10. மைண்ட்ஃபுல்னெஸ் (ஒபக - கதிர்ஸ் – ஜனவரி – 1 - 15 – 2021))
10. மைண்ட்ஃபுல்னஸ்
-ஜூனியர் தேஜ்
(கதிர்ஸ் – ஜனவரி – 1 - 15 – 2021)
அமிர்தா, ஆவி பறக்கும் ‘ஸ்நாக்ஸ்’ மற்றும்
தேநீரோடு வரும்போதெல்லாம் ‘மேனேஜர்’ கரிகாலன் முகம் சுழிப்பார்.
அமிர்தா, அந்த அலுவலகத்தில்
துப்புறவுப் பணியாளர்.
அமிர்தாவின் கணவர் வழக்கமாக,
அலுவலகத்துக்கு, ‘டீ’, ‘ஸ்நாக்ஸ்’ சப்ளை செய்பவர்.
அமிர்தாவின் வருகைக்குப்பின் அலுவலகமே சுத்தமும் சுகாதாரமுமாகத் துலங்கியது.
‘ரெஸ்ட்-ரூமை’ ‘ஆபரேஷன் தியேட்டர்’ அளவிற்கு சுகாதாரமாகப் பராமரிப்பவர் அவர்.
கை, கால், முகம் அனைத்தையும் அததற்குரிய
உறைகளால் கவசமிட்டுக் கொண்டு, ‘மைண்ட்ஃபுல்னஸு’டன் கடமையைச்
செய்யும் துப்புறவு தேவதை அமிர்தா.
‘சமோசா’ மணம் அமிர்தாவின் வருகைக்குக் கட்டியம் கூறியது.
கணவன் கொண்டு வந்து ‘செக்யூரிட்டி’ அறையில்
வைத்துவிட்டுப் போவதை அமிர்தாதான் வழக்கமாகச் சப்ளை செய்வாள்.
“விக்ரமன்
சார்...! இந்த லேடி கொண்டு வர ஸ்நாக்ஸையும், டீயையும்
அருவருப்புப்படாம எல்லாரும் ருசிச்சிச் சாப்பிடறாங்களே...! எப்படி சார்...?” கரிகாலன் கேட்டார்.
“குழந்தை நல
மருத்துவரான’ உங்க மனைவி, கர்பிணிகளுக்கு ‘எனிமா’ கொடுத்து, மலம், ஜலம், சீதம்,
உதிரமெல்லாம் தொட்டுத் துடைச்சு பிரசவம் பார்க்கற கையால நீங்க மூணு
வேளையும் சாப்பிடறதில்லையா...? அது போலத்தான்...!” கேஷியர்
விக்ரமன் பளிச்செனச் சொன்னார்.
தன் நீண்டநாள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த
நிம்மதியில் விக்ரமன் இருக்க, “எனக்கும் ஒரு சமோசா, டீ வைங்க...!” என்றுக் கேட்ட கரிகாலனை வியப்போடு பார்த்தாள் அமிர்தா.
அவள் ‘க்ளவுஸ்’ அணிந்த கை ‘ஹாட்பாக்’கினுள் சென்றது.
అఅఅఅఅఅఅఅఅ
Comments