45. பயிற்சிப் பட்டறை (சிறுகதை)

 45. பயிற்சிப் பட்டறை

                                -ஜூனியர் தேஜ்

       (04.02.2022) கல்கி

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் செயல்முறைகள் – ந.க.எண்... நாள் ... பொருள்... பார்வை... என முறைப்படி சுற்றறிக்கை தயாராகி ‘ஹார்டு காப்பி, டாக்டர் மணிவண்ணன் மேசைக்கு வந்து அவர் அங்கீகரித்ததும் , ‘சாஃப்ட் காபியில்

              ‘ஒப்பம்

 மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

என்பதை இணைத்து, சுற்றறிக்கையின் நகல் மாவட்ட ஆட்சியருக்கும், குழந்தைகள் பாதுகாப்புக் கவுன்சில் ஆணையருக்கும் பணிந்தனுப்பட்டது.

அடுத்தபடியாக, ரெவின்யூ, எஜுகேஷன், என் ஜி ஓ... இப்படிக் கலந்து கட்டி எல்லாத்துறையிலிருந்தும் முன் அனுபவம் மிக்க வாலண்டியர்ஸ் தேர்ந்தெடுக்கப் பட்டு ; மின்னஞ்சல் மூலம் சுற்றறிக்கை சென்றடைந்தது.

துப்புறவுப் பணியாளர் முதல் துணை அலுவலர் வரை அனைத்துக் களப் பணியாளர்களும் கூடிய செயல்வீரர்கள் கூட்டத்தில் நிகழ்சி ஏற்பாடுகளை துரித கதியில் முடுக்கி விட்டார் டாக்டர் மணிவண்ணன்.

வளாக முகப்பில்

‘குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு 

சிறப்புறை

பாதுகாப்பு அலுவலர் டாக்டர் மணிவண்ணன்

என்று வைக்கப்பட்ட பேனரில் சிரித்துக் கொண்டிருந்தார் மணிவண்ணன்.

       ஏனோ தெரியவில்லை 'குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு' என்ற வாசகம் மட்டும் சோகை வண்ணத்தில் தெளிவாகப் படிக்க முடியாத அளவுக்கு இருந்தது.

பட்டாம் பூச்சிகள் பாறை தூக்குவதா?

சுட்டிகளின் தலையில் சுள்ளிக் கட்டா?

கற்க வேண்டிய வயதில் கல் உடைப்பதா?

மழலைகள் மண் சுமப்பதா?

பிஞ்சுக் கரங்களில் கந்தக நஞ்சா?

இப்படியான விழிப்புணர்வு வாசகங்களை சின்னஞ்சிறியதாக பிரிண்ட் அவுட் எடுத்து ஆங்காங்கே ஒட்டியிருந்தார்கள்.

ரிஸப்ஷனில், பயிற்சிக்கு வந்தவர்களின் அழைப்புக் கடிதத்தை பார்த்த பிறகே கல்வியாளர்களும், கருத்தாளர்களும், சமூக சேவகர்களும்.. உள்ளே அனுமதிக்கப்பப்பட்டார்கள்.

சுற்றறிக்கையில் குறிப்பிட்ட ஷெட்யூல்படி, அழைப்பாளர்களுக்கு கேன்டீனில் சுடச்சுட காலைச் சிற்றுண்டி அளித்து அதன் பிறகே ‘கான்ஃபரன்ஸ்’  ஹாலுக்குள் அனுப்பினார்கள்.

அரங்கில் நுழையும் முன் சுற்றறிக்கையைப் பார்த்துப் பதிவு எண்ணை உறுதி செய்துகொண்டபின் , எண்ணிடப்பட்ட வட்ட வடிவமான பாட்ஜ் கொடுத்தார்கள்.

 பேட்ஜ் அணிந்து வந்தவர்கள் பேனா, லெட்டர் பேட், நான்கைந்து ஏ4 பேப்பர்கள் எல்லாம் வைத்த, இருபுறமும் திறப்புள்ள கோப்பை பெற்றுக்காண்டு உள்ளே சென்றனர்.

எண் வரிசைப்படி உத்தி பிரிக்கப்பட்டு, இருக்கையில் அமர்ந்ததும் அறிமுகமும் அரட்டையுமாக பொழுது போனது.

“ஹலோ... மைக் டெஸ்டிங்... என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து

 “இறைவணக்கம்… என்றார் ஒருவர்.

“டர்….ர்ர்ர்…. பர்….ர்…ர்….. என ஓசை எழ நாற்காலிகளை பின் நகர்த்தினார்கள். ஓசை அடங்கியதும் இறை வணக்கமும் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் ஸ்பீக்கரில் அளவாய், அழகாய் பிசிரின்றி ஒலித்து ஓய்ந்தது.

“டர்…டர்ர்ர்…. பர்… ப.ர்…..டர்…..என முன் புறம் இழுத்து க்கொண்டு அனைவரும் உட்காரவும், ஓசை அடங்கவும் காத்திருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் “குட் மார்னிங் எவ்ரிபடி என்று பட்டறையைத் துவங்கினார். 

அனைவருக்கும் வணக்கம் கூறிய தொகுப்பாளர் “முதல் நிகழ்ச்சியாக டாக்டர் மணிவண்ணன் அவர்கள் வரவேற்புறையும் அதைத் தொடர்ந்து சிறப்புறையும் நல்குவார் என்று அறிவித்துவிட்டு ‘கை மைக்கை ‘சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஒதுங்கி நின்றார்.

       கோட் சூட்டில் ஜொலித்த பட்டறைத் தலைவர் மணிவண்ணன் ‘ரோஸ்ட்ரம் முன் வந்து பாவனையாக தலை வணங்கினார். மைக் தட்டி டெஸ்ட் செய்தார். இரண்டு முறை தொண்டையைச் செருமிக்கொண்டு... அழைப்பிதழிலும் நேரிலும் இருக்கும் அனைத்துப் பெயர்களையும் அவர்களின் படிப்பு, பதவியோடு விளித்து நீளமான வரவேற்புறை நல்கினார்.  காலம் கருதி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளை வேலை வாங்கும் அவலம் பற்றியெல்லாம் ஓரிறு வார்த்தைளில் சிறப்புறையாற்றி. ‘கொஞ்சவேண்டிய பிஞ்சு கையில் நஞ்சு தர அஞ்சு என்று எதுகை மோனையில் பஞ்ச் வைத்து பலமான கை தட்டல் பெற்றார்.

சிறப்புரை முடிந்த கையோடு பட்டறையில் கலந்து கொண்டதற்கான, ட்டி ஏ(TA), டி ஏ (DA), சிட்டி அலவன்ஸ், ரெம்யூனரேஷன் எல்லாம் அளிக்கப்பட்டதை உறுதி  செய்ய நான்கு ஏ4 பிரிண்ட் அவுட்களில் கையொப்பம் பெற்றுக் கொண்டார்கள்.

கும்பல் கும்பலாக , மன்னிக்கவும்…, குழுக்குழுவாகப் பிரிந்து வெவ்வேறு அறைகளில் கூடிய பின் பட்டறை தொடங்கித் தொடர்ந்தது.

டீ…பிஸ்கட் வந்தது. செவிக்கு உணவு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்கள் அந்த அந்த வளாகம் வடலூர் நால்ரோட்டில் பிஸியாக இயங்கும் டீக்கடையை நினைவூட்டியது. ஆங்காங்கே பிஸ்கட் சுற்றிய காகிதங்களும், டீ கப்புகளும் தாறுமாறாய் சிதறிக் கிடக்க குப்பைத் தொட்டித் தூய்மையாக இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பின் ‘பேப்பர் பிரசென்டேஷன் செஷன்.

பேப்பர் சமர்ப்பிக்கும் ஒவ்வொருவர் கையிலும் சுமார் முக்கால் கிலோ எடையுள்ள பெரிய சைஸ் ‘மாட்யூல் இருந்தது.

நடு நடுவே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன.

அந்தப் ‘பாம்ப்லெட்டுகளில் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டவைகளை  ‘எதுக்கும் இருக்கட்டுமே ! என்று மடித்து வைத்துக்கொண்டார்கள். இரு புறங்களிலும் அச்சிடப்பட்டவை தரையில் மிதிபட்டன.

‘எவ்வளவு சிறப்பாகப் ப்ரசண்ட் செய்கிறார்கள்…! கூகுள் கொடுத்த வரம் ; எல்லாப் புகழும் கூகுளுக்கே…!

நிறைய விஷயங்கள்  புரியவில்லை. இருந்தாலும் புரிந்ததைப் போலப் போலியாக முறுவலிக்கும் முகங்கள்.

மதிய உணவு இடைவேளை.

பாயசம், வடை, அப்பளம் என கிராண்ட் டின்னர் உண்ட களைப்பில் கண் அசத்தியது.

‘குரூப் டிஸ்கஷன். தொடங்கியது.

எல்லோரும் கருத்து சொல்ல வேண்டும் என்றார் குழுத் தலைவர்.

காசா பணமா... கருத்துதானே... எல்லாரும் சொன்னார்கள்.

‘ரிச் செஷனாக அமைந்தது இது.  

காரணம், கருத்தரங்கில் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டதற்கான பணமுடிப்பும், சான்றிதழும் இந்த நேரத்தில்தான் விநியோகித்தார்கள்.

குழுவின் கருத்துருக்களை துருவி ஆராய்ந்து, குழுத் தலைவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை டில்லி தலைமையகத்துக்குப் போய் இந்திய மாணவர்களின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் என்பது ஐதீகம்.

     டை..டீ யோடு அடுத்த இடைவேளை.

அடுத்து நடக்கப்போவது ‘ப்ரெய்ன் ஸ்ட்ராமிங் செஷன் அல்லவா…!

ஒவ்வொரு கருத்தாளரின் கருத்தும் வித்தியாசமாக இருந்தன.

ஒவ்வொருவரின் கற்றல் கற்பித்தல் கோணமும் மிக மிக நேர்த்தியாகவே அமைந்தன.

மெத்தப் படித்தவர்கள் அல்லவா..? சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேசினார்கள்.

பேச்சு…!

கை தட்டல்…!

பேச்சு…! பேச்சு…!!பேச்சு…!!!

கைதட்டல்…!

       அடுத்து ‘ஃபீட் பாக் கேட்கப்பட்டது.

       “மிகவும் பயனுள்ள பட்டரை என அனைவருமே ஃபீட் பேக் கொடுத்தார்கள்.

       ‘லாக் புத்தகத்தில் பணிப்பட்டரை மிகச் சிறப்பாக, பயனுள்ள வகையில் அமைந்ததாக குறிப்பெழுதப்பட்டது.

       தலைமைக்கு அறிக்கை, மீடியாவுக்கு....என அனைத்து ரிப்போர்ட்டுகளும் தயார்.

ஒரு வழியாக இந்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு கணக்குக் காட்டியாகிவிட்டது.

       தேசிய கீதத்துடன் சரியாக 5 மணிக்கு பட்டரை முடிந்தது. 

6 மணிக்கு வீட்டில் ‘இனோவா நிறுத்தியவுடன், ஓடி வந்து கார் கதவைத் திறந்து விட்ட சிறுவனிடம்; பின் சீட்டில் இருந்த ஸ்வீட் காரம் பொட்லத்தைக் காட்டி “ அதைத் தின்னுட்டு கார் துடைக்கலாம் ; தங்கச்சிக்கும் குடு…! என்று சொல்லிவிட்டு பங்களாவுக்குள் நுழைந்தார் டாக்டர் மணிவண்ணன்.

உடை மாற்றிக்கொண்டு ஹாலில் டி வி முன் கிடந்த ஷோபாவில் உட்கார்ந்தார் . 

“அய்யா..நீங்க மீட்டிங்குல பேசினத நானும் அண்ணனும் நியூஸ்ல பாத்தோம்யா.. என்றாள் சிறுமி, காப்பிக் கோப்பையை அவர் எதிரிலிருந்த டீப்பாயில் வைத்தபடியே…

அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அப்படியா பாப்பா? என்றபோது “ஆமாம்யா… சூப்பராப் பேசினீங்கய்யா…! என்றான் காரை பளபளவெனத் துடைத்த பின் உள்ளே வந்த சிறுவன்.

“சரி அதை விடுங்க…! இனிப்பு காரம் தின்னீங்களா…? எப்படி இருந்துச்சு…? பேச்சை மாற்றினார்.

“ஸ்வீட் காரம் உங்க பேச்சு போலவே… சூப்பர்ய்யா,என்ற சிறுவன் “குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்போம்னு ‘நீங்க எல்லாரும் சபதம் எடுப்பீங்களா…? னு கேட்டப்போ, அரங்கமே ஒன்று கூடி ஒழிப்போம்…! ஒழிப்போம்…! னு கோஷம் போட்டதைப் பார்த்து நாங்களும் கை தட்டினோம்யா…” 

“………………………………. என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சிறிது நேரம் அமைதி காத்தார் மாணிக்கம்…

சிறுவனே தொடர்ந்தான், “அய்யா..? ‘நாம் எல்லாரும் சபதம் எடுப்போமா…? னு கேட்டு எங்க பிழைப்புல மண்ணைப் போடாம , இருந்தீங்களே …? என்று , கைகூப்பிய அடுத்த தலைமுறையினரின் பிரதிநிதிகளான குழந்தைகளின் கூர்நோக்குப் பார்வை குத்த உள்ளூர நடுக்கம் வந்தது டாக்டர் மாணிக்கத்திற்கு.

***********************************************************************

வாட்ஸ் ஆப் மூலம் வந்த விமரிசனங்கள் 

 [7:01 PM, 2/4/2022]  அஜித் லால்

[8:12 PM, 2/4/2022] +91 99406 55208: பட்டறை பற்றிய நுண்ணிய வர்ணனை மற்றும் முடிவு ஈர்க்கின்றன. படைப்புக்கு பாராட்டுகள் திரு தேஜ்.


[8:15 PM, 2/4/2022] Periodicals Prana: 

இந்தக் கதையை நவம்பர் மாதத்திலேயே படித்துள்ளேன் ஒரு சிறுகதைப் போட்டியின் நடுவராய் இருந்த போது. இறுதிச் சுற்றுவரை முன்னேறிய கதைகளுள் இதுவும் ஒன்று 

ப்ரணா


[8:19 PM, 2/4/2022] சின்னஞ்சிறு கோபு: 

ஜூனியர் தேஜ் அவர்கள் எழுதிய 'பயிற்சிப் பட்டறை' என்ற சிறுகதை 'ஊருக்குதான் உபதேசம்' என்ற சொல்வழக்கை நிரூபிப்பது போல இருந்தது. அந்த பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சிகள், நடைமுறைகள் தத்ரூபமாக எழுதப்பட்டிருப்பது இந்த கதையின் தனிசிறப்பாகும். பாராட்டுகள் சார்.

 -சின்னஞ்சிறுகோபு.

[10:11 AM, 2/8/2022] Short Story Seetharaman: 

ஜூனியர் தேஜ் கல்கி சிறுகதை வாழ்த்துக்கள்



Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)