49. சோளப் பூ (சிறுகதை)
49. சோளப் பூ
-ஜூனியர் தேஜ்
(08.03.2022 மக்கள் குரல்)
'பாப்கான் வாலா'
முதலாளி டி.என்.பி.எஸ்.சி எழுதி அரசு வேலை கிடைத்து சென்றுவிட்ட பிறகு இவனே தனியாக பாப்கான் பொரித்து விற்று முதலாளிக்கு வாரம் தோறும் வாடகை தந்தான்.
வங்கியில் சுய தேவைகளுக்காக முதலீடு கேட்டு விண்ணப்பித்து
‘நடமாடும் பாப்கார்ன் வண்டி’ வாங்கினான்.
உப்பும் காரமும் மசாலா மணமும் கலந்த வாசனையை கிளப்பிக்கொண்டு மதியம் மூன்று மணிக்குப் புதிய பேருந்து நிலையத்தில் வண்டி நிறுத்துவான்.
அடுத்த ஸ்டாப், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கூடம்தான்.
சரியாக ஐந்து மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்டில் கோர்ட், ஏடிஎம் இரண்டுக்கும் இடையில் உள்ள மரத்தடியில் நிறுத்துவான். 6 மணி வரை அங்கு நல்ல வியாபாரம் நடக்கும்.
ஆறு மணிக்கு அங்கிருந்து நகர்ந்து, அம்பேத்கார் வீதி, சுந்தரனார் தெரு' பூந்தோட்டம் , வடிவேல் நகர் என்று சுற்றிவிட்டுக் கடைசியில் காமராஜர் காலனியில் உள்ள தன் வீட்டை அடையும்போது மணி 8 அடிக்கும்.
சித்தாள் வேலைக்குப் போய்விட்டுத் திரும்பிய அம்மா சமைத்து வைத்திருப்பாள்.
கோர்ட் வளாகத்துக்கு எதிரே பெரிய துணிக்கடைக்கும், இரும்புக் கடைக்கும் நடுவில் பிளாட்பார விளிம்பில் ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பி நிற்கும் தூங்கு மஞ்சி மரத்தடியில் நாலுக்கு மூன்று டைனிங் டேபிள்மேல்.. மல்லிகை, முல்லை, சாமந்தி என பூப் பந்துகளும் குவியல் குவியலாய் உதிரிப் பூக்களும், அரும்புகளும், நேர்த்தியாய் சின்னப் பீங்கான் பானையில் நிற்க வைத்த பெங்களூர் ரோஸ்களுமாய்க் கண்கவர, பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து தொடர்ந்து பூ தொடுத்துக் கொண்டு இருக்கிறாள் மலர்மங்கை.
ஒரு மாதத்திற்கு முன்பு வரை இவளும் இவள் அம்மாவுமாய் சேர்ந்துதான் இந்த இடத்தில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். ‘வயசுக்கு வந்த பெண்ணுக்கு நாலு காசு சேர்க்கணுமே!’ என மனம் உந்த, ஒரு மாதத்திற்கு முன்னர்தான் தியேட்டர் முக்கூட்டில் தாயார்காரி தனியாகக் கடைபோட்டாள்.
அதன் பிறகு ஒரு மாத காலமாக
மலர்மங்கை மட்டும் இங்கே வியாபாரம் செய்கிறாள்.
வழக்கமாய் தன் பாப்கார்ன் வண்டியை நிறுத்தும் மரத்தடியில் ஒரு டாங்கர் லாரி நின்றதால் எதிர் சாரியில் பூக்கடைக்குப் பக்கத்தில் வண்டி நிறுத்தி மணியடித்தான் வாலா.
கோவில் மணியின் சுருதியோடு இணைந்து தோத்திரம் சொல்லும் குருக்களைப் போல பாப்கான் வாலாவின் மணியோசையோடிணைந்து “இன்னிக்கு வழக்கதை விட லேட்டு போலருக்கு..?” என்ற கேள்வி இன்னிசையாய் அவன் காதில் ஒலித்தது.
யாரெனச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு.. மலர் மங்கையைப் பார்க்க, லாகவமாய் மலர் தொடுத்துக் கொண்டிருந்த அவள் நாணிக் கோணி வெட்கித் தலைகுனிந்தபடி ஓரப் பார்வை பார்த்தாள்..
‘கிட்டத்தட்ட மூன்று மாதங்களாய், தான் வரும் நேரத்தைக் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறாள் இந்தப் பெண்!’ என்பதை நினைத்தவுடன், தான் செய்யும் குறும்பை யாரேனும் பெரியவர்கள் பார்த்துவிட்டால் குழந்தை எப்படி வெட்கப்பட்டு நாணிக் கோணி, அந்த இடத்திலிருந்து விலகி ஓடி தன்னை மறைத்துக் கொள்ளுமோ, அதுபோல பாப்கான் வாலா வேக வேகமாக வண்டியைத் தள்ளிக் கொண்டு போயே போய்விட்டான்.
ராத்திரி முழுக்க தூக்கம் இழந்தான் வாலா. “இன்னிக்கு வழக்கதை விட லேட்டு போலருக்கு..?” என்ற கேள்வியை எத்தனை ஆயிரம் முறை மனதிற்குள் உச்சரித்திருப்பானோ அவனுக்கே தெரியாது.
எந்த வேலையும் ஓடவில்லை. வழக்கமாகப்புறப்படும் நேரத்துக்கு முன்பே கிளம்பி, பஸ் ஸ்டாண்ட், பள்ளிக்கூட முகப்பு என எங்கும் நிற்காமல் மூன்று மணிக்கெல்லாம் பூக்கடையின் முன் வந்து நின்றான் வாலா.
“இன்னிக்கு ரொம்ப சீக்கரம் வந்துட்டாப்ல...!” முதல் நாளை விட கேள்வியில்
நெருக்கம் உணர்ந்தான் வாலா.
முதிர்ந்த இளமஞ்சள் சரக்கொன்றை இதழ்கள், தன் ஊடாய்த் புகுந்து செல்லும் காற்றைக் காரணம் காட்டி, வண்டுகள் மது உண்டு
மயங்கும் நறுமணமிக்க அன்றலர்ந்த புதிய மலர்களை விட்டு விலகி, மரத்தைச் சுற்றிலும், அங்குமிங்குமாய் உதிருமே..; அது போல , மூன்று பக்கக் கண்ணாடி அடைப்போடு இருந்த பாப்கான் வண்டியின் அடித்தட்டு வைப்பறையிலிருந்த சிறிய காஸ் சிலிண்டரிலிருந்து தொப்புள் கொடியாய் மேலெழும்பிய செந்நிற ரப்பர் குழாய் ஊட்டிய எரிவாயுவை மேற்கூரையில் தொங்கிய ஓவனுக்குள் பாய்ச்சிய உயர் வெப்பத்தால் 'பட..பட்..பட்ட்..பட்..' டெனப் பொரிந்து புகைகிளம்ப சோளப்பொறி ஓவனைச் சுற்றிப் பூவாய் உதிர்ந்து உப்பும் காரமுமாய் மணம் வீசியது.
பட்டாசுச் சரம் ‘ பட்...படார்...பட.பட்..’ டென வெடித்துப் புகை கிளப்பி கந்தக வாசனையைக் கிளப்புமே அதையும் நினைவூட்டியது அந்தக் காட்சி
அன்றலர்ந்த நறுமலர்களை கொய்வதற்கு முன், இலைச் சருகுகளோடு பரவலாய் உதிர்ந்து கிடக்கும் இதழ்களை நந்தவன மூலையில் குவிக்கும் 'கோவில் கூட்டி' போல், அந்த பாப்கான் இளைஞன் கையடக்கமான பிளாஸ்டிக் முறத் துடுப்பால் சோள பூக்களை வலது எதிர் மூலையில் குவித்தான்.
"என்ன கேட்டீங்க..?"
"….ங்க...வேண்டாமே..!"
"ஓ..கே!... சொல்லு? என்ன கேட்டே.?"
அங்கும் இங்கும் கண்களை ஒட்டியபின் "இன்னிக்கு ரொம்ப சீக்கிரம் வந்துட்டாப்ல....."
என்றாள். அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டு பளிச்சென ரகசியமாய் 'ஐ லவ் யூ!' சொல்வதைப் போல் இருந்தது மலர்மங்கையின் குரல்.
****************************
Comments
Post a Comment