என் உயிரே... மயூரி...!( நாவல்)

  


என் உயிரே... மயூரி...!

En Uyire... Mayuuri…!

நாவல்

Novel

Author:

ஜூனியர் தேஜ்

Junior Tej

For more books

https://www.pustaka.co.in/home/author/junior-tej

 பெற்றோர்க்குச் சமர்ப்பணம்


   A ஜானகி   அருணாசலம் (தேஜ்)

*******
குரு வணக்கம்


*******

பொருளடக்கம்

அணிந்துரை

வாழ்த்துரை

வாழ்த்துரை

விமரிசனங்கள்

********

                                                   


                அணிந்துரை   கவிஞர் பாரதன் - கம்பம்

ஜூனியர் தேஜ் ; வித்தியாசமான பெயர் ; அவரும் வித்தியாசமானவர் ; அவர் எழுதும் கதைகளும் வித்தியாசமானவை. மனநல ஆலோசகர் என்பதாலோ என்னவோ, அவருடைய படைப்புகள் அனைத்துமே மனித மனங்களைச் சுற்றியே அமைந்திருக்கின்றன.

“மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு – அதைத் தாவ விட்டால் தவ்வி ஓட விட்டால், நம்மைப் பாவத்தில் தள்ளிவிடும்.” என ஒரு திரைப்படப் பாடல் உண்டு. மனித மனம் நிலையற்று அலை பாய்ந்துகொண்டேயிருப்பது பல விசித்திரங்கள் நிறைந்தது.

‘மயூரி என் உயிர் நீ”  என்ற இந்தக் குறுநாவல் அந்த மன விசித்திரங்களையும், அதன் நிலையற்றுத் தாவும் போக்கினையும் அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நூலின் முதல் வரியிலேயே ‘டுப்... டுப்... டுப்... டுப்...” சைலன்ஸர் எழுப்பிய ஓசை, புல்லாங்குழலின் இனிய நாதமாய் இழைந்து நவிஷ்னியின் செவியைக் குளிர்வித்தது.” என காதலர்களின் மன நிலையையும், போதை அடிமைகளின் மன நிலையையும் அழகாகக் காட்சிப்படுத்தி விடுகிறார் ஜூனியர் தேஜ்.

“எது நம்மை அலட்சியம் செய்கிறதோ, அதன் மேல்தானே ஈர்ப்பு அதிகமாகும். எது வேண்டாம் என்று ஒதுக்குகிறதோ அதைத்தானே அடைய ஆசைப்படும். அந்தக் கட்டத்தில்தான் இருந்தாள் நவிஷ்னி.” என்று எழுதும்போதும், “நல்ல பழக்கமோ கெட்ட பழக்கமோ தொடர்ந்து செய்யும்போது அதற்கு அடிமையாவது மனிதன் மட்டுமல்ல, விலங்குகளும்தான். தரமற்ற நண்பர்களின் வற்புறுத்தல்களாலும், மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதற்காகவும், இப்படி ஏதேனும் ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, தொடக்கத்தில் கொஞ்சமாகத்தான் போதை ஏற்றிக் கொள்கிறார்கள். நாளடைவில் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.” என்று எழுதும்பொழுது, ஜூனியர் தேஜ் குறிப்பிடுவது உளவியல் உண்மை மட்டுமல்ல, நாம் நம் கண் முன்னால் காண்கின்ற உண்மையும் கூட.

“நங்கையர்களை நல்லவள், கெட்டவள், புத்திசாலி, அறிவிலி, ஆங்காரி, பாவப்பட்டவள், பலானவள் என்றெல்லாம் பிரித்துப் பிரித்து முத்திரை குத்தி முடக்கி வைப்பதே உலகளாவிய நடைமுறை.”  என்று எழுதி, பெண்ணடிமைத்தனத்திற்குச் சவுக்கடி தரும்போது ஜூனியர் தேஜ் என்ற உளவியலாளருக்குள் ஒரு சமூகப் போராளி இருப்பதை உணர்கிறோம்.

பேராசிரியர் குஞ்சிதபாதம் என்ற கதை மாந்தர் மூலம், சலுகைப் பருக்கைகளுக்காகத் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளும் இழி மனிதர்களை, நம் கண் முன்பு கொண்டு வந்து நிறுத்துகிறது ஜூனியர் தேஜ் அவர்களின் எழுத்து.

“ஒரு வார்த்தையை வெட்டினால் ரத்தம் வர வேண்டும்..” என்ற அலெக்ஸி டால்ஸ்டாயின் சொற்களை எடுத்தாளும்போதும், விவேகானந்தர், கண்ணன், கோபியர், குருஷேத்ரம்... என்று ஆன்மீகத்தை எடுத்துக் காட்டும்போதும் ஆசிரியரின் பரந்துபட்ட படிப்புத் தென்படுகிறது.

“என்றென்றும் காந்தி போற்றப்படுவதற்குக் காரணம் அவரின் தொண்டு என்பதை விட அவரின் நிலைத்த புகழுக்கு அவர் விலக்க எறிந்தத் தன்முனைப்பேக் காரணம். இப்போதுப் புகழ் போதைக்காக பாண்ட், சூட்டுடன், பட்டுப் புடவையுடன் கையில் துடைப்பம் பிடித்தபடி புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கும் தேசத் தொண்டர்கள் இருக்கவேச் செய்கிறார்கள். அது போன்றவர்கள் காலத்தை வென்று நிற்பதில்லையே.” - இப்படி அவர் குறிப்பிடும்போது பலரின் அரசியல் சாயம் வெளுக்கிறது.

போதை எதிர்ப்பையும், காதலையும் இணைத்து, இந்தக் குறுநாவலைப் படைத்திருக்கிறார்  ஜூனியர் தேஜ்.

கதையின் முடிவு முற்றிலும் எதிர்பாராதவிதமாக இருக்கிறது.

‘சில இடங்களில் தொய்வு, ஆங்கிலச் சொற்களின் பணன்பாடு அதிகம்.’ என மிகச்சில குறைகள் உண்டு. அவற்றையும் தாண்டி, ‘மயூரி என் உயிர் நீ’ இன்றைய தேவையான படைப்பு.

வாழ்த்துக்களுடன் , கவிஞர் பாரதன் , கம்பம்

                                                      ********


கலை விமர்சகர் பாலமுருகன் லோ - சென்னை

தேவியின் கண்மணி இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ள ‘மயூரி...! என் உயிர் நீ...!’ என்ற முழு நீள நாவலைப் பற்றிக் கூறுவதற்கு முன்னர். அதன் ஆசிரியரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.

திரு. அ. வரதராஜன் அவர்கள் ஜூனியர் தேஜ் என்ற புனைப் பெயருடன் கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் போன்றவைகள் எழுதுவது அல்லாமல், அவர் ஒரு சிறந்த ஓவியக் கலைஞரும் கூட. அவரைப் பன்முகக் கலைஞர் என்று கூறினால் அது மிகையாகாது.

இதற்கு எல்லாம் முத்தாரம் வைத்தாற் போலத் பெரும்பாலான தமிழ் வாசகர்களால் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும், எழுத்தாளர்களால் மதிக்கப்பட்டு,  செல்லமாக எழுத்துச் சித்தர் என விளிக்கப்படும், திரு.பாலகுமாரன் அவர்களிடம் ஆசி பெற்றவர் திரு ஜூனியர் தேஜ் அவர்கள்.

எழுத்துச் சித்தர், ஜூனியர் தேஜ் அவர்களின் முதல் கதையான சிற்றன்னை என்ற சிறுகதையைப் படித்துவிட்டு,  “இது முதல் தடவை எழுதியதைப் போல் இல்லை. பல வருடங்கள் எழுத்துலகில் இருப்பவனின் கைவண்ணம் போல் உன் கதை உள்ளது.” என்று அவரது வாயாலே புகழ்ந்திருக்கிறார்.

மேலும் பற...! பற...! மேலே...! மேலே...! என்று மனதார வாழ்த்தியும் இருக்கிறார்.

திரு. ஜூனியர் தேஜ் அவர்களும் திரு. பாலகுமாரனை மானசீக ஆசானாக ஏற்றுக்கொண்டவர், அவரது எழுத்துத் தாக்கத்தினால் பல கதைகளில் சிற்சில இடங்களில் ஆங்காங்கே அதன் அம்சத்தை அவரை அறியாமலே வெளிப்பட்டிருப்பதை வாசகர்களாகிய நம்மால் உணர முடியும்.

பதினைந்து அத்தியாயங்கள் கொண்ட நாவல் இது.

இதில், போதை மருந்துக்கு அடிமையானவர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை ஆசிரியர் துல்லியமாக எடுத்துரைத்திருப்பார்.

மதுவடிமைகளின் போக்கு எப்படியெல்லாம் மாறுவிடுகிறது, போதை வஸ்துவை உட்கொண்ட பிறகு, அதற்கு அடிமையாகி, பாதை மாறித் தங்கள் வாழ்வை இழந்து வாடுவதை நாம் இந்த யதார்த்த உலகில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு சிலர் அதிலிருந்து மீண்டு வெளியே வரவும் போராடுகிறார்கள். அப்படிப் போராடும் ஒரு மங்கைதான் நவிஷ்னி எனும் கல்லூரி மாணவி.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான அவள், போதை வஸ்துவை பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய மன நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

‘நவிஷ்னி இந்தப் போதைப் பழக்கத்திலிருந்து வெளியே வருகிறாளா...!’ என்பது ஒரு புறம் இருக்க; கதையில் மற்றும் ஒரு திருப்பம் வைத்துள்ளார் ஆசிரியர்.

அந்தத் திருப்பம் என்ன என்றுதானே யோசிக்கிறீர்கள்? - கதையின் நாயகி மயூரி, கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளர். அவள் எப்படி ஓர் எழுத்தாளர் மீது காதல் வயப்படுகிறாள் என்பதை மிகவும் நளினமாகச் சொல்லியுள்ளார்.

விரிவுரையாளர் மயூரியின் ஒருதலைக் காதலை ஜூனியர் தேஜ் அவர்கள் எப்படி அணுகியுள்ளார் என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு அம்சம்.

திரு. பாலகுமாரன் அவர்கள் திரு. தி ஜானகிராமனைப் பற்றிச் சொல்லும் போது! “திரு. திஜா அவர்களுக்கு, மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் மனப்பக்குவம் நிறைய இருந்தது! அதனால்தான் அவரால் அனாயாசமாகக் மனித உணர்வுகளை எழுத்தில் வடிக்க முடிந்தது. பிற்காலத்தில் அவரை போல் மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் பக்குவம் எனக்கு வந்த பிறகுதான் தி ஜானகிராமன் அவர்களின் எழுத்தின் வீரியம் எனக்குப் புரிகிறது..” என்று கூறியிருக்கிறார்.

பாலகுமாரன் அவர்களின் கூற்றை ஒத்து, இந்தக் கதையிலும் மயூரியின் காதலை அவ்வளவு அழகாக, தெளிவாக, உன்னதமாக, உயிரோட்டமாக, உள் மனதை ஊடுருவிப் பார்க்கிற பக்குவம் இருந்தமையால் ஓர் அழகான ஆழமான முடிவைக் கதையின் கடைசியில் கூறியிருப்பார் ஜூனியர் தேஜ்.

முழுக் கதையையும் படித்தால்தான் பல விஷயங்கள் புரியவரும், கலையம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சகமான கதை என்றுதான் நான்  கூறுவேன்.

வாழ்த்துகள் சார் . இன்னும் இதுபோல பல நாவல்கள் எழுதிப் புகழ் பெற வாழ்த்துகிறேன்.

-பாலமுருகன்.லோ- சென்னை

 ******


 வாழ்த்துரை

விமரிசனம்

நாவலாசிரியர் திரு வெ ராம்குமார் , வேலூர்

மயூரி என் உயிர் நீ...! நாவலை படித்தேன் - ரசித்து மகிழ்ந்தேன். ஆங்கிலத்துறை பேராசிரியை மயூரி மற்றும், எழுத்தாளர் சங்கு என்கிற சங்கமேஸ்வரனோடு ஏற்பட்ட மயூரியின் ஒருதலை காதல், போதை தடுப்பு பிரிவு அதிகாரியான நவீனன் மயூரி மீது கொண்ட உண்மையான காதல், உண்மைக் காதலன் நவீனன் போதையில் சிக்கி தவிக்கும் நவிஷ்னியை மன நல ஆலோசகரான வரதராஜனின் உதவியோடு மீட்டதோடு, மயூரியையும் அவளுடைய ஒருதலைக் காதலிலிருந்து மீட்டெடுக்கிறார்.

கதை நெடிகிலும், தான் கற்ற - பெற்ற வாழ்வியல் அனுபவங்களை கதாசிரியர் கதையோட்டத்தோடு இணைத்த விதம் அருமை. அற்புதமான உளவியல் கலந்த காதல் நிகழ்வுகளைச் சிறப்பாக எழுதி அசத்திய திரு. ஜூனியர் தேஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகளும்,வாழ்த்துகளும்.

வெ. ராம்குமார் – வேலூர்.

 

விமர்சனம்

எழுத்தாளர் திரு ச. ஆனந்த குமார், சென்னை

மயூரி என் உயிர் நீ என்கிற ஜூனியர் தேஜ் அவர்கள் எழுதிய நாவலை வாசித்தேன். மிகவும் சிறப்பான தீம்போதைப் பொருட்களைப் பற்றியும், போதைப் பழக்கம் எப்படி சிலந்தி வலையாகத் தொடங்கிப் படிப்படியாக முற்றி இருப்புக் கூண்டாக உருமாறுகிறது என்பதைப் பற்றி நிறைய விஷயங்களை மிக சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.

மன நல ஆலோசகரான திரு ஜூனியர் தேஜ் அவர்கள், மனச்சிதைவு நோய் பற்றியும் அதை எதிர் கொள்வது பற்றியும் எழுதப்பட்ட தகவல்கள் மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளவை.

அதே நேரத்தில் இந்த நாவல் சிற்றிதழ்களில் பிரசுரமாகும் படைப்புகளின் ஆழத்தை பற்றியும் பேசுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

உயர் பதவி வகிக்கிற மனிதர்களின் விருப்பங்களுக்கெல்லாம் இந்தச் சமூகம் எப்படி துணை போகிறது என்பதை கல்லூரியில் உயர் பதவி வகிப்போர்  மூலம் காட்டிய விதம் மிகவும் அருமை. ஆற்றொழுக்கான தடையில்லாத நடையில் எழுதப்பட்ட ஜூனியர் தேஜ் அவர்களின் மனோதத்துவம் கலந்த ஒரு சிறந்த காதல் கதை மயூரி என் உயிர் நீ. சிறப்பான ஒரு வாசிப்பனுபவம். இன்னும் நிறைய நிரல்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் சார். நன்றி.

ச ஆனந்த குமார், சென்னை

 ********


 என்னுரை

எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்திய என் தந்தை தேஜ் மற்றும் தாயாருக்கு இந்த  நூலைக் காணிக்கையாக்குகிறேன்.

 ‘ஜூனியர் தேஜ் பேஜ் என்று ஒரு சொற்றொடர் வடிவமைத்து பக்கம் பக்கமாக என் படைப்புகளை வெளியிட்டு, என்னை ஊக்கப்படுத்திய எழுத்துலக ஜாம்பவான் திரு சாவி அவர்களுக்கும்;

பற...! பற...! மேலே...! மேலே...! என்று தன் பொற்கரங்களால் எழுதி ஆசீர்வதித்த எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கும் குரு வந்தனம் செலுத்தி என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

இந்த முழு நீள நாவலை பதிப்பித்த கண்மணி வார இதழ் ஆசிரியர் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

அணிந்துரை வழங்கிய பட்டி மன்ற நடுவர், இலக்கிய, ஆன்மீகச் சொற்பொழிவாளர், நூலாசிரியர் கவிஞர். திருமிகு பாரதன், கம்பம் அவர்களுக்கும்;

வாழ்த்துரை வழங்கிய தமிழ் இலக்கிய உலகில் முதல் முதலில் ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் திரு அகிலன் அவர்களின் வழித்தோன்றலும் கலை விமர்சகருமான  திரு லோ. பாலமுருகன், சென்னை அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமரிசனங்கள் எழுதி நிறை குறைகளை தெரிவித்த திருவாளர்கள், நாவலாசிரியர் திரு வெ ராம்குமார் அவர்களுக்கும். எழுத்தாளர் திரு ச ஆனந்தகுமார்  அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய இந்த முழு நீள நாவலை அழகான புத்தகமாக உருமாற்றித் தந்து ஊக்குவித்த புஸ்தகா நிறுவன நிறுவனர் திருமிகு ராஜேஷ் அவர்களுக்கும், புஸ்தகா நிறுவனத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

ஜூனியர் தேஜ்

சீர்காழி

 

என் உயிரே மயூரி...!

அத்தியாயம் 1

‘டுப்... டுப்... டுப்... டுப்...” - சைலன்ஸர் எழுப்பிய ஓசை, புல்லாங்குழலின் இனிய நாதமாய் இழைந்து நவிஷ்னியின் செவியைக் குளிர்வித்தது, சுமார் முன்னூறு நானூறு மீட்டர் தூரத்தில் வாகனம் வந்து கொண்டிருப்பதை அவளால் துல்லியமாக உணர முடிந்தது.

‘இதோ, இன்னும் ஒரு சில நிமிடங்களில் நம் முன்னே வந்துவிடும்...!’ என்று நினைத்த மாத்திரத்திலேயே நவிஷ்னியின் மூளை மடிப்புகள் கிளர்ந்து, ‘ஜிவ்’ எனக் கிறக்கத்தில் புடைத்தெழுந்துக் கிளர்ச்சியூட்டியது.

சிறிது சிறிதாக ‘டுப்... டுப்...’ சத்தத்தின் ‘டெஸிபல்’ அதிகரிக்க அதிகரிக்க,  செவியும், மனமும் குளிரக் குதித்துக் கும்மாளம் போட்டன. மகிழ்ச்சியின் உச்சியில் மயங்கி நின்றாள் நவிஷ்னி.

இறை அடியார்கள், நாயன்மார்கள், தொண்டரடிப் பொடிகள் போன்றோர் பக்தி மயக்கத்தின் துலங்கல்களாக, இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கூப்பி, திசை நோக்கி வணங்கிப் பரவசம் அடைவதைப் போல, நவிஷ்னியின் மதி முழுமையாய் மயங்கிய நிலையில், புல்லட்டின் டுப் டுப் சத்தம் வருகின்ற திசையை ஆவலுடன் நோக்கிப் பரவசத்துடன் தன் கிறக்கப் பார்வையைச் செலுத்தினாள்.

‘இது நம்ம ஆளோட புல்லட்டா இருக்கணுமே..!’ பரபரப்புடன் கூடிய ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பினால், விசனப்பட்டாள்.

ஒரு கணம் தனக்குள் பதட்டமாகவும் உணர்ந்தாள்.

‘வேற யாரு இந்த நேரத்துல வரப்போறாங்க.. நம்மாளு வண்டியாத்தான் இருக்கும்...!’ என்று மனதளவில் தன்னம்பிக்கையோடு, தனக்குத்தானேச் சமாதானமும் செய்து கொண்டாள்.

கல்லெரி தூரத்தில், ஹேர்பின் வளைவாய்த் திரும்பும் சாலைத் திருப்பத்தில் வளைந்து திரும்பியது புல்லட். வண்டி நெருங்க நெருங்க, புல்லட்டின் கம்பீரமான முகப்பு நவிஷ்னியின் கண்களுக்குத் தெளிவாய்த் தெரியத் தெரிய நம்பிக்கையின் விழுக்காடு அதிகமாகியது நவிஷ்னிக்கு.

‘‘நம்ம வண்டிதான்...’ என்பது உறுதிப்பட, பேதையின் போதை கூடியது. மூளை நரம்புகள் உட்பட அனைத்து நாடி நரம்புகளும் புடைத்துத் துடியாய்த் துடித்தன.

பதிவு எண்ணைப் பார்த்தாள். நவிஷ்னியின் கண்கள் கிறங்கின, குறு குறுத்து ஊறல் எடுத்தன கன்னக் கதுப்புகள். விளைவாக கன்னங்கள் ஜிவ் என்று உப்பலானாற் போல் சிலிர்த்தெழக் கிளர்ந்தாள்.

உள்ளங்கைகளை ஒன்றோடொன்று உரசிக் கொண்டாள். ஊறலெடுத்த கன்னக் கதுப்புகளை நமைச்சலெடுத்த உள்ளங்கைகளால் ஒத்தி மேலும் கீழும் ஓட்டித் தடவிக் கொண்டாள்;

நடு நடுவே வியர்த்து வழியும் நெற்றியை வலது உள்ளங்கையால் தேய்த்து விட்டு, அதன் மரமரப்பை அடக்கினாள்.

கண்களுக்குக் கீழ் வீசி விரிந்து உப்பி அடங்கி அலைக்கழிக்கும் இம்சையைச் சமனப்படுத்த, ஐந்து விரல்களையும் குவித்து, மாற்றி மாற்றி மசாஜ் செய்து கொண்டாள்.

சுயத் தொடல்களாலும், உரசல்களாலும், தேய்ப்புக்களாலும், மசாஜ்களாலும் தன்னைத்தானேத் தொடர்ந்து சூடேற்றிக் கொண்டே பரபரப்பாக நின்றாள். அங்குமிங்குமாய் பார்வை அலைந்தன.

ஊறல் எடுத்தன உதடுகள். ஜிவ்வென்ற இதழ்களை, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலையும் ஒன்று கூட்டி இதபதமாய் கிள்ளிக் கொண்டு இச்சையைச் சமனப்படுத்த முயற்சி செய்தாள்.

ஊறல் மிகுதியால் உருவான ரசாயன மாற்றம், வாய்க்குள் குபுக் எனத் தேன் ஊறச் செய்தது. நிரம்பியது குடம். கட்டுப்பாடின்றிக் கொஞ்சம் ஜொள்ளாகவும் வடிந்தது.

உடம்பும் மனசும் உச்சக் கட்டத்தில் பரபரக்க, அவளால் நிலையாக ஓரிடத்தில், நிற்க முடியவில்லை. உள்ளங்கால் ஊரலெடுத்து உப்பலாய் உருண்டன. ஓரிடத்தில் இருப்புக் கொள்ளவில்லை அவளுக்கு. தவித்துத் தடுமாறின அவள் பாதங்கள்.

டுவர், ‘பீ......................ப்’ என்று, நீ........ண்.........ட எச்சரிக்கை விசில் கொடுத்து பின், இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிப் ‘படார்’ என்று ‘ஸ்டார்டிங்’ கட்டையை அடித்து ஒலி எழுப்பியதும் ‘சடார்’ என எழுந்து ஓடும் மராத்தான் வீரன் போல் ‘சரேர்’ என ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் அவனை வரவேற்க வேண்டும் என்று சர்வாங்கமும் பரபரத்தது நவிஷ்னிக்கு.

உள்ளங்கால் முதல் உச்சந் தலை வரை சர்வாங்கமும், ‘ஜிவ்’ என்று ரசாயனம் பெருகிப் பாய்ந்துப் பரவசம் கூட்டியது.  மனசு பூராவும் மகிழ்ச்சிப் பொங்கிப் பிரவாகம் எடுத்துத் துள்ளாட்டம் போட்டது.

அதே நேரத்தில் இன்னொரு பக்கம், ‘புத்தி’ லேசாக விழித்துக் கொண்டது.

எப்பொழுதெல்லாம் மனம் தடுமாறுகிறதோ, அப்பொழுதெல்லாம் அனிச்சையாக புத்தி கிளர்ந்தெழுந்து, தடுமாற்றத்தைத் தடுக்க யத்தனிக்குமல்லவா; நவிஷ்னியின் விஷயத்திலும் அதுவே நிதர்சனமானது.

எழுந்து நின்ற புத்தி, மனம் போன போக்கில் நவிஷ்னி செய்யும் தவற்றைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை, புத்தியின் குறுக்கீட்டால் ஒரு கணம் தன் மனதை வலுக் கட்டாயமாக அடக்கிக் கொண்டு நின்றாள்  நவிஷ்னி.

வலுக்கட்டாயமாக அடக்கிவிட நினைக்கும் எதுவும் அடங்காது திமிறி எழுவதுதானே யதார்த்தம்.

அடக்கப்பட்ட நவிஷ்னினின் மனசு திமிறியெழுந்து புத்தியிடம் விதண்டாவாதம் செய்தது. தற்போதையக் கிளர்ச்சிக்கு நியாயம் கற்பித்தது.

கண்ணெதிரில் தெரிந்த போதைச்சூழல் அலைக்கழித்தது நவிஷ்னியை.

பிரகாசமாக ஜ்வலித்த சூழலில் ஒன்றிக் கலந்தது மனம். ஒரே இடத்தில் திடமாக நிற்க முடியவில்லை அவளால். அனிச்சையாக அங்குமிங்கும் அலைந்தாள், தட்டுத் தடுமாறினாள், தட்டா மாலைச் சுற்றினாள்.

நவிஷ்னியின், கிறக்கத்தையும், தடுமாற்றத்தையும், பரபரப்பையும் அனுமானித்து விட்டான் போதை சப்ளையர்.

அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்மானான். 

வண்டியின் வேகத்தை வெகுவாகக் குறைத்தான்.

மிக மிக மெ...து...வா...க... ஸ்லோ மோஷனில் முன்னேறி வந்தது புல்லட்.

புல்லட்  நெருங்க நெருங்க நவிஷ்னியின் நாடி நரம்புகள் அத்தனையும் முறுக்கேறிக் கொண்டன. உச்சி முதல் உள்ளங்கால் வரை, புடைத்துச் சிலிர்த்துத் துருத்திக் கொண்டுத் தவித்தன.

மப்பாகவும், மரமரப்பாகவும், இன்னும் என்னென்னமோ  உணர்வுகளெல்லாம் வெளிப்பட்ட மாயை வாட்டின அவளை.

மனதில் சபலம் அதிகமாகி, அதன் விழுக்காடு அதிகப்பட்டபின்  புத்தியை கழுத்தைப் பிடித்து வெளித்தள்ளி விட்டது. புத்தியின் நிழல் கூட இல்லாத இந்தக் கட்டத்தில் முழு வீச்சில் தன் போக்கில் பயணித்தது.

இனம் தெரியாத பரவசத்தில் சொக்கின அவள் கயல் விழிகள், கிளுகிளுத்தாள். கிறங்கினாள். 

வள் அருகில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், ‘புல்லட்’ எனும் இரும்புக் குதிரையாகத் தெரியவில்லை நவிஷ்னிக்கு. அதில் அமர்ந்தபடி கால் உந்தி நிற்கும் இளைஞன் சாதாரண சரக்கு சப்ளையராகத் தோன்றவில்லை அவளுக்கு.

அழகின் அனைத்து கூறுகளையும் அள்ளிக் கொட்டி ஜோடிக்கப்பட்ட, பேரழகாக ஜொலிக்கும் அன்னப் பறவையின் முதுகில், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மன்மதன், கரும்பு வில்லோடும், மலர் அம்புகளோடும் தன் முன்னே எழுந்தருளி மலரம்புகளைத் தொடுக்க நாணில் அம்பேற்றித் தயார் நிலையில் நிற்பதைப்  போல உணர்ந்தாள் நவிஷ்னி. 

புல்லட்’டின் ஹெட் லைட், நம்பர் பிளேட், இண்டிகேட்டர்கள், பம்பர்கள், ஹாரன் எல்லாம் அன்னப் பறவையின் நெற்றியாகவும், நெற்றிப் பட்டையாகவும், பளிச் என ஜ்வலிக்கும் கண்களாகவும் அழகு மிளிரும் காதுகளாகவும் , இறக்கைகளாகவும் காட்சியளித்தன அவள் கண்களுக்கு.

அதில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தவன் தேவலோக கர்ந்தர்வனாய் தெரிந்தான். 

குறிப்பாக,  அனங்கன், அங்கஜன், அந்தகன், அருங்கன், ஆனந்தன், வசந்தன், மன்ராயன், மனோசித்தன், மனோகரன், மதனன், மாறன், சேகரன், சுந்தரன், வில்லாலன், புஷ்பவனன், ராகவிந்தன், ரதி மணாளன், கந்தர்வன், காமதேவன் என்றுப் பலப் பலப் பெயர்களில் அழைக்கப்படும் மன்மதனைக் காதலும், காமமும் வழியக் கண்களால் விழுங்கினாள், ரதி தேவியாய் தன்னை வரித்துக் கொண்ட நவிஷ்னி.

ஆழ் மனத்தில் நாம் எதுவாக நினைக்கிறோமோ, அதுவாகவே ஆகிவிடுவதுதானே யதார்த்தம்.

‘நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்’ என்று கூறும் பொது மனவியல் தத்துவம் இங்கே நூற்றுக்கு நுறு உண்மையானது.

அவள் கண்களுக்கும் மனதுக்கும், பூலோகக் காட்சி முழுமையாய் மறைந்து, தேவலோகக் காட்சியாக உறுமாறியது. மன்மதனுக்கு முன் நவிஷ்னி ரதியாகவே உருமாறி விட்டாள். 

இதில் உண்மை இல்லாமலும் இல்லை.

நவிஷ்னி உண்மையிலேயே, ரதிக்குச் சவால் விடும் அழகிதான். அளந்து அளந்து, வடித்த  பேரழகுச் சிற்பம் அவள்.

அவள் படிக்கும், படிக்கும் என்பதை விட, சென்று வரும், அந்த அரசுக் கல்லூரியில் நவிஷ்னிக்கு, ரசிகர் மன்றங்களே உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

புல்லட் வண்டியின் ‘ஹாண்டில் கிரிப்’பில் நான்கு விரல்களைத் தழுவி, கட்டைவிரலை ‘தம் அப்ஸ்’ போல உயர்த்திய நிலையில் முத்திரை பதித்தபடி , இடது முன் கால் விரல்களை தரையிலுல் ஊன்றியிருக்க செருப்பின் குதிகால் பகுதி தரையோடு கிடந்தது,. , வலது காலின் நடுப்பகுதியை பாதம் பதியும் லிவரில் வைத்து அழுத்தியபடி அலட்சியமாய் நின்றான் அவன்.

கப்பும் கிளையுமாக நின்ற மரத்தில் இலைகளுக்கும், சருகுகளுக்கும், சின்னச் சின்னச் சுள்ளிகளுக்கும், இடையிடையே இருந்த இடைவெளிகளைத் தனக்குச் சாதகமாகப்  பயன்படுத்திக் கொண்டு, அதன் ஊடே தரையிரங்கியச் சூரியக் கிரணங்கள் பல்வேறு ஆரங்களிலும் விட்டங்களிலும், வடிவங்களிலும், புல்லட் ஓட்டி உட்பட அனைவர் மீதும் அனைத்தின் மீதும் நீள்வட்ட ஒளித் துகள்களை கொட்டியிருந்தது.

 இந்த ஒளிச் சிதறல்களின் பிரதிபலிப்பில் தக தகத்த புல்லட் ஓட்டியின் மேனியை கண்ணிமைக்காமல் முழுமையாய் ரசித்தாள் நவிஷ்னி. அவள் நோக்கில் கிறங்கி அண்ணலும் நோக்க ஒரு விதமான இன்பக் கிறக்கம் கிளர்ந்து எழுந்து மயக்கியது அவளை.

வெள்ளை வெளேர் என்ற மேகங்களை ஒத்தச் சிறகுகளுடன் அன்னப் பறவை, ஒய்யாரமாக நிற்க, அதன் மீது அலட்சியமாக அமர்ந்தபடி, தோகையுடன், மென்மையாய் வளைந்திருந்தக் கரும்பு வில்லை நளினமாய்ப் பிடித்துக் கொண்டிருத்தான் காமன்.

காமன் கைக் கரும்பு வில்லின் பச்சைப் பசேல் தோகைகள் ‘வா.. அருகில் வா...’ என்று தன்னை அழைப்பதாய் உணர்ந்தாள் நவிஷ்னி.

அதைத் தொடர்ந்து,  காதல் கணைகளை அவள் இதயப் பகுதியில் இடைவிடாமல் ஏவுவதும், அந்த மகரந்தம் வீசும், பல வண்ண மலர்க் கனைகள் தன் மென்மையான நெஞ்சில் குத்திக் குத்தி நவிஷ்னியின் உள்ளத்தில் காதலையும் காமத்தையும் மாறி மாறிக் கிளறி விட்டது.

தான் ஒரு பூலோகப் பிறவி என்பதை முற்றிலும் மறந்தாள். தன் பெயர் நவிஷ்னி என்பது சற்றும் நினைவில் இல்லை. தான் நிற்பது ஒரு முச்சந்தியில் என்பது அறவே அவளுக்கு மறந்து விட்டது.

தேவலோக மங்கையான ரதியாக உருமாறி விட்ட பின். எதிரே மன்மதன் கனைத் தொடுக்கும் காட்சிப் படிமங்கள் நவிஷ்னியை வெகுவாய்த் தூண்டி அவள் சமநிலையை அசைத்தன.

மன்மதனை கட்டியணைத்துச் சுகம் காணப் பரபரத்தன அவள் கைகள். முத்தித் தேன் பருக ஊறலெடுத்தன அவள் அதரங்கள்.

“கம்... கம்... கம்... ஹியர்...! –அழகாக அதரங்கள் அசைந்து அழைத்தன அவனை.

இப்போது நவிஷ்னியின் குரலில் கொஞ்சல், கெஞ்சல், எதிர்பார்ப்பு, காதல், காமம் அனைத்தும் ஒரு சேர வெளிப்பட்டன. முகம் முழுவதும் பரவியப் பசலை, மனசு முழுதும்  மந்தஹாசம் ஆக்ரமித்தது.

“ஹா...ய்...” வாய் விட்டுக் கூவினாள்.

அழைப்புக்கு ஏற்றவாறு அனிச்சையாய் அவள் இரண்டு கைகளும் இறக்கைகளாய் விரிந்து மெய்ப்பட்டது.

‘வா... வா... வா... என் மேல் வந்து சாய்ந்துக் கொள், தாங்கிக் கொள்கிறேன்’, என்பது போலவும், கையில் வந்து அமர்ந்து கொண்ட காதலனை இடதும் வலதுமாய் ஆட்டித் தாலாட்டுவது போலும் இருந்தது அவளின் வடிவமான, மெருகான, கைகளின் அழகான அசைவுகள்.

அவளின் விரல் அசைவுகள், ஒரு நாட்டியத் தாரகையின் அபிநய முத்திரைகளுக்குச் சவால் விட்டாற்போல இயங்கின.

மகிழ்ச்சியும், களிப்பும் பொங்கித் ததும்பும் இன்பத் தருணமுமாக உணர்ந்த அவள்,  தன்னருகே அவன் எப்போது வரப்போகிறான்? அவனை அப்படியேத் தாங்கி அணைக்க வேண்டுமே! , என்று ஆசையோடும் எதிர்பார்ப்போடும் பரவசத்தில் முகிழ்ந்திருந்தாள் நவிஷ்னி.

புல்லட் ஓட்டியின் முகம் இப்போது சலனமற்று இருந்தது. எந்தவிதமான விதமான உணர்ச்சி வெளிப்பாட்டையும் அவன் முகத்தில் பிரதிபலிக்கவில்லை . உடல் மொழியாலும், செயல்பாட்டாலும் கூட எந்த எதிர் வினையுமாற்றவில்லை அவன்.

மாறாக, ‘ச்சை.. ஆள வுடு, நீயெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை;

எனக்குப் பல கஸ்டமர்கள். அதுல நீ ஒருத்தி...’ ;

உன்னை சைட் அடிப்பது என் வேலையில்லை, என் வேலையைப் பத்தி எனக்குத் தெளிவிருக்கு ; – என்பதைப் போல அலட்சியம்தான் தெரிந்தது அவனிடம்.

புல்லட் ஓட்டி, நவிஷ்னியை கிஞ்சித்தும் கண்டு கொள்ளவே இல்லை. அவளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவள் பக்கம்கூடத் திரும்பவில்லை. அலட்சியமாக வேறு எங்கோ பார்த்தான்.

அவன் நடவடிக்கைகள் உண்மையானதல்ல. முற்றிலும் நடிப்பு.

பெண்களைக் கவிழ்க்க, சில காமாந்தக இளைஞர்கள் நிலைக் கண்ணாடியின் முன் நின்று மணிக் கணக்காகப் பயிற்சி எடுத்துத் செயல்படுத்துகிற நடிப்பு இது.

இவன் நடிக்கிறான் என்று ஒரு பேதை அறிவதற்குள், தன் வயப்பட்டவளை வசப்படுத்தி, வாயும் வயிறுமாக ஆக்கிவிட்டுத் தப்பிவிடுவார்கள் இது போன்ற காமாந்தகர்கள்.

கெட்ட பழக்கங்கள் இல்லாத குடும்பப் பாங்கான பெண்கள், மிகச் சுலபமாக இதுபோன்ற ஆசாமிகளை மிகச் சரியாக அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ளி விடுவார்கள்.

ஆனால், திசை மாறிப் போன பெண்கள் இப்படிப்பட்ட ஓநாய்களிடம் மாட்டிக் கொண்டு வாழ்க்கை பூராவும் அவதியுறுவார்கள்.

து நம்மை அலட்சியம் செய்கிறதோ அதன் மேல்தானே ஈர்ப்பு ஏற்படுவதுதானே இயற்கை !

எது வேண்டாம் என்று ஒதுங்குகிறதோ, அதை அடைந்தே தீர ஆசைப்படுவதுதானே மனதின் குணம் !

இந்த நகை முரணான கட்டத்தில் தவித்தாள் நவிஷ்னி.

சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தையும் ஒரே உருவில் அமைத்தாற் போல, சௌந்தர்யமே வடிவாக, பளிங்குச் சிற்பம் போல் அபூர்வ முத்திரைகளுடன் அசையும் நவிஷ்னியை அலட்சியப் படுத்திய முதல் ஆணாக இருந்தான் அவன்.

'தொண்டு கிழமாயினும், நின்றுத் திரும்பிப் பார்க்கும் அளவுக்குக் ஜ்வலிக்கும், கவர்ச்சிக் கன்னியான என்னை, ஒரு சாதாரண போதை மருந்து சப்ளை செய்யும் இளைஞன் அலட்சியப் படுத்துகிறானே..!' 

ஏற்க முடியாமல் குமைந்தாள் நவிஷ்னி.

தன் வாழ்நாளில் இப்படிப் பட்ட ஒரு கசப்பான அனுபவத்தைத் முதன் முதலாய்ச் சந்தித்த அவளுக்கு இது ஒரு பேரிடியாய்த் தாக்கியது.

அந்த இளைஞனின் மீது ஏற்பட்ட ஆத்திரம் படிப்படியாய் வளர்ந்து, பூதாகாரமானது. கொலை வெறியாய் எகிறி நின்றது.

புல்லட்டில், பின்னாலிந்த கையாளை நோக்கித் திரும்பினான், அவனிடம் ஏதோ முணுமுணுத்தான், அடுத்த கணம் பின்னால் அமர்ந்திருந்த அவன்  இடது காலை தரையில் அழுத்த ஊன்றி, வலதுகாலை சுழற்றி ‘சரக்’ என தரையில் இறங்கி நின்றான்.

அவன் இறங்கியதும், அலட்சியமாய், சாவி திருகி இஞ்சினை மீண்டும் உயிர்ப்பித்தவன், ‘சரக்என புல்லட்டை சில அடிகள் முன்னால் நகர்த்தினான். சாவியை இடது வசத்தில் திருகி, இஞ்சினை நிறுத்தினான். இடது முன்காலை, தரையில் பதித்து, எத்தி எத்திச் சில அடிகள் வண்டியைப் பின்னால் தள்ளினான்.

புல்லட்டின் பின்னால் இருந்து இறக்கி விடப்பட்டவன்,  இங்குமங்கும் இலக்கற்று நகர்ந்து, சுற்றும் முற்றும் வேவு பார்த்தான். 

‘தங்களை யாராவது பின் தொடர்கிறார்களா...’ என்பதை நுட்பமாக நோட்டமிட்டான்.

யாரேனும் சந்தேகத்துக்கு இடமானவர்கள் கண்களில் பட்டுவிட்டாலோ, தங்களுக்கு ஆபத்து நேருமென்று உள்ளுணர்வு சொன்னாலோ, “கம்... கம்... க்விக் க்வக் ...” என்று எச்சரிக்கை செய்து, தன் கூட்டாளியைத் தப்பிக்க வைக்க வேண்டியதுதான் அவன் வேலை.

அது போல எச்சரிக்கை ஒலி வந்துவிட்டால் , அடுத்த கனம், விருட் என புல்லட்டோடு அவன் அருகில் நகர்வான் சாரதி. 

ஓடுகிற வண்டியில் அவன் பாய்ந்து ஏறி அமர்வான். சிட்டாய்ப் பறந்து விடுவார்கள்.

டுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தன்னை தயார் செய்து கொண்டான் புல்லட் ஓட்டி.

முதல் கட்டமாக தான் செய்யத் தீர்மானித்திருக்கும்  செயலுக்குக் சாதகமாய், அந்த இழி செயலை செய்வதற்கு வசதியான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொள்ள யத்தனித்தான்.

சுற்றுச் சூழலை திறமையாய் கணித்தான்.

சாவியை வலப்பக்கம் க்ளக் எனத் திருகி, இஞ்சினுக்கு உயிரூட்டி, ஆக்ஸலேட்டர் திருகி உருமவிட்டான். போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி, மயூரி நின்றிருந்த சாலையோர மரத்தடியை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

வலது காலை தொண்ணூறு பாகைத் தூக்கினான். இடதுகாலை தரையில் சுழற்றி, ஸ்டைலாக இறங்கினான். சோம்பேறி ஸ்டாண்ட் போட்டுச் சாய்வாய் நிறுத்தாமல், ‘மெயின் ஸ்டாண்ட் போட்டு உறுதிச் சமநிலையில் புல்லட் நிறுத்தினான்.

தொழில் முறையில், நவிஷ்னியின் முன் வந்து சற்றே விலகி நின்றான். அந்த விலகல் ஆத்திரமூட்டியது அவளுக்கு.

 ‘நான் அவனை பக்கத்துல வரச்சொல்லி ஜாடை காட்றேன், எட்டி எட்டிப் போறான்...? ராஸ்கல்... இவனை ...! வெச்சிச் செய்யலன்னா நான் நவிஷ்னி யில்லை... – உள்ளுக்குள் கருவினாள் நவிஷ்னி.

விஷ்னி.

‘ட்ரக் அடிக்ட்.’ அதாவது ‘போதைக்கு அடிமையானவள்’

போதைக்கு அடிமையான பலரும், தொடக்கத்திலேயே அதிக மயக்கம் தரும் போதைப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி, போதைக்கு அடிமையாக வேண்டும் என்று ஆசைப்பட்டுச் சூளுரைத்தவர்கள் அல்ல.

'மனிதன் பழக்கத்துக்கு அடிமையாவான்!' என்ற கூற்றுதான் எத்தனை உண்மை.

நல்ல பழக்கமாக இருந்தாலும் சரி , கெட்ட பழக்கமானாலும் சரி, தொடர்ந்து ஒன்றைச் செய்யும்போது அதற்கு அடிமையாவது மனிதன் மட்டுமல்ல விலங்குகளும்தான். 

தரமற்ற நண்பர்களின் வற்புறுத்தல்களாலும், மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதற்காகவும், இப்படி ஏதேனும் ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, தொடக்கத்தில், கொஞ்சமாகத்தான் போதை யேற்றிக் கொள்கிறார்கள். நாளுக்கு நாள் ஏற்றிக் கொள்ளும் போதை மருந்தின் அளவு அனிச்சையாய் அதிகமாகிறதை அவர்கள் உணர்வதில்லை என்பதுதான் யதார்த்தம்.

நாளடைவில் ஏற்றிக் கொள்ளும் குறிப்பிட்ட, போதை மருந்துகள் முழுமையாக போதை தராமல் செயலிழந்து விடுவதால், எடுத்துக் கொள்ளும் போதை மருந்தின் வீரியத்தை கூட்ட வேண்டியிருப்பதோ. அல்லது, அடுத்த கட்டடமாக இருக்கும் சக்தி வாய்ந்த அதிக போதைப் பொருட்களையோ தேர்ந்தெடுப்பது தவிர்க்க முடியாததாகிறது.

நிலையான போதையை உறுதி செய்து கொள்ள, ஒரு முறை செலுத்திக் கொண்டதை இரு முறை மும்முறை என அதிகரித்துப் பலமுறை உட்கொள்வது அல்லது செலுத்திக் கொள்வதும் உண்டு. 

இப்படியெல்லாம், ஏதோ ஒரு விதத்தில் உடம்பிற்குள் செல்லும் போதை வஸ்துக்களின் விளைவாக, நரம்புகள் விரிந்தும் தளர்ந்து கொடுத்தும் அதன் சமநிலையை இழந்துவிட,  Dissosiation Identity Disorder என்கிற, தன்னை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது வாடிக்கையாகிறது.

அதன் தொடர்ச்சியாக வருவதே  Delusional disorder ? என்று சொல்லப்படுகிற ‘மனச் சிதைவு’. 

அந்த மனச்சிதைவு நோய்தான் நவிஷ்னியை இப்போது முற்றிலுமாய் ஆக்ரமித்திருந்தது.

‘தக தக’ வெனத் தன் முன்னே வண்ண மயமாய் ஒளிர்ந்தபடி மாயத் தோற்றமாய்த் மயக்கும், கானல் பிறழ்வுக் காட்சிகளின் ஈர்ப்பில் மனதை முற்றிலும் பறி கொடுத்து விட்டாள் நவிஷ்னி. கண்டதே காட்சி கொண்டதே கோலமாகி விட்டது அவள் வாழ்க்கை. மாயத்தை நிஜம் என்று தீர்மானிக்கத்  தொடங்கி விட்டது  ஆழ் மனம். விளைவு..?

மொத்தமாகப் நவிஷ்னியின் பாதையையும் பயணங்களையும் மாற்றி போட்டு விட்டது போதை.

பாதைத் தவறிய கால்கள் என்றைக்கும் விரும்பிய ஊர் சென்று சேர்ந்ததாக வரலாறு இல்லையே? நவிஷ்னி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

டந்த ஆறு மாத காலங்களில் வேறு வேறு இளைஞர்களின் கையால் சரக்கு வாங்கியிருக்கிறாள் நவிஷ்னி.

பல்வேறு இயல்புகளும், நடவடிக்கைகளும் கொண்ட சப்ளையர்களை கடந்துதான் வந்திருக்கிறாள் அவள். சரக்கு சப்ளை செய்பவர்களின் தோற்றங்கள் அவள் கண் முன் நிழலாடின.

கதா நாயகன் போல, வில்லன் போல, காமடியன் போல விதம் விதமாய்  கலகலப்பாய்,  கம்பீரமாய், மிடுக்காய், எடுப்பாய், பிடிப்பாய், ஒடிசலாய், தேசலாய், இன்னும் வேறு வேறு அமைப்பிலும் முன்னெடுப்பிலும் காட்சியளித்த இளைஞர்களையெல்லாம் சந்தித்திருக்கிறாள் நவிஷ்னி.

போதை மருந்தைக் கையில் தரும் முன் அவளின் அழகை அற்புதமாய் ஆராதித்து, அணு அணுவாய் ரசித்து, கண்களால் பருகி, நாவில் சுவையரும்புகள் வெளிப்படுத்தும் தேனைச் சொட்டவிட்டு நிற்கும் இளைஞர்களின் கிளர்ச்சிகளைப் ஓரக் கண்ணால் பார்த்துப்  பார்த்துப் பூரித்திருக்கிறாள்.

ஆனால் இன்று வந்த இளைஞன் மிகவும் வித்தியாசமாக, தன்னை சிறிதும் மதிக்காமல் நின்றது எரிச்சலைத் தந்தது அவளுக்கு.

போதைச் சரக்குகளை கடத்தும்போதும் சப்ளை செய்யும் போதும், சில அணுகு முறைகள் தொழில்முறையில் பின்பற்றப்படுகின்றன. இது மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட் நெட் ஒர்க்.

கடத்தல்களின் பின்னணி வேறு. கிளையண்ட்டுக் சப்ளை செய்யும் விங் வேறு.

ஒரு முறை ஒரு ஏரியாவுக்குச் சென்று சில பல வாடிக்கையாளர்களுக்குச் சரக்கு சப்ளை செய்பவனை, மூன்று மாத காலம் எந்தக் காரணம் கொண்டும் மறுமுறை அதே ஏரியாவுக்கு அனுப்புவதில்லை மேலிடம். 

போதை மருந்து சப்ளை செய்யத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களை மூளைச் சலவை செய்யக் கொடுக்கப்படும் பயிற்சியின் முறை மிக வித்தியாசமானது.

அவர்கள் அளிக்கும் தீவிரப் பயிற்சியினால் எப்படிப்பட்ட இளகிய இதயமும் இருகிவிடும் என்பதே யதார்த்தம்.

இதுபோன்றப் பயிற்சி வகுப்புகளுக்கு சர்வதேச போதை மருந்துக் கடத்தல் பிரிவில் கொடிகட்டிப் பறக்கும் பாஸ்களும் கலந்து கொண்டு பயிற்சி அளிப்பார்கள்.

ராணுவ சிப்பாய்களுக்கு Gap Fillers  என்று ஒரு அடை மொழி உண்டு.

போர்புரியும்போது முன் வரிசையில் போராடி உயிரிழப்பார் ஒரு சிப்பாய். அந்தச் சிப்பாய் இன்று காலைத் தன்னோடு சேர்ந்து காலைச் சிற்றுண்டி உண்டதையோ, தாங்கள் இருவரும் ஒன்றாகப் பயணித்துப் போர் முனைக்கு வந்தபோது தாங்கள் பேசிய பேச்சையோ, தன்னுடைய உயிர்த் தோழன் என்பதையோ, பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் அந்தச் செத்த உடம்பு மேலேயே ஏறி முன்னே சென்று அவன் நின்ற இடத்தை ஆக்ரமித்துப் போரைத் தொடங்க வேண்டும் என்கிற அளவுக்கு ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படுவதைப் போல, இங்கேயும் நெஞ்சில் ஈரம் அற்ற வகையில் செயல்படப் பயிற்சி அளிக்கப் படுகிறது.

அப்படிப் பட்ட கடுமையான பயிற்சியைப் பெற்றுவிடுவதால், தன் கூட்டாளிகளில் எவன் எங்கே எப்போது யாரிடம் மாட்டினாலும், அவனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படாமல், தப்பித்துச் சென்று விடுவார்கள்.

ந்தத் தொழிலுக்கு வருபவர்களில், பெரும்பாலும், படித்த மேதாவிகள்தான். கிட்டத்தட்ட அறுபது சதவிகித இளைஞர்கள் மெத்தப் படித்தவர்கள் என்பதால், இப்படிப் பட்டப் பயிற்சிகளை மிகவும் வெற்றிகரமாக நடத்த முடிகிறது இவர்களால்.

மேலும் படித்த இளைஞர்களுக்கு, பற்பல நுணுக்கங்களை  மிகவும் திறமையாகப் புரிந்து கொள்வதற்கேற்ற அறிவும் திறனும் மிகுந்திருப்பதால் மிகத் துல்லியமாகத் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் இவர்கள்.

சமூக விரோதச் செயல்களைச் செய்தாலும், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வியாபார முறைகளைப் பின்பற்றப் பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால், இவர்கள், பெரும்பாலும் எதிலும் சிக்காமலும், எதையும் தங்கள் மேல் சிக்க விடாமலும் தப்பிக்கும் சாணக்கியம் இவர்களுக்குள் ஆழமாய்ப் பதிந்து இருக்கிறது.

‘வியாபாரம்’ என்று வரும் போது, எந்த வித தாட்சண்யத்திற்கும், எந்த வித சபல புத்திக்களுக்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் இவர்களின் சித்தாந்தம்.

இன்னும் சொல்லப் போனால், போதை மருந்து சப்ளையர்களுக்கு போதை மருந்தை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் கூடப் பெரும்பாலும் இருப்பதில்லை.

ந்தத் துறையிலும் கருப்பு ஆடுகள் கலந்து இருப்பதைப் போல விதிகளை மீறும் சிலரும் இந்த வியாபாரத்தில் கலந்துவிடுவது உண்டு. 

அது போன்ற சில சபல சித்தர்களால்தான், பொது இடங்களில், போதைக்கு அடிமையான கல்லூரி மாணவிகள் தரக்குறைவாக நடத்தப் படுகிறார்கள்.

கன்னியர்களின் போதைப் பழக்கத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மான பங்கப் படுத்தப்படுவதும் இத்தகைய ஆட்களால்தான்.

பொதுவாக, போகிற போக்கில் சரக்குகள் நகரும்.

‘எவருக்கு, எந்தச் சரக்கு எங்கு எப்படித் தந்தார்கள்...? எப்போது அதற்கான தொகை வசூலாகியது? தொகை பாக்கி யாரிடமாவது உண்டா?’ என்ற எந்த விபரங்களும் சரக்குத் தருபவனுக்குத் தெரியாது.

அது மட்டும்தானாத் தெரியாது?

சரக்கைக் கை மாற்றச் சொல்லித் ஒருவன் தருவான். அவன்தான் முதலாளியா? அவனுக்கு மேல் யாராவது பாஸ் இருக்கிறார்களா? என்றெல்லாம் எந்த விபரமும் தெரியாது.

 ‘மடித்துக் கொடுக்கிற சரக்கை, சுட்டுகிற இடத்திற்கோ, நபருக்கோக் கை மாற்றினால் பேசிய துகைக் கச்சிதமாக விள்ளாமல் விரியாமல் கைக்கு வந்துவிடும் என்பதில் உறுதி இருந்ததால். தங்களுக்குத் தேவையில்லாத செய்திகளைத் தெரிந்து கொள்ள முயல்வதுமில்லை அவர்கள்.

‘இது ஒரு சமூக விரோதச் செயல் என்று தெரிந்தும், கொண்டு போய்க் கொடுக்கும் சரக்கு எத்தகையது? அதன் மதிப்பு என்ன? என்று எதுவும் தெரியாமல், யாருக்காக உழைக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.?’

யாருக்காகவும் அல்ல. மூன்று வேளை இல்லாவிடினும், இரண்டு வேளையோ, குறைந்த பட்சம் ஒரு வேளையோ வயிற்றைக் கழுவிக் கொள்வதற்காக உழைப்பவர்கள்தான் அந்த இளைஞர்கள்.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்  அவர்களுக்குக் கவலையில்லை. இயந்திரமாய்ச் செயல் படுவார்கள். கொடுத்த காசை பேரம் பேசாமல் வாங்கிச் செல்வார்கள்.

பல சமயங்களில், பல கஸ்டமர்களைச் சந்திக்கும்போது, டூவீலரைச் ‘சுவிட்ச் ஆஃப் கூடச் செய்ய மாட்டார்கள். அவ்வளவு ஏன் பல நேரங்களில், வண்டியை நிறுத்தி ஒப்புக்கு ஒரு சைடு ஸ்டாண்ட் கூடப் போடாமல், ஆமை வேகத்தில்  வண்டி நகர்ந்து கொண்டிருக்குபோதே சரக்குக் கை மாறிவிடும்.

கவரில் போட்டுக் கஸ்டமர் கொடுக்கும் காசை, வண்டியின் பின்னால் அமர்ந்தவன் வாங்கி பைக்குள் போட்டுக் கொண்டு, ‘ம் என்பான்.

‘அந்தக் கவருக்குள் காசு இருக்கிறதா? இல்லையா?; எவ்வளவு தொகை உள்ளது?’ என்று எந்த விபரமும் தெரிந்து கொள்ள அனுமதியில்லை சப்ளையருக்கு.

            ஒரு ஆர்வக் கோளாரில், சப்ளை செய்யப்பட்ட போதை வஸ்து, உறையில் எழுதப்பட்ட பெயர், முகவரி, உறையின் உள்ளே இருக்கும் தொகை, இப்படி எதையாவது  தெரிந்து கொள்ள முயற்சித்தால், அவ்வளவுதான். நிலைமை விபரீதமாகிவிடும்.

எந்த நிலையிலும் மேலிடத்துக்குச் செய்தி தெரிந்துவிடும். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணித்துக் கொண்டே இருக்கும் பிரும்மாண்டமான நெட் ஒர்க் (வலைப் பின்னல்) அது.

ணம் வைக்காமல் வெறும் கவர் கொடுத்து கஸ்டமர் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது ? என்று கூடச் சந்தேகம் வரலாம் உங்களுக்கு.

அப்படி ஒரு வேளை ஏமாற்றி விட்டால் என்ன ஆகும்..? ;

சிம்பிள் ரெமடி..

ஏமாற்றிய கஸ்டமருக்கு, அடுத்த வேளைச் சரக்குத் தர மாட்டார்கள். போதை மருந்து இல்லாமல் தவிக்க விடுவார்கள்.

போதை மருந்தை கையில் வைத்துக் கொண்டு அடிக்ட்டின் அருகில் வந்து நின்று சபலத்தை ஏற்படுத்துவார்கள். தேவையைத் தூண்டுவார்கள். தேவையின் உச்சத்தில், போதைப் பொருளைப் பெற்றேத் தீர வேண்டும் என்ற தீராத வெறியோடு, சாம தான பேதம் எனும் எந்த முறையிலும் பலிக்காமல் போனால், கடைசீ முயற்சியாக காலில் விழுந்து கெஞ்சுவான் அடிக்ட்.

எப்படிக் கேட்டாலும், எவ்வளவு கெஞ்சினாலும், “தரவே முடியாது..” என்று பிடிவாதமாய் மறுத்து விடுவான் சப்ளையர்.

ஒரு வேளைச் சரக்கு நிறுத்தினாலே அடிக்ட் நிலையில் இருப்பவர்களுக்கு மிகப் பெரிய தண்டனைதான். அவ்வளவு ஏன்... ஓரிரு நிமிடங்கள் போதையைத் தரத் தாமதப் படுத்தினாலே தாங்க முடியாது அவர்களுக்கு . அப்படிப்பட்ட நிலையயில், ஒரு வாரம் சப்ளை தராமல் போக்குக் காட்டுவது  என்பது மரண தண்டணைக்குச் சமமானது.

மாற்றப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கஸ்டமருக்குச் சரக்குத் தராமல் மிகப் பெரிய தண்டனை தருமே ஒழிய, கடைசீ வரை சரக்குத் தராமல் மறுத்து, கஸ்டமரை இழக்கவும் விரும்ப மாட்டார்கள். தொடர்ந்து அந்த நபரைக் கண்காணிக்கவும் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

காரணம் - அந்த வாடிக்கையாளர் இறந்துவிட்டாலோ, அல்லது போதைப் பழக்கத்திலிருந்து வெளியே வந்து விட்டாலோ, ‘ட்ரக் பிசினஸ்க்கு நஷ்டம் வந்துவிடும் அல்லவா? 

அதனால், ஒரு அளவுக்கு மேல் தவிக்க விட மாட்டார்கள். ‘பணமே வைக்காமல் வெறும் கவர் தந்தோ, அல்லது உரிய துகைக்குக் குறைவாகக் கவரில் வைத்துத் தந்து ஏமாற்றியது தவறுதான் என்று, ஏமாற்றிய நபரை உணர வைத்து விட்டுத் தொடர்ந்து சரக்கு கொடுத்து ஆதரிப்பார்கள்.

ஒரு முறை அது போன்ற குற்றமும் தண்டணையும் அனுபவித்த பிறகு கடைசி மூச்சு வரை எந்த வகையிலும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்காத, நேர்மையான கஸ்டமராய் ஆகிவிடுவார் அந்த அடிக்ட்.

புல்லட் வண்டியின் முன்புறத்தில் உப்பலாய்க் கிடக்கும் , ‘டாங்க் கவர் ‘கம்ப்பார்ட்மெண்டில் கை விட்டுச்  சரக்குப் பொட்டலத்தை எடுத்து, கை நடுக்கத்துடனும், பரபரப்புடனும், பரவசத்துடனும் நீட்டுகிற கைகளில் சரக்கைப் போட்டுவிட்டு, வந்த வேகத்தில் திரும்பியவர்களையே அதிகம் சந்தித்திருக்கிறாள் நவிஷ்னி தன் அனுபவத்தில்.

ஆனால் இன்றைய சப்ளையர் இளைஞன் மிகவும் வித்தியாசமாக நடந்து கொண்டான். அவனுடைய நடவடிக்கைகள் எரிச்சலூட்டின அவளுக்கு.

‘டிஸ்ட்ரிபியூட்’ செய்கிற வேலைக்குத் தேர்ந்தேடுக்கப்பட்ட பின், அவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். அதன் பிறகே அவர்கள் வாடிக்கையாளர் சேவைக்காக அனுமதிக்கப் படுவார்கள்.

வாடிக்கையாளர் சேவை என்பது கத்தி மேல் நடக்கிற மாதிரி. கொஞ்சம் ஏமாந்தால் சிக்கலில் மாட்டிவிடக்கூடும் என்பதால், நெட் ஒர்க்கின் பாதுகாப்பிற்காக, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து இன்டோர், அவுட்டோர் ஷூட்டிங் எடுப்பார்கள்.

