80. பெஸண்ட் நகர் க்ரீமடோரியம் (சிறுகதை)
பெஸண்ட்
நகர் க்ரீமடோரியம் (சிறுகதை)
ஆனந்த விகடன்
22.07.2022
-ஜூனியர் தேஜ்
நீங்கதான் இந்தக் கதையின் ‘ப்ராடகனிஸ்ட்’. முக்கியக் கதாபாத்திரம்;
விடிஞ்சா, உங்களுக்குப் பி
எச் டி., ஆய்வுக்கான, ‘வைவாஓசி’. பேருக்கு முன்னால ‘டாக்டர்’ பட்டத்தை இணைக்கறக் கடைசீப்
படி.
விதி யாரை விட்டது!
நட்டநடுக் கூடத்துல, உங்க
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, மாமா.. அவர்களை மாதிரி, உங்களையும் தெற்கே
தலை போட்டுக் கிடத்தற மாதிரி ஆயிருச்சே.!
***
‘ஹலோ மிஸ்டர் பிரேதம்.. கண்ணாடி ஐஸ் பெட்டிக்குள்ளே,
‘ஜில்ஜில்’லுன்னு இருக்கீங்க.
தலைமாட்டுல நல்லெண்ணெய் சீசா, தீப்பெட்டி, பத்தி பாக்கெட் எல்லாத்துக்கும்
நடுவுல காமாட்சி விளக்கு காடாவிளக்கு மாதிரி திகுதிகுன்னு எரியுது..
வாழைக் கட்டைலக் கத்தையாய்க்
கொளுத்திச் செருகின ஊதுபத்திப் புகைச்சல்.
ரோஜா, சம்பங்கி, துலுக்கன்
சாமந்தி, , துளசி, சந்தனமாலை என்று வரட்டு கௌரவத்தைக் காட்ட வந்தவர்கள் வைத்த மாலைகள்,
மலர்வளையங்கள்.
‘புஸ் புஸ்..’ - என அவ்வப்போது அடிக்கும் ரூம் ரெஃப்ரஷ்னர்’
அனைத்தும் கலந்த வாடை.
***
இரும்பு ஆணியும், விரளிமஞ்சளும்
புடவைத்தலைப்பில் முடிந்த சுமங்கலிப் பெண்டுகள் அங்கும் இங்குமாக, வாய் பொத்தியோ, கன்னத்தில்
கைவைத்தோ, தலை குனிந்தோ, விதவிதமானக் கோலத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்..
அவ்வப்போது ஒப்பாரி ஓசை எழுப்பி
சூழ்நிலையை இறுக்கமாக்கி புதிதாக வருவோர் முகத்தில்
சோக ரசத்தை அப்புகிறார்கள்.
***
உங்கள் பெயரைச் சொல்லித்
தங்கள் நெருக்கத்தையும், சிநேகத்தையும் காட்டக் கதறி அழுவதை காட்சிப்படுத்துகிறார்கள்
சிலர்.
அமைதியாக மலர் மாலையை வைத்துவிட்டுக்
கால்மாட்டில் வந்து கைக் கூப்பிக் கும்பிடுகிறார்கள் சிலர்.
இன்ஃபெக்ஷம் ஆகாது என்பதால்,
கண்ணாடி ஐஸ்பெட்டியில், உன் முகத்துக்கு நேராக, கண்ணாடியில் கை வைத்து தங்கள் பாசத்தைக்
காட்டி ஓலமிடுகிறார்கள் சிலர்.
“நேத்திக்குக் கூட யுனிவர்சிடி
வளாகத்துல பார்த்தேனே.. சாகக் கூடிய வயசா இது.. ஆண்டவனுக்குக் கூடக் கண் அவிஞ்சி போயிடுச்சே..!”- என்ற வகையில் அவரவர்க்குத் தோன்றியதைச் சொல்லிக் காலத்தைக் கடத்துகிறார்கள்
சிலர்.
“சொல்லிக்கப் படாது..!” -
என்று சொல்லித் திரும்புகின்றனர் சிலர்.
பின்கட்டில் இட்லி, காபி
என பசியாறித் திரும்புகிறார்கள் , பட்டினிபோடக்கூடாத, பசிதாங்காத டயாப்டீஸ் ஆசாமிகள்.
ஹால், ரேழி, போர்ட்டிகோ,
படிகள், மாடிப்படிகள், கார்ஷெட். மரத்தடியில் போடப்பட்ட நாற்காலிகளில், தெருவில் ஷாமியானாப்
பந்தலுக்குக் கீழ் போடப்பட்ட நாற்காலிகளில் காபி குடித்துக் கொண்டும், வெற்றிலை சீவல்
போட்டுத் துப்பிக்கொண்டும், நியூஸ் பேப்பர்களைப் படித்தபடியும், ஊர் அக்கபோர் பேசியபடியும், ‘எப்போது எடுப்பார்கள்’ என்ற எதிர்பார்ப்பில் பொழுதை
ஓட்டுகிறார்கள் பலர்.
***
வலது கைக் கட்டை விரலை நெற்றியின்
இடது முனையிலிருந்து வலது முனைக்கு நகர்த்தி, ‘தலையெழுத்து..” - எனச் சமிக்ஞையால் துக்கம்
விசாரிக்கிறார் ஒரு நரைத்த உச்சிக் குடுமி.
சீவலை வாயில் திணித்துக்கொண்டே
“சாஸ்திரிகள் எப்ப வருவார்..?” - என்று கேட்கிறார் சாம்பு.
அவர் வலது கை ஆள்காட்டி விரல்,
வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டிருக்கிறது.
“காழ்ல கீழ்ல, குத்தாம ஓரஒதுக்குப்புழமா வெட்டின
மிச்சத்தை போட்ழா செல்ராஷு”
குடமாய்த் தேங்கி நின்கும்
புகையிலைச் சாறு சிந்திவிடாமல் வாயை அன்னாந்தபடி பாடை கட்டும் செல்வராசுவை எச்சரிக்கிறார்
சவண்டி சாமாளி.
“அழுத்தமாக் கட்டு, செல்ராசு...
” - பாடையில் தளர்வாக இருந்த கயிற்றை இறுக்கச்
சொல்கிறார் முத்துகிருஷ்ணன்.
***
“பவுன் விலையா இருக்கே பானை..
அந்தக் காலத்துல...” - பழைய புராணம் ‘நானோஜெனேரியன்’ நாகராஜய்யா நீட்டி முழக்குகிறார்.
கருப்புப் பிச்சை அதை ஆமோதிக்கிறார்.
“ஏகப்பட்ட ட்ராஃபிக், தாமஸமாயிடுத்து!”
- ஏன் தாமதம் என்றுக் கேட்பதற்கு முன்பே ‘ப்ரிவெண்டிவ் ஸ்டேர்டஜி’ செய்கிறார் ராமரத்னம்.
விம்மல், அழுகை, புலம்பல்,
ஒப்பாரி, எல்லாம் கலந்து ஒலிக்கும் ஓசை. உள்ளே வருகிற நபருக்குத் தக்கபடி ‘டெஸிபல்’
மாறி மாறி எகிறி அடங்குகிறது.
தெருக்களில் சுவர்களில் போஸ்டரில்
சிரிக்கிறீர்கள்.
முக்கிய முக்குகளில் ‘ஃப்ளக்ஸ்க’ளோடு
சிரிக்கிறீர்கள்.
ஆட்டோவில் ‘அறிவிக்க வருந்துகிறோம்’
என்ற அறிமுகத்துடன் ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து மரணம் அறிவிக்கிறார்கள்.
***
“புரோகிதர் வந்தாயிற்று”
ஐஸ் பெட்டியிலுந்து வெளீல
எடுத்துவிட்டார்கள் உங்களை.
கட்டை தர்பை, நுனி தர்ப்பை,
அத்தி இலை, பூநூல், புரசு இலை, துளசி தளம், என தொழிற்கருவிகள் அடங்கிய பையோடு புரோகிதர்
வருகிறார்.
“கர்த்தா தலைமுழுகிவிட்டு
வருவதற்குள், முதல்நாள் காரியத்திற்காக அவர் தந்த பட்டியல் படி, எல்லாம் சரியாக உள்ளதா
என்று ஒரு நோட்டம் விடுகிறார்.
“எத்தனை மணிக்கு கிரிமேஷனுக்கு
புக் ஆயிருக்கு..?” - என்று கேட்டு உறுதிப் படுத்திக்கொள்கிறார்.,
செல்போனை உயிர்ப்பித்து மணியைப்
பார்க்கிறார் புரோகிதர்.
***
உங்கள் முதல் ஆண் வாரிசு,
அதாவது கர்த்தா, பட்டையாக விபூதி பூசிக்கொண்டு கையில் தீர்த்த பாத்திரமேந்தி வருகிறான்.
சவமாய்க் கிடக்கும் உமக்கு,
மரணத் தருவாயில் இருப்பவருக்குச் செய்யும் ‘ப்ராயச்சித்த’த்தை, செய்யச் சொல்கிறார்
புரோகிதர்.
