14. தொங்கல் (ஒரு பக்கக் கதை)
14. தொங்கல்
ஜூனியர் தேஜ்
(கதிர்ஸ் - பிப்ரவரி, 16-28, 2021)
“வழக்கு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது...!" அறிவித்துவிட்டு, ‘மேஜிஸ்ட்ரேட்’ அடுத்த வழக்குக்கு ஆயத்தமானார்.
"சவ்வு இந்த இழு இழுக்கிறாங்களே எப்பதான் முடியப் போவுதோ...!"
அவிழ்ந்தத் தன் முண்டாசை உருவி, உதறி, மீண்டும் தலையில் சுற்றியவாறுத், தனக்குத்தானேப் புலம்பிக் கொண்டார் பக்கிரிசாமி.
"வக்கீல் சமூகம்...! வருஷம் நாலு ஆகுது...! இப்படியே ஒத்தியொத்தி வைச்சிக்கிட்டேப் போனா, எப்போதாம் தீர்ப்பு வரும்...?"
கவலையோடு கேட்டார் வெங்கடேச பண்ணையார்.
“சிவில் வழக்கு, வருஷக் கணக்கில் இழுக்கும்தான். வேற வழியில்லை...!” என்றார் வக்கீல்.
“சீக்கிரம் முடிக்க வழியேக் கிடையாதா...?”
இருக்குப் பண்ணையாரே...! சாட்சிக்காரன் காலில் விழுவறதை விடச் சண்டைக்காரன் காலில் விழுறதுதான்...!” வக்கீல் சிரித்துக்கொண்டேச் சொன்னார்.
பல வருடங்களாக நீதிமன்றத்தில் ‘தொங்கலில்’ இருக்கும் சிவில் வழக்கின் இழுபறியால், வாதி, பிரதிவாதிகளான பக்கிரிசாமிக்கும், வெங்கடேசப் பண்ணையாருக்கும் இடையே, வருத்தம் முற்றிக் கைலப்பு ஏற்பட்டு விடுமோ...!’
வக்கீல்கள் உட்பட அனைவருமே அச்சத்தின் உச்சத்தில் இருந்தார்கள்.
அதே நேரத்தில்…
வாதி மற்றும் பிரதிவாதியின் மகன்கள் முறையே, முத்து, திருமலை இருவரும் பள்ளி நட்போடு, ஜாலியாகக் கட்டை மாட்டு வண்டியின் பின்புறம் தொங்கியபடி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.
అఅఅఅఅఅఅఅఅ
Comments
Post a Comment