179. மேலோர் (முதல் பரிசுச் சிறுகதை)

  



179. மேலோர் 


(அன்னை குருபாக்கியம்

 நினைவு அறக்கட்டளை

 2025ல்

 நடத்திய போட்டியில் 

முதல் பரிசு பெற்ற

 சிறுகதை)

.....

“அடைப்புங்களா?”

கைப்பேசியை எடுத்த உடனேயே பளிச் எனக் கேட்டார் செல்வம்.

‘நம் எண்ணுக்கு வேறு எதற்குக் கால் செய்யப் போகிறார்கள்?’ என்ற திட நம்பிக்கை அவர் குரலில் தெரிந்தது.

பாஸ்கரனை பேசவே விடவில்லை. செல்வமே தொடர்ந்தார்.

“விலாசத்தை மெசேஜ் பண்ணி வுடுங்க... நாளைக்கு விடி கருக்கல்ல வண்டி வந்துரும். ஏழு எட்டு மணிக்குள்ற உறிஞ்சி முடிச்சிட்டுக் கிளம்பிருவோம்.” ப்ரோக்ராமை தெளிவாகத் திட்டமிட்டேவிட்டார் செல்வம்.

“ஹலோ?” என்றார் பாஸ்கரன்.

“சொல்லுங்க? வேற எதுனா சொல்லணுங்களா?”

“ரேட் எதுவும் பேசிக்காம...?” என்று இழுத்தார் பாஸ்கரன்.

“இதுல என்ன சார் பேசிக்கப் போறம்...  எல்லாருக்கும் உள்ளதுதான் பாத்துக்கலாம்.!” என்றார் செல்வம் பெரும்போக்காக.

***

நீர்வளத்துறை அலுவலகத்தில் ஓவர்சியராகப் பணியாற்றுகிறார் பாஸ்கரன்.

பாஸ்கரனுக்கு போஸ்ட்டிங் வாங்குவதற்காக கிராமத்து சொத்து சுகங்களை விற்றுத் தந்த பெற்றோரை டவுனில் வாடகை வீட்டில் வைத்திருக்கிறோமே என்ற கழிவிரக்கத்தில் கலங்கினார் பாஸ்கரன்.

விளைவு...!

‘சம்பளம் மட்டும் போதாது...!’ என்று தீர்மானித்தார்.

மூன்றே ஆண்டுகளில் வாய்க்காங்கரைத் தெருவில் தனி வீடும் வாங்கி ஆயிற்று.

எட்டு வருடத்திற்கு முன் கட்டப்பட்ட வீடு. இதுவரை செப்டிக் டேங்க் க்ளீன் செய்திருக்கவில்லை என்பதால் வீடு வாங்கி ஒரு வருடத்திற்குள் அடைப்பு பிடித்துக் கொண்டுவிட்டது.

“என்னங்க... ஃப்ளஷ்ஷே... ஆவமாட்டேங்குது...” முகம் சுருக்கி, அலுத்துக் கொண்டாள் தர்ம பத்தினி.

“தண்ணி எதுத்து வருதுடா...?” என்றனர் அப்பாவும் அம்மாவும்.

‘சோக் பிட்’ க்கு முன்னால் இருந்த ‘டிரெயினேஜ்’ குழாயின் அடைப்பை ஒரு குச்சியை விட்டுக் குத்தி விட்டதில் கொஞ்சம் கழிவு நீர் வடிந்து ஓரிரு நாட்கள் தாக்குப் பிடித்தது, என்றாலும் மீண்டும் அடைத்துக் கொண்டுவிட்டது.

***

“விநாயகா செப்டிக் டேங்க் கிளீனிங்’ல நம்ம தொட்டி  நீள அகலம் சொல்லி விசாரிச்சேன் இருபதாயிரம் கேக்கறாங்க….” அவரால் ஆனதைச் செய்து ரிப்போர்ட் கொடுத்தார் அப்பா.

“இருபதினாயிரம் டூ மச்...!” என்றான் பாஸ்கரன்.

நேரிலும், நண்பர்கள் மூலமும், அந்த நகரத்தில் இயங்கும் ஏழெட்டு செப்டிக் டேங்க் கிளீனிங் நிறுவனங்களில் பாஸ்கரனே விசாரித்தார். தொட்டியின் அளவைச் சொன்ன உடனேயே இருபதினாயிரம் என்றார்கள்.

‘மகாலட்சுமி கிளீனிங் கம்பெனி’ நிறுவனர் மகாதேவன் மட்டும் இருபத்தைந்தாயிரம் டிமாண்ட் செய்தார்.

“வேலை சுத்தமா இருக்கும். மேன் ஹோலை திறந்து போடாம திரும்பவும் மூடி, ஏர் டைட்டாப் பேக் பண்ணித் தருவோம்...” என்றார்.

‘நூறு ரூபாய்க்கு ஒயிட் சிமெண்ட்டும் எண்பது ரூபாய்க்கு சொல்யூஷனும் வாங்கி ஒரு கொத்தனாருக்கு நூறோ இருநூறோ செலவுக்குக் கொடுத்தா பேக் பண்ணிட்டுப் போறான். அதிக பட்சம் ஐநூறு ரூபாய்ல முடியப்போற வேலைக்கு ஐயாயிரம் சேர்த்துக் கொடுக்க வேண்டியது அவசியமா?’ என்று தோன்றியது பாஸ்கரனுக்கு.

கடைசியாக, ‘டவுனைத் தாண்டி உத்தமதானபுரம் கிராமத்தில் இருக்கும் ‘கனகா கிளீனிங் லாரி’ க்குப் பேசி விடலாம், நிச்சயமாக நகரத்து ரேட்டை விட கொஞ்சமாகவது குறையும்...’ என்று அனுமானித்துத்தான் பேசினார் பாஸ்கரன்.

ஆனால் பிடி கொடுக்காமல் பேசிய செல்வத்தின் பேச்சில் திருப்தி ஏற்படவில்லை.

‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று இல்லாமல் ‘வழவழா கொழகொழா’ என்று இருப்பது போலத் தோன்றியது அவர் பேச்சு. வேலையில் கை வைத்துவிட்டு ‘முப்பதாயிரம் கொண்டா’ என்றால் என்ன செய்வது?’ என்ற யோசனையும் வந்தது பாஸ்கருக்கு.

‘இப்போதெல்லாம் எல்லா தொழிலதிபர்களும் தொழிலாளிகளும் சங்கத்தால் கட்டுப்படுத்தப் படுகிறார்கள். ஒருவர் தொட்ட வேலையை வேறு ஒருவர் தொடமாட்டார்கள். நிறைய சட்டச் சிக்கல்கள் எழும்.’

தான் ஓவர்சியராக இருக்கும் நீர் வளத்துறையில் இதுபோல பல சிக்கல்களை அவ்வப்போது பார்த்தவராதலால் பாஸ்கரனுக்கு ஒரு மாதிரி மனசு குழப்பமாயிருந்தது.

“எவ்வளவுனு சொல்லிட்டீங்கன்னா பணம் தோது பண்ணிக்க சௌரியமாயிருக்கும், உத்தேசமாச் சொன்னீங்கன்னாக் கூட...” என்று இழுத்தார்

“சார். நீங்க டவுன்ல உள்ள அத்தனை இடத்தையும் விசாரிச்சிருப்பீங்க. அவங்களை விட கணிசமா குறையும் என்கிட்டே. நேர்ல பேசிக்கலாம். காலைல வந்துர்லாம்னா... அட்ரஸ் தெளிவா டைப் பண்ணி வாட்ஸ் அப் பண்ணுங்க” என்று சொல்லி, ‘எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, உன்னிடம் வளவளன்னு பேச நேரம் இல்லை’ என்பதுபோல பேச்சை முடித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார் செல்வம்.

***

தொழில் ஆரம்பித்த புதிதில் செல்வமும், தொட்டியின் நீள அகலங்களைக் கேட்டு, இத்தனை தரவேண்டும் என்று மற்றவர்களைப் போலக் கேட்டவர்தான்.

முதலாளிகளின் பேச்சை நம்பி டாங்கர் லாரியோடு சென்று நின்றவுடன்தான்,  செப்டிக் டேங்க்கின் நீள அகலங்களை குறைவாய் சொல்லி கொட்டேஷன் வாங்கியது தெரிய வரும்.

“என்னா பெரிய அளவு...” என்று சட்டம் பேசுவதும்...,

“சரியா அளக்காம சொல்லிப்புட்டேன்... நூறோ எறநூறோ செலவுக்கு வாங்கிக்கிட்டு வேலைய முடிச்சிட்டுப் போங்க...;

இந்த முறை பேசின காசுக்கு அள்ளிட்டுப் போங்க அடுத்தடுத்தாப்பல அடப்புன்னா சேத்துத் தரேன்;

இப்படியெல்லாம் அல்பத்தனமாகப் பேசும், கசப்பான பல அனுபவங்களுக்குப் பிறகுதான் பிடியை தன் கைக்குள் வைத்துக் கொள்ளத் தொடங்கினார் செல்வம்.

***

விடிந்தும் விடியாத வைகறைப் பொழுது.

அழுத்தமான மஞ்சள் வண்ணப் பின்னணியில் ‘கனகா செப்டிக் டேங்க் கிளீனிங்’ என்று எழுதப்பட்ட வாகனம் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டது.

டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி பாஸ்கரின் கைப்பேசிக்கு அழைத்தார் செல்வம்.

கதவைத் திறந்து கொண்டு வந்த பாஸ்கரைப் பார்த்த உடனே ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி வந்து “ஐம் செல்வம்..” என்று கை கூப்பினார்.

பின்னாலேயே டூ வீலரை ஓரமாய் நிறுத்திவிட்டு இரண்டு லேபர்கள் உள்ளே வந்தார்கள்.

செப்டிக் டேங்க்’கை கண்களாலேயே அளவெடுத்தார் செல்வம்.

“டவுன்ல எல்லாரும் இருபதாயிரம் கேட்டிருப்பாங்களே...?” என்றார்.

ஓவர்சியர் பணியில், பல இடங்களில், தன்னுடைய உண்மையான உணர்வுகளை மறைத்து மறைத்துப் பழக்கப்பட்ட பாஸ்கர், செல்வத்தின் அணுகுமுறையால் தூண்டப்பட்ட இயல்பான வியப்பைக்கூட வெளியில் காட்டிக் கொள்ளாமல் கஷ்டப்பட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டார்.

***

க்ளீனர் முருகவேல் உடனடியாக தொழிலில் இறங்கிவிட்டான். சிறிய உளி சுத்தியல் வைத்து மேன் ஹோல் ஓரத்தில் பாக் செய்யப்பட்டிருந்த காரையை நளினமாக உடைக்க ஆரம்பித்தான். புருசால் தள்ளித் தள்ளி கொத்தியவற்றை ஒன்று சேர்த்துக் குவித்தான். முறத்தில் அள்ளி தெருவில் கொட்டினான்.

கழிவுத் தொட்டியைத் திறக்கும் முன் வீட்டின் ஜன்னல் கதவுகளையும், வாயிற்படிக் கதவுகளையும் அழுத்திச் சாத்தச் சொன்னார் செல்வம்.

மேன் ஹோல் திறக்கப்பட்டது.

முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு உள்ளே பார்த்தார் செல்வம்,

“ஏழெட்டு வருஷமா கிளீன் பண்ணாத தொட்டி போல..” என்றார்.

“நோ... நோ...” என்று அவசரமாக மாஸ்கினுள்ளே மறுத்தார் பாஸ்கரன்.

அதே நேரம் ஹோஸ் பைப்பை கொண்டு வந்து தொட்டி உள்ளே செருகினான் திருமலை.

விலுக்’கென்று நைலான் கயிற்றை இழுத்து மோட்டாரை இயக்கினான்.

“ம்... ம்...” என்ற சத்தம் எழுப்ப, பச்சை நிற ஹோசை கீழும் மேலும் தூக்கி இறக்கி அமுக்கி, தொட்டியைக் அடியோடுபடையாய்க் கலக்கினான்.

அடுத்து விசையை மாற்றி உறிஞ்சினான்.

குபீரென்று துர்நாற்றம் சூழலை நிரப்பியது.

தொட்டியில் மிதக்கும் கழிவுகள் கீழே இறங்கின.

கொஞ்சம் கழிவுகள் ஓரத்துச் சுவற்றில் நாலாபுறமும் தெரித்து ஓடுகிற கரப்பான் பூச்சிகளுக்குக் தோழமையாய் ஒட்டிக் கொண்டன..

அவ்வப்போது விசையை அமுக்கி அமுக்கி தொட்டியின் அடியில் அழுத்தமாய்ப் படிந்துள்ள கழிவை, கலக்கிக் கலக்கி இளக்கி இளக்கி டாங்கரில் ஏற்றிக் கொண்டிருந்தான் கிளீனர் திருமலை.

டாங்கர் நிரம்ப நிரம்ப தொட்டியின் அடிப்பகுதி கண்ணுக்குப் புலப்பட்டது.

கைப்பேசியின் டார்ச் லைட்டை ஒளிர விட்டார் பாஸ்கர்.  தொட்டியைக் கண்காணிக்க வந்தார்.

“ஒரு நிமிஷம் சார்” என்று சொல்விட்டு மூன்று பாட்டரி செல்களுடன் கூடிய நீளமான டார்ச் லைட்டை ஒளிர்வித்து, தொட்டியின் உட்பக்கம் முழுவதையும் காட்டினார் செல்வம்.

பாஸ்கரின் மனதில் ஏற்பட்ட திருப்தி முகத்தில் பிரதிபலித்தது.

