4. முன்னதாகவே வந்திருந்து (சிறுகதை)
4. முன்னதாகவே வந்திருந்து...
-ஜூனியர் தேஜ்
07.02.1999 (தீக்கதிர்-வண்ணக்கதிர்)
பதினாலு வருடங்கள் என்பது ஒரு ஜெனரேஷன் என்று கணக்கு வைத்தால் சிவமுதலியார் ஐந்து ஜெனரேஷன்களைக்
கடந்தவர். நல்லது-கெட்டது எதுவாயிருந்தாலும், பத்திரிகையோ, அழைப்போ வந்துவிட்டால் மட்டுமில்லை...!
தகவல் காதில் விழுந்துவிட்டால்கூடப் போதும், “பல வேலைகள்’ல நம்மை மறந்திருப்பாங்க...!” என்று சமாதானப்படுத்திக்கொண்டு, நேரில் சென்று கலந்துகொண்டு திரும்பவேண்டும் என்பதில்
விடாப்பிடியாக இருப்பவர்.
அறுபத்தைந்து வயதுவரை வீட்டில் யாரும் அவருக்குத் தடை சொல்லவில்லை. அறுபத்தைந்தாவது வயதில் ஒரு சஷ்டியப்தபூர்த்தி வைபவத்திற்காகத் திருக்கடையூர் சென்றபோது, பேருந்திலிருந்து அவர் இறங்குவதற்குள் ஓட்டுநர் பேருந்தை நகர்த்திவிட, கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டார்.
அப்போதுதான் வீட்டில் அவரின் வெளியூர்
பிரயாணத்திற்கு எதிர்ப்பு அலை
கிளம்பியது.
“மனுசன் தடுமாறுவது சகஜம்தான். தடுமாறி விழுந்தவன் கம்பீரமா
எழுந்து நிக்கறதுதான் வீரம். தடுமாறிடுவோமோ’னு பயந்து பயந்து வீட்லயே முடங்கிக் கிடக்கறது கோழைத்தனம்...!”
இப்படிச் சொல்லிவிட்டு அடுத்த வாரமே ஒரு கல்யாணத்துக்குக்
கிளம்பிச் சென்றுவிட்டார்.
அதற்குப் பிறகு வெளியூர் பிரயாணம் என்றால் முதலில் வீட்டில் சிவ முதலியாருக்கும் அவர் மனைவிக்கும் வாக்குவாதம்
நடக்கும். மகன் “போக வேண்டாம்...” என்று சொல்லியிருப்பான். மருமகள் “நீங்கதான் போகணுமா... அவரை அனுப்பக் கூடாதா...? என்று கேட்பாள்.
எல்லோருடையக் கருத்தையும் காதில் வாங்கிக் கொண்டுக் கடைசியில் குறிப்பிட்ட நாளில்
‘டாண்’ என்று புரப்பட்டுவிடுவார்.
நாளை திருச்சி ஆண்டார் தெருவில் ஒரு சினேகிதனின் பேத்திக்குக் கல்யாணமாம்.
எட்டு மணிக்கே ஜோல்னாப் பையைத் தயார் செய்து
வைத்துகொண்டு கிளம்பிவிட்டார் முதலியார். யாரும் தடை சொல்லுமுன் அவரே “ இதோ பார் பார்வதி, பேத்திக்குக் கல்யாணம் பண்றானே ரிஷீகேசன், அவனுக்கும் எனக்கும் உள்ள சிநேகிதம் எப்படீனு நான் சொன்னால் புரியாது..” என்று நட்பு புராணம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்
முதலியார்.
‘மழை பெய்யறதே…!” என்றாள் மனைவி.
“மழை காலத்துல மழை பெய்யத்தானே செய்யும்...! அதும்பாட்டுக்கு அது...! இதும்பாட்டுக்கு இது...!;
எப்படியும் சாயந்தரம் ஆறு மணி சுமாருக்குதானே ஜானவாசம் இருக்கும்., அதுக்கு ஏன் இப்பவே கிளம்பிண்டு...?”
“நான் நேரே கல்யாண சத்திரத்துக்குப் போகப்போறதில்லை பார்வதி. தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல என் சிநேகிதன் ஒருத்தன் இருக்கான். பத்திரிகை வந்தவுடனே அவனுக்கு ஒரு தபால் எழுதிப் போட்டுட்டேன். அவனைப் போய்ப் பார்த்துட்டு கொஞ்ச நேரம் பழைய கதையெல்லாம் பேசிண்டிருந்துட்டு ரெண்டு பேருமா கிளம்பிப் போவோம்.”
தஞ்சாவூரில் பழைய பஸ் ஸ்டாண்டில் இறங்கி கூப்பிடு தூரத்தில் இருக்கும்
அந்தச் சந்தில் நுழைந்தார். வாசலில் புதிது புதிதாகக் கடைகள் அடைத்துக் கொண்டிருந்ததால்
கொஞ்சம் நிதானித்து, ஒரு கடையில் விவரம் கேட்டார்...
“நீங்க கேக்கற நாராயணசாமி என் அப்பாதான். அவர் காலமாகி மூணுமாசம் ஆகுதே! அவர் பெயருக்கு ஒரு வாரம் முன்னே தபால் போட்டிருந்தியளா..?;
சுய விலாசம் அதுல இல்லாததால பதில் எழுத முடியலை... உள்ளே வாங்க...!” என அழைத்துப் போனான்.
ஹாலில் மாட்டப்பட்டிருந்த, நாராயணசாமியின் என்லார்ஜ் செய்யப்பட்டப் புகைப்படத்தில் கதர் மாலை தொங்கியது.
“திருச்சி வரைப் போகணும். நான் புறப்படறேனே…” என்று புறப்பட்டார்.
திருச்சி வரும்வரை இறந்துபோன நண்பன் நாராயணசாமிக்கு
அஞ்சலி செலுத்துவதுபோல் கண்மூடியபடியே
பயணம் செய்தார்.
திருச்சி ஜங்ஷனில் இறங்கி மெயின்கார்ட்கேட்டுக்கு டவுன்
பஸ் ஏறி இறங்கி, ஆண்டார் தெருவில் இருந்த கல்யாண மண்டபத்திற்கு
வந்து சேர்ந்தபோது மணி நாலுதான் ஆகியிருந்தது.
மண்டபத்தில் இரண்டு மூன்று பெண்கள் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான்கைந்து விடலைப் பையன்கள் நாற்காலிகளை இழுத்துப்
போட்டுக்கொண்டிருந்தார்கள்.
“வாங்க...” என்று கூப்பிட ஆளில்லை. தானே உள்ளே சென்று கோலம் போடும் பெண்கள் ஒருத்தியுடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“உட்காருங்க...” என்று சத்தமாகச் சொல்லி ஒரு நாற்காலியைக் காட்டினான் ஒரு விடலைப் பையன். அவருக்குக் காது கேட்காது என்று அவனாக நினைத்துக்கொண்டு.
முதலியார் ஒரு பையனை கை சாடையால் அழைத்தார். “டாய்லெட் எங்கே இருக்கு...?” என்று கேட்டார். அவன் கை சாடையாலேயே டாய்லெட் இருக்குமிடத்தைக்
காட்டினான்.
“வயசான காலத்திலே சிவ சிவானு வீட்டுல இருக்க வேண்டியது தானே...! எப்போ கல்யாணப் பத்திரிகை வரும் கல்யாணச் சாப்பாடு சாப்பிடுவோம்னு காத்துக்கிட்டு
இருப்பாங்க போல இருக்கு...!” என்றான் ஒரு விடலை.
“மெதுவாப் பேசுடா.. அவரு காதுல விழுந்துடப் போகுது...!” என்று எச்சரித்தான்
மற்றவன்.
“அது ஒரு டமார செவுடுன்னு பாத்தாலே தெரியலையா? பத்திகைல “பந்துக்களோட முன்னமே வந்திருந்து’ன்னு போட்டிருக்க... இவர் மட்டும் முன்னமே வந்துட்டாரு... ஒரு வேளை பந்துக்கள் பின்னால வருவாங்களோ என்னமோ...?” என்று நகைச்சுவையாகக் கூற, விடலைகள் சிரிப்போடு கோலப் பெண்களும் சேர்ந்து கொண்டனர்.
முதலியாருக்குக் கோபம் வந்தாலும், ‘சின்னப் பையன்கள், இவன்களுக்குச் சமமாப் பேசினா கௌரவமா இருக்காது...!’ என்று நினைத்துக் கொண்டவராய்
எழுந்து டாய்லெட் பக்கம் போனார்.
டாய்லெட்டிலிருந்துத் திரும்பிவரும்போது மண்டப முகப்பில் வருபவரைப் பார்த்தார்.
ரிஷிகேசன் நாற்பது வயதுத் தோற்றத்தில் வருவதைப்
போலிருந்தது.
அவன்தான் ரிஷிகேசனின் மகனாக இருக்கவேண்டுமென ஊகித்தார்;
‘ரிஷிகேசன் எப்படி இருக்கிறானோ...? கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு
முன்பு பார்த்தது. அவன் எப்போது வருவான் என்று கேட்க வேண்டும்;
பழைய நட்பை ஞாபகம் வைத்துக்கொண்டு பத்திரிகை
அனுப்பச் சொன்னதற்காக அவனைப் பாராட்ட வேண்டும்;
தன் ஒரே மகன் கல்யாணத்துக்குப் பத்திரிகை
அனுப்பியும் ஏன் வரவில்லை எனக் கோபித்துக்கொள்ள வேண்டும்...’
