்திரி
துன்பங்களை அனுபவித்தாள்... அந்தத் துன்பங்களையெல்லாம் எவ்வாறு கடந்து சென்றாள்...
எவ்வாறு படிப்பில் கவனம் குவித்தாள், எப்படிப் படிப்படியாக முன்னேறினாள் என்பதையெல்லாம் கட்டம் கட்டமாக
விவரிக்கும் அழகு வியக்க வைக்கிறது.
கணவனை இழந்த பர்வதம் அனுபவிக்கும் துயரங்களையும் தவறான கண்ணோட்டத்தில்
அணுகுபவனை எப்படி அவள் தவிர்தாள் என்பதையும், சாவித்திரியின்
ஏழ்மையை பயன்படுத்தி சாரங்கன் அவளை அடைய முயல்வதையும் காட்சி படுத்தி இருக்கும்
விதம் சிறப்பு.
பல்வேறு தடைகளையெல்லாம் கடந்து, இறுதியில் தான் படித்த
ஊருக்கே மாவட்ட ஆட்சியாளராக வரும் சாவித்திரியின் வருகை
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் எனும் பழமொழியை
நினைவு கூர்வதாக உள்ளது.
ஒரு திரைப்படத்தின் காட்சி அமைப்பு போல,
ஒரு நிகழ்விலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதும்,
பாத்திரங்களின் வழியே மன உணர்வுகளைப் பதிவு
செய்வதும், வாசகர்களைக்
கதையினுள்ளே லயித்துப் போகச் செய்கிறது.
எளிமையான வசனங்கள், ஆழமான
கருத்துக்களைச் சுமந்து செல்கின்றன.
பாத்திரப் படைப்பில் உள்ள நேர்த்தியும்,
கதைச் சொல்வதில் உள்ள வேகமும் வாசகர்களுக்கு ஒரு
புது அனுபவத்தைத் தருகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்நாவல் தரும் நேர்மறையான தாக்கம் வாசித்து
முடித்த பின்பும் நம்முள் நீடிக்கிறது. இது வெறும் வாழ்த்துரை அல்ல. அனுபவத்தின்
சான்று!
‘காதல் நிவந்தம்’
வெறும் ஒரு கற்பனை கலந்து புனையப்பட்ட நாவல்
என்பதை மட்டும் பார்க்காமல் இதில் வாழ்க்கை நடைமுறைக்கு தேவையான சில செய்திகளும் உள்ளது
என்பது புதினத்தை படிக்கும் அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.
இந்தக் காதல் நிவந்தம் நாவல் உறவுகளின் நீதி,
சமுதாயத்தின் யதார்த்தம்,
மனித உணர்வுகளின் சிக்கல்கள்,
நம்பிக்கைகள் எனப் பல அடுக்குகளைத் தொட்டுப்
பேசும் ஒரு சமூகப் படைப்பு.
மதிப்புரையின் விரிவஞ்சி, கதையை அனைவரும் படித்து தெரிந்து
கொள்ள வேண்டும் என்பதால் நான் அதிகம் பேசவில்லை.
இந்த அரிய படைப்பை, தமிழன்னைக்குப்
பெருமை சேர்க்கும் விதமாக படைத்தளித்த திரு. ஜூனியர் தேஜ் அவர்களுக்கு என்
மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.
காதல் நிவந்தம் அனைத்து தரப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய
புதினம்.
இது தமிழ்ப் புனைகதையின் வரலாற்றில் நீங்காப் புகழுடன் வாழும்
என்பதில் ஐயமில்லை.
சுகுமார் கவி, மைசூர்
கவிஞர் & எழுத்தாளர்.
என்னுரை
எனக்கு இலக்கியத்தில்
நாட்டத்தை ஊட்டிய என் தகப்பனார் தேஜ் அவர்களுக்கும், என் தாயாருக்கும், இந்த நூலைக்
காணிக்கையாக்குகிறேன்.
‘ஜூனியர் தேஜ் பேஜ்’ என்று
பிரத்யேகமாக ஒரு சொற்றொடர் வடிவமைத்து பக்கம் பக்கமாக என் படைப்புகளை வெளியிட்டு, என்னை ஊக்கப்படுத்திய
எழுத்துலக ஜாம்பவான் திரு சாவி அவர்களுக்கும்;
“பற...! பற...!! மேலே...! மேலே...!”
என்று தன் பொற்கரங்களால் எழுதி ஆசீர்வதித்த எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
அவர்களுக்கும் குரு வந்தனம் செய்து என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
அருமையான அணிந்துரை எழுதி
அளித்த நாவலாசிரியர் - கவிமுகில் சுரேஷ் அவர்களுக்கும்,
இனிமையான வாழ்த்துரை வழங்கிச்
சிறப்பித்த சுகுமார் கவி,
மைசூர், கவிஞர் & எழுத்தாளர் அவர்களுக்கும்,
‘அடங்க மறு...!’ என்ற தலைப்பில்
முழுநாவலாக வெளியிட்ட, கண்மணி வார இதழ் நிர்வாகத்துக்கும்,
என்னுடைய ‘காதல் நிவந்தம்...!’
என்கிற முழுநாவலுக்கு அட்டைபடம் உருவாக்கி அழகான புத்தகமாக உருமாற்றிப் பதிப்பித்து,
ஊக்குவித்த புஸ்தகா நிறுவன நிறுவனர் திருமிகு ராஜேஷ் அவர்களுக்கும், புஸ்தகா நிறுவனத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஜூனியர் தேஜ்
சீர்காழி
நாவல் சுருக்கம்
சமையலரும், சரக்கு மாஸ்டருமாகத் தொழில்
செய்த, சுந்தரம் - பருவதம்
தம்பதியரின்,
ஒரே மகள்
சாவித்திரி.
சாவித்திரி +2 முடித்த தருணத்தில், திடீரென மாரடைப்பால் அவள்
தந்தை சுந்தரம் இறந்துவிட,
அவள்
வாழ்வின் போக்கில் பற்பல சோதனைகளும் திருப்பங்களும் ஏற்படுகின்றன.
சாவித்திரிக்குள்
கனன்று கொண்டிருந்த மேற்படிப்புக் கனவுகளின் முன் பிரும்மாண்டமான கேள்விக் குறிகள்
மதில் சுவராய் எழுந்து நிற்க,
பல்வேறு மன, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு
நடுவே, மன உறுதியுடனும், ஏகாக்ர சிந்தனையுடனும், வித்து முளைக்கும் தன்மை போல, சீராகப் படித்து, உயர்ந்து, ஐ ஏ எஸ் தேறி, தான் பிறந்து வளர்ந்த, சொந்த மாவட்டத்திற்கே, ஆட்சியர் பொறுப்பை ஏற்கிறாள்
சாவித்திரி.
முதல் களப்
பயணமாக, சாவித்திரியின் தந்தை பாகசாலை
சேவை செய்து வந்த வராகப் பெருமாள் கோவில், தரிசனத்துக்குச் செல்கிறாள்.
பத்து வருடம்
முன், தேடிச் சோறு தினம் தின்ற, சாரங்கன் இன்றளவும் பவித்ர
அகங்காரத்திலிருந்து விடுபடாமல், அதே
தாழ் நிலையில் இருப்பதைப் பார்க்கிறாள்.
தரிசனம்
முடிந்து,
கலெக்டர்
அலுவலகத்துக்குத் திரும்புகையில், பள்ளியில்
படித்த காலத்தில்,
சாவித்திரிக்கு, பாடங்களில் ஏற்படும்
சந்தேகங்களைத் திறமையாகத் தீர்த்து வைத்த கஜா என்ற கஜேந்திரன், தற்போது கார் மெக்கானிக்
கேரெஜ் அமைத்து சுய தொழில் நடத்துவதைப் பார்க்கிறாள்.
கடின
உழைப்பாளியான,
கஜாவை
நேருக்கு நேர் சந்திக்கிறாள்.
பள்ளிப்
பருவத்திலேயே கஜாவின் மேல் சாவித்திரிக்கு இருந்த ஈடுபாடு, கண்டதும் காதலாய் மலர்கிறது.
கலெக்டர் சாவித்திரி எனும் கர்ம யோகியின் கதை..
***
முக்கியக் கதாபாத்திரங்கள்
1. சாவித்திரி – கதாநாயகி
2. பருவதம் – சாவித்திரியின்
தாய்
3. சுந்தரம் – சாவித்திரியின்
தந்தை
4. கஜா என்கிற கஜேந்திரன் (சாவிதிரியின் (Guide / lover)
5. ராசையா (கஜாவின் தந்தை)
6. கணபதி – மகாபெரியவா கேட்டரின் உரிமையாளர்
7. லக்ஷ்மீ நரசிம்மன் – வராகப் பெருமாள் கோவில் பரம்பரை ட்ரஸ்டி
8. சாரங்கன் – லக்ஷ்மீ நரசிம்மன் அவர்களின் மகன்
9. மரகதவல்லி – சாரங்கனின் தாய்
அத்தியாயம் 1
யு பி எஸ்
ஸி ரிஸல்ட் வெளிவந்துவிட்டது.
மாநில அளவில் ஒன்பதாவது இடத்தை பெற்றாள் சாவித்திரி.
ஊர் உலகமே கொண்டாடின அவளை.
ஆனால், அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அம்மா இல்லையே, என்பதை
நினைத்து, உள்ளுக்குள் உடைந்து அழுதாள்.
இதே போலத்தான், பனிரெண்டாம்
வகுப்புப் பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே ஒன்பதாம் இடத்தைப் பெற்ற செய்தியை
பகிர்ந்து கொள்ள முடியாமல், ரிசல்ட் வருவதற்கு பதினெட்டு நாட்களுக்கு முன் சாவித்திரியின்
அப்பா சுந்தரம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார்.
இப்போது அதே வரிசையில் அம்மா,
யு பி எஸ் ஸி ரிசல்ட் வருவதற்கு பதினெட்டு நாட்கள் முன்
இறந்து போனாள்.
***
‘என் வாழ்க்கையில் முக்கியமான திருப்பு முனைகள் ஏற்படும்
சமயத்தில், அதைப் பார்க்காமல், இப்படி
அப்பாவும், அம்மாவும் போய்ச் சேர்ந்து விட்டார்களே... ஏன்...?;
ஏதாவது அமானுஷ்யமான காரணங்கள் இருக்குமோ...?’ - ஒரு கணம்
மனதில் இப்படித் தோன்றியது.
அடுத்த கணம், தன் நலத்தில் அக்கரை கொண்டவரும் வழிகாட்டியுமான கஜா என்கிற கஜேந்திரன் சாவித்திரியின் மனதில் தோன்றினான்.
“ராப்பர் டு ராப்பர்’ டெக்ஸ்ட் புத்தகத்தைப்
படிச்சிக்கிட்டே இரு சாவித்திரி. வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்...” என்று அடிக்கடிச்
சொல்லிச் சொல்லி, மனதில் பசுமரத்தாணியாய்ப்
பதிய வைத்தவன் கஜா.
‘யு பி எஸ்
சி தேர்வில் பெற்ற இந்த இமாலய வெற்றிக்குக் கூடக் காரணம் அதுதானே...!’
***
பப்ளிக் எக்ஸாம்ல, மாநில
அளவுல சாதிக்கணும்னா, அதிர்ஷ்டம் வேணுமா?” ஆறாவது
படிக்கும்போது, அறியாமையின் தாக்கத்தால்,
இது போல ஒரு கேள்வியை கஜாவிடம்
கேட்டதும் அதற்கு அவன் பொறுமையாகச்
சொன்ன பதிலும் ஞாபகம் வந்தது, சாவித்திரிக்கு.
“அதிர்ஷ்டம், அமானுஷ்யம்
இதையெல்லாம் ஒரு அளவுக்கு மேலே உனக்குள்ளே விடாதே சாவித்திரி.” பொட்டிலடித்தாற்போல் சொன்னான் கஜா.
“முயற்சி
தன் மெய் வருத்தக் கூலி தரும் சாவித்திரி; கூலி தரும்னு சொல்றதை விட, தந்தே தீரும்னு சொல்றதுதான் சரி.
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனசுல ஆழமா பதிவு பண்ணிக்க. உழைப்பு, ஓயாத
உழைப்பு, அதிலும் ஒரு முகப்பட்ட உழைப்புதான் மனிசனை உயர்த்தும்.”
யு பி எஸ் ஸி யில் மாநிலப் பட்டியலில் ஒன்பதாவது இடம்
பிடித்துச் சாதனை செய்ததற்கு, உழைப்பை
நேசிக்கக் கற்றுக் கொடுத்த கஜாதான்
காரணம் என்பதை மறுபடியும் உறுதி செய்தது சாவித்திரியின் மனம்.
***
ஆதீனம் உயர் நிலைப் பள்ளியில் சாவித்திரி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கும்பகோணம் சாமியார் பட்டரை தொழிற்கல்விக்
கூடத்தில், ‘ஐ டி ஐ’
படித்துக் கொண்டிருந்தான் கஜேந்திரன்.
‘ஐ ஐ டி’
படிக்கும் அளவுக்கு மூளை உள்ளவன் கஜா. ஏழ்மையான குடும்பச் சூழல், ‘ஐ டி ஐ’ ல்
தள்ளியது அவனை.
சாவித்திரியின் தகப்பனார் சரக்கு மாஸ்டர் சுந்தரமும், கஜேந்திரனின் அப்பா கொல்லுப் பட்டரை ராசய்யாவும் நண்பர்கள்.
சுந்தரம் ராசய்யாவின் மகன் கஜேந்திரனைப் பார்த்தபோது அவனிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், ஒவ்வொரு
நாளும் மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை, சாவித்திரிக்கு
டியூஷன் எடுத்தான் கஜா.
டியூஷன் என்றால், ‘ப்ரொஃபஷனாலாக’
இல்லை. சந்தேகம் தீர்த்து வைக்கும் வகையில் செய்யப்பட்ட ஏற்பாடு.
சாவித்திரி, தன்னிடம் படிக்க
வந்த முதல் நாளே, கஜேந்திரன் சொன்னது இதுதான்.
“சாவித்திரி, பிராக்கெட்
போட்டு அடைச்சி, கேள்விக்கு பதில் குறிச்சி வெச்சிப் படிக்காதே; ‘ரேப்பர்
டு ரேப்பர்’ படி! பல முறை படி!”
இது தான் கஜேந்திரன் சாவித்திரிக்கு முதல் அறிமுகத்திலேயே சொல்லிக் கொடுத்த வழி முறை.
அந்த நொடி முதல், பாடப் புத்தங்களை முன் அட்டை முதல் பின் அட்டை முடிய படிப்பதே சாவித்திரியின்
பழக்கமானது. நாளாவட்டத்தில் பழக்கம் வழக்கமாக மாறியது.
புத்தகம் முழுதும் பல முறை படித்த காரணத்தால், வார்த்தைகளுக்கு
இடையிலும், வரிகளுக்கு இடையிலும் இருக்கும் வெற்றிடங்களிலும் கூட.
சொல்லாமல் சொல்லப்பட்டிருந்த கருத்துருக்களையும் ஊகிக்க முடிந்தது அவளால்.
எந்தக் கேள்வியை எப்படிப் பொடி வைத்துக் கேட்டாலும் விடை சொல்லும் திறமை நாளுக்கு நாள் வளர்ந்தது அவளுக்குள்.
பாடங்களின் கருத்துருக்களை ஆழ்ந்து படித்ததால், அறியாமை அகன்றது. அறிவு கூர்மையானது.
புத்திக் கூர்மையும், அசாத்திய நினைவாற்றலும், சாவித்திரியின் அறிவை
தெளிவாய் வைத்திருந்தது.
அறிவிலே தெளிவு
இருந்ததால், எந்தக் குழப்பமும் அவளை
நெருங்கவில்லை. ஆற்றல் ஊற்றாய்ப்
பெருகியது.
ஆரம்பக் கல்வி முதல் ஒவ்வொரு வகுப்பிலும், முதல் தரத்தில்தான் தேறி வந்தாள் சாவித்திரி.
***
ஐடிஐ பாஸ் செய்துவிட்ட பிறகு, அரசு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு அவனுக்கு வந்தது. வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொண்டான் கஜா.
சாவித்திரி ப்ளஸ் டூ படிக்கும்போது, பி ஈ இறுதியாண்டு படித்த
கஜேந்திரன், இறுதியாண்டின் இறுதியில்
நடைபெற்ற வளாகத் தேர்வில் (கேம்பஸ்
இண்டர்வியூ) தேர்வாகி, கம்பெனியால்
நடத்தப்படும் பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காகச் சென்றுவிட்டான்.
கம்பெனியின் பயிற்சி முகாம் முடிந்து, போஸ்டிங் ஆர்டர் வருவதற்கு முன், ஒரு முறை
கல்யாணபுரத்துக்கு வந்தான் கஜா. சுந்தரம் காலமாகிவிட்ட செய்தி அறிந்தான். துக்கம்
விசாரிக்க வீட்டிற்குச் சென்றான்.
பன்னிரெண்டாம் வகுப்பில், சாவித்திரி, மாநிலத்தில்
ஒன்பதாவது இடத்தில் தேறிய செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான் கஜா.
“கஜா சார், உங்களாலதான், நீங்க
சொன்னபடி படிச்சதாலத்தான், என்னால இந்த ராங்க் வாங்க முடிஞ்சிது; உங்களுக்கு
எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை!.” - நா
தழுதழுத்தாள் சாவித்திரி.
“சாவித்திரி, நான் இப்போ சொல்றதை
கவனமா மனசுல பதிய வை;
“.............”
நன்றிங்கறது, கடமையாவோ, பண்டமாற்றாவோ, பிணையாவோ, கடன்
சுமையாவோ மனசுல ஏத்திக்கவே கூடாது; முடிகிறபோது. நம்முடைய சக்திக்குத் தகுந்தபடி, செயல்ல காட்டிடறதுதான் உண்மையான நன்றியா இருக்க முடியும். நன்றிக்கறது ஒரு வார்த்தை இல்லை. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம்ங்கறதை
எப்போதும் மறக்காதே...”
“.....................” கஜாவின் இந்தக் கருத்தை அமைதியாக உள்
வாங்கி, மனதில் பதிவு செய்து கொண்டாள் சாவித்திரி.
***
ஆட்சிப் பணித் தேர்வில், முதல்
பதினைந்து இடங்களில் வந்தவர்களை, தமைமைச் செயலகத்துக்கு வரவழைத்தது அரசு இயந்திரம். தலைமைச் செயலர் உட்பட பெரிய பெரிய ஆளுமைகள்
பாராட்டும் அறிவுறைகளும் வழங்கினார்கள். அதே மேடையில் மாவட்ட ஆட்சியர் பணிக்கான பணி ஆணையும் வணங்கியது மாநில நிர்வாகம்.
பணி ஆணையை வாங்கிப் பார்த்தவுடன் சாவித்திரிக்கு ஏற்பட்டது இன்ப
அதிர்ச்சி. காரணம், சாவித்திரிக்குத் தான் பிறந்து வளர்ந்து பள்ளிப் படிப்பு வரைப்
படித்த, தன்னுடைய சொந்த
மாவட்டத்திலேயே, மாவட்ட ஆட்சியராகப் பணியாணை கிடைத்திருந்தது.
அப்பாவையும்
அம்மாவையும் இழந்து, அநாதையாகத் தன்னை உணர்ந்த சாவித்திரிக்கு, தன் வளர்ச்சியில் முக்கியமாகப் பங்கு வகித்த, ‘வெல் விஷரான’ கஜாவையும், மிஸ்
செய்வதாக உணர்ந்தாள்.
‘ஐ ஏ எஸ் தேர்வில்
வெற்றி பெற்றதையும், சொந்த மாவட்டத்துக்கே கலெக்டராக நியமனமான அந்த மகிழ்சியான செய்தியை தனக்கு உண்மையான வழிகாட்டியாக இருந்த, கஜாவிடம்தான்
உடனடியாகப் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவன் தொலைப்பேசி எண்ணை
பத்திரமாக வைத்திருக்காமல் இப்படித் தொலைத்துவிட்டோமே...!’ - கழிவிரக்கத்தில்
கலங்கினாள் சாவித்திரி.
‘நாளை பணியில்
சேர்ந்தவுடன் முதல் வேலையாக கல்யாணபுரம் சென்று நேரிலேயே
தெரிவித்துவிடவேண்டும்.’ என்று
முடிவெடுத்த பின்,
‘இந்தப் பத்து ஆண்டுகளில், கல்யாணபுரத்தில்
அவர்கள் இருப்பார்களா? புலம் பெயர்ந்திருப்பார்களா?’ என்றெல்லாம், மனம் அலை
பாய, இதே சிந்தனையில் இருந்த சாவித்திரி,
தன்னை அறியாமல் சற்றே கண் அயர்ந்துவிட, கைப்பேசியில் பதிவு செய்திருந்த அலாரம் ஒலித்தது.
எழுந்து, முகம் கழுவி, தலை கீறிக்கொண்டு இறங்குவதற்குத் தன்னை
தயார் செய்து கொண்டாள் சாவித்திரி.
***
விடிகாலை, மணி
மூன்று.
ரயிலில் வந்து இறங்கும் புதிய மாவட்ட ஆட்சியர் சாவித்திரியை, முறையாகப்
பூங்கொத்து கொடுத்து, ரயிலடியில் வரவேற்றார்கள் ரெவின்யூ ஆளுமைகள்.
ப்ரும்ம முகூர்த்தத்திலேயே, மாவட்ட ஆட்சியருக்கான குடியிருப்பில் செட்டில் ஆனாள். குளித்து உடுத்தி, உரிய நேரத்தில், பணிப் பதிவேட்டில் கையொப்பம் இட்டாள்.
மாவட்ட ஆட்சியருக்கான நாற்காலியில அமர்ந்து, தன் பணியை ஏற்றார் சாவித்திரி.
பணியேற்பைத்
தொடர்ந்து, மைக், குறிப்பேடுகள்,
புகைப்படக் கேமராக்கள், வீடியோ கேமராக்கள், சகிதம் குழுமியிருந்த ஊடகவியலாளர்களுக்குப் பேட்டியளித்தாள்;
தொலைக்காட்சி ஊடகத்தினர் முறையாக
கவரேஜ் செய்தார்கள்;
வி ஐ பிக்கள் வந்து மரியாதை நிமித்தம் சந்தித்தனர். இப்படியாக சில மணி
நேரங்கள் பரபரப்பாகப் போயிற்று.
பரபரப்பெல்லாம் ஓரளவு அடங்கியதும், மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்ற சாவித்திரி, தனது முதல் களப்பயணமாக, வராகப்
பெருமாள் கோவிலுக்குச் செல்லத்
திட்டமிட்டாள்.
தன் பெற்றோர் வாழ்ந்த மகாதானத் தெருவையும், வளர்ந்த வீட்டையும் உடனே பார்க்க வேண்டும் என்ற உந்துதல்
வர, டைரியில் ப்ரோக்ராம் எழுதிவிட்டு, தனிச்
செயலர் மூலம் திட்டத்தை உறுதி செய்தாள்.
***
மகாதானத் தெருவுக்குள் நுழைந்தது கலெக்டரின் கார்.
ஆட்சியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப
மிக மெதுவாக ஊர்ந்து சென்றது கார். சாலையின் இருபுறமும் பார்த்துக் கொண்டே வந்தாள்.
பல ஓட்டு வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறியிருந்தன. சில அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் ஆங்காங்கே கண்ணில் பட்டன.
சில வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருந்தன.
பள்ளிப் பருவத்தில் தன் பெற்றோருடன் குடியிருந்த வீட்டின் முன்
கார் நிறுத்தி இறங்கினாள் சாவித்திரி.
பல இடங்களில் வெடித்தும், காரை பெயர்ந்தும், உதிர்ந்தும், நொனா, அரசு, புரசு, உத்திராசு, பேயத்தி, எருக்கு, கொன்றை என ஆங்காங்கே சுவற்றைப்
பிளந்து கொண்டு, வளர்ந்து நின்று; கோவை, சீந்துக்
கொடி, ஓணான் கொடி, சங்கு
புஷ்பம் என, கொடி வகைகளுக்குக் கொழு கொம்புகளாய் நின்றிருப்பதைப் பார்த்த சாவித்திரியின், இதயம் கனத்தது.
சிதிலமாகிக் கொண்டிருந்த, தற்போதைய தலைகீழ் மாற்றங்களின் பின்னணியில், பள்ளிப் பருவம் வரை, தாய் தந்தையோடு குடியிருந்த நாளில் இருந்த
இல்லத்தின் தோற்றத்தை மனக் கண்ணால் பார்த்தாள். அந்த கிருகத்தில், தனக்கு ஏற்பட்ட பல
இனிப்பான மற்றும் கசப்பான அனுபவங்களையும் அசை போட்டது மனம்.
கண்களை மூடிக்கொண்டாள். பத்தாண்டுகளுக்கு முன், கண்ணீர் மல்க, கனத்த இதயத்தோடு, வாழ்வின்
சவால்களை ஏற்றுக் கொண்டு, இரவோடு இரவாக, அம்மாவோடு, புறப்பட்ட
நேரத்தில், நடந்த நிகழ்வுகளையெல்லாம்
ஊடுருவிப் பார்த்தது, மனதில்
‘ஸ்நாப் ஷாட்’ டாகத் தங்கியிருந்த வீட்டின் முகப்பு. சாவித்திரியின் மனத்திரையில் பளிச்சிட, கண்கள் பனித்தன.
‘உணர்ச்சி வசப்படுதல் தன் பதவிக்கு அழகல்ல...!’ என்பதால், அடங்கி,
அமைதியாகத் திரும்பி வந்து காரில் ஏறினாள்.
ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை, அவள், படித்த
ஆதீனம் பள்ளியைக் கடந்தது கார்.
பள்ளியின் முகப்பில், கம்பீரமாக
நின்ற புதிய தோரண வாயிலைப் பார்த்தபோது
மகிழ்ச்சி பிடிபடவில்லை சாவித்திரிக்கு.
பள்ளி வளாகத்தில், ஓங்கி உயர்ந்து நின்ற பல அடுக்குமாடி வகுப்பறைகளைக் கண்டு பூரித்தாள்.
படித்த பள்ளியை பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பின் மாவட்ட நிர்வாகியாக,
ஆட்சியர் காரில் அமர்ந்து பார்த்தபோது மகிழ்ச்சி பிடிபடவில்லை அவளுக்கு.
‘ஒரு நாள்,
முன்னறிவிப்பு செய்துவிட்டு
தனக்குப் பள்ளிக் கல்வியை சிறப்பாக
அளித்த இந்தப் பள்ளிக்கு முன்னாள் மாணவியாய், வரவேண்டும்...’ என்று
நினைத்துக் கொண்டாள் சாவித்திரி.
***
அத்தியாயம் 2
‘ஹோ’ என்று
அகலமும் நீளமுமாய் பரந்து விரிந்த, கிராமப் புறத்துப்
பெரிய்ய ஓட்டு வீடு.
அந்த வீட்டின் தலைவன், பருவதத்தின் கணவன், சுந்தரம்,
மாரடைப்பால் அகால மரணமடைந்து, பதினேழு நாட்கள் நிமிஷமாய் ஓடி விட்டன.
நேற்றுதான், வைதீகர்கள்
புடைசூழ, 16-ஆம் நாள் சுபமும், சேஷ
ஹோமார்த்திகளும் நிறைவு பெற்றன.
ஹோமப் புகையின் வாசனை கூட இன்னும் முற்றிலும் தணியவில்லை.
சுந்தரம் காலமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்,
ஆளும் பேருமாய் நின்று, தேய்த்துக்
கழுவிக் கவிழ்த்துப் போட்ட பாத்திரம் பண்டங்கள், அம்பாரமாய்
அங்குமிங்கும் குவிந்து கிடந்தன.
பதினாறு நாட்கள் கழித்து இன்றுதான், மகள்
சாவித்திரியை கம்யூட்டர் வகுப்புக்கு அனுப்பினாள் பருவதம்.
தனிமையின் தகிப்பில், பருவதம்
மட்டும் இலக்கற்று அமர்ந்திருந்தாள் பட்டக சாலையில்;
தகிப்பின் வெம்மை பருவதத்தின் மூச்சுக் காற்றில்
பிரதிபலித்தது.
வெறுமை படர்ந்து இறுகியிருந்தது அவள் முகத்தில்;
மனசு ஓர் இடத்தில் நிலைக்கவில்லை.
***
‘எப்படிச் சொச்சக் காலத்தை ஓட்டப் போகிறோம்...!’ மலைத்து,
புழுங்கினாள் பருவதம்.
எதிர் காலத்தை நினைத்துப் பார்த்தபோது, பெரிய
சவாலாகவும், அச்சமாகவும் உணர்ந்தாள்.
உஷ்ண உணர்வுகள் பெருமூச்சாய் வெளிப்பட்டன.
“ப்ஃஃப்..... ஆ... ஆ... ஆ.....”
நாபியிலிருந்து புறப்பட்ட பெருமூச்சு, நீளமாய், அடர்த்தியாய்
தெரித்து வெளியேறியது.
‘வாழ்வின் அடுத்தடுத்தக் கட்டங்களை எப்படிக் கடக்கப்
போகிறோம்?’
மிகப் பெரிய கேள்விக் குறி, பூதாகாரமாக
விரிந்து அவள் முன் ஆக்ரோஷமாய் மிரட்டிக் கொண்டிருக்க, விரக்தியின்
விளிம்பில் தத்தளித்தாள் பருவதம்.
***
பதினேழு நாட்களுக்கு முன்பு தொட்டும், தடவியும், நகர்த்தியும், அடுப்பில்
ஏற்றியும், அழுந்தத் தேய்த்தும், கவிழ்த்தும், நிமிர்த்தியும்
புழங்கியதை போல, கேட்டரிங் தொழிலுக்கான கருவிகளை,
தோழமையோடு தொடவோ, ஆசையோடு அசைக்கவோ, கடமை
உணர்வோடு கையாளவோ, உரிமையோடு புழங்கவோ, இப்போது
கிஞ்சித்தும் சக்தியே இல்லை பருவதத்திற்கு; பலஹீனமாக
இருந்தது அவள் மனசு.
இத்தனை காலமும் வாழ்வாதாரமாக இருந்து உதவி செய்திருந்த
அந்தத் தொழிற் கருவிகளுக்கும் தனக்கும் நடுவே ஒரு பெரிய, நிரப்பவே
முடியாத இடைவெளி விழுந்து விட்டதைப் போலத் தோன்றியது பருவதத்திற்கு.
விரக்தியின் உச்சத்தில், இலக்கற்று, அங்கும்
இங்குமாக அலைந்து கொண்டிருந்தது பருவதத்தின் பார்வையும் எண்ணங்களும்.
எதிரில் இருந்த பாத்திரங்கள், பண்டங்கள், சரக்குக்
கிண்டும் துடுப்புகள், கடாய்கள், கரண்டிகள், அரிவாள் மனைகள், துருவு
கட்டைகள், ..................
அனைத்தும் இப்போது அர்த்தமற்றவைகளாகத் தெரிந்தன
பர்வதத்திற்கு.
***
நந்தகுமார்.
நகரத்தில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல இனிப்புக் கடை முதலாளி சந்தன
சாமியின் ஒரே மகன்;
பதினேழு நாட்களுக்கு முன்பு வரை, அதாவது
பருவதத்தின் கணவன் சுந்தரம், திடீரென்று மாரடைப்பால் இறக்கும் நாள் வரை,
மரியாதை நிமித்தம், சற்றே
எட்ட நின்று பருவதத்தை, கைக் கூப்பி வணங்கியவன்;
‘அண்ணி... அண்ணி...’
பருவதத்தை இப்படித்தான் மரியாதையாய் அழைப்பான் நந்தகுமார்;
ஆனால் இன்று,
பருவதம், கணவனை இழந்த கைம்பெண்ணாக;
அடுத்து என்ன செய்வது என்ற இலக்கற்ற தவிப்புடன், தன்னந்
தனியாகத் தவிக்கும் பருவதத்தைப் பார்த்தவுடன், புத்தி
கெட்டு விட்டது நந்தகுமாருக்கு. அவனுக்குள் சைத்தான் புகுந்துவிட்டது.
‘கல் வீசித்தான் பார்ப்போமே...!’ என்று துணிந்து விட்டான்.
‘திருட்டுப் பூனை’ போல, அடி மேல்
அடி வைத்து வீட்டுக்குள் நுழைந்தான்;
காலடி ஓசை எழாமல் நடந்து, சாவித்திரியின்
பின்புறம் சென்று நின்றான்.
கொஞ்சம் கொஞ்சமாக அருகே நெருங்கினான்.
மூச்சுக் காற்று, பருவதத்தின்
தோள்பட்டையில் உரைக்கும் அருகாமையில் நின்றான்,
கிறங்கினான்;
‘பருவத்தூ......................!’
சுந்தரம் அழைப்பதைப் போல கொஞ்சல் குரலில் அழைத்து, பருவதத்தின்
காம உணர்வுகளைத் தூண்ட முயற்சித்தான் நந்தகுமார்.
வீடு முழுதும் நிரம்பியிருந்த பாத்திரம் -
பண்டங்களையெல்லாம் இலக்கற்று வெறித்துக் கொண்டிருந்த பருவதம்,
தன் பின்னால் வந்து நின்ற நந்தகுமாரனையும், அவன்
தன்னை பெயர் சொல்லி அழைத்ததையும் கவனிக்காமல் இல்லை.
‘கவனித்து விட்டோம் என்று காட்டிக் கொண்டால், அது
விபரீதமாகிவிடும்...’ என்றது அவள் உள்ளுணர்வு.
கண்டும் காணாமல், அவன்
வருகையை அலட்சியம் செய்தாள். திரும்பிக் கூட பார்க்கவில்லை. வேறு எதிலோ கவனத்தில்
இருப்பதாகக் காட்டிக் கொண்டாள்.
***
நந்தகுமார் ஏதோ ஒரு வெறியில், நல்லது
கெட்டது யோசிக்காமல் அவள் அருகில் நெருங்கி ‘பருவத்து’ என்று அழைத்துவிட்டானே தவிர, பின்
விளைவுகள் பற்றிய எண்ணங்கள் அவனுக்குள் சடாரென விரியத் தொடங்கிவிட்டன.
அடுத்த கணம், நந்தகுமார்
மனதில் ஒரு போராட்டக் களமே உருவாகிவிட்டது.
குற்ற உணர்வால் கூனிக் குறுகினான். தப்புக் காரியம் செய்த
பின் மனசும் உடம்பும் கூனிக் குறுகத்தானே செய்யும்.
தவறு செய்யும்போது சூடாகிக் கொதிக்கும் ரத்தமும், அந்தக்
கொதிப்பு தரும் நடுக்கமும் ஆக்ரமித்தது நந்தகுமாரை.
‘என்ன ஆகுமோ?’ ;
‘எப்படி இதைக் கையாளுவாளோ பருவதம்?’
‘ஊரைக் கூட்டிவிட்டால்?’
மானம் காற்றில் பறந்து விடுமே ...?’
‘தன்னை அவமானப் படுத்திச் சந்தியில் இழுந்து விடுவாளோ...?’
என்னென்னவோ எண்ணங்கள் மாறி மாறி வந்து அச்சப்படுத்தின நந்தகுமாரனை.
பின் விளைவுகளை எண்ணி எண்ணி, உள்ளுக்குள்
நடு நடுங்கினான் நந்தகுமார்.
மனதில் எழுந்த அச்சத்தையும், நடுக்கத்தையும், குற்ற
உணர்வையும், நந்தகுமாரின் முகம் ‘பளிச் பளிச்’ எனப் பறைசாற்றத்
தவறவில்லை.
***
“ஏண்டா, காவாலி நாயே...!” – என்று சீற்றத்துடன், கண் மண்
தெரியாமல் குதறிவிட்டால்?
‘துடப்பத்தை
எடுத்து விளாசிவிட்டால்...?
தெருவில் வந்து நின்று கத்திக்
கதறி ஊர் கூட்டிவிட்டால்...?
வசமாய் மாட்டிக்கொண்டு அசிங்கப்பட்டு விடுவோமே...! அசிங்கம்
நம்மோடு மட்டும் போகாதே...!
ஆண்டாண்டு காலமாய் கடைத்தெருவில் நாணயமாகவும் நேர்மையாகவும்
வியாபாரம் செய்து, சேமித்து வைத்த அப்பாவின் நற்பெயருக்கும் அல்லவா களங்கம்
வந்துவிடும்!
மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி இதுதானா?
இப்படிப் புத்தி தடுமாறி விட்டோமே?
இப்படிக் கேவலமான ஒரு இழிசெயலைச் செய்துவிட்டோமே...?
இதிலிருந்து எப்படி மீளப் போகிறோம்...?’
என்றெல்லாம் கழிவிரக்கம் தொற்றிக் கொண்டது நந்நகுமாரனை.
***
‘உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்;
தவறு செய்ததற்கு தண்டணை அனுபவித்தே தீர வேண்டும்;
எந்தத் தண்டணையாக இருந்தாலும் ஏற்றுத்தான் தீரவேண்டும்...’ - தார்மீகமான
தீர்மானத்துக்கு வந்தான் நந்தகுமார்.
அடுத்த கணம், அவன்
கண்கள், சுற்று முற்றும் படபடப்பாய் அலைந்தன.
‘வீட்டில் வேறு யாரேனும் இருக்கிறார்களோ?’ - ஒரு இடம்
விடாமல் தேடின கண்களும் காதுகளும்;
‘யாரும் இருந்து விடக் கூடாது...? - பிரார்த்தனை
செய்து கொண்டான்;
‘நாம் அசிங்கப் படுவதை விட, அந்தக்
கேவலத்தை யாரும் பார்த்துவிடக் கூடாது’ என்று எண்ணுவதுதானே மனித இயல்பு.
அடுத்தபடியாக,
‘அப்படி எவரேனும் வீட்டில் இருக்கும் பட்சத்தில், கையும்
களவுமாக சாட்சியோடு மாட்டிவிட்டால்...? எவ்வாறு
தப்பிப்பது...’ திட்டமிட்டது மனசு.
நந்தகுமாரின் புத்தி விழித்தெழுந்தது. அவன் மனதைக் குத்திக்
கிழிக்கத் தொடங்கியது.
பருவதத்தை நேருக்கு நேர் பார்க்கும் துணிவில்லை அவனுக்கு. வெட்கித் தலை
குனிந்து நின்றான்.
***
நந்தகுமாரிடமிருந்து இப்படி ஒரு கேவலமான, காமாந்தகத்
தாக்குதலை கனவிலும் எதிர்பாராத பர்வதம் அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்தாள்.
ஒரு கணம் ஆடித்தான் போனாள்; அடுத்த
கணம் சுதாரித்துக் கொண்டாள்.
நாம் ஏழை; அன்றாடங் காய்ச்சி; தற்போதைய நிலையில், பிழைப்புக்கே என்ன செய்யலாம் என்ற கேள்விக் குறியுடன்
இருக்கும் ஒரு அபலை; பள்ளி இறுதி
முடித்து கல்லூரிக்கு அனுப்பவேண்டிய வயசுப் பெண் வேறு நமக்கு இருக்கிறாள்;
நந்தகுமாரனோடு நேரடித் தாக்குதலில் ஈடுபடுவது, எந்த விதத்திலும் சரியாக வரும்...’ என்று தோன்றவில்லை
அவளுக்கு.
பேரதிர்ச்சியிலிருந்து மனத்தளவில் சட்’ டென மீண்டாள்;
தொட்டு விடும் தூரத்தில் நிற்கும் அந்த நந்தகுமாரின், கெட்டத்
தொடுகை நேர்ந்துவிடக் கூடாது...!” என்பதில் முனைப்புக் காட்டினாள்.
தன்னைத் தற்காத்துக் கொள்வதையே முதல் இலக்காக்கினாள்.
சட்டென, அதே சமயத்தில் இயல்பாக, நான்கைந்து
அடிகள் முன்னால் நடந்தாள். பாத்திரக் குவியல்களின் அருகில் நெருங்கி நின்றாள்.
ஓர் அடுக்கின் மேல் கை வைத்து, அதற்குப்
பின்னால் இருந்த ஒரு பாத்திரத்தை நகர்த்தி இழுத்துப் பார்த்தாள்.
நந்தகுமார் வருகையை, சிறிதும்
அறியாதவள் போல் நடித்தாள் பருவதம்.
***
பருவதம் தன் வாழ்நாளில் முதன் முதலாகச் சந்திக்கும்
துரதிருஷ்டகரமான சம்பவம் இது.
‘இப்படிப்பட்ட கேவலமான ஒரு சூழ்நிலையையெல்லாம், எப்படிக்
கையாளுவது?’ என்ற அனுபவ ஞானமே இல்லாதவள் பருவதம்.
இருந்தாலும், ‘எந்தத்
தருணத்திலும், தவறாக எதிர் வினையாற்றி நிலையைச் சிக்கலாக்கிவிடக்
கூடாது...!’ என்பதில் மிகக் கவனமாக இருந்தாள்.
கோபாவேசமாக, எந்த
உணர்வையும் வெளிக்காட்டி, எதிர்வினையாற்றி விடாமல், இறுக்கமாக, அதே சமயம்
இயல்பாக இருப்பதாகக் காட்டும்
விதமாகச் செயல் பட்டாள்
பருவதம்.
எதிரே, ஒருக்களித்துக்
கிடந்த, பிரும்மாண்டமான இரும்புக் கடாயின் அடிப்பாகத்தில், தன் ‘வாய்ப்பட்டை’ யினைப் பதிய வைத்துக் கொண்டு, சுவற்றில்
சாய்ந்தபடி நின்ற, ‘கொழுக் மொழுக்’ என்ற காத்திரமான, இனிப்புக்
கிண்டும் ஆறடி உயர இரும்புத் துடுப்பைப் வெறித்துப் பார்த்தன பருவதத்தின் கண்கள்.
துடுப்பின் மைய பாகத்தில் கை வைத்து இறுக்கிப் பிடித்து சற்றே நகர்த்தினாள்.
***
‘ஏண்டா
தரங்கெட்ட நாயே...! புருசன் செத்துட்டா, பொண்டாட்டி
ஊர் மேயக் கிளம்பிடு’வானு நெனப்பாடா உனக்கு ? பொம்பளைன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சாடா ராஸ்கல்...;
ம்...! இப்படி அடுத்தவன் பெண்டாட்டி எப்போ தாலியறுப்பா, எப்படி கொக்கி
போட்டு சிக்கவைக்கலாம், ஆளலாம்னுத்
திட்டம் போட்டுத்தான், வேளா வேளைக்கு பாதாமும் பிஸ்தாவும் தின்னு உடம்பைப்
பொலிகாளைப் போல வளர்க்கறியா...?’
இப்படியெல்லாம், எகிறி எகிறிக் கூச்சலிட்டு, காளியாட்டம் ஆடி, இந்தத் துடுப்பால ஒரே போடு போட்டுச் சுத்தமா...
நசுக்கிர’ட்டுமா?” என்று சூலத்தோடு
காளி வருவதைப் போல, துடுப்பாயுத்தோடு பாய்ந்து வந்து கோபாவேசத்தோடு, தன்னைக் குத்திக்
குதறத் தயாராக தன் முன்னே பருவதம் உக்கிரமாக நிற்பதாகத் தோன்றியது நந்தகுமாருக்கு.
தெருவெல்லாம் கூடி நின்று, தன் மேல் ‘த்தூ... த்தூ...’ எனக்
காறித் துப்பி, செருப்பு, விளக்குமாறு, அழுகிய முட்டை, தக்காளி என கையில் கிடைத்தை
எடுத்து தாறுமாறாக அடித்து அவமானப் படுத்திச் சந்தி சிரிக்க வைத்துவிட்டதாக, பிரமை வந்தது நந்தகுமாருக்கு.
அவனை அறியாமல் உடம்பு ஒரு முறைத் தூக்கிப் போட்டது.
பருவதம், எந்த எதிர்வினையுமாற்றாமல்,
இயல்பாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்க்கப் பார்க்க, நந்தகுமாருடைய குற்ற உணர்வின் விழுக்காடு உயர்ந்து கொண்டே போனது.
‘நொந்த
குமாராக’ தலைகுனிந்து நின்றான்.
***
“இவனுங்க மாதிரி ஆளுங்களை நம்பவேக் கூடாது பருவத்தூ...!
கொஞ்சம் அசந்தா அடிமடீல கை வைச்சிடுவானுக...!”
சில ஆண்டுகளுக்கு முன், இதே போல
ஒரு இக்கட்டான சந்தர்ப்பம் வந்தபோது,
இதே இடத்தில் வைத்து, தன் கணவர்
சுந்தரம், ஆத்திரத்தோடும், அருவருப்போடும் தன்னிடம் சொல்லி, எச்சரித்ததை இப்போது மீள நினைவு கூர்ந்தாள் பருவதம்.
‘அவர் உண்மையிலேயேத் தீர்க்கதரிசிதான்;’ ‘தன்னை
உள்ளங்கையில் வைத்துத் தாங்குவாரே சுந்தரம்;
எங்கும், எப்போதும், எதிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் மனைவிக்கு அனுசரணையாக, அரவணைப்பாக
நடந்து கொள்ளும் சுந்தரத்தின் கம்பீரம் மனக்கண் முன்னே காட்சியானது.
காலம் சென்ற தன் அன்புக் கணவர் சுந்தரத்தின் தீர்க்க
தரிசனத்தை, ஏக்கத்துடன் நினைத்துப் பார்த்தாள் பருவதம்.
என்ன ஆச்சரியம்? அன்புக்
கணவரும், சரக்கு மாஸ்டருமான சுந்தரம் காலமாகி விட்ட, பதினேழாம் நாளே, அவர்
சொன்ன வாக்கு பலித்துவிட்டதே...?;
ச்சே...! மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா...?’
ஆற்று ஆற்றுப் போனாள் பருவதம்.
‘எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ...?’ னு எப்பவும் விழிப்பா இருக்கணும் போல.’
ஆண் துணை இல்லாம வாழணும்னா, ஒவ்வொரு
கணமும் எச்சரிக்கையா இருக்கணும்னு
இப்ப தெரிஞ்சி போச்சு...!’
‘இதுபோல ஒரு சந்தர்ப்பதையே கொடுக்காம எச்சரிக்கையா இருந்துக்கணும்...’
என்பது போன்ற சுய தற்காப்புத் திட்டங்களை தனக்குள் சங்கல்பித்துக் கொண்டாள்.
நந்தகுமாரின் கயவாலித்தனத்தைக் கண்டதும், இப்படிப் பட்ட துரதிருஷ்ட வசமான செயலை முதல் முதலில் சந்தித்ததால்,
சற்றே அதிர்ந்தாளேத் தவிர, அதற்காக, அஞ்சி
நடுங்கி ஓடி விடவோ, ஒடுங்கி விடவோத் தயாராக
இல்லை பருவதம்.
***
‘அச்சமில்லை...!’ என்று மனதளவில் நினைத்தாலும்,
“என்னடா மரியாதை குறையுது...! பொறுக்கி நாயே? அடிச்சிப்
பொலி போட்ருவேன்...!
‘ஈவ் டீஸிங்’னு புகார் பண்ணி உள்ளே தள்ளட்டுமா...?
உன்னை மாதிரி பொறுக்கியை உள்ளேத் தள்ளி முட்டிக்கு முட்டி
தட்டி, லாடம் கட்ட வைக்கணும்டா...!”
இப்படியெல்லாம்
அதட்டி, கூச்சல் போட்டு மிரட்டும் துணிவும் வரவில்லை பருவதத்துக்கு.
‘சேலை பறந்து போய் முள்ளில் விழவில்லை.
முள் வந்து சேலையில் மாட்டிக்,
கிழிக்கப் பார்க்கிறது.
மெது மெதுவாய் சேலையை சேதாரமில்லாமல் மீட்க வேண்டும்.’ என்ற எச்சரிக்கை உணர்வுதான் மிகுந்திருந்தது
பருவதத்துக்கு.
திறந்த வீட்டில் நாய் நுழைந்ததைப் போல,
நந்தகுமார் என்ற பொறுக்கி வீட்டுக்குள் வந்ததோ;
தனித்திருக்கும் தன் அருகில் ஒட்டினாற்போல் வந்து அவன்
நின்றதோ;
‘பருவத்தூ...’ என்று அயோக்கியத்தனமாகத் தன்னை அழைத்ததோ;
தற்போது குற்ற உணர்வில் தலை குனிந்தபடி நடுக்கத்தில்
எதிரில் நிற்பதோ;
எதுவும் தெரியாதவள் போல, நடந்து
கொண்டாள்.
தன் பார்வையை சற்றும் திருப்பவில்லை பருவதம்.
கவிழ்ந்தும், ஒருசாய்ந்தும், நிமிர்ந்தும்
பதினேழு நாட்களுக்கு முன் விளக்கிக் கவிழ்த்த பாத்திரம் பண்டங்களின் மீது மாறி
மாறிக் கைகளை வைத்து நகர்த்தியும், இடம் மாற்றி
வைத்தவாறும், பிஸியாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டாள்.
ஒரு ஜோடு-தவலையின் விளிம்பைத் தொட்டுத் திருப்பியபோது அது
அருகிலிருந்த கங்காளத்தின் கைப்பிடியில் மோதி “டிடிங்...!” என்று அதிர்வு ஓசையைக்
கிளப்பியது.
‘நல்ல வேளை பிழைச்சோம்; நாம
வந்தததையே பருவதம் கவனிக்கலை போல...!’ - தன்னை
ஆசுவாசப்படுத்திக் கொண்டான் நந்தகுமார்.
கொஞ்சம் தைரியம் வந்தது அவனுக்கு.
“ம்க்கும்...” என்று, பருவதத்தின் கவனத்தை
ஈர்க்கும் வகையில், ஒரு முறை
கனைத்தான்.
தன் வருகையையும் இருப்பையும் கனைப்பின் மூலம் சங்கேதமாக பருவதத்திற்கு அறிவிப்பதாக நம்பினான் நந்தகுமார்.
***
கனைக்கும் ஒலி கேட்டு, திடீரென, அப்போதுதான்
அவனைப் பார்ப்பதைப் போல நந்தகுமாரின் பக்கம் திரும்பினாள் பருவதம்.
“வாங்க தம்பீ...!” விழி உயர்த்தி, இயல்பாக அவனை
வரவேற்றாள்;
“அப்பா வந்திருக்காங்களா தம்பி?” - கேட்டுக்
கொண்டே, அவனுக்குப் பின் அவன் தகப்பனாரைத் தேடுவதைப் போலப்
பார்த்தாள்;
உட்காருங்க தம்பி...!” ஒரு
பேச்சுக்குத்தான் சொன்னாள்.
‘உட்கார்ந்துத் தொலைத்துவிடுவானோ...?’ என்று உள்ளுக்குள் வெறுத்தாள்.
மொத்தத்தில் மிக
இயல்பாக நடித்தாள் பருவதம்.
‘நல்ல வேளை; மிஸ்
பிஹேவ் செய்ததை இவள் கவனிக்கவில்லை...’ என்று தனக்குள் உறுதிப் படுத்திக் கொண்டான். அந்த நினைப்பே நந்தகுமாருக்கு நிம்மதியைத் தந்தது.
“.................” எதுவும் பேசாமல்
அமைதியாக நின்றான் நந்தகுமார்.
குற்ற உணர்வில் கூனிக் குறுகி நின்ற நந்தகுமாருடைய, நாடி பார்த்துவிட்டாள் பருவதம். இப்போது அவள் கை
உயர்ந்தது
“தம்பீ...!”
“ம்...”
“நேத்தைக்குத்தான்
அவருக்கு பதினாறாம் நாள் காரியம் ஆகி, சுபம்
முடிஞ்சிது!” - எதிர்ச் சுவரில் தொங்கிய, சுந்தரத்தின்
நிழற்படத்தைக் காட்டிச் சொன்னாள் பருவதம்.
பருவதத்தின் கண்களைத் தவிர்க்க, சுவற்றில்
சட்டமிடப்பட்டு பூமாலையோடு தொங்கிக் கொண்டிருந்த சுந்தரத்தின் புகைப்படத்தையே உற்றுப்
பார்த்தான் நந்தகுமார்.
“இன்னிக்கு அவர் போய்ச் சேர்ந்து,
பதினேழாவது நாள் தம்பீ.”
“ஆமாம்ணி...”
என்றான்.
வார்த்தைக்கு வார்த்தை தம்பீ... தம்பீ... என்று விளித்து, அந்த
காமாந்தகனின் வாயால் அண்ணி, என்று சொல்ல வைத்தது, பருவதத்தின் முதல் வெற்றி.
“தம்பி, அவர் ஆண்டுக்கிட்டிருந்த, பாத்திரம்
பண்டங்கள், அண்டா குண்டா எல்லாத்தையும் ஒரு சேரப் பாத்துப் பாத்து
பிரமிச்சி நிக்கறேன்! வெகு இயல்பாக,
பருவதம் நந்தகுமாரிடம்
சொன்னாள்.
***
‘ஆழ்ந்த
யோசனையில் இருக்கும்போதோ; ஏதோ ஒரு
காரியத்தில் அதீத கவனத்தில்
இருக்கும்போதோ; கண் எதிரிலேயே எவராவது வந்து
நின்றாலும், பலமாகப் பேசினாலும்,
எதுவும் பாதிக்காத மன நிலையை
நாம் சில நேரங்களில் கடந்து வந்திருக்கிறோம் அல்லவா? அப்படி
ஒரு நிலையில்தான் இருந்திருக்க வேண்டும் பர்வதம்;’ என்று, தனக்குத்
தானே முடிவு செய்து கொண்டு, மனதைச் சமாதானம் செய்து கொண்டான் நந்தகுமார்.
‘நல்ல வேளை, ‘பர்வத்தூ...’
என்று, அவள் காதருகில் சென்று வழிந்ததை, காதில் வாங்கவில்லை
அவள்...!’; நினைத்து நினைத்து நிம்மதிப் பெருமூச்சு
விட்டுக் கொண்டான்.
மிகப்பெரிய கண்டத்திலிருந்து மயிரிழையில் தப்பி
விட்டதாய்த் தோன்றியது நந்தகுமாருக்கு..
***
“தம்பீ...!”
“சொல்லுங்க
அண்ணி...!”
“அவுரு, உசிர விடுறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால, கழுவிக்
கவுத்துப் போட்ட பாத்திரம் பண்டங்க இதுங்கல்லாம்.”
எதிரே கிடந்த சமையல் பாத்திரங்களைச் சுட்டிக் காட்டினாள்
பருவதம்.
“பதினாறு நாளா, கவுந்து
கிடக்கற கடாய நிமுக்கக் கூட நேரமோ, மனசோ
இல்லே;
“....................”
“நீங்களே
பாங்கறீங்கல்லே தம்பீ.?” - ஒரு அறி-வினாவை அவன் முன் எழுப்பினாள் பருவதம்.
“ஆமாண்ணி...”
ஆறுதல் கூறும் தொனியில் குரலின் அளவை மிகவும் குறைத்துச் சொன்னான் நந்தகுமார்.
“தம்பீ...! எல்லா சாமான்களையும்
தூசுதட்டி, அடுப்புல கடாய் ஏத்த உத்தேசிச்சதும், ஃபோன்
பண்ணிச் சொல்றேன்; - என்று
சொல்லியவள் சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தாள்.
“நீங்க
‘அலையாதீங்க”; - என்று சொல்லி, சில
கணங்கள் நிறுத்தினாள்.
“அப்பாக்கிட்டேயும்
விவரமாச் சொல்லுங்க!”– என்று முடித்தாள்.
‘அலையாதீங்க தம்பி...’ என்று அழுத்தமாகச் சொன்ன, பருவதத்தின் விளி, குற்றமுள்ள
நந்தகுமாரின் மனதைக் குத்திக் கிழித்தது.
***
நந்தகுமாரிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை
சாவித்திரி.
யார் வருகையையோ எதிர்பார்ப்பதைப் போல, பின்-கட்டை
எட்டிப் பார்த்தாள்.
“சாவித்திரீ...! சாவித்திரீ...!”
“............”
“நேரமாவுது பாரு...!”
“............”
“ரெடியாகி
சீக்கிரம் வா...!” - பலமாய்க் குரல் கொடுத்தாள்;
“உங்க மாமா பஸ் இறங்கி, லக்கேஜை, ஆவின்
கடைல வெச்சுட்டு, கால் நடையா
நடந்து வர்ராறாம். ஃபோன்
வந்துது; அவசரமா, சைக்கிள்ள போயி கேரியர்ல பை மூட்டைங்களை வெச்சித் தள்ளிண்டு
வந்துடேன். சீக்கிரம் போ...!”
யாருமே இல்லாத வெற்றுப் பின்கட்டை நோக்கி, இல்லாத
அண்ணனின் வருகையை அறிவித்து, சாதுர்யமாகச்
சூழ்நிலையைச் சமாளித்தாள் பர்வதம்.
அதே நேரத்தில், நந்தகுமாரின்
நடவடிக்கைகளையும், ஓரக்கண்ணால் அளந்தாள் பருவதம்.
கெட்ட நோக்கத்தில் வந்திருந்த, நந்தகுமார்
சுதாரித்தான்.
தொடர்ந்து இருந்தால் சிக்கலாகிவிடுமோ என்று பயந்தான்.
உடனடியாக இடத்தைக் காலி பண்ணத் துடித்தான்.
“தொழில் தொடங்கினதும் ஃபோன் பண்ணுங்க அண்ணி...!”
அவசர அவசரமாகப் பருவதத்திடம் சொல்லிக்
கொண்டு, ஓட்டமும் நடையுமாய் நகர்ந்து, இடத்தைக் காலி செய்தான் நந்தகுமார்.
***
“உஷ்...! ;
அப்பாடா...! ;
பெரிய கண்டத்துலேர்ந்து தப்பிச்சோம்...!”
பெருமூச்சு வந்தது பருவதத்துக்கு.
நந்தகுமார் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு, சடாரென்று
ஓடிச் சென்று, வாசல் கதவை மூடித் தாழிட்டாள்;
மீண்டும் வந்து, விசி
பலகையில் உட்கார்ந்தாள்;
பருவதத்தின் மண்டைக்குள் ஒரு போராட்டக் களமே உருவாகி
விட்டது.
தாள முடியாத தவிப்பும், மனசு
பூராவும் இனம் தெரியாத கவலையும் ஆக்ரமித்தது;
‘எப்படித்தான் சொச்சக் காலத்தைத் தள்ளப் போறோமோ...?’
ஆயாசம் வந்தது;
இது போலக் காமாந்தகர்கள் அலையற ஒலகத்துல, ஒத்தைப்
பெண் குழந்தைய எப்படிக் கரைச் சேர்க்கப் போறேனோ?’
கவலையும், பாதுகாப்பற்ற உணர்வும் தொற்றிக் கொண்டது பருவதத்தை.
***
அத்தியாயம் 3
“இந்தியாவின்
ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது.”
கம்பும் கிளையுமாக, மிகச்
செழிப்பாக வளர்ந்து கொண்டே இருக்கும், அமெரிக்க
ஐ.டி கம்பெனியின் சென்னைக் கிளை அது.
காந்தி ஜெயந்தி நாளில், கம்பெனியின் அந்தக்
கிளை, வழக்கத்துக்கு மாறாக, என்றுமில்லாத்
திருநாளாய், விழாக் கோலம் பூண்டிருந்தது.
குளிரூட்டப்பட்ட பிரும்மாண்டமான கம்யூனிட்டி அரங்கம் ஊழியர்களால்
நிரம்பி வழிந்தது.
மேடையின் நடுவில் நிறுத்தப்பட்டிருந்தது பெரிய அளவிலான, தேசத் தந்தை காந்தியடிகளின் கட் அவுட் பிரதிமை.,
கதர் மாலைகளும், பூ
மாலைகளும் சார்த்தி, அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த சத்தியாகிரஹியின் உருவப்படம்...
‘ஜி எம்’ சாருடைய மனைவி பட்டுப் புடைவையில் ஒய்யாரமாய் நடந்து வந்து, குத்து விளக்கேற்றிச் சிறப்பித்தார்.
‘காந்தி ஜெயந்தி’ விழாவைத் துவக்கி வைத்து, வரவேற்புரை
நிகழ்த்தினார் ‘ஜி எம்.’
சிறப்புப் பேச்சாளருக்கு, சால்வைகள்
போர்த்தப்பட்டன. நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்புப் பேச்சாளரைப் பற்றி அறிமுகம் செய்து வைத்தார் தலைமை
ஹெச் ஆர் தேவநாதன்.
மெதுவாக எழுந்து ஒலி வாங்கியின் முன் வந்து நின்று காந்தியடிகளையும்,
மேடையில் உள்ளோரையும் பார்வையாளர்களையும் பார்த்து கை கூப்பி வணங்கிவிட்டு, தன் தலைமை உரையைத் தொடங்கினார் சிறப்புப் பேச்சாளர்.
“கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது.”
“கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது.”
இரண்டு முறை அழுத்தம் திருத்தமாக அதையே சொன்னார்.
தேசத் தந்தை காந்தி மகாத்மாவின் அற்புதமான, அழுத்தமான, ஆழமான
அந்தக் கருத்தை பார்வையாளர்களின் செவிகளுக்குள் விதைத்தார் பேச்சாளர்.
***
பள்ளி நாட்களிலிருந்தே, பல மேடைகளில்
பலமுறை, பல பேச்சாளர்கள் சொல்லிச் சொல்லிக் காதில் வாங்கியதும், காந்தீயக்
கட்டுரைகளில் படித்ததுமான. மிகப் பிரபலமான, நாடறிந்த, நன்கு
தெரிந்த, கருத்துதான் இது;
என்றாலும்,
‘டீம் லீடர்’ கஜா என்கிற கஜேந்திரனுக்கு, அந்தக்
கருத்து, இன்று புதிதாய்த் தெரிந்தது; மனதில்
ஊன்றி ஆழமாய் இறங்கியது.
***
மகாத்மா காந்தியின் வாழ்வில், அவரின்
சிறு வயது முதல், பெற்றோர், ஆசிரியர்கள், வயதில்
மூத்தோர் இப்படி, எல்லோரும் அவருக்கு,
‘பொய் சொல்லக் கூடாது!’ என்று அறிவுரை சொல்லாமலா இருந்திருப்பார்கள்?
பலரால் பல சமயங்களில் அறிவுறுத்தப்பட்ட சிறந்த
விழுமியங்களில் ஒன்றுதான் பொய் சொல்லாமை; என்ற
போதிலும்,
‘அரிச்சந்திரா’ என்ற நாடகம் பார்த்தவுடன்தான் தனக்குள் வேதி
மாற்றம் ஏற்பட்டதாக, தேசத் தந்தை சொல்கிறார் அல்லவா...! அது போலத்தான்.
‘டீம் லீடர்’ கஜாவின் மனதில் நிகழ்ந்த இந்த வேதியியல்
மாற்றமும்.
‘ஒரு சுள்ளி முறியும் நேரத்தில் ஞானம் வரும்’ – என்பார்
புத்தர்.
ஆனால் அந்தச் சுள்ளி எப்போது, எங்கு, எப்படி
முறியும் என்பது யாருக்குத் தெரியும்?
சிலருக்குக் கடைசீவரை முறியாமலே போவதும் உண்டல்லவா!
மலை முகடு, மொட்டைப் பாறையின் வெடிப்புகள், இடுக்கு
முடுக்குகளில் விழுந்த விதையாய்,
கஜாவின் மூளை மடிப்பில் சிறப்புப் பேச்சாளரின் கருத்து
சிக்கிக் கொண்டது;
முழுமையான முளைப்புத் திறனோடு முளை விடத் துடித்தது.
‘விதைத்தவன் உறங்கினாலும், விதைகள்
உறங்காதல்லவா?’
கஜேந்திரனின் மனதில், புத்தியில், ஊனில், உயிரில்
என, படிப்படியாக, மெல்ல
மெல்ல, அதே சமயம் ஆக்ரோஷமாக, முளைத்தெழுந்து, வீரியமாகச்
செழித்து வளர்ந்தது சிறப்புப்
பேச்சாளர் விதைத்த விதை.
***
ஒரு வழியாக மேடைப்பேச்சை முடித்தார் பேச்சாளர்.
கட்டாயத்தின் பேரில் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் கைகள், கடமைக்காகத்
தட்டி, தளர்வான ஓசை எழுப்பின.
‘ஒரு விடுமுறை நாளை கம்பெனி பாழடித்து விட்டதே...!’
கோபமும், ஆத்திரமும் அனைவரின் கண்களிலும், உடல்
மொழிகளிலும் அப்பட்டமாகத் தெரிந்தன.
‘எப்போது பேச்சை முடிப்பான் இவன்...!’
எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆடியன்ஸ்,
பேச்சை ஒரு வழியாக முடிந்ததும், தாங்கள்
அமர்ந்திருந்த ஃபைபர் நாற்காலியை,
“பர்... ப்பர்... புர்... டர்...” என்று, பலமாக
ஓசையெழும் வண்ணம் இழுத்து விட்டும், கதவுளைத்
தடார் என்று சத்தமெழச் சாத்திக் கொண்டும் அரங்கத்தை விட்டு வெளியேறி, தங்களின்
ஆத்திரத்தைப் பதிவு செய்தார்கள்.
***
சென்னையில் பிரசித்தமாகவும், பிரதானமாகவும், கார்ப்பரேட்டுகளின்
வாழ்வாதாரமாகவும் விளங்குவது ஐ டி பார்க்.
விண்ணைத் தொடும் உயரத்துக்குச் செழித்து நிற்கும் அடுக்கு மாடி
ஐ டி கம்பெனிக் கட்டடங்களே அதற்குச் சாட்சி.
அதில் ஒன்றாய், ஓங்கி
உயர்ந்து நின்றது இந்த அமெரிக்கக் கம்பெனியும்.
உச்சி வான் சூரியனாய் பிரகாசிக்கும், பலப் பல
வளர்ந்துவிட்ட கம்பெனிகளுக்கு நடுவே,
சமீபத்தில் கீழ் வானத்தில் உதித்த உதய சூரியனாய் தோன்றி, வளர்ந்து
வரும் கம்பெனி இது.
அதன் சீரான செயல்பாடுகளினால், மிகப்
பெரிய கம்பெனிகளோடு, போட்டிப் போட்டுக் கொண்டு படிப்படியாக வளர்ந்து வருகிறது
அந்த நிறுவனம்.
புள்ளி விவரங்களின் அடிப்படையில்,
சென்னைக் கிளையின் சீரான வளர்ச்சி, தலைமை
அலுவலகத்துக்கு மிகவும் திருப்தி அளித்தது. மேலும் உயர்த்த யோசனை செய்தது.
தகுதி வாய்ந்த நிபுணர்களைக்
கூட்டி, குழு அமைத்து, கருத்துக்களைப் பதிவு செய்து, குழு விவாதங்களின் இறுதியில்,
பதிவு செய்யப்பட்ட
ஆலோசனைகளை உயர் மட்டக் குழுவின் கலந்தாய்வின்
மூலம் செயலாக்கத்திற்கான சாத்தியக்
கூறுகளையெல்லாம் நன்கு ஆராய்ந்து ; முறையாகத்
திட்டமிட்டது.
கோட்பாட்டு வடிவில் இருக்கும் திட்டத்தை எவ்வாறெல்லாம் செயல்முறைப் படுத்துவதற்கு ஏற்ற உத்திகளை பட்டியலிட்டு, அதில் மிகவும் அனுகூலமான
திட்டத்தைத் செயல்படுத்த
நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்து; சென்னைக்
கிளையின் தற்போதைய நிலையைக் கூர்ந்து கவனித்து வந்த தலைமை அலுவலகம்;
கிளையை படிப்படியாக
அடுத்தடுத்த உயரத்திற்கு
உயர்த்தவேண்டும், என்ற குறிக்கோளாக இல்லாமல், குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்சியை எட்டிவிடவேண்டும் என்று எதிர்பார்த்தது தலைமை நிர்வாகம்.
எனவே சில முக்கிய முடிவுகளை
திடமாக எடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டது நிர்வாகம்.
முதல் கட்டமாக, சென்னைக்
கிளையின் தலைமைப் பொறுப்பை மாற்ற முடிவு செய்த தலைமை நிர்வாகம், புதுத் தலைமை நிர்வாக அதிகாரியை (‘சி ஈ ஓ’) அவசரமாய்ப்
பணியமர்த்திவிட்டு, அனைத்து ஊழியர்களுக்கும்
ஆன்லைனில் அறிவிப்பும்
வெளியிட்டது மத்தியத் தலைமையகம்.
***
சென்னைக் கிளையின் புதிய தலைவர் யாரெனெ, ஆன்லைன்
சுற்றறிக்கை மூலம் அறிந்து கொண்டார்கள் அனைத்து ஊழியர்களும்.
“வரப்போற ‘சி ஈ ஓ’, சவுத்
இண்டியாவாம்...!”
“ரொம்ப
கண்டிப்பானவராமே...!”
“காந்திய
வாதியாம் அவுரு...”
“ரொம்ப கெடுபிடியான ஆளாம். கேள்விப்பட்டேன்...!”
“வளைஞ்சி
கொடுத்தா நிலைச்சி நிக்கலாம், விறைப்பா நின்னா முறிச்சிக்கிட்டுப் போயிரும்...!”
“ரொம்ப
‘கன்ஸர்வேடிவ்’னும் பேசிக்கறாங்க...!”
“எத்தனையோ
அதிகாரிங்களைப் பாத்தாச்சு, இந்தாளையும் பாப்போம்...!
வரப்போகும் எக்ஸிகியூடிவ் பற்றி ஆங்காங்கே அவரவர்க்குத்
தோன்றியதைப் பேசினார்கள்;
கேள்விப்பட்டதை வைத்து அவரவர் போக்கில் கதைத்தார்கள்.
காரணம் கற்பித்தார்கள்;
அபிப்ராயம் சொன்னார்கள்;
ஒருவருக்கொருவர், தங்கள்
கருத்துக்களையும் அபிப்ராயங்களையும் நேரிலும், கைபேசியிலும், பகிர்ந்து
கொண்டார்கள்.
***
“இந்த ஆள் என்னென்ன பாடு படுத்தப் போறானோ...?”
மிரண்டார்கள்.
“சவுத் இண்டியன்னு சொல்றாங்க? சந்தேகித்தார்கள்.
வடநாட்டுக்காரன் மாதிரி இருக்க வாய்ப்பில்லை...!” ஊகித்தார்கள்.
“கார்ப்பரேட்டுல, நார்த்தாவது
சவுத்தாவது...; ஹேஷ்யமாய்ப் பேசிக் கொண்டார்கள்.
எல்லாப் பயலும் ஒண்ணுதான்...!”; பொதுவான
அபிப்ராயம் சொன்னார்கள்.
“கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது, கேம்பஸ்’ல
வந்து செலக்ட் பண்ணினப்போ, சந்தோசமா இருந்துச்சு. இப்போ...? “எல்லாம்
மழுங்கிப் போயி நிக்கிறேன்.!” கழிவிரக்கத்தில் புலம்பினார்கள்.
‘புடிக்கவும் முடியாம, விடவும்
முடியாம புலிவால் புடிச்சாப்ல ஆகிப்போச்சு என் கதை...!” தன்னிரக்கத்தில்
தவித்தார்கள்.
“ஐ டி பிழைப்பு இருக்கே... அது ஒரு மானங்கெட்ட
பிழைப்புடா...!” உரத்து வருத்தப் பட்டார்கள்.
புதுத் தலைமை நிர்வாகி, பொறுப்பேற்பதற்கு
முன்பே, வரப்போகும் நபரைப் பற்றி ஹேஷ்யமாகப் பேசுவதும், வாய்
புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று குழம்புவதும், புலம்புவதுமாக, பிஸியாக
இருந்தது அந்த அலுவலக வளாகம்.
***
புதுத் தலைமை நிர்வாக அதிகாரி, அதாவது
‘சீ இ ஓ’, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கம்பெனியின் சென்னைக் கிளைக்கு, தலைமை
அதிகாரி புதிதாக வந்து பொறுப்பை ஏற்கும் நாளில், காலங்காலமாகச்
சிலப் பாரம்பரியமான வழி முறைகள் அனுசரிக்கப்பட்டன.
பொறுப்பேற்கும் நாளிலி அனைத்து ஊழியர்களையும் கம்யூனிட்டி
அரங்கில் ஒன்று கூடுவார்கள்.
கம்பெனியின் தற்போதைய நிலை பற்றிய புள்ளி விவரங்களை
டிஜிட்டல் திரையில் போட்டு, ‘புள்ளி விவரங்கள்’
சம்பந்தமாக கூட்டத்தில் கார
சாரமாக விவாதம் நடக்கும்;
இந்தக் குறிப்பிட்ட கிளையிலிருந்து, தலைமை
அலுவலகம் என்னென்ன எதிர்பார்க்கிறது...? என்பதையெல்லாம்
தொகுப்பாய்ப் பிரிண்ட் செய்யப்பட்
‘புக்-லெட்டை’ அனைவருக்கும்
விநியோகிப்பார்கள்.
இரண்டு புறமும் அச்சடித்து விநியோகித்தால், ‘புக்
லெட்’டை அங்கேயே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.’ என்பதை அனுபவத்தில் அறிந்த
டெக்னிகல் பிரிவினர், ஒரு பக்கம் மட்டும் பிரிண்ட் செய்த புக் லெட்’ விநியோகித்தார்கள்.
‘ஒன் சைடு பேப்பராகவாவது இதைப் பயன் படுத்தட்டுமே என்ற
உயர்ந்த எண்ணத்தின் விளைவுதான் இது.
***
புக்-லெட்டில் இருப்பதை, அச்சு அசலாக, பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்வார்கள். அது மட்டுமில்லை. அதே விஷயத்தை அட்டை காப்பி எடுத்து டிஜிட்டல் திரையிலும் போட்டுக்
காட்டுவார்கள்.
பார்வைக்கு ஏதேனும் தப்பி விட்டால் என்ன செய்வது என்று நினைத்தோ
என்னவோ, அதே விஷயத்தை மைக்
பிடித்துப் பிரசங்கமும் செய்வார்கள்.
இப்படிப்பட்ட பாரம்பரியமான நடைமுறைகள் எதையும், அறவே
பின்பற்றவில்லை புதிதாய் வந்த சி இ ஓ.
மேனேஜிங் டைரக்டர், நிறுவனத்தின்
கிளைச் செயலர், தலைமை ஹெச் ஆர், போன்ற
முதன்மை ஆளுமைகள் மட்டுமே சி ஈ ஓ கேபினுக்கு மீட்டிங்குக்கு அழைக்கப்பட்டனர்.
இது வரை இல்லாத ஒன்றாக, ‘ஹை பவர்
மீட்டிங்’ என்ற பெயரில் சந்திப்பு நடைபெற்றது.
தொன்று தொட்டு வரும் நடைமுறையை திடீரென்று மாற்றியதால்.
அனைத்து ஊழியர்களின் பார்வைக்கும் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தார் புதுச் ‘சீ இ
ஓ’.
***
புது சி இ ஓ
வின் முதல் சுற்றறிக்கையே, அனைத்து ஊழியர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாய்
அமைந்திருந்தது.
“வரும் அக்டோபர் 2 ம் தேதி ‘காந்தி ஜெயந்தி’ நாளன்று நம்
அலுவலக வளாகத்தில், சிறப்புக் கூட்டம் நடைபெறும்.
அனைத்து ஊழியர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.”
நிறுவன செயலர் மூலமாக, ஒவ்வொரு
ஊழியருக்கும் வந்தது மின்னஞ்சல் சுற்றறிக்கை.
“காந்தி ஜெயந்தி’
அன்று சிறப்புக் கூட்டம் நடைபெற இருப்பதால்,. எந்த
ஊழியருக்கும் எந்த வகையான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது”
தொடர்ந்து வந்த இரண்டாவது சுற்றறிக்கையின் ஷரத்து, ஊழியர்களுக்குப்
பேரதிர்ச்சியைத் தந்தது.
இதுவரை இல்லாத ஒரு நடைமுறையை சுற்றறிக்கை மூலம் பார்த்த
ஊழியர்கள் குமைந்தார்கள்.
ஆளாளுக்குப்
புலம்பித் தள்ளினார்கள்.
இந்தப்
புலம்பல்களெல்லாம் தலைமைக்குச் சென்றிருக்குமோ என்னவோ.
“தவிர்க்க முடியாத காரணங்களால், மிகவும்
அவசியமாக விடுப்பு எடுக்கவேண்டும் என்ற பட்சத்தில், அவசரத்தின்
தன்மை கருதி சம்பளமில்லா விடுப்பு மட்டும் அனுமதிக்கப்படும்...!”
இவ்வாறு அறிவித்தது அடுத்த சுற்றறிக்கை.
‘லோக்கல் ஏரியா நெட் ஒர்க்...’ மூலம் செய்தியைப்
பரப்பியதுடன்,
‘டீம் லீடர்’ மூலமாக ஊழியர்களுக்கெல்லாம், வாய்மொழி
உத்தரவும் பறந்தது.
***
அத்தியாயம் 4
விசி
பலகையில் உடலும் மனமும் தளர்ந்து போய், விரக்தி
மேலிட அமர்ந்திருந்தாள் பருவதம்.
மிக ஆழமாகக் கவலைப்பட்டாள்.
‘எப்படி சொச்சக் காலத்தைச் சமாளிக்கப் போகிறோம்...?’
இனம் தெரியாத பயமும், கவலையும்
ஆக்ரமித்திருக்க, அவளை அறியாமல் ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள் பருவதம்.
ஒரு மாதிரி கனமான, மட்கிய
பழைய வாடை சுவாசத்தை நிறைத்தது.
கூடவே, பழைய நினைவுகளும் வந்து நிமிர்த்தின பருவதத்தை.
‘இன்றைக்குப் பதினேழு நாட்களுக்கு முன்பு வரை, இந்த
கிருஹத்தில் வீசவே வீசாத வித்தியாசமான வாடை இது.
கடாயில் இளகும், ஜீரா, வெல்லப்பாகு
வாசனை;
முந்திரி பிஸ்தா பாதாம் இத்யாதிகள், வாணலியில்
காய்ந்த நெய்யில் வறுபடும் மணம்;
பால் பேடா, அல்வா, போன்ற இனிப்புகள் கடாயில் பதமாகும் நறுமணம்;
கறிவேற்பிலை, பூண்டு, நிலக்கடலை, கடலைப்
பருப்பு என அனைத்தும் மிளகாய்த் தூளோடு கலந்து மிக்சருக்காக, வறுபடும்
கார நெடி.
இவைதானே சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் இந்த வீட்டில்.
இந்த நறுமங்கள் தானே வீடு முழுவதும் எப்போதும்
நிறைந்திருக்கும்...!’
அதெல்லாம் அற்றுப் போய், இன்று
மட்கு வாடை, புகை நெடி, களிம்பு வேகம் அனைத்தும் கலந்து வீசுவதை ஜீரணிக்க
முடியவில்லை பருவதத்தால்.
மீண்டும் இந்த வீட்டில், பலகார
பட்சண வாசனைகளை நுகர முடியுமா..? ஆயாசமாக இருந்தது பருவதத்துக்கு.
அது மட்டுமா? எந்தச்
சத்தமும் இல்லாத கும்’ மென்று ஒரு இறுக்கம்.
மயான அமைதி என்பார்களே...! அதுபோல. இறுக்கமான சூழல்.
மூச்சு முட்டியது.
‘இந்த வீடு இப்படியா இருக்கும்...!
துடுப்பு, கடாயோடு தேய்ந்து. ‘க்யூ... க்யூ... க்யூ...’ என்ற சீரான
உராய்வுச் சத்தம் சங்கீதமாய் இழையும் ஓசை,
கொல்லைக் கட்டில் சபீனாவும், ‘லிக்விட்’
ம் போட்டு, ஸ்க்ராப்ப’ராலும், உரிமட்டை
நாரினாலும், பாத்திரங்களைத் தேய்க்கும் “ஸ்ஹூ...ஸ்ஹூ...ஸ்ஹூ...” சத்தம்;
கங்காளம், ஜோடு தவலை போன்றவற்றைத் தேய்க்கும்போது அதன் காதுகள் ஆடி
ஆடி இடித்து “டடக்... டடிங்...” என்று வித விதமாக எழும் ஓசைகள்;
நெகிழிப் பையின் வாயை கசக்கிக் கசக்கி, ஊதிப்
பிரிக்கும்போது “ஸ்ச.... ஸ்ச....ஸ்ச...”; “ப்ஃ...
ப்ஃ...”; என்று ஒலிக்கும் கசங்கலொலி... ஊதலொலி...!
ஜாங்கரி, மைசூர்பாகு, லட்டு, பால்பேடா, கேக்... இப்படி ஏகப்பட்ட ஐட்டங்கள் நிறைந்திருக்க அதிலிருந்து, ஒரே ஒரு
இனிப்பு ‘விள்ளலை’யோ, ஒரு கப் மிக்சரையோ, சீர் முறுக்கு ஒன்றையோ, ஒரு
தேன்குழல் பீஸோ, ஒரே ஒரு
பால்பேடாவோ குஞ்சாலாடோ... எடுத்து நெகிழி
உறைக்குள் செலுத்தி, உறையின் வாயை வாட்டமாய் மடித்து வைத்து, ப்ரஸ்ஸரில் வைத்து அழுத்தி ஒட்டும்போது,
‘ப்ர்ஸ்ஸர்’ எழுப்பும் ‘பீ...ப்...’ கூவல்;
பட்சணங்களை காட்டன் அட்டைப் பெட்டிகளில் வைத்து, வாட்டமாய்
அடுக்கும்போது, ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும் கலாய்ப்புகள், பல்வேறு விதமான சிரிப்புகள்;
ஐட்டத்தின் பெயரையும், எண்ணிக்கையையும்
அழியா மை பேனாவால், காட்டன் அட்டையின் தலைப் பாகத்தில் எழுதிய பின், அட்டைப்
பெட்டியின் வாயை ஒட்ட,
‘அட்ஹிசிவ் பேக்கிங்’ சுருளை இழுத்துப் பிரிக்கும் ‘ப...ர்...ர்...ப...ர்...ர்...ப...ர்...ர்...’ ஓசை;
முற்றத்தின் ஓரமாய், நீள
அகலத்தில் பரத்தியும், உயரத்தில் ஏற்றியும், வரிசையாய்
அடுக்குப்பட்ட காட்டன் அட்டைப்
பெட்டிப் பாக்கேஜுகளை எதிரெதிர்
வசத்தில் வரிசையாய் நின்றபடி, வாசலில் தயாராய் நிற்கும் வாகனத்துக்குக் கை மாற்றி
விடும்போது, குஷியாய்க் கிளம்பும் பேச்சும், சிரிப்பும், கலாய்ப்பும்
ஏற்படுத்தும் அதிர்வுகள்;
குட்டியானையிலோ, மஹீத்ரா
வேனிலோ, அல்லது வேறு ஏதோ ஓர் இரும்புக் குதிரையிலோ ஏற்றி அனுப்பிய
பின்,
‘அக்கடா...’ என்று சாவதானமாக வந்து திண்ணையில் வந்து உட்கார்ந்து
கொண்டு, ஏற்றி அனுப்பப்பட்ட ஆர்டருக்காக ஓரிரு வாரங்களாக உழைத்த
உழைப்பைப் பற்றியும், அவ்வப்போது ஏற்பட்ட ரசமான அனுபவங்கள் பற்றியும் ஒருவரோடு
ஒருவர் பேசிப் பகிர்ந்து கொள்ளும் உரையாடல்களின் கலவை;
இப்படியாக எப்போதுமே பரபரப்பாக இருக்கும் வீடு. ‘இன்று இப்படி
மயான அமைதியாகக் கிடக்கிறதே!’
துக்கம் துக்கமாக வந்தது பருவதத்துக்கு.
***
சுந்தரம் காலமான நாள் முதல்,
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்
படாமல் கிடக்கும் இரும்புக் கடாய்களிலும், இரும்புத்
துடுப்புகளிலும், அடுப்புகளிலும் காற்றின் ஈரப்பதம் தாக்கியதால், செங்காவி
நிறத்தில் ‘ஃபெரஸோ ஃபெரிக்’, எனும் துரு மலர்ந்து சிரித்தது.
‘இந்தக் கடாயைத்தான் எவ்வளவு லாகவமாக அடுப்பிலேற்றுவார்
அவர்!’ கணவர் சுந்தரம் கடாயை அடுப்பிலேற்றும் அழகை மனதில் நினைத்தவுடன்
பர்வதத்தின் கண்கள் பனித்தன.
தவமிருந்து பெற்ற மகனையோ, மகளையோ, வாஞ்சையாய்த்
தூக்கி “ப்ஃப்... ப்ஃப்... ப்ஃப்...” என்று முத்தமிடுவதைப் போல, கடாயின் ஒரு
காதைப் பிடித்து லாகவமாய்த் தூக்கி,
அடிப் பாகத்தை உள்ளங்கையில்
ஏந்தி, முற்றத்து வெளிச்சத்தில் கடாயின் உள் புறத்தை கூர்ந்து
நோக்கி, “ப்ஃபூ... ப்ஃபூ... ப்ஃபூ...” என்று ஊதுவதும்;
தூசு துப்பட்டை எதுவும் ஒட்டிக் கொண்டிருந்தால், ‘சரக்...
சரக்...’ என பிடி துணியை எடுத்துத் துடைப்பதும்; அதற்குப் பின்
கடாயை அடுப்பிலேற்றும் லாகவம்;
எல்லாம் நினைவில் எழ ஆயாசமாய் உணர்ந்தாள் பருவதம்.
அது மட்டுமா...
பட்டும் படாமல் நெய் ஊற்றி, முந்திரியையும்
பிஸ்தாவையும் கடாயில் அள்ளிப் போட்டு, பொன்
முறுவலாய் சுந்தரம் வறுத்து எடுக்கும் பக்குவம்;
நேரம் பார்த்து, பதம்
பார்த்து, மண்டை வெல்லத்தை இடித்துக் கடாயில் போட்டு, பாகு
கிளறும் நளினம்;
ஸ்படிகம் போல் சுந்தரம், ஜீரா
தயாரிக்கும் பக்குவம்;
சற்றே எட்டத்தில் இருந்தாலும், பாகு
காய்ந்து வீசும் வாசனையைக் கொண்டே, பதம்
தெரிந்து கொண்டு, “பர்வதம், எரிதழலை நிறுத்து.” என்பாரே சுந்தரம்.
அவ்வளவு அனுபவம். அத்தனை நிபுணத்துவம் அவருக்கு.
அடுப்பை நிறுத்திய பின் ஒரு சில நிமிடங்கள் கழித்துத்
துடுப்பை நெய்யில் நனைத்து பாகுக்குள் விட்டு எடுத்துத் தூக்கிச் சாய்த்து பாகை
வழிய விடும்போது, சீராய், அறுபடாமல், தைல தாரையாய், வழியும்
பாகு.
‘இதோ பாரு...’ என்று, கம்பிப்
பாகைக் கண்ணில் காட்டிவிட்டு, அடுத்த ஐட்டத்தை அதில் கலக்கும் அந்தக் கணக்கு..., சுந்தரத்திற்கு
மட்டும்தான் வரும்.
சுந்தரத்தில் அனைத்து லாகவங்களும் தொழில் நுணுங்கங்களும், பர்வதத்தின்
கண் முன்னே காட்சிகளாய் விரிந்தன.
***
என்னதான் கவனம் மாறினாலும்;
நினைவுகளை மாற்றிக் கொண்டாலும்;
பழைய மலரும் நினைவுகளில் மூழ்கினாலும்;
இனிப்புக்கடை சந்தனச்சாமியின் மகன் நந்தகுமார் என்ற
பொம்பளைப் பொறுக்கி. தன்னை நெருங்கி வந்து நின்று “பருவத்தூ...” என்று
அழைத்தானே, அந்த, கீழ்த்தரமான சம்பவம், மீண்டும்
மீண்டும் வலுவில் வந்து பருவதத்தின் மனதை நோகடித்தது.
அந்த நினைவு வந்ததும் உடம்பு முழுவதும் கூசியது.
எப்படியோ, அந்தக் காமுகனைச் சமாளித்து அனுப்பி விட்டாலும், மனசு
பூராவும் காயப்பட்டிருந்தது அந்தச் சம்பவத்தால்.
‘சந்தனச்சாமிக்குக் கைபேசி மூலம் மகனின் யோக்யதையைப்
போட்டுக் கொடுத்து விடலாமா?’ என்று கூட ஒரு கணம் யோசித்தாள் பருவதம்.
‘பாவம்! சந்தனச்சாமி, மானஸ்தர்!
‘தன் ஒரே மகன் கோடரிக் காம்பு’ என்று தெரிந்தால் மிகவும் வருத்தமும் வேதனையும்
அடைவார்!’ என்று தோன்ற,
‘சொல்ல வேண்டாம் நம் உள்ளேயே போட்டுப் புதைத்துக்
கொள்வோம்...!’ - என்று தீர்மானித்தது பருவதத்தின் இளகிய மனது.
***
சற்றே அடுத்த தளத்தில் யோசித்தாள் பருவதம்.
இந்த ஒரு நந்தகுமார்தான் இந்தச் சமுதாயத்தில்
இருக்கிறானா...?
‘இதுபோல எத்தனையெத்தனை நந்தகுமார்கள் இந்தச் சமூகத்தில்
உலவுகிறார்களோ?’;
‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?’;
இப்படியெல்லாம் சிந்தித்துச் சிந்தித்துச் சோர்ந்து போனாள்
பருவதம்.
‘இனி இந்தச் சமையலர் தொழில்... பரிசாரகத் தொழில்... சரக்கு
மாஸ்டர் தொழில்... இதெல்லாம் நமக்குச் சரி வராதோ?’
அடிபட்ட பருவதத்தின் மனசு இப்படியெல்லாம் மானாவாரியாக
யோசித்தது.
***
நீண்டு கிடந்த முற்றத்து வாரியின் நிழலைக் குறுக்கி, குறட்டோரம்
அனுப்பியது உச்சியைக் கடந்த சூரியன்,
‘பளீர்’ எனப் பாய்ந்து, பாசி
பிடித்த முற்றத்துச் சுவரில் நீள் வட்டமாய் ஒளிர்ந்தன சூரிய கிரணங்கள்.
முற்றத்தின் கிழக்கு மாடத்தின் அருகே பளிச்சென நீண்டு
ஒளிர்ந்து, தான் மேற்கே சென்று கொண்டிருப்பதை அறிவித்தன சூரியக்
கதிர்கள்.
‘கம்யூட்டர் வகுப்புக்குப் போன சாவித்திரி வர்ற நேரம்.’
என்பதை உணர்ந்தாள் பருவதம்.
மகள் வரும் நேரம் கதவு சார்த்தப்பட்டு, உள்ளே
தாழிட்டிருந்தால் அது முறையாக இருக்காது.,.!’ என்று
தோன்ற, உடனடியாக, வாசல் கதவின் தாழ் நீக்கி, விரியத்
திறந்தாள்.
அவள் கைகள் இரண்டும், இறக்கை
விரித்தாற் போல் வாசல் நிலைப்படியின் இரண்டு பக்கங்களையும் பிடித்தபடி இருக்க,
‘மரண அவஸ்தையில், கட்டக் – கடைசியாக, நெஞ்சைப்
பிடித்தவாறு, சுந்தரம் படுத்துப் புரண்ட வாசல் திண்ணையை, கண்ணீர் மல்கப்
பார்த்துக் கொண்டே நின்றாள் பர்வதம்.
***
அத்தியாயம் 5
“புது சி. ஈ.
ஓ வெச்சாண்டா ஆப்பு!”
“அடுத்த
வாரம் வந்து ஜாயின் பண்ணித் தொலைச்சிருக்கலாம் இவன்!”
“நமக்கு
லீவு கெடைக்கறதே குதிரைக் கொம்பு.”
“அதுலயும், ஒரு லீவு நாளை என்ஜாய் பண்ண விடாமச் செஞ்சிட்டானே பாவி...!”
“அதிசயமாக் கிடைச்ச ஒரு நாள் விடுப்பையும் கெடுத்துக்
குட்டிச்சுவராக்கிட்டானே இந்த புது சீஃப் (Chief) எக்ஸிகியூடிவ்?”
‘சீப்’ (Cheep)
எக்ஸிக்யூடிவ் னு
சொல்லு...!”
“ஒண்ணா நம்பர் சாடிஸ்ட்டா இருப்பான் போல...!”
“எல்லாப்
பர்ஸனல் ப்ரொக்ராமையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டான்...!”
“.....................”
நாராசமாக, கெட்டக் கெட்ட வார்த்தைகளை எல்லாம் கலந்து, வாய்க்கு
வந்தபடி திட்டினார்கள்.
“நாசமாய்ப் போக...! குட்டிச் சுவராய்ப் போக...!’ என்றெல்லாம்
சாபமிட்டார்கள்...
கேபின், கேண்டீன், பார்க்கிங், வராண்டா, கிளை
பரப்பி நிழல் பரப்பும் அரச மரத்து மேடை.......
இப்படியாக, ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசும் இடங்களிலெல்லாம், புது சி இ
ஓ வின் அராஜகம் மட்டுமே பேசு பொருளாக இருந்தது.
ரெஸ்ட் ரூம்களில், புது சி, இ, ஓ, வுக்கு, வாய்
வசவுகளோடு, கரிக் கோட்டு வசவுகளும் கலந்து நாறின.
‘புலனம்’ மூலமாகவும், ஒருவரோடு
ஒருவர் வசவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அத்தனை வசவுகளுக்கும், வருத்தங்களுக்கும், காரணம்
இல்லாமல் இல்லை.
***
காலம் காலமாய் ‘காந்தி ஜெயந்தி’ நாளில் விடுமுறை அளிக்கும்
நிறுவனம் அது.
யாரும் காந்தியை வெறுக்கவில்லை. வெறுக்கவும் மாட்டார்கள்.
‘காந்தி ஜெயந்தி’ நாளில் விடுமுறை கிடைப்பதாலேயே, அனைவரும்
காந்தியை வாழ்த்தவே செய்வார்கள்.
விடுமுறையை முன்னிட்டு, அவரவருக்கு
இருக்கும் சொந்த வேலைகளைச் செய்யத் திட்டமிடுதல் மனித இயல்புதானே? அதில்
ஒன்றும் தவறு இல்லையே?
குடும்பத்தோடு குதூகலமாக
சினிமா, பார்க், கடற்கரை எனச் சுற்றிப் பொழுது போக்குதல்;
கல்யாணம், கருமாதி என வெளியூர் கடமையைச் செலுத்தச் செல்லும்
பிரயாணங்கள்;
வியாதிக் காண்டத்தின் ஒரு அங்கமான மருத்துவமனை அப்பாயிண்ட்
மெண்டுகள்;
பரிகாரம் செய்ய, ப்ரார்த்தனை
செலுத்த என கோவில்கள் குளங்கள் ஆசிரமங்கள் என
ஆன்மீகப் பயணங்கள்.;
தலையில் எண்ணை வைத்துக் கொண்டு ஊறவைத்து, மசாஜ் செய்து, தேய்த்து முழுகி, பத்தியச்
சாப்பாடு எடுத்துக் கொண்டு, ஓய்வெடுத்து, உடம்புச்
சூட்டையும் அயர்ச்சியையும், குறைத்துக் கொள்ளும் தேக ஆரோக்கியச் செயல்பாடுகள்;
அக்கடா, எனப் பகல் முழுவதும் அடித்துப் போட்டாற்போல் தூங்கி எடுத்துக் கொள்ளும் விஸ்ராந்தி;
இப்படி எத்தனை எத்தனையோ பணிகள்;
என்னென்னவோப் பொறுப்புகள்;
எண்ணிலடங்கா ஆசைகள்;
தவிர்க்க முடியாத கடமைகள்.
எல்லாவற்றையும் பகல் கனவாய் ஆக்கி, மொத்தமாய்
சிதைத்து விட்டதே இந்தச் சுற்றறிக்கை.
இதுவரை இல்லாத திருநாளாய், காந்தி
ஜயந்தி நாளன்று மகாத்மாவுக்கு விழா எடுத்தல் பற்றிய மின்னஞ்சலைக் கண்டதும் கோபம்
தலைக்கேறியது அனைவருக்கும்.
ஆத்திரப் பட்டார்கள்;
புலம்பினார்கள்;
சாபமிட்டார்கள்;
வாய்க்கு வந்தபடி வசவு வார்த்தை உதிர்த்தார்கள்;
உள்ளுக்குள் கொதித்தார்கள்;
கொந்தளித்தார்கள்;
கடைசியில் அடங்கினார்கள்;
அமைதியானார்கள்.
சர்குலரில் சொன்னபடி விழாவில் கலந்து கொள்ளத் தயாரானார்கள்.
வேறு வழி?
செயல் முறையில் எதையும், எந்த
வகையிலும் எதிர்க்கவே முடியாதபோது ஏற்படும் கையாலாகாத கோபத்தின் வடிகால்கள்தானே
அந்த வசவுகளும் சாபங்களும்.
***
தொழிற் சங்கம் கூடி;
சிந்தாபாத் கூவி;
வேலை நிறுத்தம் செய்வதெல்லாம், ‘ஐ டி’
கம்பெனிகளில் சாத்தியமில்லை.
“நாளையிலிருந்து நீ வரவேண்டாம்.” என்று சீட்டு கிழித்து
விடுவார்கள்;
வேலைக்கு உலை வைத்துவிடுவார்கள்;
குடும்பத்தைக் குலைத்து விடுவார்கள்;
சந்தியில் நிப்பாட்டி விடுவார்கள்.
கம்பெனி நிர்வாகத்துக்கும், உயர் மட்ட
நிர்வாகிகளுக்கும் இருக்கும் வானளாவிய அதிகாரங்களையெல்லாம் நன்கு அறிந்திருந்ததால், அனைத்துத்
தரப்பு ஊழியர்களும், உள்ளுக்குள் புகைந்தும். வாய்க்கு வந்தபடி சாபமிட்டும்
தங்கள் கோபத்தைத் தாங்களே தணித்துக் கொண்டார்கள்.
தவிர்க்க முடியாமல், விடுப்பில்
செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தவர்கள் உயர் அதிகாரிக்கு முன்னால் நின்று, பணிவாய்
கை கட்டிக் காரணம் சொன்னார்கள்.
காரணங்களை விலாவாரியாகக் கேட்டு, அறிந்து
கொண்ட உயரதிகாரிகள். அதன் உண்மைத் தன்மையை சோதிக்க,
அதன் பின்னும் பற்பல கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள்.
தக்க தரவுகளோடு, உறுதி
செய்து கொண்ட பின்னர், சம்பளப் பிடிப்போடு கூடிய விடுப்புக்கு அனுமதி அளித்து, மேலிடத்துக்குப்
பரிந்துரை செய்தார்கள்.
***
அத்தியாயம் 6
ஆளும் பேருமாய், எதிர்
எதிர் வசத்தில், போதிய இடைவெளி விட்டு நின்று கொண்டு,
முறையாகக் காட்டன் பெட்டிகளில் ‘பாக்’ செய்யப்பட்ட, கல்யாணச்
சீர் - பட்சணப் பார்சல்களை, ஒருவரிடமிருந்து ஒருவர் கை மாற்றிக் கை மாற்றி,
மினி லாரியில் நேர்த்தியாய் ஏற்றி, முறையாய்
அடுக்கியதும்;
வண்டியின் ஆட்டத்தில், பெட்டிகள்
ஒரு வேளை ஒருக்களித்துச் சாய்ந்து விழுந்து, பட்சணங்கள்
உடைந்துத் தூளாகி விடாமல் பாதுகாக்க, வரி கயிறு
கொண்டு குறுக்கும் நெடுக்குமாய்ப் பூப்போல, பங்கிடாய்
கட்டி...; தார்ப் பாயையும் கூடுதல் பாதுகாப்பாய்ப் போர்த்தி;
பாபநாசத்துக்கு எவ்வளவு சந்தோஷமாய் அனுப்பினார் அவர்...’
***
சுந்தரம் உயிரோடு உலவிய அந்தக் கடைசீ நாளை, இறுதிப்
பொழுதுகளை, இப்போது நினைத்த போதும் பர்வதத்தின் உப்புக் கடல் பொங்கித் திரண்டு
வழிந்தது.
புடவைத் தலைப்பால் ஒற்றி உறிந்து கொண்டாள் பருவதம்.
ஆமாம். அன்று அப்படித்தான் நடந்தது.
அணையப் போகிற ஜோதி பிரகாசமாய் எரியும் என்பார்களே, அது
போல...;
மிக மிகச் சந்தோஷமாக,
பாட்டும், கூத்தும், கும்மாளியுமாய், கல்யாணப்
பட்சணங்களை மினி லாரியில் ஏற்றி அனுப்பினார் சுந்தரம்.
நாள் நட்சத்திரம் பார்த்து, பிள்ளையார்
பிடித்து வைத்து சீர் முறுக்குச் சுற்றத் தொடங்கிய நேரம் முதல்,
அனைத்துப் பட்சணங்களையும் பங்கிடாய் ‘பாக்’ செய்து அட்டைப் பெட்டியில்
வைத்துப் பார்சல் செய்து திருமண மண்டபத்துக்கு அனுப்பிய நேரம் முடிய,
பல்வேறு வேலைகளை, ஈடுபாட்டோடு, பாங்காகச்
செய்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும், அன்று
வழக்கத்தை விட அதிகமாகவே சன்மானம் கொடுத்தார் சுந்தரம்.
கையடக்கமான ‘ஸ்வீட் - கார’ பார்சலோடு, லேபருக்கான
பணத்தைக் கவருக்குள் வைத்து, எப்போதும் போல மிக மிக சந்தோஷமாகத்தான் கொடுத்தார்
சுந்தரம்.
உழைப்பாளர்களின் வியர்வை உலரும் முன், நெஞ்சம்
நிறையும் வண்ணம் கொடுத்த சுந்தரத்தைப் பார்த்து நெகிழ்ச்சியோடு கும்பிடு போட்டு, நன்றியறிதலோடு
விடை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு ஊழியராகப் புறப்பட்டுப் போனார்கள்.
***
“ஹா................................................!”
திடீரென்று, கதறல்
சத்தம் கேட்டது;
நெஞ்சைப் பிடித்தபடி, இதே
திண்ணையில், தொப் என உட்கார்ந்தார் சரக்கு மாஸ்டர் சுந்தரம்;
குபீரென்று பெருக்கெடுத்த வியர்வை, சுந்தரத்தை
முற்றிலுமாய் நனைத்து விட்டிருந்தது;
“என்னங்க...! என்னங்க...!” கதறியபடி, அருகில்
வந்தாள் பருவதம்.
திண்ணையில் சுந்தரத்தின் தலை மாட்டில் உட்கார்ந்தாள்.
சுந்தரத்தின் தலையைத் தூக்கித் தன் மடியில் எடுத்துப்
வைத்துக் கொண்டாள்.
சுந்தரத்தின் நெஞ்சை, இதமாக
நீவி விட்டுக் கொண்டே, அழுவதும், அரற்றுவதும், மிழற்றுவதுமாய்ப்
பரபரப்பின் உச்சத்தில் தவித்தாள் பருவதம்.
யாரோ சொம்பில் தண்ணீர் எடுத்து வர உள்ளே ஓடினார்கள்;
எவரோ முகத்தில் நீர் தெளித்தார்கள்;
துண்டால் ஒற்றி ஒற்றி, வியர்வையைத்
துடைத்தார்கள்;
நெஞ்சு மேல் கை வைத்துப் பம்ப் செய்தார்கள்;
அவசரமாக 108க்கு போன் போட்டு வரவழைத்தார்கள்;
ஆளும் பேருமாக, சுந்தரத்தை
ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.
எமர்ஜென்சி வார்டில் கிடத்தினார்கள்.
ஸ்டெத் வைத்துப் பார்த்தார் மருத்துவர்.
“சாரி, மாஸிவ் அட்டாக்” கை விரித்துவிட்டார் டூட்டி மருத்துவர்.
“பருவத்தூ..........................................!”
என்று,
பதினேழு நாட்களுக்கு முன் இந்தத் திண்ணையில் தன் மடியில்
தலைவைத்து, கடைசியாய் கதறிய சுந்தரத்தின் கதறல் இப்போதும் பருவதத்தின்
காதுகளில் ஓங்கி ஒலித்தது.
***
இந்தக் கல்வியாண்டில்தான் பள்ளி இறுதியான பனிரெண்டாம்
வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தாள் சாவித்திரி.
தேர்வு முடிவுகள் இன்னும் வரவில்லை அவளுக்கு.
திடீரென்று இப்படி ஆகி விட்டது சுந்தரத்துக்கு.
“டாக்டருக்குப் படிக்கணுமா செல்லம்? தாராளமாப்
படிடா செல்லம்? நான் செலவு பண்றேன்டா...?’ ன்னு, வாய்க்கு
வாய் சொல்லிக்கிட்டே இருப்பீங்களேப்பா...! எங்களை இப்படி அநாதையாய் விட்டுட்டு
இப்படிப் போயிட்டேளே...!”
சுந்தரம் சொன்னதையெல்லாம் சொல்லிச் சொல்லி; கேவிக் கேவி
அழுதாள் ஒரே மகள் சாவித்திரி.
“ஈடு செய்ய முடியாத இழப்பு...!
“இப்படி நிமிஷமாப் போயிட்டானே சுந்தரம்...!”
“கல்லுக்
குண்டாட்டம் உறுதியா இருப்பானே சுந்தரம், அவனுக்கா
அட்டாக்... என்னமோ போ...!”
“சாகக்
கூடிய வயசா சுந்தரத்துக்கு!”
கடவுளுக்குக் கூட இப்படிக் கண்ணு இல்லாமப் போயிடுச்சே...!”
சொந்த பந்தங்கள் என்று யாரும் இல்லாவிட்டாலும், வழக்கமாக
சுந்தரத்திற்கு காண்ட்ராக்ட் தரும் மிட்டாய்க் கடை மிட்டாக்கள், ஸ்வீட்
ஸ்டால் ஓனர்கள், ஓட்டல் முதலாளிகள், கேட்டரிங்
ப்ரொப்ரைட்டர்கள், சமையலர்கள், நண்பர்கள்
என,
சாரை சாரையாக மாலையோடு வந்தார்கள். அன்று முக முழிக்கு, வர
முடியாதவர்கள், மற்ற மற்ற தினங்களில் வருவதும், துக்கம்
விசாரிப்பதுமாகவே, பத்து நாட்கள் வீட்டில் மனித நடமாட்டத்திற்குப்
பஞ்சமில்லாமல் இருந்தது.
***
அத்தியாயம் 7
‘மகா பெரியவா கேட்டரிங்’ அந்த ஏரியாவில் பிரசித்தம். அதற்கு
உரிமையாளர் கணபதி. ரத்த உறவுகளென யாருமில்லாத ஒண்டிக் கட்டை ஆசாமி கணபதி.
கணபதி, சுந்தரத்தின் மீது ஏகமாய்ப் பாசமும் பிரியமும்
வைத்திருந்தார். பெற்ற மகனாகத்தான் சுந்தரத்தை வரித்திருந்தார் கணபதி.
‘நிமிஷமாய் போய் சேர்ந்துவிட்ட’ சுந்தரத்தின் அகால
மரணத்தால், தன் வலது கையை இழந்ததைப் போலத் தவித்தார் அவர்.
கணபதியே முன்னால் நின்று, அனைத்துப்
பொறுப்புக்களையும் எடுத்துக் கொண்டு, சுந்தரத்துக்கு
இறுதிக் காரியங்கள் செய்தார். கண்ணீர் மல்க, கொள்ளி
போட்டார்.
எந்த விதக் குறையும் இல்லாமல், நீத்தார்
கடன்களை, வைதீக தர்ம சாஸ்த்திரத்துக்கு பங்கமின்றி, முறையாகச்
செய்து சுந்தரத்தின் ஆன்மாவை கரையேற்றினார்.
இரண்டாம் நாள் பால்-தெளி. சாம்பலை வீரசோழன் ஆற்றில், கரைத்து
விட்டு வந்தார் கணபதி.
ஸ்வாமி மாடத்துக்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு பிரமை
பிடித்தவள் போல உட்கார்ந்திருந்த பருவதத்தையும், அருகில்
சோகத்துடன் அமர்ந்திருந்த சாவித்திரியையும் பார்த்தார்.
“பருவதம்...” என அழைத்தார். குரல் உடைந்து வந்தது.
கண்ணீர் வழிய, நிமிர்ந்து
பார்த்தாள் பருவதம்.
“பத்தாம் நாள் வந்து பார்க்கறேன். சரியா...?”
என்றார்.
அது கேள்வியாக இல்லை. தகவலாகத்தான் சொன்னார் கணபதி.
“அம்மாவ கவனமா பாத்துக்கோ சாவித்ரி...” மகளிடம் ஆறுதலாகச்
சொல்லிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினார்.
பத்தாம் நாள் வந்தார். அனைத்து கர்மாக்களையும் கிரமமாகச்
செய்தார். தானம், தர்மம் என்று செய்ய வேண்டிய அனைத்து சமயாசாரச் சடங்குகளையும், வேள்விகளையும் முறைப்படி ஒன்றும்
குறை வைக்காமல் செய்தார்.
நேற்று, பதினாறாம் நாள் சுபம் செய்வதற்காக, புரோகிதர்களோடு
வந்தார். சாஸ்த்ர சம்பிரதாயப்படி அனைத்துக் காரியங்களையும், ஹோமார்த்திகளையும் நடத்தி, சுந்தரத்தின் ஆன்மாவை முழுமையாகக் கரையேற்றிவிட்டுச்
சென்றார் கணபதி.
முறைப்படி, ‘சேஷ ஹோமம்’ செய்யப்பட்ட அந்த வீடு ‘ஹோ’ வென
அச்சுருத்தியது.
***
‘ஒத்தைப் பொண்ணு சாவித்திரி; புத்திசாலித்
தனத்துக்கு குறைச்சலில்லே; வீட்லயே உட்கார்த்தி வெச்சிருந்தா சரி வருமா. அவ சொந்தக் கால்ல நிக்கணும்னா, படிப்பு அவசியமாச்சே...? என்று
தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் பருவத்து.’
இரண்டு வாரங்களுக்கு மேல், அப்பாவை இழந்த துக்கத்தின் காரணமாக, எங்கும் செல்ல முடியாமல், வீட்டிலேயே அடைந்து கிடந்த, தன் ஒரே
மகள் சாவித்திரிக்கு காலாகாலத்தில் பசியாறக் கொடுத்தாள் பருவதம்.
பதினாறு நாட்களுக்குப் பிறகு, இன்று
சாவித்திரியை கம்ப்யூட்டர் வகுப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டு,
‘நாமும் எத்தனை நாள்தான் வீட்டில் அடைந்து கிடக்க முடியும்? இருக்கற
ஒத்தைப் பொண்ணுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கே...!’ என்ற,
யோசனைகளுடன் வீட்டினுள்ளே
வந்தாள் பருவதம்.
கடாய்களும், கரண்டிகளும், துடுப்புகளும், பாத்திரங்களும்
பண்டங்களுமாக, ‘ஹோ...’ வென மிரட்டும், வெறுமை
பருவதத்தை மிகவும் பாதித்தது...
‘தொடர்ந்து குடும்பத்தை வழி நடத்த, இந்த சரக்கு மாஸ்டர் தொழில் நமக்குச் சரியா வருமா?
சரக்கு மாஸ்டராவே, தொடரலாம்னா, எந்த
அளவுல தொடங்கி எப்படி நடத்துறது?’
அகலக்கால் வைக்கலேன்னாலும், ஓரளவுக்கு
விஸ்தாரமா செஞ்சாத்தானே நாலு காசு பார்க்க முடியும்;
பெரிய அளவுல செய்யணும்னா நாலு பேரு தயவில்லாம முடியாதே...!
இந்தத் தொழிலே வேண்டாம்னு ஒதுக்கினா, வயித்துப்
பாட்டுக்கு வேற என்ன செஞ்சி கரையேற முடியும்...?
வயசுக்கு வந்த மகளை மேற்படிப்பு படிக்க வெச்சி, ஒருத்தன்
கையில் பிடிச்சிக் கொடுக்க வேண்டிய கடமையை தட்டிக் கழிச்சி விட முடியாதே...!
இப்படியெல்லாம். பலவாறாகக் குழம்பிக் குழம்பி யோசித்துக்
கொண்டிருந்ததில், வாசல் கதவு விரியத் திறந்து கிடந்ததைக் கூட அறியவில்லை
பருவதம்.
***
திறந்து கிடந்த வாசல் கால் வழியாக, தெரு நாய்
போல உள்ளே நுழைந்து, நொடிப் பொழுதில் அத்து மீறிவிட்டான் நந்தகுமார்.
எப்படியோ தைரியமாக, அந்து மீறலை சமாளித்து, அந்தக்
காமுகனை வீட்டை விட்டு விரட்டியடித்த சாமர்த்தியத்தை நினைத்தபோதே, பிரமிப்பாகவும், மலைப்பாகவும்
உணர்ந்தாள் பருவதம்.
‘இது தொடக்கம்தான்; இது போல
நந்த குமாரர்கள் எங்கெங்கும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் நடுவில்தான்,
வாழ்க்கையை போராடிக் கடக்க வேண்டும்.
வெற்றி கரமாகத் தொழில் நடத்தவேண்டும்.
வாழ்க்கை நடத்த பணமும் பொருளும் ஈட்ட வேண்டும்.
சமுதாயத்தில், உயர்ந்து நிற்க வேண்டும்.
சந்தர்ப்பம் கிடைத்தால், காலை வாரி
விடும் கூட்டம் என்றும் இருக்கத்தான்
செய்யும். அந்த இழி கூட்டத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாமல், அவர்களுக்கு இடையில்தான் கவனமாகக் கடக்க வேண்டும்;
பருவதம் மனதில் உறுதி செய்து கொண்டாள்.
***
‘சரக்கு மாஸ்டராகத் தொழில் செய்வது எவ்வளவு ரிஸ்க் என்பதும்,
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டும்’ என்பதையும்,
சுந்தரத்தின் செயல்பாடுகளையும், அகட
விகடங்களையும், சமாளிப்புத் திறனையும், பார்த்துப்
பார்த்துத் தெரிந்து கொண்டவள்தான் பருவதம்.
இருந்தாலும், சுந்தரம்
இல்லாது, தான் மட்டும் எல்லாவற்றையும் சமாளித்துவிட முடியுமா?’
அதைரியமும், அவ்வபோது பருவதத்தின் முன் தலை காட்டாமல் இல்லை.
சுந்தரத்தின் சமாளிப்புத் திறமைகள் ஒவ்வொன்றாக அவள் மனதில்
பளிச்சிட்டன.
***
சாவித்திரி பதினாறு நாட்கள் கழித்துச்
சென்றதால், இடையில் வராத நாட்களில் ஓடிய பாடங்களை கவனிப்பதில் கவனமாக இருந்தாள். அறவே வீட்டு
நினைவு வரவில்லை அவளுக்கு.
வழக்கமாக, மகள் சாவித்திரி வரும் நேரத்தை வைத்து அவள் வருகையை
எதிர்பார்த்து, வாசல் திண்ணையில் வந்து காத்திருந்த பருவதத்துக்கு தன் வீட்டை நோக்கி வரும் நபரைக் கண்டதும், அதிர்ந்தாள். தன் கண்களையே நம்ப முடியவில்லை. காண்பது கனவா நனவா என்பதை அறிய தன் புறங்கையை கிள்ளி விட்டுக் கொண்டாள்.
‘நம்ம வீட்டுக்கு வர்றது..., முன்னாள்
வராகப் பெருமாள் கோவில் ட்ரஸ்டியின் மனைவியும், இந்நாள்
டிரஸ்டி சாரங்கனின் அம்மாவுமான மரகதவல்லிதான் என்பதை உறுதி செய்து கொண்டாள்
பருவதம்.
“பருவதம்... எப்பிடி இருக்கே... ஒரு வழியா ஆத்துக்காரர் காரியமெல்லாம் நல்லபடியா
ஆச்சா...?”
இயல்பாக பருவதத்திடம் குசலம் விசாரித்தபடியே, எதிர்
திண்ணையில் உட்கார்ந்தாள் மரகதவல்லி.
‘இவங்க எதுக்கு இப்போ இங்கே வந்திருக்காங்க...?’
வியப்பும் அதிர்ச்சியுமாக மரகதவல்லியை வரவேற்றாள் பருவதம்.
***
அத்தியாயம் - 8
‘விதை ஒன்று
போட்டால் சுறை ஒன்றா முளைக்கும்...?’ என்பார்களல்லவா? அதுபோலத்தான்,
’முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகள் நிர்வகிக்கும் ‘ஐ டி’
கம்பெனி ஊழியர்களின் நிலையும்.
கார்ப்பரேட் மனப்பான்மை; இயல்பாகவே, அவர்கள்
உள்ளத்தில் ஊறி உயர்ந்து ரத்தத்தோடு கலந்து விடுகிறது.
‘மேலே மேலே சம்பளம் உயர வேண்டும்’;
‘அடுத்து அடுத்து உயர் பதவிக்குச் சென்று விட வேண்டும்’;
“கார், பங்களா, என சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும்’;
போன்ற இப்படிப்
பட்ட சுயநல எண்ணங்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அலைவார்கள் பெரும்பாலான ஐ டி
ஊழியர்கள்;
அதிகாரம், காசு என அலையும் இவர்கள், நாளடைவில், தன்னுடைய வளர்ச்சியை
மட்டுமே பார்க்கும் சுயநலமிகளாக உருமாறி
விடுகிறார்கள்;
முழுக்க முழுக்கத், தன் வளர்ச்சி, தன் குடும்ப
வளர்ச்சி என சுயநலமாகவே எண்ணும்போது, பிறர்
நலனில் எப்படி அக்கரை வரும்?
***
‘கிராமத்து பாஷை’ யில் சொல்ல வேண்டுமென்றால்,
‘நாட்டாமைத் தனம் வளர வளர, சம்பளமும்
பதவி உயர்வும் ‘ஐ டி’ நிறுவனங்களில் உயரும்’.
நாட்டாமைத் தனம் என்றால், ஏப்பை
சாப்பையாய் இருக்கும் நாட்டாமைத் தனம் இல்லை;
கண்டிப்பும் கறாருமாய் இருக்கும் நாட்டாமையாக, சிம்ம
சொப்பனமாக நடுங்க வைக்கும் நாட்டாமையாக இருக்க வேண்டும்;
ஈவு, இரக்கம், மனித நேயம், இதெல்லாம்
கொஞ்சம் கூட இல்லாத கொடுமைக்கார நாட்டாமையாக இருக்க வேண்டும்;
பிறருக்கென்றால் தக்காளி சட்னி’ என்ற மனப்பான்மையோடு கூடிய
மகா நாட்டாமையாகத் திகழ வேண்டும்;
தாங்கள் செய்யும் கொடுமைகளைக் கூட, ஞாயப்படுத்தத்
தெரிய வேண்டும்.
இப்படிப்பட்டக் கொடுங்கோல் குணம் கொண்ட ஆசாமிகளுக்குத்தான்,
கம்பெனி நிர்வாகமானது, அதிக
சம்பளம், எக்கச்சக்கமான சலுகைகள், கார்
பங்களா என வசதிகள் செய்து கொடுத்து அங்கீகரிக்கிறது.
***
‘ப்ரொக்ராமர்’
இதுதான் ‘ஐ டி’ கம்பெனிகளில் முதல் படி.
ஆசாரி, கொத்தனார் போன்ற டெக்னிகல் லேபர்களுக்கு சித்தாள் மாதிரிப்
பணிதான், ‘ஐ டி’ கம்பெனிகளில் ‘ப்ரொக்ராமர்’ பணி.
சித்தாள் வேலையை ஒருவன் தொடர்ந்து ஈடுபாட்டோடு சிறப்பாகச்
செய்தால்,
நாளாவட்டத்தில் அடுத்த நிலையான ஆசாரியாகவோ, கொத்தனாராகவோப்
பணி உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தது ஒரு காலத்தில்,
ஆனால் இப்போது, ஆசாரி
கொத்தனார் பணிகளிலும் கார்ப்பரேட் சித்தாந்தம் புகுந்துவிட்டது.
முழுமையான ஆசாரியாகவோ, கொத்தனாகவோ
புதிய தலைமுறைகளில் யாரையும் பார்த்துவிட முடியாது.
பல்வேறு அளவுகளில் சன்னல் செய்யச் செல்லி ஆர்டர் வருவதாக
வைத்துக் கொள்வோம்.
இஞ்சினியர் அந்த ப்ராஜக்டடை, மேஸ்திரியிடம்
விடுவார்.
ஜன்னலில் தலைப்பாகம், அடிபாகம், நடு பாகம், வலது
சட்டம், இடது சட்டம், கதவு
ஃப்ரேம்..............
என்று பிரித்துப் பிரித்து, ஒவ்வொரு
ஆசாரிக் குழுவிடமும் சப் காண்ட்ராக்ட் விடுவார் மேஸ்திரி.
அது போலத்தான் ப்ரோக்ராமர் நிலைமையும்.
***
‘ஐ டி’ கட்டமைப்பில்,
எந்தப் படியில் இருப்பவரும், ஒருபோதும்
முழுப் ‘ப்ரொக்ராமை’ உள்வாங்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.
ப்ரொக்ராமின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஒருவன் கரை
கண்டிருப்பார்.
நிபுணனாக இருப்பார்.
கொடுக்கப்படுகின்ற ஒரே வேலையை, மீண்டும்
மீண்டும் செய்ய வேண்டும் அந்தப் ப்ரொக்காமர்.
குறிப்பிட்ட ப்ரோக்ராம் செய்வதற்கு மட்டும் நன்கு பயிற்சி
பெற்றிருக்கும் அந்த ஊழியரிடம், தொடர்ந்து ஒரே வகையான பணியை மட்டுமே தந்து
கொண்டிருப்பார்கள்.
நாளாவட்டத்தில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க ‘வார்ப்பை’ செய்து
போடுகிற இயந்திரமாய் மாறியிருப்பார்.
ஓயாமல் ஒழியாமல் ஒரே வேலையைச் செய்வதால், அந்தக்
குறிப்பிட்ட வேலையில் ஒரு நிபுணத்துவமும், அதே
நேரத்தில் ஒரு சலிப்பும் வந்துவிடுமல்லவா?
***
‘Nearness
Syndrome’ (நியர்னஸ் சின்ட்ரோம்)
என்று இதைக் வகைப்படுத்துகிறது மனநூல்.
ஒரு ராப்பிச்சைக்காரன் இருக்கிறான். அவனுக்கு, எந்தச்
சூழ்நிலையிலும், அம்பானி, அதானி போல கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்கிற ஆசையெல்லாம்
சத்தியமாய் வராது.
ராப்பிச்சையாக இருக்கும் ஒருவன், வழக்கமாக
இரவில் கிடைக்கும் மீந்து, காய்ந்து, சொதசொதத்துப் போன சோறு, கெட்டுப்
போனச் சாம்பார் இவைகளுக்கு பதிலாக,
பகல் பிச்சைக்காரன் பெறுவது போல, அரிசி, சில்லரைக்
காசுகள் பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்.
அதே மனநிலை தான் ‘ஐ டி’ ஊழியர்களுக்கும்.
ஊழியர்களின் இந்த மனநிலையைத்தான், ‘ஐ டி’
நிர்வாகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வானளாவ
உயர்ந்து கொண்டே இருக்கிறது.
***
அரைத்த மாவையே அரைத்து அரைத்து, ஓய்ந்துப்
போய், சலிப்பு வந்து விட்ட ப்ரொக்ராமர்கள் சிலருக்கு,
‘டீம் லீடர்’ என்று சொல்கிற ‘சின்ன நாட்டாமை’ ஆகவேண்டும்
என்கிற ஆசை வந்து விடும்.
‘டீம் லீடர்’ ஆக வேண்டும்...!’ என்று பிரயாசைப் படும்
ப்ரொக்ராமர்களை எல்லாம் கவனமாய் அடையாளம் கண்டு தனிமைப் படுத்துவார்கள் ‘ஹெச் ஆர்’
என்று சொல்லப்படும் பெரிய நாட்டாமைகள்.
அந்த ஊழியர்களின் மனோபாவத்துக்குத் தக்கபடி, அவர்களை உத்தி
பிரித்து வகைப்படுத்துவது அடுத்த கட்டம்.
உத்தி பிரிக்கப்பட்டவுடன்,
‘நாட்டாமைத்தனத்தில் வெறித்தனமாய் அலைபவர்களை மட்டும்
அடையாளம் கண்டு, அப்படிப்பட்ட நாட்டாமை வெறியர்களுக்கு ‘ஓவர் டைம்’
வேலைகளைத் தருவார்கள்.
குறிப்பாக, இவர்களுக்கு, ‘ஓவர்
டைம் அலவன்ஸ்’ம் மிக தாராளமாக வழங்கப்பட்டு, ஒரு
விதமான ‘அப்ஸஷன்’ நிலையில் வைத்திருப்பார்கள் அவர்களை.
இதுபோலச் சின்னச் சின்ன பணப்பலன்களுக்கும், போலி
மரியாதைகளுக்கும், பாராட்டுதல்களுக்கும் அடிமையாகி,
பசி, தாகம், தூக்கம் என எல்லாவற்றையும் தியாகம் செய்து,
உழைத்து உழைத்து, அந்த ஊழியருக்கு, ‘டீம் லீடராக’ வேண்டும் என்ற ஆசைய் உச்சமடைந்து, வெறியாக
உறுமாறும் வரை காத்திருக்கும் கம்பெனி நிர்வாகம்.
***
இந்த ஆள் மனசில் ஈவு இரக்கமே சிறிதும் கிடையாது;
மனசாட்சி சிறிதும் உறுத்தாது வேலை வாங்குவார்;
முழுமையான சுயநலக்காரர்;
தன் வளர்ச்சிக்காக மனித நேயத்தை விலக்கி, எந்தப்
பாவத்தையும் செய்வார்;
கல் நெஞ்சம் கொண்டவர்;
என்பதையெல்லாம் பலப் பலக் கோணங்களில் ஆய்ந்து, கேரக்டரை
நன்கு அறிந்து உறுதி செய்து கொண்ட பின்,
அது போன்ற நபர்களின் மீது சிறப்புக் கவனம் செலுத்தும்
கம்பெனி மேலிடம்.
அந்த நபர்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்.
***
‘திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ என்ற பெயர் வைத்து,
அவர்களை மும்பை, டெல்லி, ஹைதராபாத்
என்று. மெட்ரோ பாலிட்டன் நகரங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலமாக,
இது போன்ற ஆசாமிகளுக்கு நாட்டாமை வெறியை மேலும் மேலும்
வளர்த்து விடும்.
‘சுயநலத்தின் விழுக்காட்டை அதிகப்படுத்தவும்;
கடினமான இதயத்தை மேலும் கடினமாக்கவும்தான், தங்களை
டெபுடேஷனில், மெட்ரோ பாலிட்டன் சிடிக்கு, விமானத்தில்
அனுப்பி வைக்கிறது கம்பெனி’ என்பதை சிறிதும் உணர மாட்டார்கள் அந்தப் பேதைகள்.
“நான் டெல்லி போறேன்...!”;
“ஹைட்ராபாட்’க்கு டெபுடேஷன்ல என்னை அனுப்புது கம்பெனி...!”;
“ஏரோப்ளேன்ல முதல் வகுப்பு டிக்கட் போட்டு
அனுப்புதுங்கறேன்...”;
என்றெல்லாம் அலட்டும் நிலைக்கு ஆளாக்கிவிடும் இந்த
டெபுடேஷன்கள்.
***
இப்படியெல்லாம் அலட்டலாய்ப் பேசி, பம்மாத்துச்
செய்து,
சாயத் தொட்டியில் விழுந்த நரியாய்க் ஜம்பம் கதைப்பது, தேர்ந்தெடுக்கப்
பட்ட ஊழியர்கள் மட்டும் இல்லை,
அந்த ஜம்பப் பேர்வழிகளின் குடும்பம் முழுவதுமே கூடிக்
குதூகலிக்கும். பேசிப் பெருமிதம் கொள்ளும்.
“கம்பெனி செலவுல ஏரோப்ளேன்ல அனுப்புது என் மக(ளை)னை...!”;
“பதவி உயர்வுக்காக டிரெயின்ங் போறானா(ளா)க்கும்...;”
என்றெல்லாம் ஊழியரின் குடும்பத்தார் அக்கம் பக்கத்தில், அவரவர்கள்
பங்குக்கு ஜம்பம் அடித்துக் கொள்வார்கள்.
‘ட்ரெயினிங்’ என்ற பெயரில்,
ஒரு வாரமோ, பத்து நாளோ, ஒரு மாதமோ;
உயர் மட்டக் குழு, ஊழியனைப்
பல்வேறு கோணங்களில் ரகசியமாகக் கண்காணிக்கும்.
***
“Men, gaps
for filling, Losses who might have fought,
Longer; but no one bothers.” என்று,
Insensibility என்ற கவிதையில் Wilfred Owen. சொல்வாரல்லவா...?
அதற்கு உதாரணமாய் இருக்கும், திறன்
மேம்பாடு என்ற பெயரில் அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள்...
‘ஆர்மி ரெஜிமெண்ட்’டில், முகாமிட்ட
நாளில், தங்கள் கூடாரங்களில் நட்போடு ஒன்றாகக் கூடிக்-களித்து, ஆடிப்-பாடி, உண்டு-உறங்கி, உறவாடும்
நண்பர்கள்;
ராணுவப் பயிற்சி தொடங்கியபின், படிப்படியாய்
இடைவெளிகள் அதிகமாகி, நட்பின் அடர்த்தி குலையும்;
தொடர்ப் பயிற்சியின் விளைவால், இதயம்
இறுகும்;
தான் என்ற அகங்காரம் தலையெடுத்து ஆடும்;
தன் அருகே மூச்சுக் காற்றுத் தாக்கும் அருகாமையில் அமர்ந்து
பழகிய அதே நபர்,
போர் முனையில் முன் வரிசையில் நின்றுப் போராடுகையில்
குண்டடி பட்டு விழுந்து இறப்பான்;
இறந்து போன, முன்
வரிசைக்காரனோடு தனக்கிருந்த, நெருங்கிய நட்போ, உறவோ, எதையும்
பற்றி நெல் முனையளவும் நினைத்துப் பார்க்காது,
அந்த உயிரற்ற உடல் மேல் தன் பூட்ஸ் காலால் ஏறி,
முன்வரிசை ‘இடைவெளியை நிரப்பும் (gap fillers) சிப்பாயாய்’ செயல்படுவார்கள் அல்லவா.!
அந்த அளவிற்குக் கல்மனம் கொண்டவர்களாய் மாற்றும் வரை ‘ஐ டி
‘பதவி உயர்வுக்காக ஏங்கும் ஊழியர்களுக்குப் பயிற்சி தொடரும்.
***
அத்தியாயம் 9
பருவதத்துக்கும் சுந்தரத்துக்கும் கல்யாணமான புதிது.
பாகவதபுரம் விஸ்வத்தய்யா வீட்டில்,
கல்யாண சீர் பட்சணத்திற்கு ஆர்டர் கொடுத்திருந்தார்கள்.
பெரிய ஆர்டர் அது.
நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து,
கோட்டை அடுப்பு மூட்டி, சரக்கு
போடத் தொடங்கினார்கள்.
சோன் பப்டி சரக்கிற்காக பாகு வைத்து,
மற்ற மற்ற சேர்மானங்களை முறையாக, பதமாகத்தான்
சேர்த்துக் கிண்டினான் சுந்தரம்.
ஐநூறு விள்ளலுக்கான ‘சோன் பப்டி’ச் சரக்கு அது.
படாரென்று, பதம் தப்பி இறுகிவிட்டது.
பதம் தப்பிக் கெட்டுப் போன சரக்கைப் பார்த்ததும், அதிர்ச்சி
அடைந்து, பிரமை பிடித்தாற் போல் நின்றாள் பருவதம்.
‘இதை எப்படித் தன் கணவர் சரி செய்வாரோ?’
கவலையோடு பார்த்துக் கொண்டே நின்றாள் பருவதம்.
***
சுந்தரம் துடுப்பை நகர்த்திப் பார்த்தான். அசையவில்லை.
துடுப்பு அசைவிலேயே பதம் தப்பல் தெரிந்துவிட்டது
சுந்தரத்திற்கு.
‘டக்’ என அடுப்பை நிறுத்தினான்.
‘ஐயோ’ என்று அங்கலாய்க்கவில்லை;
பதம் தப்பிவிட்டதே, என்று
உதடு பிதுக்கவில்லை;
கன்னத்தில் கை பதித்து, நஷ்ட
முத்திரையை வைக்கவில்லை.
தலையில் அடித்துக் கொண்டு, புலம்பவில்லை;
கிஞ்சித்தும் கவலைப் படவில்லை சுந்தரம்.
கிடு கிடு வென உக்ராண அறைக்குச் சென்றான்.
கையில் ஒரு சணல் சாக்கோடு திரும்பினான்.
கோணிச்சாக்கைக் தரையில் விரித்தான்.
அதில் மொத்தச் சரக்கையும் சாய்த்துக் கொட்டினான்.
காதும் காதும் வைத்தாற்போல், தூக்கிக்
கொண்டு போனான்.
கொல்லைப் புறத்தில் தேங்கி நின்ற,
சாக்கடைக் கும்பி நிரம்பிய குட்டையில் ‘தொபீர்’ என சரக்கைக்
கொட்டினான் சுந்தரம்.
“என்னந்நா! இப்படிக் குப்பைல கொட்றேளே...?” கண்ணீர்
விட்டாள் பருவதம்.
அந்த நேரத்தில், சுந்தரத்தின்
அணுகு முறையை இப்போது நினைத்துப் பார்த்தாள் பருவதம்.
***
“பருவத்தூ...!
“................”
இதுக்கெல்லாம் அழுவாளா?”
கொஞ்சலாய்க் கேட்டான்.
“அழாதே பருவத்து; இதெல்லாம்
நம்ம தொழில்ல சகஜம்.”
அவள் உச்சந்தலைமேல் கை வைத்து ஆறுதல் கூறினான். தொழில்
தர்மம் கற்பித்தான்.
“பருவத்தூ.!
“................”
நான் சில பேர் மாதிரி, உடையவா
மேலக் கோபப்பட்டுண்டு, எண்ணை டின்னை உடைச்சிக் கோட்டை அடுப்புல லிட்டர் லிட்டராக்
கொட்டி ஓனரை நஷ்டப்படுத்தலை;
பாதாம், பிஸ்தா, முந்திரினு மூட்டை மூட்டையா திருடிண்டு போய் எஜமானாளுக்கு
நஷ்டம் ஏற்படுத்தலை;
தவறுதல்’ங்கறது சகஜம் எல்லாருக்கும்.
ஆனாப் பாரு பருவத்தூ…!
“................”
“இந்த
சமுதாயம், நம்மைப்போல, சமையல்
செய்யறவாளுக்கு, பட்சணம் பண்றவாளுக்கு மட்டும் தவறுதலே வரப்படாதுனு, நெனைக்கும்;
“பாகு பதம் கெட்டுப் போச்சு” ன்னு நேர்மையா போய் சொன்னே’
ன்னு வெச்சிக்கோ;
“தப்பு உன்மேலேதானே... அந்தச் செலவை நீதான் ஏத்துக்கணும்;
உன் சம்பளத்துல பிடிப்பேன்’ ன்னு... சட்டம் பேசுவா...!”
இன்னும்... இன்னும்...
நிறைய நிறைய...
விபரமாகச் சொன்னான் சுந்தரம்.
‘இவ்வளவெல்லாம் இருக்கிறதா இதில்...?’
வியந்தாள் பருவதம்.
அன்று சுந்தரம் சொன்ன அனுபவப் பாடம் இப்போதும் பிரமிப்பைக்
கொடுத்தது பருவதத்துக்கு.
***
“பருவத்தூ...!”
“சொல்லுங்கோந்நா...”
“சரக்குப் போடறது ரொம்ப ரொம்ப நுட்பமான தொழில்;
ஒரு நிமிஷம் முன்னே இறக்கிட்டா, கொழ
கொழத்துடும்;
நிமிஷம் கூட விட்டு இறக்கினாலோ இரும்பா இறுகிடும்;
சரக்கைக் கண்ணுக்குக் கண்ணாப் பாக்கறதும்;
பக்குவமாகும் போது வரும் வாசனையைப் பளிச்சுனு மோப்பம்
பிடிக்கறதும்;
துடுப்பை விட்டுக் கிளறும்போது, துடுப்பு
ஓடும் ஓட்டமும், கடாய்க்கடியில் அது தேயும் பக்குவமும் கைக்குத் தெரியறதும்; பழக்கத்துலதான்
வரும்.
‘பர்வத்து...! எவ்வளவுதான் நிபுணத்துவம் இருந்தாலும்
சமயத்துல ஏமாத்திப்புடும்;
அர்ச்சுனன் பறவை நெத்தியைப் பார்த்து அம்பு விட்டதை விடக்
கூடுதலான ஏகாக்ர சிந்தனை சரக்கு கிளர்றவாளுக்கு வேணும்.”
“பர்வத்தூ...! பர்வத்தூ...!” என்று வாய்க்கு வாய் ஆசை
ஆசையாய் அழைத்து அழைத்து,
அன்பாய், பண்பாய், உண்மைகளை, யதார்த்தங்களை கீதோபதேசம் போல, இப்படிப்
பலப் பலச் சொல்வான் சுந்தரம்.
சுந்தரத்தை நினைக்க நினைக்கப் பெருமையாக இருந்தது
பருவதத்துக்கு.
***
“ஏய் உன் வேலை மயிரைப் பாருடி, எனக்குத்
தெரியும்...!”
அதட்டல் போடும் சரக்கு மாஸ்டர்கள்;
“உன் வேலைய மட்டும் பாரு, என் வேலைல
மூக்க நுழைக்காதே?” –
மிதமாக மறுக்கும் மாஸ்டர்கள்;
“இது மாதிரி யெல்லாம் ஏதாவது கேக்கறதா இருந்தா, என் கூட
வராதே ஆமா.!” –
ஒரே போடாய் போட்டு அடக்கும் ஹெட்குக்.;
“உன் அப்பன் வீட்டுச் சொத்தா பறி போவுது... கம்முனு கெட...”
என்று அதட்டல் உருட்டும் தலைமை சமையலர்;
பல்வேறு கோஷ்டிகளோடு இணைந்து வேலைக்குப் போகும் இடங்களில்
எல்லாம், இப்படிப்பட்ட ஆணாதிக்க அகங்காரங்களை கண்கூடாக
பார்த்திருக்கிறாள் பருவதம்.
ஆனால் சுந்தரமோ,
பெண்களை மதிக்கத் தெரிந்தவன்.
அதனாலேயே மனைவியை சமதையாய் மதித்து நடத்துபவன்.
மனைவியிடம்தான் என்றில்லை.
பட்சணங்கள் செய்ய வரும் அனைத்துப் பெண்களையும் மதிப்பாய்
நடத்துவான் சுந்தரம்.
***.
“ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை அடுப்பை நிறுத்திப்பிட்டு, கொஞ்ச
நேரம் உடம்பை சாய்ச்சி ரெஸ்ட் எடுத்துண்டு வாங்கோ...!”
கரிசனமாய்ச் சொல்லுவான் சுந்தரம்.
“கையிலே க்ளவுஸ் மாட்டிண்டு பத்து தேய்’னு சொன்னா செய்யமாட்டியா?
இன்னியோட இந்த வேலைலேந்து ரிடையர் ஆகப் போறியா ஆராயி...;
தொடர்ந்து ஒரு வேலையைச் செய்யணும்னா, அதுக்கு
ஏத்தபடி நம்மை பாதுகாத்துக்கணும்...! சுவர் இருந்தாத்தான் சித்திரம்...!”
உரிமையோடு கோபிப்பான்.
சுந்தரம் ஒரு சுடு சொல் பேசி யாரும் பார்த்ததில்லை.
என்னதான் நஷ்டமானாலும் அதைப் பெரிதாய் மண்டைக்குள் ஏற்றிக்
கொள்வதில்லை.
சுந்தரத்துடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒன்றைக்
கற்றவள் பருவதம்.
‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...’
என்று பாடியதை விட
‘கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பதுதான்
சரியோ...’
அடிக்கடி இப்படித் தோன்றும் பருவதத்திற்கு.
நண்பனாய், நல்லாசிரியனாய், இருந்து,
அனைத்துத் தொழில் நுட்பங்களையும் பருவதத்துக்கு சுந்தரம்
கற்றுக் கொடுத்துவிட்டான்.
பல விசேஷங்களுக்கு பருவதத்தை மட்டுமே தனியாக அனுப்பி வைத்து, அவள்
தன்னம்பிக்கையையும் தொழில் திறனையும் செழுமையாக வளர்த்தான் சுந்தரம்.
***
அத்தியாயம் 10
கல் மனத்தின் கடினத்தன்மை இறுக இறுக.
ஐ டி துறையில், பதவி
உயர்வுகளும், சம்பளங்களும், போனஸ்களும்
அதிகம் கிடைக்கும் என்பதை, பயிற்சியின் போதே, ஒவ்வொரு
கட்டத்திலும் அறிந்து கொள்வார்கள் பயிற்சி பெறுபவர்கள்.
“குழந்தைக்கு ஹை டெம்பரேச்சராம்; ஃபோன்
வந்துது; உடனே ஹாஸ்பிடல் போகணும்... ப்ளீஸ்”
என்ற தாய்மையின் தவிப்பைக் கூட அலட்சியம் செய்யும் அளவுக்கு
மனது கல்லாக வேண்டும்;
“அப்படியா! போகலாமே!” என்று கூலாகத் தொடங்க வேண்டும்.
“அப்பாடா... பர்மிஷம் கிடைச்சிடுச்சு...!’ என்று அந்தத்
தாய் அகமகிழ்ந்திருக்கும் நேரத்தில்,
“போகலாம்... இதை செஞ்சி முடிச்சிட்டுப் போங்க...!” என்று.
நெஞ்சில் ஈரமில்லாமல் வேலை வாங்கும் மனசு வேண்டும்;
‘ஏண்டா இவனிடம் பர்மிஷன் கேட்டோம்.
கேட்காமலிருந்தால் வழக்கமான நேரத்துக்காவது வீட்டுக்குப்
போயிருக்கலாமே...!’ என்று
அந்த நபர், நொந்து போகும் அளவுக்கு, கொடுக்கப்படும்
வேலை, வழக்கமாக முடித்துவிட்டுப் போகும் நேரத்தைத் தாண்டி நீளும்
வேலையாக இருக்க வேண்டும்;
“அடி வயிறு வலி பின்னி எடுக்குது. மெனோபாஸ் பிரச்சனை...!”; என்று
வந்து நின்றால்,
“நானும் லேடிதான். எனக்கும் தெரியும்; ரொம்ப
சீன் போடாம, போயி வேலைய முடிச்சி ரிப்போர்ட் பண்ணிட்டுப் போங்க...!”
என்று கூசாமல் கூறவேண்டும்;
இதுபோல அதிகார தோரணையில், தாட்சண்யமே
இல்லாமல் சொல்லும் மனது வேண்டும்;
அடுத்தவரை வீழ்த்தும் குணம் வேண்டும்;
அவமானப்படுத்தும் திறன் வேண்டும்;
கூனிக் குறுக வைக்கும் வார்த்தைகளை, நுனி
நாக்கு ஆங்கிலத்தில் பேசும் மொழி வளம் வேண்டும்.
***
“டீம் லீடர்” கஜா என்கிற கஜேந்திரன், நெஞ்சில்
ஈரம் உள்ளவன்;
மனிதநேயம் அவன் ரத்தத்திலேயே ஊறியிருந்தது;
தன் குழு உறுப்பினர்களுக்கு ஈவு இரக்கம் காட்டுபவன்;
தன் எல்லைக்கு உட்பட்ட நிலையில் சலுகைகள் வழங்குபவன்.
கஜாவை விட ஜூனியர்கள் பலர், இன்று
அவனை விட உயர் பதவியில் இருக்கிறார்கள்.
கஜா உயர் பதவிகளை அடையாமலிருக்கக் காரணம், அவனிடம்
இயல்பாகவே உள்ள இரக்க குணமும் மனிதத் தன்மையும்தான்.
இதனால் ‘டீம் லீடர்’ பதவிக்கு அடுத்த, உயர்
பதவியான ‘ஹெச் ஆர்’ பதவிக்கு கஜாவை பரிந்துரைக்கவே இல்லை கம்பெனி...;
அவனும் அதற்கெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.
***
காந்தி ஜெயந்தி நாள்.
தேசிய விடுமுறை நாளான இன்று விடிகாலையிலேயே அனைத்துச் டிவி
சேனல்களும் ‘ரகுபதி ராகவ ராஜா ராம்...’ எனப் பாட ஆரம்பித்து விட்டது.
காலை ஆறு மணி சுமாருக்கு, கஜாவின்
கைப்பேசியில் ரிங்டோன், வயலின் இசை ஒலித்தது.
“சொல்லுங்க மிஸ்டர் சரவணன்.”
“.................”
தற்போதைய சிக்கல்களைச் சுருக்கமாய்ச் சொல்லி, தவிர்க்க
முடியாத காரணத்தால் விடுப்பு கேட்டு, தன் டீம்
லீடரான கஜாவிடம் எடுத்துச் சொல்ல,
“ஓகே! நான் பாத்துக்கறேன். நீங்க நல்லபடியா முடிச்சிட்டு
வாங்க சரவணன். காட் ப்ளஸ் யூ...!”
மனப்பூர்வமாக வாழ்த்தி, சந்தோஷமாக
விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதியும் கொடுத்தான் கஜா.
***
கஜாவிடம், கைப்பேசியில் அவசர அனுமதி கேட்ட சரவணன், காதல்
திருமணம் செய்து கொண்டவன்.
அதுவும் புரட்சித் திருமணம்.
எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, பெற்றோர்களால், ஆடுமேய்க்க
அனுப்பப்பட்ட மங்கையின் மீது ‘காதல் கொண்டு கைப் பிடித்தான்’ சரவணன்.
சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டதால், இருவர்
வீட்டிலும் ஆதரவு இல்லை.
நல்லதோர் கணவனாய் மட்டுமல்லாது, நல்லதோர்
ஆசானாகவும் இருந்து, தன் மனைவியின் கல்வித் தகுதியை உயர்த்தினான் சரவணன்.
தனித் தேர்வராக, மனைவியைப்
பத்தாம் வகுப்பும், பனிரெண்டாம் வகுப்பும் தேற வைத்தான்.
அதைத் தொடர்ந்து, தற்போது, தொலை
தூரக் கல்வித் திட்டத்தில் பட்டப் படிப்புப் படிக்கிறாள் சரவணனின் மனைவி.
அவள் தற்போது நிறைமாத கற்பிணி.
இப்போதோ - அப்போதோ என்ற நிலை.
எதைக் கண்டும் கலங்கவில்லை அந்தக் காதல் ஜோடி. இருவரிடமும்
மனேபலமும், தன்னம்பிக்கையும்,
மனத்தின்மையும் அதிகமாகவே இருந்தன...
அக்கம்பக்கத்தார்களின் ஒத்தாசையுடனும், அரசு
மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடனும்,
மருத்துவரின் சிகிச்சையுடனும், எல்லாவற்றையும் சமாளித்து வந்த இணையர் அவர்கள்.
சரவணனுக்கு விடுப்பெடுக்க, தொலைப்பேசி
மூலம், கஜாவே அனுபதி கொடுத்துவிட்ட விஷயம், கம்பெனி
முழுவதும் வைரலானது. ஹெச் ஆர் கவனத்துக்கும் சென்றுவிட்டது.
***
அத்தியாயம் 11
பருவதமும், ஒரு காலத்தில் தனித்துவமான சரக்கு மாஸ்டராகப் போடு போடென்று
போட்டவள்தான்.
“பருவதம் மாமி...! கார் அனுப்பறேன் வந்துடுங்கோ...!
“மணிக்கணக்குல உட்கார்ந்து சரக்குப் போடப் போற உங்களுக்கு
ஒத்தாசையா இருக்கட்டுமேனு ரயில்ல ‘செகண்ட் ஏசி’ல டிக்கட் புக் பண்ணியிருக்கேன்
மாமி...!”
“கண்டிப்பா
நீங்கதான் வரணும் மாமி. வேற யாரை அனுப்பினாலும் திருப்தியா இருக்காது”;
“உங்களுக்காக முகூர்த்தத் தேதியையே மாத்தி வேணா
வெச்சிக்கறோம்...!”
“என்னோட ‘யு. எஸ்’ ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் உங்க கையால பண்ணின
ஸ்வீட் சாம்பிட நாக்குல ஜலம் விட்டுண்டு காத்திருக்காளாக்கும்..!”;
“என் பேத்தி கல்யாணத்துக்கும் நீங்கதான் மாமி ஜாங்கரி
சுத்தித் தரணும்...!”;
“முறுக்கு ஆகட்டும், ஜாங்கரி
ஆகட்டும் எப்படி மாமி அச்சுல போட்டு எடுத்தா மாதிரி ஒரே சீரா, வடிவம்
மாறாம, சுத்து மாறாம பண்றேள்”;
“உங்களால மட்டும்தான் முடியும் மாமி... சான்ஸே இல்லை...!”;
“நீங்க போட்ட ஜாங்கரியப் பாத்துண்டே இருக்கலாம் போல
செம்ம’யா இருக்கு. சாப்பிடவே மனசு வரலை மாமி...!”
இப்படியெல்லாம்,
பல்வேறு இடங்களில், பல்வேறு
விசேஷத் தலங்களில், காதில் வாங்கிய விதவிதமான பாராட்டுரைகள் மீண்டும் மீண்டும்
மனதில் சுழன்றன.
***
“கேமராவைப் பாத்துண்டே ஜாங்கிரி சுத்தரா மாதிரி கை
வைச்சிக்கோங்கோ மாமி...!” கல்யாண வீட்டில் ஒரு பெண் நிருபர் கேட்டுக் கொண்டாள்.
தொழிற் களத்தில் பருவதத்தை கேமராவில் படம் பிடித்தாள்.
குறைவான தழல் மீது வைக்கப்பட்ட அகலமான தாம்பாளம்; அதில்
மிதமாய்க் கொதிக்கும் எண்ணையில், சீராக வேகும் ஜாங்கரிகளை பார்த்துப் பார்த்து அதிசயித்தாள்
அந்த நிருபர்.
மீன் தொட்டியின் அடி மட்டத்திலிருந்து புறப்பட்டு
மேலெழுந்து வரும் காற்றுக் குமிழிகள் போல,
ஜாங்கிரிகளின் அடியிலிருந்து மேல்நோக்கி வெளியேறும்
குமிழிகளின் மத்தியில், சீராக வேகும் ஜாங்கரிகளைப் பார்த்துப் பார்த்துப்
பூரித்தாள்;
காட்சியை வீடியோவில் பதிவு செய்தாள்.
பூப்போன்ற ஜாங்கரியின் சுற்றுத் துளையில் ஸ்போக்ஸ்
கம்பியியை விட்டு, நளினமாகத் தூக்கித் திருப்பிப் போடும் லாகவத்தை வியந்து
வியந்து வீடியோ பதிவு செய்தாள்.
வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்தாள் பத்திரிகை நிருபர்;
அருகில் ஜீராவில் ஊறும் ஜாங்கரிகளையும் குளோஸப்பில் தனியாக
க்ளிக் செய்தாள்;
தட்டில் அடுக்கப்பட்ட ஊறிய ஜாங்கிரிகளையும், அப்படி
இப்படி நகர்த்தி வைக்கச் சொல்லி, லே அவுட் செய்து புகைப்படம் எடுத்தாள்;
புகழ் பெற்ற அந்த ஆங்கில நாளிதழில்,
எல்லா நிழற்படங்களும், கண்ணைக்
கவரும் வண்ணம் பின்னணியாகத் திகழ, பருவதத்தின் திறமையைப் புகழ்ந்து எழுதி, பிரத்யேக
எடிஷனில் பிரசுரம் செய்தார் அந்த நிருபர்.
அந்தப் பேப்பரைக் கொண்டு வந்து மகிழ்ச்சியோடு காட்டி, வாய்
நிறையப் பாராட்டி மகிழ்வித்த பெண் நிருபர், பருவதத்தின்
மனதில் இப்போது வந்து போனார்.
ஒரு திருமணத்தில், மணமகனும், மணமகளும்
தன் இருபுறமும் நின்றபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு, தன்
காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய அந்தக் காட்சி மனதில் உருண்டது.
இப்படிப்பட்ட உபசார வார்த்தைகளையும், பாராட்டுரைகளையும், செயல்பாடுகளையும், யோசனைகளையும்
நினைத்துப் பார்த்தபோது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது பருவதத்துக்கு.
***
அதே சமயம்,
இன்று காலை நந்தகுமார் நடந்து கொண்ட இழிசெயலும், அவள்
மனதில் இருந்து அகலவே இல்லை.
என்னதான் மனதை மாற்றி மாற்றி யோசித்தாலும், கவனத்தை
வேறு எதிலாவது செலுத்தினாலும் கூட இறுதியில் அனிச்சையாக அந்த சம்பவம்தான் வந்து
உறுத்தியது.
நந்த குமார் போன்ற ஈன மனிதர்களிடையே, இந்தத்
தொழிலை செய்து முன்னேற முடியுமா?
பயம் வந்தது.
‘இந்தத் தொழில் சரிவராது’
மனதில் உறுதியாய்ப் பட்டது பருவதத்திற்கு.
‘வீடு, மடம், பாடசாலை, மெஸ்... இப்படி எங்கேனும் சமையல் வேலை செய்து பிழைக்கலாமா?’ யோசனை
வந்தது.
‘ம்ஹூம்., சரிவராது. சரியான இடமாக அமையவில்லையெனில் சிக்கலாகிவிடும்.’
என்றும் தோன்றியது.
‘ஒத்தைப் பொண்ணு வெச்சிருக்கோம். அவ வயிறு வாடாம நல்லா
படிக்கவைக்கணும்னா, சும்மா இருந்தா யார் தருவா? ஏதாவது
வேலை செய்துதானே ஆகணும்...’ யதார்த்தம் அவ்வப்போது அவளை எச்சரிக்க,
பருவதம் ஒரு முடிவுக்கு வந்தது விட்டாள்.
வீட்டை இழுத்துப் பூட்டினாள்.
‘மகா பெரியவா கேட்டரிங்’கின் முதலாளியும்,
தங்கள் குடும்பத்துக்கு ‘காட் ஃபாதருமான’ கணபதி-மாமாவின்
வீட்டை நோக்கிச் சென்றாள் பருவதம்.
***
அத்தியாயம் 12
“கஜேந்திரன், அவன்
இஷ்டத்துக்கு, ஓவர் ஃபோன்ல, சரவணனுக்கு
லீவு சாங்ஷன் பண்ணிட்டாரா...?”
ஈகோ பிடரியில் தாக்க, சூடானார்
ஹெச் ஆர்;
பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதாக அவரின் தன் முனைப்பு
உசுப்பேற்றியது;
தன்னுடைய அதிகார வரம்பில் நுழைந்துவிட்ட கஜாவின் மீது கொலை
வெறி வந்தது ஹெச் ஆர் ஆன அவருக்கு;
“மாரியப்பன்...” - தனது ஓ ஏ வை அழைத்தார்.
“டீம் லீடர் கஜேந்திரனை உடனே வந்து என்னை பார்க்கச்
சொல்...” ஆணை பிறப்பித்தார் ஹெச் ஆர்
அவசரமாக அழைப்பென்பதை காதில் வாங்கியபின், “ டூ மினிட்ஸ்ல
வந்து பார்க்கறேன்னு சொல்லுங்க மாரியப்பன்...” என்று ஓ ஏ வுக்கு பதில் சொல்லி
அனுப்பினான் கஜா.
பின் விளைவுகள் அனைத்தையும் முன்பே
எதிர்ப்பார்த்திருந்தவன்தானே கஜாநடக்கவிருக்கும் எந்த விளைவுகளையும் சந்திக்க
மனதளவில் தயாரானான்;
ஹெச் ஆர் முன், வந்து
இயல்பாக நின்றான் கஜா.
“மிஸ்டர் கஜேந்திரன்...!”
“யெஸ்
சொல்லுங்க...!” கேட்டது, கஜாவின் பார்வை.
“சரவணனுக்கு லீவு எடுக்க அனுமதி கொடுத்தீங்களா?”
“...........................” அமைதியாய் நின்றான்.
அறிவினாவை அலட்சியப்படுத்தினான் கஜா.
***
இந்த ஹெச் ஆர்
ஆரோக்கிய சாமி, கஜாவின் ‘செட்’ தான்;
கஜாவோடு டீம் லீடராக இருந்தவன்தான்;
கஜாவோடு நன்கு பழகியவன்தான்;
கடந்த காலங்களில் கஜாவை, பல நேரங்களில் உபயோகப்படுத்திக்
கொண்டவன்தான்;
இப்போது அடுத்த உயர் பதவிக்குப் போனதும் அதிகாரத்தைக்
காட்டுகிறான்.
‘ஏதாவது வாய்த்துடுக்காகப் பேசிவிட்டால் அது தப்பாகிவிடும்’; வாயை
கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் கஜா.
“..............”
கஜா எதுவும் பேசாமல் நின்றான்.
ஹெச் ஆர் முகத்தை ‘சுள்’ளென்று வைத்துக் கொண்டு பேசினார்.
“என்னை அப்ரோச் பண்ண மாட்டாராமா அந்தச் சரவணன்?” குரலில் குரோதம் இருந்தது.
“..............” இதற்கும் பதில் ஏதும் சொல்லவில்லை கஜா.
“என்ன பதிலே காணம்...?”
“..............”
கஜாவின் அமைதி நீடித்ததேத் தவிர எந்த எதிர் வினையுமில்லை.
“..............” “உங்களுக்கு என்னதான் வேணும்...?” என்பது
போல ஒரு பார்வை பார்த்தான் கஜா.
அந்தப் பார்வையில் இருந்த கேள்வி, ஹெச்
ஆருக்குப் புரிந்திருக்க வேண்டும்.
“நீங்களே ஃபோன் மூலம் அனுமதி கொடுக்க, யாரு
உங்களுக்கு அதிகாரம் கொடுத்தாங்க?” - அதிகாரம் கொடிக் கட்டிப் பறந்தது.
“..............” இதற்கும் விடையாக அமைதியைத்தான் அளித்தான்
கஜா.
***
கஜாவின் தொடர் மௌனம் ஆத்திரத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது
அதிகாரிக்கு.
“நீங்களே எல்லா முடிவும் எடுக்கறதா இருந்தா நாங்கல்லாம்
எதுக்குங்கறேன்?”
சற்றே நிறுத்தி, கஜாவின்
ரியாக்ஷன் பார்த்தார் ஆரோக்கியசாமி.
கஜா எதையும் மூளையில் ஏற்றிக் கொள்ளாமல் நின்றதை
அவதானித்தார்...
மீண்டும் ஹெச் ஆரே தொடர்ந்தார்.
“மிஸ்டர் கஜேந்திரன், நீங்க
இதுபோல இடம் கொடுத்தா, நாளை மறுநாள், எதிர்
காலத்துல, ஸ்டாஃப் எங்களை எப்படி மதிப்பாங்க;
இது போல சீனியரை ‘ஓவர் லுக்’ பண்றதையெல்லாம் என்கரேஜ்
பண்ணாதீங்க மிஸ்டர்.”
பேச்சில் அகங்காரமும் ஆத்திரமும் கலந்திருந்தது.
‘மனித நேயத்தோட சீனியர்கள் நடந்துக்கிட்டா, ஏன்
ஓவர்லுக் பண்ணப் போறாங்க...?’
கஜாவிற்கு, நாக்கு நுனி வரை வந்துவிட்டது.
‘இதுபோன்ற ஆசாமிகளுடன் வாதிப்பதால் எந்தப் விளைவும் ஏற்படப்
போவதில்லை...’ என்பதை எண்ணி, நாவை அடக்கிக் கொண்டான் கஜா.
“ஒரு கர்டசிக்காகவாவது, ஹெச். ஆர்
தான் பர்மிஷன் தரணும்னு சொல்லத் தோணலையா உங்களுக்கு?”
‘ஆமாம்...!
உங்க கிட்டே வந்து நின்னு பர்மிஷன் கேட்டா, மொதல்ல
கொடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்பீங்க... உங்க புத்தி தெரியாதாக்கும்...!’
இப்படிச் சுள்’ளென்று எடுத்தெரிந்து பேசிவிடலாம்தான்.
அதனால் பெரிதாக என்ன மாற்றங்கள் ஏற்பட்டுவிடப் போகின்றன?’
“..............” அநாவசியமாகப் பேசப் பிடிக்காமல் வாய் மூடியபடியே இருந்தான்
கஜா.
***
‘மௌனம் கலகம் நாஸ்தி.’
‘மௌனம்
சர்வார்த்த சாதகம்.’
‘சரவணனின்
தற்போதைய இக்கட்டான நிலையை நன்கு அறிந்தவர்தான் இந்த ஹெச் ஆர். தெரியாவிட்டால்
விளக்கிச் சொல்லலாம்;
சக மனிதனுடையப் பிரச்சனைகளை விட தன் பதவியையும்
அதிகாரங்களையும் அதிகம் நேசிக்கும், இவனிடம்
என்ன சொல்லி என்னத்தான் ஆகப் போகிறது?’
“எது
வேண்டுமாலும் பேசட்டும்” என்ற முடிவுக்கு வந்த கஜா, எதிராளியைப்
பேசவிட்டு, அமைதியாக நின்றான்.
அந்த நேரத்தில்... கஜாவின் அலைப்பேசியில் வயலின் இசை
ஒலித்தது.
“உங்க பர்மிஷனோட கால் அடண்ட் பண்ணிக்கறேன்...” என்று
ஜாடையில் தெரிவித்துவிட்டு ஹலோவினான் கஜா.
***
“...........................”
“கன்கிராட்ஸ்
சரவணன்.”
“...........................”
“நார்மல்
டெலிவரியா...? ரொம்ப சந்தோஷம் சரவணா...!” என்று சொல்லியபடியே, ஒரு
நிமிஷம்...” என்று சொல்லிவிட்டு,
“சார். சரவணனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம்...!”
சரவணனை இணைப்பில் வைத்துக் கொண்டே சந்தோஷமாக
ஆரோக்கியசாமியிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டான் கஜா.
“அதெல்லாம் சரி...! ஆபீசுக்கு எண்ணிக்கு வருவாராம்...?” –
கேட்டார் ஹெச் ஆர் கடுப்பாக.
***
அத்தியாயம் 13
முழுவதும் காயாமல், ஈரப்
பதத்தோடுக் கிடக்கும் அலுமினிய, பித்தளை, எவர்சில்வர், பிளாஸ்டிக்
பாத்திரங்களின் பச்சை வாடை;
ஈயம் பூசப்பட்ட ஐட்டங்கள், ஈரப்பதத்தில்
பூத்து, வெளிப்படுத்தும் களிம்பு வாடை;
அலசிப்போட்ட இட்லித் துணிகள், வடி-சாக்குகள், பிடி-துணிகள்
இவை எல்லாம் பரப்பும் வீச்சம்;
கோணிச் சாக்குகளிலும், மூங்கில்
கூடைகளிலும், பிரப்பந் தட்டுகளிலும் கிடக்கும் பல்வேறு காய் கனி
கிழங்குகளின், கலந்து கட்டி வரும் வாசனைகள்;
முற்றத்தில் குவித்து அவித்த கரியும், சாம்பலும்
கிளப்பும் கரிப்பு நாற்றம்.
ஓட்டு வீட்டில் வருடம் பூராவும் தலை கீழாய்த் தொங்கி வாயால்
எச்சமிடும் வௌவால் புளுக்கையின் வேகம்;
இன்னும் என்னென்னவோ, விளக்க
முடியாத வாசனைகளும், வேகங்களும், கலந்து
வீசும் பட்டகசாலை, சமையலர்களாலும், பரிசாரகர்களாலும், சரக்கு
மாஸ்டர்களாலும் நிரம்பியிருந்தது.
கணபதியின் அழைப்பின் பேரில், வழக்கம்
போலச் சமையல் தொழிலாளர்கள் வீடு முழுதும் கூடியிருந்தார்கள்.
ஹெட் குக்குகள், சரக்கு
மாஸ்டர்கள், பரிமாறுபவர்கள், எடுபிடி
வேலையாட்கள் என்று அனைத்துப் பிரிவினரும் கணபதின் உத்தரவுக்காகக்
காத்திருந்தார்கள்.
***
கங்காளம், ஜோடு தவலை, காபி ஃபில்டர்கள், ட்ரம்கள், இட்லிப்
பானைகள், இட்லித் தட்டுகள், தாம்பாளங்கள், வாளிகள், தூக்குச்சட்டிகள், மூக்குச்
சட்டிகள், கொத்துக் கிண்ணங்கள், கடாய்கள், அடுக்குகள், குடங்கள், டபராக்கள், டம்ளர்கள், கரண்டிகள், ஸ்பூன்கள், துடுப்புகள், துருவுக்
கட்டை, அரிவாள்மனை, சேவை நாழி
...............
இத்யாதிகளால் கூடம், காமரா உள், உக்ராண
அறை, என்று எல்லா இடங்களிலும் நீக்கமற விரவியிருந்தன பெரும்படிச்
சமையல் பாத்திரங்கள்.
கவிழ்த்தும், ஒருசாய்த்தும், நிமிர்ந்தும், ஒன்றன்
மீது ஒன்று ஏறியும், ஒன்றுக்குள் ஒன்று இறங்கியும், துணி
சுற்றப்பட்டும், செய்தித்தாள்களுக்குள் அடங்கியும், சாக்கால்
மூடப்பட்டும், கை போன போக்கில் வைக்கப்பட்டும் இருந்த பாத்திரங்களின் பின்னணியில்,
பெரிய ஜோடு தவலையைக் கவிழ்த்துப் போட்டுக் கொண்டு, அதன் மேல், அட்டணக்கால்
போட்டபடி, கம்பீரமாக அமர்ந்திருந்தார் கணபதி.
முன்னங்கைகளைக் கட்டிக் கொண்டும்;
பின் கைகளை கோர்த்தபடியும்;
தலை சொறிந்தவாறும், வயிறு
தடவிய நிலையிலும்;
பூணூலால் முதுகு சொறிந்தவாறும்;
கவிழ்ந்த கங்காளத்தில் ப்ருஷ்டம் அழுந்த அமர்ந்தும்;
முற்றத்துக் குரட்டில் அட்டணக்கால் போட்டும்;
தூணுக்கடியில் குத்துக்காலிட்டுக் குந்தியும்;
தூணில் உள்ளங்கையைத் தாங்கி விளிம்பில் தொற்றியும்;
தூண் விளிம்பில் முதுகை உரசி கண் கிறங்கியபடியும்;
குரட்டோரம் குதிகாலைத் தேய்த்துக்கொண்டும்;
முற்றம், பட்டக சாலை, ரேழி, கூடல்வாய்
மூலை என அனைத்து இடங்களிலும் குழுமியிருந்தார்கள் சமையல் கோஷ்டியினர்.
‘கணபதி என்ன சொல்லப் போகிறார்...?’ என்பதை
அறிய,
காதைத் திறந்து காத்திருந்தனர் அனைவரும்.
ஒவ்வொரு பெயராய் சொல்லி அழைத்தார் கணபதி.
அவரவருக்கு உரிய பொறுப்புகளையும் விவரமாகச் சொன்னார்.
***
“கிட்டா, நீ பட்டீஸ்வரம் உபநயனத்துக்குப் போயிடு. சந்தான கிருஷ்ணனை
கூட அழைச்சிக்கோ;
“ம்...” என்றான் கிட்டா.
மாத்ருபூதம்... கருத்தட்டான்குடீல உமக்கு வேலை. பதினாராம்
நாள் காரியம்; நாப்பது அம்பது பேருக்குச் சமையல்; வீட்டுக்காராளே
பரிமாறிப்பா. வேதகிரியைக் கூட அனுப்பறேன், சரியா?”
“சரிண்ணா...”
என்றான் மாத்ருபூதம்.
மாத்ரு, சமையல் முடிச்சி வெச்ச கையோட, அழுந்த
ஸ்நாநம் பண்ணிப்பிட்டு, திருவையாத்துக்கு வந்துடு;
“அப்படியாண்ணா...?”
“ஆமாம். திருவையாத்துல
ஜானவாசச் சமையலுக்கு நீதான் மெயின் ஆளா நிக்கணும் புரிஞ்சிதா...?
இவ்வாறாக, யார் யாருக்கு; எங்கெங்கு; எத்தனை
நாள்; என்னென்ன வேலை; என்று,
புகையிலைச்சாறு நிரம்பிய வாயை அன்னாந்து, ‘ழ’கரம்
மிகுந்து வர, வழக்கம் போல உத்தரவு போட்டார் கணபதி.
***
நடு நடுவே, நான் சொன்னது காதுல வாங்கினயா...?
எங்கே போகணும் சொல்லு...?” என்று
சோதிப்பார்.
உடைந்த சிலேட்டுப் பலகையில் எழுதி வைத்ததைப் பார்த்துப்
பார்த்து, எந்த இடத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள்
என்பதையெல்லாம் நிதானித்து, கூட்டிக் கழித்து, கணக்குப் போட்டு, பொறுப்புக்
கட்டி அனுப்புவார்,
ஏற்பாடுகளை செயல்முறைப் படுத்திய உடன், பால்குச்சியால், சிலேட்டில்
பெருக்கல் குறியிட்டு பைசல் பண்ணிவிடுவார் கணபதி.
“உடைந்த சிலேட்டுப் பலகை சில்லுல எழுதுவானேன் ‘செக்
லிஸ்ட்’.”
“டைரில எழுதிக்கலாமே...!
“செல் போன்ல, குறிச்சி
வெச்சிக்கோங்களேன்...!”
என்றெல்லாம் பல சந்தர்ப்பங்களில் பலவேர் சொல்லி விட்டார்கள்
கணபதியிடம்.
ஆனால் கணபதிக்கு அதெல்லாம் ஒத்து வரவில்லை.
உடைந்த சிலேட்டுச் சில்லும், பால்
குச்சியும்தான் அவருக்கு ஆகி வந்தது.
***
உத்தி பிரித்துக் கொண்டே இருந்த போது,
வாசல் நடை கடந்து, ‘காமராவுள்’
வாசற்படியில், தலைக் கவிழ்ந்து, இலை-மறை
காய்-மறையாக, கண் கசக்கியபடி நின்ற பர்வதம் கண்ணில் பட்டவுடன், நிலை
குலைந்து போனார் கணபதி.
குமுறிக் கொண்டு வந்தது துக்கம் அவருக்கு.
வெளிப்படும் முன் துக்கத்தை முழுங்கினார் கணபதி.
“ப்ராப்தம்...! யாரை விட்டுது...! கர்மா... கர்மா...!”
தனக்குத்தானே சொல்லி ஆற்றிக் கொண்டார்.
இதெல்லாம் ஒரே ஒரு கணம்தான் அவர் மண்டையில் ஓடியது. அடுத்த
கணம் யதார்த்த உலகத்துக்கு வந்துவிட்டார் கணபதி.
***
“பர்வதம்!”
பாசமும், பரிவும் சரி விகிதத்தில் கலந்து அழைத்தார் கணபதி.
தலைக் குனிந்த நிலையில், கணபதியைக்
கூர்மையாக நோக்கின பர்வதத்தின் காதுகள்.
கூடியிருந்த எல்லோரும், தலையை
லேசாகவும், முழுதும் திரும்பியும்;
கன்னத்தில் கைவைத்து கவலையைக் காட்டியபடியும்;
தெய்வச் செயல் என்று கைவிரித்துக் காட்டிய படியும்;
வலது கையில் நான்கு விரல்களை மடக்கி, கட்டை
விரலை நெற்றியின் முன் வலதும் இடதுமாய் ஆட்டி ‘தலைவிதி’ என்ற முத்திரையைப்
பதித்தவாறும்;
பலவேறு வகையில் உடல் மொழிகளையும். முத்திரைகளையும்
பதித்தார்கள்.
சில பல சத்தங்களை எழுப்பியும்,
கணவனை அற்ப ஆயுளில் இழந்த பருவதத்திற்குத் தங்கள்
அநுதாபத்தை தெரிவித்தார்கள்;
“த்சௌ த்சௌ...”;
“ப்ச்...ப்ச்...”
“ஐயோ... பாவம்...!”
ஓசை எழுப்பின சில வாய்கள்,
“என்னமோ... போ...”;
“பகவானுக்குக் கூட கண் அவிஞ்சி போச்சே...!”
வார்த்தைகளை உதிர்த்தன சில உதடுகள்.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும்,
‘கணபதியய்யா பருவதத்துக்கு என்ன யோசனை
சொல்வாராயிருக்கும்...?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார்கள்.
“...................”
காதுகளைத் தீட்டியபடி அமைதியாகக் காத்திருந்தது மொத்த
சமையலர் கூட்டம்.
பருவதத்தின் கணவனும், சரக்கு
மாஸ்டருமான சுந்தரத்துக்குச் செலுத்தும் மௌன அஞ்சலி போலவும் இருந்தது அந்தச்
சூழல்.
***
அத்தியாயம் 14
குழு உறுப்பினராய்ப் பணி புரியும் ஒருவருக்கு, வாரிசு
பிறந்ததைக் கேட்டுச் சந்தோஷப்படக் கூட முடியாதவாறு இறுகிப் போயிருந்த ஹெச் ஆர்
பதவியைக் கண்டு கஜாவின் மனசு கொதித்தது.
‘என்ன கொதித்து என்ன?
அவன் கையில் அதிகாரம் இருக்கு; என்கிட்டே
தார்மீக பலம் இருக்கு. அதனாலத்தான் இப்படி நிக்க வெச்சிக் கேள்வி கேட்கிறான்;
வேறு எவனா இருந்தாலும், டெர்மினேட்
பண்ணியிருப்பான்;
அந்த அளவுக்குப் போகலைன்னாலும் ஒரு வாரம் பத்து நாள்
சஸ்பெண்ட்டாவது பண்ணியிருப்பான்;’
இப்படியெல்லாம் இருந்தது கஜாவின் எண்ண ஓட்டங்கள்.
‘ஹெச் ஆர் பதவிக்கு வர்றதுக்கு முன்னால இவன் போடாத பர்மிஷனா, செய்யாத
தில்லுமுல்லா...?
இவனுக்கு பதிலா இவன் டீமை எத்தனை முறை ‘அன் அஃபீஷியா’
நிர்வாகம் பண்ணியிருப்பேன்...;
எல்லாத்தையும் சுத்தமா மறந்துட்டு இப்படிப் பேசறானே? ;
இல்லையில்லை; இவன்
எதையும் மறந்திருக்கமாட்டான். அதையெல்லாம் நினைப்புல வெச்சித்தான் இது போல என்னை
அழைச்சி வெச்சிப் பேசுவானாயிருக்கும்.’ என்று சமாதானம் செய்து கொண்டான் கஜா
0‘அது
சரி...! எதிர்காலத்துல சரவணனுக்கு வந்ததைப் போல இக்கட்டான நிலையே இவனுக்கு
வராதா...?
வாழ்க்கைலப் பர்மிஷனே கேக்க மாட்டானா...?
இவ்வளவுக் கறாராப் பேசறானே...?
நாளைக்கு இவன் வீட்டுல ஒரு நல்லது கெட்டதுன்னா பரபரக்காம, அமைதியா
ஆபீஸ் வேலைதான் முக்கியம்னா இருப்பான்;
வந்துட்டானுக...;
அடுத்தவங்க வயித்தெரிச்சல கொட்டுறதுக்குனே...’
கஜாவின் மனசு சிறுமை கண்டு, பொங்கியது.
***
‘ஒருக்காலும் ஐ டி கம்பெனியில் உயர் பதவிகளுக்குப் போகவே
கூடாது’ என்று கஜாவின் மனதில் வைராக்யம் எழுந்தது.
இந்த வேலையை உதறிவிட்டு வேறு வேலையை தேடிச் சென்றவர்கள்;
வேறு பிழைப்பில் இணைந்து காலூன்றி வெற்றி கண்டவர்கள்;
வெற்றி பெற முடியாமல், வாழ்க்கையைச்
சிக்கலாக்கிக் கொண்டவர்கள்;
புதிய இடத்தில் காலூன்ற முடியாமல் தற்கொலை முயற்சி
செய்தவர்கள்;
இப்படியாக, எத்தனையோக் கதைகள் கஜாவின் முன் எழுந்தன.
‘நாம் கூட இந்த வேலையை விட்டு விட்டால் என்ன?’
வெறுப்பின் உச்சத்தில், இப்படிக் கூட கஜா நினைத்தான்.
“‘ம்ஹூம்...”; “எடுத்தேன்
கவிழ்த்தேன்” என்று எதையும் செய்துவிட்டு பின்னால் வருத்தப்படக்கூடாது.”
கஜாவின் உள்ளுணர்வு எச்சரித்தது.
***
அத்தியாயம் 15
கணபதி தன் சிம்மாசனமான, கவிழ்த்துப் போட்ட கங்காளத்தில் இருந்து
எழுந்தார்.
பாசி பிடித்து, பச்சைப்
பசேல் என்று காட்சியளிக்கும், முற்றத்தில், சாப்பாட்டுத்
தட்டு அலம்பும் போதும், சாப்பிட்ட கை கழுவும் போதும், சிதறிய
எச்சங்கள் தேங்கி, டீ கம்போஸ் ஆகி, அழுகி, முடை
நாற்றம் வீசும் முற்றத்து ஓரச் சாளவத் தொட்டி அருகே சென்றார் கணபதி;
அவிழ்ந்து விழுந்து விடுகிறதைப் போல, இடுப்பிலிருந்து
கழன்ற வேட்டியை ‘டக்’ கென, அனிச்சையாக இடது கை கவ்விப் பிடித்து கொண்டது;
நழுவிய தோள் துண்டை தொட்டியில் மோதாதவாறு வலது கையால்
ஒதுக்கிப் பிடித்துக் கொண்டார்;
தொட்டிக்குள் துப்ப, வாகாய் குனிந்து
நின்றார்.
புகையிலைச் சாற்றை தொட்டியோரம் ‘பொளிச்’ எனத் துப்பினார்;
வாய் முழுதும் பரவியிருந்த புகையிலைத் துணுக்குகளை நாக்கால்
துழாவித் துழாவி ஒரு சேர்த்துத் துப்பினார்.;
உள் நாக்கில் தங்கி நின்ற கோழையை, முன் பற்களால் கூட்டி, காரித் துப்பியபின், குடம்
காலியாகிவிட்ட நிம்மதி ஏற்பட, ஆசுவாசமாய் மூச்சை இழுத்து விட்டார்;
வேட்டியை அவிழ்த்துப் பிடித்தபடி, சுவற்றை நோக்கி
நின்று, ‘பட்...’ என சின்னதாய் உதறிக் கொண்டு, சற்றே
ஏற்றி, வயிற்றுக்கு மேல் கட்டி இறுக்கிக் கொண்டார்.
துண்டை மாலையாகப் போட்டுக் கொண்டார்.
***
குனிந்தார்.
தரையில் வைத்திருந்த பித்தளை அடுக்கில் நிரப்பப்பட்டிருந்த
நீரை, சொம்பால் மொண்டார்.
‘ப்ளு... ப்ளு... ப்ளு...’
கெட்டியான சத்தத்தில் தொடங்கிப் படிப்படியாக, மெல்லிய
ஒலியாகக் குறைந்து, காற்றை வெளியேற்றிவிட்டு, சொம்பை
ஆக்ரமித்துக்காண்டது நீர்.
சொம்பின் கழுத்தைப் பிடித்து, வலது
கையால் எடுத்து, அன்னாந்து வாய் திறந்து, சொம்பு
நீரை அளவாய் வாயில் நிரப்பினார்;
‘குபு... குபு... குபு...’ வென, வாயின்
பல்வேறு பகுதிகளுக்கு நீரைக் கொண்டு போய், வெவ்வெறு
முக பாவங்களில் கொப்பளித்துக் கொப்பளித்துத் துப்பினார்;
சொம்பு நீரை இடது கைக்கு மாற்றிக் கொண்டு,
வலது கை ஆட்காட்டி விரலையும் சுட்டு விரலையும் நக
வெட்டிபோல் சேர்த்துக் கொண்டு கடவாய்ப் பல்லில் சிக்கிய புகையிலைத் துணுக்கை
விடுவித்தார். முழுதும் விடுபடவில்லை போலும்.
நாக்கால் நிரடி, பல்லில்
மாட்டியிருந்த புகையிலைத் துணுக்கை உதட்டுக்குக் கொண்டு வந்து அதை துப்பினார்;
ஈரக்கையால் ஓரிரு முறை வாயைச் சுற்றித் துடைத்துக் கொண்டார்;
காலிச் சொம்பை தொப்பெனப் தண்ணீரடுக்கில் போட்டார்.
‘க்ளிங்..................’
பித்தளை ஏனத்தில் சொம்பு மோதி, ஓசை
எழுப்பியது.
சொம்பு விழுந்த வேகத்தில், நீரில்
பிரளயம் ஏற்பட்டது.
அடுத்த கணம், நீர் கட்டி
ஒன்று எகிறி சடாரென உயர்ந்து, விளிம்பைத் தாண்டிக் குதித்துத் முற்றத்துப் பாசிக்குக்
கொஞ்சம் நீர் வார்த்து அடங்கியது.
“பொளு... பொளு... பொளு...’ வெனத் தண்ணீரை விழுங்கி ஏப்பம்
விட்டவாறே, தண்ணீருக்கு அடியில் சென்று சாய்வாய் அமர்ந்தது சொம்பு.
***
தோள் துண்டைக் கையிலெடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தார்
கணபதி;
உதட்டோரம் படிந்திருந்த வெற்றிலைக் காவிச் சிகப்பு, துண்டில்
தீற்றிக்கொண்டது; அதை ஒரு முறைப் பார்த்தார்,
துண்டின் வேறு பகுதியை எடுத்தார்;
புருவம், இரப்பைகள், காதுகள், கன்னங்கள் எனத் துடைத்துக் கொண்டார்.
ஒவ்வொரு அங்கத்தையும் துடைத்தபின், துண்டைப்
பார்ப்பதும், துண்டின் துடை படாத பகுதியை எடுத்துக் கொள்வதுமாக சில
கணங்கள் நகர்ந்தன.
கடைசியாகத், துண்டை
உதறித் தோளில் போட்டுக் கொண்டார்.
மீண்டும் வந்து தன் சிம்மாசனமான, கவிழ்க்கப்பட்ட
கங்காளத்தின் மேல் நடராஜக்கால் போட்டு அமர்ந்தார்.
***
“பருவதம்...; என்று
தொடங்கினார் கணபதி.
பருவதம் உட்பட அனைவருமே காதைத் தீட்டிக் கொண்டு அமைதியாக
நின்றார்கள்.
சுந்தரம் போய்ச் சேர்ந்துட்டான்;
ஒத்தை மகளை ஒண்டியா நின்னு வளர்த்து, ஆளாக்கிக்
கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு உன் தலைல ஏறியிருக்கு;
ஓடற வரைக்கும் ஓடித்தான் ஆகணும், தெரிஞ்சிக்கோ...;
நிக்க வெச்சிட்டா, நின்னுடும்
நிரந்தரமா’ ன்னு நான் ஒனக்குச் சொல்ல வேண்டியதில்லே...?
ஜீவனோபாயத்துக்கு, என்ன
பண்றதா உத்தேசம்...?” என்று கேட்டு,
முடிவை பர்வதத்தின் கையில் விட்டார் கணபதி.
***
அத்தியாயம் 16
ராசய்யாக் கொல்லுப் பட்டரை.
கல்யாணபுரத்தில் ஒரு லேண்ட் மார்க் அது.
இடம் கொடுத்த ஈஸ்வரர் என்ற பெயரே நிலைத்து விட்ட, காசி
விஸ்வநாதர் கோவில் அங்கு மிகவும் பிரசித்தம்.
கோவிலுக்குத் தென்னண்டை, காவிரிப்
படுகையில் ஒரு தென்னந்தோப்பு.
கோவிலுக்குச் சொந்தமான தோப்பு அது.
தோப்பின் தென்கரையில் லைன்-கரை போகிறது.
லைன்-கரைக்குத் தெற்கே காவிரி ஆறு ஓடுகிறது.
காவிரியிலிருந்து ஒரு ஃபர்லாங் தெற்கே, மணஞ்சேரியில்
பிரியம் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் வீர சோழன் ஆறு.
***
ஈஸ்வரன் கோவிலுக்கு வடவண்டை, மதில்
சுவற்றை ஒட்டி. ஓடுவது தேசிய நெடுஞ்சாலை.
சாலையின் வடக்கே, சாலையோரம்
வரிசை கட்டி நிற்கும் ஓட்டு வீடுகள். அதில்
மேற்கு முனையில், முதல் வீடு ராசையாவுடையது.
வீட்டின் மேலண்டைப் புறத் திடலும், ராசையாவின்
மனைக்கட்டுதான். என்பதால்,
மேலண்டைத் தாய்ச் சுவற்றில் கருங்கல் தண்டியம் செருகி; தாய்ச்
சுவற்றைத் தவிர, மற்ற மூன்று எல்லைகளையும்,
சிமெண்ட் கம்பம் நட்டு, உத்தரமும், குத்துக்காலும், அனந்தரமுமாய்
நிறுத்தி, தண்டியக் காடியில் பனஞ்சாத்து வளை பொருத்தி; பனஞ்சரம்
நீட்டிக், கூடல்வாய் இறக்கி; தென்னம்
ரீப்பர் பரப்பித் தைத்து, மங்களுர் ஓடு வேய்ந்த கொல்லுப் பட்டரைதான் ராசய்யாவின் சுய
தொழிற்கூடம்.
கொல்லுப் பட்டரையின் பாதுகாப்புக்காக, கீல் முளை
பதித்து, கீல்பட்டை ஆடுகிற வகையில் தட்டி, கதவெல்லாம்
கூடக் கிடையாது.
மூங்கில் பிளாச்சிகளால் மானாவரியாகக் கட்டிவைத்த தட்டிதான்
சார்த்தியிருக்கும்.
***
கோவில் வளாகத்திலும், அக்கம்
பக்கத்து வீடுகளில் எல்லாம், பகல் பூராவும் ஓடித்திரிந்து களைத்துவிடும் பூனைகள், இரவு வேளை
நெருங்க நெருங்க, திறந்தே
கிடக்கும், ராசையாக் கொல்லுப் பட்டரைக்குள்தான் வந்து பம்மும்.
பகல் முழுதும் இரும்பைப் பழுக்க வைப்பதற்காகக், கனிந்து, தழல்
விட்டுக் கனன்று இரும்பைப் பழுக்க வைக்கும் நெருப்புக் கட்டிகளை,
அந்தியில், கையெழுத்து மறையும் நேரம், நீறு
பூத்துச் சாம்பலாகி விடாமல், தண்ணீர் தெளித்து அவித்து, அடக்குவார்
ராசய்யா;
கொஞ்சம் கொஞ்சமாக சூடு அடங்கி, வெதுவெதுப்பாய்க்
கிடக்கும் பட்டரையைச் ஒட்டிய அங்கனத்தில் பூனைகள் வந்து சுகமாய்ப் படுத்துக்
கிடக்கும்.
இதமான சூட்டோடு வசதியான இடம் கிடைப்பதாலோ என்னவோ,
அங்கு வரும் தாய்ப் பூனைகள் அடிக்கடி சினைப்பட்டு வம்ஸ
விருத்தி செய்து கொண்டே இருந்தன.
பூனைப் பண்ணையே வைக்கலாம் போல கரும்பும், சாம்பலும், வெண்மையுமாய், சிறிதும்
பெரிதுமாய், பெட்டையும் கிடாவுமாய் அவ்வளவு பூனைகள் அங்கு.
***
ராசையா வழக்கமாக, காலை ஆறு
மணிக்கெல்லாம் படுக்கையிலிருந்து எழுந்து விடுவார்.
பட்டரை வேலியோரம் செழித்து நிற்கும் மரத்தின் தாழ்ந்த கிளையை
வளைத்து, வேப்பஞ் குச்சியை உடைத்துப் பல்லால் கடித்துக் கடித்துத்
துப்புவார்.
ஓவியர்களின் ‘ஃப்ளாட் (பட்டைத் தூரிகையைப்) பிரஷ்’ போல
வடிவம் வரும் வரை கடித்துத் துப்புவார்;
மேலும் கீழுமாய் பற்களுக்கிடையே ஏற்றி இறக்கி, பல்
துலக்கியபடியே ‘லைன் கரை’யில் நடப்பார்;
அங்கும் இங்கும் கூர்ந்து நோக்குவார்; அக்கம்
பக்கம் கவனமாய்ப் பார்வையை ஓட்டுவார்;
ஒருவரும் இல்லை, என்பதை
உறுதிப் படுத்திக் கொண்டு அமர்ந் தெழுவார்.
காவிரி மடுவில் இறங்கி, அமுங்கி
நீராடுவார்;
***
அரை வேட்டி, துண்டு
இரண்டையும் ‘பட்... பட்... பட்...’ என்று அகலமாக அமைக்கபட்ட பாறாங்கல்
படிக்கட்டில் அடித்துத் துவைப்பார்; துவைத்த துணியைப்
பிழிந்து படியில் வைப்பார்.
மீண்டும் ஆற்றில் இறங்குவார். மூக்கைப் பிடித்துக் கொண்டு
வெகுநேரம் நீருக்குள் மூச்சை நிறுத்தியபடி உட்காருவார்;
‘போதும்...!’ என்று மனசுக்குப் பட்டதும்தான் கரையேறுவார்;
துடைத்துக் கொண்ட பின், துண்டை
மீண்டும் அலசிப் பிழிவார்.
‘ஃபட்...ஃபட்’ டென உதறி, அரையில்
சுற்றிக் கட்டிக் கொள்வார்.
அடுத்தாற்போல், கைகள்
அனிச்சையாகத் ஆகாயத்தைப் பார்த்து நிமிர்ந்து, தலைக்கு
மேல் கூம்பும்.
ஒரு சில நிமிடங்கள் சூர்ய நமஸ்காரம் ஓடும். படியேறிச்
செல்வார்.
ஆற்றங்கரை விநாயகர் கோவில் மாடத்தில் கொட்டிக் கிடக்கும்
திருநீற்றை ஐந்து விரல்களும் குவித்து எடுப்பார்;
இடது உள்ளங்கையில் திருநீற்றைத் தாங்கிக்கொண்டு மீண்டும்
படியிறங்கி வருவார்;
காவிரி நீரை, வலதுகையால்
எடுத்து அளவாய் வார்த்து, திருநீற்றைக் குழைத்து, பட்டையாக
நெற்றியில் பூசிக் கொண்டபின் படியில் நின்றபடியே மீண்டும் சூரிய நமஸ்காரம்
செய்வார்;
அடுத்து, வினாயகர் கோவில் கதவில் குத்துவசத்தில் பொருத்தப்பட்ட
உருட்டுக் கம்பிகளில் தலையை மோதிக்கொண்டு, உள்ளே
கர்ப்பக் கிருஹ இருளில் நிழல் போல் தெரியும் வினை தீர்க்கும் வினாயகரை
தெரிசிப்பார்;
அதற்கடுத்து, கோவில்
முன் போடப்பட்டிருக்கும் முந்தைய நாள் கோலத்தின் மீது நிற்பார்;
நெற்றி முகட்டில் குட்டிக் கொள்வார்; தரை வரை, கால் பாவ
தோப்புக்கரணம் போடுவார்.
***
கல்யாணபுரக் காவிரித் துறையில் மடு இருப்பதால், வருஷம்
பூராவும் அதில் தண்ணீர் நிற்கும்.
ராசையாவைப் போல, வருஷம்
பூராவும் காவிரியில் குளிக்கும் வேறு சிலரும் இருக்கிறார்கள் ஊரில்;
சிலர் குளிப்பது மட்டுமில்லாமல்,
ஊத்துப்பட்டை வைத்து அருகாமை மணலில் பள்ளம் பறிப்பார்கள்; பள்ளம்
பறிக்கப் பறிக்கக் கொப்பளித்து வரும் ஊற்று நீர்;
நீர் ஊற ஊறப் பார் இடிந்து விழும்;
பார் இடிய இடிய ஊத்துப்பட்டையால் மணலை அப்புறப்படுத்தி, ஊற்றுக்
குழியை அகலமாக்குவதும் ஒரு ஆனந்த அனுபவம்.
அகலமாகவும் ஆழமாகவும் தோண்டத் தோண்ட; ‘தோண்டி’யால்
முகரும் அளவுக்கு தண்ணீர் தளும்பி நிற்கும்;
முழங்காலால் நின்றும், அவ்வப்போது
வஜ்ராசனத்தில் அமர்ந்தும், லாகவமாய் முதலில் ஊறி வரும் தண்ணீரை இரைத்து எட்டக் கொட்டி
வெளியேற்றியும்;
செப்புக் குடத்தின் வாயில் வெள்ளைத் துணி கட்டி, ஊற்றுத்
தண்ணீரை சொம்பால் எடுத்து எடுத்து ஊற்றி வடிகட்டிய, காவிரி
நீரைக் குடித்தால்தான் தாகம் அடங்கிய உணர்வு வரும் ஒரு சில காவிரிக்கரை
வாசிகளுக்கு.
கலியாணபுரம் காவிரி மடுவில்,
மூங்கில் சாத்துக்களை, ஊறப்
போட்டுப் பதப்படுத்துவது;
கீற்று முடைய தென்னை மட்டைகளை அமுக்கி பாரம் வைப்பது;
வேலிகட்டுக்குப் பாளை ஊற வைப்பது;
விதை நெல்லை அமுக்கி முளைப்புக்கு விடுவது;
எருமைகளை துளைய விடுவது;
மாடு கன்றுகளைக் குளிப்பாட்டுவது;
வெள்ளாவி வைத்து வண்ணார் துணி துவைப்பது...,
இது போன்ற, நீரை மாசுபடுத்தும் செயல்களை, ஊர்
கூடித் தடை செய்திருந்தது.
ஜனங்கள் ஊர்க் கட்டுப்பாட்டை மதிக்கவும் செய்தார்கள்.
***
அத்தியாயம் 17
அவரவர் முடிவை அவரவரே எடுக்கும்போதுதான் அதில் ஒரு தெளிவு
இருக்கும், என்பதை நன்கு உணர்ந்தவர் கணபதி அய்யா.
கல்யாண ஆர்டர்கள் வரும்போது கூட, மெனுவை
அந்தப் பார்ட்டியிடமேதான் எழுதச் சொல்வார்.
பார்ட்டியினர், எழுதிச்
சமர்ப்பித்த பின்னர், அவர்களின் முன்பே ஒவ்வொன்றாகப் படித்து, தன்
அபிப்ராயங்களையும், மாற்றங்களையும் சொல்வார்.
ஆர்டர் தர வந்தவர்களின் உச்சி குளிர்ந்து விடும்.
கேட்டரிங் தொழியில் கணபதி அய்யாவின் இமாலய வெற்றிக்கு இந்த
அணுகுமுறையே காரணம் என்று சொல்பவர்கள் கூட உண்டு.
***
“ஜீவனோபாயத்துக்கு என்ன செய்யறதா உத்தேசம்?”
பருவதத்தை சுலபமாகக் கேட்டுவிட்டார் கணபதியய்யா.
“...............”
‘இதற்கு
நான் என்ன பதில் சொல்வது?
என்ன சொல்ல முடியும் என்னால்?
சுயமாக, தெளிவாக முடிவெடுக்கற அளவுக்கு என்னிடம் அனுபவம் ஏது?
ஏன் இப்படி ஆண்டவன் என்னைச் சோதிக்கிறார்?’
போன்ற யோசிப்பையெல்லாம் பிரதிபலித்தது பருவதத்தின் அமைதியான
முகம்.
கணபதி நீண்ட நேரம் பருவதத்தைச் சோதிக்கவில்லை.
‘சட்’டென ஒரு முடிவுக்கு வந்தவராய்ப் பேசினார்.
“தோ பாரு பர்வதம்...” என்று தொடங்கி, மேலே பேசும் முன் தொண்டையை செருமிக்
கொண்டார்.
பருவதத்தின் காதுகள் இப்போது கூர்மையாயின.
சுந்தரம் எங்கெங்கேயெல்லாம், சரக்குப்
போட்டானோ, அந்த எடத்துலல்லாம் சொல்லி விடறேன்; நீ போய்
அங்கேயெல்லாம் சரக்குப் போடு;
ஒத்தாசைக்கு ரெண்டு மூணு பேரை அனுப்பி வைக்கறேன்... என்ன
சொல்றே?” என்று வினாவில் முடித்தார் கணபதி.
***
காது குடையும் போது, காதுக்
குரும்பை, எக்குத் தப்பாகக் காதுக்குள் குத்திவிட்டால்,
‘ஹக்’கென இருமலும்,
‘குபுக்’ கெனக் கண்ணீரும் குவியுமல்லவா...;
அதுபோல, இன்று காலையில் சந்தனசாமியின் மகன் நந்தகுமார் கொடுத்தக்
கசப்பான அனுபவம் மனதிற்குள் கொதித்து எழ,
கணபதியின் இந்த யோசனை, பர்வதத்தின்
காதுக்குள் எக்குத் தப்பாய்க் குத்தி விட்டது.
திடீர்ச் சூறாவளியால் உப்புக் கடல்களில் எழும்பிய அலை, கரை
கடந்து, கன்னக் கதுப்பில் குதிக்கும் முன், புடைவைத்
தலைப்பால் உப்பு நீரை ஒற்றி உறிஞ்சிக் கொண்டாள் பர்வதம்.
தன் மனதில் பட்டதைத் படாரென்று சொல்வதும், செய்வதும்
கணபதியின் சுபாவம்.
தான் சொல்வதை உள் வாங்கும் திறனோ, பக்குவமோ
பருவதத்திற்கு இல்லை என்பதையும் உணர்ந்தார் கணபதி.
கண்களை மூடிக்கொண்டு அமைதியானார்.
பருவதத்தோடு சுந்தரத்தை ஜோடி சேர்த்து வைத்த அந்த நாள்
கணபதியின் மனத்திரையில் ஓடியது.
***
மைசூர்-பாக், பாதுஷா, ஜாங்கரி, ஜிலேபி, சோன்-பப்டி, குலோப்
ஜாமூன்......, இப்படியாக எந்த இனிப்பாக இருந்தாலும், மிக நேர்த்தியாகப்
போடுவான் சுந்தரம்;
கல்யாணம் - கார்த்திகை போன்ற விசேஷங்களைத் தவிர, திருச்சியில்
பல ஸ்வீட் ஸ்டால்களுக்கு சரக்கு மாஸ்டர் சுந்தரம்தான்;
நாக்கில் வைத்தாலே கரைந்து தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு
செல்லும் பதம் சுந்தரத்திற்கு மட்டுமே சொந்தமானது;
வழக்கமாக, ‘மகா பெரியவா கேட்டரிங் கான்ட்ராக்ட்’ எதுவானாலும், ஸ்வீட்
போடுவது சுந்தரம்தான்;
எவ்வளவு வேலை நெருக்கடி இருந்தாலும், இரவு
முழுவதும் கண்விழித்தாவது, கணபதியின் தேவையைப் பூர்த்தி செய்வான் சுந்தரம்;
சிலருக்குச் சிலரைக் காரணமே இல்லாமல் பிடிக்குமல்லவா? அப்படித்தான், கணபதியை
ரொம்பவே பிடிக்கும் சுந்தரத்துக்கு.
கணபதி ஐயாவுக்காக எதையும் செய்வான் சுந்தரம்.
***
தன்னைப் போலவே, செய்யும்
தொழிலை தெய்வமாக மதித்து, முழு ஈடுபாட்டுடன் கர்ம யோகியாகச் சமையல் சேவை செய்யும்
கணபதியின் மேல், அப்படி ஒரு வாஞ்சை சுந்தரத்துக்கு;
பதிலுக்கு சுந்தரத்தின் மேல் பாசத்தைப் பொழிவார் கணபதி;
‘தன்னைப் போல பிரம்மச்சரிய வாழ்க்கை சுந்தரத்துக்குக்
கூடாது;
சுந்தரம் குடும்பம் குட்டியென வாழ்வாங்கு வாழணும்.’ என்று,
பிரியாசைப்பட்டார் கணபதி அய்யா.
கல்யாணம், ரிசப்ஷன் என்று போகும் இடங்களில் எல்லாம் சுந்தரத்துக்கு
ஏற்ற, பெண் தேடுவதையும் கணபதி தன்னுடைய பொறுப்பில் ஒன்றாக
வைத்துக் கொண்டார்.
***
கும்பகோணம் பக்தபுரித் தெருவில் கணபதிக்கு ஒரு கல்யாண
காண்ட்ராக்ட வேலை வந்தது.
‘ஏதாவது ஒன்றைப் பற்றி மனதார சிந்தித்துக் கொண்டே இருந்தால், அந்த
ஒன்று எதிர்பாராத நேரத்தில் நம் முன் வந்து நிற்கும்.’ என்பார்களல்லவா. அது போல,
சுந்தரத்துக்கு ஈடாக ஒரு வரன்,
பருவதம் என்ற பெயரில்,
பக்தபுரித் தெருவில் இருக்கிறாள்.’ என்ற தகவல் சுந்தரத்தின்
திருமணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும், கணபதியின்
காதுகளுக்கு எட்டியது.
திருமண மண்டபத்தின் மூன்றாம் கட்டில் அல்வா கிண்டிக்
கொண்டிருந்தான் சுந்தரம்.
அல்வா கிண்டுவதில் நிபுணன் அவன்; திருநெல்வேலி
அல்வாவுக்கேச் சவால் விடும் அளவுக்குக் கிண்டுவான்;
அல்வாவை விட, கடாயில்
முறுகிப் – அடிப் பிடித்துக் கொண்டதை சுரண்டி எடுக்கும் ‘அடி அல்வா’ வுக்கு ஆஃபர்
அதிகம்;
புத்தூர் அமெரிக்கன் ஆஸ்பத்திரியில் ‘சி. எம். ஓ’ வாக
இருந்த சேஷகோபாலன், சுந்தரம் கிண்டும் அடி அல்வாவுக்குப் பரம ரசிகர்.
***
கும்பகோணம் சக்கரபாணிக் கோவில் அருகே இருக்கும் காவிரிப்
படித்துறைக்கு சக்கரப் - படித்துறை என்று பெயர்.
இன்றும் சக்கரப் படித்துறை என்றுக் கேட்டுத்தான் நகரப்
பேருந்திலும், மினி பஸ்ஸிலும் டிக்கெட் வாங்க வேண்டும்.
சக்கரப் படித் துறையை ஒட்டிய, உள்ளடங்கிய, நாட்டு
ஓடு வேய்ந்த வீட்டில்,
மாப்பிளை தலையணையோடும், சாரமனையுடனும்
இருந்த திண்ணையை, மூங்கில் பிளாச்சுத் தட்டியால் அடைத்து, இரண்டு
பிளாச்சுகளுக்கு இடையேயிருக்கும், ஒரு பிளாச்சு இடைவெளியை உள் பக்கமாய், ஈச்சம்பாய்க்
கட்டி மறைத்து, அறையாக உருமாற்றி...,
அந்த அறையின் உள்ளே, பெட்ரோ-மாக்ஸ்
லைட்டுகள், ஜமக்காளங்கள், தலையணைகள், பந்திப்
பாய்கள் என்று வைத்துக்கொண்டு வாடகைக்கு விடுவதும், அரசு, புரசு, கருங்காலி, என
சமித்துகள், நவதானியங்கள், ஹோம, பூஜை
சாமான்கள் என வியாபாரமும் செய்பவர் விஜயரங்கம்.
கணபதி அய்யாவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார்
என்றாலும் நேரில் பார்த்ததில்லை என்பதால், கல்யாண மண்டபத்தில்
கணபதியின் காண்ட்ராக்ட் என்பதை அறிந்து, விஜயரங்கம்
கணபதியைப் பார்க்க வந்தார்.
“அண்ணா... நான் விஜயரங்கம்...”
கணபதி கை கூப்பினார், சக்கரப்
படித்துரை விஜயரங்கம்தானே...” விசாரித்தார்.
“அவனேதான்...”
பெரிய கும்பிடாகப் போட்ட விஜயரங்கம், தன்னை
விஸ்தாரமாக அறிமுகம் செய்துகொண்டார்.
***
விஸ்ராந்தியாக, கல்யாணச்
சத்திரத்தின் இரண்டாம் கட்டில் உட்கார்ந்து கொண்டு, கணபதியுடன்
விஜயரங்கம் ஜனரஞ்சகமாகப் பேசிக் கொண்டிருந்தபோது,
மூன்றாம் கட்டிலிருந்து வரும் வாசனை மூக்கைக் துளைத்தது.
“அல்வா கிண்டியாறதோ?”
ஆர்வமாய்க் கேட்டார் விஜயரங்கம்...
“ஆமாங்காணும்...!” என்றார் கணபதி, கூடவே, “பாண்டுரெங்கா...!
என்று பலமாய்க் குரல் கொடுத்தார்.
எடுபிடி, ‘பாண்டுரெங்கன்’ வந்து எதிரில் நின்றான்.
“சுந்தரத்தண்ட கேட்டு ரெண்டு விள்ளல் அல்வா கொண்டு வந்து
விஜயரங்கத்துக்கு வைடா...!” என்றார் கணபதி.
***
விஜயரங்கம், வாழை
இலைக் கிழிசலில் வைத்திருந்த அல்வாவையும்,
பாக்கு தொன்னையில் வைத்திருந்த மிக்சரையும், மாறி
மாறித் தின்று தீர்ப்பதற்குள்,
சரக்கு மாஸ்டர் சுந்தரத்தின் பூர்வீகம், அவனுடைய
உயர்ந்த குணம், அவன் திறமைகள், மேதாவிலாசம்
எல்லாவற்றையும் விலாவாரியாகச் விஜயரெங்கத்திடம் சொல்லிவிட்டார் கணபதி.
“அந்தப் புள்ளைக்கு ஏதேனும் வரன் இருந்தாச்
சொல்லுமேன்...!”- வழக்கம்போல் கோரிக்கையும் வைத்தார் கணபதி.
யோசனையோடு, தலையைக் கீறிக்கொண்டார் விஜயரெங்கம்.
***
கும்பகோணம் டபீர்-தெருவில்,
நோயாளித் தகப்பனோடு, ஒண்டுக்
குடித்தனம் இருந்துகொண்டு,
அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய்கள் எனத் தயார் செய்து, விற்று,
சுயதொழில் செய்து வயிற்றைக் கழுவி வந்த பருவதத்தின் ஞாபகம்
வந்து விஜயரெங்கத்துக்கு.
உடனே, பர்வதத்தைப் பற்றிய விபரங்களை விலாவாரியாகச் சொன்னதோடு,
“சுந்தரத்துக்கு ஏத்த வரன்...!” என்ற அபிப்ராயத்தையும்
சேர்த்துச் சொன்னார் விஜயரெங்கம்.
“அப்டியா?” என்ற கணபதி, ஜன்ம
சாபல்யம் பெற்றாற்போல, புளகாங்கிதம் அடைந்தார்,
உடனடியாக, துள்ளிக் குதித்து எழுந்து, மூன்றாம்
கட்டுக்குச் சென்றார்.
வாழையிலையில் பத்து அல்வாத் துண்டுகளை வைத்துப் பார்சல்
கட்டிக் கையில் எடுத்துக் கொண்டார்;
“சரி... புறப்படும்...!” என்று புறப்பட்டார்.
போகிற வழியில்,
மடத்துத் தெரு பகவத் பிள்ளையார் கோவிலுக்குள் நுழைந்து
தோப்புக் கரணம் போட்டு, நமஸ்கரித்தார்.
கோவில் வாசலில் நாலு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டார்;
விஜயரங்கத்துடன் டபீர் தெருவில் நடந்தார் கணபதி.
***
நல்ல காரியத்தைத் தள்ளியேப் போடக்கூடாது...!’ என்பதுதான்
கணபதியின் சித்தாந்தம்.
கல்யாண சத்திரத்தில் சுந்தரம், அல்வாத்
துண்டுகளை நல்லபடியாகக் கரையேற்றினான்;
அடுத்து மைசூர்பாகுக் கிளரிக் கொட்டினான்;
தட்டில் கொட்டிப் பரத்திய மைசூர் பாகை, துண்டாடி, சம்புடத்தில்
வைப்பதற்குள்,
பருவதத்தின் வீட்டுக்கு விஜயரங்கத்தோடு சென்று, சுந்தரத்திற்கு, அவளைக்
கல்யாணம் பேசி முடித்தவர் கணபதி.
அடுத்த முகூர்த்தத்திலேயே சுந்தரம், பருவதம் கல்யாணத்தையும்
முடித்து வைத்தார் கணபதி
***
கல்யாணமான கையோடு, ‘டபீர்-தெரு’, ஒண்டுக்
குடித்தனத்தைக் காலி செய்து கொண்டு,
திருச்சி சிந்தாமணியில், வீட்டைப்
பேசி, குடித்தனமும் வைத்தார் கணபதி.
‘நித்யகண்டம் பூர்ண ஆயுஸ்’ என்று இருந்த இதய நோயாளியான
பர்வதத்தின் அப்பாவுக்கு சாகும் வரை, அமெரிக்கன்
ஆஸ்பத்திரியில் வைத்து ராஜ வைத்தியம் செய்தான் சுந்தரம்.
மகன் ஸ்தானத்தில் இருந்து, திருச்சி
சிந்தாமணி அகண்ட காவேரிக் கரையில் வைத்து மாமனாருக்குக் கொள்ளி போட்டான் சுந்தரம்.
நீத்தார் கடன்கள் அத்தனையும் முறைப்படிச் செய்தான்.
எந்த இடமும் எவருக்கும் சாஸ்வதம் இல்லையே...? பரபரப்பாக
இருந்த திருச்சி வீட்டை காலி செய்துவிட்டு, மகாதானத்
தெருவுக்குக் குடி வந்தாயிற்று.
கணபதி அய்யாவின் புண்ணியத்தில், நிறைய
ஆர்டர்கள் வர, கொழித்தான் சுந்தரம்.
வராகப் பெருமாள் பரிசாரக சேவை மன நிம்மதியைக் கொடுத்தது.
ஒரே மகளான சாவித்திரியும், சரஸ்வதி
கடாஷத்துடன் இருக்க, சுந்தரத்தின் குடும்பமே நிம்மதியாய் இருந்தது.
யாரும் நிம்மதியாய் இருந்தால் காலதேவனுக்குப் பொறுக்காதோ
என்னவோ?
வெள்ளை வெளேர் என்ற பச்சரிசிச் சோற்றின் மேல் கன்னங்கரேல்
என்ற புளிக்காச்சல் விழுந்தது.
***
அத்தியாயம் 18
காவிரியில் நீராடி, விட்டுக்குத்
திரும்பியபின்,
வீட்டின் பூஜை அறையில் நடு நாயகமாய் நிற்கும் சட்டமிட்ட
முருகன் படத்திற்கு, கையில் அகப்பட்டப் பூவை சார்த்தி, வணங்குவார்
ராசையா.
மனைவி, தயாராய் வைத்திருக்கும் நீராரத் தண்ணீரை, சின்ன
வெங்காயம் கடித்துக் கொண்டு பசியாறுவார்.
அடுத்த கட்டமாக, அவர்
வருவது கொல்லுப் பட்டரைக்கு;
பட்டரை உலை குழிக்கு அருகே, மனைப்
பலைகை போட்டுக் கொண்டு வாட்டமாய் அமர்வார்;
முதல் நாள் பூத்த சாம்பலைக் கிளறி, கரியை
ஒதுக்கி எடுத்து இரும்பு முறத்தில் சேகரிப்பார்;
தேங்காய்ச் சிரட்டையை பிய்த்துப் பிய்த்துப் பந்தாய்ச்
சுருட்டிக் குழிக்குள் பூத்தாற்போல் திணிப்பார்,
சாணியும், கரித்தூளும் கலந்து, வடை
வடையாய்த் தட்டிக் காய வைத்த உருண்டைகளில், ஒன்றோ
இரண்டோ எடுத்து, அதன் மேல் சீமெண்ணை ஊற்றித் தேங்காய்ச் சிரட்டை மேல்
வைத்ததும், தீக்குச்சியை உரசிப் பற்ற வைப்பார்.
***
குப்’பெனப் பற்றிய தழல், தேங்காய்ச்
சிரட்டையில் ஊடுருவிப் பரவும்,
வெண்புகை குபு குபுவென மேலெழும்.
புகைக்கு நடுவே, ஓரிரு
அக்கினிக் குஞ்சுகள் எழுந்து, ஆட்டம் போடும் வரை நிதானமாகத் துருத்தி ஊதுவார்.
தழல் ஆட்டம் போடும் கணத்தில், கரி
மூட்டைக்குள் விட்டு, உள் கொத்தாகக் கரியை எடுக்கும் வலது கை;
கைப்பிடியளவுக் கரியை உலை வாய்க்குள், பூப்போலத்
தூவுவார்;
துருத்தியை இடது கையால் மெதுவாய்ச் சுற்றி,
எரிகிற நெருப்பையும் புகையையும் மேலே எழுப்பிய பின், வெண் புகை
பழுப்பு நிறப் புகையாக உருமாறும்;
இப்போது சற்றே வேகமாகச் சுற்றுவார் துருத்தியை; பழுப்புப்
புகை முற்றிலும் மறைந்து, பற்றிய கரியின் உஷ்ணம் தகிக்கும்.
***
ராசய்யா, காவிரியில் முழுகி, நெற்றி
நிறைய விபூதிப் பட்டையுடன், பட்டரையின் அருகில் அமர்ந்து, முறையாக
துருத்தி ஊதி, பட்டரைக் குழியில் படிப்படியாக ஜ்வாலை ஏற்றுவதைப்
பார்த்தால்,
சதுர் வேதங்களையும் முறைப்படிக் கற்றுத் தேர்ந்த ரிஷி, யாகாக்னி
தயார் செய்வதைப் போலத் தெரியும்.
சுக்குரு, தேவதாஸ், கடாட்சம், முழி, சுப்புணி, உருலாசு இப்படி ஒரு ஐந்தாரு பேர் எப்பொழுதும் பட்டரையில்
ராசய்யாவைச் சுற்றிலும் அமர்ந்திருப்பார்கள்.
முண்டாசு கட்டியும்,
முதுகு மறைத்துத் துண்டு போர்த்தியும்,
தோளில் தொங்க விட்ட துண்டோடும்,
இப்படி அவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது,
யாகம் செய்யும் ரிஷிக்கு ‘சிசிருஷை’ செய்யச் சுற்றிலும்
வேதியர்கள் அமர்ந்திருப்பது போலவும் காட்சியளிக்கும்.
யாகத்தின் நடுவில், ஹவிர்பாகம்
இடும் ரிஷியைப் போல, ராசய்யா அந்த அக்னியில்,
மம்முட்டி இலையின் வாய்ப் பகுதியையோ; காம்புப்
பகுதியையோ;
கடப்பாரையின் ‘கூரை’யோ; வாய்
தட்டுக்கான பட்டையையோ;
கோடாலி ‘வாயை’யோ; கோடலிக்
காம்பையோ;
துவைச்சலுக்கான அரிவாள் வளைவையோ;
புது அரிவாள் அடிக்க வண்டிப் பட்டையோ,
இப்படி அப்போதைக்கு ஆகவேண்டிய ஒன்றை பட்டரைக் குழி நெருபில்
செருகினாற்போல் வைப்பார்.
தூண்டுகோல் கம்பியை வைத்து, நெருப்பில்
ஒரு குத்துப் போட்டுச் தூண்டி விட்டு, பூத்தாற்
போல் கிளறி விட்டுத் துருத்தி சுற்றுகையில்,
நெருப்பு சீறி, இரும்போடு
புணர்ந்து, கனிந்த கனியாய் பழுக்கும்.
***
யாருடைய வேலை நடக்கிறதோ, அவர்
வந்து பழுக்கும் வரை உட்கார்ந்து துருத்திச் சுற்றுவார்.
நெருப்புப் பழமாய் ஒளிரும் இரும்பை நீளமான கிடுக்கியால்
லாகவமாய் எடுப்பார் ராசய்யா;
தன் மேல் உஷ்ணம் தகிக்காமல்,
கையை எட்டத்தில் நீட்டி,
கிடுக்கியில் கவ்வப்பட்ட, இரும்புப்
பழத்தை வாகாய்ப் பனையல் மேல் ராசய்யா வைக்கும் முன்,
துருத்தி சுற்றியவர் சட்டென எழுவார். சம்மட்டியை எடுப்பார்.
‘ஸ்க்...’ என்ற
மூச்சுக்காற்றின் சுருதியோடு, பழத்தை நசுக்குவது போல் அடிப்பார்.
நசுங்கவேண்டிய, விரிய வேண்டிய
பொருளுக்கு ஏற்ப இருக்கும், அடியின் வீச்சும் வேகமும் அழுத்தமும்.
சாதாரணமாய்க் கூர் தட்டுவதற்கு, சம்மட்டியை, பாந்தமாய்த்
தூக்கி அரை அடி, ஒரு அடி அடியே போதும்.
அதே, இரும்புப் பட்டையை அடித்து அரிவாள் வடிவாக்கவோ, கடப்பாரையின்
வாய் விரித்துத் கூர் பாய்ச்சவோ, கோடரிக் கூர் தட்டவோ, சம்மட்டியைத்
தலைமேல் தூக்கி ‘புஸ்க்...” என வாயால் காற்றை வெளியேற்றியபடி பலமாக அடிக்க
வேண்டியிருக்கும்.
இப்படித் தட்டுதலும், அடித்தலும், தேய்த்தலும்,
‘சொய்ய்ங்ங்ங்...’ என்று, பழுத்த
அரிவாளை உப்புத் தண்ணீரில் நனைத்து, துவைச்சல்
போடுவதுமாய்,
நாள் முழுவதும் ‘பிஸி’ யாகத்தான் இருக்கும் ராசய்யா
கொல்லுப் பட்டரை.
***
அத்தியாயம் 19
சுந்தரத்தோடு, கல்யாணம்
கார்த்தி எனப் பல இடங்களுக்கும் போய், கூடமாட
ஒத்தாசை செய்ததில், சுந்தரத்தின் கைப்பக்குவம் எல்லாம் பருவதத்துக்கும்
வந்துவிட்டது.
ஒரே நாளில் இரண்டு இடங்களில் விசேஷம் என்றால், ஒரு
இடத்துக்கு பர்வதத்தை அனுப்பி வைப்பான் சுந்தரம்.
அவளும் சென்று, சிறப்பாகச்
சரக்குப் போட்டு, கேட்டரிங் பொறுப்பை ஈடுகட்டும் அளவுக்கு உயர்ந்தாள்.
காலம் மிகவும் பொல்லாதது.
உயர்ந்துகொண்டே இருப்பவர்களை ‘டக்’கென்று ஒரு குட்டு குட்டி
உட்கார வைக்கும்;
எழ முயற்சிக்காமல் உட்கார்ந்து விட்டவர்களை துரத்தித்
துரத்திச் சென்று படுக்க வைக்கும்;
ஒரு கட்டத்தில், ஒரு
வழியாகக் கொண்டே போய்விடும்.
அப்படித்தான் திடீரென்று சுந்தரத்தைக் கொண்டு போய் விட்டது
அந்தப் பொல்லாத மாரடைப்பு.
***
“பருவதம்...”
கனிவோடு அழைத்தார் கணபதி
“ம்...”
“யதார்த்தத்தை
ஏத்துக்கணும். நீ ஏத்துண்டிருப்பே...;
தனியாளா நின்னு ஒத்தைப் பெண்ணை வளத்து உருப்படிப்
பண்ணணும்னா நாலு காசு வேணும்.
வெறுமே உட்கார்ந்திருந்தா யாரு காசு தருவா...?
ஓடற வரைக்கும் ஓடித்தான் தீரணும்.
நிக்க வெச்சிட்டா ஒரேடியா நின்னுடும்;
அடுப்படீல வெந்த உடம்புதான் உன்னுது.
யோசனையே பண்ணாம கடாயைத் அடுப்புல ஏத்து;
உனக்கு நன்னாத் தெரிஞ்ச தொழிலை தைரியமாத் தொடங்கு;
சுந்தரத்தோட இருந்து, கூட மாட
ஒத்தாசை செஞ்ச சுப்பாமணி, பிச்சை, மாது, திருமண்ணன், தேசிகன், கோபாலன், குரு’னு
ஏகப்பட்ட பேர் இருக்காளே நம்ம கம்பெனில...;
தேவைப்பட்டப்போ ஒத்தாசைக்கு யாரு வேணுமோ அனுப்பறேன்.”
தன் அபிப்ராயத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் கணபதி.
“.................” ஒன்றும் பேசாமல் மௌனமாக நின்றாள்
பருவதம்.
***
‘பாவம் பருவதம்;
முடிவெடுக்கத் தெரியாமத் திண்டாடறா;
இப்படி இவளைச் சந்தீல நிறுத்திட்டுப் போயிட்டானே பாவி
சுந்தரம்;
நாடாள வேண்டிய ராமன் காடாண்டான்;
வெவ்வாய் ஓரி முழவாக, விளித்தார்
ஈமம் விளக்காக, கூகைக் கூவிப் பாராட்டப் சீவகன் பிறந்தான் சுடுகாட்டில்;
நள தமயந்தி பட்ட பாடும், மயான
காண்டமும் போல;
இந்தப் பருவதத்துக்கும் ஊழ்வினைதான் உறுத்து வந்து
ஊட்டியிருக்கு;
போகப் போக எல்லாம் சரியாகணும்,’ மனதார
தெய்வத்தை வேண்டினார்;
எல்லாம் கடந்து போகும்; எல்லாம்
சரியாகும்; என்று மனதார நம்பினார் கணபதி.
***
பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதித் நல்ல
மதிப்பெண்கள் எடுத்துத் தேறிவிட்ட தன் ஒரே மகள் சாவித்திரியைக் கரைச்
சேர்க்கவேண்டிய பொறுப்பு பருவதத்திற்கு இருக்கிறது.
கரைசேர்ப்பது இருக்கட்டும். வரப்போகும் கல்வியாண்டில்
அவளைக் கல்லூரியில் சேர்க்க வேண்டுமே...!
அம்மாவும் மகளும் குறைந்த பட்சம் இரண்டு வேளை வயிறு கழுவ
வேண்டுமே...!”
எல்லாவற்றையும் உத்தேசித்துத்தான் கணபதியின் வீட்டுக்கு
வேலை கேட்டு வந்தாள் பர்வதம்.
கணபதியோ, நான் ஒத்தாசைக்கு ஆள் அனுப்பறேன். நீ சரக்கு மாஸ்டரா தொழில்
பண்ணுங்கறார்.’
அதுவும் அவர் சொல்ற பெயரையெல்லாம் கேட்கும்போதே பயந்து
வந்தது பருவதத்துக்கு.
***
“மத்தவாளை நம்பி
இந்தத் தொழில் பண்ணவே முடியாது பருவத்து...!”
நாலு வருஷத்துக்கு முன் சுந்தரத்துக்கு வந்த கடுமையான
சோதனையின் போது, அவனே மனசு நொந்து சொன்னதை, நினைத்துப்
பார்த்தாள் பருவதம்.
தஞ்சாவூரில் ஒரு பெரியதனக்காரர் வீட்டுக் கல்யாணம்.
சீர் பலகார பட்சணங்கள் செய்து தர, காண்ட்ராக்ட்
ஒத்துக் கொண்டு,
சுப்பாமணி, பிச்சை, மாது, திருமண்ணன், தேசிகன்
எல்லோரையும் ஒத்தாசைக்கு வைத்துக் கொண்டு வேலை தொடங்கினான் சுந்தரம்.
நல்ல நேரம் லக்னம் பார்த்து, அடுப்பு
மூட்டிக் கடாய் ஏற்றும் நேரம், தேசிகன், கூலி அதிகம் கேட்டு அச்சாரம் போட்டான்.
“அடுத்த காண்ட்ராக்ட்ல பாக்கலாம் தேசிகா...!” என்றான்
சுந்தரம்.
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அரை மனதோடுதான் அடுப்பைப்
பற்ற வைத்தான் தேசிகன்.
அன்று மதியமே ‘உடம்புக்கு முடியலை...” என்று லீவு போட்ட
தேசிகன், வேலைக்குச் வர விடாமல், மற்றவர்களையும்
கலைத்துப் பழி வாங்கி விட்டான்.
விளைவு...?
குறித்த நேரத்தில் சீர் பலகார பட்சணங்களை சப்ளை செய்ய
முடியவில்லை சுந்தரத்தால்.
எதையும் சமாளிக்கும், சுந்தரத்திற்கே
கெட்டபேர் வாங்கிக் கொடுத்த பெயர்களை இப்போது கணபதி சொன்ன போது, பயம்
வரத்தானே செய்யும் பருவதத்துக்கு...
தொழில் நிபுணனாய், எட்டுக்
கண் விட்டெறியும் திறமையிருந்த சுந்தரத்துக்கே தண்ணீர் காட்டியவர்களுக்கு, நான்
எம்மாத்திரம்?
மேஸ்திரிப் பொறுப்பு இனிமேலும் நமக்கு சரி வருமா?’ என்ற
கேள்வி மட்டுமே திரும்பத் திரும்ப வந்தது பருவதத்துக்கு.
***
கணபதி மிகவும் ப்ராக்டிகல் ஆசாமி.
கொக்குத் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கும்
வித்தையெல்லாம் அவர் அகராதியில் கிடையாது.
மனசுக்குப் பட்டதைப் ‘பட்... படா’ ரெனச் சொல்லி விடுவார்.
“சுந்தரம் இருந்தப்போ, நாலு
இடங்கள்ல சரக்கு போடப் போனப்போ அவன் ஏத்தி இறக்கினான். நீ சுத்துக் காரியம்
பாத்துண்டே.
மத்தவா ஒத்தாசையில்லாம நீ தனியா பெரிய ஆர்டர்கள் எடுத்துச்
செய்ய முடியுமா சொல்லு...;
“...................”
மனசுலப் பட்டதைச் சொல்லு பருவதம்...?”
“ஸ்வீட் போட ஆர்டர் கிடைக்கும்போது போடறேன் மாமா.
ஒத்தாசைக்கு நீங்க யாரையும் அனுப்ப வாண்டாம்.
மகளிர் சுய உதவிக் குழுவுல எனக்கு சிநேகிதாள் இருக்கா
ஒத்தாசைக்கு...”
“அதுவும்
சரிதான். பேஷாச் செய்யி...”
“ஆனா, மாமா...!
“சொல்லு... எதானாலும் தயங்காம சொல்லு பருவதம்...”
“ஆடிக்கொருதரம், அமாவாசைக்கு
ஒரு தரமோதானே மாமா பணக்காரா கல்யாணம் வரும்;
அவாதானே ஜாங்கரி, சோன்பப்டினு
பண்ணுவா...;
அந்த வருமானம் எனக்கு எப்படிப் போறும்...;
தினம் தினம் வருமானம் வர்ற மாதிரி வேலைக்கு ஏற்பாடு பண்ணிக்
கொடுங்கோ மாமா...”
பருவதத்தின் எண்ணத்தில் ஞாயம் இருந்ததை உணர்ந்தார் கணபதி.
“வருஷம் பூரா வருமானம் கிடைக்க ஒரே வேலைதான் இருக்கு.”
என்றவர், தொடர்ந்து சொல்ல வந்ததைச் சொல்லாமல் பட்’டென்று வாயை
மூடிக்கொண்டார்.
“என்ன வேலை மாமா சொல்லுங்கோ...?”
“அது
உனக்குச் சரிப்பட்டு வராது பருவதம்.
நீ ஆத்துக்குப் போ, உனக்கு
ஏத்த வேலை வரும்போது சொல்லி அனுப்பறேன்...” என்று ஒரு வழியாகச் சொல்லி விடை
கொடுத்துவிட்டார் கணபதி.
“சரி மாமா...” என்று சொல்லி, வேறு
வழியின்றிக் கிளம்பி விட்டாள் பர்வதம்.
***
அத்தியாயம் 20
ஆதீனம் நடத்தும் அந்த மேனிலைப் பள்ளியில் பனிரெண்டாம்
வகுப்பு முடித்த பின், அப்பாவோடு கொல்லுப் பட்டறையில் உட்கார்ந்து விடலாம்
என்பதுதான் கஜேந்திரனின் திட்டம்.
“அப்பா, எனக்கும் இந்தத் தொழிலைச் சொல்லிக் கொடுப்பா, செய்யிறேன்...”
ஆர்வமாகத்தான் வந்தான் கஜா.
ராசய்யாவோ, எடுத்த எடுப்பில், “இதெல்லாம்
சரிவராதுல...”; என்று ஒரே போடாய் போட்டு விட்டார்.
“உன் காலத்துல, எனக்கு
வர்ற மாதிரி எவனும், ‘சம்மட்டி அடிக்கவோ’, ‘துருத்தி
ஊதவோ’ வரமாட்டான்; இந்தத் தொழில் என்னோட போவட்டும்.”
தீர்மானமாய்ச் சொல்லி விட்டார்.
அப்படிச் சொன்னதோடு நிற்கவில்லை ராசையா.
“கார், மோட்டார்-சைக்கிள் ரிப்பேர் பாக்கற படிப்பு இருக்குதாமே, கும்பகோணம்
சாமியார் பட்டரைல... அதுல சேர்ந்து படி கஜா.”
யாரிடமோ விசாரித்து வைத்திருந்த ராசையா, அந்தத்
தகவலையும் சொல்லி விட்டார்.
அப்பா சொல்வது சரியெனப் பட்டது கஜாவுக்கு.
கும்பகோணத்தில், சாமியார்
பட்டரை என்று பரவலாக அழைக்கப்படும், தூய
வளனார் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் ஐ டி ஐ படிப்பில் சேர்ந்தான்.
ஒரு வருட மோட்டார் மெக்கானிக் படிப்பில் சேர்ந்தான்
கஜேந்திரன்.
படிக்கும்போதே, நுணுக்கமாகப்
படித்ததால், ஆசிரியர்கள் அவனை தனிப்பட்ட முறையில் ஊக்கப்படுத்தினார்கள்.
தரமான மெக்கானிக்குகளோடு உதவிக்கு அவனை அனுப்பி அவன்
திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
***
ஸ்பானர் பிடிப்பதில் மட்டுமல்லாமல், படிப்பிலும், கணினி
இயக்குவதிலும் சுட்டியாக இருந்த
கஜேந்திரனிடம்,
“நீ பி ஈ படிச்சா, ஒயிட்
காலர் உத்தியோகத்துக்கே போகலாம் கஜா. எதுக்கு இந்த வேலை உனக்கு...?” உசுப்பி
விட்டனர் ஆசிரியர்கள்.
“பத்து பைசா செலவில்லாம் உன்னை ‘பி ஈ’ சேத்து விடறேன்
என்றார்...” ஒரு ஐடிஐ ஆசிரியர். சொன்னபடியே டொனேஷன் ஏதும் இல்லாமல் சேர்த்தும்
விட்டார்.
கலியாணபுரத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் சைக்கிள்
மிதித்து, திருவிசலூர் அரசு பொறியியல் கல்லூரியில் பிஈ படித்தான் கஜா.
பி ஈ கடைசீ வருஷம் படித்தபோது, பல
கம்பெனிகள் கேம்பஸில் ஆள் எடுக்க வந்தார்கள்.
ஆள் சேர்ப்பு முகாமில், இப்போது
அவன் வேலை பார்க்கும் கம்பெனி இவனைக் கொத்திக் கொண்டு போய்விட, புலி
வாலைப் பிடித்த கதையாய் போயிற்று கஜேந்திரனுக்கு.
இந்த வேலை, சுத்தமாக ஒத்து வரவில்லை என்றாலும், வேறு
வழியில்லாமல், கதையை ஓட்டிக் கொண்டுதான் இருந்தான் கஜேந்திரன்.
கொரோனா உச்ச பட்சத்தில் இருந்த நேரத்தில், அப்பா, ராசய்யா
அதற்கு பலி ஆகி விட்டார்.
‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டம் நடை முறைக்கு வந்ததால்
கல்யாணபுரத்திலேயே இருந்து கொண்டு வேலை செய்தான் கஜா.
அப்பா தன் வாழ்வாதாரமாக வைத்துக் கொண்டு, வெற்றிகரமாக
நடத்தி, கிராமத்து உழைப்பாளர்களுக்குத் தேவையான தொழிற் கருவிகளை
கூர் தீட்டிக் கொடுத்து,
சேவை செய்து கொண்டிருந்த கொல்லுப் பட்டரை, பராமரிப்பின்றி
ஒவ்வொரு இடமாகச் சிதிலமடைவதைப் பார்க்கப் பார்க்க மிக வேதனையாக இருந்தது
கஜாவுக்கு.
***
கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்த பின், மீண்டும்
அலுவலகத்தில் இருந்து பணி செய்ய ஆணை வந்தது.
ஐ டி உயர் ஊழியர்களின் மனிதாபிமானமற்ற சூழல் நாளுக்கு நாள்
வெறுப்பைத்தான் தந்தது கஜாவிற்கு.
பிரசவ வலியெடுத்த மனைவிக்காக கணவனுக்கு விடுமுறை, அளித்ததற்காக
ஹெச் ஆர் பேசிய பேச்சு மிகவும் பாதித்தது.
மிகவும் விட்டுப் போனது கஜாவுக்கு.
இத்தனை நேரம் எல்லாவற்றிற்கும் அமைதியாக இருந்த கஜா, “ஹெச் ஆர்
சார்...!” என்று அழைத்தான்.
அவன் குரலில் கம்பீரம் இருந்தது. உறுதி இருந்தது. வைராக்யம்
இருந்தது.
“சொல்லுங்க...?” என்றார்
‘ஹெச் ஆர்’ கடுப்பாக.
“நான் இன்னிக்கு பேப்பர் குடுத்துடறேன். கூடிய சீக்கிரம்
ரிலீவ் பண்ணிருங்க...” என்றான் கஜா நிதானமாக.
இப்படி ஒரு முடிவை கஜேந்திரன் எடுப்பான் என்றுக் கனவிலும்
நினைக்காத ஹெச் ஆர் ஒரு கணம் ஆடிப் போனார்.
***
அத்தியாயம் 21
‘தினப்படி சம்பாத்தியத்துக்கு ஏதோ வழி இருக்குன்னாரே கணபதி
மாமா, அதைத் தெரிஞ்சிண்டு போவோம்...!’
மனது தீர்மானிக்க, தெருவில்
இறங்கி நான்கைந்து வீடுகள் கடந்து போன பருவதம் திரும்பி வந்தாள் கணபதி அய்யா
வீட்டுக்கு.
பட்டக சாலையில் கணபதி பலமாய் பேசிக்கோண்டிருந்தது, ரேழி
இருட்டில், ஒடுங்கி, மறைவாய் நின்று கொண்டிருந்த பருவதத்தின் காதில் தெளிவாய்
விழுந்தது.
“பந்தி முடிஞ்சதும் இலை எடுக்கற வேலைக்குத்தான் இப்போ ஏக
டிமாண்ட்;
வீட்டோட கொண்டாடற காது குத்துலேந்து, மேரேஜ்
ஹால்ல தடபுடலாச் செய்யற கல்யாணம் வரைக்கும், இலை
எடுக்கத்தான் ஆள் தேடறா;
வருஷம் பூரா இந்த வேலை எல்லா எடத்துலயும் கிடைக்கும்;
வரட்டு கவுரவம் பாத்துண்டு, அதுக்குத்தான்
ஆள் வர மாட்டேங்கறா...!
இன்னும் சொல்லப் போனா, பந்தி
பரிமாறும் லேபரைக் காட்டிலும் அவாளுக்கு ரெண்டு பங்கு லேபர் தரா இப்பல்லாம்;
டேபிள் மேலே பேப்பர் விரிச்சித்தான் இலையே போடறோம்;
பேப்பரைப் பிடிச்சி முக்கோண வடிவத்துல சுத்திண்டே போய்
டேபிள் முடிவுல, அப்படியேத் தூக்கி, கருப்புப்
பிளாஸ்டிக் உறைல போடற வேலை;
எந்த ரிஸ்கும் இல்லாத வேலை;
குறைந்த பட்சம் 500 ரூபாய் சம்பளம் தருவா;
தொழில்ல ஏற்ற தாழ்வு பாத்துண்டு, வரட்டு
கவுரவத்தால இதுபோல வேலைகளை புறக்கணிக்கறதுகள் ஜனங்கள்;
நாளைக்கு மட்டும் நம்ம கம்பெனிக்கு ஐந்து எடங்கள்ல காண்ட்ராக்ட்
இருக்கு;
இலை எடுக்கறதுக்கு மூணே பேர்தான் இருக்கா. மீதி ரெண்டு
இடங்களுக்கு ஆள் தேடணும் நான்...!”
அங்கலாய்ப்போடு முடித்தார் கணபதி.
எதை எதிர்பார்த்துத் சென்றாளோ, அதைத்
தெரிந்து கொண்டுவிட்ட நிறைவோடு, வந்த சுவடு தெரியாமல் வீட்டுக்குத் திரும்பினாள் பர்வதம்.
மகள் கம்யூட்டர் வகுப்பு முடிந்து வந்ததும் சாப்பிடலாம்
என்று எண்ணி, சிறிது நேரம் சுவற்றில் சாய்ந்த வண்ணம் கால் நீட்டியபடி
உட்கார்ந்து சற்றே கண் மூடி ஓய்வெடுத்தாள்.
***
கணபதியிடமிருந்து போன் வந்தது.
“பருவதம்...”
“சொல்லுங்கோ மாமா.,.”
“அடுத்த வாரத்துல
ஒரு மூணு நாளைக்கு உனக்கு ஒரு ஆர்டர் புடிச்சிருக்கேன்;”
“அப்படியா மாமா...?”
“ஆமாம்...!
கல்யாண சீருக்கு பத்துப் பன்னிரண்டு ஐட்டங்கள் செய்ய வேண்டியிருக்கும்;
ஒத்தாசைக்கு ஆள் தோது பண்ணிக்கோ; தேவைப்பட்டா
சொல்லு, நான் அனுப்புறேன்.”
"தேங்க்ஸ் மாமா.” என்றாள் பருவதம், நன்றி
பொங்க.
அதோடு, “சுய உதவிக் குழுவுவ ஆள் இருக்கா மாமா. அவா யாரும்
கிடைக்கலேன்னா சொல்றேன் நீங்க அனுப்புங்கோ." என்றாள்.
“சரிம்மா... நல்லது நடக்கட்டும்.”
போன் வைத்துவிட்டார் கணபதி
***
சீர் பக்ஷணங்கள் மிக மிக கவனமாகச் செய்யப்பட வேண்டும்.
இலையில் பரிமாற, பட்சணங்கள்
செய்வதை விட, மிகவும் சவாலானது சீர் பட்சணங்கள் செய்வது.
நிறைய நிறையப் பொறுமை வேண்டும்;
36 பீஸ் 56 பீஸ் என்றுக் குறைவான எண்ணிக்கையில்தான் பீஸ்கள்
ஆர்டர் செய்வார்கள்.
குறைவான எண்ணிக்கை என்பதால், ஒவ்வொன்றாக
எடுத்து ஒவ்வொரு சுற்றாக உற்று உற்றுப் பார்த்துதான் வாங்குவார்கள் ஆர்டர்
கொடுத்தவர்கள்.
’ஒத்தாசைக்கு யார் யாரை அழைக்கலாம்...;
கல்யாணி...;
மைதிலி...;
அன்னபூரணி...’
இப்படி ஒவ்வொருவராக நினைத்துப் பார்த்தாள் பருவதம்.
***
"அம்மா..."
அழைத்தபடியே கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து பசியோடு வந்தாள்
சாவித்திரி.
மகளின் அழைப்பு பருவதத்தின் சிந்தனையை தற்காலிகமாக
நிறுத்தியது.
“சொல்லு சாவித்திரி...!”
“நாளை
மறுநாள் ‘கேட்ரிங் காலேஜ்’ல அப்ளிகேஷன் தராளாம்மா.”
“அப்படியா? ரொம்ப
சந்தோஷம். அப்பா இருந்தாக்கா, நீட் எழுத வெச்சிருப்பா உன்னை. என்னால முடியுமா சொல்லு...”
அம்மா நான் குறையே படலைம்மா... கேட்டரிங் டெக்னாலஜி
படிக்கறது ஒண்ணும் இளப்பம் இல்லேம்மா. அதுவும் ஒரு படிப்புதானே.”
விரும்பியது கிடைக்காதபோது கிடைத்ததை விரும்பும் தன் ஒரே
மகள் சாவித்திரியின் குணத்தை நினைத்த பருவதத்திற்கு கண்ணீர் முட்டிக் கொண்டு
வந்தது.
அதைக் காட்டிக் கொள்ளாமல், “அப்ளிகேஷன்
வாங்கிக்கலாம்...” இப்ப வா சாப்பாடு போடறேன்...” என்று மடையை மாற்றினாள் பருவதம்.
சாப்பிட்டுவிட்டு, பருவதம், பாத்திரம்
தேய்க்க உட்கார்ந்தபோது, சாவித்திரி வந்து பேச்சு கொடுத்தாள்.
***
“அம்மா...!”
“சொல்லு
சாவித்திரி...”
கேட்டரின் காலேஜ் அப்ளிகேஷன் 500 ரூபா...யாம்...மா...”
தயங்கித் தயங்கிச் சொன்னாள் சாவித்திரி.
"அதுக்கென்னடா வாங்கிக்கலாம்...” என்று சொன்ன பருவதம்,
‘பணத்திற்கு என்ன செய்யலாம்.’ என்று யோசித்தாள்.
‘கணபதி மாமாவுக்கு போன் செய்து, அவர்
சொன்ன அடுத்த வார ஸ்வீட் காரம் ஆர்டருக்கு, முன் பணம்
கேட்கலாமா?’ என்று நினைத்தாள்.
‘ம்ஹூம். கூடவே கூடாது; மறுத்தது
அவள் உள்ளுணர்வு.
கணவன் காலமானதற்குப் பிறகு முதல் முதலில் கிடைத்த ஆர்டர்; முன்பணம்
கேட்டு ஏதாவது சிக்கல் ஆக்கிக் கொள்ளக்கூடாது...!’ திடமாய் தீர்மானித்தாள்.
‘கணபதி மாமாவிடம் 500 ரூபாய் கடன் கேட்கலாம்...!’ என்று
முடிவெடுத்தாள்,
உடனே கணபதிக்கு போன் செய்தாள் பர்வதம்.
ரிங்டோன் சென்று கொண்டிருக்கும்போதே, பருவத்துக்கு
ஒரு யோசனை வந்தது.
போன் எடுத்த கணபதி,
“என்னம்மா பருவதம், ஒத்தாசைக்கு
ஆள் அனுப்பணுமா...?” கேட்டார்.
“வேண்டாம் மாமா, எனக்கு
அவசரமா ரூபாய் 500 தேவைப் படறது. நாளை மறுநாள் குழந்தைக்கு காட்டரிங் காலேஜ்ல
அப்ளிகேஷன் தராளாம். நீங்கதான் மாமா ஒத்தாசை பண்ணணும்."
"500 ரூபாதானே, உடனே ஜிபே
பண்ணி விடட்டுமா...?"
"ஜி பே’ யெல்லாம் வேண்டாம் மாமா.”
“இதுக்காக
நீ இவ்ளோ தூரம் வரணுமேனு பார்த்தேன். நேர்ல வராதானா வா...!”
“அதில்லே
மாமா, நாளைக்கு, இரண்டு இடத்துல இலை எடுக்கற வேலைக்கு ஆள் டிமாண்ட்னு
பேசிண்டிருந்தேளே, எந்த மண்டபத்துலனு சொல்லுங்க மாமா. நான் ஒரு இடம்
போறேன்...!”
காதில் ஈயம் காய்ச்சி ஊற்றினாற்போல் உணர்ந்தார் கணபதி.
மனசு ஏகமாய் வெதும்பியது கணபதிக்கு, தழு
தழுத்த குரலில், முகவரி சொன்னார். அதைக் குறித்துக் கொண்டாள் பருவதம்.
***
“அம்மா”
கணபதி மாமாவிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது
சாவித்திரி வந்து எதிரில் நின்றாள்;
“என்னடா செல்லம்...?”
“போனை
என்கிட்டே தாயேன்?” கேட்டாள் சாவித்திரி.
“மாமா, உங்க பேத்தி ஏதோ பேசணுமாம்.!” என்று சொல்லி சாவித்திரியிடம்
கைப் பேசியைத் தந்தாள் பருவதம்.
“தாத்தா. நல்லா இருக்கேளா தாத்தா...?”
“நல்லா
இருக்கேன்டா கண்ணு...”
“தாத்தா...”
“சொல்லுடா
செல்லம்...”
“அம்மாவுக்குதான்
ஒத்தாசை செய்வேளா, பேத்தி, எனக்கு செய்ய மாட்டேளா தாத்தா...?”
“என்னடா செல்லம் வேணும். கேளு செய்யத் தயாரா இருக்கேன். என்
செல்லப் பேத்தி நீ, உனக்குச் செய்யாம யாருக்குச் செய்ய போறேன்...?”
கணபதியின் குரல் தழுதழுத்தது.
“தாத்தா, அம்மாவுக்கு ஏற்பாடு பண்ணிவிட்ட இடத்தைத் தவிர இன்னொரு
இடத்துக்கு இலை எடுக்க ஆள் தேவை இருக்குதானே. அதுக்கு நான் போறேன் தாத்தா; அந்த
அட்ரஸும் கொடுங்க தாத்தா...”
சுரீர் என்றது கணபதிக்கு.
***
‘சுந்தரம் இருந்தால் எப்பாடு பட்டாவது டாக்டருக்குப் படிக்க
வைத்திருப்பான் சாவித்திரியை.’
நினைத்தபோது
கணபதியின் கண்கள் கலங்கின.
“என்ன தாத்தா பதிலே காணம்...?”
சுதாரித்துக் கொண்டார் கணபதி.
“உனக்கு எதுக்கும்மா அந்த வேலையெல்லாம்...?”
சொல்லி முடிக்கக் கூட இல்லை,
"இலை எடுக்கிறதும், நான்
படிக்கப் போற கேட்டரிங் டெக்னாலஜி படிப்புல ஒரு பகுதிதானே தாத்தா.”
இத்தனைப் பொறுப்பாகப் பேசும் சாவித்திரியை பெருமையோடு பார்த்து, ஈன்ற
பொழுதில் பெரிதுவந்தாள் பருவதம்.
கல்வியின் உண்மையான நோக்கத்தை அறிந்து கற்கும், புதிய
தலைமுறையினரை நினைத்தபோது பெருமையாக இருந்தது பர்வதத்திற்கு.
கணபதி மாமா, கல்யாண
பந்தியில் இலை எடுக்கும் வேலைக்கான மண்டபத்தின் முகவரியை சொல்ல, குறித்துக்
கொண்டாள் சாவித்திரி.
***
“அம்மா, கோவிலுக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு. இன்னிக்குப் பெருமாள் சேவிச்சிட்டு
வருவோம் நீயும் வர்றியாம்மா......?”
நான் வரலை. நீ போயிட்டு வா சாவித்திரி...”
சரிம்மா, என்று சொல்லிவிட்டு, வராகப்
பெருமாள் கோவிலுக்குச் சென்றாள் சாவித்திரி.
வராகப் பெருமாள் சந்நிதியில் பட்டாச்சாரியார், சடாரி
சார்த்தி, மஞ்சள் காப்பு பிரசாதம் கொடுத்தார் சாவித்திரிக்கு.
அங்கிருந்து புறப்பட்ட சாவித்திரி, சிறிது
நேரம் அனுமார் சந்நிதியில் அமர்ந்து அனுமார் தோத்திரங்களைச் சொன்னாள்.
அடுத்து, சுற்றுப் பிரகாரத்தில் இருக்கும், தாயார், சக்கரத்தாழ்வார்
சந்நிதகளை வணங்கினாள்.
கோவிலில் சாவித்திரியைத் தவிர சேவார்த்திகள் வேறு
எவருமில்லை.
தரிசனம் முடித்துக் கொண்டு கோவிலுக்கு வெளியே வந்தாள்.
“அடியேய்... சாவித்திரீ...!”
யாரோ அவளைக் கூவி அழைக்கும் குரல் பலமாய்க் கேட்டது.
***
வராகப் பெருமாள் கோவில்’
அந்த வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் அது.
காயலான் கடைக்காரர் முதல், கலெக்டர்
வரை புது வாகனம் வாங்கினால், அதற்குப் பூஜை போடுவதற்கு வராகப் பெருமாள் கோவில் முன்
ஓங்கி உயர்ந்து உத்தமன் பேர் பாடும், ராஜ
கோபுரத்துக்கு முன் வாகனத்தை பூஜைக்கு வைத்துவிட்டுக் கைக்கட்டி நிற்பார்கள்.
ராஜ கோபுரத்திலிருந்து சுமார் நூறடி தூரத்தில்,
நட்ட நடு வீதியில்,
கலையம்சங்களுடன், கம்பீரமாய்
நிற்கும் நாலுகால் மண்டபம்.
தரை மட்டத்தில் கிடக்கும் பத்ம பீடம்,
அதற்கு மேல் வரிசையாக அணி மணிகளுடன் நுட்பமாகச்
செதுக்கப்பட்ட பூத பொம்மைகளின் வரிசை.,
அதைத் தொடந்து, இரண்டு
நுட்பமான ரன்னிங் பார்டர் டிசைன்கள்.
பார்டர் டிசைன்களுக்கு நடுவே, பாந்துகள்
பிரிக்கப்பட்டு, முன்னும் பின்னும் மூம்மூன்றும், பக்கவாட்டில்
இரண்டிரண்டுமாகக் கணக்கிட்டு, மிக நேர்த்தியாக வடிக்கப்பட்ட தசாவதாரச் சிற்பங்கள்.
அதற்கு மேல் வரிசையில், உள்ளடங்கிய
படியைத் தாண்டி, யாளி முகங்களோடு, குறடுகள்
நீட்டப்பட்ட தளவரிசை.
கிழக்கு முகமாக, அளவான
நீளத்தில் பூமுனையோடு, கச்சிதமாக அமைக்கப்பட்ட கோமுகி.
கம்பீரமாக நிற்கும் நான்கு தூண்கள்.
தூண் ஒன்றுக்குத் தலா எட்டு சிற்பங்கள் வீதம், நுணுக்கமாகப்
பொறிக்கப் பட்ட உயிரோட்டமான ராமாயணக் காட்சிகள்.
மேற் கூரையின் அடி பாகத்தில் வடிக்கப்பட்ட தொங்கு கமலம்.
நடுவில், தொங்கும் கருங்கல்லால் இழைத்த, சங்கிலி
வளையங்கள்.
கை கூப்பியபடி, வலது
முழங்கால் முன்னே நீட்டியும், இடது முழங்கால் தரையில் படிந்தும் கம்பீரமாக
அமர்ந்திருக்கும் பெரிய திருவடி மேற்கூரையின் நான்கு மூலைகளிலும், கருட
தரிசனம் தரும் அழகே அழகு.
கருட பகவான் சிற்பங்களுக்கு இடையே சங்கு சக்கரத்தின் நடுவே
கம்பீரமாக பாதம் தாங்கி நிற்கும் திரு நாமம்.
இப்படி அந்த நாலு கால் மண்டபத்தின் பேரழகை, வர்ணித்துக்
கொண்டே போகலாம்.
இப்படிப்பட்டப் பேரழகு பொருந்திய அந்தக் கல் மண்டபத்தில், திருஷ்டிப்
பொட்டு வைத்தாற்போல்,
ஊழைச் சதையும், கூழை
வயிறுமாய், அட்டணக்காலிட்டுக் குந்தியிருந்தான் சாவித்திரி என்று கூவி
அழைத்த சாரங்கன்.
***
‘வசந்த உற்சவம்’ நடைபெறும் பத்து நாட்கள் மட்டும்தான் அந்த
நாலு கால் மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவைச் சாதிப்பார்;
மீதி 355 நாளும் இந்தச் சாரங்கன்தான், மண்டபத்தை
ஆக்ரமித்துக் கொண்டிருப்பான்.
வருவோர், போவோர் எல்லோரையும் வலுவில் அழைத்து, சள்ளை
செய்வதும் தொல்லை தருவதுமாகப் பொழுதைக் கழிப்பான்;
சாரங்கனை, தட்டிக் கேட்கவோ, தடுத்து
நிறுத்தவோ ஊரில் எவரும் தயாராக இல்லை;
சாரங்கன், கோவில் பரம்பரை ட்ரஸ்டி என்பதும், ‘அசட்டுக்கு
ஆங்காரம் வந்தாற்போல்’ இடக்கு முடக்காகப் பிதற்றுவான் என்பது மட்டும் காரணமல்ல;
‘எங்கே யார் உட்கார்ந்தால் என்ன? நின்றால்
என்ன? நம்ம வேலையப் பார்த்துக் கிட்டுப் போவோம்...’ என்கிற
ஜனங்களின் விட்டேர்த்தியான, சுயநல மனோபாவம் கூட இந்தக் கண்டு கொள்ளாமைக்குக் காரணமாக
இருக்கலாம்.
***
சாரங்கனின் அருகே, திறந்தே
கிடந்த பாக்குப் பட்டை மடக்கில், குவிந்திருந்தது பட்டைச் சோறு.
பார்த்த மாத்திரத்தில், ‘மடக்கில்
இருப்பது, சோற்றுக் குவியலா, அல்லது
‘ஈ’ குவியலா?’, சந்தேகமே வந்துவிடும்.
அந்த அளவுக்கு அடர்த்தியாய் அமர்ந்து பட்டைச் சோற்றை
மூடியிருந்தன ஈக்கள்.
‘தான் அழைத்தது சாவித்திரியின் காதில் விழவில்லையோ?’-
சாரங்கனுக்கு சந்தேகம் வர,
கோபுர வாசலில், வந்து
நின்று கொண்டு,
வலது உள்ளங்கையை வாழைக்காய்-வளைவு வளைத்து,
இடது நெற்றிப் பொட்டில் ஆள்காட்டி விரலைத் தொட்டபடி, புருவத்தை ஒட்டிக் கவிழ்த்துக் கொண்டு, ‘தன்னை
அழைத்தது யாராக இருக்கும்?’ என்று, அங்கும் இங்கும் பரபரப்பாய்ப் பார்த்தபடி தேடிக்
கொண்டிருந்த, சாவித்திரியைப் பார்த்தான் சாரங்கன்.
***
ஆட்காட்டி விரல்களை, மூக்கு
நுனியில் வைத்து கட்டை விரல்களை வாய்க் கடையில் ஊன்றி, நான்கு
விரல்களையும் வளைத்து ஒன்றிணைத்து, உள்ளங்கைகளை, சுருட்டு
பிடிப்பவன், தீக்குச்சித் தழலை காற்றிலிருந்துக் காப்பாற்றும் மறைப்பைப்
போல் வைத்துப் புனல் போல் குவித்தான் சாரங்கன்.
ஒலிச் சிதறலைத் தவிர்க்கும் முத்திரையை வைத்து முஸ்தீபு
செய்து கொண்டு,
“அடியே... சாவித்திரீ...!” என்று, அதிகாரத் தோரணையில், முன்பை
விடப் பெரிய குரலில், சிறுமியைக் கூப்பிட்டான் இப்போது.
எதிர் பாராத வகையில், திடீர்
என்று எழுந்த இடி போன்ற கத்தலால் அதிர்ந்த ஈக்கள்,
பட்டைச் சோற்றின் மீதிருந்து குபீரென மேலெழுந்தன.
எழுந்த வேகத்தில், மீண்டும்
இறங்கி பட்டைச் சோற்றின்மேல் குந்தி போர்வையாய் மூடிக் கொண்டன.
***
‘இவ்வளவு உரிமையா யாரு நம்மை அழைக்கறாங்க...?’
குரல் வந்த திசையைப் பார்த்தாள் சாவித்திரி.
“இதோ...! இதோ...! நாலு-கால் மண்டபத்துல பாருடீ சாவீ...!”
கத்தினான் சாரங்கன்
நாலு கால் மண்டபத்தில், உட்கார்ந்திருந்த
சாரங்கனைப் பார்த்தாள் சாவித்திரி.
‘இவர் எதுக்கு என்னைக் கூப்பிடறாரு?’
ஐய-வினா எழ, சாரங்கன்
அமர்ந்திருந்த மண்டபத்தின் அருகே சென்றாள் சாவித்திரி.
***
அரையில், தாறு மாறாய் சுற்றப்பட்ட அழுத்தமாய், நீர்க்காவி
ஏறி, நிரந்தரமாய்ப் படிந்து விட்ட பழுப்பு நிறத்தில் பல்லிளிக்கும்
வேட்டி.
வேட்டியின் தகுதிக்கு, சற்றும்
குறைவு படாத நிறத்தில், அழுக்குக் காசித் துண்டு.
அழுக்கைத் தக்கிளியில் மாட்டித் திரித்துத் தயார் செய்ததைப்
போல தோளில் கிடக்கும் பூணூல்.
ஸ்ரீராமர், கோதண்டம் பிடித்தாற்போல், இடது கைக்
கட்டைவிரல், தோள்பட்டைக்கு மேலேறிப் பூணூலைத் கவ்வியிருக்க,
வலது கட்டை விரலால் பூணூலின் கீழ் முனையைக் கவ்வி.
முதுகின் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை, ஏற்றியும், இறக்கியும்
பூணூலால் முதுகு சொரிந்து கொண்டான் சாரங்கன்.
சொரியல் சுகத்தால் சாரங்கனின் கண்கள் கிறங்கின.
அடுத்த நிகழ்ச்சியாக, காசித்
துண்டின் இருமுனைகளைப் பிடித்து, முதுகில் போட்டு, மேலும்
கீழும் இறக்கி, முதுகைத் துடைத்துக் கொண்டான்.
வியப்புடனும், வினாவுடனும்
எதிரில் வந்து நிற்று பார்த்தாள் சாவித்திரி.
அந்தச் சாவித்திரியை விழுங்குவது போலப் பார்த்தான்
சாரங்கன்.
***
பதினாறு வயது. பள்ளி இறுதி முடித்து கல்லூரிக்குச் செல்லத்
தயாராக இருக்கும் மடந்தை சாவித்திரி.
சாரங்கனின் தோற்றமும், பார்வையும்
அச்சத்தையும் அருவருப்பையும் கொடுத்தது அவளுக்கு;
நல்லப் பார்வை, நயவஞ்சகப்
பார்வை... என்பதைப் பற்றியெல்லாம், பலரால், பல்வேறு
சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தப்பட்டக் குறிப்புகளெல்லாம் மனதிற்குள் வரிசை கட்டி
நின்றன;
தன் தற்போதைய இக்கட்டான சூழலை நன்கு மனதில் வாங்கினாள்
சாவித்திரி.
***
‘நாம் இப்போது இருக்குமிடம்,
‘ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள கோவில்;
எது நடந்தாலும் கேட்க நாதியில்லாத அத்வானம்;
இங்கிருந்து முதலில் நாம் தப்பிக்க வேண்டும்...!’; எச்சரிக்கை
உணர்வால் உந்தப்பட்டாள் சாவித்திரி;
அச்சத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “எதுக்கு
மாமா அழைச்சேள்...?” என்று இயல்பாகக் கேட்டாள்.
“ஹி... ஹி... ஹி... ஹி...” என்று ஒரு மாதிரி அசிங்கமாய், கேவலமாய்
பல்லிளித்தான் சாரங்கன்;
சாரங்கனின் நடவடிக்கைகள் சாவித்திரிக்கு அருவருப்பைத்
கூட்டின.
‘இது போலச் சிக்கலான, சூழ்நிலைகளில்
பதட்டமே படக் கூடாது; (Fight or
Flight) எதிர்த்துப் போராடுதல், அல்லது
தப்பி ஓடுதல், இந்த இரண்டில் எது சாத்தியமோ அதைச் செய்யணும்...!’
பள்ளியில் மனநல ஆலோசகர் வரதராஜன், சொன்ன
அறிவுரை மனதில் பளிச்சிட்டது.
அச்சம் தவிர்த்தாள் சாவித்திரி.
சூழ்நிலையை எதிர்கொள்ளும் மிடுக்குடன் சாரங்கனைப்
பார்த்துக் கேட்டாள் சாவித்திரி.
“மாமா, என்னை
எதுக்கு அழைச்சேள்னு சொல்லுங்கோ...! நாழியாச்சு, நான்
வீட்டுக்குப் போகணும். அம்மா தேடுவா...!”
இப்போது, சாவித்திரியை விழுங்குவது போல, காமப்
பார்வை பார்த்தான் சாரங்கன்.
***
வராகப் பெருமாள் கோவிலுக்கு, தற்போதைய
பரம்பரை ட்ரஸ்டியாக இருப்பவன் சாரங்கன்;
இதற்கு முன்னால் ட்ரஸ்டியாக சேவை செய்த, மிராசு, ஸ்ரீமான்
லக்ஷ்மீ நரசிம்மன் அவரின் ஒரே மகன் சாரங்கன்.
லக்ஷ்மீ நரசிம்மன், ஒரு கடின
உழைப்பாளி;
எட்டுக் கண் விட்டெறியும் சாமர்த்தியம் உண்டு அவருக்கு;
அவருடைய நாவண்மை ஊர் உலகத்தில் மிகவும் பிரசித்தம்.
அவரது அப்பாவிற்குப் பின், கோவில்
நிர்வாகத்துக்கு, பரம்பரை ட்ரஸ்டியாக, பொறுப்பேற்றுக்
கொண்டார் லக்ஷ்மீ நரசிம்மன்.
முதல் காரியமாக, ஊர்ச்
சிறப்புகள், கோவில் சிறப்புகளை எல்லாம் திரட்டி, தன்
கைச்சரக்கையும் கலந்து கட்டி, அழகான புகைக்படங்களைச் சேர்த்து, தல-புராணப்
புத்தகம் வெளியிட்டார்;
புகழ் மாலைகள், பக்தித்
தோத்திரங்கள், என வராக மூர்த்தியின் பெருமைகளை, தாங்கிய
துண்டுப் பிரசுரங்களையும் அச்சிட்டு விநியோகித்தார்.
ஏதோ கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டும்
விநியோகித்ததாய் எண்ணிவிடாதீர்கள்.
கல்யாணம் காட்சி என்று லெக்ஷ்மீ நரசிம்மன் எங்கு போகும் போதும், கோவில்
புராணங்களையும், புகழ் மாலைகளையும் சுமந்துச் செல்வதும், பரவலாக
விநியோகிப்பதுமாக அதை வாழ்வின்அங்கமாக மாற்றிக் கொண்டார்.
வராகப் பெருமாளின் புகழ் பரப்புவதை தன் ஜீவிதக் கடமையாகவேக்
கொண்டிருந்தார் லக்ஷ்மீ நரசிம்மன்;
‘இரு சக்கர வாகனங்களுக்கும், நான்கு
சக்கர வாகனங்களுக்கும், வாகன பூஜை போட விசேஷமானத் தலம் இது’ என்றும்,
‘பன்றி உட்பட எந்தக் கால்நடைகளாலும் இடையூரே ஏற்படாமல்
காக்கும் தலம் இது ...!’ - என்றும்
பல்வேறு, குறிப்புகளையெல்லாம், நாளிதழ்களில்
பிரசுரித்தும்,
ரேடியோ, டெலிவிஷன் சேணல்கள் மூலம் ஒலி, ஒளிபரப்பியும், வராகப்
பெருமாள் கோவிலுக்குப் பிராபல்யத்தை ஏற்படுத்தினார்;
வராகப் பெருமாளின் சிறப்புகளையும் சக்திகளையும் ஊடகங்கள்
மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், அறிந்து
கொண்ட பிறகு, வெளி மாவட்டக்காரர்கள் கூட, தாங்கள்
புதிதாய் வாங்கும் இரும்புக் குதிரைகளுக்கும், கன ரக
வாகனங்களுக்கும் பூஜை போட, வராகப் பெருமாள் கோவிலைத் தேடி வந்தார்கள்.
“பிரபல ஜோதிடர்கள், பிரசன்னம் பார்ப்பவர்கள், நாடி ஜோதிடர் என எல்லோரும், தோஷப் பரிஹாரத்துக்கு வராகப் பெருமாள் கோவிலைப்
பரிந்துரைப்பதெல்லாம் கூட லக்ஷ்மீ நரசிம்மனின் கைங்கர்யம்தான்...!” – என்று கூட
ஊரில் பேச்சுண்டு.
தன் பேச்சில் ஒரு உயர்ந்த தன்மை இருப்பதாக எதிராளி
நினைக்கும் அளவுக்கு ‘பில்ட்டப்’ கொடுப்பார்.
பேச்சு சுவாரசியத்துக்காக, சில சமயம் நெய் வார்த்துப்
பேசும் யுக்தியும் உண்டு லக்ஷ்மீ நரசிம்மனிடம்.
***
எப்படியோ, கோவிலுக்கு பக்தர்களை வரவழைத்து,
வந்த பக்தர்களை சாதுர்யமாய் வளைத்து,
சேவார்த்திகளின் மனதைத் கரைத்து,
காசு பணம் திரட்டியும்,
மொத்தமாகப் பொறுப்புக் கட்டி, இந்த மண்டபம், இன்னன்னாரின்
நன்கொடை, இன்ன கோபுரம் இன்னார் புதுப்பித்தது, என்று கல்
வெட்டு வைத்து,
நீண்ட காலத்துக்குப்பின், வராகமூர்த்தி
கோவிலுக்கு ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்திக் காட்டிய
பெருமை லக்ஷ்மீ நரசிம்மனுக்கே சொந்தம்.
கருடவாகனம், சேஷ
வாகனம், கஜவாகனம், இப்படியாக அனுமன் வாகனம் வரை, பத்து
நாள் உற்சவத்துக்கும் ஸ்பான்ஸர் பிடித்து, படிச்சட்டத்துக்கு
தேக்கு மரமும், வாகனாதிகளுக்கு அத்தி மரமும் வாங்கி, வாகனம்
கட்டமைத்து, வண்ணம் தீட்டி, வித
விதமான வாகனங்களில் பெருமாளை எழுந்தருளப் பண்ணிய பெருமையும் லக்ஷ்மீ நரசிம்மனையே
சாரும்.
அடுத்தபடியாக, லக்ஷ்மீ
நரசிம்மனுடைய திட்டம், பெருமாளுக்கு ரதம் நிர்மாணிப்பதுதான்.
காலியாகக் கிடக்கும் ரத மண்டபத்தில், ரதத்தை
நிறுத்தி அழகு பார்க்க அவ்வளவு ஆசைப்பட்டார் அவர்.
ரதத்துக்குத் தேவையான சக்கரம், நுகத்தடி, குறுக்கு
நெடுக்கு விட்டங்கள், தூண், பெருமாளை ஏலச் செய்யும் தளம் இதற்கெல்லாம் இலுப்பைக்
கட்டைகளும்;
சுற்றுப் பக்க நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளுக்குத்
பர்மாத் தேக்கு பத்தைகளும்;
கூட்டு மேற் கூரைக்கு அத்தி மரங்களும் வாங்கி அடுக்கியும்
விட்டார்;
சக்கரப் பட்டை, அச்சு, இவைகளுக்கெல்லாம்
இரும்புப் பட்டைகளும், கம்பிகளும் தயார்;
நாள் - நட்சத்திரம் பார்த்து, தச்சர், கொல்லர்களை
வரச்சொல்லி, முறைப்படி பூஜை போட்டு, வேலை
துவங்க வேண்டியதுதான் பாக்கி.
‘மனித யத்தனத்தில் என்ன இருக்கிறது?
மனிஷன் ஒரு கணக்குப் போட்டால் பகவான் வேறு கணக்குப்
போடுவான் அல்லவா!’
‘இதுவரை லக்ஷ்மீ நரசிம்மன் தனக்குச் செய்த கைங்கர்யங்களே
எதேஷ்டம்...!’ - என்று பெருமாள் நினைத்துவிட்டாரோ என்னமோ?
திடீரென்று, நெஞ்சுவலி
என்று துடித்தார் லக்ஷ்மீ நரசிம்மன்.
வண்டி கட்டிக்கொண்டு, அவரை
மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள்.
போகிற வழியிலேயே, மாரடைப்பால்
நிமிஷமாய்ப் பரமபதம் சேர்த்துவிட்டார் லக்ஷ்மீ நரசிம்மன்.
***
லக்ஷ்மி நரசிம்மனுக்கு இன்னொரு முகமும் உண்டு.
ஆளுக்குத் தகுந்தாற்போல் இடக்குப் பேசுவதும்,
எடுத்தெறிந்துப் பேசி ஏளனம் செய்வதும்,
தரக்குறைவாகப் பேசி, அவமானப்
படுத்துவதும் அவருக்குக் கை வந்த கலை;
குறிப்பாக, கோவில் சிப்பந்திகளாகச் சேவை செய்யும், அர்ச்சகர், பரிசாரகர், பூக்கட்டி, தரைக்கூட்டி, மாலைக்
கட்டளை பாகவதர், வாத்தியக்காரர்கள், போன்ற
ஊழியர்களை, சகட்டு மேனிக்குப் பேசுவார் லக்ஷ்மீ நரசிம்மன்;
எல்லோரையுமே, கொத்தடிமைகளைப்
போலத்தான் நடத்துவார்;
குடியிருக்க, வாடகை
இல்லாமல் கோவில் நிர்வாகம் கொடுக்கும் ஓட்டை, ஓட்டு
வீட்டுக்காகவும்;
வயிறு கழுவ, இலவசமாகக்
கிடைக்கும் இரண்டு வேளை பட்டைச் சோற்றை மனதில் வைத்தும்;
சுய மரியாதையை விட்டுக் கொடுத்துக் கடந்துவிடுவார்கள்
சிப்பந்திகளும்.
பொதுச் சேவையிலும், பெருமாள்
சேவையிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, மிக
கவனமாகவும், தந்திரமாகவும் செயல்பட்டு கோவில் புகழை உயர்த்திய லக்ஷ்மீ
நரசிம்மன்,
தன் ஒரே குலக்கொழுந்தான சாரங்கனை முறையாகக் கவனிக்கத்
தவறிவிட்டார்.
விளைவு;
படிப்பும் இல்லாமல், பண்பாடும்
இல்லாமல், எந்த நல்ல நடத்தையுமே இல்லாத, இரண்டு
கால் மிருகமாகிவிட்டான் சாரங்கன்...
***
அப்பா லக்ஷ்மீ நரசிம்மனின் மறைவிற்குப் பின்னர், ஊர்
வழக்கப்படி, பரம்பரை ‘ட்ரஸ்டி’ யாக பொறுப்பு கொடுக்கப்பட்டது சாரங்கனுக்கு.
பெற்ற தகப்பனான, லெக்ஷ்மீ
நரசிம்மனுக்கு இருந்த நுண்ணறிவோ, நாலு பேரைக் கவிழ்க்கும் பேச்சு சாமர்த்தியமோ, நாவன்மையோ, கோவில்
முன்னேற்றத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட அக்கரையோ, நினைத்ததைச்
சாதிக்க. சொன்னதை நிறைவேற்ற அவருக்கு இருந்த மன உறுதியோ, அயராத
உடல் உழைப்போ, எதுவும் சாரங்கனுக்கு வசமாகவில்லை;
லெக்ஷ்மீ நரசிம்மனின் மறுபக்கமான, இடக்குப் பேச்சும், எடுத்தெறிதலும், வெகண்டைப்
பகடிளும், ‘ஜீன்’ வழியாக சாரங்கனுக்குள் இறங்கிவிட்டன.
உழைப்பில்லாமல் ஒருவனால் எப்படி உயர முடியும்...?
வெறும் கையால் எப்படி முழம் போட முடியும்...?
லெக்ஷ்மீ நரசிம்மனின் மறைவிற்குப் பின், ‘பெருங்காயம்
வைத்தப் பாண்டமாய்’ ஆகிப்போனான் சாரங்கன்.
‘மிராசு’ என்ற பெயர் மட்டும் சாரங்கனோடு ஒட்டிக் கொண்டது.
‘குந்தித் தின்றால் குன்றும் கரைந்துதானேப் போகும்.
***
நஞ்சை புஞ்சை, நிலம்
நீச்சு, தோட்டம் தொறவு, பசு காளை
....... எல்லாம் ஒவ்வொன்றாய் கை விட்டுப் போய்விட்டது.
அன்றாடச் செலவுகளுக்கு, பாத்திரம்
பண்டங்களை விற்கும் நிலைக்கு வந்துவிட்டது குடும்பம்.
ஆடிக்காற்றில், கரையான்
கொட்டுவதும், தேள் உதிர்வதும்;
நாலு தூறல் போட்டாலே, ஒழுகலுக்கு
ஆங்காங்கே பாத்திரம் வைக்கும் நிலையிலும்;
பராமறிப்பே இல்லாத, ஓட்டு
வீடு ஒன்றுதான் இப்போதைக்குச் சாரங்கனின் சொத்து.
***
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.
வாரிசு எப்படி, எந்த
நிலையில் இருந்தாலும், தாயைப் பொறுத்தவரை அதை சகித்துக் கொள்வதும், பெற்ற
மகனை எப்பாடு பட்டாவது, கௌரவமான இடத்தில் அமர்த்திவிட வேண்டும் என்று எண்ணுவதுதானே
இயல்பு.
அதே இயல்புதான் சாரங்கனின் அம்மாவிற்கும்.
இந்த ஒரே நினைவுதான் எப்போதும் அவள் மனசு முழுவதையும்
ஆக்ரமித்திருந்தது.
‘ஒரே வாரிசான சாரங்கனுக்கு, ஒரு கல்யாணத்தைப்
பண்ணி வைத்து, ஒருத்திக் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால், பெரிய்ய
பொறுப்புக் கழிந்துவிடும்...!’
என்ற ஒரே சிந்தனைதான் எப்போதும், பெற்றவளுக்கு...
வேலை வெட்டி ஏதும் இல்லாமல், நாலு கால்
மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு, ஓசியில் கோவிலில் தரும் பட்டைச் சோற்றைத் தின்று, வயிற்றை
நிரப்பியும், வெட்டித் தனமாக, அர்த்தமில்லாம், ஜம்பம்
பேசி போழுதைப் போக்கிக் கொண்டும் திரியும் சாரங்கனுக்கு யார்தான் பெண்
கொடுப்பார்கள்?
இரவும் பகலுமாக இதே யோசனையாக இருந்தவளுக்கு, ‘பளீர்’
என மின்னல் வெட்டுப் போல் ஒரு யோசனை வந்தது.
‘சுந்தரத்தின் ஒரே மகள் சாவித்திரி இருக்காளே...
அவளை சாரங்கனுக்குக் கட்டி வைத்து விட்டால்... பிரச்சனை
தீருமே...!’
‘திடீரென்று
தோன்றிய இந்த அபாரமான யோசனையை எப்படிச் செயல்படுத்துவது?’
என்பதைத் திட்டமிட்டு அதைச் செயல்படுத்தவும் தயாரானாள், சாரங்கனின்
தாயார் மரகதவல்லி.
***
அத்தியாயம் 22
ஐ டி கம்பெனி வேலையை ராஜினாமா செய்து நோட்டீஸ் கொடுத்த ஒரு
மாதத்திற்கெல்லாம், கம்பெனி, கஜா என்கிற கஜேந்திரனை பணியிலிருந்து விடுவித்துவிட்டது.
பி. எஃப் பணத்தை செட்டில் செய்து விட்டது.
அடுத்த நாளே, சென்னையில்
தான் தங்கியிருந்த பிரம்மச்சாரிகள் அறையைக் காலி செய்து விட்டு, சொந்தக்
கிராமத்திற்கே ஒரு வழியாக வந்து செட்டிலாகி விட்டான் கஜா.
பரோடா வங்கி, கல்யாணபுரம்
கிளையில், தன் பி எஃப் பணத்தை டெபாஸீட் செய்தான் கஜா.
வங்கி மேலாளரிடம் பேசி, சிறு
தொழில்களுக்கான கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தான்.
கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து, முறையாகப்
பெற்ற, இருப்பது ‘சொந்த இடம்தான்’ என்பதற்கு ஆதாரமான, பட்டா, சிட்டா, அடங்கல்
எல்லாவற்றையும் பார்த்து விட்டு, லோன் அளித்தது பரோடா வங்கி.
ஒரு நல்ல நாள் பார்த்து, காரேஜ்
அமைத்து, கார் மெக்கானிக் ஷாப் தொடங்கினான் கஜா.
ஐந்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் தரமான மெக்கானிக்
ஷாப் ஏதும் இல்லாததால், கஜாவின் கடை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
வேலையில் சுத்தம் இருந்ததாலும், சொன்ன
நேரத்துக்குப் பணியை முடித்துக் கொடுக்கும் நேர்மை இருந்த காரணத்தாலும், கஜாவைத்
தேடி வந்தார்கள் கஸ்டமர்கள்.
***
அத்தியாயம் 23
சுந்தா என்று எல்லோராலும் செல்லமாய் அழைக்கப்படுகிற
சுந்தரம், மிகப் பிரபல்யமான சரக்கு மாஸ்டர் என்பது தெரிந்தும், உரிமை
எடுத்துக் கொண்டு,
“கோவில் கைங்கர்யம் செய்ய முடியுமா சுந்தா?” என்று
ஒரு நாள் வீட்டுப் படியேறி வந்து சுந்தரத்தை கேட்டுக் கொண்டார் லெக்ஷ்மீ
நரசிம்மன்.
இறை பணி என்பதாலும், லெக்ஷ்மீ
நரசிம்மன் மேல் இருந்த மரியாதையின் பேரிலும், சரி என்று
ஒத்துக் கொண்டான் சுந்தரம்.
ப்ரும்ம முகூர்த்தத்திலேயே துயில் எழுந்து, குளித்துவிட்டு, மடியாய், வேட்டியைத்
தார் பாய்ச்சிக் கட்டிக் கொண்டு, கோவில் திருமடப்பள்ளியில் விறகு அடுப்பு மூட்டி, சமைத்து, நைவேத்தியத்துக்கும், விநியோகத்துக்குமாக, புளிப்பட்டை, தயிர்
பட்டை இரண்டும் அடித்து வைத்துவிட்டுத்தான் மற்ற தொழிலுக்குப் போவதை வழக்கமாகக்
கொண்டிருந்தான் சுந்தரம்.
இதை ஒரு சமூகப் பணியாகத்தான் செய்துவந்தானே தவிர, சுந்தரம்
கூலிக்காக அதைச் செய்யவில்லை. அதைச் செய்வதற்காக நயா பைசா நிர்வாகத்திடம்
வாங்கவும் இல்லை.
சுந்தரத்தின் தன்மானம், சுய
கௌரவத்தை விட்டுக் கொடுக்காத தன்மை, எல்லம்
தெரிந்துதான் அவனிடம் பழகி வந்தார் லக்ஷ்மீ நரசிம்மனும்.
லெக்ஷ்மீ நரசிம்மன் மறைவிற்குப் பின், ஊர் வழக்கப்படியும், கோவில் நிர்வாக வழிகாட்டல்களின் படியும்,
அவரின் ஒரே மகன்
சாரங்கன்தான் பரம்பரை ட்ரஸ்டி, என்று முடிவானதற்குப் பிறகு, கோவில்
மடப்பள்ளிச் சேவையை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டான் சுந்தரம்.
***
பெருமாளுக்குச் சில ஆண்டுகள் நைவேத்ய சேவை செய்த
சுந்தரத்தின் ஒரே மகளுக்கு, கடவுள் அனுக்ரஹம் எதேஷ்டமாய் இருந்தது.
பரிபூரணமாய்ச் சரஸ்வதிக் கடாக்ஷம் பெற்றிருந்தாள்
சாவித்திரி.
“சாவித்திரி மாதிரிப் படிக்கணும்...”;
“சாவித்திரி கையெழுத்து எப்படிக் கண்ல ஒத்திக்கறா மாதிரி
இருக்கு பாரு...!
தொடக்கப் பள்ளி முதல், மேல்
நிலைப் பள்ளி முடிய சாவித்திரியின் படிப்புத் திறமையை வியந்து பாராட்டாதவர்களே
இல்லை.
அரசு உதவி பெறும் ஆதீனம் மேல்நிலைப் பள்ளியில்தான்
படித்தாள்.
ஒவ்வோராண்டும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றுத் தேறினாள்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு சமயத்தில், சாவித்திரிக்கு
அம்மை போட்டுவிட, ஊன்றிப் படிக்க முடியாமலும், தேர்வு
நேரத்து ரிவிஷன் முறையாகச் செய்ய முடியாமலும் போக, மாவட்ட
அளவிலோ, மாநில அளவிலோ அவளால் சாதிக்க முடியவில்லை.
பத்தாவதில் விட்டதை ப்ளஸ் டூவில் பிடிக்க வேண்டும் என்ற
கனல் இருந்தது சாவித்திரியின் மனதில். தன்னுடைய வழிகாட்டியாக இருந்த கஜேந்திரன்
சொன்னதைப் போல, ‘ரேப்பர் டு ரேப்பர்’ பாடப் புத்தகங்களை, பொதுத்
தேர்வுக்கு முன், வைராக்யத்தோடு கடுமையாக உழைத்துப் படித்தாள்.
***
அப்பா சுந்தரம் இறந்த ஒரு வாரத்துக்கெல்லாம் சாவித்திரிக்கு
ப்ளஸ் 2 ரிஸல்ட் வந்தது.
நல்ல மதிப்பெண்கள் எடுத்து, மாவட்டத்தில்
முதலிடமும், மாநில அளவில் ஒன்பதாவது இடமும் பெற்றுத் தேறியிருந்தாள்
சாவித்திரி.
அப்பா சுந்தரம் உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம்
அவளை நீட் எழுதச் செய்து டாக்டருக்குத்தான் படிக்க வைத்திருப்பார்.
இப்போது அம்மாவின் நிலையை எண்ணி, ‘ஊருக்கு
அருகிலேயே இருக்கும், கேட்டரிங் கல்லூரி’யில் சேர்ந்து படிக்கத் தீர்மானித்திருந்தாள்
சாவித்திரி.
அதற்கு விண்ணப்பம் வாங்கவும், மேல்
செலவுக்கும் இருக்கட்டுமே என்றுதான், மகா
பெரியவா கேட்டரிங் உரிமையாளர், கணபதித் தாத்தாவிடம் கேட்டு, கல்யாண
வீட்டில் எச்சில் இலை எடுப்பதற்காக ஒத்துக் கொண்டாள் சாவித்திரி.
***
‘சாரங்கனுக்கு சாவித்திரியை விவாகம்
செய்துவைத்துவிடவேண்டும்...’ என்ற யோசனை சாரங்கனின் அம்மாவிற்கு வந்த அடுத்த கணம்,
‘நல்ல காரியத்தைத் தள்ளிப் போடவேக் கூடாது என்று’, உடனே, சாவித்திரியின்
அம்மா பருவதத்தைப் பார்க்கச் சென்றாள்.
‘கம்யூட்டர் வகுப்புக்குச் சென்ற சாவித்திரி, வகுப்பு
முடிந்து திரும்பி வரும் நேரமாயிற்றே...!’ என்ற எண்ணத்தில்,
வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வழிமேல்
விழி வைத்துக் காத்திருந்த பருவதம்,
தர்மகர்த்தா மாமி மரகதவல்லி, திடீரென்று, வீட்டுப்
படியேறி வந்து, “என்னடீ பருவதம்...? எப்படியிருக்கே...?” என்று விசாரித்தபடி, எதிர்
திண்ணையில் வந்து அமர்ந்தால் அதிர்ச்சியடையால் இருக்க முடியுமா என்ன?
பெருந்தனக்காரர்
வீட்டு எஜமானியம்மாள், தன் வீட்டுக் குத்துக்கால் மிதித்து வந்த சந்தோஷம்
பர்வதத்திற்கு. உணர்ச்சி வசப்பட்டாள் பருவதம்.
“வராதவா வந்திருக்கேள்...!
ஏதாவது தரணுமே...?
என்ன சாப்பிடறேள்...?
என்ன தரட்டும்...?
காபி...?
டீ...?
எலுமிச்சம்-பழ சர்பத்...?
சொல்லுங்கோ மாமி...!” - பரபரத்தாள் பருவதம்.
“எதுவும் வாண்டாம்.” முழுமையாய் மறுத்தாள் மரகதவல்லி.
“நான் சொல்ல வந்ததைச் சொல்ல விட்டாலே போறும் பருவதம்...!”
என்று, உரிமையாய் ஒரு அதட்டல் போட்டு, சுற்றி
வளைக்காமல் விஷயத்துக்கு வந்தாள் மரகதவல்லி.
***
“அடியே பருவத்து, நான்
உன்னைத் தேடி எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா?”
“சொல்லுங்கோ
மாமி... நீங்க சொல்லி அனுப்பியிருந்தா நானே உங்களை வந்து வீட்ல பாத்திருப்பேனே
மாமி...” ஏதோ தப்பு நடந்துவிட்டதைப் போல் பேசினாள் சாவித்திரி.
பருவதம், நமக்குள்ள என்ன, நாம
ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப்போறோம். உன் மகள் சாவித்திரியை என் மகன் சாரங்கனுக்குச்
சம்பந்தம் பேசத்தான் நானே வீடு தேடி வந்திருக்கேன்...!”
சிதறுகாய்ப் போல ‘படார்...!’ என்று விஷயத்தை உடைத்தாள்
மரகதவல்லி.
இதைக் கனவிலும் எதிர்பார்க்காத சாவித்திரியின்
அம்மாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது; படபடத்து
வந்தது;
“கொழந்தை படிசிண்டுன்னா இருக்கா...! அவளுக்குப்போயி...!”.
தயங்கம் காட்டினாள் பருவதம்.
***
“பொம்மனாட்டிக் கொழந்தைக்கு எதுக்குடீ படிப்பு;
சொல்றதக் கவனமாக் கேளு...!
நீ என்னத்தைப் பெரிசாப் படிச்சிப்பிட்டே....;
அந்த கணபதி மூலமா, உனக்கு
லக்கி ப்ரைஸ் அடிச்சிது, சுந்தரத்தை கட்டிண்டு கொழிச்சே நீ...;
இப்போ என் மூலமா உன் மகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கறது;
என்னோட ஒத்தை மகன் சாரங்கனுக்கு, என்னடீ கொறைச்சல்.
சொல்லு;
ஆஸ்திக்கு ஒரே மகன்; உன் மக
சாவித்திரிதான் எல்லாத்தையும் ஆண்டு அனுபவிக்கப் போறா.”
பருவதத்தை சிந்திக்கவே விடாமல், தொடர்ந்து
பேசிக் கொண்டே இருந்தாள் மரகதவல்லி.
என்னென்னவோச் சொன்னாள், சொன்னதையே
திரும்பத் திரும்பச் சொல்லிக் குழப்பி, பருவதத்தின்
மனதைத் கரைத்தாள் சாரங்கனின் தாய்.
ஒரு வேளைச் சோற்றுக்கேத் தாளம் போடும் நிலையில் இருந்த
சாவித்திரியின் அம்மா பருவதம், கிடைக்க வொண்ணாத பெரிய அதிர்ஷ்டம் தன் வீட்டுக் கதவை
தட்டிவிட்டதாக இறுமாந்துவிட,
சாவித்திரியைச் சாரங்கனுக்குக் கொடுக்க வாய்மொழிச் சம்மதம்
தெரிவித்து விட்டாள் பருவதம்.
***
அப்பாவின் மறைவிற்குப் பின் பரம்பரை ட்ரஸ்டியாக நியமனம்
ஆனச் சாரங்கனுக்கு படிப்பறிவு, பட்டறிவு எதுவும் இல்லாத துர்பாக்கியமான நிலையில், படாதப்
பாடுப் பட்டது ட்ரஸ்ட்.
தொடக்கத்தில் சாரங்கனின் பேச்சு, நடவடிக்கைகளுக்கு
எதிர்ப்புத் தெரிவித்துப் பார்த்தார்கள் ட்ரஸ்ட் உறுப்பினர்கள்.
எந்த அடிப்படையும் இல்லாமல், முட்டாள்
தனமாகப் பேசுவதும், நடந்து கொள்வதுமே வாடிக்கையாக இருந்த சாரங்கனிடம் பேசுவது
‘பிரப்பங் கூடையில் ஆற்று நீரைப் பிடித்து நிறுத்துவதுப் போல’ என்பதை ஒரு
கட்டத்தில் தெளிவாக உணர்ந்தார்கள்;
தலையெழுத்தை நொந்தபடி,
‘சரி சரி’ என்று சாரங்கன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்
கொண்டும், அவனின் தத்து பித்துச் செயல்பாடுகளை பொறுத்தும் போனார்கள்
காரியக் கமிட்டியினர்.
‘கும்பியில் கல்லெறிய வேண்டாம்...!’ என்று விலகிச்
செல்லுவதைப் பார்த்து, ‘தனக்குப் பயப்படுகிறார்கள்...!’ என்று தப்புக் கணக்குப்
போட்டான் சாரங்கன்.
கமிட்டி மெம்பர்களை கூட்டி, இஷ்டத்துக்குப்
பேசினான்.
“திருமஞ்சனம், பூஜையெல்லாம்
முடிந்து, தீபாராதனை ஆனதும், ஒவ்வொரு
நாளும், முக்காலமும், முதல்
மரியாதை பரம்பரை ட்ரஸ்டியான தனக்குத்தான்...!”
“தனக்குப் பரிவட்டம் கட்டிச், சடாரி
சார்த்தி, பிரசாதம் தந்த பின்தான் சேவார்த்திகளுக்குத்
தரவேண்டும்...!”
என்றெல்லாம் அர்த்தமில்லாமல் வாய்க்கு வந்தபடி உத்தரவு
போட்டான் சாரங்கன் பதவி ஏற்றவுடன்;
“இதெல்லாம் நித்தியப்படிப் பூஜையில் சாத்தியமில்லை.
திருவிழா நாட்களில்தான் சாத்தியம்...!”
என்றெல்லாம், நடைமுறை
சாத்தியக் கூறுகளைச் சொல்லிப் பார்த்து ஓய்ந்து போனார்கள் கமிட்டி உறுப்பினர்கள்.
வடிகட்டின முட்டாளோடு மல்லுக்கு நிற்பதை விட,
“சரி அப்படியே ஆகட்டும்.!” என்று ஒத்துக் கொண்டார்கள்.
வேறு வழி?
***
முதல் மரியாதைக்காக உரிமைக் கோரினானேவொழிய, ஒரு நாள்
கூட, நிர்மால்ய பூஜைக்கோ, உச்சி கால
திருமஞ்சனத்திற்கோ, அர்த்த-ஜாம சேவைக்கோ சரியான நேரத்தில் வரவில்லை சாரங்கன்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த, ‘சேவார்த்திகள்’
ஒன்றுகூடி சாரங்கனைச் சுற்றி வளைத்துப் பிரச்சனை செய்துவிட்டார்கள்.
