176. பெத்த வயிறு (தினமணி கதிர் 29.06.25)
தினமணி கதிர் 29.06.25
"ஏலேய் ரா......கு......லூ....."
ஆள்காட்டி விரல்கள் மூக்கு முனையின்
இருபுறமும் தொட்டிருக்க, கட்டைவிரல்கள் கன்னங்களில் தாங்கியிருக்க,
வாய் முன் புனல் போல் கைகளைக் குவித்தபடி,
தன் குடிசை வாசலில் இருந்து சத்தமாக தன் மகனை அழைத்தாள் சாவித்திரி.
அறிவியல் தொழில் நுட்பங்களின் குறுக்கீடே
இல்லாத அந்தப் பின் தங்கிய கிராமத்தில், பத்துப் பனிரெண்டு ஓலைக் குடிசைகளுக்கு அப்பால்,
வேலியோரமாய் இங்கும் அங்குமாய் கண்களையும் கால்களையும் உலவ விட்டு, பொன்வண்டோ, தட்டானா,
தேரையோ, தவளையோ, ஓணானோ, அரணையோ, சாரையோ, சர்ப்பமோ, நாயோ பூனையோ அல்லது வேறு எதையோ பராக்குப்
பார்த்தபடி, பொழுது போக்கிக் கொண்டு நின்ற ராகுலின் காதுகளில் அம்மாவின் குரல் இறங்கியது.
"ஊரு ஒலகத்துல, இவன் வயசுப்
பயலுவ எப்படியெல்லாம் சூட்டிகையா இருக்கானுங்க, வெட்டிக்கிட்டு வான்னா, கட்டிக்கிட்டு
வந்து நிக்கறானுவ;
நாம பெத்தது, இப்பிடி ஒரு சுதாரிப்பும்
இல்லாம மச மச ன்னு இருக்கானே..!; ம்...! நமக்குக் கொடுப்பினை இவ்ளோதான் போல; நாம வாங்கிக்கிட்டு
வந்த வரம் இப்படியா இருக்கணும்...?!”
வழக்கம் போல, அனிச்சையாக தனக்குத்தானே
உரத்து முணு முணுணுத்தபடி, நொந்து கொண்டாள் சாவித்திரி.
***
"இதோ வந்துட்டேன்ம்மா!"
குரல் கொடுத்தபடியே, ஓடி வந்தான்
ராகுல். வந்த வேகத்தில் அம்மாவின் கையில் தேங்காய் பத்தைகள் அடங்கிய நெகிழிப் பையைக்
கொடுத்தான்.
“டவுனுக்கு போவணும்... டவுனுக்குப்
போவணும்னு நேத்தி ராத்திரியேப் புடிச்சிச் சொல்லுறேன்ல;
ஏதோ அவசர ஆத்தரத்துக்கு, கடையில
போயி ஒரு ‘தேங்காய் - பத்தை’ வாங்கிட்டு வாடானு அனுப்புனா, இம்மாநேரம் வளத்துட்டியே
ராகுலு, இது உனக்கே நல்லா இருக்கா...! கொஞ்சமாச்சும் பொறுப்பு வேணாமா?"
"இல்லம்மா அது வந்து...!
"
ஏதோ காரணம் சொல்ல வந்த ராகுலை தொடர்ந்து,
பேச விடவில்லை சாவித்திரி.
தேங்காய்ப் பத்தைக்காக, அம்மியில்
அரைகுறையாக அரைத்து நிறுத்தியிருந்த அரவையில், தேங்காய்ப் பத்தையை நறுக்கிப் போட்டு
துவையலை அரைத்து, வழித்து சம்புடத்தில் வைத்து மூடினாள்.
தொங்கும் உறியின் பின்னே, மண் சுவற்றில்
தெங்கிய தட்டு மாட்டியில் தொற்றிக் கொண்டிருந்த பிடி துணியை இழுத்து கைகளை அழுத்தத்
துடைத்துக் கொண்ட சாவித்திரி,
சுவற்றில் தொங்கி அருள்பாலித்துக்
கொண்டிருந்த முருகக் கடவுளுக்கு அனிச்சையாய் ஒரு கும்பிடுபோட்டாள்.
படத்தைத் தாங்கிக் கொண்டிருந்த
“ஸ்டாண்ட்’டின் மேல் வைத்திருந்த ‘மணி பர்ஸ்’ஸை எடுத்தாள்.
‘ப்ர்..’
சிறு ஓசையெழ ‘ஜிப்’பைத் திறந்து,
ஒரு முறை உள்ளே நோட்டம் விட்டாள்.
மீண்டும் ‘ஜிப்’பை இழுத்துவிட்டு
பர்ஸை ஜாக்கெட்டுக்குள் செருகிக் கொண்டாள்.
டவுனுக்குக் கிளம்ப ஆயத்தமாகிவிட்டாள்
சாவித்திரி.
இந்தப் பட்டிக்காடே கதியெனக் கிடந்தவள்
சாவித்திரி.
முதல் முதலாக ‘டவுனு’க்குப் போகிறாள்.
ஆர்வத்தில், சாவித்திரியின் மனது
துள்ளாட்டம் போட்டது.
***
“டிங்...
டிடிங்... டிங்... டிடிங்...”
சைக்கிள் மணியின் ஒலியும், அதன்
பின்னணியில் "தங்கச்சீ .... " என்ற மாயாண்டியின் பாசக் குரலும் கணீரென்று
ஒலித்தது.
‘யார் கண்ணில் பட்டுவிடக்கூடாது..!’
என்று நினைத்திருந்தாளோ, ‘யார் வருவதற்கு முன் டவுனுக்குச் சென்றுவிட வேண்டும்!’ என்று
திட்டமிட்டிருந்தாளோ, அது நடக்கவில்லை;
புடவை வியாபாரி மாயாண்டி, தன் மிதி
வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அழைக்கிறான்;
சாவித்திரிக்கு தர்ம சங்கடமாக இருந்தது.
'எல்லாம் இந்த ராகுல் பண்ணின தாமசத்தால.
இல்லனா இந்நேரம் டவுனுக்கே போய் இறங்கி இருக்கலாம்..'
தனக்குள்ளே பொறுமினாள்.
அடுத்த கணம், ‘மாயாண்டியை எப்படிச்
சமாளிப்பது?’
கணக்குப் போட்டது சாவித்திரியின்
மனம்.
‘மாயாண்டியின் சிநேகப் பார்வையைத்
தவிர்ப்பதும், புன்னகையைப் புறக்கணிப்பதும்தான் இப்போதைக்கு அவனிடமிருந்து தப்பிக்க
ஒரே வழி!’
முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டாள் சாவித்திரி.
“அண்ணே அவுசரமா ஒரு ஜோலி. வெளிய
கெளம்புறேன். அப்பறமாப் பார்க்கிறேன்ணே.!"
மாயண்டியின் கண்களைப் பார்க்காமல்
பேசியபடியே, வளையங்கள் கோர்த்த இரும்புச் சங்கிலியை தட்டியின் துவாரத்தில் நுழைத்து
வாங்கினாள், அதில் பூட்டை மாட்டி அமுக்கினாள்.
***
சைக்கிள் கேரியரில் துணி மூட்டையைக்
கட்டிக் கொண்டு தெருத்தெருவாகச் சுற்றி, கூவி விற்கும், நடமாடும் புடவை வியாபாரி மாயாண்டி.
ஆரம்பத்தில், வியாபாரம் கொழித்தது.
இந்தத் தெரு பெண்டுகள் பூராவும்,
மாயாண்டியிடம்தான் மாய்ந்து மாய்ந்து புடவை வாங்குவார்கள்.
ஏதாவது ஒரு வீட்டு வாசலில் சாக்கு
பரத்துவான்.
சைக்கிள் கேரியரில் இருந்து புடவை
பண்டலை இறங்கி விரிப்பான் மாயாண்டி.
வெளிச்சத்தைக் கண்ட ஈசல் போல, அக்கம்
பக்கமெல்லாம் அங்கே கூடிவிடும்.
ஒரு மணி ரெண்டு மணி நேரத்தில் எல்லாப்
புடவைகளும் காலியாகிவிடும்.
சேர்த்து வைத்த செறுவாட்டுக் காசு
போக மீதிக்கு. பழைய துணி மணி, சரிகைங்க, கழன்று வந்த மயிற் கற்றைகள், செரித்துப் போன
இரும்பு, பித்தளை எல்லாம் கை கொடுக்கும் அந்தப் பெண்களுக்கு.
மணிக் கணக்கில் பேச்சும், அரட்டையும்,
கூச்சலும், கும்மாளியுமாக, வியாபாரம் நடக்கும்.
அநேகமாக மூட்டையைக் காலி செய்துவிட்டுத்தான்
அங்கிருந்து புறப்படுவான் மாயாண்டி.
சமயத்தில் ஒன்றிரண்டு சேலைகள் தங்கிவிடும்..
அப்போ தெல்லாம்,
“வூட்ல வேற ஏதாவது பளசு பட்டு இருந்தாப்
பாருங்க அம்மணி” என்று அவர்களின் ஆசையைத் தூண்டுவான்.
“கடேசீயாத் தங்கிப்போன சேலை. சுளையாப்
பத்து இருபது குறைச்சித் தாரேன்..” என்பான்.
எப்படியோ அனைத்தையும் விற்றுவிட்டுத்தான்
நகர்வான் மாயாண்டி.
***
அதெல்லாம் ஒரு காலம்.
கிராமங்களுக்குள், மினி பஸ், மகளிர்
சுய உதவிக் குழுவெல்லாம் வராத காலம் அது.
காலங்கள் மாற மாற காட்சிகள் மாற்றமடைந்தன.
"வெரைட்டியா கொண்டு வர மாட்றாரு.”
என்றாள் ஒருத்தி.
"பழைய ஸ்டாக்கோ என்னமோ நாள்பட
உழைக்க மாட்டேங்குது..!”
இது இன்னொருத்தியின் கமெண்ட்.
"இதே புடவையை எங்க முதலாளி
வீட்டு அம்மா, டவுன் கடையில பயங்கர மலிவா வாங்கியிருக்காங்க.."
மற்றொருத்தி தந்த தகவல்.
"லாபம் இல்லாம, தெருத் தெருவா
சைக்கிளத் தள்ளிக்கிட்டு போய் யாவாரம் பண்ண முடியாதுதான்; ஆனாலும் பேராசையால்ல இருக்கு...!"
ஒருத்தி உரத்து சிந்தித்து. நிந்தித்தாள்.
இப்படி ஏதேதோ காரணங்கள்,
என்னென்னவோ அபிப்ராயங்கள், பரவ,
ஒவ்வொருத்தியாக, மாயாண்டியிடம்
புடவை வாங்குவதை நிறுத்தினார்கள்.
இப்போது இந்த தெருவில் மாயாண்டியிடம்
புடவை வாங்கும் ஒரே நபர் சாவித்திரிதான்.
‘நாமளும் எல்லாரையும் போல, ஏன்
டவுன் கடைல போய் புடவை எடுக்கக் கூடாது?'
சமீப காலமாக சாவித்திரிக்கும் தோன்ற
ஆரம்பித்து விட்டது.
'டவுனுக்குப் போக வர, டவுன் பஸ்ல
இலவச டிக்கெட் இருக்கு. ராகுலுக்கும் பள்ளிக்கூட இலவச பஸ் பாஸ் இருக்கு.
நயா பைசா, போக்குவரத்துச் செலவு
இல்லாம டவுனுக்குப் போயி வாங்கிட்டு வந்தாதான் என்ன?’
இந்த எண்ணம்தானே தவிர, மாயாண்டி
கொண்டு வரும் புடவைகளில் எந்தக் குறையும் கண்டதில்லை சாவித்திரி.
உறுதியாக முடிவெடுத்த பின், வேறு
வழியின்றி, சாவித்திரிக்கு, மாயாண்டியைத் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது.
‘பாவம் மாயாண்டி.. என்று ஒரு கனம்
சாவித்திரிக்குத் தோன்றினாலும், மனதை கல்லாக்கிக் கொண்டாள்.
***
"தேரடி இறங்கு...!
"
விசில் ஊதியபடியே, சத்தமாகச் சொன்னார் கண்டக்டர்.
மகனோடு இறங்கினாள் சாவித்திரி.
அங்கிருந்து இருநூறு மீட்டர் நடந்தால்
கடை.
"மச மச” ன்னு இல்லாம நடடா
சீக்கிரம்..”
ராகுலின் கையைப் பிடித்துத்
தரதரவென்று இழுத்தவாரே நடந்தாள் சாவித்திரி.
“கைய உடும்மா வலிக்குது...!"
அம்மாவிடமிருந்துக் கையை விடுவித்துக்
கொண்டான் ராகுல்.
அம்மாவின் வேகத்துக்குக் குழந்தையால்
நடக்க முடியுமா? முடியவில்லை.
பத்தடி... பதினைந்தடி... இருபதடி
என முப்பதடி ... வரை பின் தங்கி விட்டான் ராகுல்.
அவன் சுபாவப்படி, பொறுமையாகத்தான்
நடந்து வந்தான்.
யார் சுபாவத்தை யாரால்தான் மாற்றிவிடமுடியும்..?
***
திரும்பித் திரும்பிப்
பார்த்து,
‘ராகுல் வருகிறானா..?’ என்பதை உறுதி
செய்தபடியே ஜவுளிக்கடையை நோக்கி நடந்தாள் சாவித்திரி.
ஜவுளிக்கடையின் படியேறும் நேரத்தில்
மகனைத் திரும்பிப் பார்த்தாள்.
கடையின் பக்கவாட்டில் இருக்கும்,
கோவிலின் கோபுரவாசல் அருகில் வந்து கொண்டிருந்தான் ராகுல்.
'வந்து விடுவான்.'
உள்ளுணர்வு உந்த, கடைக்குள் பிரவேசித்தாள்.
மூட்டை பிரித்து மாயாண்டி எடுத்துப்
போடும் சேலைகளை மட்டுமே இதுவரைப் பார்த்திருந்த சாவித்திரிக்கு, பத்து பனினோரு அடி
ராக்கைகளில் பெட்டி பெட்டியாக அடுக்கப் பட்டிருந்த புடவைகளையும், வரிசை வரிசையாகத்
தொங்கிக் கொண்டிருந்த புடவைக் குவியல்களையும் பார்த்ததும், மனதுக்குள் ஆவல் கிளர்ந்து
எழ, தன்னை மறந்தாள் சாவித்திரி.
***
கஸ்டமர் கடைக்குள்
அடி எடுத்து வைத்த அடுத்த கனம்,
சேல்ஸ்மேன் எல்லோரும் பயபக்தியோடு
எழுந்து குனிந்து நின்று கைகூப்பி வரவேற்று மரியாதை செலுத்தினார்கள்.
ஒவ்வொரு புடவை அலமாரியின் பக்க
வாட்டிலும் துருத்திக் கொண்டு நின்ற சுவிட்சுகளை, “டப் டப் டப் டப்” என தட்டத் தட்டினார்கள்.
பளிச் பளிச் என்ற ‘எல் இ டி’ பல்புகளின்
பிரகாசத்தில் கண்களைக் கூச வைத்ததன ஜவுளிகளின் வகைகள்.
“புடவையா மேடம்..?”;
“சல்வார் கமிசாக்கா?”;
“காட்டன் சாரியா சிஸ்டர்...?”;
“பட்டுப்புடவையா மாம்..?”..
“சுடிதாராம்மா?””
“இன்னர் கார்மெண்ட்ஸா..?”
