16. அவரால் முடிந்தது (ஒரு பக்கக் கதை)
16. அவரால் முடிந்தது
கதிர்ஸ் - மார்ச் (16-31-2021)
ஜூனியர் தேஜ்
மண்டைப் பிளக்கும் வெய்யில் .
‘ரேஷன்’ கடையில் விலையில்லா அரிசி வாங்க 80 வயது நாராயணசாமி வரிசையின் கடைசியில் நின்றார்.
தும்பையாய் வெளுத்தத் தலை. பஞ்சடைந்தக் கண்கள். பழுப்பேறிய வேட்டி. கசங்கியச் சட்டை. ஒரு கை, ஊன்றுகோலைத் தாங்கியிருக்க, மறு கையில் ரெக்ஸின் பை. வறுமையான வயோதிகத்தின் நடுக்கம் கைகளில் தெரிந்தது.
‘முன்னால் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்...?’
என்பதைக் கண்களால் அளந்தார்.
தனக்கு பின்னால் திடீரென்று முனகல் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தார். இலவச அரிசிக்காக வந்து நின்ற நிறைமாத கர்ப்பிணி.
பேருந்தில் வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இடம் கொடுத்து உதவிய தன் பால்ய காலத்தை நாராயணசாமியின் மனது அசை போட்டது.
'ஏன் இப்படிப் பொது ஜனங்கள் சுயநலக்காரர்களாகி விட்டார்கள்...?' கேள்வி எழுந்தது அவருக்குள்.
'வீட்டில் உள்ளவர்களே முதியவர்களையும் கற்பிணிகளையும் ஈவு-இரக்கமின்றிப் பொதுவெளிக்கு அனுப்பும் போது, பொது ஜனங்களை எப்படி குறை சொல்ல முடியும்?…' தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டார்.
'மாறணும் எல்லாம் மாறணும்...!' ஆக்ரோஷமாகச் சொல்லிக்கொண்டார்.
"நீ என் இடத்துக்கு வாம்மா...!” என்ற நாராயணசாமி, இப்போது அந்த கர்ப்பிணியின் பின்னால் கியூவில் நின்றார்.
ஏதோ அவரால் முடிந்தது.
Comments
Post a Comment