161. ரௌத்ரம் பழகு (தேன் சிட்டு தீபாவளி மலர் 2024)
ஜூனியர் தேஜ்
(தேன் சிட்டு தீபாவளி மலர் 2024)
அண்ணி உங்க அம்மா வந்திருக்காங்க
." சமையல்கட்டின் வாயிற்படியில் நின்று அறிவித்தாள் கௌசிகா.
"சம்மந்தியம்மா.."
– என்று அம்மாவைப் பணிவாக அழைத்தபடிக் கைக்கூப்பினார் அண்ணியின் அம்மா.
அம்மாவின்
முகம் வழக்கம்போல இறுக்கமானதைக் கவனித்தாள் கௌசிகா.
சூழ்நிலையின்
இறுக்கத்தைத் தளர்த்த, இடையில் வந்து அண்ணியுடைய அம்மாவின் கையிலிருந்து, பூவும், பழங்களும்
அடங்கிய நெகிழிப் பையை அம்மாவின் சார்பில் சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டுபோய்,
சுவாமி மாடத்தின்முன் வைத்தாள்.
'மாமியார்
'சுருக்' என எதாவது சொல்லி விடுவாளோ..!' என்று பயம் அப்பியிருந்தது அண்ணியின் முகத்தில்
"திடீர்னு இந்த நேரத்துல உங்கம்மா எதுக்கு வந்திருக்காங்க.?"-
என்று கேட்டுவிட்டால் அதற்கு ஏதும் பதில் தன்னிடம் இல்லையே..? என்ற எண்ணம் நீள, அண்ணி
சமையலறை வாயிற்படியின் அருகே நின்று ஒரு கையால் நிலைப்படியைத் தாங்கிய நிலையில், லேசாகத்
தலையை எட்டிப் பார்த்தாள்.
***
வாங்க
என்று வாய் நிறைய அழைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒரு சிறு புன்னகை கூட உதிர்ந்துவிடக்கூடாது
என்று வைராக்யமாக முகத்தை இறுக்கிக்கொண்டு நின்ற கௌசிகாம்மாவிடம் ‘எப்படிப் பேச்சை
தொடங்குவது?’ என்ற கேள்விக் குறியாய் வளைத்திருந்தன
சம்பந்தியம்மாவின் முகக்குறிகள்.
தான் வாங்கி
வந்த பூ, பழங்களை கௌசிகா வாங்கிச் சென்று உள்ளே வைத்தது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
"வாங்க
சம்பந்தி ..!" - அழைத்துக் கொண்டே கௌசிகாவின் அப்பா மாடிப்படியிலிருந்து இறங்கி
வந்தார்.."
“திடீர்னு
நீங்க இங்கே வந்ததுக்குக் காரணம் என்ன சம்பந்தியம்மா?"- என்று கேட்டன அப்பாவின்
கண்கள்.
அப்பாவின்
திசை நோக்கிக் கும்பிட்டார் அண்ணியின் அம்மா.
***
“குலசாமிக்குப்
பொங்க வைக்க ஏற்பாடுப் பண்ணி இருக்கோம்...” சற்றே நிறுத்தி, தயங்கித் தயங்கித் தொடர்ந்தாள் சம்பந்தியம்மா...
“அந்த வேலையாத்தான்........
அவங்க போயிருக்காங்க. நான் மட்டும் வந்தேன்.” என்று சொல்லியபின் சற்றே மௌனம் காத்தாள்;
“வர்ற புதன்கிழமை,
ஒரு அரை நாள் பொண்ணை........ அனுப்பி வைக்க....... முடியுமா.?” – கூனிக் குறுகியபடியே இருவருக்கும் பொதுவாகக்
கோரிக்கை வைத்தாள் சம்பந்தியம்மா.
கௌசிகா
நினைத்தது போலவே, அப்பா ‘கப்’பென வாய்ப் பொத்திக் கொண்டு, தனக்கேதும் சம்பந்தமேயில்லாதவர் போல்
வேறு எதிலோ கவனம் செலுத்துவதைப் போல நடித்தபடி வேடிக்கைப் பார்த்தார்..
“அதானே
பாத்தேன். ஆதாயமில்லாத செட்டி ஆத்தோட போவானா’ங்கறது சரியாத்தான் இருக்கு. திடீர்னு வந்து சம்பந்தியம்மா
நிக்கக்குள்ளேயே நெனச்சேன். இப்படி எதுனா பெருசா கேட்கப் போறாங்கன்னு. நான் நெனச்சது
சரியாப் போச்சு!” புலம்ப ஆரம்பித்தாள் அம்மா.
