25. அனாத ரட்சகன் (ஒரு பக்கக் கதை)

25. அனாத ரட்சகன் (ஒரு பக்கக் கதை)

                                                              -ஜூனியர் தேஜ்

நவம்பர் (12-19)2021 ஆதிரை மின்னிதழ்

ஆற்றங்கரை அருகே அமைதியான சூழலில் இருந்தது காசி விஸ்வநாதர் கோவில்.

"அனாத ரட்சகா...!  ஆபத்பாந்தவா....! " பக்தர் ஒருவர் வாய் திறந்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

மிகவும் அவசரமாகவும், எளிமையாகவும் தங்களுக்குத் திருமணம் நடைபெற்ற அந்தக் கோவிலில் புதுமணத் தம்பதியரான சந்திரா- சரண்யன்,  தீபாவளித் திருநாளன்று  சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர் .

அபிஷேகச் சாமான்கள் வஸ்திரங்கள் எல்லாம் முதல் நாள் இரவே வந்து இறங்கி விட்டன.

விடியற்காலையில் விநாயகர், முருகன்விஸ்வநாதர்,   விசாலாட்சி, தக்ஷிணாமூர்த்தி , நடராஜர், சிவகாமி,         63 நாயன்மார்கள், மற்றும் அனைத்து பரிவார தேவதைகள், நவகிரஹங்கள் அனைத்திற்கும்  நல்லெண்ணை தேய்த்து முறைப்படி அபிஷேகம் முடிந்து சிரத்தையாய் தைக்கப்பட்ட வஸ்திரங்கள் அணிந்து  அருள்பாலித்துக்கொண்டிருந்தன

அருகாமைக் குருக்கள் வீட்டில் சிரத்தையாய் செய்யப்பட்ட புளியோதரை, தயிர் சாதம், தேங்காய் சாதம், வடை, சர்க்கரைப் பொங்கல், சுண்டல் அனைத்தையும், ஈயம் பல்லிளித்த ஈரத்துணியல் மூடிய பித்தளை கோவில் தாம்பாளத்தில் வைத்து ஒவ்வொரு சன்னதியாக மணியடித்து நைவேத்தியம் முடித்தது.

          சந்திரா சரண்யன் ஆசையாக வாங்கிக் கொடுத்த புது வஸ்திரத்தை அணிந்து கொண்ட வயதான குருக்கள் தம்பதியர் எதிரே புத்தாடையுடன் நமஸ்கரித்த சந்திரா, சரண்யனை "அடுத்த தீபாவளி வாரிசோடு கொண்டாட வேண்டும்." என்று மனதார வாழ்த்தினர்.

          இவர்கள் கையால் பிரசாதம் பெற்ற ஊர் ஜனங்களும் இவர்களை மனதார வாழ்த்தினர்.

         வீட்டை மீறிக் காதல் திருமணம் செய்து கொண்டாலும், பெற்றோரை மதித்துப் பல வழிகளில் அவர்களைச் சமாதானம் செய்யும் முயற்சி மொத்தமாய்த் தோற்றது.

"இனிமே எந்த காலத்திலேயும் வீட்டு வாசப்படி மிதிக்கக்கூடாது .." என்று இரு பக்கப் பெற்றோரும் கண்டிப்பாய் கூறிய பிறகுதான் தலை தீபாவளியை, தங்கள் திருமணக் கூடமாகிய  காசி விஸ்வநாதர் கோயிலில், தெய்வ அனுக்ரஹத்தோடும், திருமணம் செய்து வைத்த குருக்கள் தம்பதியரின் ஆசியோடும் விமரிசையாகக் கொண்டாடும் முடிவுக்கு வந்தார்கள்.

இறைவனை அநாத ரட்சகன் என்று விளிப்பதற்கு உண்மையான பொருள் புரிந்தது புது மண தம்பதியருக்கு.

*********************


Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)