***

ச்சை வண்ண ஹோஸ் மீண்டும் சுருட்டப்பட்டு லாரியில் அதெற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அடைக்கலமாகிவிட்டது.

“திருமலை...!”

“.........................”

“வண்டிய கம்போஸ்ட்டுக்குக் கொண்டுபோய் அன்லோடு பண்ணிட்டு நேரே ராம் நகர் வந்துரு... கம்போஸ்ட்டுக்குக் கட்டற கட்டணத்துக்கு ரசீது வாங்கிக்க மறந்துராதே...” என்றார் செல்வம்.

“சரிண்ணே!” என்ற திருமலை தன் கையிலிருந்த ஒரு ஒயர் கூடையையும், வண்டி சாவியையும் செல்வத்துக்கு முன்னால் தரையில் வைத்தான்.

***

லாரி வாடகை -, லாரி மெயிண்டனன்ஸ் -, டீசல் - மூன்று ஆட்கள் கூலி, கம்போஸ்ட் ஆபீஸ் சார்ஜ்ஜஸ், என 15000 ரூபாய்க்கு, அழகான கையெழுத்தில் எழுதிய எஸ்டிமேட்டின் அடியில் தன் ஜி பே எண்ணை எழுதி பாஸ்கரன் கையில் கொடுத்தார் செல்வம்.

     தொடர்ந்து, திருமலை வைத்துவிட்டுப் போன ஒயர் கூடையிலிருந்து தட்டை எடுத்து. பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து ஒயிட் சிமெண்ட்டை அதில் கொட்டி, சொல்யூஷனை ஊற்றி ஒரு சின்ன பட்டையால் கலக்கிக் கலக்கி உருட்டினார்.

குளிகன் போல் உருட்டி உருட்டி, மேன்-ஹோல் ஒரத்தில் காடி எடுத்தது போல இருந்த பள்ளத்தில் வைத்து பட்டையால் லாகவமாக அழுத்தித் தேய்த்துப் பேக் செய்துகொண்டே பாஸ்கரனிடம் பேச்சுக் கொடுத்தார்.

***

“வாட்டர் சப்ளை போர்ட்டுல ஓவர்சியரா இருக்கறது நீங்கதானே சார்?.”

“ஆமாம்...”

“வீட்டு வாசல்ல போர்டு பார்த்தேன், நீங்கதானா வேற யாராவதானு நெனச்சிக் கேட்டேன்.”

“நான்தான் நானேதான்.” என்ற பாஸ்கரன், “...” வருஷத்தைச் சொல்லி, அந்த செட்லதான் உள்ளே வந்தேன். என்றார்.

“அப்படிங்களா?”

“ம்..”

“நான் எம் எஸ் ஸி   கெமிஸ்ட்ரி கோல்டு மெடலிஸ்ட்டு சார். ‘எம் பி ஏ’வும் க்வாலிஃபைவ் பண்ணிக்கிட்டேன்” என்றார் செல்வம்

“அப்டியா?”

***

னுபவப் பரிமாற்றங்கள் தொடர்ந்தன.

“நானும் நீங்க தேர்வு எழுதின பேட்ச்லதான் தகுதித்தேர்வு எழுதினேன். என்னுடைய விடைக் குறிப்பை, ஆன்ஸர் கீயோட ஒத்துப் பார்த்தப்ப தொண்ணூறு பர்செண்ட் மார்க் வந்துச்சு. நிச்சயம் எனக்கு வாட்டர் போர்டுல ஹை போஸ்டிங் கிடைக்கும்னு நம்பிக்கிட்டிருந்தேன்;

“..........................”

“எங்க ஊர்ல ராஜேந்திரன் ராஜேந்திரன்னு ஒருத்தன். என்னோட பள்ளித் தோழன்தான். படிச்சதென்னவோ பி ஏ., அதுவும் அரியர் வெச்சி வெச்சி பாஸ் பண்ணினான். தகுதித் தேர்வுல கால்குலேட் பண்ணிப் பார்த்ததுல இருபது மார்க்கு கூட வாங்கலை. ஆளுங்கட்சியோட கிளைச் செயலாளரா இருக்கற அவங்க அப்பாவோட சிபாரிசுல முப்பது லட்சத்துக்கு மேலே பணத்தைக் குடுத்து முக்கியமான போஸ்டிங் வாங்கிட்டான்.” 

“அப்படியா...? ராஜேந்திரன்... எனக்கு நல்லாத் தெரியுமே... தனியார் வாட்டர் சப்ளை லாரிக்கெல்லாம் பர்மிட் கொடுக்கறதே அவருதான்?”

“இருபத்தி அஞ்சு லட்சம் கொடுக்கத் தயாரா இருந்தா, எனக்கு நீங்க இப்ப பாக்கற ஓவர்சியர் போஸ்டிங்கை வாங்கித் தரதா சொன்னாராம் ராஜேந்திரனோட அப்பா.”

“வாங்கியிருக்கலாமே...?” என்றார் பாஸ்கர்.

“எனக்கு அதுல உடன்பாடு இல்லை சார். கிராமத்துல இருக்கற சொத்து பத்துங்களை வித்திருந்தா அந்தக் காசு கிடைச்சிருக்கும். போஸ்டிங்கும் வாங்கியிருக்கலாம். ஆனா அப்படி வாங்கியிருந்தா, நானும் கொடுத்த காசை எடுக்கணும்னு ராஜேந்திரன் மாதிரி எதுக்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கற புத்தி வந்துருக்கும் சார். காசு காசுனு பறக்கும்போது குடும்ப நிம்மதி போயிருமே சார்..” இயல்பாகச் சொன்னார் செல்வம்.

சொரேலென்றது பாஸ்கரனுக்கு.

செல்வமே தொடர்ந்தார். “ நியாயமான கட்டணம் வசூல் பண்றதால, சரியான செலவுக் கணக்கை பேப்பர்ல எழுதிக் கொடுத்துடறதால, இந்த செப்டிக் டேங்க் கிளீனின் தொழில் மிகச் சிறப்பா நடக்குது.

நானே நேர்ல போறதுனால, வேலைய சுத்தபத்தமா முடிச்சித் தருவாரு செல்வம்ங்கற பேரு வந்தாச்சு. வர்ற வருமானத்துல சந்தோஷமா குடும்பம் நடத்தறேன்.

 ராஜேந்திரன் சொன்னதைக் கேட்டு நான் அந்த போஸ்டிங்கை பின் வழில வாங்கியிருந்தா உழைச்சிப் படிச்சி தகுதித் தேர்வுல தகுதியான மதிப்பெண் வாங்கின நீங்க இந்த போஸ்ட்டிங்குக்கு வந்திருக்க முடியுமா. நீங்களே யோசிச்சிப் பாருங்க...?”

“..........................”

பி ஏ வை ஆறு வருடங்கள் அரியர்கள் வைத்துப் முடித்து;

தகுதித் தேர்வில் இருபது மார்க் கூட வாங்காதவனுக்கு,

கிராமத்தில் இருந்த சொத்து சுகங்களையெல்லாம் விற்று, அப்பாவின் சிநேகிதர் மூலம் மந்திரிக்கு இருபத்தைந்து லட்சம் பணம் கொடுத்து இந்த ஓவர்சியர் போஸ்டிங்கை பெற்ற பாஸ்கரனுக்கு பேச்சு வரவில்லை.

ஜி பே அனுப்பிருங்க சார்... நான் அடுத்த கிளையண்ட் பார்க்கணும் என்று இயல்பாகச் சொல்லிவிட்டு, டூவீலரை ஸ்டார்ட் செய்தார் செல்வம்.

***

“பொய்யகல தொழில் செய்தே - பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.”

தொலைக்காட்சியில் தன்னம்பிக்கைப் பேச்சாளர் முழங்கிய பாரதியின் கவிதை வரிகள்,

‘மலம் மக்கல் தொட்டி’யை சுத்தம் செய்கிற நேரத்தில் துர்நாற்றம் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக இறுக்கமாக மூடப்பட்ட கதவு ஜன்னல் அடைப்புகளையெல்லாம் உடைத்துக் கொண்டு வெளியே வந்து பாஸ்கரனின் செவிகளின் மணம் பரப்பியது.

****





அனுப்புதல்:-

வரதராஜன் A, @ ஜூனியர்தேஜ், M.A(English).,M.Sc,(Counselling Psychology)., B.Ed.,CLIS.

உளவியல்ஆலோசகர்,

11B/32 - திருமஞ்சனவீதிசீர்காழி- 609110.

(வாட்ஸ் ஆப் செல் எண்) - 6381377969

varadhushakespeare@gmail.com     https://junior-tej.blogspot.com 

பெறுதல்:-

அன்னை குரு பாக்கியம் நினைவு அறக்கட்டளை,

கிரீன்ஃ பீல்ட்ஸ் பள்ளி,

வத்திராயிருப்பு-  626132.

விருதுநகர் மாவட்டம்.

Mail I.D.   vivekaschool219@gmail.com

 

 

.


Comments

Popular posts from this blog

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

விகடன் 18. 03.26 - வாசகர் மேடை -