3. வெட்டு ஒண்ணு (சிறுகதை)
-ஜூனியர் தேஜ்
27.02.1998 - குங்குமம்
பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு, கபாலி அரிவாளை வீசவில்லை.
‘சும்மா மிரட்டி வைப்போம்...!’ என்ற எண்ணத்தில் கபாலி அரிவாளைச் சுழற்ற...; தற்காத்துக்கொள்வதற்காக நீட்டிய சுந்தரலிங்கத்தின் கை துண்டாகி விட்டது.
ஓரிரு ஆண்டுகள் எங்கெங்கோச் சுற்றியலைந்துவிட்டு, ஊர்ப்பக்கம் வந்தான் கபாலி.
‘ஊரில் தன்னைப் பார்ப்பவர்கள் தூற்றுவார்களோ...!’ என்ற அச்சத்துடன் வந்த கபாலிக்கு யாரும் அவனைக் கண்டுகொள்ளாதது பெரும் வியப்பைத் தந்தது.
டீக்கடைக்குச் சென்ற கபாலி, அங்கே சுந்தரலிங்கத்தின்
தாய்மாமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.
சற்றே பின்வாங்கினான்...
“கபாலி...; என்னதான் பிரச்சனைன்னாலும்
அதுக்காக இப்படியா பண்ணறது...?”
பளிச்’செனக் கேட்டார் சுந்தரலிங்கத்தின்
தாய்மாமன்.
“அது வந்து ... நானே எதிர்பார்க்காம...!”
“தெரியும்...! தெரியும்...!! கேள்விப் பட்டேன். ‘நீ ஒரு சரியான ஆம்பிளையா இருந்தா வெளியூர்ல போய் ஒரு ஆறு மாசம் இருந்து குப்பை கொட்டு பார்ப்போம்’னு உன் முறைப்பொண்ணு சவால் விட்டதுக்காக; இப்படி ஒண்ணரை வருஷம் உன்னையே நெனச்சி நெனச்சி உருகி ஓடாத்
தேய வெச்சிட்டியே அவளை...!;
போ...! போய் உன்னை கட்டிக்கக் காத்திருக்கற முறைப்பெண்ணைப் போய் சீக்கிரம்
பாரு... போ...!” என்று சிரித்தார் அவர்.
‘சுந்தரலிங்கத்தின் கை வெட்டுப்பட்ட விஷயமாகப் பேசப் போகிறார்...!’ என்று பயந்த கபாலிக்கு அதைப் பற்றிக் கேட்காததோடு
தன்னிடம் இயல்பாகப் பேசுகிறாரே...?’
குழப்பமாகவும் இருந்தது கபாலிக்கு.
‘சுந்தரலிங்கம் உயிரோடு இருக்கிறானா...?’
‘அப்படியானால் நான் ஒரு கொலைகாரனா...?’
‘சுந்தரலிங்கம் செத்துவிட்டான்...!’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான்
கபாலி...;
காரணம். ‘அவன் உயிரோடு இருந்திருந்தால்
அவனை வெட்டிய விஷயத்தைத் தாயும் தந்தையுமாயிருந்து அவனை வளர்த்தத் தாய்மாமனிடம் சொல்லியிருப்பானே...!’
‘முறைப் பெண்ணைச் சென்று பார்ப்பதா...? இல்லை வந்தவாசி, மீண்டும் தலைமறைவாகிவிடுவதா...?’ முடிவெடுத்தான்.
பேருந்து நிலையத்தில்
ஒரு பேருந்து வந்து நின்று, போயிற்று.
‘அந்தப் பேருந்திலிருந்து
இறங்கி வரும் ஒற்றை ஆள் யார்...?;
ஓ... சுந்தரிலிங்கம்தான்... ‘அப்போது நான் கொலைகாரனில்லை...!’
மனசு கூவியது
“சுந்தரலிங்கம் என்னை மன்னிச்சுடு...”
கபாலி கண்ணீர் விட ஒற்றைக்கையிழந்த சுந்தரலிங்கம் மற்றக் கையால் கபாலியைத் தட்டிக் கொடுத்தான்.
“கபாலி...! உன்னை எதுக்கு நான் மன்னிக்கணும். படிச்சிட்டு வேலை கிடைக்காம சுத்திக்கிட்டு இருந்த
எனக்கு உன் தயவாலதான் வேலை கிடைச்சுது;
நீ என் கையை வெட்டின உடனே என் கஷ்டமெல்லாம் தீந்துடுச்சு...!”
கபாலிக்கு ஒன்றுமே புரியவில்லை. விழித்தான்.
“என்ன கபாலி அப்படிப் பார்க்கறே...? இரண்டு கைகளும் இருந்தப்போ வேலை கொடுக்காத இந்த அரசாங்கம், என் ஒரு
கையை இழந்த பிறகு ஊனமுற்றோர் கோட்டாவுல வேலை கொடுத்துடுச்சு...!”
சுந்தரலிங்கம் சொல்லிக் கொண்டே போகச் சிலையாக நின்றான்
கபாலி.
అఅఅఅఅఅఅఅఅ
Comments
Post a Comment