33. புத்தாண்டுப் பரிசு (சிறுகதை)
33. புத்தாண்டுப் பரிசு
-ஜூனியர் தேஜ்
(01.01.2022) மக்கள் குரல் நாளிதழ்
ஜோசப், க்ளாரா தம்பதியரின் மாலை நேரக் நாற்சந்திக்
கடை; மாலை நாலு மணிக்குத் துவங்கும்.
மிகச் சரியாக மூணரை மணிக்குப்
பற்ற வைக்கும் அடுப்பு சரியாக ஏழு மணிக்கு அணைந்து விடும்.
மெது வடை, மசால் வடை, போண்டா,
மிளகாய் பஜ்ஜி நான்கே ஐட்டங்கள்தான்.
நாற்சந்தியே இவர்கள் தயாரிப்பில்
கமகமகம வென மணக்கும். அவர்களுக்கென நிரந்தரக் வாடிக்கையாளர்கள் உண்டு. நாற்சந்தி
என்பதால் தற்காலிகக் கஸ்டமர்களும் நிறையவே வருவார்கள்.
புரச இலைத் தொன்னையில் பலகாரத்துடன்,
தேங்காய் சட்னி, பொதினா சட்னி, கொஸ்து என்று அளவாய் வைத்து தாயன்போடு தருவாள் க்ளாரா.
ருசித்துச் சாப்பிட்டதும், தொகையோடு
நன்றியையும் செலுத்தி விட்டுப் செல்வார்கள் வாடிக்கையாளர்கள்.
இதெல்லாம் பழைய கதை.
கொரோனா அரக்கனின் பிரவேசத்திற்கு
முன் நடந்த கதை.
கொரோனாவிற்கு முதல் பலியே இந்த
நாற்சந்திக் கடைதான்.
வேறு தொழில் தெரியாத இவர்கள்
வீட்டிலேயே வைத்து ஓரிரு நாட்கள் தங்கள் தொழிலைச் செய்து பார்த்தார்கள். சரியாக
வரவில்லை.
விளைவு; வாழ்வாதாரம்
இழந்தவர்களுக்கே உரிய வருமான மின்மை, பஞ்சம், பசி, பட்டினி. கொடிது கொடிது வறுமை கொடிது.
அவ்வப்போது சில சமையல் கோஷ்டியினர்
இவர்களை வேலைக்கு அழைத்துச் செல்வார்கள். கொரோனாவால்
பல கல்யாணங்கள் பேருக்குதான் நடப்பதால் இவர்களுக்கு வரும் வருமானம் போதுமானதாக
இல்லை.
ஜோசப், க்ளாரா தம்பதியருக்கு இரண்டு
ஆண் குழந்தைகள். மூத்தவன் விஜய் எட்டாம் வகுப்பு படிக்கிறான். இளையவன் விமல் படிப்பது
ஆறாம் வகுப்பு.
அவர்கள் படிப்பது அரசு நடுநிலைப் பள்ளியில்.
கொரோனாவை முன்னிட்டு பள்ளிகள் எல்லாம் லாக்
டவுன் ஆக இருந்தபோது, , குழந்தைகளின் மதிய உணவுச் செலவை ஈடு செய்வதற்காக, மாதம் ஒரு
முறை பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மூலம் அரசாங்கம் தரும் அரிசி, பருப்பு, முட்டை...
போன்றவை குடும்பதின் வறுமையையும் வயிற்றையும் ஓரளவு நிறைவு செய்தது.
பள்ளிகள் முறையாக இயங்கத் துவங்கி விட்டதால்
குடும்பமே பிஸி ஆயிற்று. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பீட்டரும் கிளாராவும்
இந்த வேலைதான் என்று இல்லை, எந்த வேலை கிடைத்தாலும் செய்தார்கள்.
‘குழந்தைகளுக்குப் புத்தாண்டுக்கு இந்த வருடம்
ட்ரஸ் வாங்க முடியாமல் போய்விடுமோ?’ என்று வருந்திக்
கொண்டிருந்த நேரத்தில்தான் தேவாலயத்திலிருந்து புத்தாண்டுக்
கொண்டாட்டங் களுக்காக அலங்கார வேலை செய்யும் கலைஞர்களுக்காக சமையல் வேலைக்கு அழைப்பு
வந்தது அவர்களுக்கு.
மறுநாள் முதல் கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு
விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியில்
திளைத்தார்கள்.
“கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு எனக்கு குர்தாடா..!” என்றான் தாமஸ்
“...எனக்கு பேண்ட்..!. ஷர்ட்…!” என்றான் பீட்டர்.
“புத்தாண்டுக்கு எனக்கு ரெண்டு டிரஸ்டா..எங்க
அப்பாம்மா ஒண்ணு, மாமா மாமி ஒண்ணு...!” என்றாள் மேரி
“........................................”
நிறைய நிறைய பேசினார்கள். அவசர அவசரமாய் தங்கள்
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
பேச்சு, பாட்டு, கூத்து என நாள் ஓடியது.
அன்று வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள், கிறிஸ்துமஸ்
விடுமுறையை எப்படி ஆரோக்கியமாகக் கொண்டாடவேண்டும் என்றும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்
கொண்டாட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மாணவர்களுக்கு
போதித்தார்கள்.
கொரோனா இன்னம் முற்றிலும் நம்மை விட்டு நீங்காத
நிலையில் ஓமிக்ரான் எனும் புது வைரஸ் வரவு பற்றியும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அவசியம்
பற்றியும் அன்று முழுவதும் ஆசிரியர்களின் பேச்சாக இருந்தது.
பள்ளிப் பணியாளர் வகுப்பிற்கு சுற்றறிக்கை
எடுத்து வந்தார்.
“பள்ளி திறந்த நாளில் இரண்டு செட் விலையில்லாச்
சீருடை வழங்கப்பட்டது. இன்று இன்னும் இரண்டு செட் வழங்கப் படுகிறது. அதை அனைத்து மாணவர்களும்
பெற்றுச் செல்லவும்.” என்ற தலைமை ஆசிரியரின்
சுற்றறிக்கைதான் அது.
மாணவர்களை வரிசைப்படுத்தி அழைத்துச் சென்றார்
வகுப்பாசிரியர்.
பேரேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு அவர்களுக்குத்
தரவேண்டியதைக் கொடுத்து அனுப்பினார் விலையில்லாப் பொருட்கள் வழங்கும் பொறுப்பாசிரியர்
கண்ணன்.
தேவாலயத்தில் வருடா வருடம் செய்யப்படும் பிரம்மாண்டமான
வண்ண வண்ண அலங்காரக் கூடங்களும், பல்வேறு பைபிள் காட்சிகளும் தொடங்கிவிட்டன. அனைத்துக்
கலைஞர்களுக்கும் பசியாற்ற மூன்று நாட்கள் சமையல் வேலை செய்ததில் நிறைவான சம்பளம் கிடைத்தது
ஜோசப் க்ளாரா தம்பதியர்க்கு .
சம்பளத்தோடு புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக
செய்யப்பட்ட இனிப்பு காரங்களும் பார்சல் கொடுத்து அனுப்பினார்கள்.
வீட்டுக்குத் திரும்பும்போது மகிழ்ச்சியாக
உரையாடிக் கொண்டே வந்தனர்.
“என்னங்க…!”
“சொல்லு க்ளாரா..”
“இன்னைக்கு சிரமம் பார்க்காம கடைவீதிக்குப்
பிள்ளைகளை அழைச்சிக்கிட்டுப் போயிடணும்ங்க..”
“ஷாப்பிங்தானே போயிருவோம்..!
“காசு பணம் பார்க்காம பசங்களுக்கு பிடிச்சா
மாதிரி டிரஸ் வாங்கிடுவோம்…சரிதானே…?”
“ம்…”
“விஜய்... விமல்... சீக்கிரம் புறப்படுங்க.
கடை வீதிக்குப் போகணும்..”
“எதுக்கும்மா?”
“புத்தாண்டுக்கு ..உங்களுக்கு ட்ரஸ் எடுக்கவேணாமா...?”
“வரோம்.! ஆனால், டிரஸ் எடுக்கப் போறது எங்களுக்கு
இல்லை.. உங்க ரெண்டு பேருக்கும்தான்..” என்றனர் குழந்தைகள் ஒருமித்த குரலில்.
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.! புத்தாண்டும்
அதுவுமா வீட்ல குழந்தைகள்தான் புதுசு உடுத்திக்கணும்தானே..” என்ற அம்மாவை அதற்கு மேல்
பேச விடவில்லை பெரியவன் விஜய்.
“அதுக்குதான்மா நாங்களும் சொல்றோம். உங்களுக்குதான்
புது டிரஸ் வாங்கணும். எங்களுக்கு இருக்கு..!” என்றான் விஜய்.
“சும்மா இல்ல..! ரெண்டு செட் ட்ரஸ் இருக்கும்மா…!” என்றான் விமல்.
சொல்லிக்
கொண்டே தங்கள் புத்தகப் பையிலிருந்து பள்ளியில் கொடுத்த புத்தம் புது விலையில்லாச்
சீருடையை கொண்டு வந்து அசத்தினர் அந்தச் சுட்டிக் குழந்தைகள்.
குடும்பப் பொறுப்பும்,பெற்றோர்களின் மேல்
பாசமும் நேசமும், தாய் தந்தைக்குப் புத்தாண்டு பரிசு கொடுக்க வேண்டும் என்ற ஆசையும்,
அறிவும் உள்ள குழதைகளைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்தனர் பெற்றோர்கள்.
**********************
Comments
Post a Comment