அது என்ன ஷூட்டிங் என்கிறீர்களா..? சப்ளையர் இளைஞர் ஒவ்வொருவரையும், அழகான பருவ நங்கைக்கு போதைப் பொருள் சப்ளை செய்யச் சொல்லி, அதைத் தரும்போது அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளுமாறு நடிக்க வைப்பார்கள். பாலியல் வன் புணர்வு செய்வது போலவும் அந்த நடிகை கூப்பாடு போட்டு அலறுவது போலவும் காட்சிப் படுத்துவார்கள்.

அனைத்தையும், 360 டிகிரிக் கோணத்தில் வீடியோவும், புகைப்படங்களும் தயார் செய்து வைத்திருப்பார்கள்.

சப்ளையர் எங்கேனும் சிக்கலில் மாட்டிக் கொண்டு , தப்பமுடியாமல், சூழ்நிலைக் கைதியாகி ‘அப்ரூவர்’ ஆகும் நிலையோ, வேறு ஏதேனும் வகையில் சிக்கல்கள் வந்து விட்டாலோ, சூழ்நிலைக்கும், வழக்கின் போக்குக்கு ஏற்ப , வண்புணர்வுக் காட்சிளையோ, காமுகனைப் போலவோ, பெண்ணுடன் செட்டப் செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையோ வெளியிட்டு, அந்த நபரை ஒட்டு மொத்தமாகக் கவிழ்த்து விடுவார்கள்.  

சில இளைஞர்கள், நடிப்பை நிஜமாக்கவும் முயற்சி செய்வதுண்டு. பிரச்சனை வராத வரை அதையெல்லாம் மேலிடம் கண்டு கொள்ளாது. ஏதேனும் சிக்கல் என்றால் வைத்துச் செய்துவிடும்.

ரக்கைத் தரும் போது, சம்பா கோதுமை நிறமொத்த நவிஷ்னியின் நவிஷ்னியின் புறங்கைகளை இடது உள்ளங்கையால் தாங்கி, வெண் பட்டுப் போன்ற அவள் உள்ளங்கையில் தங்கள் குவித்த விரல்களால் கிள்ளி வழித்து, அவளை ஸ்பரிசித்த விரல் குவியலை தங்கள் உதட்டில் பொருத்தி முத்தமிட்டுக் களித்தவர்களும் உண்டு;

‘சரக்கு வாங்குபவள் தானே...!,- என்ற உரிமையில் கன்னத்தைத் தடவி தடவிய விரல்களை முத்தமிட்டுக் களித்தவர்களையும் கடந்துதான் வந்திருக்கிறாள் நவிஷ்னி;

முத்தத்தை அவள் முன் பறக்க விட்டவர்கள்;

ஏக்கத்தோடு அவள் வனப்பைக் கண்டுப் பெரு மூச்செரிந்தவர்கள்;

இடுப்பைப் பார்த்து ஜொள்ளு விட்டவர்கள்.

ஏக்கத்தோடு, எச்சில் ஒழுகவிட்டவர்கள்... என. ரக ரகமான இளைஞர்களைப் பார்த்திருக்கிறாள் நவிஷ்னி.

சாதாரணமாக, நேருக்கு நேர், கண்ணுக்குக் கண், ஒரு பார்வைக் கூடப் பார்க்காமல், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு மொத்தமாகத் தன்னை அலட்சியப் படுத்தும் இந்த இளைஞனைப் பார்த்தபோது ஆயாசமாக இருந்தது அவளுக்கு.

விஷ்னிக்கு இது முற்றிலும் புது அனுபவம் என்பதால் கொப்பளித்தது கோபம்.

கோபத்தில் உச்சத்தில், கால்களை அழுத்தமாய்த் தரையில் பதித்தாள். இறுக்கமான ‘ஜீன்ஸ் பேண்ட்டில் டிசைன் செய்யப் பட்டிருந்த  நாகரீகக் கிழிசல்களில் அவள் தொடைகள் பிதுங்கி வெளியே எட்டிப் பார்த்தன.

கால்களை மடக்கிய போது, இரண்டாம் இதயம் என்று சொல்லபப்படும், குதிரை முகம் பருத்து  ஜீன்ஸ் கிழிசல்களின் ஊடாகப் பிதுங்கின...

ஆத்திரமாய்ப் பெருமூச்செரிந்ததில், இறுக்கமாக அணிந்திருந்த ‘டீ ஷர்ட்’ மேலும் இறுக்கமாகியது.

காண்பதற்கு, தேர்ந்த சிற்பி, வடித்து நிறுத்திய கருங்கல் சிற்பம் உயிர்ப் பெற்று அசைவது போலவே தோன்றியது.

நெஞ்சுக்கு நேரே டி ஷர்ட்டில் எழுதப் பட்டிருந்த, இரு பொருள் பொதிந்த ஆங்கில வார்த்தைகள் சுருக்கமில்லாமல், பளிச்செனப் சமுதாயத்திற்குப் பறைச் சாற்றியது.

போதையின் தேவை உச்சம் தொட, வலது கை ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்து, பாக்கெட் இல்லாத, ‘மிகவும் பிடிப்பான, ‘டைட் டீ ஷர்ட்டு’- ன் உள் இயல்பாக நுழைத்து ‘வாலட்டை வெளியில் எடுத்தாள்; இடது கையில் வைத்து விரியத் திறந்தாள்;

கொத்தாய்ப் பணத்தை கிள்ளி எடுத்தாள்;

ஓட்டமும் நடையுமாய் புல்லட்டை நெருங்கினாள் நவிஷ்னி.

புல்லட் ஓட்டியின் பார்வையில் இப்போது வக்ரம் வெளிப்பட்டது .

“என்னடா அப்படிப் பாக்கறே...! ; வந்த வேலைய மட்டும் பாரு...! என்று அதட்டினாள் நவிஷ்னி.

ஓ..! - எனக் கேவலமாய் இளித்தான் புல்லட் ஓட்டி.; அவன் முகம் மேலும் இறுகியது.

புல்லட்டை வெடுக்கென முன்னோக்கித் தள்ளினான். ‘சென்ட்ரல் ஸ்டாண்ட் விலகி, ‘டக்’ என மடித்துக் கொண்டது.

புல்லட்டில் தாவி ஸ்டார்ட் செய்தான்; “உட்காருடா மச்சி, பாப்பா சொல்றிச்சில்ல; வந்த வேலைய மட்டும் பாப்போம்...!”- என்றான்.

அப்போது அவன் வாய் ஒரு பக்கமாய்க் கோணியபடி விகாரமாய் இளித்தது.

உடன் வந்தவனும், வலது காலைக் தூக்கிப் போட்டுப் பின்னால் அமர்ந்தவுடன், ‘யு டர்ன்...’ போட்டான்.

விஷ்னிக்கு இதைப் பார்த்ததும், கை கால்கள் உதறலெடுத்தன; காரணம் இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர் பார்க்கவில்லை.

அவள் முகத் தசைகள் இறுகின;

உடம்பு புராவும் வெலவெலவென்று வந்தன ;

கால்கள் துவண்டன ; நாக்கு அன்னத்தோடு ஒட்டிக் கொண்டன. பேச்சு வரவில்லை... ;

தடுமாறியபடி அவனை நோக்கி ஓடினாள்.

மெதுவாக நகர்ந்த புல்லட்டின் பின்னே இவளும் ஓட்டமும் நடையுமாக நகர்ந்தாள். நடுங்குகிற அவள் வலது கையில் பணம் இருந்தது.

பணத்தோடு இரண்டு கைகளையும் குவித்து வணங்கினாள் நவிஷ்னி.

இப்போது நவிஷ்னியின் நாடி நரம்புகளிலெல்லாம் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தால் நடுக்கம் அதிகரித்தது.

போதைக்கு அடிமையாகியவர்கள் சரியான நேரத்தில் போதை மருத்தை செலுத்திக் கொள்ளாவிட்டால் ஏற்படும் ‘வித்ட்ராவல் சிம்டம்ஸ்என்று சொல்லக் கூடிய, எதிர்மறை விளைவுகளால் தவித்தாள் நவிஷ்னி.

அவளின் உடம்பில் தெப்பலாய் வெளிப்பட்ட வியர்வையையும், கை கால் நடுக்கங்களையும், வாய் கோணுதலையும் ‘ரியர்’ கண்ணாடி வழியாகப் பார்த்து வக்ரமாய் ரசித்தான் சப்ளையர் இளைஞன்.

கொஞ்சம் ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான். நவிஷ்னி அதை விட வேகமாக ஓடி முன்னால் வந்து நின்று ஹாண்டில் பார் அமல் இருந்த அவன் கைகளை அழுத்திப் பிடித்து வண்டியை நிறுத்திக் “சரக்கு... சரக்கு...” என்று பரிதாபமாகக் கெஞ்சினாள் நவிஷ்னி.

“சரக்கு குடு... ப்ளீஸ்... சரக்கு குடு... கேட்டாள், கேவினாள், கெஞ்சினாள். விம்மினாள், துடித்தாள், துவண்டாள் உடம்பு பூராவும் வெடவெட வென நடுங்க வதங்கிச் சரிந்தாள்.,.

தெனாவெட்டா பேசுன,..?” – அவள் நெற்றியை புறங்கையால் நெட்டித்தள்ளி, அவளுக்கு முகம் காட்டினான் சப்ளையர்.

ஸாரி... ஸாரி... என்றாள். நவிஷ்னி ;

“சரக்கு... சரக்கு... சரக்கு...என்று விடாமல் கெஞ்சினாள்;

அவன் மிஞ்சினான்.

நவிஷ்னியின் கன்னங்களைக் தொட்டுத் தடவி வருடின அவள் விரல்கள். டக் கென கையை விலக்கிக் கொண்டான்.

கன்னத்தில் மேய்ந்த அவள் கைகளையும் விலக்கிவிட்டான்.

“சரக்கில்ல... போ..!, - என்று அவளைப் புறக்கணித்தான்.

ஆக்ஸிலேட்டரை “ஹூம்... ஹூம்...” என்று உறும விட்டான்.

நவிஷ்னியின் பரபரப்பும், படபடப்பும் இப்போது அதி உச்சமடைச்தன.

மகுடியின் இசை லயத்தைக் கேட்ட நாகம் மதி மறந்து ஆடுவது போல, அந்த உறுமலின் பின்னணியில் தன்னை மறந்து ஏதேதோ பிதற்றினாள்.

“நீ என் செல்லம்தானே...?; மிழற்றினாள்.

ஏன் சரக்கில்லங்கறே..?” – குரல் உடைந்து கொஞ்சலுடன் கூடிய கெஞ்சலாய் வெளிப்பட்டது. மீண்டும் ஹாண்டில் பாரில் கிடந்த அவன் புறங்கைகளைப் பிடித்துக் கொண்டுக் கெஞ்சினாள்.

“இல்லன்னா இல்லதான்...! கைய எடு...!

கடுகடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு பலமாய் அதட்டினான். நவிஷ்னியை மேலும் ‘டெம்ட் ஆக்கினான்.

“காசு அதிகமா வேணுமா..? இந்தா எல்லாத்தையும் எடுத்துக்க...! 

டீ ஷர்ட்டுக்கள் கை விட்டு பர்ஸை எடுத்து அப்படியே அவன் முன் நீட்டினாள்.

“உன் காசு எவனுக்கு வேணும்..?கடுப்பாய் மறுத்தான் அவன்.

“வேற என்னதான் வேணும் உனக்கு...? கேளு தர்றேன். சரக்கு குடு...

...............” சில வினாடிகள் மௌனம் கடந்ததும் “நீ... நீதான் வேணும்...!என்றான் அவன்.

“பாஸ்டர்ட்...! நாபியிலிருந்து கிளம்பி அழுத்தமாக வெளி வந்தது அவள் குரல்

“நீதான் வேண்டும்..” என்ற அந்த சப்ளையர் மீது ஆக்ரோஷமாய்ப்  பாய்ந்தாள் நவிஷ்னி.  அவளுக்குள் தற்காலிகமாய் விழித்தது சுய மரியாதை.

போதையின் வேட்கை, ஒரு சில கனங்களில் சுய மரியாதையை பின்னுக்குத் தள்ளி விட்டது.

 “போகாதே...! போகாதே...!  நீ என்ன கேட்டாலும் தரேன். என்னை எடுத்துக்கோ. சரக்கைக் கொடுத்துட்டுப் போ... ப்ளீஸ்.கோபத்துடன் திரும்பிச் சென்றவனைக் கெஞ்சிக் கொண்டேப், பின் தொடர்ந்தாள்.

அவள் கெஞ்சக் கெஞ்ச இவன் மிஞ்சினான்.

சில தப்படிகள் அவளை ஓடவிட்டு ரசித்தான்.

‘இனிமே நம்ம இஷ்டத்துக்கு வளைக்கலாம்..” என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டான்; சாலை ஓரம் இருந்த வண்டியை நகர்த்தி, உள்ளடங்கி வளர்ந்திருத்த மரத்தடியில் நிறுத்தினான். அவளுக்கு எதிரே வந்து நிமிர்ந்து நின்றான்.

நவிஷ்னி, அவனை ஆரத் தழுவினாள். அவன் முகமெல்லாம் முத்த மழை பொழிந்தாள்.

செல்-போனை வைத்துக் கொண்டு, சுற்றிச் சற்றி வந்து அவர்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தினான் கையாள்.

360 டிகிரியில், ‘பளிச் பளிச் என புகைப்படம் எடுத்தான். முதிர்ந்த காட்சிகளை வீடியோப் பதிவும் செய்தான். 

“என்னை என்ன வேணாலும் செய். சரக்கு கொடுத்துரு. என்று மிழற்றினாள்.

“ரிமூவ் பண்ணவா...? கேட்டதோடு நிற்கவில்லை நவிஷ்னி.

இப்படிப் பிதற்றியபோது, அவள் கை ஆங்கில (X) எக்ஸ் போல பின்னிக் கொண்டு, விரல்கள் பக்கவாட்டில் அழுத்தமாய்ப் பிடித்தபடி, ‘டி ஷர்டை கழற்ற ஆயத்தமானாள்.

விஷ்னியின் நல்ல நேரமோ, அந்தக் காமுகர்களின் கெட்ட நேரமோ... அல்லது இரண்டுமோ...

ஆளரவம் அற்ற அந்தச் சந்தின் வழியாக வந்தான் நவீனன். இந்த விபரீதத்தை நேருக்கு நேர் பார்த்தும் விட்டான்.

‘சடர்ன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். இறங்கி ஓடோடி வந்தான்.

போதை ஆசாமியின் புல்லட் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டான்.

புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவனின் கையிலிருந்து செல்போனைப் பளிச்செனப் பறித்தான்.

“நவீனன் சார்டா... - கையாள் கத்தினான்.

நவிஷ்னியை விட்டு விட்டு, வண்டியிலேறித் தப்பிக்க ஓடினான்.

வண்டியில் சாவியில்லை என்பதை அறித்ததும், முன் பர்ஸில் இருந்தச் ‘சரக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டுத், தலை தெறிக்க ஓடினார்கள் இருவரும்.

போதை வியாபாரிகளைக் கண்டு கொள்ளவில்லை நவீனன். ‘அவங்க எங்கே போயிடப் போறாங்க...! பாத்துக்கலாம்...!’ - என்ற அலட்சியமாகக் கூட இருக்கலாம்.

நவீனனின் கவனம் முழுதும் நவிஷ்னியின் மீதுதான் இருந்தது.

ழக்கமாக போதை ஊசிப் போட்டுக் கொள்ளும் நேரம் தவறிவிட்டதால், உடம்பு முழுதும் உதறல் எடுத்தது. நவிஷ்னியின் பற்கள் கிட்டித்தன. மயங்கி விழுந்தாள் நவிஷ்னி.

கைப் பேசியை உயிர்ப்பித்தார் நவீனன். அருகில் இருந்த மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவ மனைக்குத் தகவல் கொடுத்தார்.

போதை மருந்துத் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரி என்பதால், ஒரு சில மணித்துளிகளில் 108 வந்துவிட்டது. நவீனன் சார் உத்தரவிட்டபடி, நவிஷ்னியிடம் ஏதும் தூண்டித் துருவிக் கேட்காமல், முதலுதவியும் சிகிச்சையும் செய்தது மருத்துவமனை நிர்வாகம் .

ஒரு மணி நேரம் கழித்து மருத்துவ மனைக்கு வந்தார் நவீனன்.

“இப்ப பெட்டரா இருக்காங்க சார்..சொல்லிவிட்டு, நவீனனை உள்ளே விட்டு, செவிலியர்கள் அனைவரும் வெளியே வந்துவிட்டனர்.

“உன் பேரு...?

“நவிஷ்னி

“எத்தனை நாளா இந்தப் பழக்கம்...?

“.................”

“எந்த காலேஜ்..! ;

 “ …………”

விவரமாக விசாரணை செய்தார் நவீனன்.

“நீ செஞ்ச அசிங்கமெல்லாம் இந்த செல் போன்ல படம் பிடிச்சி வெச்சிருக்கான் அந்தக் களவானிப் பய. வீட்டுல அப்பா அம்மா ஃபோன் நம்பர் குடு. ஃபார்வேர்ட் பண்ணி விடுறேன்.மிரட்டினார் நவீனன்.

       “ப்ளீஸ் ஸார். வீட்டுக்குச் சொல்லாதீங்க சார். நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கறேன். இனிமே இப்படிச் செய்யமாட்டேன்... - மன்றாடினாள் நவிஷ்னி.

“சரி, உன் வீட்ல சொல்லலை. உன் பேரண்ட் நம்பர் கொடு..” –

முதலில் தயங்கியவள், பிறகு எண்களைச் சொன்னாள்.

“இது சரியான நம்பர்தானானு நான் ஃபோன் போட்டுத் தெரிஞ்சிக்கவா?

“வேணாம் சார். நான் என் செல்லுல போடுறேன்.

“ஸ்பீக்கர்ல போடு.” - நவீனன் குரலில் அதட்டல் இருந்தது.

“நவிஸ்நி.. என்னடா இந்த நேரத்துல ஃபோனு. காலேசு கிடையாதா.. ஒடம்பு நல்லா இருக்கியா செல்லம்... என்னடா.. சொல்லு... எதிர் முனையில் பேசிய தாயின் குரலில் பதற்றம் கூடியிருந்தது. 

“நல்லா இருக்கேம்மா. கைத் தவறி நம்பர் வந்துருச்சு. பதட்டப்படாதீங்க.. வெச்சிடறேம்மா.!.” - என்று சமாளித்துவிட்டுக் கட் செய்தாள்.

பேசாத வார்த்தைகளுக்குத்தான் மதிப்பு மிக மிக அதிகமென்பதை நன்கு உணர்ந்த நவீனன். எதுவும் பேசாமல் நவிஷ்னியை ஒரு பார்வை பார்த்தார்.

கூனிக் குறுகினாள் நவிஷ்னி

 

அத்தியாயம் 2

‘பெண் ஒரு புரியாத புதிர்;

ஒவ்வொருப் பெண்ணுக்கும் தனித்துவம் உண்டு;

பெண்ணுக்குப் பெண் குணம் மாறும்;

பெண் என்றால் பேயும் இரங்கும்;

பெண்களை நம்பாதே;

இப்படிப்பட்டக் கருத்துக்களெல்லாம் உலகளாவிய மூட நம்பிக்கைகள்.

‘நங்கையர்களை, நல்லவள், கெட்டவள், புத்திசாலி, அறிவிலி, ஆங்காரி, பாவப்பட்டவள், பலானவள்... என்றெல்லாம் பிரித்துப் பிரித்து முத்திரை குத்தி முடக்கி வைப்பதே உலகளாவிய நடைமுறை;

இந்தப் பாகுபாடுகளெல்லாம் அடிப்படையிலேயேத் தவறானவை.

‘நதிகள்...;

நாட்டின் அடையாளங்கள்;

காலம் காலமாகப் பெண்களை நதிகளோடு ஒப்பிடுவதையே வழக்கமாக இருக்கிறது ;

அந்த ஒப்பீட்டின் தார தம்மியங்களை, அறிய வேண்டுமானால், நதிகளின் அனைத்துக் கூறுகளையும் துருவி ஆராய்தல் மட்டுமே ஒரே வழி;

 

பொதுவாக ‘பெண்களை குணவதி, குணம் கெட்டவள் என்றெல்லாம் பாகுபடுத்துகிறோமே.. அது  சரியா?

இருக்கும் இடத்தை வைத்து, நதி ஓரிடத்தில் குறுகலாக ஓடுகிறது, மற்றோரிடத்தில் அகன்றும் இருக்கிறது;

வாட்டத்தைப் பொறுத்து, சிலப் பகுதிகளில் வேகமாகவும், வேறு சிலப் பகுதிகளில் நிதானமாகவும் பாய்கிறது;

சூழலின் மாறுபாட்டால், தெளிந்தும், கலங்கியும், குளிர்ந்தும், வெதுவெதுப்பாகவும், பன்னீர்ப் போன்றும், பாழ்ப்பட்டும் கிடப்பது தவிர்க்க முடியாதல்லவா? .

‘பெண்களை நதிகளோடு ஒப்பிடுபவர் இத்தனைக் கூறுகளையும் ஆராயவேண்டுமல்லவா...? ;

நதிப் பெண்களை வைத்து, மதிப்பெண் இடும்போது ஒன்று மட்டும் நிச்சயம் புலப்படும் ;

பெண்ணீயத்தின் மூல வித்து ஒவ்வொருப் பெண்ணிடமும் தீர்க்கமாக உள்ளன ;

ஆகவே, ஒன்று மட்டும் நிச்சயம். நதிமூலம் ஒன்றே ஒன்றுதான் ;

முலத்திலிருந்துப் புறப்பட்டுப் பல களங்களைக் கடந்து வரும்போது அகன்று விரிந்து பாயும் நிலையில் நிதானம் எனும் குணம் குன்றேறுகிறது ;

குறுகிக் கிடக்கும் பாதையில்  மூர்க்கம் முற்றி முதிர்ந்துச் சுழன்று எகிறிச் சீறுகிறது ;

சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப இடம் பொருள் ஏவலுக்குத் தக்க, பெண்ணானவள் கன்னி காப்பதும், காதலில் விழுவதும், காமத்தில் விழுவதும், கலவியில் முகிழ்வதுமாய் ரசவாதங்கள் நிகழ்ந்து விடுகின்றன ;

எந்தச் சந்தர்ப்பச் சூழலையும் கணக்கில் கொள்ளாமல், கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய் அவள் இப்படி, இவள் அப்படி... என்றெல்லாம் சுலபமாய் முத்திரை பதித்து முகம் மலர்வதோ, முகம் சுழிப்பதோ வாடிக்கையாகி விட்டது நமக்கு;

மாறுதல்கள் சிலருக்கு விரைவில் ஏற்பட்டு விடுகின்றன. சிலறுக்கு மிக மிகத் தாமதமாகின்றன. மாறுதலே ஏற்படாமல் மாண்ட பெண்களும் உண்டு;

மாறுதல்கள் கூட மாறுதலுக்கு உட்பட்டவைதானே.!

‘சீராய், அகலமாய், அழகாய், ஆற்றொழுக்காய், அமைதியாய் வந்த ஆறு, திடீரென ஒரு பள்ளம் வருகையில் ஹோ...” என்ற பேரிரைச்சலோடு விழுவதில்லையா...? ;

விழுந்த பின் பரந்து கிடக்கும் சமத் தரையில் அமைதியாய் ஓடுவதில்லையா...? ;

தன் மேல் போர்த்தப்படும் திராவகத்தையும், ஆலைக் கழிவையும் பொறுத்துக் கொள்வதில்லையா...? ;

எல்லையில்லா நீரோட்டத்தின் களிப்பால் கரையை உடைத்து ஊழித்தாண்டவம் ஆடுவதில்லையா? ;

புயல், வெள்ளம், காற்று போன்ற இயற்கையின் சீற்றத்தால் நிலை தடுமாறிய ஆறு, எல்லாம் அடங்கிய பின், தன் சுய ஆற்றொழுக்கோடு ஓடிக் கொண்டுதானே இருக்கிறது ! ;

நதிகளுக்கு இப்படி மாற்றங்கள் சாத்தியமென்றால், இத்தனை மாற்றங்களும் நதியோடு ஒப்பிடும் பெண்ணுக்கும் சாத்தியம்தானே ...! ;

சாயப் பட்டரைக் கழிவு நீர் சுழித்தோடினாலும் நதி என்கிறோம் ;

சாக்கடையாக ஓடினாலும் கூவம் ஆறு என்கிறோம் ; ஏன்? ;

அது ஆறுதான். அதில் கலக்கும் சாயக்கழிவோ, சாக்கடையோ தற்காலிகமானதுதான் ;

கண்டவையும் கலப்பதைத் தடுத்து விட்டால் அது ஜீவ நதியாகி விடுமே ;

ஆனால், ஆற்றோடு ஒப்பிட்டாலும் மாறுதலுக்கு உட்பட்டு மீளும் பெண்ணை மட்டும் ஏற்பதில்லையே ஏன்? ;

அது விரும்பத் தக்க, விரும்பத் தகாத, சமுதாயம் அங்கீகரிக்கிற, அங்கீகரிக்காத எந்த வித மாற்றமாகவும் இருக்கலாம்;

கன்னி, பத்தினி, பரத்தை, வாயாடி, வம்பி என்று ஏதாவது ஒரு நிலையில் வைத்து முத்திரை குத்தி விடுகிறோமே...? ;

இது சரியா...?

தூக்கம் வராததால், தன் அறையில் நாற்காலியில் அமர்ந்தபடி, இப்படிப் பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தார் போதை மருந்துத் தடுப்புப் பிரிவின் துணை அதிகாரி நவீனன்.

மிஸ்டர்... நவீனன். என்ன யோசனை ரொம்ப பலமா இருக்கு....? ” அறைக்குள் உரிமையுடன் நுழைந்த மேலதிகாரி அமல்தாஸ், சிரித்துக் கொண்டே கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே சார். இதோ, படுக்க வேண்டியதுதான்...” என்று சமாளித்தான் நவீனன்.

இது சரி வராது. ப்ரொக்ராம் முடிஞ்சித் திரும்பும்போது நான் உன் வீட்டுக்கு வரப்போறேன்...”

வெல்கம் சார்...”

எதுக்குனு கேக்கலியே...? ”

“........................................” - அமைதியாக இருந்தான் நவீனன்.

நவீனனுக்கு பொண்ணு பார்த்ததுக் கல்யாணம் பண்ணி வைக்கறதா உத்தேசம் இருக்குதா... இல்லே நான் பாத்துக் கட்டி வைக்கட்டுமானு...! உன் பேரண்ட்ஸைக் கேட்கத்தான்...” – என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் அமல்தாஸ்.

பதிலுக்கு, ஒரு மாதிரிச் சிரித்து மழுப்பினான் நவீனன்.

ஓ கே குட் நைட்...” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பி விட்டார் உயர் அதிகாரி.

அத்தியாயம் 3

“ ஐ ம் நவீனன்...நாற்காலியின் முன் நின்றார் நவீனன்.

கல்லூரி முதல்வர் எழுத்து நின்று அவருக்குக் ஷேகை கொடுத்தார்.

“.................‘நீங்க யாரு? எதுக்கு வந்திருக்கீங்க? ’ – போன்ற கேள்விகள், கல்லூரி முதல்வர் கண்களில் அப்பட்டமாய்ப் பிரதிபலித்தது.

“நான் போதை மருந்துத் தடுப்புப் பிரிவு அதிகாரி சார்..!.தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நவீனன்.

“ஓ...!” – என்று வியப்பொலி எழுப்பிய முதல்வர், ‘இவர் எதுக்கு என்னைத் தேடிக் கல்லூரிக்கு வந்திருக்கார்? - என்று எண்ணி, வியந்து விழித்தார்.

“ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு சார்.”

“கம்ப்ளைண்டா..?” என்று அதிர்ச்சியாய்க் கேட்டது பிரின்ஸிபாலின் கண்கள்.

“எம் ஏ இங்க்ளீஷ் லிட்ல, சரளமா ‘ட்ரக்ஸ்’ நடமாட்டம் இருக்கறதா ரிப்போர்ட் வந்திருக்கு சார். சர்ப்ரைஸ் செக்கிங் பண்ணணும். உங்க ஒத்துழைப்பு தேவை சார்.

“அப்படி எதுவும் என் வரைக்கும் வரலையே...? – என்று இழுத்தாற்போல் சொன்னார் முதல்வர்.

“.................நவீனன் எதுவும் பேசவில்லை.

மொழியினால் அறிமுகப் படுத்தப் பிடிக்காமல், தன் ‘ஐ டி’ யை எடுத்துக் காட்டினார்.

“சார் நான் உங்களை சந்தேகப் பட்டுக் கேக்கலை. போதை மருந்துத் தடுப்புப் பிரிவுலேர்ந்து வந்து,  எம்.ஏ., வகுப்புலப் பூந்து சோதனை செய்த விஷயம் வெளீல லீக் ஆனா கல்லூரிக்குக் கெட்ட பேர் வருமேனு யோசிச்சேன்.

“வந்த கப்ளைண்டுக்கு நாங்க ஆக்‌ஷன் எடுத்துத்தானே ஆகணும்..” - என்ற நவீனன் தொடர்ந்து சொன்னார்.

“பாதுகாப்புக்குப் போலீஸ், மற்றும் தடுப்புப் பிரிவு ஊழியர்கள், மோப்ப நாய்.. எல்லாம் கேம்பஸ்க்கு வெளியேதான் இருக்கு. நான் மட்டும்தான் உள்ளே வந்தேன்.

“சார் ஒரு ஐடியா?” - என்றார் ப்ரின்ஸிபால்

“சொல்லுங்க..” - என்றார் நவீனன்.

“அந்த க்ளாஸ் இன்சார்ஜ்ஜை வரச் சொல்றேன் சார். அவங்களுக்கு ஏதேனும் தெரியுமானு ...

“ஓகே.. ‘ஸ்டெப் பை ஸ்டெப்பாப் போவோம்ங்கறீங்க. சரி . வரச் சொல்லுங்க.

இண்டர்காம் எடுத்துப் பேசினார் பிரின்ஸிபால்.

சில மணித்துளிகளில் பிரின்ஸிபால் அறைக்கு வந்து சேர்ந்தாள் மயூரி.

முதல்வர், மயூரியை நவீனனுக்கு அறிமுகப்படுத்தினார்.

மயூரி நவீனனைக் கண்டு ஒரு கும்பிடு போட்டாள்.

அந்த நேரத்தில் நூலக உதவியாளர் சங்கு என்ற சங்கமேஸ்வரன் முதல்வரின் அறைக்கு உள்ளே வந்தார்.

சங்குவைக் கண்டதும், சட்டென தன் இருக்கை விட்டு எழுந்து சங்குவின் இரு கைகளையும் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினார் நவீனன்.

சங்கமேஸ்வரன் நவீனனை மார்போடு அணைத்தபடி, அவன் தோளுக்குப் பின்னால் நின்ற மயூரியைப் பார்த்தார்.

“என்ன அப்படிப் பாக்கறே மயூரி, இவர் நவீனன். என்னோட விசிறி இவர்!” - என்று புன்முறுவல் செய்தார் சங்கு.

“சாரோட படைப்புகள் எல்லாம் கிளாஸிக் ரகம். குறிப்பா சமிபத்துல வெளிவந்த ‘கருப்பக் கிருஹம் என்கிற படைப்பு இவரோட அறிவு ஜீவித் - தனத்துக்கு ஒரு சாட்சி.. என்றார் நவீனன் உணர்ச்சி வசப்பட்டவராய்.

சற்றே நிறுத்தி, மீண்டும் தொடர்ந்தார்.

சாரால மட்டும்தான் இப்படி ஐந்தாவது கோணத்துல சிந்திக்க முடியும். சங்கு சார் தாசன் நான். சொல்லும்போது, நவீனனின் முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது.

அந்த ஒளியில் பிரகாசித்தில் ஜொலித்தது மயூரியின் முகம்.

டிபார்ட்மெண்ட் அறையில் எதிரெதிர் நாற்காலிகளில் அமர்ந்து பேசினார்கள் மயூரியும், நவீனனும்.

போதை மருந்துத் தடுப்புப் பிரிவின் அதிகாரியாக நவீனனைப் பார்க்கவில்லை மயூரி. சங்குவின் விசிறியாகவே அவனைப் பார்த்தாள்.

இத்தனை நாட்கள் சங்குவை மிஸ் செய்ததற்காக உண்மையிலேயே வருந்தினாள்.

சங்குவோடு அவளுக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு அணிச்சையாக மனதில் அசைந்தது.

மயூரி இந்தக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பதவியேற்று கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் முடிந்து விட்டன. 

ன்றுதான் அவள் தனியாக டிபார்ட்மெண்டில் உட்கார்ந்திருக்கிறாள்;

மதியம் எடுக்கப் போகும் எம் ஏ வகுப்புக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக, பார்வை நூலோடு அமர்ந்திருந்தவளின் பார்வை ‘ஸ்ரீ என்ற சிற்றிதழைப் பார்த்ததும் மாறியது.

ந்தச் ‘சங்குவை எட்டு மாதங்களாகச் சந்திக்காமல் இருந்து விட்டோமே.! – என்று ஆயாசமாக இருந்தது மயூரிக்கு.

சுனையின் அருமைப்-பெருமைத் தெரியாமல், அதன் அருகிலேயே இத்தனை நாள் இருந்து, தீர்த்தக் கரை பாவியாய்க் கிடந்து விட்டோமே ! என்று உண்மையிலேயே வருத்தம் கொண்டாள்.

தொடர்ந்து சங்குவைச் சந்தித்தும், அவரோடு அளவலாவியும், அவர் சிந்தனைகளைக் காதில் வாங்கியும், கண்ணால் பருகியும், கொஞ்சம் கொஞ்சமாக தன் உள்ளத்தை உயர்த்திக் கொண்டுத் ‘தன்னை உணர்ந்தாள்.

ல்லூரியின் ஆங்கிலத் துறையில் ‘ஹெச் ஓ டி யைச் சேர்த்து, மொத்தம் ஏழு பேர் ;

தினம் தினம் கல்லூரிக்கு வருவதும், அமர்வதும், வீடு திரும்புவதுமாக விருதாவாய் எட்டு மாதங்களைக் கழித்துவிட்டோமே!- என்று தன்னிரக்கத்தில் தவித்தாள் மயூரி.

ரிரு முறை, துறை நூலகத்துக்குத் தேவையானச் சில புத்தகங்கள் பற்றி நூலகரோடு விவாதிக்க, கல்லூரிப் பொது நூலகத்துக்குச் சென்றிருக்கிறாள் மயூரி.

அப்போதெல்லாம் இந்தச் சங்குவை அங்குப் பார்த்திருக்கிறாள். ஏனோ தெரியவில்லை அவரைச் சந்தித்துப் பேசவேண்டும், அவரிடமும் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை அவளுக்கு.

ஒரு வேளை நாம் விரிவுரையாளர் பதவியில் இருக்கிறோம், சங்கு ஒரு சாதாரண நூலக அட்டெண்டர் என்ற தன்முனைப்பு தன்னையறியாமல் தன்னைக் கட்டுப்படுத்தி விட்டதோ ? “ என்றும் அவளுக்குத் தோன்றியது.

ன்றைய மயூரியின் மன நிலையே வேறு. கல்லூரி முதல்வர் உட்பட, அனைத்து விரிவுரையாளர்களையும், இந்தச் சங்குவோடு ஒப்பிட்டுச் சங்குவின் உயர்வை உணரமுடிந்தது அவளால் ;

நூலக உதவியாளர் சங்கமேஸ்வரன் என்கிற எழுத்தாளர் சங்குவே மற்ற எல்லோரையிம் காட்டிலும் மிக மிக உயர்ந்த மனிதர் என்ற ஒரு முடிவுக்கும் வர முடிந்தது அவளால்;

முனைவர் பட்டம் உட்படப், பலப் பலப் பட்டங்களும், பதவிகளும், ஐந்திலக்கச் சம்பளமும், கௌரவங்களும், சலுகைகளும் பெற்று, உழைப்பைப் பிழைப்பாக்கிப் பொழுதுபோக்கும் அனைவர் மீதும் வெறுப்பு வந்தது மயூரிக்கு.

தன்னையே அவள் வெறுத்துக் கொண்டாள்.

பிழைப்புக்காக நூலக அட்டெண்டர் வேலை பார்க்கும் அந்தச் சங்மேஸ்வரனின் உழைப்பு ;

மாணவர்கள் கேட்கும் புத்தகத்தை சமுதாய அக்கரையோடு உடனடியாக எடுத்துக் கொடுக்கும் அக்கரை ;

சமுதாய சிந்தனையுள்ள வலிமையான எழுத்துக்களை இதயத்திலிருந்து இறக்கிக் கொண்டிருக்கிற ‘சங்கு என்னும் இன்னொரு பரிமாணம்.

இவ்வாறாக, சங்குவின் மீது மிகவும் மரியாதை வைத்த மயூரி, தற்போது ஒரு விசாரணைக்காகக் கல்லூரி வளாகத்திற்கு வந்துள்ள, போதை மருந்துத் தடுப்புப் பிரிவு அதிகாரி நவீனன், சங்குவைக் கண்டதும் மரியாதையாக எழுந்து நின்றதும், சங்குவின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டுத் தொழுததைப் பார்த்தபோது மேலும் மேலும், சங்குவின் மீது மரியாதை கூடியது மயூரிக்கு..

அட... ! – என்ற மரியாதை ;

ஓ !.. என்ற பிரமிப்பு ;

அடடே..! என்ற வியப்பு ;

ஹோ... ! என்ற விழி விரிப்பு

இவைகளெல்லாம் காதலுக்கு முன் வரும் கட்டியங்கள்.

சங்குவின் மேல் அனிச்சையாய் ஏற்பட்ட, மயூரியின் பிரமிப்பும், மரியாதையும், காதலாக உருமாறி எத்தனையோ நாட்களாகிவிட்டன.

அதை அவரிடம் தெரிவிக்க நேரம் பார்த்துக் காத்திருந்த மயூரிக்கு அன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது.

நூலக சம்பந்தமான கோப்பை முதல்வரிடம் சொல்லி, ஒப்படைத்து விட்டுத் திரும்பும்போது, மயூரியிடம் வந்தார் சங்கு.

“மயூரி, வர்ற சண்டே ஃப்ரீதான். கால் பண்றேன்.” – என்றார்

மயூரிக்கு, கால் தரையில் பாவவில்லை. மகிழ்ச்சியில் மிதந்தாள்.

அத்தியாயம் 4

சிணுங்கல் எப்போது வரும் எப்போது வரும் என்று ஆவலோடு எதிர் பார்த்து கைப்பேசியைப் பார்த்துக் கொண்டு காத்திருந்தாள் மயூரி.

கைப்பேசிச் சிணுங்கலுக்கு பதிலாக, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. புருவம் உயர்த்தினாள் மயூரி.

‘‘போன் செய்யறேன் என்று சொன்ன சங்கு நேரில் சந்திக்க வந்து விட்டாரோ?பரவசமாய் இருந்தது அவளுக்கு.

ஆளுயர நிலைக் கண்ணாடியின் முன் போய் நின்றாள். அவசரமாய், அணு அணுவாய்த் தன்னை  முழுவதுமாய்த் பார்த்துக் கொண்டாள்.

இரு கைகளையும் உரசி வெதுவெதுப்பை உண்டாக்கி, தூங்கி முழித்ததும் செய்வதைப் போல, நெற்றி, புருவம் எனத் தாடை வரை மசாஜ் செய்து சூடேற்றிச் சுருசுருப்பானாள்.

அலங்கார மேசையிலிருந்த பவுடர் எடுத்து, ‘டச்சப் செய்து கொண்டாள்.

ஆங்காங்கே யுடிகோலன் தீற்றிக் கொண்டாள்.

தொலைப் பேசியில் பேசத் தன்னைத் தயார் செய்து வைத்திருந்த மயூரி, சங்கமேஸ்வரனோடு வீட்டில் தனிமையில் இருக்கப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் மிதந்தாள். அதே நேரத்தில் நெர்வஸாகவும் உணர்ந்தாள்.

இன்பப் படபடப்பு சடுதியில், உருமாற்றம் பெற்றது.

முதல் முதலாய் வீட்டுக்கு வரும் சங்குவிடம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை மலர்ந்தது.

சங்கு... நேர்ல வந்து சர்ப்ரைஸ் தரவாப் பாக்கறீங்க...! உங்களை என்ன பாடு படுத்தறேன் பாருங்க இப்போ - தனக்குள் சந்தோஷமாய்ப் பேசிக்கொண்டாள்.

தான் செய்யப் போவதை நினைத்தபோது அவளுக்கேச் சந்தோஷச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

வீட்ல நான் மட்டுந்தானிருப்பேன், ஃபோன்ல மணிக்கணக்கா பேசலாம்னு சொன்னதை வெச்சித்.., தனியா இருக்கற என்கிட்டே ஜொள்ளு விட நேரே வந்துருக்கீங்களா...? உங்களை...!

சந்தோஷக் கோபத்தைப் புன் சிரிப்பாய் மாற்றிக் கொண்டு பெட்ரூம் கதவை ஒருக்களித்தாற் போல் மூடினாள்.

இந்த ஒரு வாரத்தில் சங்கமேஸ்வரனிடம் எவ்வளவெல்லாம் பேசியிருக்கிறாள்  மயூரி. அவளுக்கே பிரமிப்பாக இருந்தது.

ஆறு மாதங்களாக விட்டதை ஆறே நாட்களில் பேசித் தீர்க்கவேண்டும் என்று வெறி பிடித்தாற் போலப் பேசியதாகத் தோன்றியது இப்போது நினைத்த போதும்.

‘சங்கமேஸ்வரன் திருமணமானவர். ஒரு குழந்தைக்குத் தகப்பன். அவர் மேல் காதல் கொள்வது சரிதானா?

உள் மனம் கேள்வி கேட்கும் போதெல்லாம் ‘தான் செய்வது சரிதான் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.

“அதில் என்ன தப்புஎன தனக்குத் தானேச் சமாதானம் செய்து கொண்டாள்.

‘ஆன்ரோ மார்வெல் என்ற கவிஞர் எழுதிய To his coy mistress என்ற கவிதையின் கருத்தைத் தனக்குச் சாதகமாகப் பார்த்தாள்.

ஏன்? நம் தமிழ்க் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர்தானே என்று தன் செயலை ஞாயப்படுத்திக் கொண்டாள்.

முதல் மரியாதைப் படத்தின் கதாநாயகி ராதாவுடன் தன்னை இணைத்துக் கொண்டாள்.

“திருமணமானவனைக் காதலிக்கவே கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா? தனக்கத்தானேக் கேட்டுக் கொண்டாள்.

இன்று போல் தனினை எப்போதும் கிடைக்காது. எப்படியும் அவனிடம் தன் காதலை வெளிப்படுத்தியேத் தீர வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டாள் மயூரி.

ன்னையும் தன் காதலையும், தன் தற்போதைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டான எண்ணங்களையும் செயல்களையும், நினைத்து அவளுக்குள் ஒரு இனம் தெரியாத கிளுகிளுப்பு ஏற்பட்டாலும் யதார்த்தமும் அவள் முன் வந்து விரிந்தது.

‘ஸ்டேடஸ் பார்க்கும் தன் அப்பாவுக்குத் தன் காதல் தெரிந்தால் என்ன ஆகும்?;

சங்கமேஸ்வரன் ஒரு சாதாரண நூலக உதவியாளர். காண்ட்ராக்ட் லேபர் நிலையில் இருப்பவன். அவனை வேலையிலிருந்து தூக்கி, அவனை மூளியாக்குவாரே அப்பா..? – நினைத்த போதே ஒரு விதமான சோகம் மனதில் நிரம்பியது.

சிக்கல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். சமாளித்துக் கொள்ளலாம்.. - என்ற அசட்டு தைரியமும் அவளுக்கு வராமலில்லை.

அது சரீ... ஒருத்தரை விரும்பினாலோ, அவர் மேலே மையல் கொண்டாலோ, அது கல்யாணத்துல முடியணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?; - கேள்வி எழுந்தது.

‘கல்யாணத்தின் முதல் படி காதல்னு சொல்றது எப்படி உண்மையாகும்?; - ஐயம் வந்தது

கல்யாணம்ங்கற ஏற்பாட்டை முன்னிறுத்தி, இந்தச் சமூகம் காதல்ங்கிற புனிதத்தைக் கொச்சைப் படுத்துதோ? – சமூகக் கோபம் கொப்பளித்தது

இப்படி ஏதேதோத் தோன்றியது மயூரிக்கு.

காந்தமாக இருந்த ஹால் ‘ஷோபாவில், கூச்சமற்றுக் கிடந்தன மயூரியின் உள்ளாடைகள்.

‘சங்கு நம்ம ஆள் தானே... இருக்கட்டுமே... என்ற குறும்புத்தனமான எண்ணம் உருவானது அவளுக்கு. லஜ்ஜையும் வராமல் இல்லை.

அனிச்சையாய் கையிலெடுத்து அனைத்தையும் பந்தாய்ச் சுருட்டினாள். படுக்கையறைக்குள் வீசினாள்.

படுக்கையில் விரிந்த நிலையில் கவிழ்ந்துக் கிடந்தது, தி இம்மாரல் லவ் என்கிற புத்தகம்.

அவள் வீசிய துணிப்பந்து அதன் மேல் விழுந்தது.

அர்த்த புஷ்டியுடன் சிரித்துக் கொண்டாள் மயூரி.

‘சங்கு என்று, ஆசையாய் விளிக்கும் அந்தச் சங்கமேஸ்வரனை, இன்னும் ஒரு சில கணங்களில் நேருக்கு நேர், தன்னந்தனியாக முகத்துக்கு முகம் சந்திக்கப் போகிறோம் என்கிற நினைவு தந்த நாணத்தால், உடல் பூராவும் பசலை படர்ந்தது.

முகம் குப்பெனச் சிவந்து, அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.

எப்படி இந்தச் சங்குவின் வலையில் விழுந்தோம்? ;

பழகத் துவங்கிய ஒரே வாரத்தில், மீண்டு எழவே முடியாத வகையில் அவனிடம் சிக்கிக்கொண்டது எப்படி?

அனைத்தையும் அணு அணுவாக அசை போட்டது அவள் மனம்.

அத்தியாயம் 5

ன்று ‘டிபார்ட்மெண்ட்டில், மயூரி மட்டும் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தாள். அவள் முன்னே விரிந்திருந்தது ஒரு கனமானப் பார்வை நூல்.

குறிப்பேட்டில் கவனமாக ஏதோ குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பதும், பார்வைப் புத்தகங்களைப் புரட்டுவதும் சிந்திப்பதுமாக பிஸியாக இருந்தாள் மயூரி.

கொண்டு வந்த மதிய உணவை எடுத்துச் சாப்பிடக் கூட மறந்து பாடப் புத்தகத்தோடு ஒன்றியிருந்தாள் அவள்.

தற்காலிகமாகச் சற்றே ஓய்வெடுக்க கவனத்தை மாற்றுவது அவள் வழக்கம். அப்படி அவள் கவனம் மாறி பேனாவை மேஜைமேல் கிடத்தினாள்.

கட்டை விரலால், ஒவ்வொரு விரலின் மேல் பாகத்தையும் அழுத்தி ‘டொட்...! டொட்...!- என நெட்டி முறித்தாள். 

சற்றே நாற்காலியில் முதுகைச் சாய்த்துக் கொண்டாள். 

தலையைப் பின்புறம் சரித்தாள். சுற்றும் சீலிங் ஃபேனை’ப் இலக்கின்றிப் பார்த்தன கண்கள். விரல்களைப் பாவும் ஊடையுமாய்க் கோர்த்து இறுக்கினாள். இணைந்த கைகளை முன்னால் நீட்டி பின்னிய உள்ளங்கைகளை வெளிப்புறம் திருப்பி, முகத்தில் அலுப்பு ரேகைகள் தெரிய கைகளையும் தலைக்கு மேல் தூக்கி முதுகுக் தண்டுவடத்துக்கு இதமளித்தாள். டக், டக்..’ கென , இப்போதும் ஓரிரு நெட்டிகள்  முறித்தன. 

கல்லூரியின் ஆங்கிலத் துறை அறையில், இப்படிப் பட்டக் கோலத்தில், மயூரி ஓய்வாய் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த நேரத்தில், சட்டென உள்ளே வந்து, மயூரியின் எதிரில் நின்றான் சங்கமேஸ்வரன்.

திடுக்கிட்டுப் பார்த்த மயூரி, ‘சீனியர் பேராசிரியர்கள் யாரையாவது தேடி வந்திருப்பாரோ?’ - என்று ஊகிப்பு அவள் கண்களில் வெளிப்பட்டது.

எல்லாரும் ‘லஞ்ச்க்குப் போயிருக்காங்க சார். நான் மட்டும்தான் இருக்கேன்.” – தானாக முந்திக் கொண்டு சங்குவிடம்  சொன்னாள் மயூரி.

“........................................” - சங்கமேஸ்வரன் அமைதியாக நின்றார்.

மயூரியேத் தொடர்ந்தாள்.

சார், நீங்க கதை கவிதையெல்லாம் எழுதுவீங்களாமே? ஸ்டூடண்ட்ஸ் உங்களைப் பத்திச் சொல்லுவாங்க.!” – ஒரு எழுத்தாளனை நேரில் சந்தித்துப் பேசும் பெருமையுடனும், பெருந்தன்மையுடனும் இருந்தது அவள் சொன்ன விதம்.

“.அப்படியா..? ரொம்ப சந்தோஷம். ” – என்றார் சங்கு இயல்பாக

“ம்...! நானும் நூலகத்துல வந்து உங்களைப் பார்க்கணும், உங்க கூட சில பல விஷயங்களைப் பத்திப்  பேசணும்னு நினைக்கறதுதான். ஆனாப் பாருங்க வேலை பிஸில...!” – என்று தொடர்ந்த மயூரியை அதற்கு மேல் பேச விடவில்லை சங்கமேஸ்வரன்.

நான் வேற யாரையும் பார்க்க இங்கே வரல்லே. சாட்சாத் உன்னைப் பாக்கத்தான் பர்ப்பஸா வந்தேன். – என்று சங்கமேஸ்வரன் சொன்னபோது, மயூரியின் மனதில் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களை அவள் முகம் பிரதிபலித்தது.

சங்குவே தொடர்ந்து பேசினார்.

“மயூரி இந்தா இதை வாங்கிக்கோ என்று ஒரு புத்தகத்தை அவள் முன் நீட்டினார். இந்தச் சிற்றிதழ்லதான் என்னோட கதை பிரசுரமாயிருக்கு. படி . உன்னைப் பத்தியும், ஸ்டண்ட்ஸ் என்கிட்டே வந்து நிறையச் சொல்லியிருக்காங்க. நீ ஒரு ஒரேஷியஸ் ரீடராமே, புத்தகப் புழுவாமே.. ஸ்டூடன்ஸ் உன்னைப் பத்தி மாஞ்சு மாஞ்சுப் பேசறாங்க. என்னதான் சொக்குப் பொடிப் போட்டியோ அவாளுக்கு.” என்று சொல்லி மலரச் சிரித்தார்.

கதையைப் படிச்சிப் பார்த்துட்டுச் சொல்லு ! ”

சொல்லிக்கொண்டே, ஒரு சிற்றிதழை மேசை மேல் வைத்தார் சங்கமேஸ்வரன்.

இதென்ன, இதுவரை இவரைப் பார்த்ததோ, பேசியதோ கிடையாது. இருந்தாலும் , மொதல் சந்திப்பிலேயே வெகு நாளாகப் பழகியதைப் போல, ரொம்ப நெருக்கமானவங்க கிட்டே, உரிமைப்பட்டவங்க கிட்டேப் பேசுவதைப் போல வா... போ’ ன்னு சகஜமாப் பேசுறாரே...?’

இப்படித் தோன்றியதேத் தவிர, அப்படிப் பேசியதற்காகச் சங்குவின்மீது மயூரிக்குச் சிறிதும் கோபமோ வருத்தமோ வரவில்லை. மாறாக, சங்கு அவளை அப்படி உரிமையோடு பேசியது பிடித்திருந்தது அவளுக்கு.

மேலும் ‘வாடீ போடீ’ என்று சங்கமேஸ்வரன் விளித்திருந்தால் கூட ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் இருந்தாள் மயூரி.

விவரம் தெரிந்த நாள் முதல், பெற்றோர்கள் கூட அவளை ‘வா – போ என்று கூட ஒருமையில் அழைத்ததில்லை. ‘வாம்மாபோம்மாதான்.

வாடீ-போடீயென விளிக்கும் பெண் நண்பர்கள் கூட அவளுக்கு இன்று வரை இல்லை.

இந்த நிமிடம் வரை, மயூரியின் நட்பு வட்டம், குடும்ப ஸ்டேடஸ்க்குத் தகுந்தாற்போல பெரிய இடங்கள்தான்.

அவர்கள் குடும்பத்தை சுற்றிலும் ஒட்டிக் கொண்டிருப்பவர்களில்  பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் உயர் தட்டு வர்க்கத்தினர்தான்.

இதுவரைத் யாரும் தன்னை ஒருமையில் அழைக்காமல் பழக்கப்பட்டுவிட்ட மனது, சங்கமேஸ்வரன், இப்படி விளித்ததும், புதுமையை விரும்பி ஏற்றுக் கொண்டு விட்டதோ?

இந்த எழுத்தாளர்களே எக்ஸன்ட்ரிக்குகளா?

எப்போதோ எழுத்தாளர் ஒருவரைப் பற்றிப் படித்தது மயூரியின் நினைவுக்கு வந்தது.

ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளரிடம் கேட்டாராம்.

உங்கள் கதைகளில் வரும் ஆண் கேரக்டர்கள் பெண் கேரக்டர்களின் கைகளைப் பற்றிக் கொண்டு பேசுவது போலவே எழுதுகிறீர்களே?” - என்று.

அந்த எழுத்தாளர் பதில் சொல்லத் துவங்கும் முன் அவர் கைகள், அந்தப் பெண் பேட்டியாளரின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்ததாம்.

“அடுத்தக் கேள்விக் கேளுங்க! - என்றாராம் பேட்டியை ஷூட் எடுத்த கேமரா-மேன்.

அதை நினைத்தபோது, அவளையும் அறியாமல் சிரிப்பு வந்து விட்டது மயூரிக்கு.

மேஜையின் மேல் வைத்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு, எப்போதோ படித்ததைச் மனதில் நினைத்துப் புன்னகை சிந்திய மயூரியை, நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தான் சங்கமேஸ்வரன்.

மயூ! என்ன பலமான யோசனை? வா... போ... ன்னு உரிமையோட அழைக்கலாம்ல்ல?

“........................................” – அமைதியாக நின்றாள் மயூரி.

“கூடாதுன்னு நீ சொன்னாலும் அந்த உரிமையை நான் எடுத்துப்பேன் மயூ.”

“........................................” – இப்போது குழப்பமாய் அவரைப் பார்த்தாள் மயூரி.

கூடாதுன்னு சொல்றதைச் செஞ்சா ஒரு தனி சந்தோஷம் உண்டு தெரியுமோ? – என்றபோது , குழந்தையைப் போன்ற உள்ளம் கொண்ட சங்கமேஸ்வரன் மீது மேலும் பாசமும் நேசமும் பல்கிக் பெருகின.

“ஓ கே மயூ, நான் புறப்படறேன் . கதையைப் படிச்சிட்டுக் , கருத்தைச் சொல்லு.” சொல்லிவிட்டுப் திரும்பிப் போனார் சங்கு.

ம்...”- என்று ஒற்றை மெய்யெழுத்தில் பதில் சொல்லிய மயூரி ; கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கித் தீர்த்தம் சாதித்து விட்டு , மீண்டும் கோவிலுக்குச் திரும்பும் சமயத்தில், பக்தர்கள் ஆர்வமாய்த் திரும்பி, கள்ளழகரின் பின்னழகைக் கண்டு தரிசிப்பார்களல்லவா, அது போல சங்கமேஸ்வரனின் பின்னழகை ரசித்தபடி நின்றாள் மயூரி.

டிபார்ட்மெண்ட் அறையின் வாசற்படி வரைச் சென்ற சங்கு, எதையோ மறந்ததை எடுக்க வந்தவன் போல் மீண்டும் உள்ளேத் திரும்பி வந்தான்.

‘என்னாச்சு, ஏன் திரும்பி வர்றீங்க சங்கு ?” – என்று கேட்டன, வியப்புச் சுருக்கங்கள் படிந்த மயூரியின் கண்கள்.

“மயூ...!

“ம்...

நல்லா இருக்குன்னு, ஒரே வரீல விமரிசனம் செய்யறதுக்காக இதை உன்கிட்டே தரலை.”

“ம்…!

குறை என்ன ? ; நிறை என்ன? ; ன்னு பொட்டுல அடிச்சாப்ல சொல்லணும் ;

வேற எப்படிச் சொல்லியிருக்கலாம் ? ; லாஜிக் சரியா இருக்கா ? ; ன்னு விவாதம் பண்ணணும் ;

ஆங்கில இலக்கியத்துல இருக்கற இது போல கான்சப்ட்டக்களை எடுத்த இதோட இணைச்சி விவாதிக்கணும்.

சரின்னு தோணித்துன்னா, எந்த வகையில் சரி; சரியில்லேன்னா எந்த வகையில் சரியில்லை ..; இப்படி விரிவா இருக்கணும் விமர்சனம். நான் உன்கிட்டே எதிர்பார்க்கறது ஒரு திறனாய்வு. சரியா..”

உன்னால முடியும். ‘ஸீ ய்யூ லேட்டர்..’” – சந்நதம் வந்தாற்போல் , குறி சொல்கிறார்போல், சொல்லிவிட்டு பளிச்சென்று வேகமாக வெளியேறினார் சங்கமேஸ்வரன்.

புயல் மையம் கொண்டு ; மையம் கொண்ட கனமேத் தீவிரமாகி ; தன் முழு பலத்துடன் வீரியமாக வீசி அனைத்தையும் தகர்த்ததைப்  போல உணர்ந்தாள் மயூரி;

Ode to the West Wind என்ற கவிதையில் ஜான் கீட்ஸ் Oh ! Wild West Wind என்று தொடங்கித் தொடரும் கவிதையை மனதில் அசை போட்டாள். அந்தக் கவிதையில் உள்ள முரண் தொடைகளை ரசனையோடு மாணவர்களுக்கு விளக்கமாய் சொல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

புயலானது, கிராமம், நகரம், காடு, கழனி, தோப்பு, தோட்டம், வீடு, வாசல், சாலை........ என, எங்கெங்கும் இண்டு இடுக்கு விடாமல் புகுந்து புறப்பட்டுத் தன் வலிமையைக் காட்டிக் குலைத்து, உலுக்கி, இயல்பை முடிந்த வரை சிதிலப்படுத்திய பின் , முற்றிலும் புதிய காட்சிகளைச் சாட்சிகளாய் விட்டுவிட்டு ஜான் கீட்ஸ் செய்த வர்ணணையை ஒத்து  கரையைக் கடந்ததைப் போல ஒரு உன்னதமான உணர்வை ஏற்படுத்தியது  சங்கமேஸ்வரனின் வருகையும் விடுகையும்.

மயூ..,’ என்று சங்கு விளித்தது மட்டுமே மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இதுவரை அவள் பெயரை இப்படி யாரும் சுருக்கியதில்லை.

தன் பெயரின் மூன்றே எழுத்துக்களில் ஒன்றை நீக்கிய பின் அவள் பெயரே அவளுக்குத் தேனாய் இனித்தது.

அத்தியாயம் - 6

ஸ்ரீ

பத்திரிகையின் பெயரேப் புதுமையாக இருந்தது.

மேலட்டையைப் புரட்டினாள்.

முதல் பக்கத்தில், நவீன ஓவியத்தின் பின்னணியில் கட்டமிடப்பட்ட பொருளடக்கம் பொதிந்திருந்தது.

பார்த்தாலே படிக்கத் தூண்டும் ‘ஃபாண்ட்’ எழுத்து வகை.

கண்களுக்கு இதமான உட் கட்டமைப்பு லே அவுட்.

கருப்பக் கிரகம்

பொருளடக்கத்தில் இந்தத் தலைப்பும் அதன் கீழ் சங்குஎனப் பெயரும் பார்த்தாள்.

ஆவலோடு, பக்கம் எண் பார்த்துப் புரட்டினாள்.

மிழில் சிறுகதைகளோ, நாவல்களோ அதிகம் படித்தவளில்லை அவள். விவேகானந்தர் கட்டுரைகள் சில பல படித்திருக்கிறாள்.

சிறு வயது முதலே விவேகானந்தர் மீது ஈர்ப்பு ஏற்பட்டதனால் இருக்கலாம்.

விவேகானந்தர் படித்திருக்கிறாள், அவ்வளவுதான். தீவிரமான கிரேஸ்என்றெல்லாம் கிடையாது.

பள்ளிப் பருவத்தில், தமிழாசியர் பூங்குன்றன் அவ்வப்போதுக் காட்டிய விவேகானந்தரின் மேற்கோள்கள், மனதில் ஆழப் பதிந்து அதில் மயூரிக்கு ஈடுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

மாதா பிதா குரு தெய்வம் என்கிறோமே, அதில் ஆசிரியரின் பங்குதான் அதிகம். நூற்றுக்குத் தொண்ணுற்று ஒன்பது சதவிகிதம் மக்களுக்கு, கற்பித்த ஆசிரியர்கள்தான் ரோல் மாடலாக இருப்பார்கள். நல்ல ஆசிரியர் கிடைப்பது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்பார்கள்.

அந்த வகையில் மயூரிக்குக் கிடைத்த ஆசிரியர் அவளின் வரப் பிரசாதம். 

விவேகானந்தர் பாறைக்குப் பள்ளிப் பருவத்தில் இன்பச் சுற்றுலா சென்றபோது, ஆர்வ மிகுதியால், விவேகானந்தர் எழுதிய புத்தகங்கள் சில வாங்கினாள் மயூரி.

விவேகானந்தரின் கம்பீரமானத் தோற்றம்; தோற்றத்தின் பின்னணியான காவி அங்கி; தீர்க்கமான ஒளிபடைத்த விழிகள்;

புருவங்களுக்குக் குடைப் பிடித்தாற்போலத் தலையில் சுற்றி பட்டுப் புடைத்துத் தெரியும் தலைப் பாகை;

புறத் தோற்றத்தின் கம்பீரத்திற்கு சற்றிலும் குறைவில்லாது,  மேலும் பன்மடங்கு உயர்ந்து ஒளி வீசும் அவர் உள்ளழகு. கம்பீரமான ஆணித்தரமானக் கருத்துக்களை உள்ளடக்கியச் உலகம் போற்றும் சொற்பொழிவுகள். வீரியமான அவர் எழுத்துக்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துப் பிரமித்தாள்.

விவேகானந்தரைப் படிக்கும்போது தன்னை இழந்து படிக்கும் பழக்கம் அவளுக்கு இருந்தது.

விரும்பியப் புத்தகங்களை அடிக்கடிப் படிக்க வேண்டும் என்ற ஆவலோ;

பிடித்தப் பணியில் அமர வாய்ப்பில்லையே என்கிற தன்னிரக்கமோ;

பெற்றோர்கள் இன்று வரைப் பூரண சுதந்திரம் தராமல், சின்னக் குழந்தையைப் போல நடத்துகிறார்களே என்கிற மன வருத்தமோ, ஆற்றாமையோ;

இப்படி எதுவுமின்றித் தாமரை இலைத் தண்ணீராய், ஒட்டியும் ஒட்டாத வாழ்வு மயூரியுடையது.

நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கிறதுஎன்கிற கீதா சாரத்தின் போக்கில் ஓடிக்கொண்டிருந்த மயூரியின் வாழ்வில் சங்குவின் சந்திப்பு சலனத்தை ஏற்படுத்திவிட்டதோ?

கருப்பக் கிருஹம்என்ற சிறுகதைக்கு நவீன ஓவியர் தன் உள்ளத்தை ஓவியமாய்க் கொட்டியிருந்தார்.

கருப்பு-வெள்ளைப் படம்தான்.

ஓவியத்தில், கருப்பின் ஆதிக்கம் அதிகமாய் இருந்தது.

மற்றபடி, ஓவியத்தில் ஒளிந்திருக்கும் மேசேஜ்புரிந்தும் புரியாமலும் குழப்பியது அவளை.

கருப்ப - கிருஹம் என்றாலே இருட்டுதானே? ;

இருட்டின் குறியீடு கறுப்பு ;

தெளிவாய்ப் பார்க்க முடியாத, கூர்ந்து பார்க்கக் கூடாத, அதே சமயம், வாழ்வின் அடிப்படைத் தேவையான, ஜனன ரகசியத்தின் கோட்பாட்டை ஓவியத்தில் மிளிரச் செய்திருந்தார் ஓவியர்.

நேர்-கோடுகளும், பல-வடிவக்-கோடுகளும், மிதவைக்குத் தேவையான திரவத் தன்மையைக் காட்டும் குழப்பமான வண்ணங்களும், வடிவங்களும், ஒளி நிழல்களும் ஓவியத்தின் உன்னதத்தைப் பறைசாற்றின.

முழுமையாகப் புரியவில்லையென்றாலும், புரியாமலும் இல்லை மயூரிக்கு. ஒரே மூச்சில் அவசரமாகப் படிக்கும் கதையல்ல அது.

மனித உணர்வுகளை குறியூடுகளின் மூலமாக உணர்த்தி உள்ளார்ந்த பொருட்செறிவு நிறைந்த கருப்ப - கிருஹம் படைப்பை நிதானமாக மனதில் ஊன்றிப் படித்தாள்.

‘ஜான்-ரஸ்கின் என்கிற ஆங்கில எழுத்தாளர் ஒரு நூலை எப்படிப் படிக்க வேண்டும் என்று சொல்லும் நுணுக்கத்தை அடிக்கடி நினைவு கூர்வாள் மயூரி. மாணவர்களுக்கும் அதை அடிக்கடி சொல்லி அவர்களின் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவாள்.

கதையோட்டத்தில் தன்னை இழந்து, வேக வேகமாய் படித்துக் கொண்டு போகும் போது, சற்றே நிறுத்தி ஜான் ரஸ்கின் சொன்னதை நினைவு கூர்வாள்.

வார்த்தைகளுக்கு நடு நடுவே இருக்கும் வெற்றிடங்களில்  கொட்டிக் கிடக்கிற, மொழி வழிச் சொல்லாமல் சொல்லப்பட்டக் கருத்துக்களை உள்வாங்கும் வகையில் ‘சிலபிள் – சிலபிளாகப் படித்தாள்.

க்ரைம் சப்ஜெக்ட் பற்றிக் கூறும்போது ‘ஒரு வார்த்தையை வெட்டினால் வெட்டுவாயிலிருந்து ரத்தம் கசிய வேண்டும் என்பார் திறனாய்வாளர் அலெக்ஸி டால்ஸ்டாய். – இந்தக் கருத்துருவை தன்னிடம் படிக்கும் மாணவர் சமுதாயத்திற்கு அடிக்கடிச் சொல்வாள் மயூரி. வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும், மேன்மையும் நன்கு அறிந்தவள் அவள்.  அப்படி ஒரு தெளிவு அவளுக்கு.

ங்குவின் கர்பக்ரஹம் கதையை நன்கு உள் வாங்கி அணு அணுவாக ரசித்து ருசித்துப் படித்தாள்.

வார்த்தைகளுக்கு இடையேப் பொதிந்துள்ள, சொல்லாமல் சொல்லப்பட்டுள்ள, விழுமியங்களைப் ஊகித்துப் புரிந்து கொண்டாள், எழுதியவரின் சிந்தனைக்குள் புகுந்தாள்.

எழுத்தாளரின் சிந்தனை வசப்பட்டதும், மேலும்  சில-பல முறைகள் படித்து ஸ்டடி செய்தாள். எழுத்தாளரின் சிந்தனையின் எல்லைக் கடந்து, ‘இதயத்திற்குள் இறங்கி விட ஆசைப்பட்டாள்.

ரஸ்கின் சொன்ன முறையில், பற்பல சூழலில், பற்பல மனநிலையில் அந்த கர்பக் கிரகம் என்ற கதையைப் வாசித்தாள்.

வாசித்தாள் என்பதை விட, எழுதியவரின் எண்ணங்களையும், உணர்வுகளையும் உள் வாங்கும் வகையில் பாராயணம் செய்தாள் என்பதே சரியான விளக்கமாக இருக்க முடியும்.

தையின் ஓட்டம், உருவம், உள்ளடக்கம் அனைத்தும் உயர் தளத்தில் இருந்ததால், உள்வாங்க சற்றேக் கடினமாகத்தான் இருந்தது.

மீண்டும் மீண்டும் வாசித்து வாசித்து, பொருண்மையை உள்வாங்கினாள். இப்போது ஓரளவு கதையின் ஓட்டம் பிடிபட்டது.

கணவன், மனைவி, குழந்தைகள் எனக் கலகலப்பாக இருந்த குடும்பத்தை மிக மிக அழகாகவும், ஆழமான சொல்லாடல்களை வைத்துப் புனைந்து, பூடகமாய் விவரித்திருந்த விதம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

என்னதான் ஆசீர்வதிக்கப்பட்டக் குடும்பமாக இருந்தாலும், செல்வச் செழிப்புள்ள குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தில் எங்கோ எவருக்கோ ஏதோ ஒரு ரூபத்தில் வறுமை வந்து வாட்டுவதைத் தவிர்க்க முடியாது..’ என்கிற யதார்த்தத்தைப் பூடகமாக வெளிப்படுத்தும் வகையில் குடும்பத் தலைவனாக இருந்து வழி நடத்தவேண்டிய கணவன் நிலை தடுமாறி,  கள்ளக் காதலில் விழுந்ததில் பொதிந்துள்ள ஞாயக் கூறுகளையும் சிறப்பாகக் கையாண்டிருப்பதைக் கண்டு  வியந்தாள் மயூரி ;

சமூகம் முற்றிலும் அங்கீகரிக்காத, கள்ளக் காதல் எனும் செயல்பாட்டில் மிக அசாதாரணமாகக் காணப்படும் நியாயக் கூறுகளை, சமூகம் ஏற்கும் விதமாய்ச் சொல்லப்பட்ட நுட்பமான சிறுகதைதான் ‘கருப்ப - கிருஹம்.

வாழ்வில் முதன் முறையாக இப்படிப்பட்டக் கனமான, ஆழமான, சமூகக் கேடாக ஸ்தாபிதப்படுத்தப் பட்ட ஒரு இசத்தைத் தகர்த்து, தவிடு பொடியாக்கி, யதார்த்த நோக்கை ஸ்தாபிதம் செய்வதற்காகப், புனையப்பட்ட சிறுகதை அது ;

சிறுகதை ஏற்படுத்திய அதிர்வுகளில் ன்று புதிதாய்ப் பிறந்தவள் ஆனாள் மயூரி ;

கதைக் கோர்வையைக் கண் மூடி அசைப் போட்டாள் ;

எழுதிய சங்குவின் நினைவும் கலந்து மெல்வது தவிர்க்க இயலாததானது ;

ந்தச் சிறுகதையின் முக்கியக் கதாபாத்திரமாக சங்குதன்னையேக் காட்டியிருப்பதாகப் பட்டது மயூரிக்கு.

கதாநாயகியாராக இருக்கும்?’

யாருகிட்டயாவது கொடுத்தனுப்பி, உன் கைல ‘ஸ்ரீயைச் சேர்த்திருக்கலாம். அப்படிச் செய்ய எனக்கு இஷ்டமில்லே மயூ ;

‘எப்போ நீ தனியா மாட்டுவேன்னு காத்திருந்தேன் மயூ ; இன்னிக்கு மாட்டினே; கப்னு பிடிச்சிட்டேன் மயூ .” என்று வாக்கியத்துக்கு வாக்கியம் ‘மயூ.. மயூ என்றாரே சங்கு ! ;

வாட் அன் இண்டரஸ்டிங் கேரக்டர்?’ – மதி – மயங்கினாள் மயூரி.

உடனடியாகச் சென்று சங்குவை நேருக்கு நேர் பார்க்க வேண்டும். அவருடன் நிறைய நிறையப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.  என்றெல்லாம் ஆவல் எழுந்தது மயூரிக்கு.

‘உண்மையான எண்ணங்கள் உறுதியாகப் பூர்த்தியாகும்என்ற விவேகானந்தரின் சிந்தனை மயூரியின் கண் முன் வந்து போனது.

அத்தியாயம் 7

யூரி,  இந்த அரசுக் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு வந்ததே ஒரு விபத்துத்தான்.

மயூரியின் அப்பா... பல்கலைக்கழத் துணை வேந்தரின் நேர்முக உதவியாளர்; ‘யு ஜி ஸி போர்ட்’, செனட் உறுப்பினர்.

எப்போதெல்லாம், வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம், எந்தெந்த விதத்திலெல்லாம் தன்னை முன்னிருத்த முடியும் என்பதைத் திட்டமிட்டு, செல்வாக்கையும் திறமைமையையும் முன்னிருத்தி, உன்னதமான ஒரு சமூகச் சேவகராகத் தன்னை முன்னிருத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதிதான் மயூரியின் அப்பா.

அந்தக் குறிப்பிட்ட சூழலில் அப்படிக் காட்டிக் கொள்வது மட்டுமல்லாமல், அந்தச் சூழலைப் பதிவு செய்து, சுய விளம்பரங்களை, சமூக ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கச் செய்ய நிறையப் பணமும் , நேரமும் செலவழிப்பவர் அவர் .

யூரியின் அம்மா. அரசினர் மேல் நிலைப் பள்ளியொன்றில் முதுகலை ஆசிரியை ;  மனித சமுதாயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய அறிவியல் என்று சொல்லக்கூடிய சமூகவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவள்.

அவள் கற்பிக்கும் சோஷியாலஜி பாடத்தில். சந்தேகமே வராத அளவிற்கு மாணவர்களை வைத்திருக்கும் அறிவு ஜீவி ;

பாடத்துக்குள் இறங்கி, ஆழ்ந்து, உட்புகுந்து, நடத்தினால்தானே, கேட்பவருக்குச் சந்தேகம் வரப்போகிறது ;

ஒருவேளை, மாணவர்களுக்குப் பலவற்றைச் சொல்லி அவர்களைக் குழப்பவேண்டாமே என்ற நல்ல எண்ணமாகக் கூட இருக்கலாம் .

வர்களின் ஒரே மகள் மயூரி .

அவளை அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் அமர்த்தி, அழகு பார்த்தார்கள் பெற்றவர்கள்.

பல்கலைக் கழகத்தின் செனட்-மெம்பராக இருந்ததால், எந்தக் கல்லூரியில், எந்தப் பாடத்திற்கு எப்போது வாய்ப்பு, என்பதை விரல் நுனியில் வைத்திருந்தார் மயூரியின் அப்பா.

பதவியின் செல்வாக்கைப் பயன் படுத்திக்கொண்டு, காலம் நேரம் கூடி வருமாறு அமைத்துக் கொண்டார்; சரியாகத் திட்டமிட்டுக் காய்களை நகர்த்தினார்;

கல்லூரியில் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளர் பதவியில் மயூரியைச் சுலபமாக நுழைத்து விட்டார்.

அப்பாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே இந்த வேலையை மயூரி ஏற்றாள்.

தன் ஆசைகளும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் முற்றிலும் மறுக்கப்பட்டிருந்த போதிலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதன் போக்கில் விட்டு வாழ்ந்து கொண்டிருந்தாள் மயூரி.

அப்படிப் பட்டவளுக்குச்  சுய சிந்தனைகளையும், சுய  மரியாதைகளையும், துணிச்சலையும் கொடுத்தது இந்த கருப்ப - கிருஹம் என்ற சங்குவின் சிறுகதை.

ங்கமேஸ்வரன் கல்லெறிந்து விட்டான்.

வட்ட வட்டமாகக் குளத்தில் சலன அலைகள் எகிறிப் பரவத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு அலையும் மேலும் மேலும் பல அலைகளை உற்பத்தி செய்து அலைய விட்டன. அலைகளின் போக்கில் பயணப்படத் தொடங்கிவிட்டாள் மயூரி. உண்மையில் இப்போது மயூரி சலனப்பட்டு விட்டாள்.

சலனம் !

வாழ்வின் அடிநாதமே சலனம் தானே !

ஜடத்-தன்மையில் கூடச் சலனம் உண்டென, எத்தனை அழகாய்க் கதை சொல்லி நிரூபித்தான் வால்மீகி ;

ஒரு சலனம் கொடுத்தது ஜடத்தன்மையை ;

மறு சலனம் கொடுத்தது அந்த ஜடத்தன்மைக்கு உயிர்ப்பு ;

இந்த அகலிகையின் கதை, வாழ்வின் யதார்த்தத்தை அல்லவா தெளிவாய்ப் படம் பிடித்துக் காட்டுகிறது.

யூரியின் சலனம் எத்தகையது ? ;

விடியல் வருகுது பெண்ணே, நான் வருகிறேன்...!”  என்று சொல்லி ஆற்றங்கரைக்குப் புறப்படச் செய்ய, கௌதமன் வேடத்தில் வந்து கோழிக் கூவலால், சலனப் படுத்திய இந்திரனின் காமச்- சலனமா ? ;

பொழுது விடியவில்லை போல இருக்கிறதே ? ; நதியில் சலனமில்லையே ? ; - என்று யோசித்த கௌதமனின் சந்தேகச் சலனமா.. ? ;

ஏதோ தவறு நடக்கிறது ; நதிக் கரையிலிருந்து கௌதமர் அவசரமாய் பர்ணசாலைக்குத் திரும்பிய ஊகச் சலனமா ? ;

நிலையறிந்து அகலிகையைக் கல்லாய்ச் சமைத்த கௌதமனின் கோபச்-சலனமா ? ;

விசுவாமித்திரரின், நிழலாய்த் தொடர்ந்து, நடந்த ஸ்ரீராமன், பாதத்தைப் பதித்து, ஜடப்பாரையாய்க் கிடந்தவளை அதிரூப அழகு சுந்தரி அகலிகையாய் உருமாற்றிய விமோசனச் - சலனமா ? ;

ஊழ்வினை உருத்து வந்து ஊட்ட, மாய மான் மேல் மோகம் கொண்டு, தன் தலையில் தானே மண் போட்டுக்கொண்ட சீதாப் பிராட்டியின் மோகச் – சலனமா ? ;

தோ ஒரு சலனமாய் இருந்துவிட்டுப் போகட்டும். மொத்தத்தில் மயூரி சலனப்பட்டுவிட்டாள்.

அவள் நோக்கிக் கொண்டிருந்த பார்வை-நூலில் கவனம் செல்லவில்லை.

கவனம் முற்றிலும் மாறிவிட்டது. கொண்டு வந்த சாப்பாட்டைக் கூடச்  சாப்பிடத் தோன்றவில்லை. பசி மரத்துப் போய் விட்டது.

மதியச் சாப்பாட்டிற்குப் போன ‘பி-எச்-டி க்களும், ‘எம் - ஃபில்களும் ஒவ்வொருவராய் துறை அறைக்குத் திரும்பினார்கள்.

டாக்டர் மார்த்தாண்டம், ஆங்கிலத் துறை எச் ஓ டி; துறைத் தலைவர்.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மேதைமைகளையும் கரைத்துக் குடித்த சர்வக்ஞன் போல, ஜம்பம் துலங்க, கோட்டும் சூட்டுமாய் படாடோபமாக துறை அறையின் உள்ளே நுழைந்தார். அவர் முகத்தில், நான் மெத்தப் படித்தவன், எனக்கு நிகர் எவரும் உண்டோ?’  என்று பறை சாற்றும், பவித்ர அகங்காரம் நிரந்தரமாகப் படிந்திருக்கும். அவரைப் பார்க்கும் போதெல்லாம் தனக்குள் சிரித்துக் கொள்வாள் மயூரி.

தனக்கான, பெரிய மேஜையின் முன்னால் போடப் பட்டிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தார் துறைத் தலைவர் மார்த்தாண்டம்.

உண்ட களைப்பு இருக்குமல்லவா! சுழல் நாற்காலியின் பக்கவாட்டு லிவரை இயக்கி, முதுகால் முட்டி, சாய்மானப் பகுதியை சற்றேப் பின்னால் சாய்த்தார். எதிரில் கிடந்த ஸ்டூலில் கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு,  கண்களை சற்றே மூடி, குட்டித் தூக்கம் போட்டார்.

ஏனோ, அந்த பி எச் டி ஐ சங்கமேஸ்வரனோடு ஒப்பிடத் தோன்றியது மயூரிக்கு.

சிந்திப்பவர்களுக்கும், சிந்திப்பதாகக் காட்டிக் கொள்பவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெள்ளத் தெளிவாக இப்போது உணர முடிந்தது மயூரியால்.

ப்படி எதையெதையோ நினைத்தபடி, பரபரப்பாகச் சென்று, சங்கமேஸ்வரனின் வரவை எதிர் நோக்கியும், அவனை எப்படியெல்லாம் கலாய்க்க வேண்டும் என்றெல்லாம் எண்ணியபடி வீட்டின்  வாயிற் கதவை விறியத் திறந்தாள் மயூரி.

வெளியே.. பேரதிர்ச்சிக் காத்திருந்தது.

காரணம். காலிங் பெல் அடித்துவிட்டுக் காத்திருந்தவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரி டாக்டர் நவீனன்.

“சார்..! வாங்க...! வெல்கம்...! சாரி ஃபார் த டிலே..! – சமாளித்தாள்.

“நோ ப்ராப்ளம். உங்க வகுப்பு மாணவி, நவிஷ்னி இஷ்யூ சம்பந்தமா வந்தேன். அவளுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

“ஓ! வெரி நைஸ்..

“இனிஷியல் ஸ்டேஜ்தான். முழுமையான ‘ரிலாப்ஸ்’ க்கு வாய்ப்பிருக்கு ங்கறாரு.சைக்காலஜிஸ்ட் வரதராஜன். 

“ஓ...! கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்...- என்று தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினாள் மயூரி.

மேலும், “ரொம்ப ரிஸ்க் எடுத்துச் செஞ்சிருக்கீங்க சார் நீங்க. உங்களைப் போல ‘சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி’ எல்லாருக்கும் இருந்தா ... – என்று சொல்லிக் கொண்டே போனவளை மேலே பேச விடவில்லை நவீனன்.

மேடம், உங்களுக்கு நவிஷ்னி கேஸ்ல என்னவெல்லாம் நடந்திருக்குன்னு தெரிய வேண்டியது அவசியம்னு நான் நினைச்சேன், அதனாலத்தான் அதை உங்க கிட்டேச் சொல்ல வந்தேன். ஹிப்னாடிக் முறைல நவிஷ்னியை ஆழ்நிலைக்குக் கொண்டுபோயி, அவகிட்டேயிருந்து விஷயத்தை வாங்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிருச்சு.

“ரீசன் என்னவாம் சார்...?”

“யு ஜி படிக்கும்போது அசோக்னு ஒரு சீனியர் ஸ்டூடண்ட்டோட பழக்கமாம். அவன் ரொம்ப சோஷியல் டைப் போல, ரொம்ப பொசசிவான நவிஷ்னிக்கு அசோக் மேலே சந்தேகம் வந்திருக்கு.

“அடடே, அப்பறம்...?

“அப்பறமென்ன, வழக்கமா இந்தமாதிரி மனநிலைல பெரும்பாலானவங்களுக்கு வர்ற Delutional disorderன்னு சொல்ற  அதீத சந்தேக நோய் நவிஷ்னிக்கும் வந்துருச்சு.”

“அச்சச்சோ...!

“பேரண்ட்ஸ், அவளோட பிகேவியர் எல்லாத்தையும் அலட்சியப் படுத்திட்டாங்க. மனநல வைத்தியர் கிட்டேயோ, ஆலோசகர் கிட்டேயோ போகத் தவறிட்டாங்க ;

டிப்ரஷன், அளவுக்கு அதிகமாகி பேலன்ஸ் தவறியிருக்கா ;

அதற்குப் பிறகுதான் ராமுகிட்டே இருந்த திறமைல இம்ப்ரஸ் ஆகி அல்லும் பகனும் அவன் நினைவோடயே .. ; அதெல்லாம்தான் உங்களுக்கும் தெரியுமே...” ;

கடைசியா “ இவளோட மனநோய்க்குக் மூலக் காரணமான ராமுவை வெச்சித்தான் இவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வரணும்னு முடிவு பண்ணினோம் நானும் வரதராஜனும். இந்த கவுன்சிலிங்குக் ப்ராஸஸ் வெற்றிகரமா முடிய உங்க பூரண  ஒத்துழைப்பை கேட்டுத்தான் இப்போ நான் இங்கே வந்தேன். கோவாப்ரேட் பண்ணுவீங்கன்னு நம்புறேன்... என்று முடித்தார் நவீனன்.

“சார் நான் இந்த வருஷம்தானே காலேஜ்ல ஜாயின் பண்ணியிருக்கேன். ஓல்ட் ஸ்டூடண்ட் ராமுவை எனக்குத் தெரியாதே சார்... ஹெல்ப்-லெஸ்ஸா இருக்கேனே..! என்றாள் மயூரி.

“அந்தச் சிரமமெல்லாம் உங்களுக்கு வைக்கலை. அந்த ராமுவோட ‘வேர்-எபவுட்ஸ்எல்லாம் சேகரிச்சிட்டேன். போன வருஷம் ராமுவோட டிசி, மார்க் ஷீட் இதுங்களோட, டிகிரி சீரியல் நம்பர் வெச்சி யுஜிசி மூலமா அவன் எந்தக் காலேஜ்ல எம் ஏ சேர்ந்து படிச்சான்னு ட்ரேஸ் அவுட் பண்ணிட்டோம்.

“ஓ .. ஸ்மார்ட்டா யோசிக்கறீங்க சார்... !

“நேர்ல போயி கப்னு ஆளைப் பிடிச்சி விசாரிச்சி பைசல் பண்ணிடணும்னு தோணுது.

அதுக்கு நான் எந்த வகைல உதவ முடியும் சார்..?

“நவிஷ்னியோட ‘எம் ஏ க்ளாஸ் இன்சார்ஜ் - ங்கற முறைல நீங்க ஸ்பாட்டுக்கு வந்தா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும்.

அத்தியாயம் 8

ரியாதை நிமித்தம், நவீனனை எச் ஓ டி யிடம் அறிமுகப் படுத்தினாள் மயூரி.

“ஓ...! அப்படியா...! ஷாக்கிங் நியூஸ்...!” - என்று பதற்றமாக நடித்தார். எச் ஓ டி.

“மயூரி மேடம், சார்க்கு கோ - ஆபரேட் பண்ணுங்க...! என்று துறைத் தலைவராக மயூரியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அதாவது அவரின் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு ஏதோ அவசர வேலை இருப்பவர்போல அந்த இடத்தை விட்டு அவசரமாய்ச் சென்றுவிட்டார் எச் ஓ டி.

மேஜைக்கு இரு புறமும் எதிரெதிராக அமர்ந்தார்கள் நவீனனும், மயூரியும்.

நீண்ட நேரம் சங்குவைப் பற்றியும், அவர் எழுத்துக்களின் வீச்சுக்களைப் பற்றியும் சிலாகித்துக் பேசி சந்தோஷித்தார்கள் இருவரும்.

முத்தாய்ப்பாக, “சங்கு ஒரு எழுத்துச் சித்தர் என்றான் நவீனன். இவரெல்லாம் வெளி நாட்டில் இருந்திருந்தால் அவரின் மதிப்பும் மரியாதையுமே தனி..” என்று சிலாகித்தான்.

அதற்குப்பின், போதை மருந்து கம்ப்ளைண்ட் பற்றி பேச்சு தொடங்கினான் நவீனன்.

“ரொம்ப இர்ரெகுலர் சார் அவ..” - என்று சொன்னாள் மயூரி.

டிபார்ட்மெண்ட் அறையில் அமர்ந்து இந்த விஷயங்களைப்  பேசுவதை விட, கேண்டீன், லைப்ரரி இப்படி ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்து பேசுவது சிறப்பாக இருக்கும்..’  எனத் தோன்றியது மயூரிக்கு.

“டீ இங்கே வரவழைக்கவா, கேண்டீன் போலாமா சார்...! - இயல்பாகக் கேட்டாள் மயூரி.

நவீனனின் புன்னகை, “தாராளமாக் கேண்டீனுக்குப் போலாமே? - என்று அறிவித்தது.

கல்லூரிக் கேண்டீனில் சென்று அமர்ந்தார்கள் இருவரும்.

“இந்த டீ குடிக்கறது கூட அடிக்‌ஷன்’ தான். என்றுத் தொடங்கித் தொடர்ந்தான் நவீனன்.

டீ, காபி சிகரட்னு பழக்கமாகிப் போன இதுங்களை டெக்னிகலா, Stimulants (ஊக்கிகள், தூண்டிகள்) னு சொல்றோம்;

‘மூளைக்கும், உடல் உறுப்புகளுக்கம் இடையே தூண்டுகோலாய்ச் செயல்படுற இதுங்களெல்லாம் ‘லெஸ் ஹாம்’ ;  ‘ஹாம் லெஸ்’ இல்லை என்று வார்த்தை விளையாட்டை விளையாடிவிட்டு புன்முறுவலித்தான்.

மயூரியும் அதை ரசித்து முறுவலித்தாள்.

 ரு காப்பியோ, டீயோ உறிஞ்சினா தேவலாம் போல இருக்கு;

ராத்திரி பூரா படிக்கறவனுக்கு அப்பப்போ டீ போட்டுக் கொடுப்பேன் ;

ஒரு தம்’மடிச்சிட்டு வரேன் இரு மச்சி ;

இப்படியெல்லாம் பேசறது சமுதாயத்துல ரெகுலர் ஆயிருச்சு.

சினிமா, சீரியல் எல்லாத்துலயும், ரொம்ப ‘ஃப்ரீக்வண்ட்டா இப்படி வசனம் பேசறதுக் கூட தவிர்க்க முடியாமப் போயிடுச்சு…”

“நீங்க சொல்றது சரிதான். இதெல்லாம் நம்மோட வாழ்கையோட ஒன்றித்தான் போயிடுச்சு.” – என்று ஒத்துப் பாடினாள் மயூரி.

காபி, டீ, பெப்ஸி, சிகரெட்னு யூஸ் பண்றதுல, காஃபின், நிக்கோடின், ஆம்ஃபிதமின், கொக்கைன் இப்படி, ஏதோ ஒண்ணு மூளை நரம்புகளைத் தூண்டி விடுது. ஊக்கம் தர்ற இதுபோல போதைகளை ஊக்கிகள் அல்லது தூண்டிகள் னு சொல்லி ஏத்துக்க ஆரம்பிச்சிட்டோம்;

“எக்ஸாட்லி...! – என்றாள் மயூரி.

“இப்போப் பாருங்க, ‘ட்ரக் அடிக்ட்டை எப்படிச் சமாளிக்கணும்னு ஐடியா செய்ய வந்திருக்கற நாம, ‘டீங்கற ஒரு ‘ஸ்டிமுலண்ட்’டை செலுத்திக்க இங்கே வந்திருக்கோம், ஹ ஹ ஹ  ஹ... என்று முரண்தொடையாகப் சொல்லிச் சிரித்தான் நவீனன்.

