19. நுனிப்புல் (ஒரு பக்கக் கதை)
19.
நுனிப்புல்
ஜூனியர் தேஜ்
(கதிர்ஸ்
– அக்டோபர் 16-31-2021)
‘உரத்து ஒலிக்கும் பெண்ணியம்!’ என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் வாங்கியவர் சாரதா.
சாரதா, திருமணமாகித் தன் கணவரோடு
முதல் முறையாகக் கிராமத்துக்கு வருகிறாள்.
கிராமத்தில், வீட்டு வாசலின் முன் கார் நின்றதும் சாரதா, முதலில் இறங்க, கார் ஓட்டியக் கணவர் அடுத்து இறங்கினார்.
அம்மா, ஆரத்தித் தட்டு எடுக்க உள்ளே சென்ற நேரம் கிராமத்துப் பெண் ஒருத்தியின் பார்வை மன்மதனாக நின்ற ரகுவின் மேல் நின்றது.
பத்து வினாடிகளுக்கு மேல் அந்தப் பெண்ணின் பார்வை ரகுவின்மேல் படவிடாமல் மறைத்துக்கொண்டு நின்றார் டாக்டர் சாரதா.
யார் இவள்?
'கல்யாணம் ஆகாதவளா?'
'கல்யாணமாகி, கணவனால் கொடுமை அனுபவிப்பவளா?'
'வாழா வெட்டியா?'
'டைவர்ஸ் வாங்கியவளா?'
'கணவனை இழந்த விதவையா?'
'மறுமணம் செய்துகொண்டவளா?'
'அதிர்ஷ்டக்கட்டையா?'
'மேனாமினுக்கியா?'
'அபலையா?'
'துக்கிரியா?'
அந்தப் பெண் யார் என அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல் பட்டார் சாரதா.
பக்கத்து வீட்டுட் ‘டிவி’, ‘படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டை கெடுத்தான்...!’ என்று அலறிக்கொண்டிருந்தது.
అఅఅఅఅఅఅఅఅ

Comments
Post a Comment