குழைந்த குரலில், சாவித்திரியிடம்
மாறி மாறிக் கேட்டுக் கேட்டுத் திணரடித்தார்கள் கடை சிப்பந்திகள்.
இப்படிப்பட்ட கிளுகிளுப்பான, ரம்யமான
சூழலை முதன் முதலில் எதிர் கொள்கிறாள் சாவித்திரி.
சூழ் நிலையின் புதுமையும், இனிமையும்
மயக்கியது அவளை.
இருந்தாலும், ‘விரலுக்குத் தக்கபடிதான்
வீங்க வேண்டும்.’ என்று சிறு வயது முதல், மூத்தோர்கள் சொல்லக் கேட்டு வளர்ந்த சாவித்திரி...,
தன் நிலையை உணர்ந்து செயல்பட்டாள்.
***
“சாதாரண சுங்குடி சேலை
எடுக்கத்தான் வந்தேன். ஙெ
அது மட்டும் காட்டுங்க." என்றாள்.
சாவித்திரியின் தேவையைக் காதில்
வாங்கியதும், கீழ் கோடி பட்டுப் புடவைப் பிரிவு; அதை ஒட்டிய மாடர்ன் கார்மெண்ட் என
எல்லாப் பகுதிகளிலும், ‘டப் டப்’ என விளக்குளை அமர்த்தினர்.
“நீங்க கேக்கற சுங்கிடிச் சேலை,
மூணாவது தளத்துல இருக்கு. “என் கூட
வாங்க”
மின் தூக்கியில் மூன்றாவது தளத்துக்கு
அழைத்துச் சென்றாள் ஒரு விற்பனைப் பெண்.
மாயாண்டியின் புடவைக் கட்டில் இருபது
இருபத்தைந்து புடவைகளை மட்டும் ஒரே நேரத்தில் பார்த்துப் பழகியிருந்த சாவித்திரியின்
கண்களுக்கு, மலை மலையாக, நூற்றுக் கணக்கான சேலைகளை ஒரே இடத்தில் பார்ப்பது,
புது அனுபவமாக இருந்தது.
விற்பனைப் பெண்கள் சிரித்த முகத்துடன், ஓயாமல் ஒழியாமல், ஒவ்வொன்றாக
எடுத்து எடுத்து, பிரித்துப் பிரித்து, விரித்து விரித்து சாவித்திரியின் முன்,
அவளுக்குத் திகட்டும் அளவுக்குப் போட்டார்கள்.
***
திடீரென்று
மகன் ராகுல் பற்றிய நினைவு வந்துவிட்டது சாவித்திரிக்கு.
கூடவே படபடப்பும் தொற்றிக் கொண்டது.
"கோச்சுக்காதீங்க, என் மகனை
கூடவே கூட்டிக்கிட்டு வந்தேன். எங்கே குந்தியிருக்கானோ கவலையா இருக்கு, போய் பாத்துட்டு
வந்து புடவை பாக்கிறேன்."
படபடப்போடுப் பணிவாகச் சொல்லிவிட்டு
அவசரமாய்க் கீழ் இறங்க, படிக்கட்டுப் பக்கம் திரும்பினாள்.
“பதட்டப்படாதீங்கமா. தரை தளத்துலதான்
இருப்பாரு உங்க மகன். நான் பாத்துட்டு வரேன் நீங்க புடவைய பாருங்க.!"
சொல்லிவிட்டு அவசரமாக அந்தக் கடைச்
சிப்பந்தி தரை தளத்துக்குச் சென்றாள்.
அடுத்த நிமிடம் கீழிருந்து போன்
வர,
புடவைகளை காட்டிக் கொண்டிருந்த
சேல்ஸ் பெண் சாவித்திரியிடம் விவரம் சொன்னாள்.
"அம்மா உங்க பையன் கீழ் தளத்துலதான்
விளையாடிக் கிட்டு இருக்காராம். கவலைப் படாம நீங்க புடவை பாருங்க! " என்றாள் புன்னகைத்துக்
கொண்டே.
“இங்கே கூட்டி வரச் சொல்ல முடியுங்களா..?”
சாவித்திரி கேட்டாள்.
***
பேருந்திலிருந்து இறங்கி,
தன் அம்மாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தானல்லவா ராகுல், கோவில் அருகே வந்ததும் ஆணி
அடித்தாற்போல் நின்று விட்டான்.
காரணம், மூடப்பட்டிருந்த கோவில்
கதவுகளுக்கு முன்னால், பல வண்ணத்தில் பூனைக் குட்டிகள் கிடந்தன.
ஒன்றன் மேல் ஒன்று வண்ணக் குவியலாய்
உருண்டு கொண்டிருந்தன அந்தக் குட்டிப் பூனைகள்.
‘மியாவ் மியாவ்’ என்று, வெவ்வேறு தாளகதியில் கத்திக்
கொண்டிருந்த, வெல்வெட் போன்று நளினமான, அந்தப் பூனைக் குட்டிகளை பார்த்தவுடன் ராகுலுக்கு
அதன் மேல் ஒரு பிரியம் கலந்த ஈர்ப்பு வந்தது.
டக்’கென கோபுர வாசலை நோக்கித் திரும்பினான்
ராகுல்.
பூனைக் குவியலின் மேற்புறத்தில்
இருந்த வெள்ளை நிறக் குட்டியைக் கையில் எடுத்தான்.
ஆசையாய் அதை முத்தமிட்டான்.
தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
***
ஆக்ரோஷத்தோடு ராகுலின்
தலையில் ‘தொப்’ எனக் குதித்தது இரையோடு அங்கே வந்த தாய்ப் பூனை.
‘தன் மேல் பாய்ந்தது என்ன...?’
என்பது கூடத் தெரியாமல், எதிர்பாராத திடீர் தாக்குதலால் ராகுலுக்கு நிலை தடுமாறியது.
இப்போது, குட்டியை இன்னும் இறுக்கமாக
மார்போடு அணைத்துப் பிடித்துக் கொண்டான் ராகுல்.
தலையில் குதித்த பூனை, ராகுலின்
தோள் பட்டை முதுகு எனக் இறங்கி ஆவேசமாகப் பிராண்டியது.
ராகுலின் அணைப்பில் இருந்த குட்டியை
மீட்கத் தாய்ப் பூனை போராடியது.
பூனைக் குட்டியோடு, சாலையை நோக்கி
ஓடி வந்தான் ராகுல்.
"தம்பி, பூனைக் குட்டிய கீழ
போட்றா.! "
"பூனைக் குட்டிய விட்று."
“குட்டிய கீழ விட்டுட்டு ஓடியாடா..?”
யாராரோ கத்தினார்கள்.
ஒரே நேரத்தில் பலர் கத்தியதால்
எதுவுமே புரியவில்லை ராகுலுக்கு.
சூழ்நிலை இறுக்கமானது.
தாய்ப் பூனை வெறி கொண்டு விட்டாற்போல்,
ராகுலின் முகம், கை, வயிறு என அனைத்து இடங்களிலும் பிராண்டுவதும் தாக்குவதுமாக இருக்க,
ராகுலில் உடம்பில் ஆங்காங்கே ரத்தம்
பிரிட்டது.
‘திக் ப்ரமை’ பிடித்தவன் போல் ஆனான்
சிறுவன் ராகுல்.
மயங்கி விழுந்தான்.
அவன் கை தளர்ந்தது.
நேரம் பார்த்து, அவன் கையிலிருந்த
பூனைக்குட்டியை பிடுங்கிக் கொண்டு அப்பால் சென்றது பூனை.
எதுவுமே நிகழாதது போல் தன் குட்டிகளுக்கு
இரையை ஊட்டிக் கொண்டிருந்தது தாய்ப் பூனை.
***
“சாவித்திரியின்
கோரிக்கையை ஏற்று, கடை சிப்பந்தி, சிறுவனை மேலே அழைத்து வந்தாள்.
*அது தன் மகன் இல்லை.
வேறு யாரோ!’ என்று அறிந்த அடுத்த கனம்,
“ஐயோ, மோசம் போயிட்டேனே..!”
புலம்பியபடி பரபரப்போடு,
ஓடினாள் சாவித்திரி.
இரண்டிரண்டு படிக்கட்டுகளாய்க்
குதித்து இறங்கித் தரைத் தளம் தொட்டு, ஜவுளிக் கடை முகப்புக்கு வந்தாள்.
உணர்சி வசப்பட்ட
அவள் நடவடிக்கைகள், கடை சிப்பந்திகள் உட்பட அனைவரையும் நின்றுத் திரும்பிப் பார்க்க
வைத்தன.
படபடப்பாகவும் பரபரப்பாகவும்
இருந்தன அவள் செயல்பாடுகள்.
***
“நல்ல
வேளை, கண்ணுல பிராண்டி பார்வை போவாம இருந்துச்சே...!” ;
“யாரு பெத்த புள்ளையோ,..!”
;
“ஏதோ நல்ல காலம்
இத்தோட போச்சே...!” ;
“எப்படித்தான் புள்ளையை
அம்போனு விட்டுட்டு இருக்க முடியுதோ...!” ;
கோவில் முகப்பில்
கூடிய கூட்டம், அவரவர் இஷ்டத்துக்குப் பேசிக் கொண்டிருந்தது.
மயக்க நிலையில் இருந்த
ராகுல் முகத்தில், தண்ணீர் தெளித்து எழுப்பினார் ஒருவர்;
ஆங்காங்கே வடிந்த
ரத்தங்களை துடைத்து முதலுதவி செய்தாள் ஒரு நடுவயதுப் பெண். ;
சாலையோரம் நின்ற
கூட்டத்தைப் பார்த்துவிட்டு ‘என்னவோ ஏதோ’ என்று பதறியபடி, ஓடி வந்தாள் சாவித்திரி.
பெற்ற வயிறல்லவா!.
***
‘தன்
மகனுக்குத்தான் ஏதோ பிரச்சனை.’ என்பதை அறிந்தாள் சாவித்திரி.
அடுத்த கனம்,
“ராகுல்...”
கத்திக் கொண்டே,
ஓடினாள்.
பூனையின் பிராண்டல்களில்
இருந்து வழியும் ரத்தத்தைத் துடைத்து, அவன் மயக்கத்தைப் போக்க முயற்சித்துக் கொண்டிருந்தவர்களை விலக்கிக் தள்ளியபடி,
“ஐயோ! ராகுல்!....”
ஒரே பாய்ச்சலாய்
உள்ளே பாய்ந்தாள் சாவித்திரி.
மகனைக் கட்டிக் கொண்டுக்
கதறி அழுதாள்.
சற்று
முன் தாய்ப் பூனை தன் குட்டியைக் காக்க அந்தச் சிறுவன் மீது பாய்ந்த பாய்ச்சலுக்கும்,
இப்போது
இந்தத் தாய் பாய்ந்து தழுவிய வேகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
பெத்த
வயிறு எல்லாம் ஒண்ணுதானே..!
பூனையானா
என்ன? புழுவானா என்ன..?
சுற்றி
நின்ற கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்.
***
சம்பவத்தை
நேரில் பார்த்தவர்கள் சாவித்திரியிடம் விலாவாரியாக விவரித்தார்கள்.
“தலைக்கு வந்தது
தலைப் பாகையோட போச்சே...!”;
“என்னம்மா, புள்ளைய
இப்படித் தனியா விடலாமா?” ;
“கவனமா இருக்க வேண்டாமா..?”
உரிமையாய்க் கோபித்தார்கள்.
“ஒரு ஏடிசி போட்டுருங்கம்மா..”
பரிந்துரைத்தார்
ஒருவர்.
“பக்கத்துலதான் ஜி
எச் இருக்கு.”
வழி காட்டியது ஒரு
கை.
மகனைத் தூக்கித்
தோள் மீது போட்டுக் கொண்டாள் சாவித்திரி.
அரசு மருத்துவமனை
வளாகத்தை அடைந்தாள்.
***
ஆங்காங்கே, மக்கள்
கும்பல் கும்பலாகவும், சில இடங்களில் வரிசையாகவும் இருப்பதையெல்லாம் பார்த்தாள் சாவித்திரி.
வாக்குவாதம், சண்டைகள்
என எங்கெங்கும் ஒரே இரைச்சல்.
‘தான் எங்கே போக
வேண்டும்...?’ என்று தெரியவில்லை சாவித்திரிக்கு.
அவளுக்கு முற்றிலும்
புதிய இடம் அது. குழப்பமாய் இருந்தது.
மகனை, பூனை பிராண்டிவிட்ட
விஷயம் சொல்லி, ஒருவரிடம் விவரம் கேட்டாள்.
“போயி ஓ பிச் சீட்டு
வாங்கிக்கிட்டு வா..”
இடம் சுட்டினார்
அந்த ஆசாமி.
அத்திசை நோக்கி நடந்தாள்
சாவித்திரி.
***
“தங்கச்சீ..
என்னாச்சும்மா தம்பிக்கு..?”
அரசு மருத்துவ மனையில்,
மருந்து மாத்திரைப்
பிரிவில்,
மாதாந்திர மருந்து
வாங்கிக் கொண்டு திரும்பிய மாயாண்டி,
ரத்த விளாராய்க்
குழந்தையை தோளில் சாய்த்தபடி வந்த சாவித்திரியைக் கண்டு அதிர்ந்து போய்க் கேட்டான்.
ராகுலை தன் கைகளுக்கு
மாற்றிக் கொண்டான்.
அவரசமாய், ஓட்டமும்
நடையுமாய், புண்களைத் துடைத்துக் கட்டுப் போடும் இடத்திற்கு ராகுலை தூக்கிச் சென்றான்.
வழக்கமாக வரும் வளாகம் என்பதால்,
மாயாண்டிக்கு அறிமுகமான செவிலியர்கள்
அவசரமாய்ச் செயல்பட்டார்கள்.
புண்களைத் துடைத்து,
மருந்திட்டு, பிளாஸ்திரி போட்டார்கள்.
ஏடிசி ஊசியும் போட்டார்கள்.
அதற்குள் மாயாண்டி
ஓடிச் சென்று ஓ பி சீட்டு வாங்கி வந்தான்.
ராகுலை சோதித்துப் பார்த்துவிட்டு, மாத்திரைகள் எழுதினார் மருத்துவர்.
சாவித்திரியை குழந்தையோடு
ஓர் பெஞ்சில் உட்காரச் சொன்னான் மாயாண்டி.
மருந்தகப் பிரிவில்,
வரிசையில் நின்றான்.
மருந்துகளை வாங்கி
சாவித்திரியின் கையில் கொடுத்தான்.
‘ஜி எச்’ சிலிருந்து பேருந்து நிறுத்தம் வரை தன் சைக்கிளில் அமர்த்தி
அழைத்து வந்தான் மாயாண்டி,
“கவலைப் படாதே தங்கச்சி..
எல்லாம் சரியாயிரும்..”
பேருந்து வரும் வரை
ஆறுதல் கூறினான்.
பஸ் ஏறும்போது, “நாளைக்கு புடவை எடுத்து வாண்ணே..” என்றாள் சாவித்திரி.
“சரி தங்கச்சி” என்றான் மாயாண்டி..
***
சிறப்பான கதை. நகரத்து துணிக்கடை பற்றிய விவரிப்பும் தாய்ப்பூனையையும் பெற்ற தாய் சாவித்திரியையும் ஒப்புமை படுத்தியது அவளது ஆவலாதியான நகரத்து கடையில் துணியெடுப்பதை அழகாக விவரித்தது சிறப்பு. முடிவும் அருமை. வாழ்த்துகள்
ReplyDelete