நவீனனின் அறிவு பூர்வமான பேச்சைக் கவனத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டு மனதில் வாங்கிக்கொண்டு, அவ்வப்போது, எதிர்வினையும் ஆற்றிக் கொண்டிருந்தாள் மயூரி.

“டீ, காபி இதெல்லாம் ‘அப்ரூவ்டு போதை”,

அதே சமயம் கேனிபஸ், மரிஜுவானா போன்றவை தடை செய்யப்பட்ட போதை.

“என்ன கொடுமை சரவணன் சார் இது?

என்ற பிரபல சினிமா டயலாக்கைச் சொல்லி, ‘என்னங்க ஞாயம் இது? என்று கேட்டபோது, சீரியஸ் மேட்டர்களையும் இப்படி, சிம்பிளாக, ஜன ரஞ்சகமாகப் பேசுகிறாரே..! என்று நவீனன் மீது பிரமிப்பே வந்தது மயூரிக்கு.

தொடர்ந்து நிறைய நிறையப் பேசினார் நவீனன்.

பேசிய ஒவ்வொன்றிலும் உண்மைப் பளிச்சிட்டது.

அறிவு பூர்வமான அவன் பேச்சு, அவள் சிந்தனைக்கு விருந்தானது.

நவீனனின் வருகையும், இருப்பும், பேச்சும் மிகவும் பிடித்துப் போயிற்று மயூரிக்கு.

வீனனிடம் இருந்த அந்தத் தெளிவு சங்குவின் கருத்துக்களைப் படித்ததால் பட்டை தீட்டப் பட்டதாகத் தெரிந்தது அவளுக்கு.

டீயை கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான், சர்வர்.

நவீனன் டீ டம்ளரின் பக்கவாட்டில் விரல்  நுனியால் தொட்டு விட்டுப் பேச்சை ஆரம்பித்தார்.

“டீ ரொம்பச் சூடா இருக்கு, கொஞ்ச நேரம் ஆகட்டும் அப்பறம் குடிக்கலாம்… என்று நவீனன் சங்கேதமாய்ச் சொன்னது மிகவும் பிடித்தது மயூரிக்கு.

Depressants  என்கிற பெயரில், மூளைத் திறன் குறைப்புக்கான மருந்தாக, போதைப் பொருட்களை எந்த வகையில் மருத்துவத் துறையில் உபயோகப் படுத்துகிறார்கள் என்பதை விளக்கினார்.

Hallucinogens  என்கிற, பிரமைகளை தோற்றுவிக்கப் பயன் படுத்தும் போதை மருந்துகள் பற்றிச் சொன்னார்.

Cannabis (கஞ்சா), என்ற சட்டத்திற்குப் புறம்பானதாக கருதப்படுவதும், ஒரு தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிற  வெறி மயக்கப் பொருள் பற்றியும் அதன் தன்மை பற்றியும் உதாரணங்களோடு விளக்கினார்.

Narcotic Analgesics என்ற வஸ்துவை வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தும் வகைகள் பற்றி விவரமாகச் சொன்னார்.

இப்படியாகப் பெரிய லெக்சரே கொடுத்தார் நவீனன்.

நடு நடுவே டீ டம்ளரை இரண்டு விரல்களால் தொட்டு, அதன் சூட்டைச் சோதித்தார். அவ்வப்போது ஒவ்வொரு மிடராய் தேநீரைப் பருகிக் கொண்டேப் தொடர்ந்து பேசினார் நவீனன்.

அது மட்டுமில்லை.

போதைப் பழக்கத்தால் வரும் குறுகிய கால பாதிப்புகள் என்னென்ன? நீண்டகால பாதிப்புகள் என்னென்ன?,

வித்ட்ராயல் ஸிம்டம்ஸ் எப்படியெல்லாம் தாக்கும்..? - என்று பல்வகை பாதிப்புகள் பற்றியெல்லாம் மிகத் தெளிவாகக் பட்டியலிட்டார் நவீனன்.

நிறைய விஷயங்கள் அவளுக்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. நவீனனின் வருகையை மிகவும் சுவாரசியமாக உணர்ந்தாள் மயூரி.

‘உலகம் ரொம்பப் பெருசு மயூ. குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டப்படாது,’ என்று அடிக்கடி சொல்லும் சங்குவின் நினைவும் இப்போது வந்தது மயூரிக்கு.

ஏதோ ஒரு சக்தி தன்னுள் சென்று தன்னை உயர உயர அழைத்துச் செல்வதாக உணர்ந்தாள்.

ஆறு மாதத்திற்கு முன்பு இருந்த மயூரிக்கும், இன்று இருக்கும் மயூரிக்கும் இடையே உள்ள மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் அவளுக்கேத் தெளிவாகத் தெரிந்தது

அத்தியாயம் 9

ல்லூரியில் பணியேற்ற, முதல் நாள் அனுபவம் மயூரியின் மனதில் விரிந்தது.

விஜய தசமி நாளில் பள்ளியில் சேர்ப்பதற்கு வருவதைப் போல, விரிவுரையாளர் பணியில் சேர்க்க மயூரியை அவர் அப்பா கல்லூரிக்கு அழைத்து வந்தார்.

அப்பாவின் செல்வாக்கை மனதில் வைத்து, மயூரி, சமர்ப்பிக்க வேண்டிய, அவளது சான்றிதழ்களை கையில் வாங்கி, ஒப்புக்குக் கூடப் பார்க்கவில்லை கல்லூரி நிர்வாகம்.

“இருக்கட்டும்...! இருக்கட்டும்...! உள்ளே வைங்க...! என்று அபயஹஸ்தமும், வரதஹஸ்தமுமாக நின்றார் கல்லூரி முதல்வர்.

முதல்வரின் அறையில் இருந்த குளிர்பதனப் பெட்டியிலிருந்து அலுவலக உதவியாளர், எடுத்துக் கொடுத்த குளிர்ந்த பானத்தை தன் கையால் வாங்கி இருவருக்கும்  வைத்தார். அப்போதுதான் உள்ளே வந்தார் தலைமை எழுத்தர்.

“நோ... தாங்க்ஸ் என்றாள் மயூரி...

பாதிப் பருகிவிட்டு மீதியோடு, மேஜை மீது வைத்தார் அப்பா.

இண்டர்காமில் தொடர்பு கொண்டு டாக்டர் மார்த்தாண்டத்தை அறைக்கு வரச்சொன்னார் முதல்வர்.

புதிதாக வேலைக்குச் சேரும் நபரை, டிபார்ட்மெண்ட்டிற்கு அழைத்து வந்து, அறிமுகப்படுத்தும் நடைமுறையை இந்த முதல்வர் மாற்றியது பிடிக்கவில்லைதான் மார்த்தாண்டத்திற்கு.

வருத்தம்தான், என்றாலும், மயூரியின் தந்தைக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கில், அந்த ‘இஷ்யூ புதைந்து போனது.

 தே மார்த்தாண்டத்தின் இடத்தில் சங்கமேஸ்வரன் இருந்திருந்தால்..? – மயூரியின் மனதில் காட்சிப் படிமங்கள் தோன்றின.

பிரின்ஸிபால் இன்டர்காமில் அழைத்து வரச்சொன்ன உடனே..., நியூ எண்ட்ரியா ? டிபார்ட்மெண்ல என் சீட்க்கு அனுப்புங்க என்றிருப்பார்

செனட் உறுப்பினர், அது இது என ப்ரின்ஸிபால் அளந்திருந்தால்? ;

அது யாரா இருந்தாத்தான் என்ன? ; கேண்டிடேட் இங்கே ஒர்க் பண்ணப் போறவங்கதானே? ” – என்று திடமாய் மறுத்திருப்பார் என்றேத் தோன்றியது.

னோ சற்று முன்தான் அறிமுகமான அந்தச் சங்குவைப் பற்றி பிரமிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

இன்னாருடைய மகள் என்று சங்கமேஸ்வரனுக்கு மட்டும் தெரியாதா என்ன? ;

இந்தப் பெண் தன்னைப் பற்றி தந்தையிடம் போய் ஏடா கூடமாய்ச் சொன்னால், தன் வேலைக்கே உலை வைத்தாலும் வைத்துவிடுவார், என்ற பயம் இல்லாமல், மனதில் பட்டதைப் படாரென்று சொல்லிப் போன சங்கமேஸ்வரனை நினைக்க நினைக்கப் பிரமிப்பாகவே இருந்தது மயூரிக்கு.

யாருடன் ஒப்பிட்டாலும் சங்கமேஸ்வரன் மிக மிக  உயரத்திலேயே இருந்தார். அது அவர் ஆற்றலால் பெற்ற உயரம்.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில், சீனியர் ப்ரொபசர் குஞ்சிதபாதம் நடந்து கொண்ட முறையை, இப்போது நினைத்தாலும் கூசியது.

பி.ஏ., முதலாம் ஆண்டு, எம்.ஏ முதலாம் ஆண்டு வகுப்புகள் மயூரிக்குத் தரப்போவதாகவும், ‘பொயட்ரிஎடுக்க வேண்டும் என்றும் துறைத் தலைவர் சொன்னார்.

எனவே, அந்த இரண்டு வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களை தெரிந்து கொண்டாள்..

டென்னிஸன் எழுதிய ‘யுலிஸிஸ் என்கிற கவிதையை நடத்துவதற்குத் தன்னை தயார் செய்து கொண்டிந்தாள் மயூரி.

To Strive ; To Seek ; To Find… Not to Yield…’

என்ற ‘களர் நிலம்’ என்ற டென்னிசனின் கவிதையின் முடிவை உள்ளார்ந்து ஓங்கி ஒலிக்க முடியுமா தன்னால்...? - தன்னிரக்கம் தலைகாட்டியது அவளுக்கு.

Canotative meaning சொல்லத் தனக்குத் தகுதியில்லா விட்டாலும், ரெஃரன்ஸ் எடுத்து,  Denotative meaning சொல்வோம் என்று முடிவு செய்து கொண்டாள்.

ம் குச்சிதபாதம் ஏ.பி..” – முதுகுக்குப் பின்னால் நெருக்கமாகக் குரல் வர, கழுத்தை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.

..................” – சீனியர் என்பதால் எழுந்து நின்றாள்.

“நோ... நோ.. உட்காருங்க. இப்பத்தான், அப்பாவைப் பார்த்துப் பேசிட்டு வரேன்...  ஹி ... ஹி..!

அப்படியா சார்... !” – என்றாள் இயந்திரத் தனமாக.

பெரிய மனிதர்களைக் காக்காய்ப் பிடிப்பதற்காக, அவர்கள் வீட்டுக் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் இவற்றைக் கொஞ்சும் கேவலம் ;

அந்த வீட்டுக் குழந்தைகள் மூக்குக் கண்ணாடியைப் பற்றி இழுத்தாலோ, சட்டைப் பைக்குள் கை விட்டு பேனாவை எடுத்தாலோ, ஹி..ஹி... என்று இளித்தபடி, சகித்துக் கொள்ளும் கையாலாகாத்தனம் ;

பதவி உயர்வு வரும்போது, சிக்கலில்லாமல் அதைப் பெற்று, பணப்பலனை அதிகரித்துக் கொள்ள அவர் உதவி தேவைப்படுமே என்கிற சுயநலம் ;

டாக்டரேட் முடித்த ஒரு ப்ரொபசரிடம் இப்படிப்பட்ட ச்சீப் அப்ரோச் கண்டு அருவருத்தாள்,

ப்ரொஃபசர் குஞ்சிதபாதத்தை விடக் கிட்டத்தட்ட இருபது வயது குறைந்தவள் மயூரி.

பெற்ற மகளிடம் பேசுவது  போல, உரிமையாகவோ ;

ஜூனியர்-மோஸ்ட்டிடம் பேசுவது போல விகுவாகவோ ;

மாணவியிடம் பேசுவது போல கண்டிப்பாகவோப் பேச வேண்டியவர் ;

இப்படிப் பல்லிளித்தபடி வழிந்து பேசுவது சகிக்கவில்லை. சாணிப் புழுவைப் போலவும், நசுங்கிய மரவட்டையைப் பார்ப்பது போலவும் அருவருப்பாக இருந்தது மயூரிக்கு.

தன் தந்தையின் தயவு வேண்டியே இப்படி நடந்து கொள்கிறார் என்பது, அவர் அணுகு முறையில் வெளிப்படையாகவேத் தெரிந்தது.

ந்த நேரத்தில்; ஏய் குஞ்சிதபாதம், இப்படியே காலேஜ்க்கு வெளீல போ ; பொட்டிக் கடைல, ஒரு ஹேர் பேண்ட், பாக்கெட்டும், ஒரு பொட்டுப் பாக்கெட்டும் வாக்கிட்டு வா...!” - என்று சொல்லியிருந்தால் கூட வாங்கி வந்திருப்பார் அவர்.’ என்றுத் தோன்றியது, அவரது குழைந்த தோற்றத்தைப் பார்த்த மயூரிக்கு.

குஞ்சிதபாதம் தொடர்ந்து குழைந்தார் - “அப்பாக்கிட்டே, சமயம் வரும்போது என்னைப் பத்தி நீங்க சொல்லணும் ;

“....................” – என்ன சொல்லணும்... ? என்று கேட்டது மயூரியின் சுருங்கிய பார்வை.

“அரியர் ரெண்டு மூணு மாசமா இழுத்துண்டிருக்கு; அப்பா மனசு வெச்சா சீக்கரம் முடியும் ஹி.. ஹி...” மீண்டும் இளிப்பு.

ச்சே...! என்ன மனிதர் இவர். ;

‘மொத மொதல்ல, கல்லூரில வேலைக்குச் சேர்ந்து, வகுப்புக்குப் போகத் தயாரா இருக்கேன் நான். ;

ஒரு சீனியரா, லட்சணமா, சிலபஸ் என்னென்ன , எப்படியெல்லாம் ஸ்டூடன்ஸ்ஸ ஹாண்ட்டில் பண்ணணும்... இப்படியெல்லாம் சொல்லி, வழ நடத்த வேண்டிய இடத்தில் உள்ளவர். ;

வாழ்த்தி வகுப்புக்கு அனுப்ப வேண்டிய அஸிஸ்டெண்ட் ப்ரொபசர்; இப்படிக் காசுக்காக, தன் சுயமரியாதையையே விட்டுக் குடுக்கறாரே.. என்று ஆற்றாமை வந்தது மயூரிக்கு.

தன் சுயலாபத்தையும், தன் பற்றாக்குறையையும், குடும்ப சூழ்நிலையையும், கஷ்டகாலத்தையும் இன்று தான் வேலைக்குச் சேர்ந்த என்கிட்டேச் சொல்லிப் புலம்பறாரே ; என்ன மனுசன் இவர்..?;

கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் யு.ஜி.சி அப்படி என்னக் குறை வைத்துவிட்டது ...? ;

ஏன் இந்தப் போதாமை இவர்களுக்கு ?;

ஏன் இப்படி தரித்திர மூதேவியாக முகம் சுழிக்கிறார்கள். பஞ்சப் பாட்டுப் பாடுகிறார்கள் ?.

ஏன் எப்போதும் இப்படிக் காசு காசு என்று ஆலாய்ப் பறக்கிறார்கள் ?

மெத்தப் படித்த, சீனியர் பேராசிரியரான இவர், ஏன் இப்படிச் சுய மரியாதையை இழந்து பணத்துக்காகப் பறக்கவேண்டும் ? ;

அரியர்தான் இருக்கட்டுமே, இன்று இல்லையேல் நாளை வந்து விடப் போகிறது. அந்தப் பொறுமைக் கூட இல்லாமல் இப்படி சுய மரியாதையை விட்டு, கரன்சிகளை எண்ண, எப்படி மனம் வருகிறது?

இப்படிப்பட்டச் சிலப் பறக்காவட்டிகளால்தான், ஒட்டுமொத்தக் கல்லூரி ஆசிரியர்களின் பெயரும் சந்திக்கு வருகிறது...! – என்று முடிவுக்கு வந்தாள் மயூரி.

அன்றாடங்காய்ச்சிகள் கூட, மானத்தோடும், சுய மரியாதையோடும், வாழும் இந்த உலகத்தில்... இது போன்ற எச் ஓ டி ஐயும், ப்ரொபசரையும், ப்ரின்சிபாலையும் பார்க்கப் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது மயூரிக்கு.

அத்தியாயம் 10

குஞ்சிதபாதத்தின் செயல்பாட்டைக் கண்டு முற்றிலும் விட்டுப் போனது மயூரியின் மனம்., கூடவே, பல்கலைக் கழகம் கொடுத்தப் பதவியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும், தன் தந்தையின் செயலையும் அவர் பகட்டையும் நினைத்து அருவருப்பாய் இருந்தது அவளுக்கு.

இந்தக் குஞ்சிதபாதம் ஒரு வகையில் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார் என்றால், அதிகாரங்களும் செல்வாக்கும் பெற்ற தன்னைப் பெற்ற தந்தை, வேறு விதத்தில் அவரைத் தாழ்த்திக் கொள்கிறார்.என்றே தோன்றியது அவளுக்கு.

கல்லூரியில் விரிவுரையாளர் வேலையில் சேர வந்தபோது, ஒரு தந்தையாகத் தன்னை அவர் நடத்திய விதமோ ;

கல்லூரி நிர்வாகம் தன் தந்தையிடம் நடந்து கொண்ட முறையோ, சிறிதும் ஏற்புடையதாக இல்லை ;

அதே-சமயம், இதையெல்லாம் தட்டிக் கேட்கவோ, தன்னிச்சையாக மனதில் பட்டதைச் சொல்தும், செய்வதுமான பழக்கமோ, துணிவோதான் அவளிடம் இல்லையே.!

பர்ஸ்ட்பி ஏ தானே போறீங்க?”

ம்..

பொயட்ரிஉங்களுக்கு ஓகே தானே?”

ஓ கே சார்!”

சரிவராதுன்னா சொல்லுங்க, ட்ராமாவோ, ப்ரோஸோ மாத்திக் கொடுக்கறேன் ஹி... ஹி...!”

எந்தப் பாடம் கொடுத்தாலும், எடுக்கப் பயிற்சிப் பெற்றவள்தானே நான். ஏன் என்னிடம்ஆப்ஷன் கேட்கிறார் இவர்? ;

தன்னைத்தான் இப்படிக் கேட்கிறாரா? ; இல்லை ; யாராக இருந்தாலும் இப்படிக் கேட்டு ஈடுபாடு உள்ளதைக் கொடுப்பார்களா...?’

மயூரியின் மனதில் எழுந்த இந்தக் கேள்விகளையெல்லாம் அவள் முகம் பிரதிபலித்துக் காட்டியது.

இந்தச் சந்தேகத்துக்குக் குஞ்சிதபாதத்திடமிருந்தே பதில் வந்தது.

நான் இருபது வருஷமாப்ப்ரோஸ்தான் எடுக்கறேன். உங்களுக்கு வேணுமானாச் சொல்லுங்க. அதை தந்துட்டு, நான் பொயட்ரி எடுத்துக்கறேன்.. கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும்பிக்-அப்பண்ணிக்குவேன். ஹி..ஹி

ருபது வருடங்களாய் வகுப்பில் கற்பித்துக் கற்பித்துப்  பழக்கப்பட்ட ஒன்றை என்னிடம் தந்துவிட்டு, இதுவரைஹாண்டிலேச் செய்யாததை எடுத்துக் கொண்டு பிக்கப்செய்துக் கொள்வாராமே?;

ஏன் அவர் இப்படிச் செய்ய வேண்டும் ;

ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் இவர் ;

உனக்கு இந்தப் பாடம் ஒதுக்கியிருக்கேன் ; என்று ரைட் ராயலாகச் சொல்லலாம்.

இது உன் ஒர்க் - லாட்மெண்ட். ; நீ இந்தப் பாடத்தை இந்த சிலபஸ்படி நடத்தணும். ; என்று உத்தரவிடலாம்.

நல்லாப் ப்ரிபேர் பண்ணிச் சிறப்பாப் பாடம் நடத்து ; ஸ்டூடண்ட்ஸ் மத்தீல நல்ல பேரு எடுக்கணும்...” – என்று அட்வைஸ் செய்யலாம்.

இவ்வாறெல்லாம் அவர் நடந்து கொண்டிருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் ;

இப்படியெல்லால் வழி நடத்த வேண்டிய வயதும் பதவியும் அனுபவமும் உள்ளவர்தானே இவர் ;

நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி’ ன்னு பாரதியார் சொல்லும் கேரக்டர் இவர் தானா?’ ;

கல்லூரி முதல்வர், தலைமை எழுத்தர், ஹெச் ஓ டி, சீனியர் ப்ரொபசர் என அனுபவத்திலும், வயதிலும் மூத்த எல்லோரும், தங்கள் கௌரவத்தை ஏன் குறைத்துக் கொள்கிறார்கள்?’ ;

தங்கள் சுய மரியாதையை ஏன் காலுக்குக் கீழ் போட்டு நசுக்கிக் கொள்கிறார்கள்? ;

இப்படியெல்லாம் சிந்தனைகள் ஓட, கஷ்டப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் மயூரி.

நான் பொயட்ரியே எடுக்கறேன் சார். அதான் ப்ரிபேர் பண்ணிக்கிட்டு இருக்கேன்.” என்றாள்.

அத்தியாயம் 11

குஞ்சிதபாதம் சென்றபின், ‘ஹெச்..டியைப் போய்ப் பார்த்தாள் மயூரி.

குட்மார்னிங் சார்..” – மரபாய், மரியாதையாய் வணங்கினாள்.

குட்மார்னிங்..”

“சார்... இரண்டாவது அவர், பி ஏ முதலாமாண்டு வகுப்புக்கு போகச் சொன்னீங்க. போயிடறேன் சார்.

“ம்...!

“மத்த அவர்ஸ்க்கு ஒர்க் அலாட்மெண்ட் சார்..?”

அதெல்லாம் நாளை-மறுநாள் பாத்துக்கலாம். இன்னிக்குத்தானே ஜாயின் பண்ணியிருக்கீங்க.!”

இன்னிக்கு வேற வகுப்பேக் கிடையாதா சார் எனக்கு?”

ஃபோர்த் அவர் ‘எம்.ஏ-ஃபஸ்ட் இயர்இருக்கு, வழக்கமா, ஆசிரியர் இல்லைன்னு, ஸ்டூடண்ட்ஸ் வகுப்பை விட்டுப் போயிடுவாங்க.”

அதான் நான் இன்னிக்கு வேலைல ஜாயின் பண்ணிட்டேனே சார். மாணவர்களுக்கு இன்ஃபாம் பண்ணி, வகுப்புலயே ரீடைன் பண்ணச் சொல்லுங்க சார். சீரியஸ்ஸா பாடம் நடத்தாட்டியும் பரஸ்பரம் ஒரு அறிமுகமாவது பண்ணிக்கலாமே ?”

ஜாயின் பண்ணின அண்ணிக்கேடைட்-ஷெட்யூல் கொடுத்தா, உங்கப்பாவுக்கு யார் பதில் சொல்றது ?.

எச் ஓ டி சொன்னதைக் கேட்ட மயூரிக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

ஹெச்..டி இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அதை காதில் வாங்ககியபடியே சீனியர் ப்ரொபஸர் குஞ்சிதபாதம் அங்கே வந்தார்.

நடத்தின பாடங்களையெல்லாம்ஃபிங்கர்-டிப்லவெச்சிக்கிட்டு, புதுசா நடத்தமாட்டாங்களானு காத்திருக்காங்களாக்கும் ஸ்டூடண்ட்ஸ். பாத்துக்கலாம் விடுங்க. ஹ... ஹ... !” – என்று ஏளனச் சிரிப்புடன் கொசுராய் ஒரு கருத்தை குறுக்கேப் புகுத்தினார் குஞ்சிதபாதம்.

முதலிரவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டப் பிறகு, கடைசீ நேரத்தில், பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்து விட்டால், எப்படி அந்த இளம் தம்பதிகள் விரக தாபத்தாலும், உணர்வுகளின் வேட்கையாலும் துன்புற்று மருகித் தவிப்பார்களோ, அதை விடப் பன்மடங்கு மனத் தளர்ச்சிக்குளாகிப் போனாள் மயூரி.

துறைத் தலைவரையும், சீனியர்களையும் மீறி அவளால் என்ன செய்ய முடியும்..?

ஒன்றும் செய்ய முடியவில்லை. முற்பகலில் ஜாயினிங் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்தாகி விட்டது.

இன்று காலை முதல், எனக்கு, யு.ஜி.ஸி, சம்பளம் கணக்குச் செய்து விடும்.

வேலையில் சேர்ந்த முதல் நாளே, தன் கடமையை முழுமையாய்ச்  செய்யாமல் வாங்கும் முழு தண்டச் சம்பளம். – மனசு வெதும்பியது மயூரிக்கு.

கடமையைச் செய்யத் தயாராகத்தான் இருக்கிறாள் அவள். செய்ய விடாமல் தடுக்கப்பட்டதால், முதல் நாளின், வகுப்பறை அனுபவத்தையும் இழந்து விட்டாள் மயூரி.

அதை விடக் கொடுமை, ஆசிரியர் இருந்தும், பாடம் கேட்கும் வாய்ப்பை இழந்து விட்ட மாணவர்கள்.

இவற்றையெல்லாம் நினைத்து நினைத்து வருந்தியது அவள் மனம்.

துறைத் தலைவர் அனுமதிக்காததலல் எம் ஏ வகுப்புக்கு இவள் செல்லவில்லை. மாணவர்கள் வழக்கம்போல் வகுப்பை விட்டுக் கலைந்து சென்று விட்டார்கள்.

அந்தப் பிரிவேளைப் முழுவதும், ஆங்கிலத் துறைக்கான ஓய்வறையில் முள் ஆசனத்தில் அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்தாள் மயூரி.

உத்யோக காண்டத்தின் முதல் நாளில், தன் கடமையைச் சரிவரிச் செய்யாத, வீராங்கனையை அழைத்துச் செல்ல மோட்டார் கார் வந்து விட்டது.

கார் ஓட்டுநர், இறங்கி வந்து மயூரி ஏறுவதற்காகப் பின் கதவைத் திறந்தபடித் தயாராக நின்றார்.

அத்தியாயம் 12

ந்தக் கார் ஓட்டுனர், ஒரு சில மணித்துளிகள்தான் காலம் கடந்து வந்து விட முடியுமா? ;

இப்படிக் காரின் கதவைத் திறந்தபடி பணிவாக நிற்கவில்லையானால்...? ; இவனை உண்டு-இல்லை என்றல்லவா ஆக்கிவிடுவார் அப்பா ;

சொன்ன நேரத்துக்கு வர முடியலைன்னா, எதுக்கு நீயெல்லாம் வேலைக்கு வரே? நான்ஸென்ஸ்..?” - காட்டுக் கத்தலாய்க் கத்துவார் ;

உன்னோட டூட்டியைச் சரியாச் செய்ய முடியாத நீ எனக்குத் தேவையில்லை.” - சட்டமாய்ப் பேசுவார் ;

வேலைக்கு வந்த நாட்களுக்குச் சம்பளம் கணக்குச் செய்துத் தீர்த்துவிட்டுச் சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப்புவார் ;

இப்படி, தோட்டக்காரன், சமையலர் என சீட்டுக் கிழித்து அனுப்பியவர்களின் பட்டியல் கண் முன் வந்தது மயூரிக்கு ;

இதோ, அவரின் ஒரே மகள், இன்றைய சம்பளத்திற்கு வேலை எதுவும் செய்யாமல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்..” - கழிவிரக்கத்தில் கலங்கினாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும், வரவேற்பரையில், ‘பொக்கே’- யுடன் காத்திருந்தான் தாய் மாமன் கணேசன்.

ணேசன் ;

அந்தச் சிறு நகரத்தில் இயங்கி வரும் வங்கி ஒன்றில் கிளை மேலாளர். பார்ப்பதற்கு வாளிப்பாகவும், நல்ல நிறத்துடன் இருக்கும் இளைஞன்.

மயூரியின் வருங்காலக் கணவனாக, அவள் பிறந்த அன்றே கணேசனை நிச்சயித்து விட்டார்கள் பெரியவர்கள்.

துவக்கக் கல்வி படித்து முடிக்கும் வரை மயூரியின் பாட்டியும் இருந்தாள்.

கணேசன் இங்கே வரும்போதெல்லாம், “மயூரீ உன் புருசன் வந்துருக்கான் பாரு...” – என்றுதான் எப்போதும் சத்தமாகச் சொல்லிச் சந்தோஷிப்பாள்.

கணேசா, போ, உள்ளே போயி உன் பொண்டாடியப் பாரு...” - என்பாள் அவனிடம்.

பாட்டி பழைய காலத்து மனுஷி என்பதால் , அப்பாவும் அம்மாவும் எதுவும் சொல்லாமல் அடங்கிப் போனார்கள்.

சிறு வயதிலிருந்தே இப்படிச் சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றியதாலோ என்னவோ, மயூரிக்கு, கணேசன் மீது நிரந்தரமாக ஒரு வெறுப்பே வந்துவிட்டது.

மற்றபடி கணேசன் பேரில் தனிப்பட்டக் கோபமோ, தவறான எண்ணங்களோ கிடையாது அவளுக்கு. அவனைத் திருமணம் செய்து கொள்வதில் மட்டும் எள் முனை அளவும் இஷ்டமே கிடையாது அவளுக்கு.

ஹலோ!” – என்று பதிலுக்குச் சொல்லி விட்டு, உள்ளேச் சென்று ஷோபாவில் தன் கைப் பையை இறக்கி வைத்தாள் மயூரி.

கன்கிராட்ஸ்” - மகிழ்ச்சிப் புன்னகையுடன், அவள் கையில் பொக்கேகொடுத்தான் கணேசன்.

வித் லவ்என்று எழுதியிருந்தது பொக்கேயில்.

ஐ டூ லவ் யூ கணேசா, பட் நாட் லைக் டு மேரி யூஎன்று சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை.

தாங்க்ஸ்’  என்பதுடன் நிறுத்திக் கொண்டாள்.

ரொம்ப டயர்டா வந்திருப்பே மயூ. ரெஸ்ட் எடு. ஸீ யூ லேடர்.” - டிப்ளமேட்டாகப் புறப்பட்டுச் திரும்பிச் சென்று விட்டான் கணேசன்.

ப்பாவும் அம்மாவும் இனோவாவில் வந்து இறங்கினார்கள்.

ஹாய்...!” அப்பாதான் சந்தோஷத்துடன் மயூரியின் தோள் பிடித்து அணைத்துக் கொண்டார்.

அவள் தோளின் மேற்புறம் வழியாக, பின்புறத்தில், ஷோபாவின் மேல் கிடந்தப் பொக்கேயைப் பார்த்தார் அப்பா..

கணேசன் வந்தானா?” - ஆர்வமாய்க் கேட்டார்.

எப்போ வந்தான் கணேசன்? அவனுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் கொடுத்தியா மயூரி – தன் உடன் பிறந்த தம்பியைப் பற்றி ஆசையாய்க் கேட்டாள் அம்மா.

அத்தியாயம் 13

கடமைக்கு ஒரு பூச்செண்டை வாங்கி வந்து கொடுத்துவிட்டு, சம்பிரதாயமாய் பேசிவிட்டுச் சென்ற தாய் மாமன் கணேசனை சங்கமேஸ்வரனோடு ஒப்பிட்டது அவள் மனசு.

கணேசன் கொடுத்த பூச்செண்டுக்கும், சங்கு கொடுத்த ‘கர்ப்பக் கிருஹம் கதைக்கும் நடுவே இருக்கும் மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம் அவளை ஆட்கொண்டது.

இதோ, இந்தப் பூச்செண்டை தூக்கி ஓரமாய்ப் போட்டாயிற்று. அவ்வளவுதான் அதற்கு மதிப்பு.

ஆனால் அந்தக் கதையைப் படித்தபின் மனதில் ஏற்பட்ட உணர்வுகளும், உந்துதல்களும் அவளைச் செலுத்திய அந்த நாளை நினைக்கும்போதே மனம் நிறைந்தது.

தோ ஒரு விவரிக்க முடியாத உணர்வினால் உந்தப்பட்டு, குற்ற உணர்வு கலந்த பயத்தோடு, தன் ஸ்டேட்டஸ் குறித்த யோசனைகளும் ; அதைத் தாண்டிச் செல்லும் அசட்டுத் துணிச்சலையும் மனசில் போட்டுக் குழப்பிக்கொண்டே, சங்கமேஸ்வரனை முதன் முதலில் நூலகத்தில் சந்திக்கச் சென்ற நாள்... அப்பப்பா... அதை இப்போது நினைத்தாலும் குலை நடுங்கியது.

‘கருப்ப - கிருஹம் கதையை தன் முன் வைத்துவிட்டுச் சென்றபிறகு, மயூரிக்குள் ஏற்பட்ட உணர்வு மயக்கங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாதெனில் அது மிகையில்லைதான்.

சங்கமேஸ்வரனை தனிமையில் சந்திக்க வேண்டும் என்ற வேட்கை எழுந்தது மயூரிக்குள்.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

வேட்கையைத் தீர்த்துக் கொள்ளும் ஆர்வம் வந்துவிட்டால் மனிதர்கள் மனதில் கபடு வந்து விடும். கபட்டுத் தன்மையை தொடர்ந்து நிலை நிறுத்த கள்ளம் கபடோடு கை கோர்த்துக் கொள்ளும். பிறகென்ன.. கள்ளம் கபடமே இல்லாது போல பேசி நடிக்கக் தொடங்கி விடுவார்கள்.

இந்தக் கம் மயூரிக்குள் கபடுபுகுந்துவிட்டது. நொடிக்கு நொடி வளர்ந்து விருட்சமாய் உயர்ந்து கிளைப் பரப்பி நின்றது..

உள்ளத்தின் கள்ளத்தை உணர்வில் கலக்கத்தான் எத்தனை எத்தனை கபட நாடகம் ஆடுகிறான் கண்ணன்.

காபாரதக் கதையை நுணுகிப் பார்த்தால், அதன் போக்கு முழுவதும் ஒரு கபடம் ஓடுவது தெரிகிறதே.

கீதையை உபதேசித்த கண்ணனை இந்த உலகம் கபடன் என்று சொல்வதில்லையே. ; தெய்வமாகத்தானே தொழுகிறது.

அடுத்தடுத்து நடைபெறப் போகிற அனைத்துக் காட்சிகளையும் நன்கு அறிந்தவர்தானே கண்ணன். கண்ணன் மனம் வைத்திருந்தால் எத்தனை எத்தனையோ வேண்டாத நிகழ்வுகளைத் தவிர்த்திருக்கலாமே !

பஞ்சபாண்டவர்களையும், கௌரவர்களையும், பகடைக் காயாய் உருட்டி, குருக்ஷேத்ரத்தில் எதிரெதிரில் நிறுத்தி, கபடத்தின் உச்சக் கட்டமாய் மனச்சஞ்சலத்தை உருவாக்கி அந்தச் சஞ்சலத்திற்கு ஆறுதல் கூறுவதுபோல, மனித மனத்தின் மாசுகளைத் துடைக்கும் பகவத் கீதையை உபதேசிக்கிறானே...!

கள்ளத்திற்கு அடுத்த படி கபடு.

கபடு புகுந்த பிறகு, சுலபத்தில் சமநிலைக்கு வருவதில்லை.

புகுந்தது, கள்ளம் என்பது தெரிந்தபின் அதிலிருந்து சுலபமாக விடு பட்டுவிடலாம் என்பதற்குச் சாட்சியாகத்தான், திருஞான சம்பந்தர், தோடுடைய செவியனை தரிசித்து ஞானம் பெற்றபின் உள்ளம் கவர் கள்வன்என்றாரோ?

படம்தான் தன்னை முற்றிலும் உணரவும் வைக்கிறது;

உள் முகமாகப் பார்க்கவும் வைக்கிறது;

தன்னுள்ளேப் புதைந்துக் கிடக்கும் அத்தனை எண்ணங்களையும் செயல்படுத்தத் தூண்டுவதோடு, அதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறது.

தாயே யசோதா, உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி...”

கோபியர்களின் நோக்கம் கண்ணனைத் துதி பாடுவது மட்டுமல்ல. ;

ஜாலம் பிறரை ஈர்க்கும். ;

ஈர்த்த பின்தான் அது ஜாலம் என்று தெரியும். ;

ஜாலமெனத் தெரிந்தபின் அதிலிருந்து விடுபட நினைத்தாலும் முடியாமல் தவிப்பதே மனித இயல்பு;

ள்ளம்.

அதைத் தொடர்ந்து கபடம்..

இறுதி கட்டமாக ஜாலம்...

சங்கமேஸ்வரன் ஜாலம் காட்டுகிறான் இப்போது.

ஜாலத்தால் ஈர்க்கப்பட்டு விட்டாள் மயூரி.

விரும்பியதைப் பெறவேண்டும் என்ற வேட்கையை போகிற போக்கில் அடைய விடாமல் செய்கின்றன உலகியல் கோட்பாடுகள்.

உலகம் ஏற்காதபோது, தேவையானதைப் பெற மனதில் கள்ளம் புகுந்து விளையாடுகிறது.

கள்ளத்தை நேரடியாய் பிரயோகப் படுத்தும்போது, கள்வனென்ற எதிர்மறைப் பட்டம் சுமக்க வேண்டியிருக்கிறது.

புத்தியின் சாதுரியத்தால், கள்ளத்தை, கபடநாடகமாக மாற்றி ஜாலம் புரியும் போது, நேர்மறையாக உறுமாறி விடுகிறது.

டிபார்ட்மெண்டில் பலரும் இருந்தாலும் கபடம் நிறைந்த மயூரி, தான் மட்டும் துறையின் ஓய்வரையில் ஏகாந்தமாக இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டாள்.

ஆசை வெட்கமறிவதில்லை.

தனிமையில் மனம் ஒருமுகப் பட்டது.

மரம், கிளைகள், இலைகள், பழுப்புகள், சமித்துக்கள், பின்னணியாய் அரும்புகள், மொட்டுக்கள், புஷ்பங்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் , நீல வானம், பறவையின் சிறகுகள், அதன் மெல்லிய கால்கள், குறுகுறுக்கும் கண்கள்... எதுவும் கண்ணில் படாது பறவையின் நெற்றிப் பொட்டு மட்டுமே தெரிந்த, அர்ஜூனின் ஏகாக்ர பார்வையுடன் இருந்தது மயூரியின் தற்போதைய மனநிலை.

ருமுகப் பட்ட மனசுக்கு வெற்றி நிச்சயம்.

பாதைகள் எல்லாம் தெளிவாகப் புலப்படத் துவங்கின மயூரிக்கு.

கையில் அகப்பட்ட ஒரு புத்தகத்துடன், நூலகம் நோக்கிச் நடந்தாள் மயூரி.

சங்கமேஸ்வரனிடம் நூலக விஷயமாகப் பேசவேண்டும் என்ற சாதாரண எண்ணமாக இருந்தால், இத்தனை முஸ்தீபுகள் தேவைப்பட்டிருக்காது.

சந்திக்கும் நோக்கத்தில் கபடம் இருந்ததால், ஒரு கள்ளத்திற்கு இன்னொரு கள்ளம் என்று அண்டை கொடுத்துக் கொண்டே இருந்தது

மயூரி நூலகத்துக்குச் செல்வதை மொத்தக் கல்லூரியும் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

ஏன் நான் நூலகத்துக்குப் போகக் கூடாதா? ;

எல்லாரும்தானே போகிறார்கள்.. ;

நான் இந்தக் கல்லூரியின் விரிவுரையாளர். ;

நான் போவதில் என்ன தப்பு?’ ;

செய்யும் செயல்கள் அனைத்திற்கும் தன்னளவில் ஞாயம் கற்பித்துக் கொண்டது மனசு.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

யூரி நீ அங்கே போகும் நோக்கம் என்ன?’

மயூரியின் எண்ணத்தித்திடம், கேள்வி கேட்டது புத்தி.

புத்தியின் கேள்வியை அலட்சியப்படுத்தினாள் மயூரி.

மயூரி யைச் சுருக்கி மயூ என்று விளித்தான் சங்கமேஸ்வரன்.

மயூரியும், மயூவும் இருவராகி இரு வேறு குணக் கூறுகளுடன் போராடத் தொடங்கிவிட்டனர்.

மயூவின் வலிமைக்கு முன் மயூரி மண்டியிட வேண்டியிருந்தது.

‘சங்கமேஸ்வரன், நூலக உதவியாளர் என்ற பார்வை மட்டும் உனக்கு இருந்திருந்தால், கல்லூரிக்கு வந்து எட்டு மாத காலமாக அவரை நீ போய் பார்த்து வரவில்லையே ஏன்?

இந்தனை காலமாய் நீ யாரோ, அவர் யாரோ;

அவர் வந்து உன்னைச் சந்தித்தபின் அவரின் ஏதோ ஒன்றில் நீ விழுந்து விட்டாய் மயூரி;

ன்னை மீறி நீ செயல் பட்டுக் கொண்டிருக்கிறாய் மயூரி. நீ பொது நூலகத்துக்குப் போகாதே, டிபார்ட்மெண்டுக்குத் திரும்பு.

அடுத்தாற்போல உன்னை வந்துச் சந்திக்கும்போது, அவர் கொடுத்த கதைப் புத்தகத்தை அவன் முகத்திலேயே தூக்கி அடித்துவிட்டு அவரை விட்டு விலகு ;

உன் ஸ்டேட்டஸ் என்ன? அவன் ஸ்டேட்டஸ் என்ன? ; நீ அஸிஸ்டெண்ட் ப்ரொபஸர், அவன் நூலகத்தில் கிடக்கும் சாதாரண அலுவலக உதவியாளன் ; இருவருக்கும் எத்தனை ஏணி வைத்தாலும் எட்டாது.

புத்தி, விடாமல் மயூரியை எச்சரித்துக்கொண்டே இருந்தது.

ஸ்டேட்டஸ் பார்த்து வருவதில்லையே காதல்.

வாதம் செய்த புத்தியை விதண்டா வாதம் பேசி அடக்கியது மனசு.

“மயூரி. இது கல்லூரி. இளைஞர்கள் தங்கள் அறிவை விரிவு செய்துகொள்ளக் கூடும் இடம். இங்கே இப்படிப்பட்ட முரண்தொடைகள் கூடாது. பொறுப்பான ஆசிரியர் பதவி உன்னுடையது.

இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பெரிய பொறுப்பில் இருக்கும் நீ இப்படிச் சபலத்துக்கு ஆளாகித் தடம் மாறினால் உன்னை அது கேவலப்படுத்தி விடும் மயூரி. எச்சரிகை செய்கிறேன் .

வக்ர குணம் கொண்ட மாணவர்கள் உன்னைப் பற்றி கரிக்கோடுகளால் விமர்சிப்பார்கள் என்பதை அறிவாயா நீ ?

உன் செயலால் உன் குடும்ப கௌரவம் மட்டும் அல்ல, அவன் வாழ்வும் சீர்குலையும். எச்சரிக்கிறேன்.’

புத்தி விடாமல் அனைத்துக் காரண காரியங்களையும் உணர்த்தி, மயூரியை எச்சரிக்கை செய்தது.

“நான் கேவலமானவள் இல்லை.. நூலக உதவியாளரான சங்கமேஸ்வரனை சாதாரணமாகச் சந்திக்கத்தான் செல்கிறேன்.” என்று புத்தியோடு எதிர் வாதித்தது அவள் மனது.

புத்தி விடவில்லை.  “நீ கேவலமானவளில்லைதான். ஒத்துக் கொள்கிறேன். எட்டு மாத காலமாக அவன் யாரோ நீ யாரோ என்று இருந்தாய் அல்லவா..?பொட்டிலடித்தாற்போல் கேட்டது.

“ஆமாம்...

“இன்று மதியம் அவன் வந்து உன்னிடம் ஒரு சிற்றிதழைக் கொடுத்த பின், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காரணமே இல்லாமல் அவனைச் சந்திக்க ஆவலுடன் புறப்பட்டுப்போகிறாயே ஏன்?”

“....................

“ஏன் மௌனம் காக்கிராய் மயூரி. ம்... காரணம் சொல்லு?”

புத்தி சற்றே அதட்டிக் கேட்டதும், காரணம் ஏதும் சொல்லத் தெரியவில்லை மயூவால்.

“அ....அ...................”

ன் தடுமாறுகிறாய் மயூரி ?; நீ நோக்கமின்றிச் செல்லுவதை இப்போதாவது உணர்கிறாயா..? ; நோக்கமின்றிச் செய்யப்படும் எதுவும் வெற்றி பெறாது என்பது உனக்கேத் தெரியுமே..? ; 

நீ தடம் மாறுகிறாய் என்று இப்போதாவது உணர்ந்துகொள்.

இப்போது மயூவின் மனது விழித்துக் கொண்டது.

“நான் தடுமாறவில்லை. அங்கே செல்வதற்குப் பல காரணங்கள் உண்டு என்னிடம். ;

“முதல் காரணம் சங்கு’வின் சிநேகிதத்துக்காகச் செல்கிறேன்.”

“அவன் ஸ்நேகிதத்துக்கு இப்போது என்ன அவசரம், அவசியம் ?”

யூரியின் புத்தியும், மனசும் மாறி மாறித் தர்க்கம் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் சீனியர் ப்ரொபசர் குஞ்சிதபாதம் அங்கு வந்தார்.

“ஆஃடர்-நூன் உங்களுக்குக் க்ளாஸ் ஏதும் கிடையாதே. வீட்டுக்கு போறதானா போங்களேன்..!னு சொல்ல வந்தேன். நீங்களே வீட்டுக்குத்தான் கிளம்பறாப்ல இருக்கு..!”

“வீட்டுக்குக் கிளம்பலை சார். லைப்ரரீக்குப் போறேன்...!” என்றாள் மயூ.

“நீங்க லைப்ரரிக்குப் போவானேன். டிபார்ட்மெண்ட் லைப்ரரீல இல்லாதது அங்கே என்ன இருக்கு? அப்படியே ஏதாவது வேணும்னா, சங்கமேஸ்வரன வரச் சொல்லி அவன் கிட்டேக் குறிச்சிக் கொடுத்தா, கொண்டு வந்து தரான்.

மனசு மறுகியது மயூரிக்கு. சங்கமேஸ்வரன் என்ற அறிவு ஜீவியை எவ்வளவுத் தரக்குறைவாகப் பேசுகிறார்..?’

“.................... –அமைதி காத்தாள் மயூரி.

இவனுக்குப் பதவி தந்த பந்தாவில் , அதிகாரம் தந்த திமிரில், அகங்காரத்தில். ஆணவத்தில் பேசுகிறான்..’ – மயூரியின் அமைதியின் உள்ளடக்கம் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

“நீங்க அங்கேயெல்லாம் போயி உங்க கௌரவத்தை குறைச்சிக்காதீங்க. உங்க தகப்பனாருக்கு இதெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது. ஓ ஏ கேடர்ல உள்ளவாளை நிமிந்துகூடப் பார்க்க மாட்டார் அவர்.”

‘....................’ – ‘அகங்காரம் … பவித்ர அகங்காரம் … இது ஒழிந்தால்தான் இந்த தேசம் உருப்படும்..’ என்று நினைத்துக் கொண்டாள்.

பேச்சின் போக்கு இயல்பாக மாறியது.

ரியர் சாங்ஷன் ஆனதை அப்பாக் கிட்டேச் சொல்லிட்டு வந்தேன். அவர் மட்டும் இல்லேன்னா இழுத்துக்கிட்டுத்தான் கிடக்கும் அரியர்.

“....................” – இதற்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

சங்குவைச் சங்திக்க ஆர்வமாய்ச் செல்லும் நேரத்தில்  இந்தக் குறுக்கீட்டை மயூரி சிறிதும் விரும்பவில்லை. வேறு வழியின்று அவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டாள்.

“அப்பாவைப் பார்த்து தேங்க்ஸ் சொன்னப்போ, இன்னொரு சேதியும் சொல்லிட்டு வந்தேன்; செய்யறேன்னார். “என்ன சேதின்னு கேளுங்க..?” – என்று தூண்டினார்.

“....................” – என்ன சேதி என்ற பார்வையாலேயே வேண்டா வெறுப்பாகக்  கேட்டாள் அவள்.

“யுனிவர்சிடி ‘வைவா பேனல்’ல என்னை ஒரு கேண்டிடேட்டா புட்டப் பண்றேன்னு சொன்னார். ஒரு சிட்டிங் போயிட்டு வந்தா சுளையா ஆறாயிரம் ஏழாயிரம் கிடைக்கும். ஹி...ஹி..;

அப்பா ஞாபகம் வெச்சிப்பார். நீங்களும் சமயம் வரும்போது ரிமைண்டர் கொடுக்கணும்..”

வழக்கம்போல் பல்லிளித்தார் குஞ்சிதபாதம்.

வாய்த் துடுக்காய் பேசத் தோன்றியது மயூரிக்கு, ஆனால் தன்னை அடக்கிக் கொண்டு, “சொல்றேன் சார்.” என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

“நீங்க டிபார்ட்மெண்டுக்குத் திரும்புங்க. நான் இன்டர்காம்ல சொல்லி சங்கமேஸ்வரனை வரச் சொல்றேன்.”

“ஏன் அவரைச் சிரமப்படுத்தணும். எனக்கு ஃப்ரீ அவர்தானே நானே போறேன்.. உங்க உதவிக்குத் தாங்க்ஸ் சார்.” என்று நடந்தாள் மயூரி.

சீனியர் ப்ரொபசர் குஞ்சிதபாதம் மனதில்

படை வீரன் ஒத்தெல்லோவும், ‘அரசவை செனட் உறுப்பினரின் மகளானடெஸ்டிமோனாவும், வந்து போனார்கள்.

அத்தியாயம் 14

குஞ்சிதபாதத்தின் மனதில் ஓடிய சந்தேக ரேகைகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது மயூரியால்.

“உடனே குஞ்சிதபாதத்திடம், உண்மையைச் சொல்லிடு. இல்லையானால் அவராக எதையாவது கொளுத்திப் போட்ருவார்..” - மயூரியை எச்சரித்தது உள்ளுணர்வு.

அதோடு மட்டுமல்லாமல், Truth is beauty, Beauty Truth’ என்ற ஜான் கீட்ஸ்ன் வைர வரிகளும் அவள் முன் பிரகாசமாய்ப் பளிச்சிட்டன.

த்துத் தப்படிகள் சென்றுவிட்ட குஞ்சித பாதத்தை அழைத்தாள் மயூரி.

“சார்...!

“சொல்லுங்கம்மா?

“இன்-ஃபாக்ட் நான் வேற ஒருக்காரணமா, சங்கமேஸ்வரனைப் பார்க்கப் போறேன் சார்... ! ;

“....................” ?  என்ன காரணம் என்று கேட்டது குஞ்சிதபாதத்தின் உடல் மொழி.

‘சங்குங்கற புனைப்பெயர்ல கதை, கவிதை, கட்டுரை யெல்லாம் எழுதறார்னு ஸ்டூடண்ட்ஸ் அடிக்கடிச் சொல்லுவாங்க. எனக்கும் படைப்பிலக்கியத்துல நாட்டம் உண்டு.... அதான் அவரைப் பார்த்து...

“.பார்த்து..?”- என்று அந்தாதி போல் முடித்த இடத்தைப் பிடித்துக்  கேள்வியாக வளைத்துக் கேட்டார் குஞ்சிதபாதம்.

“இன்னிக்குத்தான் அவரோட சிறுகதை ஒண்ணு படிக்கக் கிடைச்சது, வாசிச்சேன். அதான், நேர்ல அவரைப் பாராட்டிட்டு வரத்தான் போறேன் சார்.

‘ம்...ம்... கண்டுபிடிச்சிட்டேன், உன் மனசுல இப்படி ஏதாவதுதான் இருக்கும்னு, ரெஃப்ரன்ஸ்... அது - இதுன்னு என்னென்னமோ நீ உளரும்போதே, உன் திருட்டுத்தனம் புரிஞ்சிடுச்சு. நடக்கட்டும், நடக்கட்டும்;’ – என்று அற்பத் தனமாய் அழுத்திச் சொன்னார்.

மயூரியைப் பதில் பேச்சுப் பேச விடாமல் தொடர்ந்து குஞ்சிதபாதமே பொரிந்து பொரிந்துப் பேசினார். புகைந்துப் புகைந்து கரித்தார்.

“மயூரி, அந்த சங்கமேஸ்வரன் ஒரு எக்ஸெண்ட்ரிக்..” என்று ஏளனக் குரலில் சொல்லி, எள்ளி நகையாடினார். 

“எல்லாரும் படிக்கற வெகுஜனப் பத்திரிகைகள்ல அவன் எதும் எழுதமாட்டான்; ‘ஓணான், ‘வேலி, ‘பல்லி, ‘பாச்சை, ‘ழ, ‘சீ, ‘தூ.. இப்படி ரெண்டாம் பேருக்குத் தெரியாம வந்துட்டு, துர்மரணம் அடையற பத்திரிகைகளுக்கு எழுதுவான்; - என்று சிறுமைப் படுத்தினார்.

காலேஜ் ஸ்டாஃப் யாரும் அவனண்ட பேசவே மாட்டாத் தெரியுமோ?; - என்று தீண்டாமை பேசினார்.

லைப்ரேரியன் கூட இன்னிக்கு லீவு. அவன் மட்டும்தான் இருக்கான். பாராட்டோ, சீராட்டோ, ஏதோ நடத்து.. போ..” – நமட்டுச் சிரிப்புச் சிரித்து நான்காம் தர கமெண்ட் கொடுத்தார்.

செனட் மெம்பரின் மகள் என்பதாலும், அவரால் நிறையக் காரியங்கள் ஆகவேண்டி உள்ளதாலும், மயூரியை மிகவும் மரியாதையாக வாங்கோ போங்கோ என்று அழைத்துக் கொண்டிருந்த குஞ்சிதபாதம், இப்போது திடீரென்று, தன்னை ஒருமையில் பேசியதும்  துச்சமாகவும் தரக்குறைவாகவும் பேசியதும் மனத்தாங்கலாய் இருந்தது மயூரிக்கு.

ப்போது, மயூரியின் புத்தி விழித்துக் கொண்டது.

‘அவசரப்பட்டு இவரிடம் உண்மையைச் சொல்லிவிட்டோமோ?

‘ஒருவேளை..., குஞ்சிதபாதம் சங்கமேஸ்வரனைப் பற்றிச் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்குமோ..? ;

‘இன்று அங்கே போவதைத் தவிர்த்து, டிபார்ட்மெண்ட்டுக்கேத் திரும்பி விடுவோமா? ;

திடீரென புத்தி விழித்துக் கொண்டு குஞ்சிதபாதத்திற்குச் சாதகமாகப் பேச, நிறைய குழம்பினாள் மயூரி.

புத்தியின் போதனைகளைப் பின்னால் தள்ளிவிட்டு, முன்னே வந்தது மனசு.

“மயூரி... இத்தனை நாளும் இல்லாமல், உன்னைப் பற்றிப் பூசி மெழுகி வைத்திருக்கும் குலப் பெருமைகளை எல்லாம் ஏன் இந்தக் கணத்தில் பெரிதாக நினைக்கிறாய் ? ;

போலி கௌரவம் என்று இத்தனை நாளும் நினைத்ததை இந்த நொடியில் நீ மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்தான் என்ன ? ;

உன் அப்பாவின் அதிகார நிழலில், அம்மாவின் புடைவைத் தலைப்பிலேயே எத்தனை நாள்தான் நீ மறைந்து மறைந்து வாழ்ந்து கொண்டிருப்பாய் ? ;

உன் சுயத்தை எப்பொழுதான் வெளியே காட்டப் போகிறாய் ? ;

நீ இப்போது குழந்தையில்லை, அடல்ட் ; இது உன் வாழ்க்கை ;

உன்னைப் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு முற்றிலும் உனக்கு உரிமை உண்டு ;

குழம்பாதே . எடுத்த முடிவில் பின் வாங்காதே ;

சங்கமேஸ்வரன் ஒரு முதல் தரமான இலக்கியவாதி, புரட்சிகரமான சிந்தனையாளர். சுயமரியாதை உள்ளவர் ;

அவராக உன்னைத் தேடி வந்து அறிமுகப்படுத்திக் கொண்டதனால், நீ அவரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் ;

போ ! அவர் எப்படி உன்னிடம் ஒளிவு மறைவின்றிப் பேசிவிட்டு வந்தாரோ, அதேப் போல, நீயும், வெளிப் பூச்சுக்களோ, தேவையற்ற சுற்றி வளைத்தலோ இன்றிப் தெளிவாக, வெள்ளையாகப் பேசிவிட்டு வா ;

உனக்குள் அவன் புயலாய் நுழைந்துவிட்டான் என்பதை நீ மறுக்க முடியுமா ? ;

அந்தப் புயலில் உன்னுள் இருந்த எத்தனையெத்தனையோ வேண்டாத விஷயங்களும், போலிப் பகட்டுகளும் அடித்து வீழ்த்தப் பட்டுள்ளன என்பதை இல்லை என்று மறுப்பாயா நீ ? ;

உன் வாழ்வில் வசந்தம் பிறக்கும் நாள் இது ;

“போ ; யோசிக்காமல் போ விடாமல் தூண்டித் துரத்தியது மனம்.

லர் அலங்காரத்துடன், நூலகத்தின் முகப்பில் வைக்கப்பட்டக் கல்விக் கடவுளின் பாதத்தில் சிரித்தபடிப் படுத்திருந்தது வெள்ளைத் தாமரை, புன்னகையோடும் வெள்ளந்தியோடும் மயூரியை நூலகத்துக்கு வரவேற்றது.

‘டிஸ்ப்ளே – ஷோ-கேஸ்’ - ல் சமீபத்திய வாராந்திரிகள், மாதாந்திரிகள் எல்லாம் நேர்த்தியாக பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் உட்கார்ந்து கொண்டு படித்துக் கொண்டும் , புத்தக அலமாரிகளின் முன் நின்றுகொண்டு புத்தகம் புரட்டிக் கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் நூலகம் பிஸியாக இருந்தது.

கண்ணாடி ஷோ-கேஸ்க்குள் பகட்டாக அமர்ந்திருக்கும் புத்தகங்களை கண்களில் தீராக் காதல் பொங்க நோக்கும் மாணவர்கள் ;

அந்தப் புத்தகங்களின் உள்ளடக்கத்தைப் படித்துப்  பார்த்துப் வியந்து, பிரமிக்கும், மாணவர்கள் ;

உள்ளடக்கத்தின் கனம் தாங்காமல் விழிக்கும் மாணவர்கள் ;

உள்ளடக்கத்தின் யதார்த்தம் கனக்க, மருளும் மாணவர்கள் ;

இப்படிப் பட்ட சூழல், அவள் கண்களுக்குக் காட்சிகளாயின.

ரு மாணவி, அட்டையில்லாத, மிகப் பழமையான ஒரு புத்தகத்தை தன் முன் வைத்திருந்தாள். அந்த நூலை நிதானமாக, கவனமாகத் திருப்பிப் திருப்பிப் பார்த்துப் படித்து, எதிரில் வைத்திருந்த குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

‘உள்ளடக்கம் உயர்வாய் இருக்கும்போது, புத்தகத்தின் புற அழகையோ, அலங்காரங்களையோ யாரும் பார்ப்பதில்லையே ;

உயர்ந்த உள்ளடக்கம் மிகுந்த புத்தங்களுடன் சங்கமேஸ்வரனை ஒப்பிட்டாள் மயூரி.

சங்கமேஸ்வரன் வந்துத் தன்னைக் காட்டிக் கொண்டதையும், பதிலுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள தான் செல்லுவதையும் பெருமையாக எண்ணிப் பார்த்தாள் மயூரி.

‘சங்கமேஸ்வரன் உள்ளடக்கமாய் வந்து உருவத்தைப் பார்த்துவிட்டுச் சென்றார், பதிலுக்கு உருவம் உள்ளடக்கத்தைப் பார்க்கச் செல்கிறது.’ – என்று தன் வருகையை கவித்துவமாக உய்த்து உணர்ந்து கொண்டாள் மயூரி.

ரீடிங் ஹால் கடந்து சென்றாள். ரெஃப்ரன்ஸ் பிரிவு .

ரெஃப்ரன்ஸ் பிரிவில் ஒரு மாணவனும், மாணவியும், மேஜையில் தங்கள் முன்னால் அகலமும், கனமுமான பெரிய புத்தகத்தைச் சாட்சிக்காக விரித்து வைத்துவிட்டு, ஒருவரோடு ஒருவர் ஒட்டி அமர்ந்தபடி ஒருவரையொருவர் விழுங்குவதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த மயூரிக்குப் பொறாமையாகக் கூட இருந்தது.

‘பூடகமான புதுக் கருத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும், தெளிவாய் விடை கொடுப்பதுதானே ‘பார்வை நூல்கள்.

இங்கேயும் ஓசையின்றித் தன் பணியைத்தான் செய்துகொண்டிருக்கிறதோ? என்றுத் தோன்றியது மயூரிக்கு.

வார்த்தைகளோ, மொழிகளை உள்ளடக்கிய உரையாடல்களோ இன்றி, அமைதியாக ஒருவரை ஒருவர் நோக்கி, நுட்பமாய்ப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அந்த காதலர்களைப் பார்க்கும்போது, கல்லூரிப் பருவத்தில் இதுபோன்ற பலவற்றை இழந்துவிட்டோமே என்று வருந்தினாளா? ;

நல்ல காலம், இதுபோலத் திசை மாறாமல் குதிரைக்கு லகான் கட்டியதைப் போல இருந்து, இந்த நிலைக்கு உயர்ந்ததை நினைத்து மகிழ்ந்தாளா..? - என்பதை அறிய முடியாத நிலையில் அவள் முகக் குறிப்புக் குழப்பமாய் இறுகியது.

சற்று நேரம், அந்தக் காதல் ஜோடியையேக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலத் தோன்றியது மயூரிக்கு.

அந்தக் காதல் ஜோடிகள் எவ்வளவு நேரம்தான் வாய்திறந்து பேசினாலும், எத்தனை பக்கங்கள்தான் வரிந்து வரிந்து எழுதினாலும், பார்வையால் அவர்கள் பரிமாரிக் கொள்ளும் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்திவிட முடியுமா?;

இது போன்ற காதல் ஜோடியை சமூகம் ஏன் எப்போதும் குற்றவாளிகளாகவேப் பார்க்கிறது? ;

ஏன்? எனக்கேக் கூட ‘சங்குவின் சந்திப்பிற்கு முன் இப்படிப்பட்டக் கண்ணோட்டம் இருந்ததில்லையே ; இப்படியான பற்பல சிந்தனைகளோடு கடந்து போனாள் மயூரி.

அடுத்த ஹால் பீரியாடிக்கல்ஸ் செக்‌ஷன்.

அதற்கு அடுத்த பிரிவு டெக்னிகல் செக்‌ஷன். சங்கமேஸ்வரன் என்கிற சங்கு என்ற அறிவு ஜீவியின் இடம் அதுதான்.

புதிய வரவுகளை ‘ஆக்ஸஷன் பதிவேட்டில் முறையாகப் பதிந்து, புத்தகங்களில் நூலக முத்திரை இட்டு, நுலின் எண் , பதிவு செய்த நாள் எல்லாம் எழுதி, ISBN எண்களை வைத்துச் சரியான கேட்லாக்கிங் செய்து குறிப்பிட்ட பிரிவுக்குறிய எண்களை நூலின் பல இடங்களில் எழுதிப் பதிவு செய்து, உரிய பிரிவில், உரிய அலமாரியில் கொண்டுபோய் அடுக்குவது அவர் வேலை.

அந்த இடத்திற்கு வந்தாள் மயூரி.

நான் ஏன் ஒரு பயித்தியக் காரியைப் போல இங்கே வந்து நிற்கிறேன்... ?

நான் ஏன், எதனால், எப்படி, எப்போது இப்படி மாறினேன்? ;

நான் மாறிய அந்த நொடி எது? ;

சங்கமேஸ்வரன் டிபார்ட்மெண்டுக்கு வந்து எதிரில் நின்ற நொடியா ? ;

உன்னைத்தான் பார்க்க வந்தேன் என்று கம்பீரப் பார்வையுடன் சொன்னானே அந்த நொடியா ? ;

ஸ்ரீ என்ற சிற்றிதழை மேஜைமேல் வைத்த நொடியா ? ;

சடாரெனத் திரும்பிப் போனாரே, அந்த நொடியா ? ;

அவர் எழுதிய கதையைப் படித்து முடித்த நொடியா ? ;

கதையைப் படித்தபின் அசைப் போட்ட நொடியா ? ;

ஏதோ ஒரு நொடியில் தான் மனம் மாறியிருக்க வேண்டும் ;

அந்த நொடியை விளக்க இந்த நூலகத்தில் புத்தகம் உண்டா ? ;

புத்தகத்தில் எழுதிவிட்டால் அது எப்படி நுட்பமான உணர்வாக இருக்க முடியும் ? ;

அப்படியானால் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து மடிந்த, வாழ்கின்ற பலகோடிக்கணக்கானப் பிரஜைகளில், சில ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிக் குவித்த எழுத்துக்களை பல ஆயிரக்கணக்கான மக்கள் படிக்கிறார்களே எதற்கு? ;

‘எதைத் தெரிந்துகொள்ளப் படிக்கிறோம் ? ;

வாழ்க்கை சொல்லித்தராத எதை, இந்தப் புத்தகங்கள் சொல்லிக் கொடுத்து விட முடியும் ? ;

எதை ஸ்தாபனப்படுத்த இதுபோன்ற ஸ்தாபனங்கள் ? ;’

இப்படிக் கொத்துக் கொத்தாய் கேள்விக் கனைகள் தாக்கித் துளைத்தன மயூரியை.

தவித்தாள், துவண்டாள். தனக்குள் ஊடுருவிப் பார்த்தாள்.

‘ நான் ஒரு ஆங்கில விரிவுரையாளர். அதனால் நான் ஆங்கில இலக்கியத்தில் கரைகண்டு விட்டேன் என்று அர்த்தமா ? ;

நானே கரைக் காணாமல் அடுத்தவரை எப்படிக் கரை சேர்க்க முடியும் ? ;

நான் எதைத் தெரிந்து கொண்டேன் என்பது தெரியாமலே, எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கும் பதவியில் அமர்ந்திருக்கிறேனே?’ ;

இந்த நிலை எங்கே சென்று முடியப் போகிறது ? ;

பிரபஞ்சத்தில் உள்ளும் வெளியுமாகப் பரந்து கிடக்கும் பொருண்மைகளை, அவரவர், அவரவருக்குப் பிடித்தமானவற்றைத் தெரிந்தெடுத்து, அதை அவரவர் வழியில் வியாக்கியானம் செய்துவிட்டுச் சென்றிருப்பதை, அடுத்தடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்தி, அதையே ஸ்தாபிக்கும் பம்மாத்துக்குக் காரணம் என்ன? ;

ந்த விஞ்ஞானி இந்த சூத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டான். அதைத் தெரிந்து கொண்டு, நீ வேறு சூத்திரம் கண்டுபிடி என்று அறிவிப்பதற்காகத்தான் இத்தனை புத்தகங்களுமா ?

முன்னவனின் வழித்தோன்றலாகத்தான் இருக்க வேண்டும் என்று இன்னவனைக் கட்டாயப்படுத்துதல் முறையல்லவே ;

இருப்பது ஒரே வாழ்க்கைதான் என்றாலும் அதை வெவ்வேறு வாழ்க்கை போலக் கூறுகட்டி வைத்து ஏன் இப்படி ஜனங்களை ஆட்டு மந்தைகள் ஆக்குகிறார்கள் ? ;

இந்த நூலகத்தில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான புத்தகங்களும் எதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன ?;

நூல் நிலையங்கள் இல்லையென்றால் உலகம் இயங்காமல் போய் விடுமா ?;

அலை அலையாகத் கிளம்பும் நினைவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை மயூரியால்.

குறிப்பிட்ட அலமாரியில் அவள் கண்களுக்குத் தெரிந்தது ‘மானுடவியல் என்ற மகத்தான நூல் .

ஆதிமனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்ததாகப் பேசுகிறது மானுடவியல்;

எப்படியோ, வாழ்ந்தார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதுவும் ஒரு வாழ்க்கைதானே? அந்த வாழ்க்கையில் இன்பம் அனுவிக்காமலா இருந்தார்கள்? ;

பிறத்தலும், வாழ்தலும், மடிதலும் கற்பகோடிக் காலமாய் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது? ;

பச்சை மாமிசம் தின்றான் ; சிக்கி முக்கிக் கல் உரசி தீ மூட்டி வேகவைத்துத் தின்றான் ; இன்று அந்த நிலையில் இருந்து எந்த வகையில் மாறிவிட்டோம்? ;

அதே பச்சை மாமிசத்தை இன்றும் தீயில் பொசுக்கித்தானே தின்னுகிறோம் ; ஒரே வித்தியாசம், சிக்கி முக்கிக் கற்களுக்கு பதிலாக, தீப்பெட்டிகளும், லைட்டர்களும்... ;

சூரியன் பார்த்து, சந்திரன் பார்த்து, விண்மீன்களைப் பார்த்து, தூங்குவதும், எழுவதும், உழுவதும், தொழுவதும், வேட்கைகளைத் தீர்த்துக் கொள்வதும், சந்ததிகளைப் பெறுக்குவதும், சாவதுமாக, என்றும் மாறாக் கோட்பாட்டில்தானே இன்றும் நாம் வாழ்கிறோம்? ;

மண்ணில் தோன்றி, தன் போக்கில் வளர்ந்து, கால நிலைகளால் பாதிப்புக்கு உட்பட்டு, இற்று விழுந்து மடியும் மரங்களின் சுயத்தைக் கெடுத்து, அதை அற்ப ஆயுளில் வெட்டி வீழ்த்திக் கூழாக்கிக் காகிதங்களாக்கி, அதில் மானிடவியல் பற்றி எழுதியதை நினைத்தபோது ஆயாசமாக இருந்தது மயூரிக்கு ;

நூலகம் முழுதும் மரங்கள் மடமடவென்று முறிந்து விழும் ஓசைக் கேட்டது அவளுக்குள்.

அச்சிட்டுக் கட்டப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும் அந்தப் புத்தகங்களை விட அடுக்கப்பட்ட அலமாரிகள் உயர்வாகத் தோன்றியது மயூரிக்கு ;

புத்தகங்களை விட அந்த அலமாரிகள் அதிக ஆபத்தில்லாவையாகத் தோன்றியது அவளுக்கு ;

மரத்தை உளி கொண்டுக் கொத்திச் கோர்த்தால் , அலமாரிகள், மேசை நாற்காலிகள் உருவாகிவிடும்.

அதே மரத்தை மேலும் சிதைத்துக் கூழாக்கி, அதன் சுயத்தையே அழித்து உருமாற்றி அதில் அச்சிட்டால் அது புத்தகம் ;

மரங்களை, மரங்கள் தாங்கிக் கொண்டிருப்பதுதான் நூலகம் என்று ஒரு புதிய கோட்பாடு உருவானது அவள் மனதில் ;

மரமாய்ச் சமைந்து நின்ற மயூரியை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தார் எதிரில் நின்ற சங்கமேஸ்வரன்.

“மயூ, என்ன பலமான யோசனை?

ஹலோ, சாரி, நீங்க வந்ததையே கவனிக்கலை. ஏதோ யோசனைல இருந்துட்டேன்.

“அதான் என்ன யோசனைனு கேக்கறேன்?

இது போல லைப்ரரியெல்லாம் தேவையானு யோசிச்சேன்..

“அய்யய்யோ, அடி மடீல கை வைச்சிட்டியே மயூ! இந்த மாதிரி லைப்ரரியெல்லாம் இல்லைன்னா என்னை மாதிரி ‘சி எல் ஐ எஸ்படிச்சவனெல்லாம் சந்தீல நிக்க வேண்டியதுதான்.” - சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் சங்கமேஸ்வரன்.

அவரேத் தொடர்ந்தார்.

“மயூ...! நீ மழலை பேசறே இப்போ. உன்னோட அழகான மழலை மொழில இருக்கற மிகக் பெரிய உண்மையை இந்த உலகம் ஏத்துக்காது மயூ...

சங்குவை பிரமிப்பாய்ப் பார்த்தாள் மயூரி.

“இது ஒரு பொய்யான உலகம் மயூ. யதார்த்தம் எதையும் யதார்த்தமாவே இருக்க விடாது. கொஞ்சம் கொஞ்சமாவோ, மொத்தமாவோ யதார்த்தத்தைக் குத்திக் குதறிப் போடும் ஈவிரக்கமில்லாத உலகம் மயூ இது.!

இப்போது விழி விரித்து சங்குவை விழுங்கினாள் மயூ.

“எப்படித்தான் உருத் தெரியாமச் சின்னாபின்னப் படுத்தினாலும், சுயம் எப்படியும் தலையைத் துருத்திக்கிட்டு எட்டிப் பார்க்கும். இருபத்தி இரண்டு வருஷமா பொசுங்கிச் சாம்பலாகிவிட்ட உன்னோட சுயம், இப்போதான் பீனிக்ஸ் பறவையாய் உயிர்ப்பித்து எழுந்து வர ஆரம்பிச்சிருக்கு.

குறி சொல்பவரைப் போல மிகச் சரியாய்க் கணித்துச் சொன்ன சங்குவை வியப்போடு பார்த்தாள் மயூரி.

“மயூ... சுயம் எழத் தொடங்கிட்டா நிக்காது. எப்படி அழிஞ்சிதோ, அதே வேகத்துல திரும்பவும் வந்துரும். உன்னை நீயா மோல்டு பண்ணிக்க நான் உனக்கு உதவறேன். ஓ கே யா

தரவான, கனிவான, ஆறுதலான சங்குவின் அந்தப் பேச்சும், அன்பும் அவளை முழுமையாய்க் கரைத்தது.

தன்னை விட ஏழெட்டு ஆண்டுகள் அதிகமாக உலகத்தைப் பார்த்துக் கற்ற அனுபவம் அது.

கற்பதுவும், கேட்பதுவும், கருதுவதும் சொப்பனம் தானோ, தோற்ற மயக்கங்களோ? - என்று பாரதிக்குச் சந்தேகம் வந்ததுபோல மயூரிக்கும் வரத் தொடங்கிவிட்டது.

சந்தேகம்... மனித இனத்திற்கே உரிய தனிப் பெரும் சொத்து.

திடீரென்று, மயூரிக்குள் தன் முனைப்பு எழுந்து பிடரியில் தாக்கியது.

‘ஒரு சாதாரண ‘ஓ ஏ’ முன்னால், கல்லூரியில்  விரிவுரையாளராகப் பணிபுரியும் தான் நின்று அவசியமில்லாமல் மதிப்பைக் கெடுத்துக் கொள்கிறேனா ?’ - என்று தோன்றியது.

‘இன்டர்காம் மூலம் அழைத்து, டிபார்ட்மெண்ட்க்கு வரச்சொல்லி எதிரில் நிற்க வைத்துப் பேசவேண்டிய ஒருவனைத் தேடி வந்து அவன் முன் நிற்கிறோமே? - என்ற மனப்பான்மையும் தலை தூக்கியது.

நூலகத்தில் இருந்த அனைவரும் தன்னையே பார்ப்பதுபோல பிரமை ஏற்பட்டது அவளுக்கு.

“லைப்ரேரியன் இல்லையா? சமாளிப்பதாக நினைத்து அசட்டுத்தனமானக் கேள்வியைச் சங்குவிடம் கேட்டாள் மயூரி.

“இந்த மாதிரி லைப்ரரியெல்லாம் தேவையா? - என்று சங்குவைப் பார்த்தவுடன் முதன் முதலில் கேட்ட யதார்த்தமான கேள்விக்கும்,

“லைப்ரேரியன் இல்லையா?” – என்று ‘நான் உன்னைப் பார்க்க வரவில்லை, நூலகரைப் பார்க்கத்தான் வந்தேன் என்ற தொனியை ஸ்தாபிதப்படுத்த தற்போது கேட்க்கப் படுகிற கேள்விக்கும் இருக்கும் வேறுபாட்டை நினைத்து மனசுக்குள் சிரித்துக் கொண்டார் சங்கமேஸ்வரன்.

தன்னைத் தேடி வந்த மயூரிக்கு, திடீரென்று தன்முனைப்பு எழும்பி அவளை ஆட்டுவிக்கும் ரசவாதத்தை சங்கமேஸ்வரன் என்ற அறிவு ஜீவியால் உணர முடியாதா என்ன...

“............... - தன் அமைதியால் மயூரியின் தன்முனைப்பைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார் சங்கு.

தார்த்தமும், தன்முனைப்பும் எதிரெதிர் துருவங்கள்.

அவை எந்தக் காலத்திலும் ஒன்று சேர்வதில்லை. யதார்த்தத்தை அனுபவிக்க தன்முனைப்பை மொத்தமாக வெளியேற்ற வேண்டும்.

தன்முனைப்போடு எதார்த்தம் பேசுனால், அது சமுதாயத்தில் கேலிக் கூத்தாகி விடுகிறது.

மகாத்மா காந்தி யதார்த்த உலகை ஸ்வீகரிக்கும் முன், தன் பின்னணி, புகழ், தன்முனைப்பு அனைத்தையும் துறந்து, அறையில் ஒரு துண்டு மட்டும் கட்டியபடி தேசச் சேவை செய்தார்.

என்றென்றும் காந்தி போற்றப்படுவதற்குக் காரணம், அவரின் தொண்டு என்பதை விட, அவரின் நிலைத்தப் புகழுக்கு அவர் விலக்கி எறிந்தத் தன்முனைப்பேக் காரணம்.

இப்போதும், புகழ் போதைக்காக, பாண்ட் சூட்டுடன், பட்டுப் புடவையுடன், கையில் துடப்பம் பிடித்தபடி புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கும் தேசத் தொண்டர்கள் இருக்கவேச் செய்கிறார்கள்.

அதுபோன்றவர்கள் காலத்தை வென்று நிற்பதில்லையே.

எது ஒன்று முற்றிலும் துறக்கப் படுகிறதோ, அதைத்தான் மக்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். துறக்க வேண்டும் என்று துறப்பதை விட, உண்மையிலேயேத் துறக்கும்போது, அந்த மனிதரின் கண்கள், உண்மையான துறவியின் கண்களாய்ப் பளபளக்கிறது. தலைக்குப் பின் ஒளி வட்டமும் ஒளிர்ந்துப் பிரகாசிக்கவும் செய்கிறது.

வெறும் புகழ் போதைக்காகக் கொடுக்கும் போஸ்களில் காணப்படுவது வெறும் அசட்டுத்தனம்தான்.

மயூரியின் கண்களில் அசட்டுத்தனம் அப்பட்டமாய்த் தெரிந்தது.

அத்தியாயம் 15

“மேடம் நீங்க இங்கே இருக்கீங்களா?” –  மயூரியைக் கேட்டுக் கொண்டே “ வணக்கம் சார்.. என்று சங்குவைப் பார்த்துக் கைக் கூப்பினார் நவீனன்.

“உட்காருங்க...! - என்று நவீனனுக்கு நாற்காலி காண்பித்த சங்கமேஸ்வரன், எதிர் நாற்காலியை மயூரிக்குக் காட்டினார்.

“பேசிக்கிட்டிருங்க.. – என்று நகர்ந்த சங்குவை, “நீங்களும் உட்காருங்க சார்..என்றார் நவீனன்.

சரி.. என்று அமர்தார் சங்கு.

உங்க வகுப்புல படிக்கற நவிஷ்னி, ட்ரக் அடிக்ட் ஆகக் காரணமான ராமுவைச் சந்திச்சிப் பேசியாச்சு மேடம்.என்று மயூரியைப் பார்த்து பேசினான் நவீனன். 

அப்படியா ரொம்ப நல்லக் காரியம் செஞ்சிருக்கீங்க சார்.” – என்று பாராட்டினாள் மயூரி.

“பேசிண்டே இருங்கோ.. இதோ வந்துடறேன்.. என்று சொல்லிவிட்டு ஏதோ அவசர வேலை இருப்பதாகக் காட்டிக் கொண்டே, அவர்கள் இருவரின் அனுமதிக்குக் காத்திராமல் எழுந்து சென்றுவிட்டார் சங்கு.

ராமுவைப் பற்றியும் தற்போதைய அவன் ஸ்டேட்டஸ் பற்றியும் விலாவாரியாகச் சொன்னார் நவீனன்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட மயூரி, “எனக்கு ஒரு சந்தேகம் சார்..?”- என்று வினா எழுப்பினாள்.

“கேளுங்க..? என்றார் நவீனன்.

“இது பொருந்தாக் காதல்னு தெரிஞ்சும், எப்படி நவிஷ்னி அவன் மேலே இவ்வளவு பற்று வெச்சி, அவன் பிரிவு தாங்காம ‘ட்ரக் அடிக்ட்’ நிலை வரைக்கும் போனா..?

“இதுக்கு பேரு மனவியல்ல ‘Delusional Disorder’ னு சொல்வாங்க. மனச்சிதைவு நோய்ல் இது ஒரு வகை மேடம் ;

அதாவது, தங்களைக் காட்டிலும் அறிவிலோ, அந்தஸ்திலோ, அழகிலோ, திறமையிலோ...... ஏதோ ஒரு வகைல உயரமா உள்ளவங்களை, தன்னோட நெருக்கமான உறவா கற்பனை பண்ணிக்கிட்டு, அவங்களோட கற்பனையா வாழ்க்கை நடத்தவே ஆரம்பிச்சிடுவாங்க ;

நவிஷ்னியும் அப்படித்தான் ராமுவோட திறமைல மயங்கி,  “ராமுதான் என்னோட கணவர்னு உறுதியா நம்பி வாழ்ந்திருக்கா ;

அதுக்கு நடுவுல ராமு வெளிநாட்டுக்குப் படிக்கப் போய். படிப்பை முடிச்சிட்டு, ஒரு பாபுலர் ட்ரேடரா பரிமளிச்சி, டிரேடிங் கம்யூனிடிலயே பெண் பார்த்துக் கல்யாணமும் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிட்டான்.”

“அடடா அப்பறம்..

“ராமுகிட்டே நவிஷ்னியைப் பத்திச் சொன்னதும், அவனுக்கு நவிஷ்னியை நினைவே இல்லை. பிறகு கல்லூரிச் சூழலையல்லாம் சொன்னதும்தான் அவனுக்கு நினைவுக்கு வந்தா நவிஷ்னி. பிறகு அவளோட தற்போதைய நிலையை நினைச்சி வருத்தப்பட்டான் ராமு.

“கல்லூரில படிக்கும்போது, நான் அவளுக்கு மூணு வருஷம் சீனியர். என்னோட திறமைகளை அடிக்கடி என்கரேஜ் பண்ணுவா நவிஷ்னி. என்னை என்கரேஜ் பண்ணி, நிறைய சாதனைகளைப் புரிய வெச்ச நவிஷ்னி, இப்படி என்னைத் தன் கணவரா வரிச்சி வாழுவானு, கனவுலயும் நினைச்சதில்லே சார். அவள் அடிக்‌ஷன்லேந்து வெளிவந்து நிறை வாழ்வு வாழ நான் என்னாலான உதவிகள் செய்வேன்” ன்னு உறுதியும் அளிச்சி என்னோட வந்துட்டான் ராமு.

ராமுவையும் நவிஷ்னியையும் எதிரெதிரே வெச்சி, நானும், மன நல ஆலோசகர் வரதராஜனும் சேர்ந்து கவுன்சிலிங் கொடுத்தோம். மூணே சிட்டிங்தான் தெளிவாயிட்டா நவிஷ்னி.

‘Eratic Delusion’ னு சொல்ற தீவிர மனச்சிதைவால ட்ரக் அடிக்‌ஷன்ல இவ்வளவு நாள் இருந்தேனா..? அதுக்காக வெட்கப்படறேன் சார்னு..” சொல்லி அழுதுட்டா நவிஷ்னி. என்று முடித்தார் நவீனன்.

திறமைகளை என்கரேஜ் பண்ணின நவிஷ்னி, என்னைக் கணவரா வரிச்சி வாழ்ந்து, மனச்சிதைவுல ட்ரக் அடிக்ட் ஆவானு நான் கனவுல நினைச்சிப் பார்க்கலை..” என்று ராமு சொன்னதாக நவீனன் சொன்னது பொட்டிலடித்தாற்போல இருந்தது மயூரிக்கு.

நவீனன் அமைதியாய் அமர்ந்து மயூரியின் மனதில் நிகழும் வேதியியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்தார்.

அறியாமல் செய்த பிழைக்கு அதிகமாய் வருந்தும் குழந்தை முகம் போல மயூரியின் முகம் தெரிந்தது நவீனனுக்கு.

வேதிவினைகளெல்லாம் முடிந்து, விளைவுகள் வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்தவுடன் நனவு நிலைக்கு வந்தாள் மயூரி.

 “நவீனன் சார், மனச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டு முற்றிய நிலைல ட்ரக் அடிக்ட் ஆகி, சீர் கெட்டுப் போன நவிஷ்னியின் வாழ்க்கையை சீராக்கிப் புதுப்பிச்ச உங்க செயலை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு சார். – தழு தழுத்தது மயூரியின் குரல்.

இதைக் கேட்டுக் கொண்டே அருகில் வந்தார் சங்கு என்கிற சங்கமேஸ்வரன்.

 “............” இருவரும் அவரைப் பார்க்க,

 

“நவீனன் நீங்க கல்லூரி மாணவி நவிஷ்னியை மட்டும் கரையேத்தலை.” என்று ஒரு போடு போட்டார்.

“என்ன சார் சொல்றீங்க?”

 அந்த நவிஷ்னிங்கற ஸ்டூடண்டோட டீச்சரையும் கரை சேர்த்திருக்கீங்க. – என்று சொல்லிவிட்டு வெள்ளந்தியாகச் சிரித்தார் சங்கு.

இப்போது மயூரியைப் பார்த்துப் பேசினார் சங்கு.

மயூ, நீ என் எழுத்துகளைத் தீவிரமாப் படி, மனசார என் எழுத்தை நேசி. வாசி.. என்னை ஆதர்ஸமா வைச்சிக்கணுமா வெச்சிக்கோ.” என்றவர், இந்த நவீனன் இருக்கானே என்னோட விசிறிதான் என்று சுட்டிக் காட்டி, இந்த நவீனன் மயூரிங்கற ஒரு பெண்ணை உயிராக் காதலிக்கறான்.” என்று கேஷூவலாகச் சொல்லிவிட்டு, இதற்கும் ஒரு வெள்ளந்தியான சிரிப்பைப் படரவிட்டுவிட்டு, தன் வேலை முடிந்துவிட்டது என்பதைப் போல, எழுந்து அப்பால் சென்றுவிட்டார் சங்கமேஸ்வரன்.

மயூரியின் கைகள், மேஜைமீது நட்டுக் கொண்டிருந்த நவீனனின் கைகளை அனிச்சையாகப் பற்றின.

“என் உயிரே.........! மயூரி...! -  நவீனனின் உதடுகள் அசைய  அதிர்வுகள் கிறங்கடித்தன இருவரையும்.

பற்றிய கைகள் இறுகத் தொடங்கின.

முற்றும்

*********

 

 

ஆசிரியர் - ஜூனியர் தேஜ்

………………………………………………………………………………………

எண்பதுகளில் எழுதத் துவங்கியவர். ஆயிரக்கணக்கான நகைச்சுவைத்துணுக்குகள், பிரபல வார, மாத, காலாண்டு இதழ்களில் பிரசுரம் கண்டவர்.  இந்தத் தொகுதியில் முதல் சிறுகதையும், அவருடைய முதல் சிறுகதையுமான ‘சிற்றன்னை 24.03.1995 குங்குமம் வார இதழில் பிரசுரமானது.

பிறகு கல்கி, விகடன், தினமணி கதிர், தினகரன், தேவியின் கண்மணி பன்மலர், அனிச்சம், தமிழ்ப் பல்லவி, இலக்கிய பீடம் போன்ற இதழ்கள் ; கௌரா இலக்கிய மன்ற அமைப்பு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்று ஒரு சிறுகதை ஆசிரியராக அடையாளப்படுத்திக் கொண்டவர்.

விகடன் இணையத்தில் பல்லாயிரம் வாசகர்களின் பாராட்டுதல்களைப் பெற்ற, ‘கலியன் மதவு என்ற நாவல் மூலம், நாவலாசிரியராகவும் அறிமுகமானவர்.

உலக அளவில் நடத்தப்பட்ட, இலங்கை குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய குரு அரவிந்தன் திறனாய்வுப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று ‘ திறனாய்வாளன் ஆனவர்.

“பற! பற!! மேலே! மேலே!! - என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் வாழ்த்தியவாறு, பறந்து கொண்டே இருக்கும் ஜூனியர் தேஜ் அவர்கள். தனித்துவம் மிக்க ஆகச் சிறந்த படைப்புகளை எதிர்காலத்தில் படைப்பதே தன் குறிக்காள் என்கிறார்.

………………………………………………………………………………………………………………………….

 

பின் அட்டை


என் உயிரே... மயூரி...!

இந்த நாவலின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அணிந்துரை, வாழ்த்துரைகள், விமரிசனங்கள் அனைத்திலும் சொல்லப்பட்டதைப் போல இந்த நாவல் ஒரு மனநலச் சிக்கலுக்கான தீர்வாய் மிளிர்கிறது.

வாசிப்பை சுவாசிப்பாய் நேசிக்கும் வாசகர்களாகிய நாம் தனித்துவமான நடையுடன்  எழுதப்பட்ட ஜூனியர் தேஜ் அவர்களின் இந்த மனநலம் சம்பந்தமான கருவை லாகவமாய்க் கையாண்டு எழுதிய நாவலை வாசித்து மகிழ்வோமே!

 

 

 


WALL POSTER








கீழ்க்கண்ட புகைப்படம் வேலூரில் ஒரு புத்தகக் கடையில் போட்டோ எடுத்து நாவலாசிரியர் திரு வெ. ராம்குமார் அனுப்பியது












மாலை முரசில் வந்த விளம்பரம்



Comments

  1. மயூரி என் உயிர் நீ உளவியல் சார்ந்த நாவல் மனம் போன போக்கில் வாழ்ந்தால் அது நம்மை துயரத்துக்கு கொண்டு விடும் இன்றைய தத்துவத்தை தத்துவமாக வெளிப்படுத்தி உள்ளது எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து

    ReplyDelete
  2. நேற்று தான் மயூரி என் உயிர் நீ என்கிற ஜூனியர் தேஜ் அவர்கள் எழுதிய கண்மணி நாவலை வாசித்தேன்.

    மிகவும் சிறப்பான தீம். போதைப்பொருட்களை பற்றி நிறைய விஷயங்களை திரட்டி எழுதியிருக்கிறீர்கள். மனச்சிதைவு நோய் பற்றியும் நிறைய தகவல்கள்..அதே நேரத்தில் சிற்றிதழ் சிறுகதைகளின் ஆழத்தை பற்றியும் பேசுகிறது

    உயர் பதவியில் இருக்கிற மனிதர்களின் விருப்பத்திற்கு சமூகம் எப்படி துணை போகிறது என்பதை கல்லூரியின் மூலம் காட்டி இருக்கிறீர்கள்.. நடையும் மிக நன்றாக இருந்தது

    சிறப்பான ஒரு வாசிப்பனுபவம். இன்னும் நிறைய நிரல்களை எதிர்பார்க்கிறோம் சார். நன்றி


    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காதல் நிவந்தம்...! (நாவல்)