13. கருப்பு அப்பா (ஒரு பக்கக் கதை)
13. கருப்பு அப்பா
-ஜூனியர் தேஜ்
(கதிர்ஸ் - பிப்-16-28-2021)
டீச்சர் வகுப்பில் நுழைந்ததுமே முத்துவை எழுப்பினார்.
“இன்றைக்கும், பேரண்ட்டை அழைச்சிக்கிட்டு வரலியா
நீ...?”
டீச்சரின் கேள்வியால் வெட்கித் தலை குனிந்தான்
முத்து.
சுண்டினால் சிவக்கும் செம்மேனியுடையத் தன் வகுப்புத் தோழர்களின் அப்பாக்களோடு,
கருத்த மேனியும் தும்பையாய் வெளுத்த தலையுமாயிருக்கும் தன் அப்பாவை ஒப்பிட்டு...!
அதனால் தாழ்வு மனப்பான்மை முத்துவுக்கு.
‘நான் என்ன பாவம் பண்ணினேன்...! எனக்கு மட்டும் ஏன்
அட்டைக் கரியில் அப்பா..?’
வேதனையோடு வீடு திரும்பிய முத்துவுக்கு அதிர்ச்சி.
அந்த குப்பத்திலேயே சிறிய ஓலைக் குடிசையின் முன் கலெக்டரின்
சைரன் வைத்த கார். ஆங்காங்கே நின்றனர் அரசு அலுவலர்கள்.
‘என்னமோ ஏதோ...!’ என்றப்
பதட்டத்துடன் குடிசையை நெருங்கினான் முத்து.
“நாளைக்கு,
டவுன்ல அமைச்சர் தலைமையில் ‘அரசு-விழா’ நடக்கவிருக்குது;
அந்த விழாவுல, இயற்கை விவசாயத்தில் நிறைய
சாதனையும், விவசாயத்துல புதுப் புரட்சியும் செய்து, மற்ற விவசாயிகளுக்கு
முன்னுதாரணமாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கற உங்களைப் பாராட்டி கௌரவிக்க
இருக்கோம்...!;
அதுக்கு ‘ஸ்பெஷலா’ ‘வெல்கம்’ பண்ணத்தான், அமைச்சரின் சார்பா நான் வந்திருக்கேன் ஐயா...!”
முத்துவின் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் கலெக்டர்.
முத்துவின் மனதில் இப்போது கருப்பு வைரமாய் ஜொலிக்க
ஆரம்பித்தார் அப்பா.
Comments
Post a Comment