இப்படியெல்லாம் நினைத்தபடியே அவர் சென்றார்.
அவருக்கு முன் “அங்க்கிள்... உங்க அப்பாவோட சினேகிதமாம். ஒரு செவுடு வந்திருக்கு...!” என்று இவரைக் காட்டிச் சொன்னான் ஒரு விடலை.
“கெழ-போல்ட்டுக்கெல்லாம் ஏன் பத்திரிகை அனுப்பினீங்க..?.” கேட்டான் மற்றொரு விடலை.
“பத்திரிகை மீந்துப்போச்சு. அப்பாவோட பழைய டைரியைத் தேடி எடுத்து அதுல இருந்த பழைய அட்ரஸ்க்கு எல்லாம் ஒரு பத்திரிகை அனுப்பி வெச்சேன்;
சமயத்துல பத்திரிகை வந்திருக்கேன்னு நூறு அம்பது பணம் அனுப்பி வைக்கறவங்க உண்டு;
இன்னிக்குக் கூட இருநூறு ரூபாய் எம் ஓ வந்துது. கூப்பனுக்குக் கீழே ‘என் சிநேகிதன் ரிஷிகேசனை
விசாரித்ததாகச் சொல்லவும்னு எழுதி ‘ஜலந்தர் ராமுடு’ன்னு கையெழுத்துப் போட்டிருந்தது...!”
அவர் சொல்லி முடிக்கும் முன் ஒரு விடலை குறுக்கிட்டான்.
செத்துப்போன தாத்தாவுக்கு
ஜலந்தர் ராமுடு விசாரிச்ச செய்தியை யாருகிட்ட சொல்லி அனுப்பப் போறீங்க அங்க்கிள்...”
இப்படிக் கேட்டுவிட்டுச் சிரித்தான்.
ஆப்த நண்பன் ரிஷிகேசன் இறந்த செய்தி காதில் விழுந்ததும் துடித்துப் போனார் சிவ முதலியார்.
“வாங்க..! பத்திரிகை கிடைச்சுதா...?”
சத்தமாகக் கேட்டான் ரிஷிகேசனின் மகன். தான் செவுடு என்று நினைத்து அவன் அப்படி உரக்கப் பேசியதில் கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டார்.
“நான் கிளம்பிக்கிட்டே இருக்கேன் தம்பி. நீ வந்ததும் உன்னை நேர்ல பார்த்துட்டு, ரிஷிகேசன் பேத்திக்கு என்னாலானது செஞ்சிட்டுப் போகணும்னு
வந்தேன்.
இந்தாப்பா...!”
நூறு ரூபாய்தாளொன்றை எடுத்து அவன் கையில் கொடுத்தார் முதலியார்.
அவனுக்கு மனதில் உறுத்தல் ஏற்பட்டிருக்கவேண்டும்..
“கல்யாணத்துக்கு இருந்துட்டுப் போலாமே...” என்றான்.
“இல்ல தம்பி. ஜானவாசம் வரை கூட இருக்கமுடியாத நிலை. வேற ஒரு இடம் அவசரமாப் போகணும்...!”
சொல்லிவிட்டு உடனே கிளம்பினார் முதலியார்.
இரவே வீடு வந்து சேர்ந்தவரைக் கண்டதும், ‘நாளைக்குத்தானே கல்யாணம், ஏன் ராத்திரியே வந்துட்டார்..?”
மனைவி, மகன், மருமகள், பேரன் பேத்திகள் எல்லாரும்
கேட்க நினைத்தாலும் யாரும்
கேட்கவில்லை.
மறுநாள் ஒரு பத்திரிகை வர அதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு “புதுக்கோட்டைல வர்ற புதன் கிழமைக் கல்யாணம்.” என்று பத்திரிகையில்
உள்ள விவரங்களைக் கூறினாள்
அவர் மனைவி பார்வதி.
“யாரா இருந்தா என்ன? நம்மை மதிச்சி கல்யாணப் பத்திரிகை அனுப்பியிருக்காங்க...”
“அப்பா... புதுக்கோட்டை போகப் போறாராம்மா...?”
மகன் வந்து நின்றான்.
“இந்தப் பத்திரிகைல உள்ள விலாசத்துக்கு 101 ரூபாய் மணியார்டர் பண்ணிடு…!” என்றார் முதலியார்.
மனைவி, மகன், மருமகள் உட்பட குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும்
இந்த திடீர் மாற்றத்திற்கான
காரணம் புரியவில்லை
காரணம் புரியாவிட்டாலும்
அவர் மாற்றம் சந்தோஷமாக இருந்தது அனைவருக்கும்.
అఅఅఅఅఅఅఅఅ
Comments
Post a Comment