61. சஸ்பென்ஸ் (சிறுகதை)

https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-short-story-about-sincere-police-man
61. சஸ்பென்ஸ்  
                       -ஜூனியர் தேஜ்         ‌‌
(விகடன் 21.04.2022)

சஸ்பென்ஸ்  (சிறுகதை)

                -ஜூனியர் தேஜ்

ன்னங்க..!

முதல் நிலைக் காவலர்  (Police Constable – Grade 1) முருகன் தன் சீருடையின் மேற்கையில் தைக்கப்பட்டிருந்த இரண்டு பட்டைகளைப் பார்த்தார். ‘விரைவில் மூன்று பட்டைகளை தைக்கப் போகும்  (Head Constable)  தலைமைக் காவலராக உயரப் போகிறோம்! என்கிற மகிழ்ச்சியான நினைவோட்டத்துடன், சீருடையை மரியாதையோடு ஹாங்கரிலிருந்து எடுத்தபடியே,  

“ம்..என்றார்.

“இன்னிக்கு ‘லீவு போட்டுட்டு என் கூட இருங்களேன்...?

சீருடையை அணிந்தபின் ‘பெல்ட் அணிந்து கொண்டே எதுக்கு...வள்ளி ?”- அவளின் பூசினாற்போன்ற முகத்தைக் கரிசனத்தோடு பார்த்தபடியே கேட்டார்.

“ஒரு இடத்துக்குப் போவணும்..



‘எங்கே? என்று கேட்டால் ‘சஸ்பென்ஸ்என்பாள் வள்ளி. திருமணமாகி மூன்று வருடங்களில்; முதல் முறையாக “எங்கே? என்று கேட்காமல் “எப்ப..?என்று கேட்டுக்கொண்டே , ‘செர்ஜ் தொம்பியை எடுத்து நிலைக் கண்ணாடியில் பார்த்தடியே தலையில் அணிந்து அட்ஜெஸ்ட் செய்துகொண்டார். ‘தலைமைக் காவலர் ஆகி இதே செர்ஜ் தொம்பியில், வெளிர் நீல நிற ரிப்பன் சுற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மனது உற்சாகமாகக் கூவியது.

வழக்கம்போல ‘எங்கே? எனக் கேட்காத கணவரின் நடவடிக்கையால் வள்ளி தனக்குள் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள். சாயங்காலம் நாலு மணி போல போகணும்..!என்ற பதிலில் இயந்திரத்தன்மை இருந்தது.

சாயங்காலம்தானே..!. மதியம் ‘லீவு கொடுத்துட்டு வந்துடறேன். தயாரா இரு..என்றார். ‘ஒரு குழந்தையைப் போல் விளையாட்டாய் நடந்துகொள்ளும் வள்ளியை அனாவசியமாகக் காயப்படுத்திவிட்டோமோ! -‘ என்கிற கழிவிரக்கம் வந்தது முருகனுக்கு.

“சரக்... ஷரக்... சரக்...என ‘பாலீஷில் பளபளத்த ‘ஷூசீராக சப்திக்க, முருகனின் நேர்கொண்ட பார்வையுடனான நிமிர்ந்த நடை, ‘நான் ஒரு உண்மையான, நேர்மையான போலீஸ் என்று ‘ஊர்-உலகுக்குக் பறைசாற்றுவதுபோல இருந்தது.

பள்ளிக்குச் செல்லும் குழந்தையை பாசத்தோடு தாய் பார்ப்பதைப் போல, தன் கணவர் முருகனின் நடையை பெருமையோடு பார்த்து ரசித்தாள் வள்ளி.

காவல் நிலைய முகப்பிற்கு வந்ததும், திரும்பிப் பார்த்து காவலர் குடியிருப்பின் வாசலில் நின்று தன்னையே பார்க்கும் வள்ளிக்குக் கையசைத்தார் முருகன்.

ல்யூட் சார்…!”  சீருடையின் தோள் பட்டையில் ‘ஐ பி எஸ், அசோகச் சின்னம், அதனடியில் ‘வி வடிவில் இரண்டு தாரகைகள் மிளிர, தன் ‘கேபினில் அமர்ந்து காவலர்களுக்கு ‘டூட்டி அலாட் செய்துகொண்டிருந்த தேர்வு நிலை காவல் கண்காணிப்பாளர்  (Superiendent of police – Selection Grade) க்கு வலது கால் தூக்கி ‘டொப்… என ஓசை எழ, அடித்து ‘ஸ்மார்ட்டாக ‘சல்யூட் செய்தார் முருகன்.

“குட் மார்னிங் முருகன். நீங்க இன்னிக்கு 'மான்சிங் பங்களா' கூட்டு ரோடுக்குப் போறீங்க.

“ ஓ..கே! சார்..மீண்டும் ‘சல்யூட் செய்துவிட்டு ‘டூட்டி அலாட்மெண்ட் பேரேட்டில் கையொப்பமிட்டார் .

மணி அடித்தவுடன் அடுத்த நொடியே வகுப்பை விட்டு வீட்டுக்கு ஓடிவிடும் மாணவனைப் போல ‘டூட்டி அலாட்மெண்ட் தெரிந்தவுடனே ‘ஸ்பாட்டுக்கு ஓடிவிடும் முருகன் இன்று சற்றே தயங்கி நிற்பதைக் கண்டு “ என்ன ‘மிஸ்டர் ... ஏதாவது ‘ஆப்ளிகேஷனா..? தயங்கி நிக்கிறீங்க...? கேட்டார் கண்காணிப்பாளர்.

“மதியம் அரை நாள் ‘லீவு வேணும் சார். ‘பந்தோபஸ்து டூட்டில நேரம் இழுத்துக்கிட்டே போயிருமேனு பாக்குறேன் சார்.

“இழுக்காது.. ஆளுங்கட்சிக்காரங்க மத்திய அரசாங்கத்துக்கு எதிர்ப்பைக் காட்டற ஆர்பாட்டக் கூட்டம்தான். ரொம்ப சிக்கலாக்க மாட்டாங்க. பன்னெண்டு ஒரு மணிக்கெல்லாம் முடிஞ்சிரும். நீங்க ரெண்டு மணிக்குள்ளே வீட்டுக்குப் போயிரலாம்.. சரிங்களா..?


    “ஓ கே சார்..?என்ற ஆமோதிப்புக்குப்பின் ‘பந்தோபஸ்த் கோஷ்டியோடு சென்று உட்கார்ந்தார் முருகன்.

மூன்று புறமும் இரும்பு கம்பி வலை பொருத்தப்பட்ட வெள்ளை நிற வேனிலிருந்து காவலர்கள் இறங்கினர்.

வேனில் இருந்த முதலுதவிப் பெட்டி, ஸ்டெரெக்ச்சர், வீல் ச்சேர், டியர் காஸ், கேடயம், கைவிலங்குகள் இத்யாதிகளான பாதுகாப்புப் பொருட்களுக்களையெல்லாம் ஆதங்கத்தோடு பார்த்தார் முருகன். ‘இதற்கெல்லாம் உபயோகம் வராமல் நல்லபடியாக முடியவேண்டும்…! என்று மனதார பிராத்தித்துக்கொண்டார்.

சாதிக் கட்சிகள், மதக் கட்சிகள், தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள், எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள், என் ஜி ஓக்கள், ஆளும் கட்சிகள் என எதுவாக இருப்பினும் வழக்கமாக இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிற களம் இதுதான். இந்த நால்ரோடு பல நேரங்களில் போராட்டக் களமாகவும், போர்க்களமாகவும் மாறி நிறைய வெட்டுக் குத்துக்கள், ரத்தக் களறிகள், ஏன்...! பலிகள் கூட நடந்துள்ளன. ‘இன்று என்ன ஆகுமோ..? எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும் என்று நால்ரோட்டின் நடு நாயகமாக நின்ற ‘சித்தி வினாயகரைப் பிரார்த்தித்துக்கொண்டார் முருகன்.

மூன்று ஸ்டார்களும், ஐ பி எஸ் என்ற எழுத்தும் சீருடையில் தாங்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாள் (DSP) அவர்களின் பாதுகாப்போடு ஆளுங்கட்சி மந்திரி வந்து இறங்கினார். அதைத் தொடர்ந்து திபு திபுவென்று கார்கள், வேன்கள், டிராக்டர்கள், ஸ்கூட்டர்கள் என வாகனங்களில் மாவட்டம், வட்டம், என கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும்  வந்து குவிந்தார்கள். பத்திரிகையாளர்கள், பல்வேறு ஊடகவியலாளர்கள் சுற்றிச் சுற்றி பரபரப்பாக உலா வந்தார்கள்.

நான்கு சாலைகளிலும் குறிப்பிட்ட தூரம் நட்டிருக்கும் கம்பங்களுக்கு இடையே பறக்கும் கட்சிக் கொடிகளுக்கு நடுவே கட்டப் பட்ட ஒலிப்பெருக்கிகள் ஆர்பாட்டத்தை பறை சாற்றின.

“ ‘மத்திய அரசே... மத்திய அரசே...என்ற முழக்கத்தை ஒலிப்பெருக்கியில் கேட்ட கட்சித் தொண்டர்கள், கூட்டத்தின் முடிவில் கிடைக்கப் போகும் பிரியாணியை நினைத்து கிளிப்பிள்ளைகளாய் மாறினர்.

பனிரெண்டு மணிக்கெல்லாம் ஆர்பாட்டக் கூட்டம் முடிந்துவிட்டது.

சாங்கியமாக கல்யாண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்ட சிலர் மாலை விடுவிக்கப்படுவார்கள். ஊடகங்களில் ‘பிரேக்கிங் நியூஸில் இந்த ஆர்பாட்டமும் வந்துபோனது.

“நீங்க போங்க முருகன்.விடை கொடுத்த ‘டி எஸ் பி. ஸ்டேஷனுக்கு “எஸ் பி’யோட ‘ஜீப் போவுது.., அதுல போயிடுங்களேன். என்று ‘ஐடியாவும் கொடுத்தார்.

“தேங்ஸ் சார் ..! கடைத்தெருவுல ஒரு வேலை இருக்கு. என்னோட மொபைல் ரிப்பேருக்குக் கொடுத்துருக்கேன். வாங்கிக்கிட்டு ஆட்டோவுல போயிடறேன் சார்../

ஓ. கே..உங்க இஷ்டம்.

டைத்தெருவிற்குப் நடந்து போனபோதுதான் அது நடந்தது.

சாலையின் ஒரத்திலிருந்த ஒரு வீட்டிலிருந்து பலூன் ஒன்று பறந்து வெளியில் வர அதைப் பிடிக்கும் ஆவலுடன் அதைத்துரத்திக்கொண்டே அந்தக் குழந்தை ஓட எதிர் திசையிலிருந்து கண்மூடித்தனமான வேகத்துடன் வந்த புல்லட்... குழந்தையின் மிக அருகில்...வந்துவிட... எட்டப் பார்த்துக்கொண்டிருந்த ஜனங்கள் இதைப் பார்க்கவில்லை. வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்துகொண்டே “பாப்பா... என்றும் “யாருனா காப்பாத்துங்களேன்...! அந்தக் தாயின் கதறல் அந்தக் கடைத்தெருவின் சத்தத்தில் கரைந்து போனது.

கதறல் கேட்ட முருகன் குழந்தைக்கு முன் தாவி ஓடி குழந்தையை அப்பால் நகர்த்திக் காப்பாற்றிவிட்டார்.

ஆனால் பக்கவாட்டில் இடித்து முருகனைக் கீழே தள்ளிவிட்டு தானும் விழுந்தான் ‘புல்லட் வாலிபன்.

கூட்டம் கூடிவிட்டது.

கடைத்தெரு ‘பீட்டில் ட்ராஃப்பிக் பார்க்கும் நாராயணசாமி “முருகன் சார்..என்று கத்திக்கொண்டே அருகில் வந்தார்.

108 ம் வந்தது.

“என்னங்க... என்னாச்சு… கை, கால், முகம் என பிளாஸ்திரிகளும், கட்டுக்களுமாய் இரவு 7 மணிக்கு வந்த முருகனைப் பார்த்ததும் பதறிப்போய் கேட்டாள் வள்ளி.

“ஒண்ணும் பிரச்சனையில்லே வள்ளி... ஸ்கூட்டர் விபத்து... என்ற கணவரின் காயங்களையும் கட்டுக்களையும் தொட்டும் தடவியும் வேதனைப் பட்டாள் வள்ளி.

“சாரி ! வள்ளி, மதியம் லீவு கூடப் போட்டுட்டேன். உன்னோட வெளீல வரமுடியாம இப்படி ஆயிருச்சு...! என்றவர் வள்ளியையே உற்றுப் பார்த்தார்.

“பரவாயில்லீங்க...! உங்களோட போனா சந்தோஷமா இருந்திருக்கும். நீங்க வல்லியா...! நான் பக்கத்துப் ‘போர்ஷன் லெட்சுமிய கூட்டிக்கிட்டு போயிட்டு வந்துட்டேன்.

“எங்கே..?

“டாக்டரம்மாகிட்டேதான்... பயப்படாதீங்க. நாளு தள்ளிப் போச்சா... அதான். நீங்க அப்பாவாகப் போறீங்க..

“எங்கே? என்று கேட்டால் ‘“சஸ்பென்ஸ்’” என்று சொல்லிவிட்டு, ஓட்டலுக்கோ, மால்க்கோ, கோவிலுக்கோ.. அழைத்துச் செல்பவள், இன்று அப்பாவாகப்போறீங்க என்ற சஸ்பென்ஸ்ஸைக் கேட்ட மகிழ்ச்சியில் வள்ளியை ஆரத் தழுவிக்கொண்டார் முருகன்.

******************************************************************************

 
வரதராஜன் A, @ ஜூனியர்தே‌ஜ், 
M.A(English).,M.Sc,(Counselling Psychology)., B.Ed.,CLIS.
உளவியல்ஆலோசகர்
11B/32 - திருமஞ்சனவீதி, 
சீர்காழி- 609110. செல் - 6381377969.
varadhushakespeare@gmail.com
https://junior-tej.blogspot.com/

 

Comments

  1. காவல்துறையின் செயல்பாடுகள் அறிய முடிந்தது.
    முருகன் விபத்தில் சிக்கினாலும் கதை சுபமாக முடிந்ததில் மன திருப்தி!

    ReplyDelete
  2. "அப்பாடா" என்று இருந்தது... கதை அருமை...

    ReplyDelete
  3. நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  4. கதை நிறைவாக இருந்தது நண்பரே... - கில்லர்ஜி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)