கலியன் மதவு (அத்தியாயம் 16)

 

கலியன் மதவு (சமூக நாவல்)

-ஜூனியர் தேஜ்

அத்தியாயம் – 16

ஆனந்த விகடன் - 23  - 08 . 2022

சாஸ்திரிகளே... சாஸ்த்திரம் படிச்ச நீர், பேச்சு மாறலாமா...?”


இந்தச் சூழ்நிலையில் குந்தலாம்பாளிடம் இப்படி ஒரு ரௌத்ரத்தை எதிர் பார்க்காத ஊரார் அதிர்ந்தார்கள்.

‘என்னச் சேதி...?’

என்னப் பிரச்சனை...?

என்ன நடக்குது இங்கே...?

பரபரப்பும், கேள்வியும், அச்சமும், ஆர்வமும் எல்லார் முகத்திலும், அப்பியிருந்தது...

“முத்தனூர் வழியா வாகனம் போகப் போறதாப் பேச்சு அடிப்பட்டுதே...?”

தலைக்கு மேலேப் போனபிறகுச் சாண் என்ன...? முழம் என்ன...?’

என்ற ரீதியில் கனமாய் வந்தது குந்தலாம்பாளின் குரல்.

“ஆமாம் மாமி...! அதுதானே நம்ம ஊர் வழக்கம்...!

“ம்ஹூம் கூடாது...! பக்கத்து ஊர்ப் பாதைக் கூடவேக் கூடாது...

“………………………………”

அதிர்ச்சியோடுப் பார்த்தார் சாஸ்திரிகள்.

நீங்க வந்ததுமே, நான் உம்மகிட்டே உறுதியாச் சொல்லிட்டேன். சொன்னப்போச் சரி...! சரி...!! ன்னுத் தலையைத் தலையைத் தலையை ஆட்டினேள். இப்போ பேச்சு மாத்திப் பேசறேளே. இது உங்களுக்கேச் சரினு தோண்றதா...?

“………………………………”

உண்மைச் சுட்டது சாஸ்திரிக்கு.

சுட்டச் சட்டியை எப்படிக் கைவிட வேண்டும்...’

யுக்தி பின்னியது அவர் மனசு.

**** 

ம்ம சம்பாக்காணி வழிதான் என் ஆத்துக்கார் போகணும்.

முழுக்க நனைந்தபின் முக்காடுதான் எதுக்கு...?’

என்ற முடிவோடு; சந்நதம் வந்தததைப் போல் உரத்துத், தீர்மானமாகப்  பேசினாள்...

குந்தலாம்பாளின் பார்வையையும், பேச்சில் உறுதியையும் கண்ட, கிட்டாவய்யாத் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எட்டி ஓடிவிட்டார்.

“………………………………”

ஒரு கனம் கனத்த மௌனம் நிலவியது.

குந்தலாம்பாவே மௌனம் கலைத்தாள்..

காப்புக் கட்டு நேரத்துல ஜனங்க அதிகமாப் புழங்கிப் புழங்கி வயல்ல பாதை நன்னாப் படிஞ்சிருக்கு. அது வழியாவேத் தூக்கிண்டு போங்கோ.

உத்தரவு போட்டாள்.

“………………………………”

அது அவரோட கடைசீ ஆசை. அதை நிறைவேத்தவேண்டியது என் கடமை..”

கடமைக்குக் குறுக்கே யார் வந்தாலும் அப்புறப்படுத்திவிடும் உறுதி அதில் இருந்தது.

****************************************

 “குந்தலா...! நீ ஆத்துக்காரர் போன துக்கத்துல எதேதோ பேசறே...! அதெல்லாம் புருஷாள் பாத்துப்பா...! நீ உள்ளே வா...!

வயதான அம்புஜம் மாமி அவளை ஆதரவாகப் பிடித்து உள்ளே இழுத்தாள்.

இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டார் சாஸ்திரிகள்.

“மாமி...! ஊர் வழக்கம்னு ஒண்ணு இருக்கு... அதையெல்லாம் மாத்தப்படாது... ன்னும் எடுத்துச் சொல்லுங்கோ!”

சந்தில் சிந்து பாடினார் சாஸ்திரி.

****************************************

திடீரென்று கிச்சாமியின் குரல் பின்னாலிருந்து ஓங்கி ஒலித்தது.

 திரும்பத் திரும்பச் சொன்னதையேச் சொல்லிண்டு இருக்காம வாய மூடிண்டு சும்மா இரும்மா... நாங்க புருஷாள் இருக்கோம். பக்கத்து ஊர்ல ஏதாவது பிரச்சனைன்னா சமாளிச்சிக்கறோம்...”

கிச்சாமியின் பேச்சை காதிலேயே போட்டுக்காள்ளாமல் அலட்சியப்படுத்தினாள் குந்தலா.

வாழ்வின் ஓட்டம்தான் எவ்வளவு துல்லியமாக அளக்கப்படுகிறது...! தன் அந்தஸ்திலிருந்து சற்றே வழுவினாலும் இந்தச் சமூகம் எப்படியெல்லாம் அலட்சியப்படுத்துகிறது...?

ஊரிலேயே அதிக வயதுள்ளவர்தான் கிச்சாமி என்றாலும், அவரை சிறிதும் மதிக்காமல் தாண்டிப் பேசிய குந்தலாம்பாளை அனைவருமே கவனித்தார்கள்.

மனிதன், தானேதான் தன் மதிப்பை இழக்காமல் காத்துக்கொள்ள வேண்டும். இழந்த மதிப்பீடுகளை மீட்டுக் கொணர்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல.’

இந்த சித்தாந்தத்தை ஊருக்கே அறிவித்தது அந்தக் காட்சி.

****************************************

 டைசீ சம்ப்ரதாயம் ஆகப்போறது. கயறுகூட நீட்டியாச்சு. இந்த நேரத்துல நீங்க வந்து இப்படிப் பேசறது கொஞ்சமும் நல்லால்லே... புத்தி... கித்தி... கெட்டு... ”

இழுத்தாற்போல் பேசினார் சாஸ்திரிகள்.

“ சாஸ்திரிகளே, நான் புத்தி ஸ்வாதீனம் இல்லாமப் பேசலை. சுய நினைவோடத்தான் பேசறேன்.. அவரோட கடைசீ ஆசை, அந்த வயல் வழியாத் தன் வாகனம் போகணும்னு. அதை நிறைவேத்தி வைக்கறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்...”

அது... வந்து...!”

“அது வந்து இதுப் போயின்னு என்ன இழுவை. காணி அவரோடது. அது வழியே அவரைக் கொண்டுப் போறதுல உங்களுக்கு என்ன நஷ்டம்ங்கறேன்.”

****************************************

 “அம்மா...! என்னம்மாப் பேசறே நீ...?”

தொடங்கிய துரைராமனைப் பேச விடாமல் கையமர்த்தினாள்.

ஊர் வழக்கம்னு சொல்றார் சாஸ்திரிகள். திரும்பத் திரும்ப சொன்னதையே செல்றே நீ...”

குரல் உயர்த்தினான் துரைராமன்..

அக்னிக்கு முன் தெற்குப் பார்த்து அமர்ந்திருந்த துரை எழப்போனான்.

“தொரை, எழுந்திருக்கப்படாது... பேசாம ஒக்காரு... நாங்கப் பேசிக்கறோம் அம்மாகிட்டே...”

துரைராமனை அடக்கிவிட்டுக் கர்மாவைத் தொடரப் போனார் சாஸ்திரிகள்.

****************************************

 “வயல் வழியாத்தானேப் போப்போறது...? அதை தீர்மானமாச் சொல்லிட்டுக் கர்மாவைத் தொடருங்கோ...” விடவில்லைக் குந்தலாம்பாள்.

சாஸ்திரிகளுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது.

“இதென்ன வரட்டிழுப்பாப் போச்சு... பிரேதம் எந்த வழியாப் போனா என்ன...? பாத்துண்டா இருக்கப் போறது...? கடைசீ ஆசையாம்... மண்ணாங்கட்டி..!

கத்தினார் எரிச்சலுடன்.

“நீங்க ஏழு வருஷ காலம் பாடசாலைல அத்யயனம் பண்ணி சாஸ்த்ரம், சம்ப்ரதாயம், தர்ம சாஸ்த்திரம்னு எல்லாம் முறைப்படி படிச்ச சாஸ்திரிகள். நீங்க இப்படிப் பேசப்படாது.

அப்படித்தான் பேசுவேன்... என்ன பண்ணுவேள்...?”

நான் பதிலுக்குப் பேசவேண்டியிருக்கும். உங்களுக்குத் தாங்காது...”

 “நானாப் பேசலை... நீங்கதான் பேச வைக்கறேள்...!  வீட்டுக் கொல்லைல அடக்கம் பண்ணணும்னு மாமா ஆசைப்பட்டிருருந்தா அப்படிச் செய்வேளா...? சொல்லுங்கோ...!

குந்தலாம்பாளை மடக்கிவிட்டோம்...’

ஆணாதிக்க அஹங்காரம் அவர் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

“அதுதான் அவர் விருப்பம்னா அப்படித்தான் செய்தாகணும்...!”

சுவற்றிலடித்த பந்தாய் வந்தது பதில்.

****************************************

“.!?!?!....................................”

சாஸ்திரிகள் உட்பட மொத்த ஜனங்களும் வாயடைத்து நிற்க, குந்தலாம்பாளேத் தொடர்ந்தாள்.

எலத்தூர் இளங்கோ வாத்யார் ஆசைப்பட்டார்னு, அவரை, அவாத்துக் கொல்லைல அடக்கம் பண்ணி பிருந்தாவனம் கட்டினாரே அவர் மகன் முத்துக்குமார்.... தெரியுமோன்னோ...?”

“.....................................”

சாஸ்திரியிடம் இதற்கு பதில் இல்லை.

அதுதான் போனவாளுக்குச் செய்யற உண்மையான மரியாதை.”


 “………………………………”

அப்பாவை மதிக்கற மகனுக்கு அருமைத் தெரியும்.”

ஜாடையாய் துரைராமனை தாக்கினாள்.

எலத்தூர்ல, ஊர் உறவு சொந்தம் பந்தம்... எல்லாம் வீட்டுக் கொல்லைஅடக்கம் பண்ண வேண்டாம்னு குறுக்க விழுந்து மறிக்கத்தான் செஞ்சுது...”

“எதுக்கும் அசரல்லையே முத்துக்குமார்...”

“………………………………”

 

என் அப்பா என்னண்ட இப்படித்தான் சொல்லியிருக்கார். அப்பா செய்தா அதுல ஞாயம் இருக்கும். யார் குறுக்க நின்னாலும் செய்தே தீருவேன்னு சொல்லி, உறுதியா நின்னுச் செஞ்சி காட்டினாரே அந்த முத்துக்குமார்... மனிசனா, இல்லே...?”

அடுத்த தாக்கு துரைராமன் மேல் எகிறியது.

துரைராமன் எதுவும் பேசவில்லை.

****************************************

கிராமத்துத் தந்திரங்கள் ஏதும் துரைராமனுக்குத் தெரியாது.

“………………………………”

என்ன பேசவேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று எதுவும் தெரியாமல் அமைதியாக இருந்தான்.

“மாமி, இப்படி வல்லடி வழக்கு  பண்றதுக்கும், விதண்டாவாதம் பேசறதுக்கும் இது நேரமில்லே. பிரேதம் நம்மை எந்த ஊரு வழியா தூக்கிண்டு போறானு  பாத்துண்டிருக்காது. பொம்மனாட்டியா லட்சணமா இருங்கோ...”

சாஸ்திரிகள் சற்றே அதிக உரிமை எடுத்துக் கொண்டுப் பேசிவிட்டார்.

சொற்குற்றம் வந்துவிட்டது.

****************************************

“அப்படியா...! இப்போ அக்னிக்கு முன்னால கர்த்தாவை ஒக்கார வெச்சிக் கர்ண மந்த்ரம், ப்ராயச்சித்தம், அயாச்ய ஹோமம் அது இதுன்னு னு செய்யறேளே, ப்ரேதம் இதையெல்லாம் கண்ணை முழிச்சிப் பாத்துண்டு, காதை தீட்டிண்டு கேக்கறதோ...?”

“………………………………”

“போற வழியைப் பார்க்காத பிரேதம் இதுகளை மட்டும் பார்க்கறதோ...?

சாங்கியம், சடங்கு, சம்ப்ரதாயம் எல்லாத்தையும் கொச்சைப்படுத்தாதேள்...”

“மந்த்ரம், சடங்கு, சம்ப்ரதாயம் எல்லாம் அரூபமாய் இருக்கற ஆன்மாவைப் போய் சேரும்னு நீங்க சொன்னா... அவரோட கடைசீ ஆசையை நிறைவேத்தறதும் அது மாதிரிதானே?”

****************************************

 “புருஷன் இருந்த வரைக்கும் வாய்த் திறந்து பேசாமப் பொட்டிப் பாப்பா அடங்கிக் கிடந்தவ, அவரை அடக்கம் பண்றதுக்குள்ளே இப்படி வாயாடறாளே...!”

“ஊமை ஊரைக் கெடுக்கும்...னு சொல்றதுச் சரியாத்தான் இருக்கு...!”

“ஒண்ணும் தெரியாத பாப்பா...இழுத்து போட்டுக்கிட்டாளாம் தாப்பா...!”

 “ஏண்டீ...! ஊர்க்காராளை இப்படி எதிர்த்துப் பேசறாளே... அவா சப்போர்ட் இல்லாம இருந்துட முடியுமாங்கறேன்...!”

“ஆனாலும் ஒரு பொம்மனாட்டிக்கு இவ்வளவு வாய்க் கொழுப்பு ஆகாதுடீ...”

“இவ புருஷனாவது இவ கிட்டச் சொல்றதாவது. சும்மா அடிச்சி விடறா இவ. பொய்ச் சொல்றதுக்கும் அளவு வேண்டாமோ...?”

“எதையோ மனசுல வெச்சிண்டு, ‘அவலை நினைச்சு உரலை இடிச்சாப்ல’ ஹம்பக் பண்றாளே... எதுலப் போய் முடியப்போறதோ...?”

“பெத்தப் புள்ளைக்கே இவள் போக்குப் பிடிக்கலை பாரேன்...”

பிரேதம் ரேழீல கிடக்க, ஒரு பொம்மனாட்டி இப்படி வாய் வீசறாளே...! இதெல்லாம் நல்லதுக்கில்ல?”

“விநாச காலே விபரீத புத்தி...

வாய்க்கு வந்தபடி முணுமுணுத்துக்கொண்டிருந்தது ஊர்.

****************************************

“முடிவா என்னதான் சொல்றே...? சொல்லிடு...” என்றார் சாஸ்திரி குந்தலாம்பாளைப் பார்த்து.

குரலில் புரோகிதர்களுக்கே உரிய பவித்ர அகங்காரம் இருந்தது.

“நம்ம காணி வழியாத்தான் போகணும்...!”

உறுதியாகச் சொல்லிவிட்டு உள்ளே வந்துத் தன் இடத்தில் நின்றாள்.

“எக்கேடும் கெட்டுப் போங்கோ. என்னை ஆளை விடுங்கோ.”

பொதுவாய்க் கத்தினார் சாஸ்திரிகள்.

****************************************

 “மாமா...”

துரை ஏதோ சொல்ல வந்தான்.

“துரை, அபர காரியத்தை ஆரம்பிச்சுட்டேன். பாதீல விட்டுட்டுப் போறது தர்மமில்லே. இன்னிக்கு, இங்கே பண்ண வேண்டிய பிரயோகங்களை செஞ்சி பிரேத்த்தைக் கரையேத்திடறேன்...”

சற்றே நிறுத்தினார்.

“நான் முத்தனூர்ப் பாதைலதான் மயானத்துக்கு வருவேன். 

இன்னிக் காரியத்தோட என்னை விட்டுடு. 

நாளைலேர்ந்து பதினாறு நாள் காரியத்துக்கும் வேற யாரையாவது பாத்துக்கோ...!”

சொல்லிவிட்டு அக்னியைப் பித்தளைச் சாமணத்தால் எடுத்தார்.

உரிபோல் கட்டப்பட்டுக் கூண்டில் இருந்த, உமியும் விராட்டித் துண்டுகளும் முறையாய்ப் போடப்பட்டப் புது பானையில் வைத்தார்.

மந்திரங்களை உச்சரித்தார்.

நேரம் அறிந்தச் சாமாளி உள்ளேச் சென்று கயிற்றை இழுத்துக்கொண்டான்.

வாகனம் உள்ளே சென்றது.

அழுகைச்சத்தம் முழு வீச்சில் எகிறியது.

நடு வாசலில் வைத்தார்கள்.

மயானத்திற்கு வராதவர்கள் எல்லாரும் அங்கேயே வைத்து வாக்கரிசிப் போட்டார்கள்.

****************************************

றுதியாத்திரைத் தொடங்கும்நேரம் சாஸ்திரிகள் பெரிய குரலில் சொன்னார்.

“எல்லாரும் கேட்டுக்கோங்கோ...!”

அழுகுரல்களின் பின்னணியில் பலமாகச் சொன்னார் சாஸ்திரி.

பிரேதம் மரிச்சதுக்கு, ஏற்கெனவே முத்தனூர்காரா மன்னிப்புக் கேட்டுட்டா. இந்த விஷயம் உங்க எல்லாருக்கும் தெரியுமோன்னோ? .”

“………………………………”

அவா எந்த எதிர்ப்பும் சொல்லாதப்போ, இன்னிக்கு இந்தப் பிரேதம், அந்த வயல் வழியாப் போனா, எதிர்காலத்துல, அந்தனூர்ப் பொணம் போற பொதுப் பாதையா ஆயிடும் அந்த வயல் .. சொல்லிட்டேன்...”

முதலில் பொதுவாய்ச் சொன்னார்.

அப்பறம் உன் இஷ்டம் துரை...”

குறிப்பாகச் சொல்லி முடித்தார்.

****************************************

ந்த இடத்தில் எதை எப்படிக் கலைக்க வேண்டும் என்று தெரிந்துத் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட சாணக்கியம் இது.

கிராமத்துச் சாணக்கியம்.

“அந்த வயலை பொதுப்பாதையா ஆகணும்கறதுதான்  என் ஆத்துக்காரரோட திட்டம்...!

குந்தலாம்பாள் பலமாகத்தான் சொன்னாள்.

 அவள் சொன்னது பக்கத்தில் உள்ளக் காதுகளுக்குக் கூடக் கேட்கவில்லை.

பெண்களின் அழுகை குவியலுக்கு அடியில் அமிழ்ந்துபோனது.

****************************************

காலங்காலமா இருக்கற ஊர் வழக்கப்படி, என் பின்னால முத்தனூர் பாதை வழியா வாங்கோ...!”

அசட்டுக்கு ஆங்காரம் வந்தாற்போல, உரக்கச் சொன்னான் துரைராமன்.

கூ... என்று பலமாய்க் கூவிவிட்டுப் புகையைக் கக்கிக்கொண்டு செல்லும் ஸ்டீம் எஞ்சின் போல...

அக்னி குண்டம், அடர்ந்த புகையைக் கக்க நடந்தான் துரைராமன்.

ஆஸ்தான பிணம் தூக்கிகளான சாமாளி, வைத்தா, கோபாலன், பிச்சை நால்வரும் துரையைத் தொடர்ந்தனர்.


இப்படி ஒரு திடீர்த் திருப்பத்தை சிறிதும் எதிர்பார்க்காத குந்தலாம்பாள் அதிர்ச்சியில் உறைந்தாள்.

****************************************

லியா... என் கடைசீ ஆசையை மதிக்காம, பிடிவாதமா, முத்தனூர் வழியாத் தூக்கிட்டுப் போனா அதுக்காக கவலைப்படாதே. மாத்து வழி ஒண்ணு இருக்கு... நான் சொல்றேன். அதை நீ செஞ்சிடு. என் ஆன்மா சாந்தியாயிடும்...’

குத்தகைப் பத்திரத்தைக் கையில் கொடுத்தபோது மாதய்யாச்  சொன்னார் கலியனிடம்...

“அந்தப் பேச்செல்லாம் இப்ப எதுக்குய்யா...? என்று ஒத்திப் போட்டுவிட்டான் கலியன்.

அய்யாவின் வாயால அந்த மாத்து வளியைக் கேட்டுக்காமப் போயிட்டமே...!’

கழிவிரக்கத்தில் கலங்கினான் கலியன்.

****************************************

 முத்தனூர்ப் பாதை வளியா, மயானத்துக்குப் போய்ச் சேர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும். அதுக்குள்ற அயிலாண்டக் கிழவியாண்ட. அந்த மாத்து வளி கேட்டுச் செஞ்சிரலாம்...!’

யோசனைத் தோன்றியது கலியனுக்கு.

கக்குடிக் கள்ளுக்கடைச் சந்து வழியாகக் குறுக்கு வழியில், ஓட்டமும் நடையுமாய்ச் சென்றான்.

கிழவியின் குடிசையை அடைந்தான்.

கலியா, நம்ம சாங்கியம் வேறெல. அவங்களுக்கு நம்ம சாங்கியம் சரிவராதுல...”


 “கெளவி ...! என்னண்ட, “ நீ செய்யிடா கலியா! ” னுதான் அய்யாச் சொன்னாரு.  

அடியாத்தீ... உன்னியச் செய்யச் சொன்னாரா...?” வியந்தாள் கிழவி.

மொரைய மட்டும் சொல்லு தாயி நான் செஞ்சிடுதேன்.”

முறையை முறையாகச் சொன்னாள் அயிலாண்டக் கிழவி.

****************************************

வாகனம் வருவதற்கு முன் மயானத்தை அடைந்துவிட்டான் கலியன்.


வெட்டியான் ராகுவிடம் செய்தியைச் சொன்னான்.

“இந்த ஊருக்கும் நமக்கும் எவ்வளவோ நல்லது செஞ்சவரு நம்ம அய்யா. அவுரு  ஆசையைப் பூர்த்தி செய்ய என்ன வேணாலும் செய்யலாம் கலியா....”

ராகுவின் முழு ஒத்துழைப்பும் கிடைத்துவிட்டது கலியனுக்கு.

****************************************

பெண்கள் மயானம் வரைச் செல்லும் வழக்கம் அந்தனூரில் கிடையாது.

வழக்கம்போல மயானக் காண்டம் முடிந்து புகை மூட்டம் வரும்வரை, காவிரிக் கரையில்தான் உட்கார்ந்திருந்தார்கள்.



எப்போதும்போல மயானத்தில் புகைமூட்டம் கண்டவுடன், தலை முழுகினார்கள்.

வீடு திரும்பினார்கள்.

****************************************

ங்கஜம் மாமி குந்தலாம்பாளைப் பாவனையாகப் பிடித்துக்கொண்டாள்.

குந்தலாம்பாளுக்கு இந்த மரபெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

“துக்கம் மனசுல இருக்கணும்.  ஊருக்கு அழுதுக் காட்டினாத்தான் துக்கம்கறது இல்லே. என்னைப் பிடிச்சிண்டெல்லாம் வர வேண்டாம். என்னை விட்டுடுங்கோ. நானே வந்துடுவேன்...” என்றாள்.

மொரட்டு ஆம்பளைக் குதிரை...”

அழுத்தக்காரி...”

ஆங்காரம் பிடிச்சவொ...”

கொழுப்பெடுத்தவ...”

“............................................”

இதுபோல, கண் மறைவில், ஊர்ப் பெண்கள் எப்படியெல்லாம் தன்னைப் பற்றி விமரித்துப் பேசினார்கள், பேசுகிறார்கள்,  பேசுவார்கள் என்பது நன்றாகவேத் தெரியும் குந்தலாம்பாளுக்கு.

அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

வாசல் திண்ணையில் பக்கெட்டில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது.


அருகில் வைக்கப்பட்டிருந்த பித்தளைச் சொம்பால் மொண்டுக் கால் அலம்பினாள்.

உள்ளே சென்றாள்.

ரேழியில் உலக்கைக் கிடத்தப்பட்டிருந்தது.  உலக்கையைத் தாண்டினாள்.

பித்தளைத் தாம்பாளத்தைப் பார்த்தாள்.

மரக்காலில்  வைக்கப்பட்ட நெல்லையும்  பார்த்தாள்.

சாங்கியம் முடிந்துவிட்டது.

உள்ளே சென்றாள்.

மாதய்யா கிடத்தப்பட்டிருந்த இடத்தில் காமாட்சி விளக்கு எறிந்துகொண்டிருந்தது.

****************************************

மையல் அம்புஜம் மாமி நாற்பது பேருக்குச் சமைத்துக் கொண்டுவந்து தாழ்வாரத்தில் வாழையிலைப் போட்டு மூடி வைத்திருந்தாள்.

பரிமாறுவதற்காக சரோஜா மாமியும், கண்ணப்பன் மாமாவும் வந்திருந்தனர்.


 ****************************************

சிதைக்கு நெருப்பு வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டனர் வந்தவர்கள்.

அவர்கள் எல்லோரும் படித்துறைக்கு தலைமுழுகச் செல்லும் வரைக் காத்திருந்தனர் ராகுவும் கலியும்.

மயானப் படித்துறையில் இறங்கித் தலைமுழுகிவிட்டு ஈரத்துணியோடு சுத்தபத்தமாக வந்தனர் இருவரும்.

நெருப்பு அவியாமல், சிதையைத் திறந்தனர்.

கலியன் கண்ணீர் விட்டுக் கதறினான்.

என்னை மன்னிச்சிடுங்கய்யா...!”

கத்திரிக்கோலுடன் சிதையின் அருகில் செல்லக் கை கூசியது.

அய்யாச் சொன்னதைத்தானேச் செய்கிறோம்…’

தன்னைத்தானேச் சமாதானம் செய்துக் கொண்டான்.

மாதய்யாவின் தலைமுடியைக் கொஞ்சம் கத்தறித்து எடுத்துக் கொண்டான்.

அவர் இடுப்பில் கட்டியிருந்த அரணாக்கொடியை அறுத்து எடுத்தான்.

அவரின் கை நகம் சிறிது கிள்ளி எடுத்துக் கொண்டான்.

புகைந்து கொண்டிருந்த சிதையை எரியூட்டினார்கள்.

ராகுவோடு சேர்ந்து,  பக்குவமாகக் களிமண் பூசி மெழுகினாள் கலியன்.

கனத்த இதயத்துடன் காவிரியில் மீண்டும் முழுகினான்.

நேரே மாதய்யா வீட்டுக்குச் சென்றான்.

****************************************

கனம் முடிந்ததும் நாவிதன் திருமலையிடம் முகம் மழித்துக் கொண்டான் துரைராமன்.


முழுகினான்.

மற்றத் தர்ப்பணக் காரியங்களைக் காவிரியின் கருமாதிப் படித்துறையில் செய்து முடித்தான்.

மீண்டும் முழுகி எழுந்தான்.

வயிறு பசித்தது.

ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேர்ந்தான்....

****************************************

சிலர் சாப்பிட்டார்கள்

சிலர் உண்டார்கள்

சிலர் தின்றார்கள்

சிலர் பசியாறினார்கள்.

சுப்பாணியைத் தவிர, குந்தலாம்பாள் வழி உறவினர்கள் அனைவரும் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டார்கள்.

“குந்தலா... ஒரே ஒரு வா சாப்பிடேன்...”

நுற்றிப்பதினெட்டாவது முறையாகக் கேட்டார் சுப்பாமணி.

“வேண்டாண்டா சுப்பா...”

****************************************

ந்த நேரம் பார்த்து மோகனா அங்கு வந்தாள்.

“கொல்லைக்கட்டுல கலியன் வந்து நிக்கறான்...” என்று அறிவித்தாள்.

பற்ற வைத்தவுடன் ‘விருட்’ டென்று மேலே போகும் ராக்கெட் வானத்தைப் போல ‘விருட்’ என எழுந்தாள் குந்தலாம்பாள்.

காணாமல் போனக் குழந்தையைக் கண்ணெதிரில் கண்ட தாயைப் போல ...!’ வெனப் பெரிதாகக் கதறி அழுதாள்.

கலியனும் கதறினான்.

****************************************

 ம்மா...!”

சொல்லு கலியா...!”

கொள்ளி வெச்சபிறகு, மீண்டும் சிதையைக் கலைச்சி அய்யாவை நான் தொட்டுட்டேன்மா...! என்னை மன்னிச்சிடுங்கம்மா...!

அரற்றினான் கலியன்.

“தாயா புள்ளையா பழகற நீ தொட்டாத்தான் என்னடா...? மலட்டுக் கொடலா இருந்திருந்தா, அய்யாவுக்கு உன்னைத்தாண்டா கொள்ளிபோடச் சொல்லியிருப்பேன். நீ தொட்டதால அய்யாவுக்கு சொர்க்கம் நிச்சயம்டா...”

உணர்ச்சி வசப்பட்டாள் குந்தலாம்பாள்.

****************************************

“அய்யா ஆசைப்பட்ட மாதிரி, நம்ம வய வழியா அய்யாவைக் கொண்டுபோக முடியாமப் போயிருச்சேன்னு, மனசு விட்ராதீங்கம்மா...

“............................................”

கலியன் சொல்ல வருவதை அமைதியாகக் காது கொடுத்துக் கேட்டாள் குந்தலாம்பாள்.

அய்யாவோட கடைசீ ஆசையைத் தீர்த்து வைக்கறதுக்காகத்தான் நான் அய்யாவைத் தொட்டேன்ம்மா...”

“என்னடா சொல்ற கலியா..?”

அய்யா தன்னிடம், மாற்று ஏற்பாடு செய்யச் சொன்னதையும், அயிலாண்டக் கிழவி சொன்ன சாங்கியத்தையும் சொன்னான்.

 அதற்குத் தேவையான மாதய்யாவின் முடி, நகம், அரணாக்கொடி ஆகியவற்றை சிதை பிரித்து எடுத்து வந்ததைப், பையில் வைத்திருந்த பித்தளைச் சம்புடத்தை எடுத்துத் திறந்துக் காட்டினான் கலியன்.

அம்மா, இதையெல்லாம் பத்திரமா வெச்சிருந்து, இதுதான் பாதைனு சம்பாக் காணியைக் காட்டற காலம் வந்ததும், ஒரு பானைல இதுங்களை வெச்சி அந்தப் பாதை வழியே கொண்டு போயி மயானத்துல வெச்சி எரிச்சிட்டோமுன்னா அய்யா ஆசை தீந்துடும்மா...”

கலியா..............................................................

என்பதற்கு மேல் குரல் எழவில்லை. அந்த மௌனத்தில் ஏகமாய்ப் பேசினாள் குந்தலாம்பாள்.

****************************************

ந்த ஊரில், இந்த மயானத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள், வேறு ஊரில், வேறு நாட்டில் அடக்கம் ஆக நேர்ந்துவிட்டால், அடக்கம் ஆவதற்கு முன் அந்த உடலிலிருந்து தலைமுடி, நகம், அரணாக்கொடி என எதையாவது ஒன்றை எடுத்து வந்து அதை பானையில் வைத்து விரும்பிய இடத்தில் அடக்கம் செய்தால் ஆன்மா சாந்தி ஆகும் என்பது நம்பிக்கை.

வாழ்க்கை முழுதுமே நம்பிக்கையில்தானே இருக்கிறது.

