கலியன் மதவு (அத்தியாயம் 18)
கலியன்
மதவு (சமூக நாவல்)
-ஜூனியர்
தேஜ்
அத்தியாயம் – 18
(ஆனந்த விகடன் – 12- 09- 2022)
முதல் முதலாக அறுத்த
தாளை ஸ்வாமி மேடைக்கு முன் வைத்தாள் குந்தலாம்பாள்.
பக்தியுடன் காமாட்சி விளக்கு ஏற்றி வைத்தாள்.
தான்யலக்ஷ்மி ஸ்தோத்ரம் சொல்லி நமஸ்கரித்தாள்
“அய்யாம்மா...!”
கலியன் அழைத்தான்.
குரல் கேட்டு, சமையலறையிலிருந்து ஈரக் கையை துடைத்துக்கொண்ட
வந்தாள் குந்தலாம்பாள்.
“அறுப்புக்கு நாள் பாக்கணும் அய்யாம்மா...!”
மாதய்யாவின் மறைவிற்குப் பிறகு குந்தலாம்பாவை ‘அய்யாம்மா!’ என்று அழைக்கத் தொடங்கியிருந்தான்
கலியன்.
இந்தனைக் காலம் மாதய்யாவிடம் நாள் பார்க்கச் சொன்னவன் கலியன், இன்று குந்தலாம்பாளிடம் அதைக் கேட்டபோதே அவன் கண்களின் ஓரத்தில்
நீர் அரும்பியது.
“... ... ... ... ... ... ... ... ...”
குந்தலாம்பாளுக்கும் பேச நா எழவில்லை.
“அய்யா இருந்து நட்ட வய. அறுப்பறுக்க இல்லையேனு...!”
கலியன் தழுதழுத்தான்.
குந்தலாம்பாள் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.
தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டாள்.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா !
நமக்கும் அதுவழியே! நாம்போம் அ ளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்.
என்ற ஔவையாரின் மூதுரையை நினைவு கூர்ந்தாள் குந்தலாம்பாள்.
“கலியா, கண் கலங்காதே. அய்யா நட்ட வயல்ல அவர் எப்படி அறுவடை பண்ணுவாரோ அதே முறை மாறாமப் பண்ணி அவருக்கு
அஞ்சலி செய்வோம்...”
ஆறுதல் சொன்னாள்.
“சரிங்கம்மா...!”
“அய்யா எப்படி அறுப்புத் தொடங்குவார்னு சொல்லு கலியா.?”
அனைத்தையும், விலா வாரியாய், விளக்கமாய்
ஈடுபாட்டோடு சொன்னான் கலியன்.
எல்லாவற்றையும் மனதில் வாங்கிக்கொண்டாள் குந்தலாம்பாள்.
“நாளு பாருங்கம்மா...! அய்யா இந்தத் திண்ணைல
உக்காந்துதான் நாத்துவிட, நடவுக்கு, அறுப்பறுக்க,
களஞ்சியத்துல கொட்ட, வெதை நெல்லு கோட்டை கட்ட...
எல்லாத்துக்கும் நாள் பாத்துச்
சொல்லுவாங்க.”
கலியனின் ஆள் காட்டி விரல் கீழண்டை சாரமனையை சுட்டிக்காட்டியது. அவன் கண்கள் அந்த திண்ணையை ஏக்கத்தோடு நோக்கின.
--00000--00000--00000—
குந்தலாம்பாள் உள்ளே சென்றாள்.
சில நிமிடங்களில் கையில் பாம்பு பஞ்சாங்கத்தோடு திரும்பி வந்தாள்.
சாரமனைத்திண்ணையில் அமர்ந்து குந்தலாம்பாள் அறுவடைக்கு நாள் பார்த்துச் சொன்ன விதம் அப்படியே மாதய்யா சொன்னதைப் போலவே உணர்ந்தான் கலியன்.
--00000--00000--00000—
அருவடைக்கு நாள் சொல்லி கலியனை அனுப்பிய பின், அவள் மனசு முழுக்க வயல் வரப்பையே சுற்றிச் சுற்றி வந்தன.
குந்தலாம்பாள் வழக்கமாகச்
செய்யும் பூஜைகளை முடித்தாள்.
சாப்பிட்டாள்.
சாப்பிட்ட உடனே படுத்து
ஓய்வெடுக்கும் குணம் குந்தலாம்பாளுக்கு எப்போதும் கிடையாது.
மாட்டுத் தொழுவம் சென்றாள்.
வீரன் காளைக்குத் தீனி
கிளறி வைத்தாள்.
மாட்டின் குளம்புகளில்
மிதிபடாமல் அதெற்கென இருக்கும், உள்ளங்கை அகலக் கள்ளிப் பலகையால் மாட்டுச் சாணத்தை ஓர ஒதுக்குப்புறமாகத்
தள்ளினாள்.
காலியாக இருந்த கவணையில்
சிறிது வைக்கோல் வைத்தாள்.
அங்கிருந்து வந்தவள், கொல்லைக் கட்டுக்குச் சென்றாள்.
தேய்த்துக் கவிழ்த்திருந்த
பாத்திரங்களை கொண்டுவந்து அதனதன் இடத்தில் கவிழ்த்தாள்.
அடுத்து, முற்றத்தில் காயவைத்த துணிகளை
எடுத்தாள்.
பட்டகசாலையில் இருந்த விசி பலகையில் உலர்ந்த துணிகளை போட்டாள்.
ஒவ்வொன்றாய் எடுத்து, துணியில் தங்கியிருந்த வெம்மை கையில் உரைத்தது.
அந்த கதகதப்பை புறங்கையில் வாங்கிக் கொண்டு, நேர்த்தியாய் மடித்து
அடுக்கினாள்.
மடித்த துணிகளை மார்போடு
அணைத்தபடி, காமரா உள்ளுக்குச் சென்றாள்.
ட்ரங்ப் பெட்டிக்குள்
வைத்து மூடினாள்.
சாப்பிட்ட ஆகாரம் செரிமானம் ஆக ஆரம்பிதற்கான அறிகுறிகளான, “ம்ம்ம்ம்......” என்ற பெருமூச்சு வந்தது.
அதைத் தொடர்ந்து வந்தது கொட்டாவி.
கண்கள் சோர்ந்து, அமட்டியது.
தலைக் கட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டாள்.
‘சிறிது நேரம் உடம்பைச் சாய்க்கலாம்...’
என்று குனிந்தாள்.
வாசலில் யாரோ "மாதவா...!” என்று பாசமாகக் கூப்பிடுவதுபோல காதில் விழுந்தது குந்தலாம்பாளுக்கு.
‘பிரமையாக இருக்குமோ...?”
சந்தேகப்பட்டாள்.
எத்தனை வயதானால்தான்
என்ன கணவனுக்கு மனைவியின் நினைவும், மனைவிக்கு கணவனின் நினைவும்தானே சாஸ்வதம்.
தனக்கேற்பட்ட பிரமை குறித்து
அவளுக்கே ஒரு கனம் லஜ்ஜையாக இருந்தது போலும். தனக்குத்தானே முறுவலித்துக்கொண்டாள்.
தலைக்கட்டையில் தலைவைத்துப்
படுத்துக் கண்களை மூடினாள்.
அமட்டியது.
கண் செருகியது.
--00000--00000--00000—
‘ஃபட்... ஃபட்...ஃபட்..”
துண்டால் திண்ணைமேல்
தட்டும் சத்தம் கேட்டது.”
‘பிரமையல்ல...
உண்மைதான்...!’
முடிவு செய்துகொண்டாள்.
அமட்டிய கண்களைக் கசக்கிப்
பிட்டாள்.
வலது உள்ளங்கையையை தலையில்
ஊன்றி எழுந்தாள்.
புடவைக் கொசுவத்தை இழுத்துவிட்டுக்
கொண்டாள்.
வலது உள்ளங்கையால் தலையை
ஒருமுறை முன்புறமிருந்து பின் புறமாகத் தேய்த்துவிட்டுக் கலைந்த தலையைக் கோதிக் கொண்டாள்.
படியவில்லை.
கோடாலி முடிச்சை அவிழ்த்தாள். தலையை அன்னாந்த நிலையில் இரண்டு கை விரல்களையும் சீப்புப் பற்களாய் நுழைத்து, லாகவமாய்த் தலைமுடியை நுனி வரைக் கோதிவிட்டாள்.
இடது கையால் தலைமுடியைத் துக்கி, வலது கை “ஃப்ளிச்...! ஃப்ளிச்...! ஃப்ளிச்...!” எனச் சொடுக்கினாள்.
வணங்கா
முடிகளும் படிந்தபின், கோடாலி முடிச்சுப் போட்டாள்.
‘யாராக இருக்கும்?’ யோசித்துக்கொண்டே வாசலுக்கு வந்தாள்.
--00000--00000--00000—
சாரமனையில் சாய்ந்தபடி
ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.
“... ... ... ... ... ... ... ... ...”
‘நீங்க யாரு...?’ என்று
குந்தலாம்பாளின் கண்கள் கேட்டன.
“மாதவன் ஒய்ஃபா நீங்க...?”
“ஆமாம்... நீ...ங்...க...?”
நான் மாதவனோட பால்ய சிநேகிதன்.
“... ... ... ... ... ... ... ... ...”
‘ஓ!’ நெற்றி சுருக்கி வியந்தாள்.
“என் பேரு முருங்கப்பேட்டை கிரி.
நானும் மாதுவும் ஒண்ணா ஃபோர்த் ஃபாரம் வரைக்கும் படிச்சோம்.”
“... ... ... ... ... ... ... ... ...”
அப்படியா! என்ற வியப்பை முகம் பிரதிபலித்த்து.
“நானும் அவனும் ஒரே சமயத்துலதான்
ராணுவத்துல ரெக்ரூட் ஆனோம். மாதவன் கண்டின்யூ பண்ணலை.
வீட்டோட இருந்து விவசாயம் பாத்துக்கப்போறேன்னு வந்துட்டான்.”
“ராணுவத்துலேந்து என்னை விரட்டற
வரைக்கும் சர்வீஸ் பண்ணினேன் நான். ரிடையரானப்பறம் கோயம்புத்தூர்ல
செட்டில் ஆயிட்டேன்.”
“... ... ... ... ... ... ... ... ...”
அடடே! என ஆச்சரியத்தில் மலர்ந்தது
அவள் முகம்.
“நேத்து மொத நாள் கோயம்புத்தூர்ல
ஒரு டாக்டர்கள் செமினார். அதுல கலந்துக்க நம்ம ஜீவபுரம் டாக்டர்
அருணகிரி வந்தான். அவன்தான் மாதவன் காலமான செய்தி சொன்னான்.”
“... ... ... ... ... ... ... ... ...”
அவரோடு சேர்ந்து அவள் முகமும் சோக ரசத்தை
பிரதிபலித்தது.
இறந்து போன மாதய்யாவுக்கு
மௌன அஞ்சலி செலுத்துகிறமாதிரி, சிறிது நேரம் இரண்டு பேரும், அமைதி காத்தார்கள்.
மறுபடியும் கிரியே தொடர்ந்து
பேசினார்.
“மிஸஸ் மாதவன். டாக்டர் அருணகிரி எல்லாத்தையும் சொன்னான்.”
“... ... ... ... ... ... ... ... ...”
அப்படியா? என்று கேட்டது அவள் கண்கள்.
“எல்லாம் சரியாகும்.
பகவான் இருக்கான். அதைவிட மாதவனோட ‘சோஷல் சர்வீஸ்’க்கு பலன் கிடைக்காமலா போயிடும்.”
அவரைத் தொடர்ந்து பேச
விடாமல் குந்தலாம்பாள் குறுக்கிட்டாள்.
“என்ன சாப்பிடறேள்...?”
உள்ளே வாங்கோளேன்...” பரபரத்தாள்.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம்.
ஒரு டம்ளர் ஜலம் குடுங்கோ. அது போறும்.”
“தண்ணீர் கொண்டு வர வீட்டுக்குள்ளே
செல்லத் திரும்பியபோது அவளைப் போக விடாமல்
மீண்டும் பேசினார் முருங்கப்பேட்டை கிரி.
“மாதவனுக்கு ரொம்பப் பிடிச்ச திண்ணை இது. எப்பவும் அவன் உட்காந்துக்கற இந்தத் திண்ணையிலே ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டுப்
போகத்தான் கார் எடுத்துண்டு கோயம்புத்தூர்லேந்து வந்தேனாக்கும்.”
““... ... ... ... ... ... ... ... ...”
அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை குந்தலாம்பாளுக்கு.
அவர் நட்பும், பாசமும்,
நேசமும் கண்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
‘இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே...!’
நினைக்க நினைக்கப் பெருமையாக
இருந்தது.
அமைதியாக நின்றாள்.
“வர்ற வழிதானே ஜீவபுரம்.
அங்கே இறங்கி காவேரி ஸ்நானம் பண்ணினேன். அருணகிரியாத்துல
ஆகாரமும் முடிச்சிட்டுதான் வந்தேன். அருணகிரிக்கு ஏதோ ஒரு அவசர
கேஸ். அவனும் என்னோட வரதாத்தான் இருந்தான்.”
பேசிக்கொண்டே போனார்
கிரி.
“ஜலம் எடுத்துண்டு வரேன்...”
‘டக்’ எனச் சொல்லிவிட்டு
உள்ளே சென்றுவிட்டாள் குந்தலாம்பாள்.
‘பளிச்’ என்று பளபளக்கும், புளியிட்டுத்
தேய்த்த, செப்புச் சொம்பில் தண்ணீர், கூடவே
ஊற்றிக் குடிக்கச் செப்பு டம்ளரும் கொண்டு வந்து திண்ணையில் அவர் முன் வைத்தாள் குந்தலாம்பாள்.
--00000--00000--00000—
மாதவன் ராணுவத்துல இருந்தப்போ, இதே மாதிரி செப்புச் சொம்பும்
டம்ளரும்தான் வெச்சிருப்பான். ‘எனக்குத் தாடா’னு அவனைக் கேட்டேன் ஒரு சமயம். அவனும் தரேன்னான். அவன் ரிடையர் ஆகி வரும்போது எனக்கு ஜலந்தர்ல கேம்ப்.”
அவருடைய பேச்சின் இடையே
தன் கருத்தைத் திணித்தாள் குந்தலாம்பாள்.
“அதே சொம்பு டம்ளர் தான் இது.
நன்னா துடைச்சி பைல போட்டுத் தரேன். சிநேகிதர்
ஞாபகமா வெச்சிக்கங்கோ...!” என்றாள்.
பத்து நிமிடங்களுக்கெல்லாம்
செப்புச் சொம்பு, டம்ளர் அடங்கிய மஞ்சள் பையுடன், முருங்கப்பேட்டை கிரி
காரில் ஏறி கோயம்புத்தூர்
நோக்கிச் சென்றுவிட்டார்.
அவர் சென்ற பின்னர் கூடத்தில் வந்து படுத்தாள் குந்தலாம்பாள்.
தூக்கம் பிடிக்கவில்லை.
திடீரென்று கருமேகமெல்லாம்
ஒன்று கூடி, வானம் இருட்டி, இடி இடித்து,மின்னல்
மின்னி, மழைத் தூரி, மண் வாசனையைக் கிளப்பி
விட்டுவிட்டு காற்றால் கலைக்கப்பட்ட மேகம் அப்பால் ஓடிவிட்டதைப் போல இருந்தது.
மாதய்யாவின் சிநேகிதர் கிரியின் வருகையும் விடுகையும்.
--00000--00000--00000—
அறுவடை துவங்குகிற முதல் நாளில் மாதய்யா என்னவெல்லாம்
செய்வார். எப்படியெல்லாம் பாட்டுக் கட்டுவார்... அறுப்பாட்களுடன்
எப்படிக் கலாய்த்துப் பேசுவார் என்று கலியன் சொன்ன அத்தனை செய்திகளையும் நினைத்துப்
பார்க்கிறாள்.
மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக்
கொள்கிறாள். ஒவ்வொன்றாக ஆதி முதல் அந்தம் வரையில் ஞாபகப்படுத்திக் கொள்கிறாள்.
‘விருட்...!’ டென எழுந்தாள். காமரா உள்ளுக்குச் சென்றாள்.
கொலுப் பெட்டிக்குக்
கீழ், துருப்பிடிக்காமல்
இருக்க கிரீஸ் தடவி, கித்தான் சாக்கு போட்டு பங்கிடாகச் சுற்றி வைத்திருந்த அறுப்பறிவாளை
எடுத்துப் பிரித்தாள்.
அறுப்பறிவாளின் பித்தளைப்
பிடியை புளி போட்டு விளக்கிப் பளபளப்பாக்கினாள்.
ஸ்வாமி அலமாரியின் முன்
ஓர் ஆசனப் பலகை போட்டு அதில் வைத்தாள்.
முதல் முதலில் அறுவடைக்குச்
செல்லவிருக்கும் குந்தலாம்பாள், எப்படியெல்லாம் இந்த நாளைக் கொண்டாட வேண்டும், அறுப்பாட்களை எப்படியெல்லாம் மகிழ்விக்கவேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கனாக் கண்டுகொண்டிருந்தாள்.
அவள் மனதில் அமிழ்ந்து கிடக்கும் இந்தத் திட்டங்களை யாரே அறிவார்...!
--00000--00000--00000—
‘கலியனை இன்னமும் காணோமே...?’
விடிகாலையிலேயே எழுந்து, ஸ்நாநம் செய்துவிட்டு வடை
பாயஸம் செய்தாள்.
தான்ய லெக்ஷ்மிக்கு அஷ்டோத்தரம்
வாசித்து அர்ச்சனை செய்து வடை பாயம் நைவேத்யம் செய்து, எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும்
என்று பிரார்த்தனை செய்து கொண்டாள்.
‘கலியன் சொன்ன நேரம் கடந்துவிட்டது.
இன்னும் வரக் காணோமே...’
யோசித்தாள்.
‘நாமே வண்டி பூட்டி , ஓட்டிப் போய்விடலாமா...?’
என்று தோன்றியது குந்தலாம்பாளுக்கு.
‘வண்டி பூட்டி, ஓட்டி கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கும் மேலே ஆயிடுத்தே... நம்மால முடியுமா...?’
யோசனையும் வந்தது.
‘ மாடு கீடு மிரண்டு, ஏடாகூடமாகிவிடுமோ...?’
பயம் வந்தது.
மாதய்யா வாய்க்கால் பாலத்தில்
விழுந்து மாசக்கணக்கில் அவஸ்தைப் பட்டது நினைவில் எழ பயம் அதிகமானது.
‘உன்னை நீயே பலஹீனன் என்று நினைத்துக்கொள்வது
பாவத்திலும் மிகப் பெரிய பாவம்...!’
என்றோ படித்த விவேகானந்தரின்
பொன்மொழி நினைவில் பளிச்சிட, மனதில் உறுதி வந்தது.
முளையில் கட்டப்பட்ட தும்பை அவிழ்த்தாள்.
வீரன் காளையின் தலைக்கயிற்றைப் பிடித்து ஓட்டி வந்தாள்.
“ஈஸ்வரா...”
வாய் அனிச்சையாகச் சொல்லிற்று.
நுகத்தடியைத் தூக்கிப்
பிடித்தாள்.
மாலையை ஏற்கத் தலைகுனியும்
மணமகனைப் போல நுகத்தடியைத் தாங்க வாகாய் நின்றான் வீரன்.
கழுத்தில் பல்லக்கு நுகத்தடியை
வைத்தபின் , பூட்டாங்கயிற்றைப் பூட்டினாள்.
எவ்வளவு வருடங்கள்தான்
ஆனால் என்ன..
கற்ற கலை மறந்துவிடுமா
என்ன...?
அதுவும் சின்னஞ்சிறு
வயதில் கற்றவை பசுமரத்தாணி போல பதிந்திருந்தது.
எடுத்துக்கொள்ள வேண்டியவற்றை
எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டாள்.
குந்தலாம்பாள் மருமகளாகி
அந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் அந்த வீட்டின் வாசல் கதவு பூட்டியதே இல்லை. கதவைப் பூட்டிக்கொண்டு செல்லும்
அளவுக்கு எந்த பிரமயமும் ஏற்படவில்லை.
கால மாற்றம்.
முதன் முறையாக, வீட்டை பூட்டினாள்.
சாரதிப் பலகையி ல் ‘டிங்...’ என்று பாய்ந்து ஏறி உட்கார்ந்தாள்.
சீரான வேகத்தில் சென்றது கூண்டு வண்டி.
--00000--00000--00000—
குந்தலாம்பாள் ஆரம்பத்தில்
பயந்தபடி எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லை.
இன்னும் அறுப்பாட்கள்
வந்திருக்கவில்லை.
கண்ணுக்குத் தெரிந்த
தூரம் வரை எவரும் வருவதாய் அறிகுறி இல்லை.
வீரனை அவிழ்த்து வண்டிச்
சக்கரத்தில் கட்டினாள்.
வைக்கோல் அள்ளிப் போட்டாள்.
அறுவடை ஆகப்போகும் வயலைச்
சுற்றி வந்தாள்.
ஆயுதம் ஏதுமின்றி ஆன்ம
பலத்தை மட்டும் நம்பிப் போர்க்களத்தில் தலைநிமிர்ந்து நடக்கும் மாவீரன் போல மிடுக்குடன்
இருந்தது குந்தலாம்பாளின் நடை.
‘மிடுக்காய் இரு’ என்ற பாரதியின் வாக்குக்கு உருவம் கொடுத்தாற்போல் இருந்தது அந்த நடை.
--00000--00000--00000—
ஒரு கையில் நீராரத் தூக்கு. மறு கையில் கருக்கறிவாள்.
அறுப்பாட்கள் விடிகாலையிலேயேக் காணிக்குக்
கிளம்பிவிட்டார்கள்.
காலைக் கதிரவன் தன் ஒளிக்கரங்களை பூமியில்
முழுமையாகப் படறவிடவில்லை.
ஒளி வரும் முன், கட்டியம் கூற வந்த லேசான ஒளிக்கற்றைகள் பிரதிபலித்த
மெல்லிய வெளிச்சம் சற்றேக் குளிர்ச்சியாகம், இதமாகவும் இருந்தது.
சாலையின் இரு மருங்கும் கண்ணுக்குத் தெரிந்த
வரை அறுவடைக்குக் காத்திருக்கும் வயல்கள்.
தங்களைச் சூல் கொள்ள வைத்தச் சூரிய தேவன்
தன் ஒளிக் கதிர்களால் தழுவ வருவதைக் கண்டு, நாணி, வெட்கிக் தலைகுனிந்தன, நிறைமாத கர்பிணிகளாய் நிற்கும்
நெற்பயிர்கள்.
சுகமாய் வீசிய விடிகாலைத் தென்றலின் ஸ்பரிச
சுகத்தில் நளினமாய் தலையாட்டின நெற்கதிர்கள்.
தன் மேல் நடப்பவர்களின் பாதங்களை இதமாய்
வருடிச் சுகமேற்றும் வரப்போர தாவரங்கள்.
வண்ணவண்ணமாய்,
அழகாய் மலர்ந்து, அற்புதமாய் மணம்வீசும் வரப்போரக்
குறும்பூக்கள்.
இரவு முழுவதும், கட்டி அணைத்துக்கொண்டு சுகமாய் உறவாடிய பனி
கதிரவனின் ஆக்ரமிப்பால் ஆவியாகி அவசரமாய் ஓடி ஒளியும்போது அவசரத்தில் விட்டுச் சென்ற
பனிநீர்த் திவலைகளை, நடப்போரின், பாதங்களிலும்,
கணுக்கால்களிலும், பூசிச் சிலீர் எனச் சிலிர்க்கவைக்கும்
அருகு, கரிசலாங்கன்னி, பொன்னாங்கன்னி,
கோரை, அவுரி, கொழுஞ்சி இத்யாதிச்
செடிகள்.
பாம்புப் புற்று மீது தண்ணீர் ஊற்றி நனைத்தாற்
போல் ஆங்காங்கே வரப்போரத்தில் கிடக்கும் நண்டு வளைகள்.
ஆள் நடமாட்டம் கண்டதும் பக்கவாட்டில் குடுகுடுவென்று
ஓடிக் ஈரமான வளைக்குள் புகுந்துகொள்ளும் நண்டுகள்.
தொலைவில்
தெரியும் பனை மரங்கள்.
சாலையோரங்களில் வளர்ந்து நின்ற பூவரசு, சரக்கொன்றை, கல்யாண முருங்கை,
சவண்டல், வேம்பு, நுணா,
உத்தராசு, அத்தி மற்றும் பல்வகை மரங்கள்.
வரப்புப் திருப்பத்தில், கும்பலாய் வளர்ந்திருக்கும் தேள்கொடுக்குச்
செடிகள். காட்டுக் கருவை, இலந்தை,
நொணா, பேயத்தி, துத்தி...
அதில் படர்ந்திருக்கும் ஓணாங்கொடி, முடக்கத்தான்,
தூதுவளை...
அந்தச் செடிகொடிகளுக்கு இடையில் இடையில் தன்னை நுழைத்துக்கொண்டு கழற்றிப் போடப்பட்ட
பாப்புச் சட்டை.
அதைக் குச்சியால் இழுத்து விளையாடும் கிராமத்துச்
சிறுவர்கள்.
வற்றிய கன்னி வாய்க்காலில் பின்னிப் பிணைந்தபடித்
தேங்கிக் கிடக்கும் இலைகள், சருகுகள், சுள்ளிகள், வாழைப்பட்டைகள்
எல்லாம் பாசி பிடித்து
அழுகின வீச்சம்.
ஆங்காங்கே எலி பிடிப்பதற்காக வெட்டிக்
குதறிப் போட்ட வரப்புப் பள்ளங்கள்.
அறுப்பறுத்த வயல்களில் நடந்து நடந்து வாழைக்காய் வளைவாகப் பதிந்துபோன ஒற்றையடிப்பாதை,
வரப்பில் ஆங்காங்கே பல வகை உயரங்களில்
வளர்ந்து நிற்கும் அகத்தி, வாழை
போன்ற ஊடு பயிர்கள்.
அறுப்பு முடிந்த காணிகளில் ஆங்காங்கே திட்டுட்
திட்டாய் கிடக்கும் புற்கள்.
அதை மேயும் பசுக்கள். பசுக்களின் பல்வகைக் கழுத்துச் சலங்கைகளின்
கூட்டு ஒலி.
ஆக்காங்கே ‘கீக்கீ... கீச்...
கீச்... கூ... கூக்...’
என்று இசைக்கும் புள்ளினங்களின் இசை.
இப்படி
இறைந்துகிடக்கும் இயற்கை அழகையெல்லாம் கண்டு கொள்ளாமல், சில்லென்று
வீசிய காற்றை சுவாசித்துக் கொண்டும், சுவாசித்த காற்றை பேச்சாய்
உருமாற்றிக்கொண்டும் அறுப்பாட்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.
ஆண்களும் பெண்களுமாய்ச் சென்றாலும் பெண்களின்
குரல்தான் ஓங்கி ஒலித்தது.
பெண்’மணி’கள் என்பதுதான் எவ்வளவு
பொருத்தம்...!
ஏற்கெனவே மாதய்யா காணியில் அறுப்பறுத்த
அனுபவம் உள்ளவர்கள் தங்களின் இனிய அனுபவத்தைப் புதியவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.
புதிய அறுப்பாட்கள், அனுபவஸ்தர்களின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டும்,
அதை ரசித்துக் கொண்டும் வியந்து கொண்டும் வருவது அவர்கள் முகக்குறிகளில்
பளிச்’செனக் காணமுடிந்தது.
நடுநடுவே,
“ஆஹா...!”,
“அடடே...!”,
“ஓ...!”
“ஓஹோஹோ...!”,
“அப்படியா...!”
வியப்பை வாய்திறந்தும், வாய்ப் பிளந்தும் வெளிப்படுத்திக்கொண்டு வந்தார்கள்.
“நெசமாவாச் சொல்றீங்க...?”
வியப்பு வினாத் தொடுத்தாள் ஒருத்தி.
