62. இட்லி (சிறுகதை)
https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-short-story-about-books
62. இட்லி
-ஜூனியர் தேஜ்
23.04.2022 (உலக புத்தக தினத்தன்று) விகடனில் பிரசுரம்
மணி
இரவு 9.30.
அமைச்சர் அமலனின் கார் ஊருக்குள்
நுழைந்தது.
பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு,
வாழ்க கோஷம், கட்சிக்காரர்கள் ஷால் போர்த்தல், பத்திரிகையாளர் சந்திப்பு என எல்லா
சம்பிரதாயங்களும் சமுதாயக்கூடக் கட்டடத்தில் முறைப்படி விமரிசையாக நடைபெற்றன.
எல்லா வழக்கமான சடங்குகளும் முடிந்தபின். அவர் தங்குவதற்காக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் முத்து...
தங்கும் அறை சுத்தமாகவும்
சுகாதாரமாகவும் இருந்ததால் இரவு
நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தார்.
ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு
வந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் அதாவது ஏழரை மணிக்கு ஆசாமி
அமலன்..., ‘அமைச்சர் அமலன்’ கெட்டப்புக்கு
வந்துவிட்டார்.
அவரை அலுவலக அறைக்கு அழைத்துச்
சென்றார் முத்து.
அமைச்சருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட
அந்த ஏசி அறையிலிருந்த மேசையில் கலைக்களஞ்சியங்களின் புத்தம் புதிய பதிப்பான 20
வால்யூம்களும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவர் வந்திருப்பது நூலகத் திறப்புவிழாவிற்கல்லவா...! அதனால்தான் அமைச்சரைக் கவர்வதற்காக இப்படி ஒரு ஏற்பாடு.
புத்தக அடுக்கைப் பார்த்தார்
அமைச்சர். சைவம் சாப்பிடும் ஒருவர் தனக்கு முன்னே பரத்தி வைக்கப்பட்ட அசைவ உணவுகளை
பார்ப்பதைப் போல் இருந்தது அவரின் பார்வை. ‘இதுக்கு பதிலா கரன்ஸியா அடுக்கி
வெச்சிருந்தா எவ்வளவு நல்லாருந்திருக்கும்...!’ வாசித்தல் அனுபவமற்ற அந்த
வெறுமையான மனதில் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்...!
சுடச்சுட சாப்பாட்டு மேசையில்
வைக்கப்பட்டிருந்த இட்லி, சட்னி, சாம்பார்,
பொங்கல், வடை அனைத்தும் கலந்து பரப்பிய
நறுமணம் மந்திரியை வசப்படுத்தியது. நாவில் எச்சில் ஊறியது.
“அய்யா...!”
“யாரு...!
உள்ளே வரலாம்... வாங்க...!”
‘..................’
“முத்துவா...!
வாங்க... ... என்னா சேதி...?”
“டிபன் எடுத்துக்கறீங்களாய்யா...? இலை
போட்டுப் பரிமாறட்டுங்களா...?”- கையில் கொண்டு வந்திருந்த ஒரு நடுநிலை
நாளிதழை மேசையில் வைத்தபடியே பண்போடும் பாசத்தோடும் கேட்டார்.
“இப்ப வேண்டாம் முத்து... கொஞ்ச நேரம்
போவட்டும்...”
“சரிங்கய்யா...! எப்ப வேணுமோ என்னை
அழைங்கய்யா... வரேன்…”
“ம்...!”
"இப்ப வேண்டாம்...!" என்று முத்துவிடம் சொல்லிவிட்டாரே தவிர… கிராமத்து சமையல் மணம் மூக்கைத்
துளைக்க, உடனே சாப்பிட மனதும், நாக்கும் ஏங்கிப் பரபரத்தது.
பிறகு சாப்பிடுவதாகச் சொல்லி அனுப்பிய
பின், முத்துவை உடனே அழைத்துப் பரிமாறச் சொல்ல கூச்சமாக இருந்தது அவருக்கு.
ஹாட்பாக்
திறந்து, வேறு வழியின்றி, இட்லிகளைத் தானே பரிமாறிக் கொண்டார். வழக்கம்போல சட்னி
சாம்பார் தொடாமல் முதல் விள்ளல் இட்லியை வாயில் போட்ட போது, அது வாய்க்கெட்டாமல்
வேட்டி சட்டைமேல் பரவலாய் சிதறியது.
பார்வையைத் தாழ்த்தி உடுப்புக்களைப்
பார்த்த அவர் முகம் இறுகிச் சுருங்கின.
பரபரத்தன கைகள். சுற்றுமுற்றும் அலைந்தன கண்கள்.
மேசையில் முத்து வைத்துவிட்டுப் போன
அன்றைய செய்தித்தாளைப் பார்த்தார். உடுப்பில் பட்ட கரையை நீக்க, உடுக்கை இழந்தவன்
கை போல, நாளிதழின் முதல் பக்கத்தை வெடுக்கென பிடித்திழுத்தார். கடைசீ பக்கத்தையும்
சேர்ந்துக்கொண்டு கைக்கு வந்த பேப்பரை..., அவசரமாய் அதைக் கசக்கிப் பந்தாய்ச்
சுருட்டியது இடது கை.
உடையிலிருந்த இட்லித் துணுக்குகளை காகிதப்
பந்தால் நளினமாய்த் தள்ளிவிட்டார். சாப்பிட்டு முடிக்கும் வரை எதற்கும்
இருக்கட்டுமே என்று மேசை
ஓரமாய் காகிதப்பந்தை வைத்தார்.
நாளிதழின்
மற்ற மற்றப் பக்கங்கள் தாறுமாறாய் பிரிந்துப் பரவிச் சிதறிக் கிடந்தன...
முதல் பந்தில் அலட்சியமாக விளையாடி,
அனுவிழையில் அவுட் ஆகாமல் தப்பித்த கிரிக்கெட் மட்டை வீரன், சதமடிக்கும் வரை
எப்படி சுதாரிப்பாய் இருப்பானோ அப்படிப் பட்ட ஒரு சுதாரிப்பு.
மீண்டும்
இட்லித் துணுக்குகள் ஏதும் உடையில் விழாதவாறு எச்சரிக்கயாகவும் பொறுமையாகவும் ரசித்து
ருசித்துச் சாப்பிட்டார்.
சாப்பிட்ட இலையோடு,
குப்பைக்கூடைக்குள் அடைக்கலமானது அந்தக் காகிதப் பந்து.
முத்து
ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை
முடித்துக் கொண்டவன். மேற்கொண்டு படிக்க ஆர்வம் இல்லாததால் அப்பாவுக்கு
ஒத்தாசையாக விவசாயத்தில் இறங்கினான்.
அப்பா, கடன் சுமையால் இருந்த கொஞ்ச நஞ்ச
நிலபுலங்களையும் விற்றதும், விவசாயக் கூலி ஆனான் முத்து.
உழவு,
பரம்படி, நாற்றுவிடல், நடவு, களையெடுப்பு, அறுவடை... என இடைவெளி விட்டு விட்டு
அந்தந்த ஸீஸனில் விவசாயக் கூலி வேலையில் ‘பிஸியாக’ இருப்பான் முத்து. இதில்
வருகிற வருமானமே ஒண்டிக்கட்டையான அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
வேலை இல்லாத மற்ற நாட்களில்
முத்துவுக்கு அடைக்கலம் தந்தது அந்தக்
கிராமத்து நூலகம்தான்.
நூலகர் இளங்கோவனின் நம்பிக்கைக்கு
உரிய பால்ய நண்பர் முத்து. முறையான பள்ளிப் படிப்பு இல்லையென்றாலும், இலக்கிய வாசிப்பில்
இமயமாய் நிற்பவர்.
பத்துக்குப் பத்து அறையில், சில நூறு
புத்தகங்களே இருந்த அந்த கிராமத்து நூலகம்தான் முத்துவின் மூளையில் அறிவு
மடிப்புகளை அள்ளிக் கொட்டியது. மாதமொருமுறை டவுனில் இருக்கும் தலைமை
நூலகத்திலிருந்து பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த புத்தகங்களை எடுத்து
வருபவர் அல்லவா முத்து...
நிறை குடமாய் தளும்பாமல் நின்றார்
முத்து.
தான்
பிறந்த ஊர் என்பதாலும், முக்கியமாக, நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் வாக்குறுதி
அளித்ததாலும், தேர்தல் முடிந்த கையோடு, அமைச்சரின் பெருமுயற்சியால் ஒதுக்கப்பட்ட
அரசு நிலத்தில் அவசர அவசரமாக பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டார்கள்.
கல், மணல், சிமெண்ட், கம்பிகள்,
ஜல்லிகள் என வந்த வண்ணம் இருக்க, கட்டுமான வேலைகள் துரிதகதியில் நடந்தன...
நடந்தனவா இல்லையில்லை ‘ஓடின’
என்பதே பொருத்தம். ‘அமைச்சரின்
தொகுதியல்லவா..?’
ஆறு மாதத்திற்குள் கட்டடம் எழும்பிவிட்டது.
புத்தக அலமாரிகள், மேசை நாற்காலிகள்,
கணினி, பேரேடுகள், மற்றத் தளவாடச் சாமான்கள், அலுவலக உபகரணங்கள், என அனைத்தும்
முறையாக பதிவேட்டில் பதியப்பட்டு, அதனதன் இடத்தில் பொருத்தி வைத்தாயிற்று.
நூலகர் இளங்கோவன் உறுப்பினர் சேர்க்கைக்காகக் கிராமம் கிராமமாக அலைந்து கொண்டிருக்க, நூலகத்தை முறையாகப் பராமரிக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க முத்து வசமே இருந்தது. முத்துவின்மேல் அவ்வளவு நம்பிக்கை நூலகருக்கு. அவருக்கு மட்டுமில்லை. அங்கு வரும் வாசகர்களுக்கும்தான்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு
அரசாங்கம் விலையில்லாப் புதுப் புத்தகம், புது நோட்டு வழங்கியவுடன், அதன் வாசனையை
நுகர்வதும், அதற்கு அட்டை போடுவதும், லேபிள் ஒட்டுவதும், பெயர் எழுதுவதும்,
அடுக்கி வைப்பதுமாக இருப்பார்களே..அது போல...
கட்டுக் கட்டாக ஸ்பீடு போஸ்ட்டு
மூலமாகவும், கொரியர் மூலமாகவும், பார்சல்
வண்டியுலுமாக வந்து இறங்குகிற புத்தகக் கட்டுக்களைப் பூப்போல நளினமாய்ப் பிரித்து...
இலக்கியம், வரலாறு, ஆன்மீகம், பொது... என இனம் கண்டு, நூலக முத்திரை குத்தி,
எண்கள் எழுதி, பதிவேட்டில் பதிவு செய்து,
ராக்கைகளில் அதற்குரிய இடத்தில் அடுக்குவதில் மும்மரமாக இருந்தார் முத்து. அவருடைய
அந்த ஈடுபாட்டைக் காணும்போது பள்ளி நாட்களில் இழந்ததை இப்போது பெறத்துடிப்பது போல
இருக்கும்.
அந்த வேலைகள் ஒரு புறம் இருக்க,
நூலகத் திறப்பு விழாவிற்கு வரும் அமைச்சரைப் பிரத்யேகமாகக் கவனித்துக்
கொள்ளவேண்டிய பொறுப்பும் முத்துவிடமே கொடுக்கப்பட்டிருந்ததால் தேனீயைப் போல
ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தார் அவர்.
கொரோனாவின் உண்மைநிலை அமைச்சருக்குத்
தெரிந்திருந்ததாலோ என்னவோ...! முத்துவைத் தவிர மற்ற எவரையும் தன்னிடம்
நெருங்கவிடவில்லை அமைச்சர்.
வேலை பளு அதிகமாக இருந்தாலும் ‘மைண்ட்ஃபுல்னெஸ்ஸோடு’ ஒவ்வொன்றையும் செய்வதால், அவர்
முகத்தில் சோர்வே தெரிவதில்லை.
“அய்யா...!”- பணிவாக அமைச்சரின் முன் வந்து
நின்றார் முத்து.
“வாங்க முத்து.. சாப்பிட்டீங்களா..?’
“இனிமேதான் அய்யா...நீங்க...”
“நான் சாப்டேன் முத்து. நீங்க இந்த
இட்லியை சாப்பிடுங்க ..”
“சரிங்கய்யா...!”
".............."
“அய்யா சிஎம் மின்னஞ்சல்ல வாழ்த்து
அனுப்பியிருக்காங்கய்யா.. படிக்கட்டுங்களா...?” விநயமாகக் கேட்டார் முத்து.
“படிங்க...!”
“நூலகங்கள் அறிவுத் தேடலை நிறைவு செய்கின்றன. வாசிப்பும், வாசிப்பின் வழியே உருவாகிற சிந்தனையும் மனிதனைப் பொதுவான நிலையிலிருந்து விடுவித்து சிறப்பானதொரு மேம்பாட்டிற்குத் தூக்கிச் செல்கின்றன. “ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” - என்று மேல்நாட்டு அறிஞர் விக்டர் ஹியுகோ கூறுவார். நூலகத்தைத்
திறந்து வைத்து சிறைச்சாலைகளை மூடிய மாண்புமிகு அமைச்சர் அமலனை மனமார வாழ்த்துகிறேன்.’
அமைச்சர் முகத்தில் பெருமிதம் மிதந்தது.
“இந்தச் செய்தித்தாள் இப்பத்தான்
வந்ததுய்யா...! நூலகப் பின்னணில நீங்க உட்கார்ந்திருக்கிற புகைப்படத்தோட,
முழுப்பக்க திறப்பு விழா விளம்பரம் பாருங்க…!” என்று சந்தோஷமாகக்
கூறிக்கொண்டே கைப்பைலிருந்து நாளிதழை உருவி எடுத்தபோது, கையில் கட்டியிருந்த
கைக்கடிகாரத்தின் ஸ்டீல் பட்டையில் மாட்டி ஓரத்தில் சற்றே கிழிந்துவிட்டது... துடிதுடித்துப்போய்விட்டார்
முத்து.
அடையாளத்துக்காகக் கூட புத்தகத்தின்
ஓரம் மடிப்பதை விரும்பாதவர் அல்லவா அவர். பதறாமல் என்ன செய்வார்.
ரத்தக் காயம் ஏற்பட்டுவிட்டால் கவனமாக
சுத்தம் செய்து மருந்திட்டு நேர்த்தியாய் பிளாஸ்திரி போடும் மருத்துவ நிபுணர் போலச்
செயல்பட்டார் முத்து.
குறிப்பெடுப்பதற்காக எப்போதும் தன்
சட்டைப்பையில் மடித்து வைத்திருக்கும் வெள்ளைத்தாளை எடுத்து செவ்வகமாகக் கிழித்து,
இடக்கையில் வைத்துக்கொண்டு...... மந்திரி காட்டிய ‘இட்லி’ யிலிருந்து ஒரு விள்ளல் கிள்ளித்
துண்டுக் காகிதத்தில் பசையாகத் தடவி நாளிதழின் கிழிசலை முறையாய் ஒட்டி, ஒட்டிய
இடத்தைக் கைக்குட்டையால் துடைத்துவிட்டு அமைச்சரிடம் கொடுத்தார் முத்து.
குப்பைக்
கூடையில் சுருட்டி வீசப்பட்ட செய்தித்தாள் பந்தும், மேசையில் தாறுமாறாய்க் பறந்து கிடக்கும் நடுநிலை
நாளேட்டின் மிச்சப் பக்கங்களும் , தன்னை கேவலமாகப் பார்ப்பதாகத் தோன்றியது
அமைச்சருக்கு.
கழிவிறக்கத்தில் கலங்கினார்.
தனது மூளையில் நிகழும் ரசாயன
மாற்றத்தை மந்திரியால் உணர முடிந்தது.
********
இந்தியாவில் (தான்) அமைச்சராக ஆவதற்கு படிப்பறிவும் தேவையில்லை;
ReplyDeleteதுறை பற்றிய அறிவும் தேவையில்லை!
படிக்காத முத்துகளும் பாரினில் உண்டு!
உலக புத்தக தினமான இன்று இக்கதையை வெளியிட்டது வெகு பொருத்தம்!
ஒரு நூலகம் திறக்கப்படும் போது 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன 👍👏 அருமை
ReplyDelete