11.கற்றல் (ஒரு பக்கக் கதை)
11. கற்றல்
ஜூனியர் தேஜ்
(கதிர்ஸ் - ஜனவரி - 16-31-2021)
பிரமிளா, அவள் மகன், மகள், பேருந்து நிலையத்தில் காத்திருந்தக் கல்லூரி மாணவர்கள் உட்படப் பலரும், கையில் செல்போனை வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும், பாட்டுக் கேட்டுக்கொண்டும் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தார்கள்.
ஒரே ஒரு பையன் மட்டும் ஒரு ஓரமாக அமர்ந்து, புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவன் சட்டைப்பையில் ‘ஆண்ட்ராய்டு’ கைப்பேசி இருந்தது.
ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை பிரமிளாவிற்கு.
“பாக்கெட்’ல ‘செல்ஃபோன்’ வெச்சிக்கிட்டுப், கவனமாப் புத்தகம் படிக்கற உன்னைப் பார்த்தா, ரொம்பப் பெருமையாயிருக்கு தம்பி...! இப்படி டிசிப்ளினா வளர்த்த உன் அப்பா அம்மாவை நினைச்சா ரொம்பப் பெருமையாவும் இருக்கு ...” என்றாள் பிரமிளா.
“சொன்னா நம்பமாட்டீங்க ஆன்ட்டி. என் ‘பேரண்ட்ஸ்’ ‘செல்-போன் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்’ எதுவும் சொன்னதேயில்லை ஆண்டி...!”
அந்தப் பையன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பஸ் ஒன்று அருகில்வந்தது.
“அப்பா பஸ் வருது...” என்றான் பின்புறம் திரும்பி.
‘பஸ்-ஸ்டாப்’ பெஞ்சில் உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த அவருடைய அப்பா புத்தகத்தில் ‘புக்-மார்க்’ வைத்து மூடிப் பையில் வைத்துக்கொண்டே எழுந்து வந்தார்.
இப்போது, பிரமிளாவிற்கு உண்மை உரைத்தது. ‘பெற்றவர்களின் செயல்முறைகளைப் பார்த்தேப் பிள்ளைகள் கற்கிறார்கள்...!’ என்று.
అఅఅఅఅఅఅఅఅ
Comments
Post a Comment