“ஆமாங்கறேன்...”
அபிநயம்பிடித்தாள் சொன்னவள்.
--00000--00000--00000—
அறுவவைடைக்குறிய வயல் நெருங்க நெருங்க, அறுப்பாட்களின் பேச்சு திசை மாறியது.
“ஏண்டீ...! அய்யா இருக்கையிலே
அறுப்புத் தொடக்கற மொத நாளு எல்லாருக்கும் டீத் தண்ணி கொடுக்க ஏற்பாடு பண்ணுவாரு.
இல்லக்கா…”
“இனிமே யாரு அதெல்லாம் தரப்போறாக...? தவிச்ச வாயிக்குத் தண்ணிக்குக் கூடச் சிரமந்தேன்...”
“போடீ... போக்கத்தவளே...
நம்ம கலியண்ணன் குணம் மட்டும் என்னவாம். அய்யா
குணம் அப்படியே அண்ணங்கிட்டே இருக்காக்கும் ...ஹா...ங்...கா...ம்...!”
“அதுவும் சரிதேன்... ஆனாலும்
அய்யா, பாட்டுக் கட்டிக்கிட்டு, நையாண்டி
பேசிக்கிட்டுச் சாலியாத் தாரது மாதிரி வருமா...?”
“அதுவுஞ் சரிதேன்... இந்தக்
கலியண்ணனுக்கு சிரிக்கவே நாலு பணம் தருணுமேக்கா...”
இதைக் கேட்டு எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
ஒரு கையில் கைக்குழந்தையும், மறு கையில் அலுமினியத் தூக்கும் சுமந்து வந்த
பெண். சிரிப்பலைகள் ஓய்ந்தபிறகு சென்னாள்.
“நீங்க சொல்றதெல்லாம் செரிதான். இதோ நான் கையில புள்ளைய தூக்கிக்கிட்டு அறுப்பறுக்க வர்றேன். வேலை மும்மரத்துல நானே மறந்துட்டாலும், “நாளியாவுது பொன்னம்மா... புள்ளைய எழுப்பி வயித்துக்குக் கொடுன்னு’ன்னு சொல்லுற பாசம், உரிமை, குணம் இதெல்லாம் யாருக்கும் வருமா…?”
அங்கலாய்த்தாள்.
“... ... ... ... ... ... ... ... ...”
இப்படிப்பட்ட உயர்ந்த குணங்களை உடைய மாதையாவின்
மறைவுக்கு சிறிது நேரம் அஞ்சலி செலுத்துவது போலச் சிறிது நேரம் அனைவருமே அமைதியாக நடந்தார்கள்.
--00000--00000--00000--
“அய்யா சம்சாரம் வயலுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காகளாமே...?”
“கெட்டுது போ...! சாலியா
பாட்டுப் பாடிக்கிணு சோலியப் பாக்க முடியாதுன்னு சொல்லு...”
“ஏன்...! நீ பாட்டும் கூத்தும் கட்டுறதை அந்த அம்மா குறுக்க விளுந்தா தடுத்தாக... எதையாவது ‘வாய் புளிச்சிதோ மாங்காப் புளிச்சிதோ’னு பேசவேண்டியது...!”
கடுப்பாகச் சொன்னாள் ஒருத்தி.
“அய்யா காலமாகி முழுசா மூணுமாசம் கூட ஆவலை.
அவங்க முன்னால பாட்டும் கூத்துமா வேலை பாக்கறது அவ்வளவு நல்லா இருக்குமா...?
அதான் சொன்னேன்.”
நீட்டி முழக்கினாள் மற்றவள்.
இவர்கள் பேச்சைக் காதில வாங்கிக்கொண்டே
வந்த ஆண் ஆட்களில் ஒருவன் சொன்னான்.
“மொத மொத அறுப்புக்குப் போறோம். துக்க சமாச்சாரம் பேசிக்கிட்டுப் வாரீயளே...! வேற எதுனா
பேசுங்க ஆச்சி...!”-
உணர்ச்சி வசப்பட்டான்.
“அண்ணன்
சொல்றதும் செரிதேன். இந்த போகம் அறுப்புக்கு மொத ஈடு,
மொத மொதல்ல அறுக்கப்போறோமில்ல அதான் சொல்றாக...”-
அவனுக்குச் சப்போர்ட்டாகப் பேசினாள் ஒருத்தி.
அறுப்பாட்கள் காணியை நெருங்கிவிட்டார்கள்..
--00000--00000--00000--
சாலை ஓரத்தில் கூண்டு வண்டி நின்றது.
சக்கரத்தில் கட்டப்பட்ட வீரன் காளை வைக்கோலைப்
பரத்திக்கொண்டு , கோவில் ரிஷபம்
போலப் படுத்து அசைபோட்டுக்
கொண்டிருந்தது.
மாதய்யாவோடு வயல்காட்டுக்கு வந்த இனிய
நாட்களை அசைபோடுகிறதோ...!
“அய்யா... சம்சாரம்...
வந்திருக்காங்க... போல...!.” அறிவித்த பெண்ணின் மெல்லிய குரலில் ஆச்சரியம் அப்பியிருந்தது.
“கலியண்ணனை எங்கே இன்னும் காணம்...” கேட்டாள் இன்னொருத்தி.
“அதோ அறுப்பறுக்கப்போற வயல்ல நின்னு கீழத்தெருப்
பாதையப் பாத்துக்கிட்டு நிக்கறாரு பாரு...”
நெற்றியில் குங்குமம் பளிச்சிட தீர்க்க
சுமங்கலித் தோற்றத்துடன், வண்டி
அருகில் நின்று கொண்டிருந்தாள் குந்தலாம்பாள்.
“அது அய்யா சம்சாரமில்ல... வேற யாரோ...!” என்றாள் ஒருத்தி
“அவங்களேதான். நான் ஒருக்கா
பாத்திருக்கேன்...!”
சின்னப்பொண்ணு சொன்னாள்.
“பூவும் பொட்டுமா...?”
ஒரு அதிர்ச்சிக் குரல் வெளிப்பட்டது.
--00000--00000--00000--
“அய்யா போன பிறகு, அவங்க சம்சாரம் இப்படி பூவும் பொட்டுமா வந்து நம்ம முன்னால நிக்கறாளேனு பாக்கறீங்களா...?”
கேட்டுக்கொண்டே அறுப்பாட்களை அருகே வரச்சொல்லி
கை ஜாடை காட்டினாள் குந்தலாம்பாள்.
“... ... ... ... ... ... ... ... ...”
தயங்கியபடியே அருகே வந்தார்கள்.
“நான் மேலக்காட்டுப் பாதைல வந்ததே தெரியாம கீழக்காட்டுப்
பாதைய வெறிச்சி வெறிச்சிப் பாக்கறாம்பாரு கலியன். அவனை கூப்பிடுங்க…”
குந்தலாம்பாள் அன்புக் கட்டளையிட, “கலியண்ணேய்...!” என்று
எல்லாரும் சேர்ந்து ஒரே குரலில் கத்தினார்கள்.
திரும்பிப் பார்த்த கலியன் அய்யாம்மாவைப்
பார்த்ததும் ஓட்டமும் நடையுமாய் அங்கே வந்தான்.
“சின்னப் பொண்ணேய்...! ”
அய்யா அழைப்பதைப் போலவே அழைத்தாள் குந்தலாம்பாள்.
“... ... ... ... ... ... ... ... ...”.
புதிய விருந்தாளிகளைக் கண்டுத் தயங்கியபடியே
அடிமேல் அடி வைத்து மெதுவாக, அருகில் செல்லும் குழந்தையைப்போல, குந்தலாம்பாள் அருகே
சென்றாள் சின்னப்பொண்ணு.
“வண்டீல காபி வெச்சிருக்கேன். சீக்கிரம் எடு...!” துரிதப்படுத்தினாள்.
“... ... ... ... ... ... ... ... ...”
வண்டி அருகில் போனாள்.
“கொதிக்கக் கொதிக்க ஊத்திக் கொண்டாந்தேன்.
ஏதோ கொஞ்சம் வெதவெதப்பு இருக்கும்போதே ஊத்திக் குடு. சீக்கிரம் எடு.
“... ... ... ... ... ... ... ... ...”
வண்டியிலிருந்து காபித் தூக்கை எடுத்தாள்.
டம்ளரில் ஊற்றி ஊற்றி எல்லோருக்கும் கொடுத்தாள்.
‘மடக்...மடக்...
என்று பச்சைத் தண்ணீர் குடிப்பதைப்போல வேகமாய்க் குடித்தனர் அறுப்பாட்கள்.
“காப்பி கடுங்காப்பி...
காக்கா நெறத்துலயாம்...!
சூடில்லா சுக்குக்
காப்பி...
அடிவயித்தைக் கலக்குதோடீ...!”
பாடினாள் குந்தலாம்பாள் சிரித்துக்கொண்டே.
அய்யாம்மாவின் பாட்டு
எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்தது.
யாரும் சத்தம் போட்டுச் சிரிக்கவில்லை.
“... ... ... ... ... ... ... ... ...”
தயக்கம் தடுத்தது.
இதே மாதய்யாவாக இருந்திருந்தால் எதிர்ப்பாட்டுக் கட்டி உல்லாசமாய்
குலவைப் போட்டு கூத்துக் கட்டியிருப்பாள் சின்னப்பொண்ணு.
“... ... ... ... ... ... ... ... ...”
‘மொத மொதலா அருவடைக்கு வந்திருக்காங்க அய்யாம்மா,
எப்படிப் பழகுவாங்கன்னு தெரியலையே...?’
சந்தேகக் கேள்வி வந்தது
“... ... ... ... ... ... ... ... ...”
‘ஒரு
வேளை நாம சகஜமாப் பளகப் போயி ‘சட்’டுனு
மூஞ்சிய முறிச்சிட்டாங்கன்னா?.”
“... ... ... ... ... ... ... ... ...”
பயம் வந்தது.
“... ... ... ... ... ... ... ... ...”
மொத நாள் அறுப்பு வேற. மொதக் கோணல் முற்றும் கோணலாயிருச்சுன்னா...?’
மனசு எச்சரித்த்து.
சின்னப்
பொண்ணு உட்பட எல்லாருமே அமைதியாக தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
--00000--00000--00000—
“அம்மா!”
“சொல்லு கலியா...?”
“உங்களை வண்டி கட்டி இட்டார வூட்டுக்குப் போனேம்மா...
நான் வாரத்துக்குள்ள நீங்க...”
“கலியா...? எனக்கு வட்டி
பூட்ட, ஓட்டத் தெரியலைன்னாதானே உன்னை எதிர்பார்க்கணும்.”
“... ... ... ... ... ... ... ... ...”
“நீ சொன்ன நேரம் வரைக்கும் காத்திருந்தேன்.
வரலைன்னதும் வண்டியப் பூட்டிண்டு, காப்பித் தூக்கோட
கிளம்பிட்டேன்.”
“அம்மா... அது வந்து...!”
ஏதோ சொல்ல வந்த கலியனை எதுவும் சொல்ல விடவில்லை.
“நீயும் ஒரு லோட்டா ஆறிப்போன காப்பியைக் குடிச்சிட்டு
வெரசா வா... வேலையத் தொடங்கலாம்...”
சிரித்தபடி சென்னாள் குந்தலாம்பாள்.
இப்போது ஒரு சிலர் வாய்விட்டுச் சிரித்தனர்.
இருந்தாலும் கூச்சம் முழுவதும் விலகவில்லை.
“அதோ கருடன் பறக்குது... எல்லாரும் பாருங்க... நல்ல சகுனம்...”
குந்தலாம்பாளின் ஆள்காட்டி விரல் சுட்டிய
திரையில் எல்லாரும் பார்த்தனர்.
சொல்லிவிட்டுக் குந்தலாம்பாள் கொசுவத்தை
தூக்கிச் செருகிக் கொண்டாள்.
வண்டியில் வைத்திருந்த பித்தளைப் பூண்
போட்ட தன் குடும்பத்தில் பரம்பரைபரம்பரையாய் வந்த அறுப்பறிவாளை எடுத்துக்கொண்டாள்.
கம்பீரமாக வயலுக்குள் இறங்கினாள்.
ஒரு தேர்ந்த அறுப்பாளைப் போல லாகவத்துடன்
தேவையான அளவு குனிந்தாள்.
இடது கை தாளின் அடியைக் கொத்தாய் பிடித்திருந்தது.
“கொருக்...” என்ற சத்தத்துடன்
அறுத்தாள்.
அறுத்த தாளைப் பக்குவமாய் வரப்பில் போட்டாள்.
ஒரு தாளோடு நிறுத்தவில்லை குந்தலாம்பாள். தொடர்ந்து பத்து பதினைந்து குத்துக்கள் அறுவடை
செய்தாள்.
“அடியாத்தீ...! அறுப்பறுக்க வந்த என்னை வேடிக்கைப் பார்க்க வந்தமாதிரி நிக்கறீகளே...! எறங்கி வேலையைத் தொடங்குங்க...!”
அபிநயம் பிடித்தாள் குந்தலாம்பாள்.
‘அய்யாம்மா, இவ்வளவு தெரமையா
அறுக்கறாங்களே...!’
வியப்புடன் வயலில் இறங்கிய அறுப்பாட்கள்
அறுப்பைப் தொடங்கித் தொடர்ந்தார்கள்.
--00000--00000--00000--
சிவகங்கங்கைச் சீமையில் வானம் பார்த்த
பூமியில் ஏகப்பட்ட நிலபுலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்த அப்பாவுக்கு உதவியாய்
இருந்தவள்தானே குந்தலாம்பாள்.
அப்பாவோடு வயல்காட்டுக்குப் போய் வரண்ட
பிரதேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிற்கும் பலன்களை, அலுப்பு சலிப்பு இல்லாமல் அறுவடை செய்தவள் குந்தலாம்பாள்.
புகுந்த வீட்டு வயலில் வளமாய், வாளிப்பாய்த் தழைத்து வளர்ந்து கொழித்துக் கொட்டும்
தானியலட்சுமியை அறுவடை செய்ய வந்ததில்
உற்சாகம் கரைபுரண்டது.
தொழில்முறை அறுப்பாட்களுக்குச் சமமாக, ஏன் அதை விட வேகமாக என்றே சொல்லலாம்.
அறுத்துத் தள்ளினாள் குந்தலாம்பாள்.
“அம்மா... நீங்க கரையேறுங்கம்மா...
அவங்க பாத்துக்குவாங்க...” என்றான் கலியன்.
கரையேறினாள் குந்தலாம்பாள்.
--00000--00000--00000--
கையில் இருந்த அரிவாளை தூக்கிக் காட்டினாள் குந்தலாம்பாள்.
“உன் அறுவா என் அறுவா
உருக்கு வெச்ச கருக்கறுவா;
சாயப் பிடி அறுவா
சாம்புதடீ நெல்லுப் பயிர்.”
முதல் அறுவடைப் பாட்டுக் கட்டினாள் குந்தலாம்பாள்.
எல்லோருக்கும் கூச்சம் போயிற்று.
இயல்பாகச் செயல்பட்டனர்.
சின்னப் பொண்ணுக்கு குளிர் விட்டுவிட்டது.
“உங்க அறுவா எங்க அறுவா
உருக்கு வெச்ச கருக்கறுவா
வெள்ளிப் பிடி அறுவா
வீசுதம்மா நெல்லுப்பயிர்...”
எதிர்ப்பாட்டு கட்டினாள் சின்னப் பொண்ணு.
எல்லோரும் தங்களுக்குள் சிரித்தார்களே
தவிர குலவைச் சிரிப்பைப் காணோம்.
“கலியா... இத்தினி பேர்
இருக்க, சின்னப்பொண்ணுக்கு மட்டும்தான் பாட்டுக் கட்டத் தெரியுமாக்கும்...?”
நக்கலாகக் கேட்டாள்
குந்தலாம்பாள்.
“ அன்னம்போல நடை நடந்து
அறுப்பறுத்துத் திரி திரிச்சி
சின்னக் கட்டாக் கட்டச் சொல்லி
சிணுங்கினாளாம் சின்னப் பொண்ணு...”
கட்டையாக ஒரு குரல் வந்தது.
பாடியது பேச்சிமுத்து.
சின்னப்பொண்ணுவை கேலிசெய்து பாட்டுக் கட்டியதால்
அய்யாம்மா உட்பட அனைவரும் குலவையிட்டுச் சிரித்தனர்.
சின்னப்பொண்ணு கலகலவென வளையல் ஓசை எழுப்பினாள்.
அப்படி ஓசை எழுப்பினால், அவள் பாட்டுப்
பாடப்போகிறாள் என்று பொருள்.
சின்னப்பொண்ணுவின் அடுத்த குறும்புப் பாடலைக்
கேட்க காதைத் தீட்டி மௌனம் காத்த நேரத்தில் ‘கொரக் முரக்’ என அரிவாளும் தாளும் உரசிக்
கொள்ளும் சத்தம் அவள் பாடப்போகும் பாட்டுக்குப் பின்னணி இசைப்போல ஒலித்துக்கொண்டிருந்தது.
“பேச்சி முத்தார் கருக்கறுவா
தலைச்சம்பிள்ளை கையறுவா
சொல்லிச் சொல்லி அறுத்துச்சாம்
சோம்பேறித் தனத்தோட...”
சின்னப் பொண்ணுவின் பாட்டுக்கு குலவைச்சத்தம்
வானைப் பிளந்தது.
பாட்டும் கும்மாளியுமாக அறுப்புச் சூடு பிடித்துவிட்டது.
மாதய்யா எப்படியெல்லாம் கூத்துக் கட்டுவாரோ
அதை விட அதிகமாகவே கூத்துக் கட்டினாள் அய்யாம்மா.
--00000--00000--00000--
“பூசர களம்தான் இல்லைனு ஆகிப்போச்சு. நாளைக்குக் கட்டு அடிக்கணுமில்ல...?”
கலியனைக் கேட்டாள் குந்தலாம்பாள்.
“அதான் அய்யாம்மா நானும் யோசிக்கறேன்.
“சின்னப்பொண்ணு, பூலோகம்,
அமாவாசை, கதிரேசன் நாலு பேரும் வாங்க. களம் ஒக்கப் பண்ணோணும். சொச்சபேரு அறுப்பறுக்கட்டும்.”
உத்தரவு போட்டாள் குந்தலாம்பாள்.
அறுவடை நாள் முடிவு செய்த நிமிஷத்திலிருந்து, ‘எங்கே களம் போடுவது?’ என்று கலியன் யோசித்து யோசித்துப் பார்க்கிறான்.
ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை அவனால்.
குந்தலாம்பாள் கூப்பிட்ட நால்வரும் கரையேறிவிட்டனர்.
அய்யாம்மாவின் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருந்தனர்.
“கலியா...”
“சொல்லுங்க அய்யாம்மா...”
“இந்த நாலு பேரோட நீயும் நம்ம பண்டாரத்தாரு தெடலுக்குப்
போங்க. அங்கே களம் ஒக்க பண்ணுங்க.”
அய்யாம்மாவின் யோசனையைக் கண்டு வியந்து
போய் நின்றான் கலியன்.
“நான் போயி ஜாமான் செட்டல்லாம் எடுத்தாரேன்...”
என்று துவங்கிய கலியனை மேலே பேச விடவில்லை குந்தலாம்பாள்.
“காலைல வரக்குள்ளயே பண்டாரத்தாரு கிட்டே சொல்லி
மம்முட்டி, அருவா, ஜாடு, தட்டுக்கூடை எல்லாம் ஏற்பாடு செய்யச் சொல்லிப்பிட்டேன்.”
“களத்துக்குப் பொருத்தமான இடம்மா பண்டாரத்தாரு
தெடல்...”
வாய்விட்டுப் பாராட்டினான் கலியன்.
“சாப்பாட்டுத் தூக்கோட போங்க;
ஒக்காந்து நிதானமா சாப்பிடுங்க;
கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க;
பெறகு களம் ஒக்க பண்ணுங்க;
வேலை அதிகமா இல்லை,
நான் பாத்துட்டுத்தான் வந்தேன்.”
திட்டம் சொன்னாள் குந்தலாம்பாள்.
“கலியா,
ஆப்பக்கார அரும்பாகிட்டே சொல்லி உனக்குப் பசியார சாப்பாடு அனுப்பச்
சொல்லியிருக்கேன். இந்நேரம் வந்துருக்கும். நீயும் வயித்தைக் காயப்போடாம
பசியாறிட்டு வேலையப் பாரு...”
“அடேயப்பா, என்ன ஒரு திட்டம். என்ன ஒரு முன்னேற்பாடு...”
அய்யாம்மாவைக் கண்டு வியந்தான் கலியன்.
--00000--00000--00000--
முதல்
நாள் அறுவடை சிறப்பாக முடிந்தது.
‘அரி’
காய்ச்சலுக்காக’ வயலிலேயே கிடந்தது.
‘களம்’
பண்டாரத்தார் திடலில் தயாராகிவிட்டது.
