17. ரயில் சினேகம் (ஒரு பக்கக் கதை)
17. ரயில் ஸ்நேகம்
(கதிர்ஸ் – ஆகஸ்ட் – 16 – 31 –
2021)
-ஜூனியர் தேஜ்
ரயிலில் கூட்டம் அதிகமில்லை.
அந்த கூபேயில் இரண்டு தம்பதிகள் மட்டுமே இருந்தனர்.
“நீங்களும் ராமேஸ்வரம்தானோ...?”
முகக் கவசத்தை இறக்கிவிட்டுக்கொண்டு கேட்டார் எதிர் சீட்டுக்காரர்.
“ம்” என்றான் அருள்.
“பரிகாரமோ...?”
“ம்...!”
“குழந்தை பாக்கியத்துக்காக ராமேஸ்வரம் கோவிலில் பரிகாரம் செய்யப் போறீங்களாக்கும்...?”
‘எப்படி இவ்வளவு சரியாகச் சொல்கிறார்…?’
அருள் ஆச்சரியப்பட்டான்.
“திருவல்லிக்கேணி சுந்தரம் ஜோசியர் சொன்ன பரிகாரம்தானே...?; தை அமாவாசைல தவறாம கடலாடுங்க. நேரம் வரும்போது ஆண்டவன் கண் திறப்பான். அதுவரைக்கும் காத்துக்கிடக்கறது ஒண்ணுதான் வழி...!” என்றார் எதிர்சீட்டுக்காரர்.
“கல்யாணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தால் உங்களுக்குத் தெரியும் அந்த வலியும் வேதனையும்…!”
அருள் அவஸ்தையுடன் சொன்னான்.
“நாங்க ஈரைந்து வருடங்களாகக் காத்திருக்கோம் சார்...!”
எதிர்ச் சீட்டுக்காரருடன் அவர் மனைவியும் கோரஸாகச் சேர்ந்து விரக்தியாகச் சிரித்தபடிச் சொன்னார்கள்.
அருள் உள்ளுக்குள் கலங்கினான்.
అఅఅఅఅఅఅఅఅ
Comments
Post a Comment