43. அயர்ன் (சிறுகதை)
43. அயர்ன் -ஜூனியர் தேஜ்
24.01.2022 மக்கள் குரல்
முதல் போணி அய்யப்பனைத்
தேடி வந்துவிட்டது.
காதல் வலையில் விழுந்துவிட்ட அய்யப்பனுக்கு ‘காதலியை எப்படி இம்ப்ரஸ் செய்யலாம்?’ என்பதொன்றே மதியாய் இருந்தது.
நான்கு சாலைகள் பிரியும், நான்கு ‘ஃப்ளை
கார்னர்களின்’ பின் ஓங்கி
உயர்ந்து நிற்கும் நான்கு ஃப்ளாட்வாசிகளும் அவனுடைய கஸ்டமர்கள்தான்.
தொழில் சுத்தத்தோடு, கை சுத்தமும்
இருக்கும் அவனிடன் எல்லாருமே பரிவோடும் பாசத்தோடுதான் பழகுவார்கள். எல்லோருக்கும்
அவனைப் பிடிக்கும்.
‘...அ...ய்.....யோ!.. என் மேல அவ்ளோ ஆசையா? இதை என்
வாழ்நாள்ல மறக்கவே முடியாது !...’ எனக்
கண்விரித்து மாய்ந்து மாய்ந்து அவன் காதலி அன்னம்
உருகும் அளவுக்குச் செய்ய வேண்டும்...என்ன செய்வது...?’ என்று யோசித்துக் கொண்டே அயர்ன் வண்டியின் கீழ்பாகத்தின்
குடோன் திறந்து கரி, கெரசின், தீப்பெட்டி, தேங்காய் நார்... இத்யாதிகளை எடுத்து
ஆயத்த வேலையில் இறங்கினான்.
அய்யப்பனுக்கு
வயது 30.
சென்ற வெள்ளிக் கிழமை, இன்றைக்கு
எட்டு நாட்களுக்கு முன், கிருஷ்ணாஃபிளாட் ஏ 3 ப்ளாக்கில், 301, இன்ஜினியர் வீட்டில்
புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள் அன்னம், அவர்கள் வீட்டுத் துணி மூட்டையை முதன்
முதலாய் இஸ்திரி போடக் கொண்டு வந்து கொடுத்தாள் அவள். ஷேக்ஸ்பியரின் கதாநாயகனைப்
போல அவளின் முதல் பார்வையிலேயே கிறங்கிக் காதல் வயப்பட்டான் அய்யப்பன்.
“என் பேரு அன்னம்..!”. என்றாள் அவன் கேட்காமலே...
“நல்ல
பேரு..!”
“இஞ்சினியர் வீட்ல உன்னைப் பத்தி
ஓஹோனு பேசிக்கிறாங்க......?”
‘புகழ்ச்சியில் மயங்காதோர்
உண்டோ...?’ மயங்கினான்.
கடந்த ஏழு நாட்களில் வரும்பொழுதும்
போகும்பொழுதும் பேசிப் பேசி பழகப் பழக நெருக்கம் அதிகமானது. தக்க தருணத்தில் காதலையும்
பரஸ்பரம் பகிர்ந்துகொண்டாயிற்று.
அவளுக்குக் காதல் பரிசு வாங்கித்
தந்து அசத்த வேண்டும் என்று ஆசை வந்தது. ‘ஃபிளாட்டில் யாரிடம் கடன் வாங்கலாம்..?’ என்ற யோசனை வந்தது.
ஒன்பதாம் வகுப்பு
படித்தபோது, ஒரு விபத்தில் தந்தையை இழந்தான் அய்யப்பன்.
அப்பாவின் பாரத்தை தன் தோளில்
ஏற்றிக் கொண்டான்.
அய்யப்பனின் தந்தை பேக்கரி,
ஸ்வீட் ஸ்டால்கள், கேட்டரிங் காண்ட்ராக்டர்கள்...
எனப் பல இடங்களிலிருந்து ஆர்டர் எடுத்து வருவார் .
ஆர்டருக்கு ஸ்வீட், காரம்
தயாரித்துத் தருவாள் அம்மா.
அப்பா முறையாகப் பாக் செய்து தன்
மூன்று சக்கர சைக்கிளில் டெலிவரி கொடுத்து வருவார்.
அப்பா இருந்தபோது கிடைத்த
ஆர்டர்ளில் பாதிதான் இப்போது கிடைத்தது அவர்களுக்கு.
ஆர்டர்கள் இல்லாத நாட்களில் அதே
தெருவில் இருந்த ‘திருமலை சலவையகத்தில்’ அயர்ன் செய்யும் வேலையை செய்து நியாயமாகச் சம்பாதித்துக்
குடும்பச் செலவை ஈடு கட்டினான் அய்யப்பன்.
அம்மா
மாரடைப்பால் திடீரென இறந்த பின், மூன்று சக்கர சைக்கிள், தொழில் கருவிகளான கடாய்,
ஜார்னி, துடுப்புகள், காஸ் அடுப்புகள் எல்லாவற்றையும் நியாயமான விலைக்கு ஒரு
ஸ்வீட் ஸ்டால் முதலாளியிடம் விற்றுவிட்டு, அம்மா வாழ்நாள் முழுவதும் பராமரித்துப்
பயன்படுத்திய கல்லாப் பெட்டியில் பணத்தைப் போட்டு எடுத்துக்காண்டு மிட்டாய்க் கடை
சேட்டுடன் பட்டணம் சேர்ந்தான்.
“ஃப்ளாட்டில் வாட்ச் மேன் வேலை
செய்கிறாயா?” என்று கேட்டார் சேட்டு.
உழைக்க வேண்டிய வயதில் உட்காரப் பிடிக்கவில்லை
அய்யப்பனுக்கு. அவன் நோக்கமறிந்த சேட்டு நாலு சக்கர தள்ளுவண்டியும் இஸ்திரிப் பெட்டியும்
வாங்கித் தந்து ஃப்ளாட்களில் அவனை அறிமுகப் படுத்தினார்.
பகலில் அகலமான ஃப்ளை பிளாட்பாரத்தில் நாகலிங்க
மரத்தடியில் அயர்ன் செய்வதும், இரவில் கார் பார்க்கிங்கில் அயர்ன் வண்டியைப் போட்டு
விட்டு அவுட் ஹவுஸில் தங்கியும் அவன் காலம் கழிந்துகொண்டிருந்தது.
20வயதில் இந்தத் தொழிலுக்கு
வந்த அய்யப்பனுக்கு, பத்து வருடங்கள் பத்து நிமிடங்களாக ஓடிவிட்டன.
வழக்கம்போல தணல் தயாரிப்புக்காக ‘ப’
வடிவில் வைக்கப் பட்டிருந்த மூன்று செங்கல்களுக்கு இடையில் பூப்போல பிய்த்த
தேங்காய் நார்களை அடைத்துப் பற்றவைத்தான். ‘டப்.. டப்...’என சின்னச் சத்தத்துடன் வெடித்து நாலா பக்கமும் தீப்பொறி சிதறிப்
பற்றியபோது பிளாஸ்டிக் விசிறியால் மிதமாய் விசிறி அதன் மேல் ஒரு பிடி கரியை
லாகவமாய் வைத்தான். எரிதல் நின்று நரைமேகமாய் கெட்டிப் புகை கிளம்பியது.
தொடர்ந்து விசிற புகைக்கு நடுவே
ஒரு ஜோதிபோல எகிறிய எரி தழலை மேலும் மேலும் விசிறி விசிறி கரியைக் கனல்கட்டியாக்கி,
இரும்புச் சாமணத்தால் பழமாய் ஒளிரும் தீக்கட்டிகளைக் கிள்ளி எடுத்து இஸ்திரிப்
பெட்டிக்குள் வைத்தான்.
கொக்கி போட்டு லாக் செய்து
பெட்டியை வண்டியின் மேல் அதற்கென அமைத்த முக்கோண இரும்புக் கட்டமைப்பின்மீது வைத்துவிட்டு
மீதமிருந்த நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைத்தான்.
மூடியின் தாழ் கொக்கியை ஒரு முறை
அழுத்திப் பொருத்தி விட்டு, அயர்ன் வண்டியைவிட்டு எட்ட வந்து, பெட்டியை
முகத்துக்கு நேரே தூக்கி கீழ் விளிம்பில் வரிசையாய் இருக்கும் காற்றுத்
துவாரங்களில் இரண்டு மூன்று முறை ‘குஃப்...குஃப்...’பென இரு புறமும் ஊதி வெண் சாம்பலை விலக்கினான்.
வண்டியில் போடப்பட்டிருந்த
ஜமக்காளத் துணியில் நான்கைந்து முறை தேய்த்துவிட்டு பெட்டியை அதன் பீடத்தில் வைத்தான்.
கூப்பிடு தூரத்தில் வந்து கொண்டிருந்தாள் தன் ஆருயிர் காதலி அன்னம். அவளைப் பார்த்தான்.
ஆசை தீரப் அவளையே பார்த்தபடி இருந்தான்.
முதல் போனியாக வந்த தொழிலதிபரின்
பையில் மேலாக இருந்த ஜீன்ஸ் சட்டையை உருவி எடுத்தான். சட்டையின் காலரைப் பிடித்தபடி
‘பட்’ என உதறினான். தோள்பட்டை பிடித்து முதுகுப்புறத்தை ஜமுக்காளத்தின்மேல்
பரத்திப்போட்டான்.
பட்டன்களை மாட்டியபின்,
குவித்த விரல்களை தண்ணீர் பாத்திரத்தில் நனைத்து எடுத்து கட்டை விரலால் நான்கு விரல்களை
பிடித்து ‘சடக்…சடக்...’ என ஆங்காங்கே நீர் தெளித்து சுண்டுவிரல் பகுதியால் நீவினான்.
கை, காலர் என அனைத்திலும்
பெரும்படியான சுருக்கத்தை உள்ளங்கையால் தேய்த்துச் சீராக்கிய பின், உள் பக்கமாய் கை
விட்டு சட்டைப் பாக்கெட்டை நீவியபோது அவன் கைகளில் அது தட்டுப்பட, ஒரு கணம் தடுமாறியது
மனம். சட்டையை மீண்டும் சுருட்டி பையிலேயே திணித்தான். பெற்ற
தாயின் வாழ்வில் ஒரு அத்தியாயம் ஒரு கணம் அவன் முன் நிழலாடியது.
அம்மா
அகிலாண்டத்துக்கு அன்று இடைவிடாத வேலை. அது ஒரு பெரிய ஆர்டர். மாலை 5 மணிக்கு ‘டாண்...!’ என்று ஆர்டர் எடுக்க வந்து விடுவார்கள். சாப்பிட, ஏன் ஒரு
டம்ளர் தண்ணீர் எடுத்துக் குடிக்கக் கூட நேரமில்லை அவளுக்கு. பசி பசி பசி...
அகஸ்மாத்தாய் அங்கு வந்த
அய்யப்பன், பழுத்த இரும்புக் கரண்டியால் தன் நாக்கில் சூடு போட்டுக் கொள்ளும்
அம்மாவைக் கண்டு பதறினான் “அம்மா...!அம்மா..!
என்று அலறியபடி இரும்புக் கரண்டியைப் பிடுங்கி எறிந்தான்.
‘வயித்துப் பசிக்காக ஒரு விள்ளல்
ஜாக்கரியும், ஒரு தயிர் வடையும் எடுத்துத் தின்னா என்ன?’ ன்னு மனசுல தோணிச்சு... அடுத்தவங்க காசுல திங்க ஆசைப்பட்ட நாக்கை
வேறு என்ன செய்ய?. என்றாளே அம்மா...?”
அய்யப்பன் தன் வலதுகைப் புறங்கையை ஜமக்காளத்தின் மேல் அழுந்த விரித்தபடி வாட்டமாய்
வைத்தான். இடது கையால் இஸ்திரிப் பெட்டியை எடுத்து உள்ளங்கையில் தேய்த்தான். தோல் பொசுங்கி
நாற்றம் வந்தது.
“என்னங்க…?” என்று அலறிக்கொண்டே ஓடிவந்த அன்னம் இஸ்திரிப்பெட்டியை
பிடுங்கி அதன் முக்கோண மனைமேல் வைத்தாள்…
மயிலிரகால் மருந்து எண்ணையை கருகிய உள்ளங்கையில் கரிசனத்துடன் தடவிக் கொண்டிருந்தாள்
அன்னம். ‘அயர்ன் செய்வதற்காக எடுத்த தொழிலதிபரின் ஜீன்ஸ் சட்டையில் 2000 ரூபாய் நோட்டு
இருந்ததையும், ‘அன்னத்திற்குப் பரிசு வாங்க அதை எடுத்துக்கொண்டால் என்ன?’ என்று அவன் மனம் நினைத்ததையும், திருட
நினைத்த கைக்கு தண்டணையாய் கையை பொசுக்கிக் கொண்டதையும் அவளிடம் சொல்வதா வேண்டாமா?’ என்று குழம்பியபடியே தூங்கிப்போனான் அய்யப்பன்.
Comments
Post a Comment