29. ஜக்கம்மா சொல்றா (ஒரு பக்கக் கதை)
29. ஜக்கம்மா சொல்றா...
-ஜூனியர் தேஜ்
( நகைச்சுவை எழுத்தாளர் நந்து சுந்து அவர்கள் தமிழக எழுத்தாளர்
வாட்ஸ் ஆப் குழும உறுப்பினர்களுக்காக நடத்திய ‘விட்டலாச்சாரியா கதைப் போட்டி’யில் பரிசு பெற்ற கதை.)
"ஷ்ஹ்ஹ்க்க்யூவ்வ்வ்...!!!" விகாரமானஅப்பாசாமியின் கத்தலைக் கேட்டு
ஓடோடி வந்தாள் மனைவி .
பதறிய அம்மாமணி கணவர் நெற்றியில் புறங்கையை வைத்தாள். காய்ச்சல் இல்லை. 'குப்'பென வேற்காததால் ஹார்ட் -அட்டாக்குமில்லை.
கை கால்கள் நடுங்க கண்கள் செருக வாய் குழறிய அப்பாசாமியை "என்னங்க" என்று உலுக்கினாள் அம்மாமணி.
"ஷ்..ஷ்..ஷ்..ஷ்.....ஊ...ஊ..ஆ..ஆ..ஆ........ " என்ற முனகலும் ஓய்ந்து கிலி பிடித்தாற்போல் இருந்தார்.
“அந்தீலே புளியமரத்தடீல படிக்காதீங்கனு தலபாடா அடிச்சுக்கிட்டெனே. காத்து கருப்பு
அடிச்சிருச்சே" நாட்டு வைத்தியர் நாடி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மாமியார்காரி புலம்பினாள்.
"காத்து கருப்பேதான்." என்று உறுதி செய்து மாந்திரீகம் மாணிக்கம் தான் இதுக்கு ஒரே வழி என்றாள் சாமியாடி சரசு.
"கரோனா வந்து நாளிலிருந்தே புளியமரத்தடியிலதானே பேப்பர் படிப்பாரு.. இன்னிக்கு மட்டும் காத்து கருப்பு, காட்டேரியெல்லாம் எப்படி..எனத் தொடங்கி மந்திரவாதியிடம் விவரமாக சொன்னாள் அம்மாமணி.."
கருப்புத் துணியணிந்து, பன்றித்தோல் போர்த்தி, முப்பத்தாறு கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தி, தொடுக்கப்பட்ட குருத்தெலும்பு மாலை, எருக்கம்பூ மாலையுடன் கண்கள் சிவந்து, கோரைப் பற்களுக்கு இடையே தொங்கிய மாமிசப் பிண்டம் கக்கும் ரத்தத்துடனிடமிருந்த ஜக்கம்மா உருவத்தின் முன்- கபாலம் மயான சாம்பல் முடி கயிறுகள் தாயத்துகள் மை தடவிய வெற்றிலை, கண்டங்கத்தரி குளிகன், செப்புத் தகடுகள், உருவாரங்கள் இத்யாதிகளுடன், மிளகாய் புகை மூட்டத்தின் நடுவில் இருந்த மந்திரவாதிக்கு காரணம் தெரிந்து விட்டது. உடுக்கையொலியோடு "ஓம்...ஐம்...ஹ்ரீம்...க்லீம்....ஹம்....ஹிம்...ஜிம்...ரம்.......ஜய் ஜக்கம்மா...என்று இடிபோல 120 டெசிபலில் முழக்கமிட்ட மந்திரவாதி மாணிக்கம்..."ஜக்கம்மா சொல்றா..." என்று எல்லோரையும் வெளியேற்றிவிட்டு அப்பாசாமி வாத்தியாரின் காதுகளில் 30 டெசிபலில் ஏதோ முணுமுணுத்தார்.
அடுத்த நொடி "அப்படியா சந்தோஷம்" என்று குதித்து ஒரு நடனமே ஆடிவிட்டார் அப்பா சாமி.
"வாத்தியார் சாரை நியூஸ் பேப்பர் படிக்க விடாதீங்க" என்று பரிகாரம் சொல்லி அனுப்பிவிட்டார் மந்திரவாதி.
"கரோனாவால பள்ளிக்கூடப் பக்கமே போகாத அப்பாசாமிக்கு "ஜனவரி 19ல் பள்ளித்திறப்பு" ன்னு தலைப்புச் செய்தியை படிச்சதும் கிலி பிடிச்சுகிச்சு.
"ஸ்கூல் இப்போதைக்கு திறக்கமாட்டாங்கன்னு ஜக்கம்மா சொல்றா" ன்னு சொன்னதும் சுய நினைவுக்கு வந்துட்டார் வாத்தியார்"என்று மந்திரவாதி சிஷ்யனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...
போன மச்சான் திரும்பி வந்த கதையாய் அப்செட் அப்பாசாமியோடு வந்த கூட்டம் "வாட்ஸ்அப் பார்த்தாரு பழையபடி ஆயிட்டாரு" என்றார்கள்.
"இப்போது என்ன செய்வது?" மனசுக்குள் கேட்டுக் கொண்டான் மந்திரவாதி.
**********************************************************
Comments
Post a Comment