புண்யாக கும்பத்தில் ‘கூர்ச்சம்,
மாவிலை, தேங்காயெல்லாம் வைத்தபின்.. புரோகிதத் தந்த “பவித்ரம் அணிகிறார்
அடுத்தாற்போல் தந்த தர்ப்பையை
இடுக்கிக் கொள்கிறார் கர்த்தா.
“சுக்லாம் பரதரம்….” – என்றுத்
தொடங்கி புரோகிதர் சொல்லச் சொல்ல, நெற்றியில் குட்டிக்கொண்டு உங்கள் கடைசீப் பயணத்தின்
முதல் எபிசோட் தொடங்குகிறது.
‘வருண பகவானை’ கும்பத்தில் ஆவாஹனித்தார்கள்.
“அசேஷே.. ஹே பரிஷத்... பிதுஹூ... ஸரீர ஸுத்தி கர்மணி
புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து...”
***
மாவிலையால் புண்யதீர்த்தம் தெளிக்கிறார் புரோகிதர்.
கைப்பையிலிருந்து எடுத்த
முரட்டுப் பேனாக்கத்தியால் லாகவமாகக் கங்கைச் செம்பில் இரண்டு மூன்று இடங்களில் பொத்துவிடுகிறார்.
“மரணகாலே ஸர்வ ப்ராயச்சித்தம்
கர்த்தும் .. யோக்யதா ஸித்திம் அனுக்ரஹான..” என்கிறார்.
பன்னீர் புகையிலை அதக்கிக் கொண்டிருந்த சாமாளி “யோக்யதா
சித்திரஸ்து,,” என்று திருவாய் மலர்கிறார்.
“...ஸர்வேஷாம் பாபானாம்..
ஸர்வப் ப்ராயச்சித்தம் கரிஷ்யே. என்று சொல்லிக்கொண்டே - “இந்தா தோப்பனார் வாயில விடு!”
என்று தருகிறார்.
கங்கைச் சொம்பு நீர் பட்டுப் பிரேதம் புனிதமடைகிறது.
***
“கர்ண மந்த்ர படனகாலே ‘கோ’,
‘தில’, ‘தீப’, ‘உதகும்ப’ தஸ’தான ப்ரதிநிதி யத் கிஞ்சித் ஹிரண்யம் மஹாவிஷ்ணுப் ப்ரீதிம்...
ஸம்ப்ரததே நமஹ நமம...”
கர்த்தா பூணூலை இடப்புறம்
மாற்றிக்கொண்டு ஒரு தர்ப்பையை பிடித்தபடி பிரேதத்தின் காதில் ஜபிக்கிறான்.
(சாஸ்திரப்படி இப்போது நீங்கள்
பிரேதமில்லை. உயிர் போகும் நிலையில் உள்ள உடல்தான்)
ஒரு முறை பெண்டுகளின் ஊளைச்
சத்தம் உச்சம் தொட்டு அடங்குகிறது.
“அழப்படாது..! ஆன்மா சாந்தி
அடைய எல்லாரும் பகவான் நாமம் சொல்லணும்..” - சின்னதாய் ஒரு கதாகாலட்ஷேபம் செய்கிறார்
புரோகிதர்.
பந்துக்கள் எல்லாரும் வந்து
வீதியில் தெற்கு முகமாக நமஸ்காரம் செய்கிறார்கள்.
சாஸ்திரப்படி இப்போதுதான்
இறந்து போகிறீர்கள்.
***
“ஸரீர சுத்தார்த்தம், ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் அகண்ட
காவேரீ ஸ்நாநம் கர்த்தும்..”
‘பின்கட்டு’க் குளியலறையில்
தலைமுழுகி , ஈரவஸ்திரத்துடன், வருகிறான் கர்த்தா. அதுதான் உங்கள் மகன்.
அவன் கொண்டு வந்த குடத்து
நீரை உங்கள் பூத உடல் மேல் ஊற்றிக் குளிப்பாட்டுகிறான்.
புரோகிதர் நீட்டிய ‘மடக்கிலிருந்து’
விபூதியைக் கிள்ளிக் குழைத்து பிரேதமான உங்கள் நெற்றியில் பூசுகிறான்.
பரலோகப் பயணத்தின் இரண்டாம்
எபிசோட் முடிந்துவிட்டது.
***
அடுத்து உம் மகனுக்குப் புது
வஸ்திரம் தருகிறார்கள்.
விரட்டி, சிராத்தூள் , உமி,
மண்பாண்டங்கள், சோம்புத்துணி, இளநீர், மட்டைத் தேங்காய், சிராத்தூள், தொன்னைகள், காடாத்துணி, தீக்ஷா வஸ்த்ரம், நக்ன வஸ்த்ரம்..
எல்லாம் தயாராக இருப்பதை உறுதி செய்து கொண்டபின் ;
விரைவில் ‘ஷண்நிமித்த ப்ராயச்சித்தம்’
முடிக்கிறார். அதைத் தொடர்ந்து;
‘ப்ரேத ஔபாஸன அக்னி ஸந்தானம்’
செய்யப் படுகிறது.
இடது கை அத்தி சமித்தை வலது
கைக்கு மாற்றி அக்னியில் வைத்துப் புனிதமாக்கி ‘அக்னி கரணம்’ செய்து குண்டத்தில் பிரதிஷ்டை
செய்தாகிவிட்டது.
***
சவமாய்க் கிடக்கும் உங்கள்
கைத்தொட்டு எடுத்து வந்த ‘அத்தி ஸமித்’தை குண்டத்தின்
தென் வடலாக வைத்து குண்டத்தின் எட்டு திக்குகளிலும் அக்னி பூஜை ஆகிறது.
‘1. அக்னயே நனஹ,,,2. ஹுதவஹாய நமஹ.............8.
ஸ்ரீயக்ஞ புருஷாய நமஹ...”
மொபைலில் நேரம் பார்க்கிறார்
புரோகிதர்.
துரித கதியில் தொடர்கிறார்..
ஆஜ்ய ஹோமத்தின் இரு பகுதிகளான
‘அயாச்ய ஹோமம்’, ‘உத்தபனாக்ந சந்தான ஹோம’த்தையும் புரச இலையில் 12 முறை நெய்தடவி செய்யச்
சொல்கிறார்.
***
அதைத் தொடர்ந்து ‘மரண சாந்தி
ஹோமம்’ ‘சூப்பர் ஃபாஸ்டாய்’ ஓடுகிறது.
கர்த்தா ‘சவப் ப்ரோஷணம்,
சவத்தின்மேல் தண்ணீர் தெளித்துவிட்டு (‘அப்பிரதஷிண)’ இடமாகச் சுற்றி வருகிறான்.
‘பிரேத அன்வாரப்தம்’ தொடங்குகிறது.
***
பிரேதய்க் கிடக்கும் உங்கள்
கையில் நீளமான கயிற்றின் ஒரு நுனியைக் பாவனையாகக் கட்டுகிறார்கள். அந்தக் கயிற்றை நீட்டி,
ஹோமம் நடக்கும் இடத்தில் கர்த்தாவின் தொடையின் கீழ் வைக்கிறார்கள்..
“கயிறை தாண்டப்படாது. தோஷம்
வரும். குறுக்கே நெடுக்கே போயிட வாண்டாம்!” - யோகவேஷ்யணிந்த தொப்பை பிச்சுமணி ‘ப்ரதான
ஹோம மந்திரம் யார் காதிலும் விழாதபடிக்குக் கத்துகிறார்.”
பலி பிண்டம் போட்டாயிற்று.
‘நித்ய விதி’க்காகக் கொஞ்சம் கிழித்துக் கொண்டு,
புதிய வஸ்த்திரத்தை கால் முதல் கழுத்து வரை உங்கள் மேல் போர்த்துகிறார்கள்.
அழுகையும் கதறலுமாய் சத்தம்
காதைப் பிளக்க, உள்ளே கொண்டு வந்த பாடையில் உங்களை ஏற்றிக் கட்டுகிறார்கள்.
வாகனத்தைத் தெருவாசலுக்குக்
கொண்டுவந்து வைத்தபின் “காடுவரை வராதவர்கள், ‘வாய்க்கரிசி’ போட்டனர்.
***
பிணவண்டியில் சவத்தோடு, கர்த்தாவும்
வேறுசிலரும் ஏறுகின்றனர்.
நீங்கள் இறுதியாத்திரை கிளம்பியபின்,
வீட்டார், தெற்கு நோக்கி நமஸ்கரித்துவிட்டு தெரு முனை திரும்பும் வரை பார்த்து நிற்கிறார்கள்.
***
மூன்று இடங்களில் பிரேதத்தை
கீழ் இறக்கி, கர்த்தா மூன்று முறை வலதாகவும் இடதாகவும், தொடைத் தட்டியபடிச், சுற்றிவருகிறார்.
பூமியில் காக்கைக் கால் எழுதி,
தர்ப்பை பரப்பி, எள் தெளிக்கிறார்.
எல்லாச் சடங்குகளும், கிரிமடோடிய
வளாகத்தில் வைத்தேச் செய்கிறார்கள்.
பிறப்பு முதல் இறப்பு வரை
எல்லாமே ஃபார்மாலிடிதானே..?
***
பாடையிலிருந்து அகற்றி கிரீமடோடிய
மேடையில் கிடத்துகிறார்கள்.
கை கால் கட்டுகளை அவிழ்த்தபின்,
கையை விரித்து தங்கம் துடைக்கிறார்கள்.
’இரு கண்கள், இரு மூக்கு
துவாரம், இரு காதுகள், நாக்கு, ஹ்ருதயம், நாபி இவைகளில் நெய்விட்டு நாணயங்கள் வைத்து
எடுக்கிறார்கள்.
‘ஆஜ்ய பிந்து’ ஆகிவிட்டது.
***
அடுத்து ‘ஆஸ்ய தாண்டுலம்’.
பந்துக்கள் கட்டை விரற்கடை
வழி வாய்கரிசி போட்டபின், கர்த்தாவும் போட்டாயிற்று.
“மைனமக்ந விதஹஹ மாபி ஸோசஹ...” - புரோகிதர் உச்சஸ்தாயியில்
சொல்ல, ஹ்ருதயப் பிரதேசத்தில் அக்னியைச் சாய்த்தாயிற்று.
மும்முறை அரிவாள் மூக்கால்
கலயம் பொத்து, சுற்றி வந்து, பானையை பின்னால் தூக்கிப் போட்டு உடைத்துவிட்டு திரும்பிப்
பாராமல் நடக்கச்சொன்னார் புரோகிதர்.
***
காரிய மண்டபத்தின் அருகில்,
நாவிதன் திருமலை முகம் மழிக்க ஆயத்தமாக நிற்கிறான் .
பெசண்ட் நகர் கிரீமடோரிய
ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தபின், பிரேதத்தை சின்னத் தண்டவாளத்தின் மேல், பக்குவமாக
வைத்து லாகவமாய்த் உள்ளே தள்ளுகிறார்கள்.
சூரியப் பழமாய் வீசும் மின் சிதையின் தணல் ஜ்வலிப்பு.
ஓவனுக்குள் தள்ளி, ஷட்டர்
மூடிய ஒரு மணி நேரத்தில் அஸ்தி ரெடியாகிவிடும்.
ஓவனுக்குள்ளிருந்த நெருப்புக்
கோளம் வெளியேற்றிய வெம்மை உங்கள் காலை தாக்குகிறது.
சூடு பட்ட காலை சடாரென்று உதறிக்கொள்கிறீர்கள்.
“ஐயோ..வேண்டாம்..வேண்டாம்..’
- என்று பலமாகக் கத்துகிறீர்கள்.
***
கால் வலிக்கு பிண்ட தைலம்
தடவி, தவுட்டு ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்த மனைவி பதறிப் போய் - “என்னாச்சுங்க..
ஏன் கத்தறேள்..?” என்கிறாள்.
திருதிருன்னு விழிக்கறீங்க..
“ஏன் இப்படிக் கத்தனீங்க?”
- மனைவி, மகன், மருமகள், எல்லாரும் கூடி குலுக்கி முலுக்கிக் கேக்கறாங்க..
நீங்க சொல்றீங்க “கனவு
!” ன்னு.
முகம் கிலி பிடிச்சாப்ல இருக்கு
‘சாதாரணக் கனவா அது?’
***
“டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்கு
எத்தனையோ டாபிக் இருந்தாலும், சாவு, கிரிமேஷன், பரியல், மறுஜென்மம்...! னு டாபிக்கை
எடுத்துக்கிட்டு, எழவு வீடு, சுடுகாடு, இடுகாடு, க்ரீமடோரியம்’னு அலையறதை எண்ணிக்கு
விடப்போறீங்களோ…..?” - உரத்து முணுமுணுக்கிறாள் உங்க மனைவி.
“‘மாஜி பிரேதம்’சார். உங்க
மனைவியைப் சமாதானப் படுத்த என்ன சொல்லப் போறேள் சொல்லுங்கோ?”
கதை புது மாதிரியாக இருக்கிறது. நீங்களே ரிஸர்ச் பண்ணி எழுதிட்டீங்க.... ஏதோ அபர வீட்டில் கலந்து கொண்ட மாதிரியே.... இதை ஏதேனும் போட்டிக்கு அனுப்பி இருக்கலாம். அது சரி ஆவியில் இதற்குச் சன்மானம் உண்டா சார்... ஜூனியர் தேஜ் சார்... கீப் கோயிங்
ReplyDelete