பரிகாரம் செய்யும் வழிமுறைகளை அயிலாண்டக் கிழவியிடம் தெரிந்துக் கொண்டு, உள்ளூரிலேயே அடக்கம் செய்யப்பட்டாலும், மாதய்யாவின் ஞாயமான ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில், சிதைப் பிரித்து எடுத்து வந்தவைகளைப் பார்த்தபோது, கண்ணீர் பெருகியது.

கலியனை கட்டித் தழுவி மகனே... என்று உச்சி மோந்து ஆராதிக்க வேண்டும் போல் இருந்தது.

****************************************

“ஒரு நிமிஷம்...” என்றாள் குந்தலாம்பாள்.

‘சரட்’டென உள்ளே போனாள்.

இரண்டு தட்டுக்களில் சாப்பாடு எடுத்து வந்தாள்.

“கலியா சாப்பிடு. நானும் இப்போ உன்னோடு சேந்துதான் சாப்பிடப் போறேன்.”

‘அக்கா ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாள்...?’ என்று குழப்பமாக இருந்தது சுப்பாமணிக்கு.

எப்படியோ அக்காள் சாப்பிட்டால் சரிதான்...!’

தன்னைச் சமாதானம் செய்துகொண்டான் சுப்பாமணி.

எசமானியம்மாளோடு சேர்ந்து சமதையாக சாப்பிட்டதில்லை என்பதால் கலியன் மிகவும் கூச்சப்பட்டான்.

பெத்த தாய்க்கு முன்னே இப்படித்தான் கூச்சப்படுவியா கலியா...?”

குந்தலாம்பாளின் கேள்வியில் நெகிழ்ந்த கலியனும் பசியாறினான்.

அதற்குப் பின் மூன்று நாட்கள் சுப்பாமணி அந்தனூரில்தான் இருந்தார்.

****************************************

     நான்காம் நாள் காலை முற்றத்தில் உள்ள துளசி மாடத்து அருகில் ஜப மாலையுடன் உட்கார்ந்திருந்தாள் குந்தலாம்பாள்.


“ஆபீஸ்ல ஆடிட் வர்றதுக்கா. நான் புறப்படறேன். பத்தாம் நாள் காரியத்துக்கு வந்துடறேன். சொல்லிண்டு போகக் கூடாது...” என்றுச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் சுப்பாமணி.

சுப்பாமணிக்குக் கட்டைக் குட்டையானச் சரீரம். அவர் நடந்து செல்லும்போது பார்த்தால் நீளவாக்கில் இருக்கிற பப்பாளிப் பழத்துக்கு கையும் காலும் முளைத்து பேண்ட் சட்டைப் போட்டு நடப்பது போல இருக்கும்.

மெட்ராஸ் மாநகராட்சியில் சப் கலக்டருக்குப் (நேர்முக உதவியாளராக) ‘பி ஏ வாக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் எல்லா ஜில்லாக்களிலும் அவர் வேலை பார்த்திருக்கிறார்.

அவருடைய ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர்களையெல்லாம் மிஞ்சியதாக இருக்கும்.

அவர் எழுதும் ஆங்கிலக் கடிதங்கள் அவ்வளவு வலிமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.

சுப்பாமணி நைஷ்டிக பிரம்மச்சாரி.

அவருடைய பணி, (குறிப்பாக அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங்), எந்த ஜில்லாவுக்குத் தேவையோ அங்கே டெபுடேஷனில் அவரைத்தான் அனுப்புவார்கள். 

எந்த ஜில்லாவுக்கு எப்போது அனுப்பினாலும் கல்யாணம் செய்துகொள்ளாத நைஷ்டிக பிரம்மச்சாரியான சுப்பாமணி சந்தோஷமாகப் போவார்.

இப்படி ஜில்லா ஜில்லாவாகச் சுற்றியதால் அவருக்கு எல்லா ஜில்லாக் கலெக்டர்களும் அறிமுகமானவர்களாகத்தான் இருந்தார்கள்.

ஜில்லா கலெக்டர் நெருக்கம் என்பதால் எந்த விதமான அனுகூலங்களையும் பெற்றவரில்லை அவர்.

யாருக்காகவும் , எதற்காகவும் சிபாரிசு என்று நின்றவரில்லை.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதாலோ என்னவோ, எல்லா ஜில்லா கலெக்டர்களுக்கும் சுப்பாணியின்மேல் ஒரு பிரியம் உண்டு.

****************************************

மூன்று நாட்களும், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல், ஒரு இறுக்கமான அமைதியில் இருந்தது வீடு.

துரைராமன் ஓரிரு முறை அம்மாவோடு பேச முயற்சித்தப் போதும் குந்தலாம்பாள் முகம் கொடுத்துப் பேசவில்லை.

‘இன்னும் இரண்டு நாட்கள் போனால் சரியாகிவிடும்’ என்று அதற்குப்பின் பேச முயற்சிக்கவே இல்லை துரை.

காலை ஏழுமணிக்கும் சாஸ்திரிகள் வருவார்.

நித்யவிதிச் சாங்கியங்களைச் செய்து வைப்பார்.

அதெல்லாம் முடிந்தவுடன் சாப்பிடுவான் துரை.

கிட்டாவய்யா வீட்டுக்குச் சென்றுவிடுவான்.

****************************************

 ம்மா... தபால்...”


மாதய்யாவின் மறைவிற்குப் பின் வரும் முதல் தபால் இது.”

குந்தல்லாம்பாளே வாசலுக்கு வந்தாள்.

வழக்கமாக அய்யா... தபால்...” என்று சொல்லித் தபால் தரும் சபாபதி சூழ்நிலைக்குத் தக்கவாறு “அம்மா தபால்...” என்று முதல் முதலாய் விளித்தான்..

அம்மா தபால் வாங்க வந்ததைப் பார்த்ததும் அழுகை வந்துவிட்டது சபாபதிக்கு.

விவேகானந்த கேந்திரத்திலிருந்து அவ்வப்போது இப்படி எதாவது தபால் வரும் மாதய்யாவுக்கு.

புத்தகத்தைப் பிரித்து  வைத்துக்கொண்டுக் கீழண்டை உள்ள குட்டிச் சாரமனைத்திண்ணையில் உட்கார்வார் மாதய்யா.

மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன் உட்கார்ந்து, மிகக் கவனமாக ரிவைஸ் செய்வார்களே அப்படி இருக்கும் அவர் படிப்பது.

ஒரே மூச்சில் புத்தகம் முழுவதும் படித்துவிட்டுத்தான் எழுவார்.

மாதய்யா இல்லாத திண்ணை மேலும் சபாபதிக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

தபாலை டெலிவரி செய்துவிட்டு, போஸ்ட்மேன் சபாபதி கனத்த இதயத்துடன் கிளம்பிப் போனார்.

விவேகானந்தரின் சிந்தனைகள் என்ற அந்த சின்னஞ்சிறு வெளியீட்டைப் பிதித்து வைத்தபடி முதல் முறையாக மாதய்யா போல அந்தத்திண்ணையிலேயே அமர்ந்தாள்.

கவனமாகப் படித்தாள் குந்தலாம்பாள்.

****************************************

மாதய்யா, ராணுவத்தில் இருந்தபோது, ரமணன் என்ற கெர்னல் நெருக்கமானார்.

மாதவனின் புரட்சிகரமான கருத்துக்களையும் எண்ணங்களையும் கண்டு வியந்தார் அந்தக் கெர்னல்.

விவேகானந்த கேந்திரத்தை மாதவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவர் நூல்களைக் கொடுத்துப் படிக்கச் செய்தார்.

மெட்ராஸில் கேம்ப் வந்தது

விவேகானந்தர் இல்லத்திற்கு மாதவனை அழைத்துச் சென்றார், கெர்னல் ரமணன்.

விவேகானந்தரின் புரட்சிகரமான எழுச்சிமிக்கக் கருத்துகளில் தன்னை இழந்தார் மாதவன்.

பப்ளிகேஷன்ஸ் டிவிஷனில் ஆயுள் சந்தா கட்டினார்.

கேந்திரத்தில் எது அச்சிடப்பட்டாலும் அது மாதய்யாவின் அந்தனூர் விலாசத்துக்கு வந்துவிடும்.

அவர் படித்த அந்தப் புத்தகங்களை வரிசையாக அடுக்கிப் பராமரிப்பார் மாதய்யா.

****************************************

திருப்பளாத்துறை ராமகிருஷ்மடத்தோடும் நல்லத் தொடர்பு உண்டு மாதய்யாவுக்கு.

அவ்வப்போது அங்கு போவதும், அங்குள்ள மாணவர்களுடன் ஒரு நாள் முழுதும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டும் வருவார்.

இதுவும் அவரின் உன்னதமான காரியங்களில் ஒன்று.


     திருப்பளாத்துரையிலும் அவ்வப்போது துண்டுப்பிரசுரங்கள், சஞ்சிகைகள் தருவார்கள். அதையும் வாங்கி வருவார்.

படிப்பார்.

பாதுகாப்பாக பீரோவில் அடுக்கியும் வைத்திருக்கிறார் மாதய்யா.

****************************************

னைக்கு விளக்கம் மடவார்

என்கிறார் விளம்பி நாகளார் தன் நான்மணிக்கடிகை 105 வது செய்யுளில்.

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றான் பாரதி.

ஒரு பெண்ணுக்குத் தரும் கல்வி அந்தக் குடும்பத்துக்கே தருவதாகும் என்கிறார் கர்ம வீரர் காமராஜர்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் முழுமையாகத் தன் வாழ்நாளில் கடைபிடித்தவர் மாதையா...

பெண் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த மாதையா குந்தலாம்பாளுக்கு விவேகானந்த கேந்திரத்தில் இருந்து வரும் புத்தகங்களையெல்லாம் அவளிடம் கொடுத்துப்  படிக்கச் சொல்வார்.

மாதய்யாவின் உள்ளார்ந்த ஊக்குவிப்பின் விளைவு...

மாமியாரின் கடுமையானச் சட்டதிட்டங்களுக்கும், கொடுமைகளுக்கும் மத்தியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவேகானந்தர் இல்லத்திலிருந்து வந்திருக்கும் கையேடுகளையோ, நோட்டீஸ்களையோ, புத்தகங்களையோ எடுத்துப் படிப்பது குந்தலாம்பாளுக்கு வழக்கமாகிப் போனது.  

விவேகானந்தரின் வீர வரிகளை நிறையப் படித்ததன் தாக்கமாய், பெண்களின் முன்னேற்றத்துக்கு இடையூராக வரும் எந்தக் கருத்துத் திணிப்புகளையும்,  சாங்கியங்களையும், சாஸ்திரங்களையும் எதிர்த்துப் போராடத் தூண்டியது.

****************************************

காசியாத்திரை சென்றிருந்த குந்தலாம்பாளின் தங்கை புஷ்பா செய்தி அறிந்து மூன்றாம் நாள்தான் வந்து சேர்ந்தாள்.

அவளைப் பார்த்து துக்கம் விசாரிக்கவும் பெண்டுகள் வருவதும் போவதுமாக இருந்தது.

****************************************

நான்காம்நாள் திருப்பணிப்பேட்டை பரிபூரணியம்மா, துக்கம் விசாரிக்க வந்தாள்.

சாரதா கொடுத்த காப்பியைப் பருகினாள்.

பின் கட்டுக் கிணற்றடிக்குச் சென்றாள்.

அம்பாரமாய்க் குவிந்து கிடந்த பாத்திரைங்களின் மேல் இரண்டு பக்கெட் தண்ணீரை கிணற்றிலிருந்து இறைத்துக் கொட்டினாள்.

மனைப் பலகையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து எல்லாப் பத்துப் பாத்திரங்களை ஒரு ஈடு தேய்த்துப் போட்டாள்.

பரிபூரணி அப்படித்தான். எங்கே போனாலும் ஒரு வாய்த் தண்ணீர்க் குடித்தாலும் அதற்கு ஈடாக ஏதாவது வீட்டு வேலை செய்துவிட்டுத்தான் திரும்புவாள்.

உழைக்காமச் சாப்பிடக்கூடாதுஎன்பாள் அவள்.


****************************************

தொரை... என்ற அழைத்துக்கொண்டே அடுத்தாற்போல் வந்தாள் லலிதா மாமி.

“............................................”

“தொரை... இந்தப் பத்து நாளுக்குள்ள உங்க அம்மாவை மெட்ராஸ்ல உன் ஜாகைக்கு அழைச்சிண்டு போகணுமேடா...!” என்றாள் நீட்டி முழக்கியபடி

“எதுக்கு மாமி...?” வெள்ளந்தியாகக் கேட்டான் துரை.

