48. பேரிடர் நிதி (சிறுகதை)

 48. பேரிடர் நிதி (சிறுகதை)

                                      ஜூனியர் தேஜ்

(28.02.2022 மக்கள் குரல்)

ழக்கம்போல் காய் கறி வியாபாரத்தை முடித்துக் கொண்டு பைபாஸ் சாலையின் ஓரத்தில் தன் கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் மங்கம்மா.

‘சர்... சர்... சர் ...’ என மின்னல் வேகத்தில் டவுன் பக்கம் விரைந்த வெள்ளை கார்களைப் பார்த்த மங்கம்மா...வுக்கு ‘காரு எங்கே போவுது?’ என்று அறிந்து கொள்ளும் இயல்பான ஆவல் வந்தது.

“ஒரே காருங்களா போவுது..என்னா விசேசம்..?” அறுவடையான வயல்களில் கால்நடைகளை மேய விட்டுவிட்டு, குடை விரித்தாற் போன்ற பிரம்மாண்டமான நாவல் மரத்தின் நிழல் சாயும் கன்னி வாய்க்கால் மதகில் அமர்ந்திருந்த இடையனைப் பார்த்துக் கேட்டாள்.

“சேதி தெரியாதா ஆத்தா…?” என்று கேட்ட இடையன், இவளுக்கு பதில் சொல்லுமுன், வலது கையையை நெற்றிக்கு நேராகக் கடிவாளம்போல் கவிழ்த்துக் கொண்டு, தரிசில் மேயும்  தன் கால்நடைகளின் போக்கை அநுமானித்தான்.

“சொன்னாத்தானே தெரியும்..? சொல்லு…” கதையின் கிளைமாஸ் சொல்லும் நேரத்தில் அமைதியாகி காலம் கடத்தினால்  ‘சீக்கிரம் சொல்லுங்க..என்ன ஆச்சு…?” என்று ஆர்வப்படும குழந்தைபோல் இருந்தது மங்கம்மாவின் மனநிலை.

“டவுனுக்கு கலேக்டர், மந்திரி எல்லாம் வராங்க ஆத்தா..”

“மந்திரி என்னாத்துக்கு நம்ம ஊருக்கு வாராரு.. சும்மா பகடி பண்ணாத.. நெசத்தச் சொல்லு..!”

“அட நெசமாத்தான்...கறேன்..?”

“நெசமாத்தான் சொல்றியா..? எதுக்கு வாராங்களோ..?”

“லயன்ஸ் கிளப் சார்புல கொரோனாவுக்கு நிவாரண நிதி அம்பது லட்சம் தர்றாங்களாம்.”

கொரோனா என்ற வார்த்தையைக் கேட்டதுமே மங்கம்மாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மதகின் மேல் கூடையை வைத்துவிட்டு சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“ஏன் ஆத்தா அளுவறே..?” என்று இடையன் ஆதரவாய்க் கேட்டுக் கொண்டிருந்தபோது, அன்னப் பறவை போன்ற தூய வெண்மைநிறக் கார் ஒன்று ஓசையின்றி அவர்கள் பக்கத்தில் வந்து நின்றது.

 கொழுப்பு குறைய... உடல் எடை குறைய... தொப்பை குறைய... என காரியார்த்தமாக காலைநேரத்திலோ, மாலை நேரத்திலோ... ‘ஃபிட்னஸ் ட்ராக்கர் வாட்ச்’ அணிந்து, மருத்துவர் பரிந்துரைத்த எண்ணிக்கையின்படி தப்படிகள் கணக்கிட்டபடி ‘ட்ரட் மில்’... ‘மொட்டை மாடி’... கோவிலின் வெளிப் பிரகாரம்...‘பார்க்’,... மைதானம்..., பைபாஸ் ரோடு..., என அவரவர் வசதிக்கேற்ப நடைப் பயிற்சி செய்து,  ஏசி அறையில் மாட்டப்பட்ட ‘பேலியோ டயட் அட்டவணைப் பிரகாரம் காலை உணவு கொரிப்பதும், மாதம் ஒரு நாள் வரும்  ஏகாதசி நாளில் முழுப் பட்டினி இருப்பதும்; அதைப் பற்றி அப்பப்போது நேரிலோ தொலைப் பேசியிலோ சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பதும்தான், ஆன்மீகத்தைக் கேடயமாய்க் கொண்ட கொழுத்த பணக்காரர்களின் ஸ்டேட்டஸ் ஸிம்பல்.

ஆனால் மங்கம்மா போல தலையில் பாரம் சுமந்து தெருத் தெருவாய்ச் நடந்து, தொண்டைத் தண்ணீர் வற்ற வற்றக் கூவிக் கூவிக் காய்கறி விற்கும் சுயமரியாதைக்காரர்களின் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா..? - சூரியன் உச்சிக்கு வரும் நேரம் தானாகவே வியாபாரத்தை முடித்துக்கொண்டு, விடிகாலையில் தலையில் ஏற்றிய கூடையை இறக்கி வைத்துவிட்டு, தெருவோர டீக்கடையில் ‘பொரையும், டீயும்குடித்துப் பகல் பொழுதைக் கழிப்பதும் மாதத்தில் பல நாட்கள் ஏகாதசி விரதம் இருப்பதும்தான்.

“கத்திரிக்கா... கொத்தரங்கா... அவரைக்கா... வெண்டைக்கா... சுண்டைக்கா... முள்ளங்கி... முருங்கக்கா..ஒட்டு மாங்காங்காம்மோய் ............. “

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தெருவில் அவள் குரல் விடிகாலையில் சுப்ரபாதமாக ஒலிக்கும்.

சொல்லும் காய் கறிகளின் பெயர் வரிசையில் மாற்றமில்லாமலும், குரல் ஏற்ற இரக்கங்களில் தடுமாற்றமில்லாமலும் ஒரு ராக ஆலாபனையுமாய் இருக்கும் அந்தக் குரல்.

எந்தத் தெருவில் யார் வீட்டில் எந்தக் காயை  விரும்புவார்கள் என்பதை நன்கு அறிந்தவள் மங்கம்மா.. அந்தக் காயை தனியாக ஒரு முறை அறிவிப்பாள்.

மேலத்தெரு கல்யாணிக்கு வெண்டைக்காய் என்றால் உயிர். அவள் வீடு முன் “வெண்டிக்கா...பிஞ்சு வெண்டிக்காம்மோய்...” என்று ஒரு ஸ்பெஷல் கூவல் தருவாள்.

அதே போல் யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதற்கு ஏற்ப பொதுக் கூவலுக்குப் பின் ஸ்பெஷல் கூவல் என்பதுதான் மங்கம்மாவின் சிறப்பு.

ஒரு நாள் கீழ மாரியம்மன் கோவிலில் தொடங்கி, வடக்குத் தெரு, தெற்குத் தெரு என்று அலைந்து கடைசியில் திருமஞ்சனத் தெருவில் வந்து முடிப்பாள்.

மறு நாள் திருமஞ்சன வீதிக்கு முதலில் வருவாள். கீழ மாரியம்மன் கோவிலுக்குப் போகும்போது சூரியன் உச்சிக்கு வந்துவிடும்.

 டையன் அதிர்ச்சியாய் தன் அருகே வந்து நின்ற அந்தக் காரைப் பார்த்தான். காரிலிருந்து இறங்கினார் அமைச்சர். பத்து மீட்டர் முன்னால் நின்ற போலீஸ் ‘பேட்ரோல்’ போக்குவரத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தது. புது வெள்ளம் வரும்போது ஷட்டர் சுற்றித் தேங்கி நிற்கும் நுங்கும் நுரையும் போல் அமைச்சரைச் சுற்றி வீடீயோக்காரர்களும், புகைப்படக் கலைஞர்களும், செய்தி சேகரிப்போருமாய் கூடிவிட்டது.

“ஏன் அம்மா கண் கலங்கறீங்க...? என்று கேட்டார் மந்திரி.

“...........” பதிலில்லை.

“ கொரோனா நிதி வாங்க மந்திரி வர்றாருனு சொன்னேனுங்க. அளுவ ஆரம்பிச்சிட்டாங்க..” என்றான் இடையன்.

“கொரோனா முகாம்ல துப்புறவு சேவை செஞ்சிக்கிட்டிருந்த என் மவனை போன வருசம் இதே மாசம்தான் கொரோனாவுக்குப் பறி கொடுத்தேஞ்சாமி... என்று வாய்விட்டு அழுதாள்.” காட்சிகள் எல்லாம் முறையாகப் பதிவாகிக் கொண்டிருந்தது.

“.உங்க மகனா…கொரோனாவுக்கா..?.”அதிர்ந்த மந்திரி முகத்தில் சோகரசத்தைக் கூட்டினார்.

“கொரோனாவ ஒழிக்க 5 லட்சம் தாராங்களாமே... அரிமா சங்கத்துல…?”

“ஆமாம்மா..! அதுக்குத்தான் போயிக்கிட்டிருக்கோம். நடுவுல உங்களை பாத்து இறங்கினேன்..” என்றார் அந்த ஏழைப் பங்காளரான மந்திரி.”

எப்படியோ கொரோனா ஒழிஞ்சிடுச்சின்னா..’ என் மவனுக்கு நேர்ந்த கதி யாருக்கும் வராம இருக்குமே..!” என்ற அவள் கைகளை ஆதரவாகப் பிடித்தார் மந்திரி.

“மந்திரி அய்யா.. இப்படிப் பட்ட ஒரு பொதுக் காரியத்துக்கு நான் கொடுத்தா வாங்கிக்குவீங்களா...?’’ கேட்டுக் கொண்டே கூடையிலிருந்த சுருக்குப் பையை அகல விரித்து அனைத்தையும் ஈந்தாள். அன்றைய வருமானம் மொத்தத்தையும் தந்துவிட்டதால்  மங்கம்மாவுக்கு இன்று ஏகாதசி விரதம்தான்.

 

“ஐம்பது லட்சம்” என்னும் சின்ன மீனை கொரோனா என்னும் தூண்டிலில் செருகி கோடிகள் மதிப்புள்ள அரசு காண்ட்ராக்டுகளுக்கு அடி போடும் தொழிலதிபரும், அரிமா சங்கத்தின் சாசன உறுப்பினருமான நக்கீரன் மந்திரியின் வரவுக்காய் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் விழா மேடையில் காத்திருந்தார்.

“மந்திரியிடம் கொரோனா நிதி கொடுத்த மங்கம்மா..” என்று அனைத்து சேனல்களிலும் ‘ப்ரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருக்க, வாட்ஸ் ஆப்பிலும் வைரலாகிக் கொண்டிருந்தது.

விமரிசனங்கள்





2. 'ஜூனியர் தேஜ்'ஜின் 'பேரிடர் நிதி' என்ற சிறுகதை,  இன்றைய உலகின், உண்மையான கள்ளம் கபடில்லாத ஒரு ஏழை மனுஷியையும், போலியான கள்ளம் கபடு நிறைந்த ஒரு பணக்காரனையும் ஒரு சேர படம் பிடித்துக்காட்டி அதிரவைத்தது. பாராட்டுகள்.

-சின்னஞ்சிறுகோபு. வாட்ஸ் ஆப் மூலம் வந்த விமரிசனம்

3. அரசியல்வாதிகளை தோலுரித்து அப்பாவி பொதுமக்களை மங்கம்மா உருவில் அடையாளப்படுத்தி சமூக சிந்தனையை தூண்டிய கதை. அருமை. வாழ்த்துகள்

நத்தம் சுரேஷ்பாபு வாட்ஸப் மூலம் வந்த விமரிசனம்







Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்