59. காஞ்சி மஹா பெரியவாளுக்கு அஞ்சலி (கட்டுரை)

      59. காஞ்சி மஹா பெரியவாளுக்கு அஞ்சலி 

                                    -ஜூனியர் தேஜ்

                சாவி 13.07.1994)                

   தார் தாராகப் பலவகை வாழைப் பழங்கள், நானாவிதப் பழங்கள்கூடை கூடையாகச் சூழ்ந்திருக்க ஒரு பழுத்த பழ வியாபாரியின் மிடுக்குடன் சர்வேசுவரனான நடமாடும் தெய்வம்...... பெரியவா.....

ஹாஸ்பெட் நாகராஜனுடன் (என்னுடைய கஸின்) பத்து நாள் மடத்தில் தங்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஸ்ரீ மடத்துக்குள் சென்றவுடன் பிரமிப்பு.

பெரியவா முன் லாரிக் கணக்கில் பழங்கள் காணிக்கையாக வைத்த அந்த ஆந்திரா புதுமண தம்பதியர்களைச் சேர்ந்த குடும்பம் முழுக்க பவ்யமுடன் அனுக்ரஹத்திற்குக் காத்திருக்க...

ஞானப்பழத்தின் கைகளில் மாம்பழம் உருள... “எனக்கு வரவர வாசனையே தெரியலை...அதையும் மீறி ‘கம்.....னு வாசனை...பெரியவா சொன்னதும், ‘ஹர ஹர சங்கர.... என்ற எல்லாருடைய மனது ஒன்றிய பக்தி கோஷம்.

பிறகு ஒவ்வொரு பழமும் எங்கே சிறப்பாக விளையும், அவற்றின் மருத்துவ குணம் என்ன என்று லெக்சர், அந்த ஆந்திரப் புதுமண தம்பதியருக்குப் புடவை வேஷ்டி அனுக்ரஹித்தல்...என ஒன்றரை மணி நேரம் போனது தெரியாமல் போய்விட...

“யாரது, ஹாஸ்பெட் நாகராஜனா? வா...வா... என்று பெரியவா அழைக்க... “என்னோட மருமான்... திருவிசலூர், அருணாசல சாஸ்திரிகளின் கொள்ளுப் பேரன். என்று தெலுங்கில் அறிமுகப்படுத்தினார்.

“நீ... பேரு...?- என்று பெரியவா என்னிடம் கேட்க...

“வரதராஜூ... என்றேன்.

“உங்க ஊர் பெருமாள் பேரையே வெச்சுட்டா உனக்கு...(பேசியதெல்லாம் தெலுங்கிலேயே...). உங்க ஊர் பெருமாள் பிரசன்னமானது எப்படின்னு தெரியுமா? கற்கடகரேஸ்வரர் கோவிலுக்கு எல்லாரும் போயிண்டு வராளா...? ஸ்ரீதர ஐயாவாள் உற்சவம் எப்படி நடக்கறது...? உங்க தாத்தா வியாச பூஜைக்கு பில்வம் எப்படிப் பறிப்பார் தெரியுமோ...?பில்வ மரத்துல கால் படப்படாதுன்னு சாரம் கட்டி ஏறி பில்வம் பறிப்பார். உங்க அப்பா அருணாசலம் சித்திரமெல்லாம் நன்னாப் போடுவான்... என்று பெரியவா பேசிக்கொண்டே போய் நிறுத்தினார்.

நாகராஜன், “இவனும் டிராயிங் பாஸ் பண்ணியிருக்கான்... என்று கூற, “பின்னே..!.புலிக்குப் பூனையா பிறக்கும்...? ஆனந்த விகடன்  ‘மாலியோட சிஷ்யன்னா அருணாசலம்....

மறுபடியும் டிராக் மாறுகிறது.

ரில் ராமானுஜ கோனார் என்றும், சாமிநாத உடையார் என்றும்... நிறைய நிறைய திருவிசலூர் சமாச்சாரங்கள்.

“உங்க சின்னத் தாத்தா கிருஷ்ணா..., ரொம்ப முரடு. மனசு ரொம்ப உசத்தி. உங்க ஊர் வைத்யர் உள்ளங்கைல ரோமம் வளர வைப்பார். அவா பரம்பரைல வைத்யம் பண்றாளோ..?

“கும்பகோணத்துல சந்திர மௌளீஸ்வரனோட தந்தம் பார்த்திருக்கியோ..?

'பாட்டி அடிக்கடி சொல்லும் ‘சந்திர மொலி என்ற பெரியவாளின் யானைக்கு (திருவிசலூரில் முகாம் போட்டபோது ) மதம் பிடித்து ‘கொல்லம் பிள்ளையார் கோவில் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அந்த யானையின் தந்தம் கிட்டத்தட்ட மூன்றடி உயரம், இன்றும் கும்பகோணம் பகவத் பிள்ளையார் கோவிலில் (டபீர் தெரு) உள்ளது.' அது நினைவுக்கு வருகிறது.

சிறிது நேரம் மௌனம் சாதிக்கிறார் பெரியவா. சந்திரமொளீஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்துகிறார் போலும்!

பற்பல கோணங்களில் பெரியவா தரிசனம்.

பிறகு , அடுத்த இரண்டு நாட்களும் ‘காஷ்ட மௌனம். தரிசனம் மட்டும் ; எந்தப் பேச்சுமில்லை.

ந்தாவது நாள் இரவு இரண்டு மணிக்கு மௌனம் கலைத்த நேரம்… சிவிகை அருகே படுத்திருந்த நான் எழுந்து உட்கார்ந்தேன்.

இரண்டு மணி முதலே களைகட்டிவிட்டது. இரண்டு நாட்களாக எப்போது பெரியவா மௌனத்தைக் கலைப்பார் என்று காத்திருந்தவர்களுக்கு தரிசனமும் பேச்சும்.

நடுவே என்னைப் பார்த்து, “ நீ இன்னிக்குத் திருவிசலூர் கிளம்பறியா…?என்றார் பெரியவா.

கேள்வியால் அதிர்ந்த நான், “இல்லே... இன்னும் ஒரு வாரம் இங்கேயே இருந்து தசிசனம் பண்ணிக்கணும்.என்றேன்.

அதோடு அந்தப் பேச்சு முடிந்தது.

பெரியவர் அனுஷ்டானம் முடித்து வருவதற்குள் நானும்  குளித்துவிட்டு வந்துவிட்டேன்.

ஹாஸ்பெட் நாகராஜன், பெரியவரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு கிளம்பிவிட, சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று நான் புறப்படும்போது மணி 9.30.

எழுந்தபோது, “இன்னும் அரைமணி கழிச்சி சாப்பிடலாமே...? என என்னை நிறுத்திய பெரியவரின் செயல் புரியவில்லை.

அரைமணி நேரம் கழித்து, “நீ ஆகாரம் பண்ணிண்டு ஊருக்குப் போயிட்டு இன்னொரு சமயம் வாயேன்! என்றார் பெரியவா. என் மனதில் ஏதோ குறுகுறுப்பு தோன்றியது. ஆகாரம் முடித்துக்கொண்டு ஸ்ரீ மடத்தின் முகப்புக்குத் திரும்பினேன்.

ஸ்ரீ மடத்தின் முகப்பில் ஹாஸ்பெட் நாகராஜன்... லாட்ஜை காலி செய்துகொண்டு கிளம்புகிற நேரத்தில் வந்த தந்தியோடு…

பங்காளி ஒருவர் இறந்துவிட சாத்தீண்டலுடன்...

மடத்தின் வாசலோடு திரும்பிய... அந்த நாள்...  என்றென்றும்...

பெரியவரின் ஞானதிருஷ்டி...

இப்போது நினைத்துக்கொண்டாலும் கண்களில் நீர் பனிக்கிறது.

అఅఅ


Comments

  1. மஹாபெரியவரை ஒருமுறை கூட நேரில் தரிசிக்கும் பாக்கியமே எனக்கு கிடைக்கவில்லை என்பது சோகம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை