கலியன் மதவு (அத்தியாயம் 8)

 

கலியன் மதவு (சமூக நாவல்)

                                      -ஜூனியர் தேஜ்

அத்தியாயம் – 8

ஆனந்த விகடன் (01.06.2022)

குடகிலுள்ள பிரும்மகிரியில், தலைக்காவேரியாய், குறுகலாய்த் பிறந்து, அதேபோலக் குறுகலாய் பூம்புகாரில் சமுத்திரராஜனோடு சங்கமிக்கும் முன் காவிரித்தாய்தான் எத்தனையெத்தனைக் குழந்தைகளைப் (கிளை நதிகளைப்) பெற்றுச் சம்சாரியாகிவிடுகிறாள்...!


அதுமட்டுமா, கால்வாய், பாசன வாய்க்கால், கன்னி வாய்க்கால், ஏரி, குளம், குட்டை, கிணறு..., ஆழ்துளைக்கிணறு,.. எனப் பல்லாயிரக்கணக்கான பெயர்த்திகளும், கொள்ளுப் பெயர்த்திகளும், எள்ளுப் பெயர்த்திகளும் பிறந்து, ஒட்டு மொத்த வம்சமும் பாரபட்சமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் தாயாய்அமுதுஊட்டும் அவள் கரிசனம்தான் என்ன...!’

ஒரு முழம் அளவிற்குப் பிறக்கும் பெண் சிசு, கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து, பெரியவளாகிறாள், பூப்படைகிறாள்,  வம்சங்களை உருவாக்குகிறாள்.

இளைத்துக் களைக்கறாள். கம்பீரம் தளர்கிறது. 

குறுகி ஒடுங்குகிறாள்.

இறுதியில் பிரும்மாண்டத்தோடுக் கலந்துவிடுகிறாள் அல்லவா. அதுபோலத்தான் , இந்த நதிப் பெண் காவிரியும் பரிபூரணமடைகிறாள்...!

தள தளவெனப் பம்மி மலர்ந்து, பருவச் செழிப்புடனும், ஊட்டத்துடனும், சுழித்துச் சூல் கொண்டுப் பரவிப் பெருகி வரும் அவள் இரட்டைக் குழந்தைகளைப் பெறுகிறாள் முக்கொம்பில்.

***   ***   ***   ***

பேதைப் 12 ம், பெதும்பை ‘24 ம் கடந்த மங்கை, தன் மழலைக் குழவியைக் கையிலேந்தி, ரசித்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, தேனுண்ட மயக்கத்தில், மந்தஹாசமாய் முறுவலித்து மயங்கி மகிழ்வதைப்போல, முக்கொம்பில் காவிரி மங்கைஹா........’ வென மலர்ந்து  முறுவலித்துச் சிரிக்கும் அழகே அழகு.

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, கொண்டானின்
நுண்ணிய கேளிர் பிறரில்லை, மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை, ஈன்றாளோடு
எண்ணக் கடவுளும் இல்.

விளம்பிநாகனாரின், நாண்மணிக்கடிகைக்குக் காட்சியாய் விரியும் காவிரி...

அதுவும், மலைய மாருதமாய் முருவலிக்கும் இளம் பிள்ளைக்காரியின் வசீகரமான கொள்ளை அழகுக்கு ஈடுதான் ஏது ... இணைதான் ஏது...!

***   ***   ***   ***

ட்டர் விட்டு அம்புபோல் நேருக்கு நேராய்ப் பாயும் நீர், ‘ஹா...‌ஷ்….ஷ்……ஷ்ஷ்... என்ற பேரோசையுடன் , தடுப்புக் கட்டையில் வலிந்து பலமாய் மோதி, மோதிய வேகத்தில் ‘சடக்கெனத் திரும்பி பல தலைப் பாம்பாய் எகிறி எகிறிச் சீறும்.  

க்வாஷ்.....ஷ்...ஷ்... என ஓசையெழுப்பியபடி பக்கவாட்டில் இரு பக்கமும் பாயும் நீர்கற்றை ராஜநாகமாய் வந்து வலிந்து மோதி “க்வாஹாஷ்...... ஓசையுடன் இணைந்து புணர்ந்து நீரடித்து நீர் விலகாது என்பதை உறுதிப்படுத்தும்..

செருமிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித்                                                                        திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும்                                                                   குழம்ப 

இமையோர்கள் நின்று கடைய,
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து,                                                                                  சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை அன்ன தன்மை அடல்                                                                                         ஆமையான திருமால் நமக்கோர் அரணே! 

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியின் வர்ணணைக்கொப்ப,

அந்தப் புணர்வின் பொங்கல்..., பாற்கடலில் திரண்ட அமிர்த கடையலை கண் முன் நிறுத்தும். பொங்கி நுரைத்து விம்மி விடைத்துச் சீறிச் சுழல் விட்டு பெருநடை பழகும் நீர் நாயகியைக் காணக் கண்கோடி வேண்டும்.

***   ***   ***   ***

Poet’s Poet  என்று போற்றப்படும் Edumnd Spenser, Prothalamion என்ற கவிதையில்

Whose rutty bank, the which his river hems,

Was painted all with variable flowers,

And all the meads adorned with dainty gems,

Fit to deck maidens' bowers,

And crown their paramours,

Against the bridal day, which is not long:

Sweet Thames, run softly, till I end my song.

தேம்ஸ் நதியின் அழகை வர்ணிக்கறாரே, அதைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு அழகானவளல்லவா நம் காவிரி.

புணர்ந்து இணையும் வேகத்தில் பால் வெண்மையாய்ப் பும்... மெனப் பொங்கி,  எகிறிப் பரவிப் பாய்கையில், ஆங்காங்கே அழகாய் மிதந்தாடும் நுங்கும் நுரையும், அந்த அழகிய ஈர ஆடையில் நுண்மையாய் நெசவு செய்த புட்டாக்களாய் ஜொலித் தொளிரும்.

உல்லாசப் பிரயாணம் செல்வோர் பயணிக்கும் ரயில் நகரும்போது, ரயில் நிலையத்தில் நின்று கைகளை அசைத்து, மகிழ்ச்சியாய் வழியனுப்பும் உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் போல...

தென்றலில் மயங்கி அசையும் தருப்பை, தாழை, ஊமத்தை, காட்டாமணி, துத்தி, கோவை, கோரைப்... போன்ற செடி கொடிகளின் இலைகள், வண்ண வண்ணக் கரைப் பூக்கள்எல்லாம்... அலைகளின் நீரோட்டத்தில் ஆடி ஆடி உல்லாசமாய்ப் பயணிக்கும் ‘நுரைப் பூக்களுக்குக்,  கையசைத்து, சந்தோஷமாய் விடைகொடுக்கும்.

உத்தராசு, கல்யாண முருங்கை, எலந்தை, புளியமரம், ஆல், அரசு, அத்தி, போன்ற பெரு மரங்கள் தங்களின் பழுத்த இலைகளையும் பூக்களையும் உதிர்த்து நுரைப்பூக்களுடன் துணைக்கு அனுப்பி வைக்கும்.

இணைக்கிளிகள், தவுட்டுக் குருவி, நீர் நாரை, குயில், கூழைகிடா, நாமக்கோழி, கானாங்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊல் அல்லிக்குருவி, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, பாம்புத் தாரா... இன்னும் பலப்பலப் புள்ளினங்களின் கூட்டுக் கூவல் ஒலி, தாவரங்களின் கையசைப்பிற்குப் பின்னணி இசையாய் அழகு சேர்க்கும்.

தன் வாழ்வாதாரமான தண்ணீரின் பெருக்கம் கண்டு கெண்டை, கெளுத்தி, அயிரை, வாலை, சென்னாங்குன்னி, விலாங்கு, ஜிலேப்பி, விரால் போன்ற மீன்கள், துள்ளிக் குதித்துக் களியாட்டம் போடும்.

துள்ளிக்குதிக்கையில் சில மீன்கள் மீன்கொத்திகளுக்கு இறையாகும்.

ரொம்பத் துள்ளினால் அதன் விளைவு இதுதான் என்பதை பிரபஞ்சத்துக்குச் சுட்டிக் காட்டுவது போல இருக்கும்.   

***   ***   ***   ***

ரு குழந்தை செவலையாக, நோஞ்சானாக புள்ளம்பாடிக் கால்வாய் என்றும்...

இன்னொன்று கொழுக் மொழுக் என்று பிரும்மாண்டமான கொள்ளிடமாகவும் பிறக்கிறது.

காவிரியாறு கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாகப் பயணப்பட்டு, கடைமடைப் பூம்புகாரில் வங்காள விரிகுடா எனும் பிரம்மாண்டத்தோடு ஐக்கியமாகிறது

காவேரியின் அதிக நீர்வரத்தாலும்,வெள்ள அபாயத்திலும் துன்பமுறும்  காவேரிக்குக் கை கொடுக்கிறது கொள்ளிடம். இது கல்லணைதிருமானூர்ஜெயங்கொண்டம்அணைக்கரைகொள்ளிடம்,  வழியாக வங்காள விரிகுடா கடலில் சங்கமமாகிறது.

புள்ளம்பாடி கால்வாய் திருச்சியின் வடபகுதியில் உள்ள அனைத்து விவசாயம் சார்ந்த கிராமப் பகுதிகளான குணசீலம், மண்ணச்சநல்லூர் சமயபுரம்இலால்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் வழியாக புள்ளம்பாடி வரை விவசாயிகளுக்கு  அமுதூட்டுகிறது.

இந்த மூன்றின் பிரிவையும் கொம்பின் பிரிவுகளாகப் பார்த்து முக்கொம்பு எனப் பொருத்தமாக பெயர் வைத்தவர் மிகுந்த ரசனைமிக்கவராகத்தான் இருக்கவேண்டும்.

***   ***   ***   ***

முக்கொம்பில் இரட்டைப் பெண் சிசுக்களைப் பெற்று சற்றே இளைத்தாலும், அழகும், ஆற்றலும், கம்பீரமும், ஊட்டமும், வேகமும் சற்றும் குறையாமல் ஓடுகிறாளே காவிரிபெண்... அதன் ரகசியம்தான் என்ன..?!

கல்லணையில், திருவையாற்றில், கும்பகோணத்தை அடுத்த மணஞ்சேரியில்... என வரிசையாக நிறையக் குழந்தைச் செல்வங்களைப் பெற்றுத் தள்ளிகொண்டே செல்கிறாள் காவிரி அன்னை.

***   ***   ***   ***

ப்போது போல அன்று அவ்வளவு பிரபலமில்லை  முக்கொம்பு, என்றாலும் ஜனங்களுக்கு அது ஒரு உல்லாசப் பொழுதுபோக்குத் தலம்தான்.

காவிரியின் வடகரையில் குணசீலம் பெருமாள் கோவில்.

குணசீல மகரிஷி தவமிருந்து வணங்கி வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் இது.

பௌர்ணமி சிறப்பு பூஜையும் உத்திர வழிபாடும் இங்கே சிறப்பு.. திருவோண நட்சத்திர நாளிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

மனநோயைத் தீர்க்கும் வல்லமை மிக்க பெருமாள் என்பது சிறப்பினும் சிறப்பு.

தென்கரையில் உள்ளோர், குணசீலம் செல்லும்போது, வழக்கமாக, முக்கொம்பின் காவிரிக் கரையில் அமர்ந்து கட்டுச் சோற்றை அவிழ்ப்பார்கள்.

சாப்பிட்டு, காவிரி நீரை இரண்டு கைகளால் அள்ளிப் பருகி, சற்றே ஓய்வெடுத்த பின் தலயாத்திரைத் தொடர்வார்கள்.

இளைஞர்கள், குறிப்பாகக் காதலன், காதலிக்கு நீச்சல் திறமையையும் காட்டுவதற்கு முக்கொம்பு அன்றும் இன்றும் என்றும் பிரசித்தம்.

***   ***   ***   ***

ந்த ரூட்டில் இரண்டு கார்பரேஷன் பேருந்துகள் இயங்குகிறது.  காலை ‘ஒரு சிங்கிள் மாலையில் ‘ஒரு ட்ரிப் பெட்டவாய்த்தலை வரை போகும் ஒரு பஸ்.

நடுவில் இரண்டு சிங்கிள்களில், ஒன்று ‘ஜீவபுரத்தோடும், இன்னொன்று ‘கொடியாலம் சென்றும் திரும்பும்.

பேருந்தில் ‘கைகளை வெளியே நீட்டாதீர்

பெண்கள் அமருமிடம்

‘படிகளில் பயணம் நொடியில் மரணம்

‘ஊனமுற்றோர் இருக்கை

புகை பிடிக்காதீர்கள்

சில்லறையாகத் தரவும்

இவைகளோடு திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளும் எழுதப்பட்டிருக்கும்.

முதலுதவிப் பெட்டியும் புத்தம் புதியதாய்க் காட்சியளிக்கும்.

இவ்வளவையும் முறைப்படி பராமரிக்கிற கார்ப்பரேஷன், இஞ்சினை மட்டும் ஏனோ கண்டுகொள்வதே இல்லை...

அவ்வப்போது பஸ் பிரேக்டவுன் ஆகிப் படுத்தாலும் கார்ப்பரேஷன் அதைப் பற்றிக் கவலையேப் படாது.

கார்ப்பரேஷன் என்ன..., மக்கள் கூட அப்படித்தான் பஸ் ஓடவில்லையே என எவரும் கவலைப்படாத காலமது...

பெரும்பாலும் யாரும் டவுன் பஸ்களை நம்பிப் பயணிப்பதே யில்லை.

The American Scholar என்ற பிரசித்தி பெற்ற கட்டுரையில் அமெரிக்க எழுத்தாளர் எமர்ஸன் அவர்கள்

We will walk on our own feet;

we will work with our own hands;

we will speak our own minds.

Then shall man be no longer a name for pity, for doubt, and for sensual indulgence. 

என்று சொன்னதைப் போல சொந்தக் காலில் நிற்பவர்களாக, உடல் மற்றும் மன ஆரோக்யத்தோடு இருந்த காலமது.

***   ***   ***   ***

குணசீலம் போக முடிவெடுத்துவிட்டால், முதல்நாள் மாலை முதல் வீடே அமளிதுமளிப்படும்.

அப்பளம் - வடகம் பொறிப்பார்கள்.. மோர்மிளகாய் வறுப்பார்கள். வாழைக்காய் உருளைக் கிழங்கு வறுவல் மணக்கும் வீடு முழுவதும்.

கிலோக் கணக்கில் பட்டாணியும், வறுகடைலையும் வாங்கி வைத்துவிடுவார்கள்.

பட்டாணி கொரித்தவாறே பல காதம் நடந்த கதையெல்லாம் உண்டு அந்தக் காலத்தில்.  

வாழைச்சருகை அலம்பித் சுத்தமாகத் துடைத்து வைப்பார்கள்.

பொட்டணம் சுற்றச் செய்தித்தாள்கள், கட்ட வாழை நார் எல்லாம் தயாராக வைத்திருப்பார்கள்.

***   ***   ***   ***

றுநாள், அதாவது பிரயாண நாளன்று விடிகருக்கலில் பெண்டுகள் வெண்கலப்பானை வைத்துச் சோறு வடிப்பார்கள்.

 வடித்த சோற்றை தாம்பாளம் தாம்பாளமாகக் கொட்டிப் பரத்தி ஆறவைப்பார்கள்.

“ஏய்...! அந்த நல்லெண்ணை சம்புடம் எடு...

“உப்பு கொஞ்சம் தூக்கலாப் போடு... ஊற ஊறப் புளியோதரை இழுத்துக்கும்...

எல்லாக் கூஜாவுலயும் தண்ணி ரொப்பியாச்சா...?

கூஜாவை டைட்டா மூடுடா...

லோட்டா எடுத்து வெச்சியா...?

ஸ்பூன், கரண்டிகள் எல்லாம் கவனமா எடுத்துக்கோங்கோ...

மாட்டு வண்டீல வைக்கோல் பரத்தி ஜமக்காளம் விரிச்சாச்சோ…?

“………………..”

வாண்டுகள் முதல் வயோதிகர்கள் வரை அவரவற்கு ஏற்ற வேலையை சுறுசுறுப்போடு செய்துகொண்டிருப்பார்கள்.

விடிகாலையில் துயில் எழ முரண்டு பிடிக்கும் குழந்தைகளை எழுப்பி, கிளப்ப பெரியவர்கள் சாம கான பேத தண்ட முயற்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

***   ***   ***   ***

முதல் நாள் தயார் செய்த புளிக்காய்ச்சலைக் கொட்டி, செழும்ப நல்லெண்ணை ஊற்றிப் பிசைவார்கள். வீடே ‘கம்... மென்று நறுமணக்கும்.

பால் சோறு பிசைவார்கள். நுணுக்கி நுணுக்கி நறுக்கிய கறிவேற்பிலை, கொத்துமல்லித் தழை, மாங்காய், மாங்காய் இஞ்சி, கேரட், மோர்மிளாகாய், முந்திரி, திராட்சை,  என வசதிக்குத் தக்கபடி தயிர்சோற்றில் கலப்பார்கள். கடைசியில் சிறிது தயிர் விட்டுப் பிசைவார்கள்.

மதியம் சாப்பிடும்போது புளிக்காமல் கொள்ளாமல் வாய்க்கு இதமாக இருக்கும் தயிருஞ்சாதம்.

வடு மாங்காய், கிடாரங்காய், எலுமிச்சை, மாகாளி, நார்ந்த இலைப் பொடி (வேப்பலைக் கட்டி என்றும் கூறுவார்கள்) , என ஊறுகாய் வகைகளை சின்னச் சின்ன சம்புடங்களிலும் போட்டுக்கொள்வார்கள்.

வசதிப்பட்டவர்கள், மாட்டு வண்டி கட்டிக் கொண்டோ, குதிரை வண்டியிலோ கோவிலுக்குப் போவார்கள்.

ஏதாவது ‘அவரச-மாத்தரம் என்றால் மட்டுமே பஸ்ஸை நாடுவார்கள் மக்கள்.

***   ***   ***   ***

வசரமும் ஆத்திரமும் உந்தித்தள்ள, விடிகாலை முதல் சிங்கிள்பஸ்ஸிலேயே முத்துனூர் வாசிகளும், அந்தனூர் வாசிகளுமாக, பெட்டவாய்த்தலை பஸ் நிரம்பி வழிந்தது.

நிரம்பி வழிந்தாலும், கண்டக்டருக்கு அதிக வேலை வைக்காமல், முத்தனூரார் ஒருவர் 40 டிக்கட்டுகளும், அந்தனூராரில் ஒருவர் 38 டிக்கட்டுகளும் முறையே மொத்தமாக வாங்கிக் கொண்டார்கள்.

***   ***   ***   ***

ல்லோரும் எட்டி நிற்க, மாதய்யா உட்பட, ஒரு சில பெரியவர்கள் மட்டும் ‘லஸ்கரை அணுகி விவரத்தை விளக்கிச் சொன்னார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ஸாரி சார்...!நான் ஒண்ணும் செய்யறதுக்கில்லை...என்று கை விரித்தார் லஸ்கர்.

ஜனங்கள், லஸ்கர் காலில் விழாத குறையாக ஷட்டர் போடக் கெஞ்சிக்கொண்டிருந்தபோது, “ஒங்களுக்கு நெஞ்சுல ஈரமே கிடையாதா...? மனிதநேயமே இல்லாம பேசுறீங்க...?என்று ஒரு குரல் வந்தது.

முத்தனூர் கருணாமூர்த்திதான் இப்படி உணர்ச்சி வசப்பட்டுப் பேசினது.

“நான் மனிதநேயம் பார்த்து ஷட்டரை மூடினா மேலே இருந்து வர்ற பிரச்சனைகளை நீங்களா வந்து சமாளிக்கப் போறீங்க...? அப்பப்போ காவேரீல எவனாவது செத்துக்கிட்டுதான் இருப்பான்... ஒவ்வொரு சாவுக்கும் ஷட்டரை இழுத்து மூடிக்கிட்டிருந்தா, காவேரீல தண்ணியே ஓடாது... என்றார் லஸ்கர் கடுப்பாக.

“.............” யாரும் பேசவில்லை. அமைதியாக நின்றார்கள். கருணாமூர்த்திஆன்ட்டி கிளைமாக்ஸ் உருவாக்கி விட்டபிறகு அங்கு யார் என்ன பேச முடியும்...

***   ***   ***   ***

“ ஷட்டர் போடறதுனால எவருக்கும் பாதிக்காதுய்யா... மனசாட்சியோட நடந்துக்கோங்க... என்று மீண்டும் சீண்டிவிட்டான் கருணாமூர்த்தி.

 “ஆமாம்யா...! நீ சொல்றது சரிதான். பாதிக்காதுதான்... காவிரிக்கரைல உட்காந்து கதைபேசும் காதல் ஜோடிங்களை பாதிக்காது.

“ஓட்டாம்பாளத்தை வீசி காவேரித் தண்ணீல ‘தவக்களை விடறவனுக்கு பாதிக்காது.