என்ன இருந்தாலும் ‘ட்ரஸ்டி’ என்ற பதவியை, பொதுவில், சேவார்த்திகளுக்கு
நடுவில் விட்டுக் கொடுக்க முடியாதல்லவா...! அதனால்
சில பல நடைமுறைகளை மாற்றி அமைத்தார்கள்.
திருமஞ்சனம் ஆனதும், முதல் பிரசாதத்தைத்
எடுத்து வைத்துவிடவேண்டும். சாரங்கன் எப்போது வருகிறானோ, அப்போது
பரிவட்டம் கட்டி மரியாதை செய்ய வேண்டும்’ என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.
அதன்படி எப்போது, எந்த
நேரத்தில் வந்தாலும், சாரங்கன் தலையில் பரிவட்டம் கட்டி, சடாரி
சாற்றி, தீர்த்தம், திருத்துழாய், மஞ்சள்
காப்பெல்லாம் சாதித்து, அவனுக்காக எடுத்து வைத்தப் ப்ரஸாதத்தை அவன் கையில் தருவதை
வழக்கமாகக் கொண்டார் பட்டாச்சாரியார்.
***
புளி மற்றும் தயிர்ப் பட்டைச் சோற்றை, தோளில்
கிடக்கும் காசித் துண்டு விரித்து வாங்கிக்கொண்டு நாலுகால் மண்டபத்தில் வந்து உட்காருவான்
சாரங்கன்.
மிளகாய், கறிவேற்பிலை, புளிக்கோது, துளசிக்
காம்பு, மிளகு, இஞ்சி,
...................
இப்படி கைக்கு அகப்படும் துரும்புகளை மண்டபத்தின்
நாலாபுறமும் தூக்கி வீசுவான்.
வாயில் மாட்டுகிற மிளகாய், தேங்காய்
நார், புளிக் கோது, மிளகு, துளசிக்
காம்பு, போன்றவற்றை, ‘தூ...!
தூ...!!’ என எங்கு பார்த்தாலும் துப்புவான்.
ஒரு சில நாட்கள், அத்தி
பூத்தாற்போல, பிரசாதச் சோற்றுடன் வீட்டிற்குக் போவான். பெற்ற தாயோடு
பகிர்ந்து சாப்பிடுவான்.
இது போன்ற சில நாள்களில் மட்டும் சாரங்கனின் துப்பலில்
இருந்து நாலு கால் மண்டபம் தப்பிக்கும்.
***
உள்ளூர்காரர்களுக்கு சாரங்கனின் ‘கல்யாண குணங்கள்’
அனைத்தும் தெரியும் என்பதால், அவனைத் தந்திரமாய்த் தவிர்த்து விடுவார்கள், சிக்கினாலும்
கழுவும் பழத்தில், நழுவும் பழமாய், கடந்து
சென்று விடுவார்கள்.
தப்பித் தவறி, அவனிடம்
வசமாக மாட்டிக் கொண்டு விட்டால்,
‘நீ சொன்னாச் சரியாத்தான் இருக்கும் சாரங்கா?” என்ற
வகையில் முகஸ்துதி சொல்லித் தப்பிவிடுவார்கள்.
சாரங்கனைப் பற்றித் தெரியாத, வெளியூர்வாசி
எவரேனும் அகப்பட்டுக் கொண்டாலோ அவ்வளவுதான்.
சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசியே அவர்களை நோகடித்து
விடுவான்.
பேசுவதற்கு எவரும் மாட்டவில்லையென்றால்,
மண்டபத்தின் இரு மருங்கிலும், சாலையை
ஒட்டி, ஓங்கி வீசி வளர்ந்து கிளைகளை விரித்து நிழல் பரப்பி
நிற்கும் அரசமரத்து நிழலையும்,
“விர்... விர்...” என்று வீசும், குளிர்ந்த
இயற்கைக் காற்றையும் அனுபவித்தபடி,
நடு வீதி நாலு கால் மண்டபத்தில், உண்ட
களைப்பு தீர, குரட்டை விட்டபடி, பகல்
தூக்கம் போடுவான் சாரங்கன்.
***
நாலு கால் மண்டபத்தில், தொடை வரை
வேட்டியை இழுத்து விட்டபடி, கேவலமாக அமர்ந்து கொண்டு,
தன்னைக் காலித் தனமாகப் பார்க்கும் சாரங்கனை பல்லைக்
கடித்துக் கொண்டு, முறைத்தாள் சாவித்திரி.
“சாவீ...!; என் செல்லம்...!;
வா... வா... வா... வா...! வந்து ஒக்காரு...!”
தன் தொடையைத் தட்டி உட்கார இடம் காட்டினான் சாரங்கன்.
சாரங்கனின் கீழ்த்தரமான நோக்கம், கேவலமான
உடல்மொழி, கண்ணியமற்ற அழைப்பு, பொறுக்கித்தனமான
இளிப்பு அனைத்தையும் பார்த்த சாவித்திரிக்குக் கோபம் உச்சந்தலைக்கு ஏறியது.
கஷ்டப்பட்டு, கோபத்தை
அடக்கிக் கொண்டாள்.
தன் குடும்ப நிலையை ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள்.
‘நாம் ஏழை; ஆண் துணை இல்லாத வீடு நம்முடையது;
இங்கே சாட்சிக்குக் கூட யாருமில்லை...!
‘நாளைக்கு, ‘நான் எதுவும் பேசவில்லையே...!’
என்று தப்பித்து விடுவான் இந்தக் கிராதகன்.
ஏழையான நமக்காக எவரும் பேச மாட்டார்கள்...!’ இப்படியாக, யதார்த்தத்தை
நன்கு உணர்ந்த சாவித்திரி சுதாரித்தாள்.
‘அவசர கதியில் தவறாக முடிவெடுத்துவிட்டு, பின்னால்
வருத்தப்படக் கூடாது...!’
சூதானமாக யோசித்தாள் சாவித்திரி.
***
‘இது போன்ற இக்கட்டான நேரங்களில் வாக்குவாதம் செய்வதை விட, ஓடிப்
போய்விடுதலே புத்திசாலித்தனம்...!’
என்கிற அணுகு முறையை அறிந்திருந்த சாவித்திரி, தப்பிக்க
ஆயத்தமானாள்.
“ஒக்காரு’ன்னு சொல்றேன்ல்ல...!” என்றான் மீண்டும் தொடையைத்
தட்டியபடி,
முதலில், இளித்துப் பேசியச் சாரங்கனின் குரல் இப்போது. இடிப்போல
உருமாறியிருந்தது;
ஆங்காரம் மிகுந்து அதிகாரமாய் ஒலித்தது;
‘நரநர’ என்று பற்களைக் கடித்தான்;
கண்களில் தீப்பொறிப் பறந்தது;
“ஹூ...ம்...! ஹூ...ம்...!”- என்று உறுமினான் சாரங்கன்.
***
“நாயக் குளிப்பாட்டி நடு வீட்ல வச்சா...’ ன்னு சொல்வாங்க.
அது சரியாத்தான் இருக்கு...!
பொறிந்தான்.
‘வௌக்குமாத்துக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்ட’, ஆசைப்பட்டாளே
என் அம்மா, அவளைச் சொல்லணும்...!”
புலம்பினான், பொறுமினான்.
‘தன்னை அழைத்து எதிரில் நிற்க வைத்து, ஏன்
இப்படியெல்லாம் பேசுகிறான் இந்தச் சாரங்கன்?’
குழம்பினாள் சாவித்திரி.
“நான்தான்டீ உன்னோட புருஷன்...!” கர்ஜித்தான் சாரங்கன்.
சாவித்திரிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
“வா! வாடீ! வந்து ஒக்காருடீ;
புடிச்சி விட்ரீ என் காலை!” பிதற்றினான் சாரங்கன்.
தலைதெறிக்க அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடினாள் சாவித்திரி.
***
சாவித்திரி ஓடுவதைக் கண்டதும்,
கேவலமாய் இளித்தவாறு, மண்டபத்திலிருந்து
‘பொத்’ என்று தாவி இறங்கினான் சாரங்கன்.
மூர்க்கமாய் சாவித்திரியை விரட்டிக்கொண்டு ஓடினான்.
பருவப் பெண்ணின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்
மூச்சிறைக்க நின்றுவிட்டான் சாரங்கன்.
“ஏமாத்திட்டா ஓடுறே? அடுத்த
முகூர்த்தத்துலயே உன் கழுத்துல தாலிய கட்றேன். அப்பறம் வெச்சுக்கறேன்.!”
இயலாமையை சூளுரையால் மறைத்தான்.
ஆத்திரமும், ஆங்காரமும்
உந்தித் தள்ள,
தற்போது நடந்த சேதிகளையெல்லாம் சொல்லித் தீர்வு காண,
தன் ‘கூட்டுக் களவாணி’ யான பெற்ற தாயைத் தேடி ஓட்டமும்
நடையுமாகப் போனான் சாரங்கன்.
***
சாரங்கன் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டதை அம்மாவிடம்
சொல்லி ஆற்றிக் கொள்ள, ஆத்திரத்துடனும் அவமானத்துடனும் வீட்டுக்கு விரைந்தாள்
சாவித்திரி.
சாரங்கனின் பொறுக்கித்தனத்தை, ஆத்திரத்துடன்
விலாவாரியாகத் தன் தாய், பருவதத்திடம் சொல்லி அழுதாள் சாவித்திரி.
எல்லாவற்றையும் காதில் வாங்கிய பின்,
“சாவி என்னை மன்னிச்சிடு...” என்று கதறி, சாவித்திரியை
அணைத்துக் கொண்டு அழுதாள் பெற்றவள்.
சாவித்திரிக்கு எதுவும் புரியவில்லை.
அழுகையினூடே,
சாரங்கனின் அம்மா வீட்டுக்கு வந்தது,
சாவித்திரிக்குச் சாரங்கனை கல்யாணம் செய்து வைக்கக் கேட்டது,
தான் சம்மதித்த விஷம எல்லாவற்றையும் பருவதம் சொல்ல,
அதிர்ந்தாள் சாவித்திரி.
***
சாரங்கனின் வெளிப்படையான நடவடிக்கைகளுக்குக் காரணம் இப்போது
தெளிவாகத் தெரிந்தது சாவித்திரிக்கு.
குற்ற உணர்வோடு, கூசி நின்ற
தாயைப் பார்த்தாள் சாவித்திரி,
“நான் உனக்குப் பாரமாத் தெரியறேனாம்மா?”
சுருக்’கெனக் கேட்டாள் சாவித்திரி.
“என்னடீ இப்படிக் கேக்கறே சாவி...? பெத்த
மகளை யாராவது பாரமா நினைப்பாளா...?”
“சட்டப்படியும், தர்மப்படியும், நியாயப்படியும்
எந்த விதத்துலயும் பொருந்தாத இந்தக் கல்யாணத்துக்கு எப்படிம்மா நீ சம்மதிச்சே...?
“...................................”
பதில் பேச முடியாமல் கூனிக் குறுகி நின்றாள் பர்வதம்.
“அம்மா, நான் மேலே மேலே நிறைய படிக்கணும்னு ஆசைப்படறது உனக்குத் தெரியுமோன்னோ...?”
“தெரியும்டீ
சாவி...!;
நம்ம ஏழ்மையை நினைச்சி, புத்தித்
தடுமாறி இப்படி வாக்குக் கொடுத்துட்டேன்...!”
தழு தழுத்தாள் அம்மா.
***
பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், மாநில
அளவில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றதற்காக, மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, கலெக்டர் கையால் மெடலும் சான்றிதழும் வாங்கிய சாவித்திரி;
அவள் படித்த ஆதீனப் பள்ளி நுழைவாயிலில் வைக்கப்பட்ட, ‘ஃப்ளக்ஸ்’ஸில், வெற்றிக்
கோப்பையுடன், மலர்ந்து சிரிக்கும் சாவித்திரி;
பல தினசரிகளில் மாநில அளவில் முதலிடம் என்ற தலைப்புச்
செய்தியில் கலெக்டரிடம் பரிசு வாங்கிய க்ளிப்பிங் உடன், உலகெங்கும்
சின்னத் திரையில் ஒளிர்ந்த சாவித்திரி;
‘வாக்ஸ் பாப்’ எனும், பொது
வெளியில் எடுக்கப்பட்ட பேட்டியின் மூலம் சின்னத் திரைகளில் பிரபலமான சாவித்திரி.
இப்போது, அறியாமையின் காரணமாக, அசட்டுத்
தனமான, அம்மாவின் சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளால், சற்றே
கலங்கினாள் சாவித்திரி.
***
அத்தியாயம் 24
சாவித்திரியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத சாரங்கன், தன்
அம்மாவிம் முன் நின்று, தாறு மாறாகக் கத்தினான்.
‘அசட்டுக்கு அகங்காரம் வந்தாற் போல’ என்பதற்கு சாரங்கனின்
வாய் மொழியும், உடல் மொழியும் உதாரணமாக இருந்தன.
ஆத்திரம் உந்தித் தள்ள, தாயும், மகனுமாக
சாவித்திரியின் வீட்டுக்கு வந்தார்கள்.
“அடுப்படீல கெடந்து, புருஷனுக்கும்
மாமியாருக்கும் சமைச்சிப் போட்டுண்டு காலத்தை ஓட்டற, கிராமத்து
மிராசு பொண்டாட்டியா வாழ உன் மகளுக்குக் கசக்குதோ?”
கேள்வியே மிகவும் காட்டமாக இருந்தது.
நடுங்கிக் கொண்டு நின்றாள் பருவதம்.
கொடுத்த வாக்கைக் காப்பாத்தத் துப்பில்லாத நீயெல்லாம் ஒரு
பொம்பளையா...! த்தூ... மானங்கெட்ட ஜென்மம்... இப்பவே இந்த நிமிஷமே வீட்டைக் காலி
பண்ணிண்டு ஓடிப் போயிடு...”
பருவதத்தை ஏகமாய் மிரட்டினாள் சாரங்கனின் அம்மா.
***
“ஏய்... சாவி... உன்னை மேலேப் படிக்க விடமாட்டேண்டீ...!”
சூளுரைத்தான் சாரங்கன்.
“இப்பவே உன் கழுத்துல தாலி கட்டி தெருவுல இழுத்துப் போகட்டா, பாக்கறியா?”
மிரட்டினான்.
“என் மகனைக் கல்யாணம் பண்ணிண்டா, அவன்
பேர்ல இருக்கற வீடு, காணி, தோப்பு எல்லாத்தையும் உன் பேர்ல எழுதி ரிஜிஸ்தர் பண்ணிடறேன்
சாவித்திரி. நீ காலம் காலமா உழைச்சிச் சம்பாரிச்சாலும், இவ்ளோ
சொத்து வாங்க முடியாது, புரியறதா?”
இப்படியெல்லாம், மாற்றி
மாற்றி, ‘சாம... தான... பேத... தண்டம்...’ என்று, எல்லா
வகையிலும் மனதைக் கலைக்க முயற்சிச் செய்தார்கள் சாரங்கனும், அவன்
அம்மாவும்.
எதற்கும் மசியவில்லை சாவித்திரியும், பருவதமும்.
மௌனப் புரட்சி செய்து, பேசாத
வார்த்தைக்கு வலிமை அதிகம் என்பதை நிரூபித்தார்கள் தாயும் மகளும்.
குடியிருக்கும் ‘கோவில்-வீட்டை’, மறுநாள்
பொழுது விடிவதற்குள் காலி செய்யவேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்கள் சாரங்கனும்
அவன் தாயும்.
‘கொடிது கொடிது...! வறுமை கொடிது...!!
அதனினும் கொடிது இளமையில் வறுமை...!!!’
***
செய்தி கிராமம் பூராவும் வைரலாகப் பரவிவிட்டது.
செய்தியறிந்த சாவித்திரியின் பள்ளி ஆசிரியர்கள் சிலர்
உடனடியாக வந்து விட்டார்கள்.
மன உறுதியோடும், சாதிக்க
வேண்டும் என்ற வேட்கையோடும் இருந்த சாவித்திரியிடம்,
“வெறும் சக்தி மட்டும் போதாது சாவித்திரி. சாதுர்யமும்
வேண்டும்...!” என்றெல்லாம் அறிவுரைகள் சொன்னார்கள்.
கல்வி உதவிகளுக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்கள்.
***
செய்தி அறிந்து, உடனே
வந்துவிட்டார் கணபதி.
“பருவதம், போன் பண்ணிச் சொல்லியிருக்கேன். உனக்கு நல்லது நடக்கும்.
இது போல சந்தர்ப்பங்கள் வரும்போதுதான் தைரியமா இருக்கணும்...” என்றெல்லாம் சொல்லி
அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொடுத்தார் கணபதி.
ஒரு அறக்கட்டளையின் விலாசமும், கைப்பேசி
எண்ணும் கொடுத்து, இரவோடு இரவாக, அவர்களை
சென்னைக்கு அனுப்பி வைத்தார் கணபதி.
சென்னையில் ஒரு அறக்கட்டளை நடத்தும் தர்ம ஸ்தாபனத்தில், சமையலர்
வேலையை ஒப்புக் கொண்டாள் பருவதம்.
அந்தத் தர்ம ஸ்தாபனத்திலேயே தங்கிக் கொள்ள சாவித்திரிக்கும்
அனுமதி கொடுத்தார், ஸ்தாபன மேலாளர்.
அருகாமை அரசுக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம்
சேர்ந்து, படிப்பைத் தொடர்ந்தாள் சாவித்திரி.
அரிமா சங்கம், ரோட்டரி
சங்கம், ஜூனியர் சேம்பர்..., போன்ற
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அவ்வப்போது சாவித்திரிக்குத் தேவையான கல்வி, மற்றும்
பொருளாதார உதவிகளைச் செய்தன.
***
உயரவேண்டும் என்ற பற்றி எரியும் குறிக்கோளின் கொதிப்பாலும், அதீதமான
ஆர்வத்தாலும், தன்னை நொடிக்கு நொடி
‘அப்டேட்’ செய்து கொண்டு, உயர்ந்து கொண்டே இருந்தாள் சாவித்திரி.
கல்லூரி நிர்வாகம் நடத்திக் கொண்டிருந்த, சிவில்
சர்வீஸ் பயிற்சியிலும் இணைந்து, பிரகாசித்தாள் சாவித்திரி.
பள்ளி நாட்களிலிருந்தே, சிவில்
சர்வீஸ் கோச்சிங் செண்டர்களில் சேர்ந்து
படித்து, பல வருடங்களாகப் பயிற்சி செய்தும், தரம்
உயராமல் இருக்கும் சில மெல்லக் கற்கும் மாணவர்கள், சாவித்திரியின்
மேல், காழ்ப்புணர்வைக் கொட்டினார்கள்.
இதுபோன்ற பிற்போக்கு ஆசாமிகளின் மூலம் சாவித்திரியின்
வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகள் வந்தபடியிருந்தன.
கல்லூரியில் ஆண்டு விழா அறிவிக்கப் பட்டது.
தனியார் கல்லூரி என்பதால், நிர்வாகம்
நிறைய செலவு செய்து, தோரண வாயில்களும், அலங்காரங்களும்
செய்து அசத்தின.
***
“பலமுள்ளவர்கள்
வாழ்க்கையில் ஜெயிப்பதில் எந்த அதிசயமும் இல்லை.
அப்பாவிகளும், ஏழைகளும்
வெற்றி பெற புத்திசாலித்தனமும், தந்திரமும் தேவைப்படுகின்றன;”
கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய பேச்சாளரின் இந்தக் கருத்தை
மனதில் ஏற்றினாள் சாவித்திரி.
அனைத்து முட்டுக்கட்டைகளையும் புத்திசாலித்தனத்தோடு, சாமர்த்தியமாகச்
சமாளித்தாள்.
‘மனதில் உறுதியுடனும், ஏகாக்கிர
சிந்தனையுடனும், கடுமையாக உழைத்துப் படித்தாள்.
சாவித்திரியின் ஆர்வத்திற்குத் தீனிப் போட்டார்கள்
கல்லூரிப் பேராசிரியர்கள்.
பாவேந்தர் பாரதிதாசன் மொழிந்ததைப் போல;
‘அறிவை விரிவு செய்தாள்; அகண்டமாக்கினாள்.’
To Strive, To Seek. To Find … Not to Yield. என்ற ட்டி எஸ் எலியட்’ன் வழிகாட்டலை வேதவாக்காக ஏற்றாள்.
எலியட் சொல்வதைப் போல் எதிலும் சிக்கிக் கொள்ளாமலும், எதையும்
தன் மேல் சிக்க விடாமலும் தன் தேடலைத் தொடர்ந்தாள்.
***
ஓய்வுக்கு முற்றிலும் ஓய்வு கொடுத்தாள்.
கல்லூரி நூலகமும், பொது
நூலகமும் அவளுக்கு நேசமாகின.
வாசிப்பே சுவாசம் ஆனது.
பொது நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்
செய்யும்போது, சில பணக்கார மாணவர்களிடமிருந்து சாவித்திரிக்கு காதல்
ப்ரோபஸல்கள் வந்தன.
‘இப்படிப் பட்ட இளைஞர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும், என்ற ‘ஆண்
நிர்வாகம்’ அறிந்த சாவித்திரி, அவர்களையெல்லாம், நண்பராய்
உருமாற்றினாள்.
‘பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை...’
என்ற பாடலை செல்ஃபோனில் ரிங்டோனாக வைத்தாள்.
கவனச் சிதறலுக்கு அறவே இடம் கொடுக்காமல் உண்மையாக
உழைத்தாள்.
பறவையின் நெற்றி ஒன்றே குறிக்கோளாய்த் தெரிந்த அர்ச்சுனன்
போல தன் இலக்கை மட்டுமே சிந்தித்தாள்.
அப்துல் கலாம் சொன்னதைப் போலக் கனவு கண்டாள்.
முயற்சி திருவினையாக்கியது.
மெய் வருத்த, கூலி
கிடைத்தது.
கனவு மெய்ப்பட்டது சாவித்திரிக்கு.
***
சைரன் ஒலித்தபடி,
‘மாவட்ட ஆட்சியர்’ எனப் பொன்னிறத்தில் ஒளிர்ந்த அரசின்
இலச்சினை பொறுத்தப்பட்ட கார்,
வராகப் பெருமாள் கோவில் வளாகத்துக்கு முன் வந்து நின்றது.
‘வாகன பூஜைக்காக வந்திருக்கேளா?”
காரை நெருங்கினார் பட்டாச்சாரியார்.
டவாலி காரை விட்டு இறங்கினார்.
“நம்ம மாவட்ட கலெக்டர்,
தரிசனத்துக்காக வந்திருக்காங்க...!” என்றார் டவாலி.
கலெக்டர் என்றதும், அவரமாய்
உள்ளே ஓடினார் பட்டாச்சாரியார்.
மங்கல வாத்தியங்கள் முழங்க,
பிரபந்தம் சொல்லிக்கொண்டே பிரபந்த கோஷ்டியினர் வர, பூர்ண
கும்பத்துடன் கலெக்டர் முன் வந்தார் பட்டாச்சாரியார்.
***
இதே வராகப் பெருமாள் கோவிலில் சிறிது காலம் சமையலராக சேவை
செய்து, பத்து ஆண்டுகளுக்கு முன் பரமபதம் அடைந்த, சுந்தா
என்கிற சுந்தரத்தின் ஒரே மகள், சாவித்திரி
இன்று, இதே மாவட்டத்திற்கு ஆட்சியர்.
பூர்ண கும்பத்தைத் தொட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அனிச்சையாக மாவட்ட ஆட்சியர் சாவித்திரியின் கண்கள், கோவில்
முன் நிற்கும் அந்த கம்பீரமான நாலுகால் மண்டபத்தைப் பார்த்தன.
கரளையும் உருளையுமாக,
களையிழந்த முகத்துடன்,
பட்டைச் சோற்றுத் தட்டை மடியில் வைத்துக்கொண்டு,
வாயில் மாட்டிய புளிக் கோதை,
“த்தூ... தூ...” என்று துப்பியபடி,
பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே கோலத்தில்,
இரை தின்றபடி யிருந்தான் சாரங்கன்.
‘தேடிச் சோறு நிதம் தின்று...!’ என்ற,
பாரதியின் பாடல் வரிகள் மாவட்ட ஆட்சியர் சாவித்திரியின்
நினைவில் வந்து போயிற்று.
***
அத்தியாயம் 25
வராகப் பெருமாள் தரிசனம் முடிந்தவுடன், ஆட்சியர்
அலுவலகம் திரும்புகிறது கார்.
“தஞ்சாவூர் ரோடு வேண்டாம், கல்லணை
ரூட்ல போங்க...” என்றார் சாவித்திரி.
செட்டி மண்டபம் தாண்டி, கருப்பூர்
பை பாஸ் சாலையில் வந்து, சந்தனாள்புரத்தில் வலது புறம் திரும்பி, மணஞ்சேரி, திருவியலூர், வேப்பத்தூர்
எனக் கடத்து,
சாலை ஓரத்திலேயே இருந்து அருள் பாலிக்கும், ‘இடம்
கொடுத்த ஈஸ்வரன்’ என்று ஊர் வழக்கில், சொல்லப்படும்
‘காசி விஸ்வநாதர் கோவில்’ திருப்பத்தில் திரும்பியது கார்.
“கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க...” என்றார் ஆட்சியர்.
சாவித்திரியின் கண்கள் அனிச்சையாய் அந்த இடத்தை நோக்கின.
“கார் நிறுத்துங்க...!” என்றாள் சாவித்திரி.
***
கார் கண்ணாடியை இறக்கிப் பார்த்தாள்.
சாவித்திரி பள்ளிக் கல்வி படித்த காலத்தில்,
‘ராசையாக் கொல்லுப் பட்டறை’ இருந்த இடமேதான் அது.
இப்போது, ‘ராசையா, கார் மெக்கானிக் ஷாப்’
பெயர் பலகையைப் பார்த்தார் கலெக்டர் சாவித்திரி.
உரிமை - ‘கஜேந்திரன்’, என்றப்
பெயரைக் கண்டதும்,
“ப்ளீஸ் கெட் இன்...” என்றாள் சாவித்திரி.
***
‘காரேஜ்’ உள்ளே வந்து நின்றது கலெக்ட்டரின் கார்,
காருக்கு அடியில் மல்லார்ந்து படுத்தபடி ரிப்பேர் செய்து
கொண்டிருந்த கஜா,
கலெக்டரின் கார் தன் பட்டரைக்குள் வந்து நிற்பதைப்
பார்த்தான்.
“கார் பிரேக் டௌனா...?”
டிரைவரைக் கேட்டுக் கொண்டே வந்தவன்,
சீருடை அணிந்த டவாலியையும், டவாலிக்கு
அருகில் நின்ற சாவித்திரியையும் பார்த்தான்.
“நம்ம ஊரு சாவித்திரி..., நம்ம
மாவட்டத்துக்கே ஆட்சியர் என அறிந்ததும் தலை கால் புரியவில்லை கஜாவுக்கு.
***
‘பள்ளிப் பருவத்தில்,
இந்த கஜாவிடம் பாடம் படிக்க சாவித்திரி பல முறை வந்த
இடம்தான்.
பாடங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை எல்லாம் எவ்வளவு
அழகாக, இந்த கஜா தீர்த்த்து வைப்பான்.’
அந்த இனிய நாட்கள் சாவித்திரியின் மனதில் மீள்
பார்வையிட்டன.
படிப்பு தாண்டி, தங்களுக்குள்
இருந்த ரசாயனம், பத்தாண்டுகளுக்குப் பின் இப்போது வேதிவினை புரிந்தது.
அழுக்குக் கைகளோடும், எண்ணை
வழிந்த முகத்தோடும் இருந்த மெக்கானிக் கஜாவின் முகத்தை, காதலோடு
பார்த்தாள் கலெக்டர் சாவித்திரி.
“அம்மா எப்படி இருக்காங்க?”
கேட்டபடியே, கோவிலில் கொடுத்த
பிரசாதத்தை கையில் எடுத்துக்கொண்டு, கேரேஜை
ஒட்டிய வீட்டை நோக்கி நடந்தாள் சாவித்திரி.
***
“அம்மா, அடிக்கடி கேட்டுக் கிட்டே இருப்பியே சாவி... அந்த
சாவித்திரிம்மா இது.”
“வா...ம்...மா
சாவித்திரி...” குரல் வெளியே வரவே இல்லை. அவ்வளவு அடங்கிவிட்டது. ஆனால் அன்று
போலவே இன்றும் அன்பொழுக அழைத்தாள் கஜாவின் அம்மா.
“அம்மா, சாவித்திரியை யாருன்னு நினைச்சே, நம்ம
மாவட்டத்துக்குக் கலெக்டர்மா...!”
கஜா இதைச் சொன்னபோது, கஜாவின்
அம்மா ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
ஆள்காட்டி விரல் நீட்டி, கஜாவிடம்
பூஜை அறையைக் காட்டினாள்.
“அம்மா திருநீறு, குங்குமம்
எடுத்து வரச் சொல்றாங்க. உனக்குப் பூசி விடணுமாம்!”
சொல்லிவிட்டு பூஜையறைக்கு ஓடினான் கஜா.
***
கஜாவைத் தொடர்ந்து சாவித்திரியும் பூஜை அறைக்குள் சென்றாள்.
‘கஜா... ஐ லவ் யூ...”
விபூதி சம்புடத்தை குனிந்து எடுக்கும், கஜாவுக்கு
மட்டும் கேட்கும் ரகசியக் குரலில் தன் காதலை அறிவித்தாள் சாவித்திரி.
அதிர்ந்தான் கஜா.
“சாவித்திரி என்ன சொல்றே நீ?”
“ஐ லவ் யூ’
னு தெளிவாத்தானே சொன்னேன்... காதுல விழலையா...!”
“சாவி, நீ மாவட்ட
ஆட்சியர், நான் ஒரு சாதாரண கார் மெக்கானிக்...; இது ஒத்து
வருமா...?”
கேட்கத் திறந்த அவன் உதடுகளை லிப்லாக் செய்து விட்டாள்
சாவித்திரி.
காதல் போதையில், கண்கள்
கிறங்க,
யானையின் துதிக்கையாய் சாவித்திரியின் கழுத்தில் கஜாவின் கை
சுற்றிக்கொள்ள,
நம்பிக்கையோடு ஒரு கார் மெக்கானிக்’ உடன் வாழ்வைத்
தொடங்குகிறாள் கலெக்டர் சாவித்திரி.
லிப் லாக் ரிலீஸ் ஆனது.
‘ஸ்வாதி நட்சத்திரமே; என்
சாவித்திரி...!’
தேன் பருகிய கஜாவின் உதடுகள்,
காதல் போதையின் மயக்கத்தில்
சங்கீதம் இசைத்தது.
అఅఅఅఅఅఅఅఅఅఅఅఅఅఅ
நாவல்
சுருக்கம்
சமையலரும் சரக்கு மாஸ்டருமான, சுந்தரம் - பருவதம் தம்பதியரின் ஒரே
மகள் சாவித்திரி. பள்ளி இறுதிப் பொதுத் தேர்வில், மேலதிகமான மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட
அளவில் சாதித்ததற்காக, மாவட்ட ஆட்சியரின் கைகளால் பரிசுகள் பெற்றாள் சாவித்தி.
திடீரென மாரடைப்பால் சாவித்திரியின் தந்தை சுந்தரம் இறந்துவிட,
தந்தையை இழந்த சாவித்திரியின், வாழ்வின் போக்கே மாற்றமடைகிறது.
அவளுக்குள் கனன்றுக் கொண்டிருந்த மேற்படிப்புக் கனவுகளுக்கு
முன் பிரும்மாண்டமான கேள்ளிக்குறி எழுந்து நிற்க,
தன் பெற்றோரைப் போலவே கேட்டரிங் தொழிலில் ஈடுபடுட முடிவு செய்கிறாள் சாவித்திரி.
அதற்குத் தன்னை தயார் செய்து கொள்ள, கேட்டரிங் கல்லூரியில் சேரவும்
முடிவு செய்கிறாள். கேட்டரிங் கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த விண்ணப்பக் கட்டணமாக ரூபாய்
500 தேவைப்பட சரக்கு மாஸ்டர் என்று பிரபலமாக வலம் வந்த சாவித்திரியின் தாய் பருவதம்
கல்யாண பந்தியில் எச்சில் இலை எடுக்கும் வேலைக்குச் செல்லத் தயாராகிறாள் சாவித்திரி.
அடுத்தடுத்துக் கல்விச் செலவுக்கு ஆகுமே என யோசித்து, சாவித்திரியும்
ஒரு கல்யாண பந்தியில் இலை எடுத்துச் சம்பாதிக்க விழைகிறாள்.
அந்த ஊரில் உள்ளப் பிரபலமான வராகப் பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாகச்
செயல்பட்டு, எட்டுக்கண் விட்டெறிந்த லக்ஷ்மி நரசிம்மன் காலமான பின், படிப்பறிவும்,
பண்பும் இல்லாத அவர் மகன் சாரங்கன் என்கிற ஒரு திண்ணைத் தூங்கிச் சோம்பேறி, பரம்பரை
ட்ரஸ்டியாக, வந்து உட்கார்ந்துவிடுகிறான்.
பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்திருந்த சாவித்திரியை தன் மகனுக்குத்
திருமணம் செய்து வைக்கக் கோரி, ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி, பருவதத்திடம் ஒப்புதல்
வாங்கிவிடுகிறாள் சாரங்கனின் தாய்.
சாரங்கனும் “தன்னை கல்யாணம் செய்து கொண்டே ஆக வேண்டும்..” என்று சாவித்திரிக்குத்
தொல்லைத் தருகிறான்..
ஏதோவொரு இறுக்கமான மனநிலையில் சாரங்கனுக்குத் தன் மகள் சாவித்திரினை
கல்யாணம் செய்து தருவதாக ஒத்துக் கொண்டுவிட்ட தாய் பருவதம், தன் தவற்றை உணர்ந்து, சாவித்திரியின்
எதிர் காலத்தை மனதில் கொண்டு அவளோடு சென்னைக்குக் குடிபெயர்ந்து விடுகிறாள்.
சென்னையில் ஒரு அரசுக் கல்லூரியில் சேர்ந்து, ஆங்கில இலக்கியம்
படித்து முன்னேறுகிறாள் சாவித்திரி. அதோடு கல்லூரி நிர்வாகம் நடத்தும் ஐ ஏ எஸ் கோச்சிங்கில்
சேர்ந்து அதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வெற்றி பெறுகிறாள்.
கிராமத்தில் கருமான் பட்டரை வைத்து நடத்திய ராசய்யாவின் ஒரே மகன்
‘கஜா என்கிற கஜேந்திரன். கஜா, சாவித்திரியை விட ஐந்து ஆண்டுகள் பெரியவன். பள்ளி இறுதி
முடித்தவுடன், ஐ டி ஐ ல் மோட்டார் மெக்கானிக் பிரிவில் டிப்ளமா படித்து முடித்தான்.
தன்னைப் போலத் தன் மகனும் பட்டரை போட்டு உட்கார வேண்டாம் என்றுக்
கருதிய கஜாவின் தந்தை ராசய்யா, ஊரில் தனக்கென்றிருந்த கொஞ்ச நஞ்ச நிலத்தை விற்று, அவனை
பி ஈ படிக்க வைத்தார்.
பி ஈ இறுதியாண்டில் நடைபெற்ற கேம்பஸ் நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு,
ஒரு வளர்ந்து வரும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தான் கஜா.
‘வலிமையுள்ளவன் வாழ்வான்’.. (Survival of the Fittest) என்ற கார்ப்பரேட்
சித்தாந்தம் ஒத்து வரவில்லை கஜாவிற்கு. ஒரு கட்டத்தில், வேலையை ராஜினாமா செய்துவிட்டு,
மீண்டும் கிராமத்துக்கேத் திரும்பினான் கஜா.
தன் தந்தை, கொல்லுப் பட்டரை வைத்திருந்த இடத்தில், ஒரு கார் மெக்கானிக்
ஷாப் தொடங்கித் தொடர்ந்தான்.
சாவித்திரியும் அவள் தாயும், சென்னையில் தங்கள் உழைப்பையே மூலதனமாக்கி
உண்மையாக உழைத்தனர். கடும் உழைப்பால் ஐ ஏ எஸ் தேர்வில் முதல் அமர்விலேயேத் தேறினாள்
சாவித்திரி.
பத்து ஆண்டுகளுக்குப் பின் , மாவட்ட ஆட்சியர் என்ற அந்தஸ்த்தோடு
சொந்த மாவட்டுத்துக்கே வந்தார் சாவித்திரி.
ஆட்சியராய்ப் பதவியேற்றபின், முதல் களப்பயணமாக, தன் தந்தை ஒரு
சில ஆண்டுகள் தற்காலிகமாகப் பொறுப்பேற்றுச் சமையலர் சேவை செய்த வராகப் பெருமாள் கோவிலுக்குத்
தரிசனத்துக்குச் செல்கிறாள்.
+2 முடித்த சாவித்திரியிடம், தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மிரட்டல்
விடுத்த சாரங்கன்; அதற்கு இணங்க மறுத்ததும்;
‘அவர்கள் குடியிருந்த கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட வீட்டை,
உடனடியாகக் காலிச் செய்யச் சொல்லி, வற்புறுத்திக் குடைச்சல் கொடுத்ததும்;
உள்ளூரில் இருந்தால் நிம்மதியாய் வாழமுடியாது என்பதை அறிந்து,
வேறு வழியின்றி, மகா பெரியவா கேட்டரிங் உரிமையாளர் கணபதி அய்யா அவர்களின் உதவியுடன்
இரவோடு இரவாகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றதும்;
இப்போது டவாலிப் பாதுகாப்போடு, சைரன் வைத்த காரில் மாவட்ட ஆட்சியர் என்ற அந்தஸ்தில் பயணிக்கும் போது, மனதில் நிழற்படமாய் ஓடியது கலெக்டர் சாவித்திரியின் மனதில்.
அந்தச் சோம்பேறிச் சாரங்கன், தன் நிலையில் இருந்து இம்மியும் உயரவில்லை.
அதே நாலுகால் மண்டபத்தில் உட்கார்ந்துப் பட்டைச் சோற்றைத் தின்றபடி, அன்று பார்த்த
அதேத் தோற்றத்தில், வயிறு வளர்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார் மாவட்ட ஆட்சியர் சாவித்திரி.
‘தேடிச் சோறு நிதம் தின்று’ - என்ற பாரதியின் வாக்கு கலெக்டர் சாவித்திரியின் உள்ளத்தில்
பளிச்சிட்டது.
வேத கோஷ்டியினரின் பிரபந்த கோஷத்துடனும், மங்கல வாத்தியங்களின்
முழக்கத்துடனும், பூர்ண கும்ப மரியாதையுடன் ஆலயத்துக்குள் வரவேற்கப்பட்டார் ஆட்சியர்
சாவித்திரி.
வராகப் பெருமாள் தரிசனம் முடித்தபின் ஆட்சியர் அலுவலகம் திரும்புகிறது
கார்.
‘இடம் கொடுத்த ஈஸ்வரன்’
என்று ஊர் வழக்கில், சொல்லப்படும் ‘காசி விஸ்வநாதர் கோவில்’ திருப்பத்தில் திரும்பும்போது
சாவித்திரியின் கண்கள் அனிச்சையாய் அந்த இடத்தை நோக்கின.
பள்ளிப் படிப்பின்போது, ‘ராசையாக் கொல்லுப் பட்டறை’ இருந்த இடத்தில்
“‘ராசையா, கார் மெக்கானிக் ஷாப்” இருப்பதைப் பார்த்தார் கலெக்டர் சாவித்திரி. உரிமை ‘கஜேந்திரன்’, என்றப் பெயர்ப் பலகையைக் கண்டதும் மகிழ்சசியோடு, காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார்.
உள்ளே ஒரு காருக்கு அடியில் மல்லார்ந்து படுத்தபடி ரிப்பேர் செய்து கொண்டிருந்த
கஜா, கலெக்டரின் கார் தன் பட்டரைக்கு முன் நிற்பதைப் பார்த்தான்.
“கார் பிரேக்-டவுனா..?”
கேட்டுக் கொண்டே வந்தவன், சாவித்திரியைக்
கலெக்டரென அறிந்து மகிழ்ந்தான்.
பள்ளிப் பருவத்தில் இந்த கஜாவின் முன் பலமுறை நின்றிருக்கிறாள்
சாவித்திரி. பாடங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை
அவனிடம்தான் கேட்டுத் தெளிவாள். அந்த இனிய நாட்கள் சாவித்திரியின் மனதில் மீள்பார்வையிட்டன.
கஜா சாவித்திரியின் தற்போதைய வளர்ச்சியை படுத்த படுக்கையாய் இருக்கும்
தன் தாயிடம் சொல்லி அறிமுகப் படுத்த, அவள் மிகவும் மகிழ்கிறாள். பூஜையறையிலிருந்து,
திருநீரும், குங்குமமும் எடுத்து வரச் சொல்கிறாள். இருவரும் பூஜையறைக்குச் செல்கின்றனர்.
படிப்புத் தாண்டித் தங்களுக்குள் இருந்த ரசாயனம் பத்தாண்டுகளுக்குப்
பின் வேதி வினை புரிந்தது. காதல் போதையில் கண்கள் கிறங்க, ‘ஸ்வாதி-ஸ்டார் சாவித்திரி..!’
எனக் காதல் போதையில் பூஜையறையில் கீதம் பாடுகிறான் கஜா.
யானையின் துதிக்கையாய் சாவித்திரியின் கழுத்தில் கஜாவின் கை சுற்றிக்கொள்ள,
நம்பிக்கையோடு கார் மெக்கானிக்குடன் வாழ்வைத் தொடங்குகிறாள் கலெக்டர் சாவித்திரி.
***










Comments
Post a Comment