41. பிஞ்சு நெஞ்சில் சேவை விதைப்போம்! (மினி கட்டுரை)
41. பிஞ்சு நெஞ்சில் சேவை விதைப்போம்!
-ஜூனியர் தேஜ்
Published தினமலர் – வாரமலர்
28-11-2021
பிஞ்சு நெஞ்சில் சேவை விதைப்போம்!
சீர்காழியில் உள்ள, சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின்,
125வது ஆண்டு துவக்க விழா, சமீபத்தில் நடைபெற்றது. உலக நுாலக தந்தை அரங்கநாதன் பயின்ற பள்ளி அது.
அங்கு படித்த பழைய மாணவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று கூடி, தற்போது படிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில், 75
ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 65
அங்குல,
எல்.இ.டி., 'டிவி'யை வாங்கி, விழாவில் பரிசாக அளித்தனர்.
பழைய மாணவர்களில் ஒரு சிலர், தங்கள் குழந்தைகளையும் விழாவிற்கு அழைத்து வந்திருந்தனர். அந்த குழந்தைகள் ஒன்று கூடி பேசியபோது, 'பெரியவனான பிறகு நானும், எங்க அப்பாவை போல, நான் படிக்கிற ஸ்கூலுக்கு நிறைய்ய வாங்கிக் கொடுப்பேன்...'
என்றது, ஒரு குழந்தை.'எங்க ஸ்கூல்ல, சைக்கிளை வெயிலில் தான் நிறுத்தறோம். படிச்சு பெரியாளானதும், எங்க அம்மாவை போல, நான் படிச்ச ஸ்கூலுக்கு, 'சைக்கிள் ஷெட்' கட்ட முயற்சி பண்ணுவேன்...'
என்றான், ஒரு பையன்.
'எங்க அப்பா - அம்மாவை போல...'
என்று சொல்லும்போது, குழந்தைகளுக்கு சேவை மனப்பான்மை உருவாவதோடு, பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்படுகிறது.
தாங்கள் படித்த பள்ளிக்கோ, பிறந்த மண்ணுக்கோ, கோவில் குளங்களுக்கோ, முதியோர் இல்லத்திற்கோ, ஏதாவது ஒரு வகையில் சேவை செய்யப் போகும்போது, தங்கள் குழந்தைகளையும் அழைத்து சென்றால், அந்த பிஞ்சு நெஞ்சங்களிலும் சேவை மனப்பான்மையை வித்திடலாமே!
- எ. வரதராஜன், சீர்காழி.
Comments
Post a Comment