“அம்பாரம் துணிகளை அலச வற்ரவங்களுக்கு பாதிக்காது...

“சாவுல கலந்துக்கிட்டு தலை முளுகறவங்களுக்கு பாதிக்காது...

“காவேரினு கூடப் பாக்காம காலு களுவறவங்களை பாதிக்காது...

“தலை முளுகிட்டு, படீல நின்னு ஜபம் செய்யறவங்களை பாதிக்காது.

      “ஊர் கடைக்கோடீல பாசனத்துக்குக் காத்திருக்கற நூத்துக்கணக்கான விவசாயிங்களை கடுமையா பாதிச்சிடும்யா...கடுமையா பாதிச்சிடும்... லஸ்கரின் பேச்சில் சமூகப் பொறுப்பும் விவசாயிகளின் மீது உள்ள அக்கரையும் தெரிந்தது.

“நாளையோ மறுநாளோ, கல்லணைல மிதக்கும்... சொல்லிவிட்டு வந்தவர்களை உதாசீனப்படுத்திவிட்டு அப்பால் சென்றுவிட்டார் லஸ்கர்.

***   ***   ***   ***

தாட்சண்யமே காட்டாமல் பேசிய லஸ்கரிடம் இனி பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்துகொண்ட மாதய்யா ‘அடுத்து ஆகவேண்டியதற்குத் திட்டமிட்டுக் காயை நகர்த்தினார்.

யாரைப் பிடித்தால் பழுக்குமோ அவரைப் பிடித்தார் மாதய்யா. சுருக்கமாக விவரத்தைச் சொன்னார்.

மராமத்துத் துறை அமைச்சருக்குச் செய்தி போய் அவர் மராமத்துத்துறை அதிகாரிக்குக் கை லெட்டர் கொடுத்தார்.

***   ***   ***   ***

ஸ்கரை அழைத்துப் பேசினார் மராமத்துத் துறை அதிகாரி.

என்னென்ன ‘பேப்பர் வொர்க் செய்யவேண்டும் என்று விளக்கினார்.

‘மெயிண்டனன்ஸ் அர்ஜெண்ட்என்ற விதியின் கீழ், மறுநாள் அடைக்க வேண்டிய ஷட்டரை இன்றே அடைப்பதாக அறிக்கை தயார்செய்யப்பட்டது.

ஒரு வழியாக லோக்கல் பெரியமனிதர் செல்வாக்கில் ஆளும் கட்சி அமைச்சரிடமிருந்து வந்த ‘லெட்டர் ‘ஷட்டர்களை இறக்கி மூடியது.

கொள்ளிடத்தில் தண்ணீர் மளமளவெனப் பெருகியது.

***   ***   ***   ***

லைன்கரை வழியாகத் தேடிக்கொண்டே போனார்கள்.

கனமனூர், முருங்கப்பேட்டை, மான்சிங் பங்களா... என காவிரியில் இறங்கி ஆங்காங்கே வளர்ந்துள்ள நாணல் குத்துக்களையும், தர்ப்பைக் புதர்களையும் கவனமாகப்  பார்வையிட்டார்கள்.

இதுவரை யார்யாரை எவ்வெப்போது இந்தக் காவிரி காவு வாங்கியிருக்கிறது, எதை எதை எப்படி எப்படிச் சமாளித்தோம்  என்பதைப் பற்றி அவரவர்க்குத் தெரிந்த வகையில் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

***   ***   ***   ***

கம்பரசம்பேட்டை வாட்டர் ஹவுஸ்க்கு முன்னால், பெரியார் வளைவுக்கு முன்னே, காவிரி மணல் திட்டில் பரபரப்பான கூட்டம் தெரிந்தது.

மாதய்யா ஊகித்துவிட்டார்.

அதே சமயம் லைன்கரையை ஒட்டிய சாலையில் சென்றவர்கள். “சின்னஞ்சிறுசுக...புதுசா கலியாணம் ஆனவங்கபோலத் தெரியுது... இப்படியா ஆவணும்...என்று பேசிக்கொண்டே போனார்கள்.

***   ***   ***   ***

“ஹோ...! வென்று கதறினார் பசுபதி குருக்கள். “என் ஒரே மகனுக்கு இந்த கதியா வரணும்...

“விநாச காலே விபரீத புத்தினு சொல்லுவாளே...! நீ சொன்னதைக் கேட்காம அவனை உடனே வரச்சொல்லி ஃபோன் பண்ணி, நானே அவனுக்கு எமனாயிட்டேனே மாது... நான் என்ன செய்வேன்... மாலையும் கழுத்துமா மணக்கோலத்துல பார்க்கவேண்டியவனை இப்படி பிணக்கோலத்துல பார்க்கறேனே...

“....................” மாதய்யா எதுவும் பேசவில்லை. என்ன பேச முடியும்…?

மாது... என்னண்ட பதவிசா எடுத்துச் சொல்லியிருந்தா, ஜாதி என்ன ஜனம் என்னனு நானே முன்னால நின்னு கல்யாணத்தை பண்ணி வெச்சிருப்பேனே.... கதறியபடியே மூர்ச்சையானார் பசுபதி.

***   ***   ***   ***

இருக்கும்போது எதையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பவன், அது அறவே இல்லையென்று ஆனபின் அதை கண்மூடித்தனமாக ஆதரிப்பதன் ரசவாதம்தான் என்ன...!

கம்பரசம்பேட்டை ரோடு மேடெல்லாம் ஜனக்கூட்டம். கம்பரசம்பேட்டை ரயில் நிலையத்தில் ஈரோடு பாசஞ்சர் நின்று போனபின், அதிலிருந்து இறங்கிய ஓரிருவரும் (இப்போது அங்கே ரயில் நிலையம் கிடையாது) அந்தக் கூட்டத்தோடு வந்து கலந்தன. செத்த பிணங்களை வேடிக்கை பார்க்க வந்த சாம்பிணங்கள்.

***   ***   ***   ***

“அய்யோ பாவம்...!

இந்தக் காவேரிதான் எத்தனைபேரை பழிவாங்கியிருக்கு...!

“புது கல்யாண ஜோடிங்க... அதான் கொடுமை...!

“காவிரியாத்து நீக்கு போக்கு தெரியாம விளையாடி, நீச்ச தெரியாம செத்துருக்கும்...

 யோவ்... இது போலீஸ் கேசு. நம்ம ஊர்ல ஒதுங்கியிருக்கறதுனால நாம போலீஸ்ல சொல்றதுதான் நல்லது...

“பேண்ட்டு சூட்டு போட்டிருக்கான்... பட்டணத்துலருந்து முக்கொம்பு பார்க்க வந்திருப்பாங்களோ...?

நீ சொல்றது சரிதான். இதுங்க முக்கொம்பு பாக்க வந்த ஜோடிதான்... சந்தேகமே இல்லை...

“எதை வெச்சுச் சொல்றே...?

காலைல நுங்கும் நுரையுமா, வெள்ளமா ஓடின காவேரி, இப்போ தண்ணி வடிஞ்சி திட்டு தெரியுதுன்னா...என்ன அர்த்தம்...?

“அதுவுஞ் செரிதான். மொறை கூட இன்னிக்கு மாறாதே... நாளைக்குத்தானே...!

“இதுங்க, முக்கொம்புல விளுந்திருக்கும். கூட வந்தவங்க தேடிப்பாத்துட்டு, ஷட்டர் போட்டுட்டுத் தேடுவாங்களா இருக்கும்...!

பலவாறாய்த் தங்களுக்குத் தோன்றியபடி பேசிக்கொண்டிருந்தனர் ஜனங்கள்.

***   ***   ***   ***

முட்ட முட்டத் தண்ணீர் புகுந்த வயிறு. ஊறிப் பருத்த உடம்பு. ஊதல் தாங்காமல் தையல் விட்டுக்கொண்டு கிழிந்து அகன்ற உடைகள்.

மூக்கு, காது, வாய் என அனைத்து துவாரங்களிலும் புகுந்து அடைத்துக்கொண்ட வண்டல்.

மீன்கள் குதறிய கண்கள். விரைத்த கை கால்கள்... இப்படித்தான் என்று சொல்லமுடியாதபடிக்கு நீட்டியும் மடங்கியும் இருந்தன.

இத்தனைக்கும் நடுவில் அந்த தம்பதியர் கை கோர்த்தபடி விரைத்துக் கிடக்கும் காட்சிதான் அனைவரையும் அழவைத்தது.

“சட்டுனு உறவுக்காரங்களே அடையாளங்கண்டுக்கிர முடியாது... கண்ணு மூக்கெல்லாம் மீனு நோண்டி.... என்று பிரேதங்களை அருகில் பார்த்த ஒருத்தி வர்ணித்துக் கொண்டிருந்தாள்.

“எக்குத் தப்பாக் கிடக்கற பொணத்துமேல ஒரு துணி போத்தலாமில்ல... நின்னு வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க...!

சொல்லியவள், அம்பாரம் துணிகளை துவைக்க வந்தவள். துணிகள் ரெண்டு எடுத்து முகங்கள் மட்டும் தெரியப் போர்த்தி விட்டாள்.

துர்நாற்றம் வீசியதால் ஜனங்கள் எட்டடி, பத்தடித் தள்ளி நின்றே பார்த்தனர்.

கதறிக்கொண்டு ஓடிவந்தான் வீரமுத்து.

வந்த வேகத்தில் மண்டி போட்டுக்கொண்டு, நெஞ்சில் அடித்துக்கொண்டு, கதற ஆரம்பித்தான்.

“தங்கச்சி....மச்சான்....மச்சான்....தங்கச்சி....  என்று கத்தினான், கதறினான்…, கத்தியபடியே கண்ணீர்விட்டான்.

பசுபதி குருக்கள் விரக்தியின் உச்சத்தில் பிரமை பிடித்ததைப் போல உட்கார்ந்திருந்தார்.

மயக்கம் தெளிந்து எழுந்தது முதல், அவர் அழவில்லை. யாரோடும் பேசவில்லை. இப்படியேத்தான் உட்கார்ந்திருக்கிறார்.

டுத்து ஆகவேண்டியதைப் பற்றி யோசித்தார் மாதய்யா. கலியனை அழைத்து ஏதோ சொன்னார்.

சரிங்கய்யா…” அவன் உடனே புறப்பட்டான்.

அடுத்த பத்தாவது நிமிஷம், மாதய்யா ஏற்பாடு செய்த இடத்திலிருந்து பாரவண்டி கொண்டுவந்துவிட்டான் கலியன்.

“பிணங்களை வண்டீல ஏத்தலாம்... என்று சொல்லிக்கொண்டே, மாதய்யா நான்கைந்து ஆசாமிகளோடு பிணங்களின் அருகே சென்றார்.

***   ***   ***   ***

ரித்தான் வீரமுத்து. “என் மச்சான் பொணத்தை யாரும் தொடக்கூடாது. அதுகளை எப்படி அடக்கம் பண்ணணும்னு எனக்குத் தெரியும்... கத்தினான். கெட்ட வார்த்தைகள் இரைத்தான்.

“என் மகன் பிரேதத்தையும், மருமகள் பிரேதத்தையும் வண்டீல ஏத்துங்க... என்றார் அமைதியாக உட்கார்ந்திருந்த குருக்கள் ஆக்ரோஷமாக.

பசுபதி  குருக்கள் வாயிலிருந்து இப்படி ஒரு உத்தரவை யாருமே எதிர்பார்க்கவில்லை.

“யோவ் குருக்களே... எவனாவது கைவெச்சா, இங்கேயே வெட்டி பொலி போட்ருவேன்... கையில் வீச்சறிவாளோடு சீறினான் வீரமுத்து.

பிரேதங்களை பொதுவிடத்தில் வைத்துக்கொண்டு இப்படி வல்லடி வழக்கு செய்வது மாதய்யாவுக்குப் பிடிக்கவில்லை. கேலிக்கூத்தாக இருந்தது அந்தக் காட்சி. இதற்கொரு முடிவு கட்டத் தீர்மானித்தார்.

“அவங்கவங்க ஊர் பிரேதங்களை அவங்கவங்க கொண்டு போய் இடத்தைக் காலிபண்ணுங்கய்யா... என்று ஒரு குரல் பின்னாலிருந்து வந்தது.

“பஞ்சாயத்து பேசற பரதேசி எவண்டா...? என் எதிர்ல நின்னு பேசுடா பாப்பம்...என்று கடும் சொற்களை வீசினான் வீரமுத்து.

மாதய்யா ரௌத்ரமானார். “பிரேதங்களை எடுக்க விடப்போறியா இல்லையா வீரமுத்து... என்ன சொல்றே நீ...”

முடியாதுங்க...என்றான் உறுதியாக

“அப்படின்னா வேற வழியில்ல. இது போலீஸ் கேஸ். நான் உடனே போலீசுக்குத் தகவல் கொடுத்துடறேன். பிணங்களை ஆஸ்பத்திரீல கூறு போடுவாங்க... என்று சொல்லிக்கொண்டே, சாலைப் பக்கம் நடக்கத் துவங்கினார் மாதய்யா.

‘மாதய்யா செல்வாக்கு உள்ளவர். எதையும் செய்வார்... என்பது தெரிந்த வீரமுத்து கொஞ்சம் இறங்கிவந்தான்.

“புது ஜோடிகளைப் பிரிக்கவேண்டாமே... என்று இரு சாராருக்கும் எண்ணம் இருந்தாலும், அவரவர்களுக்கு உள்ள போலி கௌரவமும், வீம்பும், தன்முனைப்பும், பாழாய்ப்போன பவித்ர அகங்காரமும், அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கின.

அவரவர் பிரேதம் அவரவர்க்கு என்று ஒத்துக்கொண்டான் வீரமுத்து.

னிதர்களுக்குப் பச்சாத்தாபம் இருக்கும்போது, சிலவற்றை ஒத்துக்கொள்வார்கள். சிலவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

அனுதாபம் எவ்வளவு பெரிய தப்புகளையும் மூடி மறைத்துவிடுகிறது... அனுதாப அலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவன் புத்திசாலி. அதுதான் சாணக்கியம்.

தன் வயதிலும் அனுபவத்திலும் மாதய்யாவுக்கு இந்தச் சாணக்கியம் புரிந்தது.

இதுதான் சாணக்கியம் என்று சொல்லி விளக்கம்போது அது பைத்தியக்காரத்தனமாகிவிடுகிறது. கேலிக்கூத்தாக ஆகிவிடுகிறது.

சாணக்கியம் செய்யப்போகிறேன் பார்என்று சவால் விடும்போது அது நகைப்புக்குள்ளாகிறது.

சாணக்கியம் செயல்முறைப்படுத்தப்பட்டபின் சாதாரண நிகழ்வாகிவிடுகிறது.

சாணக்கியம் என்பது செயல்தான். சொல்லில்லை.

செயலில் இறங்கும்போது மட்டுமே சாணக்கியம் வெற்றி பெறுகிறது.

மாதய்யா சாணக்கியம் செய்தார்.

***   ***   ***   ***

னுதாபம், துக்கம், பச்சாத்தாபம்... எல்லாம் ஒரு நேரத்தில் குறைந்துக் குறைந்து முற்றிலும் நீங்கி, இது இப்படித்தான் என்று சட்டம் பேசி பிடிவாதம் செய்யத் தொடங்கிவிட்டால் அதை சமாளிப்பது பெரிய பாடாகிவிடும். சாதாரண விஷயம்கூட சட்டசிக்கலாகிவிடுமே...! என்று எண்ணமிட்டவராய் அடுத்தடுத்த காரியங்களைத் துரிதப்படுத்தினார் மாதய்யா.

ஊருக்குள்ளேயே கொண்டு போக வேண்டாம்... ஸ்மஸானத்துக்கே (சுடுகாட்டுக்கே) நேரா கொண்டு போய் காரியத்தை செஞ்சுடலாம் என்ற மாதய்யாவின் யோசனையை யாரும் ஏற்கவில்லை.

குருக்கள் வீட்டு ரேழியில் பிரேதம் கிடத்தப்பட்டதும், உடனே க்ரிமேஷனுக்கு ஏற்பாடு பண்ணணும்னேன்...!” என்று அவசரப்படுத்தினார் மாதய்யா.

கடுஞ்சாவு என்பதால் பிடிவாதமாக நின்று வற்புறுத்தவும் மனம் இல்லை அவருக்கு..

பற்பல பின்விளைவுகளை மனதில் கொண்டு மாதய்யா சொன்ன  இந்தக் கருத்தையும் யாரும் அங்கே ஏற்கும் நிலையில் இல்லை..

“ஈஸ்வரோ ரக்‌ஷது...

கடவுள் விட்ட வழி... 

அவசியமில்லாமல், ‘டீகம்போஸ் ஆகிவிட்ட பிணத்தை வீட்டில் போட்டுக்கொண்டு ராப்பிணம் காத்தார்கள்.

‘தண்ணீரில் ஊறிய கட்டைதன் குணத்தைக் காட்டியது. துர்நாற்றம் குடலைப் புரட்டியது.

மாதய்யா அவ்வப்போது வீட்டுக்குச் சென்று தெருத்திண்ணைணில் உட்கார்வதும், பிறகு வருவதுமாய் இரவு முழுதும் தூங்காமல் பொழுதை ஓட்டினார்.

சாவித்திரியை அடக்கம் செய்வதற்குள் ராமுவை, கிரிமேஷன் செய்துவிடவேண்டும்  என்று நினைத்த மாதய்யாவின் சாணக்கியம் பலிக்கவில்லை.

‘அடுத்தது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்... சமாளிக்கவேண்டும்...என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் கலியன் வந்து எதிரில் நின்றான்.

“என்னடா கலியா... ... இந்த நேரத்துல...நீ...!



ழுத்தில் விரலிமஞ்சள் கோர்த்த புதுத்தாலிக்கயிறு மினுமினுக்க, தன் சுவாசமாய் வளர்த்த ஒரே சகோதரியை சகிக்க முடியாத தோற்றத்தில் பிரேதமாய்ப் பொறுக்கி எடுத்து வந்து அடக்கம் செய்த வீரமுத்துவுக்கு வயிறு பற்றி எரிந்தது.

காவிரியில் மச்சான்... மச்சான்... என்று கதறியவன் இப்போது மாறிப்போனான்.

“அந்த ... ப்பயலாலத்தான் என் தங்கச்சி....  அந்தப் பயலை... என்று உறுமினான்.

***   ***   ***   ***

கெட்ட வார்தைகள் தெரிந்தன. அவன் உறுமலுக்கு ஊர் கூடியது.

அனுதாபம் மறைந்து, துக்கம் ஓடி ஒளிந்துகொண்டது.

கூடிய ஊர்க் கூட்டம், பஞ்சாயத்துக் கூட்டமாக உறுமாறியது.

பிரச்சனை திசை திருப்பப்பட்டது.

பெருசுகள் சொல்வதை விடலைகள் கேட்பதாக இல்லை...

பக்குவப்படாத, ரத்தத் திமிர் எடுத்த சிறுசுகளின் உணர்ச்சிவசப்பட்ட முடிவை பெரிய தலைகள் ஏற்க மறுத்தன.

வன்முறைக்கு எதிரில், தர்மம், நியாயம், மனிதநேயம், அனைத்தும் தலைகுனிந்து நின்றன.

“காலங்காலமா அந்தனூர் பொணம், நம்ம ஊர் வழியாத்தான் போவுது. அதைப் போவக்கூடாதுனு மறிக்கறது தப்பு... அதர்மம்... என்று ஞாயம் பேசிய ஒரு பெரியவரை இளவட்டங்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது.

முத்தனூர் ஊர்க் கூட்டத்தின் முடிவை அறிந்த கலியன் ஓடோடி வந்தான். மாதய்யாவிடம் விவரமாகச் சொன்னான்.

“கலியா... நான் எது நடக்கும்னு நினைச்சேனோ...; எது நடக்க விடாம தடுக்கணும்னு நினைச்சேனோ; அது நடந்துட்டுது... கலியா நான் சொல்றபடி செய்யி...”

“சொல்லுங்கய்யா...

“கோவிலுக்குப் பின்னால நம்ப சம்பா காணீல நாலு ஆளுங்களை வெச்சி, வரப்பு சீர் பண்ணி பிணம் தூக்கிக்கட்டு நடக்கற அளவுக்குத்  தயாரா வெச்சுப்பிடு...! எதுக்கும் இருக்கட்டும்...

“ஏற்பாடு பண்ணிடுறேங்கய்யா... என்று சொல்லிவிட்டு கிளம்பினான் கலியன்.

விடிவதற்குள் ஆட்களுக்குச் சேதி சொல்லி, பொலபொலவென விடிந்த நேரத்தில் தேவைப்பட்டால் சுடுகாட்டுக்கு பிணம் தூக்கிக்செல்ல மாதய்யாவின் விளைச்சல் நிலமான சம்பாக் காணியில் பாதை செப்பனிடும் வேலையைத் தொடங்கித் தொடர்ந்தான் கலியன்.


அடுத்து என்ன நடக்கும், எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று மாதய்யாவின் மனம் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தது.

தொடரும்...

 

Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)