65. விவசாயி (ஒரு பக்கக் கதை)

விவசாயி (ஒபக)

                                      -ஜூனியர் தேஜ்

கதிர்ஸ் – (1-15 மே 2022)

      வைத்திலிங்கம் ஒரு சிறு விவசாயி.

கடன், கைமாற்று, என வாங்கிச் சாகுபடி செய்த நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது.

"முன்னேரத்துலயே வந்து வேலையை முடிச்சிக் கொடுங்களேன் புண்ணியமாப் போவும்..?" அறுவடை மெஷின் அன்னங்காரிடம் கெஞ்சுவது போலக் கேட்டார்.

"சொல்றீங்க ! காலையில ஏழு மணிக்கெல்லாம் வந்துடுறேன்...  ‘மேலே சேர்த்துப் போட்டு கொடுங்க….ய்யா!தலை சொரிந்தார் அன்னங்கார்.

ரியாக ஒன்றரை மணி நேரத்தில் அறுவடை முடிந்து நெல்லும் வைக்கோலும் பிரிந்துவிட்டது.

இரண்டு மணி  நேரத்துக்கான கூலியை பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி செய்துவிட்டார் அன்னங்கார்.

மண்டையைப் பிளக்கும் வெயில்.

களத்தில் நெல்லைத் திராவிக் காய வைத்துவிட்டு.., ஒரு எட்டு  ‘டி. பி. சி வரை ஓட்டமும் நடையுமாகச் சென்றார்.

முன் பதிவை அனுசரித்து  3 மணிக்கு நேரம் ஒதுக்கினார்கள்.

மழையில் கிழையில் அடி படாத கண்டுமுதல்.  களத்தில் சுக்காய்  காய்ந்த பொன்போன்ற  நெல், கோணிச் சாக்கில் புகுந்து  மாட்டு வண்டியில் பயணித்தது.

வேறு ஆள் இல்லாததால் 3 மணிக்கெல்லாம் ஆளும் பேருமாக சாக்கு மாற்றினர்.

 40 கிலோ மூட்டைக்கு , 44  கிலோ எடை வைத்து அளந்து கொடுத்துவிட்டு 4 மணிக்கெல்லாம் வங்கிக் கணக்கில் பணம் ஏறிவிட்டதற்கான  மெஸேஜ் பார்த்தார் வைத்திலிங்கம்.

விதை விட்டது முதல் இன்று வரை, விவசாய நிமித்தம் பெற்ற நகைக்கடன், கைமாற்றுக் கடன, சொசைட்டிக் கடன் என அனைத்தையும் கணக்கிட்டார்.

             வீட்டுக் கொல்லையில் நிற்கும் மா மரத்தை வெட்டி விற்றுவிட்டால் மொத்த கடனும் அடைந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது

வசரஅவசரமாக வீட்டுக்குப் போய் ஸ்மார்ட் கார்டும் பையுமாக ரேஷன் கடைக்கு வந்தார்  இலவச அரிசி 20 கிலோ வாங்குவதற்காக.

               ************************************************



 

 

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வைத்திலிங்கம் போலத்தான் இன்றைய விவசாயிகளின் நிலை!
    கடனை வாங்கி பயிர்செய்து உழைத்து அறுவடை செய்தால், கடனை அடைக்கவே கண்டுமுதல் தேறுவதில்லை!
    பாவம் அரிசி வாங்க ரேஷன் கடைக்குப் போகவேண்டி இருப்பதே இன்றைய சோக நிலை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை