68. வெயிட் பண்ணுங்க
வெயிட் பண்ணுங்க (சிறுகதை)
-
ஜூனியர் தேஜ்
(13.05.2022 கல்கி)
இன்று பருவதம் ஆச்சியின் பேரனுக்குப்
பிறந்தநாள். வியாபாரத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டு நாள்
முழுவதும் பேரனோடு செலவிட ஆச்சிக்கு ஆசைதான். வயிற்றுப்பிழைப்பு
இருக்கிறதே.
‘கூடிய மட்டும் சீக்கிரம் வீடு சேரணும்’ என்ற பரபரப்பில்
இருந்தாள் அவள்.
“வாழைத்தண்டும்மோய்…” சீரியலின் சீறும்
டயலாக்குகளையும் மீறி தெருவில் ஓங்கி ஒலித்த பருவதம் ஆச்சியின் குரல் காதில்
நுழைந்தது.
அடுப்பை ‘சிம்’ செய்துவிட்டு டிவி
வால்யூமை குறைத்துக்கொண்டே “தண்டு நல்லாருக்கா..” என்று வழக்கமான
பாணியில் உள்ளிருந்தே குரல் கொடுத்தாள் காமு.
“நல்ல அடித்தண்டும்மா வெண்ணெய் போலக் கரையும்..” என்று
வழக்கம்போலச் சொல்லிவிட்டு படிக்கட்டில் அமர்ந்து களிப்பாக்கை வாயில் போட்டு
வெற்றிலையில் சுண்ணாம்பு தடவினாள் ஆச்சி.
வாசலில் காத்திருக்கும் கீரை ஆச்சியை
மறந்து சமையலில் ஈடுபட்ட காமு “யம்மோவ்..!” என்ற நினைவூட்டல்
குரல் வர ஓடினாள்.
“என் பேரனுக்கு இன்னிக்குப் பொறந்த நாளு தாயி. சீக்கிரம் போவணும்.” என்று ஆச்சி
சொன்னதை காமேஸ்வரி கண்டு கொள்ளவே இல்லை.
தளதளவென்ற பசுமையான இரண்டு முளைக்கீரைக்
கட்டுக்களையும், வாழைத்தண்டையும் எடுத்துக்கொண்டு உள்ளே
சென்றபோது, காமுவின் இடுப்பிலிருந்த செல்ஃபோன் சிணுங்கியது.
காமுவின் வழக்கமான அடுத்த எபிசோட்… பர்ஸ் தேடுதல், சில்லறை தேடுதல், ‘பர்ஸ் இங்கேதானே
வெச்சேன்.’ என்று புலம்பிக்கொண்டே
அங்கும் இங்கும் அலசி பர்ஸை தேடிப்பிடித்து, செட்டில்மெண்ட்
ஆகும் வரை அந்தப் படிக்கட்டிலேயே விதியை நொந்தபடி வழக்கமாக அமர்ந்திருப்பாள் ஆச்சி.
ஆளால் இன்று மொபைல் போன் பேசியபடியே உள்ளே போன
காமேஸ்வரியைப் பார்த்த ஆச்சி “இது கதைக்காவாது…காசு நாளைக்கு வாங்கிக்கிடலாம்...!’’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே
வீடடுக்கு விரைந்தாள்.
அலுவலகம் பிஸியாக இருந்தது.
‘விண்ணப்பம் செலுத்துமிடம்’ என்ற கௌண்டரில்
எவருமில்லை.
அரை மணி நேரம் எதிரிலிருந்த ‘பெஞ்ச்’சில் உட்கார்ந்து பொழுதைக் கழித்தாள்
காமேஸ்வரி.
‘செய்யும் தொழிலே தெய்வம்’
‘வரிசையில் நிற்கவும்’
‘புகார் பெட்டி மேலாளரிடம் உள்ளது’
‘கையூட்டு தருவதும் பெருவதும் பெருங்குற்றம்’
‘சமூக இடைவெளி அனுசரிக்கவும்’
‘மாஸ்க் அணியவும்’
“………………”
ஆங்காங்கே கண்ணில் பட்ட வாசகங்களையெல்லாம்
படித்தபடியும் அலுவலகத்தின் பரவலான நடைமுறைகளைப் பார்த்தபடியும் பொழுதைப்
பிடித்துத் தள்ளினாள். செல்போனில் சிறிது நேரம் செலவழிந்தது. நேரம் தான் போனதே தவிர
கௌண்டர் காலியாகத்தான் இருந்தது.
