180. அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு (காற்றுவெளி - பங்குனி 2026 )

 

178. அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு (சிறுகதை)

ஜூனியர் தேஜ்

 (காற்றுவெளி - பங்குனி 2026 )

சென்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு பலி நேரத்தில்தான் இது நடந்தது.

“எது...?”

‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ – அதாவது ‘கண்டதும் காதல்.’

“யாருக்கும்... யாருக்கும்...?”

“ஜான்’க்கும்... க்ளாராவுக்கும்...”

***

றவுகளும் நட்புக்களும் சாரி சாரியாய்த் திரண்டு வந்து கூடியதால், அந்த லுத்தரன் திருச்சபையில் ‘மிட் நைட் மாஸ்’ களை கட்டியது. அனைவரின் முகங்களிலும் குடி கொண்டிருந்தது பண்டிகைக்கால மகிழ்ச்சி.

தொடர்ந்து கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களை ஒலி பெருக்கியின் மூலம் இசைத்துக் கொண்டே இருந்தது தேவாலய நிர்வாகம்.

இடையிடையே,

“தங்கள் பெற்றோரைத் தவர விட்ட ‘ஜான்சி’ என்ற குழந்தை  அலுவலகத்தில் பாதுகாப்பாக உள்ளது. உடனடியாக பெற்றோர் அலுவலகத்துக்கு வரவும்.”

“ஒரு சாவிக் கொத்து கண்டெடுக்கப்பட்டு அலுவலகத்தில் உள்ளது, தொலைத்தவர்கள், அடையாளம் சொல்லி அதைப் பெற்றுக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கிறோம்.”

என்று அவ்வப்போது சங்கீதத்தை நிறுத்திவிட்டு காணாமல் போனவர், போனவை பற்றிய செய்திகளையும் அறிவித்தார்கள்.

“விளக்கு வெளிச்சத்திற்காகவும், அலங்கார விளக்குகளுக்காகவும், ஒலிப் பெருக்கி போன்ற சாதனங்களின் இயக்கத்திற்காகவும், மின்சார ஒயர்கள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்வதால், சுவர்களிலும், மரங்களிலும் யாரும் ஏற வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறார்கள்.”

“நள்ளிரவு திருப்பலிக்கு வந்தவர்கள், தங்கள் உடமைகளை எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.” என்றெல்லாம் அவ்வப்போது எச்சரித்தார்கள்.

***

ரத்தடியில் அமர்ந்து ஜபமாலைகளை உருட்டிக் கொண்டிருந்தனர் அறுபது அகவை தாண்டியோர்.

ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாகப் பேசிக் கொண்டும், கொண்டு வந்த தின்பண்டங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்து உண்டு கொண்டும், ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டும் இருந்தனர் சம்சாரிகள்.

ஓடியும், ஒளிந்தும், குதித்தும், கும்மாளமடித்தும் விளையாடிக் கொண்டிருந்தனர் குழந்தைகள்.

தேவாலய வளாகத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள காம்பவுண்ட் சுவர் முழுவதும் எழுதப் பட்டிருந்த பைபிள் வாசகங்கள் பளிச் எனத் தெரியும் வண்ணம் ஒவ்வொரு பாந்துக்கும் ஃபோக்கஸ் விளக்கு போடப்பட்டிருந்ததால், நடு நிசி வரை பொழுதைப் போக்க, ஒரு சிலர் அதை அக்கரையுடன் படித்தனர்.

பெரும்பாலும், இளவட்டங்கள், தங்கள் கைப்பேசியுடன் பிஸியாக இருந்தனர். ரீல்ஸ் பார்த்தல், கேம் ஆடுதல் என அவர்கள் தங்கள் வழியில்தான் போனார்கள்.

‘நம் அழைப்பை ஏற்று தேவாலயத்துக்கு வந்ததே பெரிய விஷயம். அவர்களிடம் இறை பக்தி, தோத்திரம் என வற்புறுத்தினால், தங்களுடன் வருவதற்கே முரண்டு பிடித்துவிடுவார்கள் குழந்தைகள்...’ என்பதால், பெற்றோரும் வேறு வழியில்லாமல் இளைய தலைமுறையினரை அவரவர் போக்கிலேயே விட்டார்கள்.

இறை பக்தியோடு பரமபிதாவை வணங்கும் குழந்தைகளும் இல்லாமல் இல்லை அந்தக் கூட்டத்தில்.

‘கிறிஸ்துமஸ் கரோல்’ என்று சொல்லக் கூடிய சங்கீதங்களை நிறுத்திவிட்டு, “சரியாக நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு , சிறப்புத் திருப்பலி தொடங்கும்” அனைவரும் ஆலயத்துக்குள் வருக...!” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து பிரார்த்தனையில் ஆர்வமுள்ளவர்கள் உள்ளே சென்றார்கள்.

தேவாலயத்தினுள் நடுவில் பாதை விட்டு இரண்டு பக்கங்களிலும் சீரான இடைவெளியில் வரிசையாகப் போடப்பட்டிருந்தன பெஞ்சுகள்.

இடது புறம் ஆண்களுக்காகவும், வலது புறம் பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தாலும், குடும்பத்தோடு சேர்ந்து தோத்திரம் செய்பவர்கள் ஆண் பெண் கலந்தே, ஒன்றாகத்தான் அமர்ந்தார்கள்.

வழிபாட்டாளர்கள் தயார் நிலையில் இருக்க, பங்குத் தந்தை கடிகாரத்தைப் பார்த்தபடி நள்ளிரவு பனிரெண்டு அடிப்பதற்காகக் காத்திருந்தார்.

பிரார்த்தனைக் கூடத்தில் காத்திருந்தவர்களின் லௌகீகப் பேச்சுக்கள் படிப்படியாகக் குறைந்து,

மனம் நள்ளிரவுத் திருப்பலிப் பிரார்த்தனைக்குத் தயாரானது.

ஆண்களின் மூன்றாவது வரிசையில், பாதையை ஒட்டிய முதல் இடத்தில் இருந்தான் ஜான்.

அதே மூன்றாவது பெண்கள் வரிசையில், பாதை ஓரத்தில் இருந்தாள் க்ளாரா.

“டண்... டண்...” என சீரான இடைவெளியில், தேவாலய ஸ்பீக்கர் மூலம் எலக்ட்ராணிக் மணியோசை பனிரெண்டு முறை அடித்து ஓய்ந்தது.

“பரமண்டலத்தில் இருக்கும் பரம பிதாவே...!” என்று பங்குத் தந்தை தோத்திரம் தொடர, அனைவரும் பக்தியோடு கண்களை மூடியபடி ‘ஆமென்’ முழங்க, திருப் பலிப் பிரார்த்தனை போய்க் கொண்டிருக்க, ஜான் மற்றும் க்ளாராவின் கண்கள் மட்டும் ஒருவரை ஒருவர் பார்க்கத் திறந்திருந்தன.

ஆதாமும் நோக்கினான்; ஏவாளும் நோக்கினாள். இருவர் கண்களும் மாறிப் புக்கு... என்றானது நிலைமை.

***

“திருப்பலிப் பிரார்த்தனை முடிந்து, கூட்டமாக எல்லோரும் வெளியேறும்போது, தன் காதலியைத் தேடியது ஜானின் கண்கள்.

ஜான் மட்டுமா க்ளாராவும்தான்.

“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள் , உங்களுக்குத் திறக்கப்படும்”

ஒலிப் பெருக்கியில் (மத்தேயு 7:7) வின் வாசகம் தங்களுக்காகத்தான் ஒலிப்பதாக என நினைத்தார்கள் ஜான், க்ளாரா இருவரும்.

உண்மையான தேடலுக்கு, விடை கிடைத்தது, எதிர்பாராமல்.

“ஜான், இது யார் தெரியுமா? க்ளாரா... நம்ம ஜேம்ஸ் அங்க்கிள் பொண்ணு.” ஐடில ஹெச் ஆரா ஒர்க் பண்றா...?” ஜானின் சகோதரி ஷீலா அறிமுகப் படுத்த, பரவசமானது ஜான் மட்டுமல்ல, க்ளாராவும்தான்.

“நைஸ் டு மீட் யூ...! ஐ ம் ஜான்...!”

“ஐம் க்ளாரா...!”

உண்மையில், இருவரும் பரஸ்பரம் அவர்களின் பெயர்களை அப்பொழுதான் அறிந்து கொண்டார்கள்.

ஆனால், தற்போதுதான் ஒருவரை ஒருவர் பார்த்து அறிமுகப் படுத்திக் கொள்வது போலக் காட்டிக் கொண்டு நடித்தார்கள்.

தன் கம்பெனியின் பெயரையும் பதவியையும் அறிவித்தான் ஜான்.

இருவரும் பரஸ்பரம் தங்கள் விவரங்களை பகிர்ந்து கொண்டனர். அனைத்தும் கைப் பேசிகளில் முறையாகப் பதிவாகின.

***

“விஷ் யூ ஹேப்பி நியூ இயர் ” கைப்பேசியில் முதன் முதலில் செய்தி அனுப்பினான் ஜான்.

பதிலுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களை க்ளாராவும் பகிர்ந்து கொண்டாள்.

அன்று முதல், தொடர்ந்து, க்ளாரா, ஜான் இருவருக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் தொடங்கியது.

“குட் மார்னிங்... என்ற வாசகத்தோடு அடுத்த ஓரிரு நாட்கள் விடிந்தன அவர்களுக்கு.”

அடுத்தடுத்து, இயற்கைக் காட்சிகளுக்கு நடுவே பொறிக்கப்பட்ட காலை வணக்கம், இரவு வணக்கம் என செய்தித் தொடர்பில் பரிணாம வளர்ச்சி பெற்றது.

குழந்தைகள், ஒருவரை ஒருவர் முத்தம் இட்டுக் கொள்வதைப் போல இருந்த வண்ணப் படங்களுக்கு நடுவில் வணக்கங்கள் பகிரப்பட்டு, அடுத்த நிலைக்குச் சென்றது உறவு.

அடுத்தபடியாக, காலை மற்றும் இரவில், கைப்பேசியில் பேசுவதன் மூலம் வாழ்த்துக்களும், வணக்கங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அடுத்த கட்டம் , நினைத்தபோதெல்லாம், போன் செய்து, அர்த்தமில்லாமல் பேசுவதும், நான் நீ என்று ஒருமையில் விளித்துக் கொள்வதுமாய் அந்நியோன்யமானார்கள்.

பிறகு இடம் சொல்லி நேரில் சந்திப்பதும் பேசுவதுமாக, ஒரே மாதத்தில் ரொமான்ஸ் நிலைக்கு உயர்ந்துவிட்டது அவர்களின் உறவு.

***

னவரி 26ம் தேதி, கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வைப் பார்க்க ஒன்றாக வந்தார்கள்.

அப்போதுதான் அவர்கள் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று ஒருவருக்கு ஒருவர் பரிசு கொடுத்துக் கொள்வது பற்றிப் பேசினார்கள்.

“வர்ற வருஷம் கிருஸ்துமஸ் நாள்ல நான் ஒரு பரிசு உனக்குத் தரணும்னு ஆசைப்படறேன். அபூர்வமான பரிசா அது இருக்கணும்னு நினைக்கறேன். உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு க்ளாரா?”

“யோசிச்சிச் சொல்றேன். அவசரப்பட்டு, சந்தைல விக்கற எதையாவது வாங்கிக்கிட்டு வந்து கிஃப்ட்னு கொடுத்தா நான் அதை வாங்க மாட்டேன்.”

“சந்தைல விக்காத பொருள்னா... அதுவா...?” என்று அவள் கண்ணத்தையும் தன் உதட்டையும் காட்டிக் கேட்டான் ஜேம்ஸ்.

“எல்லை மீறுறீங்க ஜேம்ஸ். இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்...” என்று எச்சரித்தாள் க்ளாரா.

“சாரி” என்று உடனே சரணடைந்தான் ஜான்.  

 ***

பிப்ரவரியில் வாலன்டைன் டே’ அன்று ‘காதலர் பூங்காவில்’, தங்கள் காதலை மேலும் உறுதி செய்து கொண்டார்கள்.

“க்ளாரா...!”

“சொல்லு ஜான்...”

“அந்தப் பைக்குள்ள என்ன வெச்சிருக்கே...?”

“அவசரப்படாதே ஜான், சொல்றேன்!” சஸ்பென்ஸ் வைத்தாள் க்ளாரா.

‘லவர்ஸ் பார்க்’கில் அமர்ந்து, வரப்போகும் வருடம் ஒருவருக்கு ஒருவர் பகிரப் போகும் பரிசு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தார்கள்.

அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

 “இந்த மாதம் முதல், சம்பளம் வந்தவுடன் ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து ஒவ்வொரு மாதமும் ரூபாய் இரண்டாயிரத்தை இந்த உண்டியலில் போட்டு வருவோம்.” என்றாள் க்ளாரா.

சொல்லிக் கொண்டே, தன் பையில் இருந்த இரண்டு உண்டியல்களையும் எடுத்து இருவருக்கும் நடுவில் வைத்தாள்.

“...............” - அமைதியாக இருந்தான் ஜான். க்ளாராதான் பேசினாள்.

“வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அமர்ந்து முடிவு செய்வோம். அதுவரை நாம் பரிசுப் பொருள் பற்றிப் பேசவே வேண்டாம்.” என்று முடித்தாள் க்ளாரா.

எதை பேசக் கூடாது, செய்யக் கூடாது என்று தீர்மானிக்கிறோமோ, அதைத்தானே மனம் தீவிரமாக நாடும்.

ஒவ்வொரு சந்திப்பின் போதும், பரிசுப் பொருள் பற்றிப் பேசுவதும் குழம்புவதுமாகவே வருடம் முழுதும் ஓடியது அவர்களுக்கு.

***

டிசம்பர் முதல் வாரம் வந்துவிட்டது.

இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்து நெடு நேரம் பேசினார்கள்.

ஒவ்வொரு பரிசுப் பொருளாய் சொல்லி, அவை பற்றிப் பேசி முடிவெடுக்கும்போது, ‘அபூர்வமான பரிசுப் பொருளாக அது இல்லை...!’ என்று நிராகரித்து விடுவார்கள்.

ஏதாவது பரிசுப் பொருள் என்றால் சுலபமாகத் தீர்மானித்திருக்கலாம். அபூர்வமான என்ற ‘பெயரடை’ சேர்த்து விட்டதால், எதுவுமே அபூர்வமாகத் தெரியவில்லை அவர்களுக்கு.  

அன்று கிறிஸ்துமஸ்.

மாலை ஆறுமணிக்கு இருவரும் தங்கள் உண்டியல்களோடு லவர்ஸ் பார்க்கில் சந்தித்தார்கள்.

பதினோரு மாதங்களாக அவர்கள் உண்டியலில் போட்டு வைத்த தொகை நாற்பத்து எட்டாயிரம் கைவசம் இருந்தது.

“இன்னும் ஆறு மணி நேரத்துக்குள்ளே நாம வாங்க வேண்டிய அபூர்வப் பரிசுப் பொருளை தீர்மானிக்கணும்.” என்றாள் க்ளாரா.

“எனக்கு மைண்ட்டே ப்ளாங்க்’கா இருக்கு, நீயே யோசிச்சி எதுவேணாச் சொல்லு க்ளாரா...!” என்று பொறுப்பை அவளிடம் போட்டுவிட்டான் ஜான்.

டூ வீலரை ‘பார்க்கி’லேயே, பார்க் செய்து விட்டு, சாலையோரமாகவே நடந்து இரண்டு மூன்று கிலோமீட்டர் நடந்தார்கள் இருவரும்.

கிறிஸ்த்மஸ்க்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்ததால் சாலைகளும், வீடுகளும், கடைகளும் பரபரப்பாகவே இருந்தன. ஆங்காங்கே வாண வேடிக்கைகளும், அமர்க்களப்பட்டன.

மணி இரவு 10.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் மிட் நைட் மாஸ். நள்ளிரவு சிறப்புத் தொழுகை.

“வழக்கமா போற ஸ்டார் ஓட்டலுக்குப் போய், டிபன் சாப்ட்டுட்டு சர்ச்சுக்குப் போக சரியா இருக்கும்...!” என்ற முடிவோடு  ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சென்றார்கள் இருவரும்.

***

“ஐயோ...”

ஒரு பெண்ணின் கதறல் அருகில் கேட்க, சடர்ன் பிரேக் போட்டான் ஜான்.

பத்துப் பதினைந்தடி முன்னால், பாதசாரிகள் கடக்கும் வரிக் கடவையில் கடந்து செல்லும்போது மயக்கமாகி பொத் என விழுந்த பெண்தான் ‘ஐயோ’ எனக் கத்தினாள் என்பதை அறிந்தனர் இருவரும்.

“க்ளாரா, நீ போய் அந்த லேடிய அடண்ட் பண்ணு. நான் வண்டியை ஓரம் கட்டிட்டு வரேன்.” என்றான் ஜான்.

நகரத்தின் கலாச்சாரத்தில் ஊறிய பலர், “யார் எப்படிப் போனால் என்ன?” என்று, கண்டு கொள்ளாமல் தவிர்த்து, தங்கள் வழிச் சென்றனர்.

“என்ன...?” என்று கண்டு கொண்ட சிலர், ‘நம்மால் என்ன செய்ய முடியும்...?’ என்று, ஒதுங்கிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்த, பர்ஸையும், கைப் பேசியையும் மின்னல் வேகத்தில்,  களவாடிச் சென்றான் ஒருவன்.

விழுந்து கிடந்தவள், நிறைமாத கர்பிணி.

என்ன காரணமோ தெரியவில்லை. வயிற்றைச் சரித்துக் கொண்டு சாலையோரத்தில் விழுந்து, மயங்கிக் கிடந்தாள்.

வண்டியை ஓரம் கட்டிவிட்டு ஜான் ஓடோடி வந்தான்.

க்ளாராவோடு சேர்ந்து மயங்கிக் கிடந்த அவளை, ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகிலுள்ள பல்நோக்கு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

மயங்கிய நிலையில் இருந்ததாலும், அவளின் கைப்பேசி களவாடப்பட்டு விட்டதாலும், அவளின் உறவுகளை அறிந்து தகவல் தர முடியாத நிலையில் தாங்களே இருந்து பொறுப்பேற்று அட்மிட் செய்தனர்.

தங்களிடம் இருந்த 48000 ரூபாயோடு இன்னும் இரண்டாயிரம் சேர்த்து ஐம்பதாயிரம் பணத்தையும் யாரோ முகம் தெரியாத அந்தப் பெண்ணின் பிரசவத்துக்காகச் செலுத்தினர்.

லேபர் வார்டுக்கு எடுத்துச் சென்றார்கள், அந்த நிறை மாத கர்பிணியை.

வாசலில் காத்திருந்தார்கள் ஜானும், க்ளாராவும்.

 ***

லேபர் வார்டிலிருந்து வெளியே வந்தாள் கைனகாலஜிஸ்ட்.

“நீங்க ரெண்டு பேரும் அவங்களுக்குச் செஞ்ச உதவியை அவங்கிட்டே சொன்னாங்க நர்ஸ். அவங்க ரொம்ப எமோஷன் ஆயிட்டாங்க. உங்க ஜி பே நம்பர் கேட்டு வாங்கிக்கச் சொன்னாங்க. குழந்தையை முதல்ல நீங்க ரெண்டு பேர்தான் வாங்கணும்னு சொல்லிட்டாங்க. இப்போ செடேஷன்ல நல்ல தூக்கத்துல இருக்காங்க. என்று சொல்லிய டாக்டர்,

“ஆண் குழந்தை பிறந்திருக்கு...சுகப் பிரசவம்தான்” என்று தகவல் கூறினார்.

அந்த நேரத்தில்,

செவிலி. வெள்ளை தேங்காய்ப் பூ துவாலையில் வைத்து எடுத்து வந்த புது வரவை, வாங்கிய மருத்துவர்.

இக்கட்டான சூழலில், நிறை மாத கர்பிணியைக் கொண்டு வந்து சேர்த்தோடு, பிரசவத்திற்காக ஐம்பதாயிரம் பணமும் செலுத்திய அந்த காதல் ஜோடி, ஜான் மற்றும் க்ளாராவிடம் குழந்தையைச் சமர்ப்பித்தாள்.

இருவரும் இணைந்து அந்தக் குழந்தையை மகப்பேறு மருத்துவரிடமிருந்து வாங்கினார்கள்.

‘அபூர்வமான கிறிஸ்துமஸ் பரிசு பகிர்ந்து கொள்ள வேண்டும்...’ என்று கடந்த ஒரு வருடகாலமாக சிந்தித்த, மனித சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, அற்புதத்தைச் செய்துவிட்ட கர்த்தருக்குக் களி கூறினார்கள் இருவரும்.

“உங்க ஜி பே நம்பர் ப்ளீஸ்...” டாக்டர் கேட்டார்.

“பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை முதன் முதலில் எங்கள் கைகளில் தவழவிடச் சொல்லி, உலகில் எவருக்கும் கிடைக்காத அபூர்வமான கிறிஸ்துமஸ் பரிசு அளித்த எங்கள் சகோதரிக்கு, எங்கள் கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கட்டும்.” என்று குழந்தையை மீண்டும் செவிலியிடம் ஒப்படைத்துவிட்டு, மருத்துவ மனையிலிருந்து புறப்பட ஆயத்தமானார்கள் இருவரும்.

***

ரவு மணி பனிரெண்டு அடிக்க,

அந்த பாலி கிளீனிக் லாபியில், “ஹாப்பி கிறிஸ்மஸ்” கொண்டாடப்பட்டது. பாலிகிளினிக் வரவேற்பில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் ஒரு சேனலில்,

" பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்ப்பந்தரித்த பலன் கர்த்தரின் பரிசு" (Children are a heritage from the Lord, offspring a reward from him) –

அதாவது, குழந்தைகள்,  டவுளிடமிருந்து வரும் பரிசு மற்றும் ஆசீர்வாதம்.

என்று சங்கீதம் 127:3 (Psalm 127:3): ன் வாக்கியங்களை மேற்கோள்காட்டி, உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் பாதிரியார்.

அந்தப்  பிரசங்கம்,

அபூர்வப் பரிசு பெற்ற காதலர்களான ஜான் மற்றும் க்ளாராவின் காதுகளை மட்டுமல்ல, மனதையும் நிறைத்தது.

***

 

Comments

Popular posts from this blog

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

விகடன் 25. 03.26 - வாசகர் கடிதம் -

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்