கௌசிகாவுக்கு
அப்பாவின் கையாலாகாத்தனமும், அம்மாவின் குத்தலும் குதர்க்கமுமான மனிதநேயமற்றப் பேச்சைக்
கேட்கக் கேட்க வெறுப்பாக இருந்தது. தன் அண்ணனைக் கட்டிக்கொண்டு, இந்த வீட்டுக்கு மருமகளாய்
வந்து, இல்லையில்லை, இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டு அவஸ்தைப்படும் அண்ணியின்மேல் பச்சாதாபம்
வந்தது கௌசிகாவிற்கு.
***
அண்ணியின்
கழுத்தில் தாலியைக் கட்டிய நாற்பதாம் நாள், சிங்கப்பூருக்குப் பயணம் போய்விட்டான் அண்ணன்.
போனதிலிருந்து அண்ணியின் பெருக்கு ஒரு கடிதம் கூட எழுதிப்போடவில்லை. எழுதிப் போட்டிருந்தாலும்
கடிதத்தை அண்ணியின் கண்ணிலேயேக் காட்டாமல், அம்மாதான் அதைப் படித்துவிட்டுக் கிழித்துப்
போட்டிருப்பாள் என்பது வேறு விஷயம்.
ஒண்ணறை
வருஷம் கழித்து ஒரு பத்து நாள் விடுப்பில் ஊருக்கு வந்தான் அண்ணன். அப்போது கூட அவனை
ஒரு நாளாவது அண்ணியோடு கூடி வாழ விடவில்லை அம்மா.
“மாமன்
வீட்டுக்குப் போவணும்;
குல தெய்வம்
கோவில்ல பொங்க வைக்கணும்;
நேர்த்திக்
கடன் செய்யணும்;
வேண்டுதல்
நிறைவேத்தணும்..” - என்று பாடாய்ப் படுத்தி விடுப்பு நாட்களை
ஆழும்பாழும் ஆக்கிவிட்டாள் அம்மா.
அண்ணியை
சும்மாச் சொல்லக்கூடாது. பூமாதேவியின் மறு அவதாரம்தான். எல்லாவற்றையும் அனுசரித்துப்
போனாள். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசியதில்லை அவள். அமைதியாய் இருக்க இருக்க மேலே மேலே
போட்டு அழுத்தும் அம்மாவைக் கண்டாலே அசூசையாக இருந்தது கௌசிகாவுக்கு.
***
அண்ணியை
அரை நேரம் கூட அவள் அம்மா வீட்டில் விட்டு வைத்ததில்லை அம்மா.
‘ஏதோ கொத்தடிமையைக்
கொண்டு வந்து வைத்துக் கொண்டதைப் போல நடத்துகிறாளே...!’ என்று கோபம் கோபமாக வரும் கௌசிகாவுக்கு.
போன வருடம்
அண்ணியின் அப்பத்தா இறந்தபோது, அம்மாவும் அப்பாவும் தங்கள் கூடவே அண்ணியை அழைத்துச்
சென்றது ஞாபகம் வந்தது கௌசிகாவுக்கு.
“பதினாறு
நாள் காரியம் முடியற வரைக்கும் பொண்ணு எங்க கூட இருக்கட்டுமே..?” என்று சம்பந்தியம்மா இயல்பாய் கேட்டதுதான்
தாமதம்.
“ஏன் பதினாறு
நாளு, காலம் பூரா உங்க வீட்டுலயே இருக்கட்டுமே.!” - என்று குதர்க்கமாய் பேசி அவர்களை அழவைத்துவிட்டு,
அண்ணியைக் கூடவே அழைத்து வந்துவிட்டார்கள்.
‘எந்த எதிர்
வினையும் ஆற்றாமல் பூமாதேவியைப் போலப் பொறுமையாக எப்படி இருக்க முடிகிறது இந்த அண்ணியால்.?’- வியந்திருக்கிறாள் கௌசிகா.
‘வறுமையான
குடும்பத்தில் பிறந்து, வளமான குடும்பத்தில்
வாழ்க்கைப் பட்டால் இப்படியெல்லாமா நடத்துவது..?’ – கழுத்து வரை ஆற்றாமை வந்தாலும், அதைக்
கடந்து அண்ணி எதையும் வார்த்தைகளால் உதிர்த்ததில்லை.
அண்ணிக்குப்
பரிந்து, கௌசிகா ஏதாவது சொல்ல வந்தால், “உனக்கு இதெல்லாம் புரியாது..?” என்று வாயடைத்துவிடுவார்கள் பெற்றோர்.
***
“வர்ற
புதன் கிழமை மருமவளை அனுப்பறதுக்கில்ல..!” – என்று தீர்மானமாகச் சொன்ன அம்மாவை வியப்புடன்
பார்த்தாள் கௌசிகா. காரணம் இவ்வளவு அமைதியாக அம்மா பேசிப் பார்த்ததேயில்லை அவள்.
கௌசிகா
மட்டுமில்லை. அண்ணிக்கும் ஆச்சரியமாக இருந்தது மாமியாரின் நிதானமான இந்த பேச்சு.
அமைதியாக
நின்றாள் சம்பந்தியம்மா.
“இன்னோரு
நாளு மாத்தி வெச்சிக்கோங்க. காரணம், வர்ற புதன் கிழமை, என் மவளைப் பார்க்க மாப்பிள்ளை
வீட்டார் வர்றாங்க..!” என்றாள் அம்மா.
கௌசிகாவிற்கு
அதிர்ச்சியாய் இருந்தது. தன் சம்மதமில்லாமல் ரகசியமாக, தனக்கு மாப்பிள்ளை பார்த்து,
பெண்பார்க்க நாள் குறித்த பெற்றோரை நினைத்துக் கடுப்பானாள்.
***
“என்னம்மா
சொல்றே..?”-
கௌசிகாவின் குரலில்
ரௌத்ரம் இருந்தது.
“நீ தைய்யா
தக்கடியானு குதிப்பேனுதான் திங்கள் செவ்வாயில உன்கிட்டே சொல்லலாம்னு நெனைச்சேன். சம்பந்தி
வந்ததுனால சொல்ல வேண்டியதாயிருச்சு..”
“நல்ல விஷம்தானே பாப்பா. நல்லபடியா நடக்கட்டும். நாங்க நாள் மாத்தி வெச்சிக்கறோம்.” என்று கௌசிகாவிடம் பேசிவிட்டு, “மாப்ள வீடு ஒண்ணுக்குள்ள ஒண்ணா..? அந்நியமா?.சம்பந்தியம்மா..?” இயல்பாகக் கேட்டாள்.
“அந்நியம்தான்.
என் மகன் மாதிரிதான், அவரும் துபாய்லதான் இருக்காரு.”
***
“துபாய்
மாப்பிள்ளை..” என்று அம்மா சொன்ன அடுத்த நிமிடம், கௌசிகாவின்
கோபம், திரியில் தீ வைத்தவுடள் ‘சர்...’ எனப் பாயும் ராக்கெட் வானம் போல் எகிறியது.
“துபாய்ல
வேலைபாக்கற எங்க அண்ணனைக் கட்டிக்கிட்டு, கொத்தடிமை போல வாழற என் அண்ணியைப் பார்த்தபிறகு,
நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நம்ம சுத்துவட்டாரத்துல, தினக்கூலியா இருந்தாக் கூட
கட்டுவேன். சத்தியமா, ஒண்ணரை வருஷத்துக்கு ஒரு முறை வந்துட்டுப் போற, துபாய் மாப்பிள்ளையைக்
கட்டிக்கிட்டு, மாமியார் வீட்டுல கொத்தடிமையா இருக்கவே மாட்டேன்..!”
சூளுரைப்பதைப்
போலக் கத்தினாள் கௌசிகா.
எல்லோரும்
அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க கௌசிகாவே தொடர்ந்தாள்.
“ஆன்ட்டி,
நீங்க ஏற்கனவே திட்டமிட்டபடி வர்ற புதன் கிழமையே குலசாமிக்கு பொங்கல் வையுங்க. நானும்
அண்ணியுமா அங்கே வர்றோம்..”
முதன் முறையாக,
தாய்-தந்தையாக இருப்பினும் அவர்களின் ‘சிறுமை கண்டு பொங்கி’, சுயமாக முடிவெடுத்த கௌசிகாவின் குரலில்
‘ரௌத்ரம் பழகு’ என்ற பாரதியின் மிடுக்கு மிளிர்ந்தது
***
Comments
Post a Comment