‘ஒரு வேளை இந்த அலுவலர் விடுப்பில் இருப்பாரோ..?’ சந்தேகம் வர ,யாரை அணுகித்
தெளிவு பெறுவது என்று குழம்பினாள்.
ஏகாந்தமாகச் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த
அலுவலரை அணுகினாள்.
மூக்குக் கண்ணாடியின் மேல்
ஃப்ரேமுக்கும் சுருக்கிய புருவத்திற்கும் இடையே பார்வையைச் செலுத்தி ‘என்னவேணும்?’ என்று
பார்வையாலேயே கேட்டார் அந்த அலுவலர்.
அனிச்சையாய் கை விண்ணப்பத்தைக் காட்ட, “அந்த கேபின்ல வெயிட் பண்ணுங்க.!” என்று விரல்
சுட்டிவிட்டு மீண்டும் செய்தித்தாளில் மூழ்கினார் அவர்.
அரை மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து
பொறுமையிழந்த காமு, மீண்டும் செய்தி வாசிப்புப் பிரியரையே
மீண்டும் அணுகினாள்.
செய்தி வாசித்து முடிந்து இப்போது வாட்ஸ் ஆப்பில்
மூழ்கி இருந்தார் அவர்.
பொருத்திக் கொண்ட
புன்சிரிப்புடன் அருகே வந்த காமேஸ்வரியிடம் “கொஞ்சம் வெயிட்
பண்ணுங்க!” என்றார்.
ஒரு வழியாக அந்த மேசைக்கு
உரியவர் வந்தாயிற்று.
‘வெயிட் பண்ணுங்க’ என்று சொன்ன
பேப்பர் படிப்பாளிதான் அந்த மேஜைக்குரியவர் என்று அறிந்ததும் காமேஸ்வரி ரௌத்ரமானாள். ஆனாலும் அதை
வெளிக் காட்டிக் கொள்ளாது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாள்.
விண்ணப்பத்தின் மேல், கீழ் பாகங்களில்
முத்திரை பதித்து, சுருக்கொப்பமிட்டு ஒரே நிமிடத்தில் ஒப்புகைச்
சீட்டான கீழ்பாகத்தை கிழித்து நீட்டினார் அந்த அலுவலர் .
வீடு திரும்பிய காமேஸ்வரி தன் கோபத்தையும்
ஆற்றாமையையும் கணவரிடம் கொட்டித் தீர்த்தாள் .
“…. …. …. ….”
“கஸ்டமருக்கும்
குடும்பம் குட்டி இருக்கும்னு நினைக்காம, செய்தித்தாள் படிச்சிக்கிட்டு, செல் போன்ல வாட்ஸ்
ஆப் பாத்துக்கிட்டு, ஒரு
நிமிஷ வேலைக்கு ஒரு மணிநேரம் காக்கவெச்ச வயித்தெரிச்சலைச் சொல்றேன்.! நீங்க இப்படி
மௌனமா இருக்கீங்களே?” வருத்தப் பட்டுக்
கத்தினாள் காமேஸ்வரி.
“காமு...! வீட்டு வாசலில் மோர் கொண்டு வந்து விற்கும்
பாட்டி செய்வதும், கீரைவிற்கும் ஆச்சி செய்வதும் கூட சமூக
சேவைதான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. கடமைகள் உள்ளன. தயவு செய்து
அவர்களை அதிக நேரம் காக்க வைக்காதீர்கள்” ன்னு சொல்லியிருக்கார் மூதறிஞர் ராஜாஜி.
“….. ……. …….. …….” காமு எதுவும்
பேசவில்லை.
“சொன்னா வருத்தப்படாதே. வாசல்ல காய்கறி
சுமந்து விற்கிற பருவதம் ஆச்சிக்கும் ஒரு குடும்பம் உண்டுங்கறதை கொஞ்சமும்
நினைக்காம டிவி சீரியல் பாத்துக்கிட்டும், செல்
பேசிக்கிட்டும், மெசேஜ் பண்ணிக்கிட்டும், வாட்ஸ்ஸப்
பார்த்துக்கிட்டும் நீ காக்கவைக்கறப்போ அவங்களுக்கும் இப்படித்தானே இருக்கும்.”
“….. ……. …….. …….”
அடுத்த நாள் பர்ஸோடு வாசலில்
காத்திருந்தாள் காமேஸ்வரி.
Comments
Post a Comment