“ போடாப் பைத்தியம்... ஆளுதான் வளர்ந்திருக்கயேத் தவிர, எதுவும் தெரியலை நோக்கு.”

“என்ன சொல்றேள் மாமி...?”

“சொரைக்காவுக்கு உப்பு இல்லேன்னு சொல்றேன்...” என்று தொடங்கினாள்.

“தொரை, மெட்ராஸ் ஜாகைல உனக்கு எதாவது நல்லதுகெட்டதுன்னா உங்கம்மாதானே வரணும் அங்கே...?”

“ஆமாம்.”

 

“இந்தப் பத்து நாளுக்குள்ளே அவ எந்தெந்த வீட்டுக்குள்ளே காலடி பதிக்கறாளோ, அந்த வீட்டுக்குள்ளதான் அப்பாவோட வருஷ திவசம் முடியறவரைக்கும் நுழையலாம்.

மத்தவாளாத்துக் குத்துக்கல் மிதிக்கப்படாது. சாஸ்த்ரம் சொல்றது.”

“............................................”

“நான் யாராத்துக்கும் போறதா இல்லை.” குந்தலாம்பாள் உறுதியாக மறுத்தாள்.

பட்டக சாலையில், ஒன்பது வயதில் கண்யாணம் ஆகி, பத்து வயதில் கணவனை இழந்து, மொட்டை அடிக்கப்பட்டு நார்மடிச் சேலையை முட்டாக்குப் போட்டுக் கொண்டு கூன் முதுகுடன், உட்கார்ந்திருந்த, புஷ்பாவையும், அவள் பட்ட, படுகின்ற  பாட்டையும் குந்தலாம்பாள் நினைத்து நினைத்து உருகினாள்.


****************************************

நாம் என்ன மனிதர்கள்தானா...?’ விவேகானந்தரின் கேள்வியோடு தொடங்கியது அந்தக் கையேடு.

பெண்களுக்கு பதினொரு வயது ஆனதும் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கெட்டுப் போவார்கள் என்று சொல்பவர்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்தானா?.

மனு என்ன சொல்கிறார்?      

கன்யாப்யேவம் பாலனீயா சிக்ஷணீயாதியத்னத\                             

[-பெண்களையும் மிகுந்த முயற்சியுடன் வளர்க்க வேண்டும், சிறந்த முறையில் கல்வியளிக்க வேண்டும்.]

என்றல்லவா சொல்கிறார் மனு.

மனுதர்மம் மனுதர்மம் என்று மூச்சுக்கு மூச்சு சொல்பவர்களுக்கு இந்தக் கருத்து மட்டும் தெரியாமல் போனது எப்படி?

ஆண்கள் எப்படி முப்பது வயது வரையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கிறார்களோ, கல்வி பெறுகிறார்களோ, அதேபோல் பெண்களுக்கும் செய்விக்க வேண்டும்.

உங்கள் பெண்களின் நிலையை உயர்த்துங்கள் இல்லாவிட்டால் மிருக நிலையில்தான் இருப்பீர்கள்.

...பெண்களுக்கு 9 வயதிலேயே திருமணம் செய்கின்ற வெட்கக்கேட்டை நிறுத்த வேண்டும். எல்லா பாவங்களுக்கும் இதுதான் ஆணிவேர்.

நண்பரே, இது ஒரு மாபெரும் பாவம். சிறுவயதுத் திருமணத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஒரு சட்டம்போட முனைந்தவுடன் நமது உதவாக்கரை மக்கள் போடுகிறக் கூச்சலை நினைத்துப் பாருங்கள், என்ன கேவலம்!  நாமாக அதை நிறுத்தாவிட்டால் அரசாங்கம் தலையிடவேச் செய்யும், அதைத்தான் அரசாங்கம் விரும்பவும் செய்கிறது...

10 வயதுப் பெண்ணிற்கு, தொப்பைப் பெருத்த, வயதான ஒரு கணவனைப் பார்த்துப், பெற்றோரே அவனது கையில் பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள். என்ன பயங்கரம்!.. 

...எட்டு வயதுச் சிறுமி முப்பது வயதான ஒருவனுக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்;

சிறுமியின் தாய்தந்தையர் ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். இதை எதிர்த்து யாராவது வாய் திறந்தால் போதும், ’, நமது மதம் போய்விட்டது என்று கூக்குரலிடுகின்றனர்.

8 வயது சிறுமியைத் தாயாக்கி, அதற்கு விஞ்ஞான விளக்கமும் கூற முற்படுவோரிடம் என்ன மனிதத்தை எதிர்பார்க்க முடியும்? 

இளமை மணம் என்ற இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை என் வலிமை கொண்டமட்டில் நான் நசுக்கி ஒழிப்பேன்...

குழந்தைகளுக்குக் கணவனைத் தேடித் தருவதாகிய இத்தகைய செயல்களில் நான் எவ்வித பங்கும் கொள்ள முடியாது, நிச்சயமாக முடியாது. இறையருளால், நான் அதைச் செய்ததுமில்லை, செய்யப் போவதும் இல்லை...குழந்தைக்குக் கணவனைத் தேடித் தருகின்ற ஒருவனை நான் கொல்லவும் செய்வேன். 

****************************************

தையெல்லாம் படித்தபின் தன் தமக்கையின் குழந்தை விவாகமும், வைதவ்யமும் நினைவில் வந்து உறுத்தியது குந்தலாம்பாளுக்கு.

சிறு வயதில் இதெல்லாம் தெரிந்து, தமக்கைக்கு நடந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்கக் கையாலாகாமல் போனதே என்ற கழிவிரக்கத்தில் கலங்கினாள் .

தற்போது துக்கம் கேட்க வந்தவள், தன் தமக்கை புஷ்பாவின் துக்கத்தையும் கிளறி விட்டுவிட்டாள். நெருப்புத் தணலுக்கு உள்ளே அடைந்துகிடக்கிறாற்போல உஷ்ணம் தகித்தது



றும்புப் புற்றைக் கிளறி விட்டாற்போல நினைவுகள் வரிசையாய் குந்தலாம்பாள் முன் அணிவகுத்துச் சென்றன.

வெள்ளித்திரையில் சினிமாக் காட்சிகள் விரிவது போல

குந்தலாம்பாளின் மனத்திரையில் தன் தமக்கையின் பால்ய விவாகக் காட்சிகளும், வைதவ்யக் காட்சிகளும்  விரிந்தன.


Comments

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை