1. சிற்றன்னை (24.03.1995 குங்குமம் - முதல் சிறுகதை)

1. சிற்றன்னை

                                -ஜூனியர் தேஜ்

24.03.1995 குங்குமம் இதழில் பிரசுரமான முதல் சிறுகதை



      ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள்.

       சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு, ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது பாசாங்கு செய்வதாகப் பட்டது.

       ‘ஒரு வேளை உண்மையிலேயேத் தன்னை கவனிக்கவில்லையோ?’ என்ற சந்தேகமும் வர, சித்தி குட்மார்னிங்,என்று ஆரம்பிக்கலாமா..? அது ஏன், குட்மார்னிங் அம்மா என்றே வாய் நிறைய அழைத்தால் என்ன?’ குழப்பம் வந்த்து.

       அம்மா செத்துப்போய் இரண்டு வருஷம் கழித்து அந்த இடத்தை நிரப்ப இந்த ரங்கநாயகி வந்து மூன்று மாதம் முழுசாய் ஓடிவிட்டது. வந்த ஒரு வாரத்தில் வீட்டு வேலைக்காரியை நிறுத்தினாள். வீட்டுப் பொறுப்புகளையெல்லாம் தானே ஏற்று நாள் தவறாமல், நேரம் தவறாமல் சமையல்காரி மாதிரி டைனிங் டேபிளில் சமையல் செய்துவைத்துவிட்டுப் போவதும், நானே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவதும்…’ச்சே..ஏன் இந்த இடைவெளி..? இதற்குக் காரணம் நானேதான்…’ என்ற கழிவிரக்கம் வந்தது ஷோபனாவிற்கு.

       மூன்று மாசமாய் முகம் கொடுத்துப் பேசாமல் ஒதுங்கி ஒதுங்கி இருந்துவிட்டு திடீரென்று இயல்பாகப் பேசிவிடவும் மனம் இடம் கொடுக்கவில்லை. சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்தி மெதுமெதுவாக இயல்பு நிலைக்கு வர ஆயத்தமானாள் ஷோபனா. வாசல்படியில் நின்றவள் மெதுவாகச் செருமினாள்.

       சாரி...; காஸ் சிலிண்டர் பாதி சமையல்ல தீர்ந்துடுச்சு. வேற சிலிண்டர் மாத்தி...! அதனாலதான் கொஞ்சம் லேட்...; ஒரு நொடீல இதோ டைனின் ஹால்ல போய் உட்கார்றதுக்குள்ளே கொண்டு வந்துடறேன். சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்... என்று கூறிய ரெங்கநாயகி மேலும் பரபரத்தாள்.

 

       ஷோபனாவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.

       வா...போ... என்று உரிமையோடும் பேசாமல், வாங்க... போங்க என்றும் பேசாமல் தாமரையிலைத் தண்ணீரைப் போல், இப்படி ஒரு பேச்சைபொதுப்படையான பேச்சை ஷோபனா எதிர்பார்க்கவில்லை.

       நான் யார்? பெரிய மகாராணியா..? என்னிடம் எதற்கு சாரி கேட்கவேண்டும்...?

       பிசினஸ்... பிசினஸ்... என்று மாதத்தில் இருபது இருபத்தைந்து நாட்கள் கேம்ப் சென்றுவிடும் அப்பா...;

       அம்மா செத்துப்போவதற்கு முன் இதே வீடு எப்படியெல்லாம் அமளி துமளிப்படும்.

       உங்களுக்கு எப்போதும் பிசினஸ்... பிசினஸ்... பிசினஸ்... இதே சிந்தனைதான். உங்களுக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம், காட்சி, குடும்பம், குழந்தைகள்னு... அந்த எழவு பிசினசையே கட்டிண்டு மாரடிக்க வேண்டியதுதானே...! என்று அம்மா கத்துவதும்.

 “ஏண்டீ.. நீ இந்த பங்களாவுல ராணியாட்டம் இருக்கறதும், ‘லேடீஸ் க்ளப்’, ‘லயன்ஸ் க்ளப்மீட்டிங், பொதுச்சேவை, அது இதுன்னு மாருதீல ஊர் சுத்தறதும்ஏதோ உங்க அப்பா விட்டுட்டுப் போன சொத்துன்னு நினைப்போ...? என்னோட உழைப்புடீ... ஓயாத உழைப்பு. நீ என்னை என்ன வேணாலும் சொல்லு, பொறுத்துப்பேன். என் பிஸினஸைக் கேவலமா பேசினயோ நான் மிருகமாயிடுவேன்... ஆமாம்...” அப்பா பதிலுக்குக் கத்துவதும்;

அம்மா அழுது அரற்றுவதும்...’ இந்தக் கூத்தெல்லாம் எதுவுமில்லாமல் இந்த ரெங்கநாயகி வந்த மூன்று மாதங்களாக... பலத்த பேச்சு கூட இல்லாமல் இயல்பாக, வெகு இயல்பாக ஓடுகிறதே...;

ஒரு வேளை எல்லாரையும் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு கொஞ்ச நாள் சென்று ஆட்டம் காட்டுவாளோ?’ டைனிங் டேபிள் முன் கண்மூடி அமர்ந்திருந்த ஷோபனாவின் நாசியை சமையல் மணம் எட்ட சுயநினைவுக்கு வந்தாள்.

ரெங்கநாயகியைப் பரிமாறச் சொல்லிச் சாப்பிடவேண்டும் போல் இருந்தது ஷோபனாவிற்கு. ஆனால் அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டாள்.

ஷோபனா, வெஜிடபிள் நிறைய சேர்த்துக்கணும், போட்டுக்கோ...”

எனக்கு எடுத்துப் போட்டுண்டு சாப்பிடத் தெரியும். எனக்கு யாரும் பரிமாற வேண்டாம்.”

ஸாரி... ஆஸ் யூ ப்ளீஸ்...”

ரெங்க நாயகி வந்த மறுநாள் தனக்குப் பரிமாற வந்தபோது அவளை நோகடித்தது நினைவு வர தானே எடுத்துப் போட்டுக்கொண்டு பேருக்கு ஏதோ சாப்பிட்டாள்.

கிர்...ரிங்...கிர்ர்...ரிங்ங்...”

போன் ஒலிக்க ரெங்கநாயகி காது கொடுத்தாள்.

அப்பாவாய்த்தான் இருக்கும். இன்னிக்கு ராத்திரி வர்றதை போன் பண்ணி ஞாபகப்படுத்துவாராயிருக்கும்.’

ஹலோ...ரெங்கநாயகி ஸ்பீக்கிங்...”

“........................”

அப்படியா..?”

“........................”

யெஸ்…”

“........................”

கேநோ ப்ராப்ளம்…”

“………………………….”

..கே.., அடுத்த வாரம் எண்ட்ல வரீங்க. ஒரு சின்ன ரிக்வஸ்ட். லிக்கர் முடிந்தவரை லிமிட் பண்ணிக்க ட்ரை பண்ணுங்க... வெச்சிடட்டுமா...?”

 

குடிக்கறதுக்கும் கூத்தியாளோட குலாவறதுக்கும்தான் பிசினஸ், கேம்ப்ங்கற போர்வைல போறீங்க நீங்க. ஹேட்யூ... அதெல்லாம் எனக்குத் தெரியாது உடனே கிளம்பி வந்தாகணும். அப்படி நீங்க வரலேன்னா என் பிணத்தைத்தான் நீங்க வரும்போது பார்ப்பீங்க...” என்று படாரென்று போனை வைக்கும் அம்மா நினைவுக்கு வர அதே ஸ்தானத்தில் இன்று ரெங்கநாயகி.

டேக் யுவர் ஓன் டைம், செய்யும் தொழிலே தெய்வம்..., ஓகே... பிஸினஸ் ஃபர்ஸ்ட், ஒரு சின்ன ரிக்வஸ்ட்..., லிக்கரைக் குறைச்சிக்க ட்ரை பண்ணுங்க...” என்று சிரித்த முகமாய்ப் பேசிய ரெங்கநாயகி.

இப்படிப்பட்ட ரெங்கநாயகி ஆரம்பத்தில் தன்னோடு பேச வந்தபோது முகம் திருப்பி அலட்சியப்படுத்தியதும், பரிமாற வந்தபோது அவளை அவமானப்படுத்தியதும்... இப்படிப் பலவும் எண்ணியபோது ஷோபனாவின் கண்களில் நீர் திரையிட்டது.

நோ...! இனிமேல் இப்படி விலகி விலகிப் போகக்கூடாது. எப்படியாவது ரெங்கநாயகியோடு ஒட்டுதலாய் ஆகிவிடவேண்டும். என்ன வழி?’ யோசித்தாள்.

 

ல்லூரியில் நடந்த பாடங்கள் எதுவும் ஷோபனாவின் மனதில் ஏறவில்லை.

காலை வகுப்புகள் முடிந்ததும் மதியம் வகுப்பிற்குச் செல்லவில்லை. நூலகத்தில் ஒரு மணி நேரம் கழித்தாள். எதுவும் மனதில் நிற்கவில்லை. நூலக கடிகாரம் ஒரு முறை அடித்தது. மணி மூணரை.

கல்லூரியை விட்டு வெளியே வந்தாள். அந்த பப்ளிக் பூத்தில் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு தன் வீட்டு நம்பரைச் சுழற்றினாள் ஷோபனா.

ஹலோ... சித்தார்த் ஸ்பீக்கிங்...”

ஷோபனாவிற்குத் தூக்கவாரிப் போட்டது. ‘அப்பா...! பிஸினஸ் பிஸினஸ் என்று வெளியூரிலேயே தன் பொழுதைக் கழிக்கும் அப்பா...! அடுத்த வார இறுதியில் வருவதாக காலையில் போன் பேசிய அப்பா...! சித்தார்த் வந்துவிட்டாரா..?’ ஆச்சர்யமாக இருந்தது.

ஒரு வேளை புது மனைவியை...?’

ச்சே... அவ்வளவு கேவலமானவரில்லை அப்பா...’

ஹலோ... சித்தார்த் ஸ்பீக்கிங்..”மீண்டும் குரல் வர

அப்பாவோடு என்ன பேசுவது...? பேசாமல் ஃபோனை வைத்துவிடுவதும் அநாகரீகமாகப் பட்டது ஷோபனாவிற்கு. “ வாண்ட் மிஸஸ் ரெங்கநாயகி...” என்றாள்.

யெஸ்...”

ரெங்கநாயகியோடு என்ன பேசுவது. குழம்பினாள். ஒரு முடிவுக்கு வந்தாள்.

ஹலோ... ரெங்கநாயகி பேசறேன். நீங்க...?”

நான் லேடீஸ் க்ளப் கன்வீனர் பேசறேன்... மிஸஸ் நளினி சித்தார்த்தன்... அதான்... உங்க... நிறைய சமூக சேவை செய்திருக்காங்க. அவங்க மறைவுக்குப் பிறகு ரெண்டு வருஷம் கழிச்சி நீங்க சித்தார்த்தனை மேரேஜ் பண்ணியிருக்கீங்க வாழ்த்துக்கள்...”

தேங்க்ஸ்...”

மிஸ்ஸ் நளினி மாதிரியே நீங்களும் க்ளப் மெம்பரா ஆகணும். நிறைய சமூக சேவை செய்யணும். மிஸஸ் நளினி அடிக்கடி சொல்வாங்க, வீடு வீடு ன்னு குறுகிய வட்டத்துலயே இருக்கற நம்மைப் போலப் பெண்கள் வீட்டுக்கு வெளீல வந்து பல சேவைகளையும், சாதனைகளையும் செய்யணும்.. அதுதான் பெண் விடுதலை பெற்று ஆணாதிக்கம் ஒழியறதுக்கு ஒரே வழின்னு... அதுபோல... நீங்களும்...”

சாரி... நான் அந்தக் கருத்தோட முரண்பட்டு நிக்கறவ. லேடீஸ் க்ளப் மாதிரி அமைப்புகள் தேவைதான். ஆனால் அது மட்டுமே பெண் விடுதலையைக் கொடுத்துடாதுன்னு நம்பறவ நான். நாட்டுக்குத் தேவை மக்களின் மனோபாவ மாறுதல்னு வினோபாஜி சொல்வார். குடும்பம், வீடு இதையெல்லாம் குறுகிய வட்டமா நான் நினைக்கலை.

என் குடும்பத்தை எடுத்துக்கிட்டா பிசினஸ்ல சாதனை படைக்க நினைக்கிற கணவர், எதிர்காலம் பற்றிய ஆரோக்யமான கற்பனைகளையும் கனவுகளையும் சுமந்து நிற்கற அமைதியான என் ஒரே மகள் கல்லூரியில் படிக்கறா. இவங்க ரெண்டு பேருக்கும் எந்தக் குறையும் வைக்காம என் கடமைகளைச் செய்யறதுனால அவங்க தங்கள் துறையில சாதனை படைப்பாங்க. ஒரு துறைங்கறது தனிமனித வளர்ச்சியில்லை, சமூக வளர்ச்சி சம்பந்தப்பட்டதுன்னு நான் நம்பறேன்.”

மேடம்தன் பெண்டு தன் பிள்ளைனு இருக்கறது குறுகிய உள்ளம்னு பாவேந்தர் சொன்னதை மிஸஸ் நளினி அடிக்கடி சொல்வாங்க.”

அதே பாவேந்தர்தான் இதையும் சொல்லியிருக்காரு…”

ஆணி போனதால் லாடம் போனது.

லாடம் போனதால் குதிரை தோற்றது.

குதிரை தோற்றதால் படையும் வீழ்ந்தது.

ஆணி போனதால் நாடு போனது...’

குடும்பத்தோட ஆணி வேர் பெண்கள்தான். நான் ஆணியாவே இருந்து என்னோட கடமைகளைச் செய்ய ஆசைப்படறேன். க்ளப் மெம்பரா சேர எனக்கு ஆட்சேபணையில்லை. க்ளப் மீட்டிங், கான்ஃபரன்ஸ் இப்படி எதுவா இருந்தாலும் என் குடும்பக் கடமைகளுக்குப் பிறகு டைம் இருந்தா கலந்துக்கறேன். தேங்க்யூ...வெச்சிடலாமா..? இப்பத்தான் பிசினஸ் விஷயமா வெளியூர் போன என் கணவர் வந்திருக்கார். காலேஜ்லேர்ந்து என் மக களைச்சி வர்ற நேரம். நிறைய வேலையிருக்கு. இன்னொரு முறை பேசுவோமே...”

ஷோபனாவின் கண்களை கண்ணீர் மறைத்தது.

தெளிந்த சிந்தனை, தீர்கமான முடிவு, அழகான பேச்சு... ஷோபனாவைத் தெளிவாக்க, சிற்றன்னை என்கிற பதத்திற்குக் கொடுமைக்காரி என்று பொருள் பதித்துவிட்டவர்கள்மேல் கோபம் கோபமாக வந்தது.

வீட்டிற்குப் போனபின் சித்தியை….சித்தியா...? இல்லை அம்மா ரெங்கநாயகியை கட்டி அணைத்து முத்தமிடவேண்டும்.’

புது ஷோபனாவாய்டெலிபோன்பூத்திலிருந்து வெளியே வந்தாள் ஷோபனா.

                                   

అఅఅఅఅఅఅఅఅ

விமரிசனங்கள்



என் முதல் சிறுகதைக்கு இந்த அருணின் 
அன்றைய முதல் வாழ்த்து











Comments

  1. நல்லதொரு கதை. டெலிபோனில் பேசியது யார் என்பதை ரெங்கநாயகி உணர்ந்தே இருப்பாளோ!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விமர்சனத்துக்கு நன்றி சார்🙏

      Delete

Post a Comment

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)