57. என் வீட்டுக்குள்ளே மெகா நூலகம் (நேர்காணல்)
57. என் வீட்டுக்குள்ளே மெகா நூலகம்
- ஜூனியர் தேஜ்
ஜூன் 2001 உரத்த சிந்தனை
புத்தக மனிதர் தேஜ்
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப் தற்போது பள்ளியில் கைத்தொழில் போதகராகப் பணியாற்றும் இவர், உலக நூலகத் தந்தை சீர்காழி ராமாமிருத ரங்கநாதன் அவர்கள் பயின்ற அந்தப் பள்ளியில் அவர் நினைவாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள இருபதாயிரம் நூல்கள் கொண்ட பெரிய நூலகத்தில் நூலகப் பொறுப்பாளராக ஈடுபாட்டுடன் பணியாற்றி வருபவர். தற்போது இவர் நூலக அறிவியல் பட்டையப் படிப்பைப் படித்து, பட்டையம் பெற்று நூலகச் சேவையை மெருகுபெறச் செய்துவருகிறார்.
பள்ளி நூலகத்தில் பலதரப்பட்ட பாடங்களிலும், பொருள்களிலுமாக இருபதினாயிரம் புத்தகங்களோடு இருக்கும் இவர் வீட்டில் ஐயாயிரம் புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகத்தைப் பராமரித்துவருவதைப் பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. ‘வீட்டுக்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும்’, என்று அண்ணா சொன்ன அந்த வாசகம் இவர் வீட்டில் சாட்சியாக இருப்பதைக் கண்டு புல்லரிக்க வைத்தது.
· அதென்ன ஜூனியர் தேஜ் என்ற பெயர்?
என் பெயர் வரதராஜன். என் தந்தை அருணாசலம். என் தந்தை ஒரு ஓவியர். ஆனந்த விகடன்
மாலி அவர்களின் மாணவர் என் தந்தை. மாலி அவர்கள் என் தந்தைக்கு ‘தேஜ்’ (ஒளி) என்ற புனைப்பெயரைச்
சூட்டிப் பத்திரிகைத்துறையை அறிமுகப்படுத்தினார். அவருடைய மகனான எனக்கு இதயம் பேசுகிறது
மணியன் அவர்கள் ஒரு முறை, எனது சொந்த ஊரான திருவிசலூருக்கு வந்திருந்தபோது ‘ஜூனியர்
தேஜ்’ என்ற புனைப்பெயரைச் சூட்டினார்.
· தாங்கள் நூலகம் ஒன்றை வீட்டில் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடிப்படை என்ன என்று சொல்லமுடியுமா?
நான் திருச்சி அருகே உள்ள பழூரில் என் தாய்மாமன் வீட்டில் இருந்து படித்தேன். என் தாய் மாமா ரயில்வே பள்ளியொன்றில் இந்தி பண்டிட். அவர் கிட்டத்தட்ட இரண்டாயிரம் புத்தகங்களுக்கு மேல் வீட்டின் மாடியில் வைத்திருப்பார். அவர் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. நான் நான்காவது படிக்கும்போதே மாதம் ஒரு முறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ என்னை உதவிக்கு அழைத்துக்கொண்டு அந்தப் புத்தகங்களை அலமாரிகளிலிருந்து இறக்கித் தூசு தட்டி மீண்டும் கட்டி வைப்பதிலும் என்னை உபயோகித்துக்கொள்வார். அதுதான் எனக்கு நூலகம் அமைக்கவேண்டும் என்பதில் அடிப்படை என்று சொல்லலாம்.
· இந்த நூலகத்தில் உள்ள ஐயாயிரம் புத்தகங்களும் தாங்களே வாங்கிச் சேர்த்ததா?
நானே வாங்கிச் சேகரித்தது சுமார் இரண்டாயிரம் இருக்கலாம். என் தந்தை எனக்குக்
கொடுத்த சொத்தாக இரண்டாயிரம் இருக்கலாம். மற்றபடி, ஆயிரம் புத்தகங்கள், பல நண்பர்கள்
“வீட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை, எடைக்குப் போடவும் மனசில்லை. உன் நூலகத்தில்
வைத்துப் பராமரித்துக்கொள்..” என்று எனக்குக் கொடுத்த
புத்தகங்கள்தான்.
· தங்கள் நூலகச் சாதனையாகக் குறிப்பிட்டு மனதில் தேங்கியுள்ள விஷயம் என்று ஏதாவது சொல்லமுடியுமா?
இரண்டாண்டுகளாக ஆசிரிய நண்பர்கள் சந்தா கொடுத்து தினமணி நாளிதழ் வாங்கும் நிலையில்
ஒவ்வொரு நாளும் அதில் வரும் கட்டுரைகளைத் தொகுத்து அந்த மாதத்தில் வந்த கட்டுரைகளைப்
புத்தகமாகத் தைத்து வைத்துக்கொண்டு வருதல் வழக்கம். அந்தக் கட்டுரைகளைப் படித்துவிட்டு
இதுவரை பத்து மாணவர்களுக்கு மேல் கட்டுரைப் போட்டிகள் பலவற்றில் பல பசிசுகளைப் பெற்றதைச்
சொல்லலாம். ஒரு ஆசிரியர் தனது முனைவர் பட்டப் படிப்புக்கு என்னுடை நூலகப் புத்தகங்கள்
மிகவும் உதவியதற்காக அவரது முன்னுரையில் எனது பெயரைச் சேர்த்திருக்கிறார்.
· தங்கள் எதிர்காலத் திட்டம்.?
நூலகத்திற்கு நிறைய ரெஃபரன்ஸ் புத்தகங்கள் வாங்கவேண்டும். வருங்காலத் தூண்களாம் மாணவர்கள் பலர் எனது நூலகத்தில் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். படிக்கும் பழக்கமே குறைந்துள்ள இந்தச் சமூகத்தில் பழக்கத்தால் உயர்ந்தேன் என்று சொல்லும் அளவுக்குப் பலர் என் நூலகத்திலிருந்து உருவாகவேண்டும்.
சந்திப்பு - அப்துல் சலாம்
நூல்கள் வாங்கிப் படித்து மகிழ்வதுடன் மற்ற மாணவர்களும் படித்திட கொடுத்து உதவி செய்து திருப்தி கொள்ளும் சிறப்பாளர்!
ReplyDelete5,000 புத்தகங்களுக்குமேல் சேர்த்து அவற்றை சொத்தாகக் கருதும் உங்களைப்பற்றிய நேர்காணலும் சிறப்பு! 'உரத்த சிந்தனை' இதழும் சிறப்பு!
நீங்கள் புத்தக மனிதர்தான்; சந்தேகமில்லை!!