44 .காதல் (பிப் 7-14) வாரம் (கட்டுரை)


44 .காதல் (பிப் 7-14) வாரம் (கட்டுரை)

                                     -ஜூனியர் தேஜ் 

பிப்ரவரி 1-15 2022 கதிர்ஸ்

      காலைக் கதிரவன்,கடற்கறையில் ஓருடலாய் நின்ற காதல் ஜோடிகளின் மேல் பட்டு; நீளமான நிழல்களை மேற்கே சாய்த்த காட்சி! மேலைநாடுகளை சுட்டிக்காட்டுவதுபோல இருந்தது.

      ஆம்..! காதலர் தினத்தின் கண்கொள்ளாக் காட்சிதான் மேலே கண்டது. காதலர் தினமென்பது தந்தையர் தினம் போல, அன்னையர் தினம் போல, ஆசிரியர் தினம் போல ஒரே ஒரு நாள் தினமல்ல;

கொடியேற்றத்துடன் தொடங்கி,

9 நாட்கள் நவராத்திரி,

10 நாட்கள் ப்ரும்மோத்ஸவம்

10 நாள் பேராலயத் திருவிழா

14 நாள் கந்தூரியைப் போல

இந்த விழா பிப்ரவரி 7-ம் நாள் (ரோஸ் டே) எனும் ரோஜாப்பூ கொடுத்து காதலை கண்களால் வெளிப்படுத்துவதில் தொடங்கி........

பிப்ரவரி-8 ‘ப்ரபோஸ் டே அன்று காதலை உச்சரித்து,

பிப்ரவரி-9 ‘சாக்லெட் டே யில் இனிப்பைப் பகிர்ந்து

பிப்ரவரி-10 ல் ‘கிஃப் டே டெடி பியர் என்ற மிருதுவான பொம்மையைப் பரிசளித்து

பிப்ரவரி -11 ‘ஓத் டேயில் கடைசி வரை ஒண்றாய் வாழ்வதாக ஒருவருக்காருவர் சத்தியம் செய்துகொண்டு.

பிப்ரவரி-12 ம் நாளான ‘ஹக் டே அன்று ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி

பிப்ரவரி- 13 ம் நாள் “கிஸ் டேஎன்ற முத்தக் கவிஞர் முத்து ஆனந்த் அவர்களின் ஃபேவரேட் நாளாக அமைகிறது.

பிப்ரவரி 14-ம் நாள் நிறைவு விழாவில் ‘பிங்க் நிற உடையுடன் காதலை பரஸ்பரம் ஏற்றுக்கொள்வார்கள்.

மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எட்டு நாள் தொடர் விழா, அல்லது உற்சவம்தான் ‘வாலன்டைன்ஸ் டே என்ற காதலர் தினம்.

திருமணத்தால் ஆண்களின் வீரம் குறைந்துவிடும் எனத் திருமணத்தைத் தடை செய்த ரோமப் பேரரசின் மன்னர் ‘இரண்டாம் கிளாடியுஸ்ன் கட்டளையை மீறி காதல் ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார் ‘வாலன்டைன் என்ற பாதிரியார்.

அரசு உத்தரவை மீறியதால் அந்த பகுத்தறிவுவாதிக்கு கிடைத்தது சிறைவாசம், விதிக்கப்பட்டது மரணதண்டனை.

காதலுக்குக் கண்ணில்லை என்பது முதன் முதலில் இங்குதான் நிரூபிக்கப் பட்டதோ...! பார்வையிழந்த சிறைக்காவலரின் மகள் ‘அஸ்டோரியஸ்க்கும் மரணதண்டனைக்கைதி ‘வாலன்டைன்க்கும்  காதல் முகிழ்ந்து கனிகிறது.

காதலுக்க எந்தக் காலத்திலும் எதிர்ப்புதான் போலும்.

மகளின் காதல் களியாட்டம் அறித்த சிறைக்காவலர் தன் அவளை வீட்டில் சிறைப்படுத்தினான்.

வாலன்டைன், அஸ்டோரியசுக்கு வாழ்த்து அட்டையில் காதல் கடிதம் அனுப்புகிறார். இதுதான் முதல் காதல் வாழ்த்து அட்டை என்றும் நம்பப்படுகிறது.

தன் மகளுக்கே மடல் விடு தூதா.. சிறைக்காவலர் அதிர்ந்தார், ஆத்திரப்பட்டார்.

கல்லால் அடித்துச் சித்ரவதை செய்தபோதும் காதல் வசனம் பேசிய வாலன்டைனின் தலையைத் துண்டித்து வீசினார்.

அந்த நாள், கிபி 270-ம் வருடம், பிப்ரவரி 14-ம் நாள்.

அந்தச் அஞ்சா நெஞ்சனும், சீர்திருந்தவாதியும் பகுத்தறிவு வாதியுமான வாலன்டைனின் நினைவு நாளைத்தான் உலகமே வாலன்டைன்ஸ் டே எனக் கொண்டாடுகிறது.

போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளை ‘பாய்ஃப்ரெண்ட்-கேர்ள்ஃப்ரெண்ட் தினம் ((நமோரோடோஸ் டயாடாஸ்) என்கிறார்கள்.

‘அனைத்து இதயங்களின் தினம்என்கிறது ஸ்வீடன் நாடு.

‘செயின்ட் வேலண்டைன் டே எனப் போற்றுகிறது ஸ்பெயின்.

பின்லாந்து நாட்டில் சற்றே வித்தியாசமாக ‘நண்பர்கள் தினம் (ஸ்டேவான்பாபியா) என்று கொண்டாடுகின்றனர். நண்பர்கள் ஒன்று கூடும் நாளாக இதைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

முதல் கலவி நூல் வெளியிட்ட வாத்ஸ்யாயனர்,

காதல், கலவியின் இன்றியமையாமையை வழிபாட்டுத் தலங்களில் சிலைகளாய் வடித்து வைத்த சிற்பிகள்.

சிருங்கார ரசத்தை அஷ்டபதியாகப் பாடிப் பரவசப்பட்டுப் பரவசப்படுத்திய ஜெயதேவர்.

உலக அதிசயங்களில் ஒன்றான காதல் சின்னத்தை எழுப்பிய ஷாஜகான்.

தன் காதலி மணியின் நினைவாக குஜராத்தில் காதல் நினைவுச் சின்னம் எழுப்பிய தாக்கேர் சாஹேப் சர் வாக்ஜி...

இப்படிப் பட்ட ஏராளமான காதல் வரலாறு உண்டு இந்தியாவில்...

குறிப்பாகத் தமிழகத்திலோ, காமன் கோட்டம் அமைத்து இந்திர விழா அல்லது காமன் விழா என்று காலம் காலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் மண்ணுக்கும், மனிதர்களுக்கும்

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி... என்ற பக்தி இலக்கியத்தின் காதல் கானங்கள் முதல்

காதலை மையப்படுத்தி எழுதிய அகத்திணைப் புலவர்கள்.

காதல் காதல் காதல்... காதல் போயின் சாதல்...என்று முழங்கிய முண்டாசுக் கவிஞன்.

காதலுக்கு வழி வகுத்து கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம் என்று முழங்கிய முண்டாசுக் கவிஞனின் தாசன்.

என பரந்து விரிந்து ‘காதல் என்பது பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்பதை தன் உயிருள்ள வரை ஸ்தாபித்துவிட்டுச் சென்ற எழுத்துச் சித்தர் பால குமாரன் ஈராக எண்ணற்றோரின் எண்ணங்களும் இங்கே ஏராளம் ஏராளம்.

மறத்தையும் காதல் அறத்தையும் காக்கும் முகத்தான், காளை அடக்கி, மடல் ஏறி காதலியை கைப்பிடிக்கும் தமிழன் காலம் காலமாக இங்கே உண்டு.

காதலர் தினம் என்பது தமிழகத்தைப் பொருத்தவரை ‘புதிய மொந்தையில் பழைய கள்என்றால் அது மிகையாகாது.

தமிழர்களின் காதலிலும், வீரத்திலும் ஒரு வைராக்யம் உண்டு ஒரு சீரிய ஒழுக்க வரையறைகள் உண்டு.

ஆனால் சிறுவர் சிறுமியரிடையே எழும் மனவெழுச்சியான ‘இனக்கவர்ச்சியை காதலெனக் கொண்டு சீரழியும் போக்கு இந்த மேற்கத்திய முறையான காதலர் தினத்தில் பல்கிக் பெருகுகிறது என்பதுதான் பயங்கரமான உண்மை.

குழந்தைகளுக்கு இனக் கவர்ச்சிக்கும், காதலுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவோம். தமிழ் மண்ணின் கண்ணியம் காத்து கொண்டாடுவோம் காதலர் தினம்.

****************************

 






Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்