நல்ல
முகூர்த்த நாளாக இருந்ததால் சாஸ்திரத்திற்கு இரண்டு கட்டுகள் கொண்டு வரச்சொல்லிவிட்டு
முதல் திரை அடித்து முகூர்த்தம் செய்தாள் குந்தலாம்பாள்.
மறு
நாள் வேலைக்குத் திட்டம் பேசினாள் குந்தலாம்பாள்.
“நாளைக்குக்
கட்டுக் கட்ட, கட்டுச் சுமக்க, கட்டு அடிக்க,
வைக்கோல் போர் போட, இதுக்கெல்லாம் ஆம்பளை ஆளுங்க அதிகப்படியாச் சொல்லியிருக்கியா கலியா...!”
“ஏற்பாடு செஞ்சிரலாம் அய்யாம்மா...”
சொல்லிக்கொண்டே, வீட்டுக்குப்
புறப்படத் தயாராக இருந்த அறுப்பாட்கள் பக்கம் திரும்பினான் கலியன்.
“எலே முத்துமாணிக்கம்,
“ரத்தனம், கொளஞ்சி, தங்கராசு,
மருதை நாலு பேரையும் நாளைக்கு கட்டு கட்ட வரச் சொல்லிரு”
“சரிண்ணே…”
அனைவரும்
கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.
வண்டி
பூட்டி வைத்தான் கலியன்.
சாரதி
பலகையில் கம்பீரமாய் உட்கார்ந்து வீரன் காளையின் சப்பையில் ஒரு தட்டு தட்டினாள் குந்தலாம்பாள்.
“ஹாய்...க்கெ...க்கெக்...ஹை...” என்று வாயால் ஓசை எழுப்பினாள்.
“ஜல்...ஜல்...” என சலங்கைச் சத்தம் சங்கீதமாய் ஒலிக்க வீரன் புறப்பட்டான்.
அனுபவம்
மிக்க சாரதியைப் போல, லாகவமாய், மாட்டு வண்டியை
ஓட்டிக்கொண்டு சென்ற அய்யாம்மாவையே கண்குளிரப் பார்த்துக்கொண்டு நின்றான் கலியன்.
இவ்வளவு
திறமையும், கணக்கும், செயலும் செட்டுமாக இருக்கும் அய்யாம்மா,
மாதய்யா இருந்தவரைக்கும் எதிலேயும் பட்டுக்காம ஒதுங்கியிருக்க எப்படி
முடிஞ்சிது...!”
வியந்தபடியே
வீடு நோக்கிப் போனான் கலியன்.
--00000--00000--00000--
“பொம்பளையா
அவ...!”
புருஷன்
போனதும் தட்டிக் கேட்க ஆளில்லாமத் திரியறா...!”
“இவளை ஜாதிப்
ப்ரஷ்டம் பண்ணி ஒதுக்கி வைக்கணுங்கறேன்...!”
“கன்னு செத்தா
கைம்மலம்... கணவன் செத்தா நிர்மலம்’னு சொல்லுவா.
நேர்லயே பாக்கறோம்...”
“இவ தடித்தனம்,
முரட்டுத்தனம், அடங்காத்தனம்... எல்லாமே ஆத்துக்கார் செத்தண்ணிக்கே வெட்ட வெளிச்சமாயிடுத்தே...!”
“ஏண்டீ...!
எந்தப் பொம்பளையாவது புருஷன் பிரேதமாக் கிடக்கும்போது தெருவுக்கு வந்து
ஊர் ஞாயம் பேசுவாளோ...?”
“எப்போ சாவார்...?
எப்போ ஆளலாம்னு காத்துண்டே இருந்தாளோ என்னமோ...!”
“பாரேன்...!” ஆம்பளை ஆளுபோல வண்டியைப்
பூட்டி, ‘டிங்கு டிங்கு’ன்னு ஓட்டிண்டு
போறதை...!”
“காலமே காவேரிக்குப்
போனப்போ, இந்தத் தடிச்சி ‘மங்கு...மங்குன்னு’ வயல்ல இறங்கி அறுப்பாளுக்குச் சமமா அறுப்பறுத்துண்டிருந்தாளாம்.
அதைப் பாத்துட்டு வந்து, “இப்படி உண்டோடீ...! இப்படி உண்டோடீ...! ன்னு மாஞ்சு மாஞ்சு போறார் எங்காத்துக்கார்...”
“பெத்தத் தாயைக்
கொண்டுபோய் தன்னோட வெச்சிக்கப்படாதோ இந்த தொரைராமன்...!”
“நீ வேற,
தொரை சொக்கத் தங்கம். அம்மாவை வரிஞ்சி வரிஞ்சி
அழைச்சிருக்கான். இவதான் இங்கே தொப்ளான் மகன் இருக்கான் அது போறும்னு
இருந்துட்டா..!”
சொல்லிவிட்டு
நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.
“பெத்த புள்ளையோட போய் இருக்க இவளுக்கு
என்ன கசக்கறதோ தெரியலை...!”
“வயசான காலத்துல
பெத்த மகனோட இருந்து ‘ராமா - கிருஷ்ணா’னு காலத்தைத்
தள்ளாம என்ன பிழைப்போ இது...! எல்லாம் தலையெழுத்து. கிரஹச்சாரம்...! தூ...!”
“தலையெழுத்து,
கிரஹச்சாரம்னெல்லாம் சொல்லாதேள். திமிரு,
கொழுப்பு, ஆணவம், அகம்பாவம்னு
சொல்லும்...”
“அடக்கி அடக்கி
வெச்சா இப்படித்தான் திடீர்னு கன்னாப் பின்னான்னு கிளம்பிடும். மாமியார்க்காரி இருந்தவரைக்கும் பொட்டிப்பாம்பான்னா அடங்கிக் கிடந்தா...”
“மாதய்யா மட்டும்
என்னவாம். எப்போப் பார்த்தாலும் கத்தல், இரைச்சல், ஊர் விவகாரம், வரட்டிழுப்புதான்.
வாயைத் திறக்காம காலம் தள்ளிப்புட்டா அவர் இருந்தவரை.”
“மாதய்யா மூச்சு
நின்னதும் சுதந்திரமா கிளம்பிட்டாப் பாருங்கோளேன்...”
அக்ரஹாரத்தெருவில்
எல்லார் வாயிலும் புகுந்து வந்தாள் குந்தலாம்பாள்.
பத்தாம்
நாள் சாங்கியம், சம்ப்ரதாயம் என்று அவளைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
அலங்கோலம்
செய்யக் அலைந்தார்கள்.
குந்தலாம்பாள்
ஒத்துழைக்கவில்லை
இப்படிப்
பட்ட ஏச்சும் பேச்சும் குந்தலாம்பாள் எதிர்பார்த்ததுதான்.
எதிர்பார்த்தது
நடைபெறும்போது, கோபத்திற்கோ, வியப்பிற்கோ இடமேது...!
--00000--00000--00000--
வண்டியை அவிழ்த்து விட்டாள்.
முதல் முதலாக அறுத்த தாளை ஸ்வாமி மேடைக்கு முன் வைத்தாள்.
பக்தியுடன் காமாட்சி விளக்கு ஏற்றி வைத்தாள்.
தான்யலக்ஷ்மி ஸ்தோத்ரம்
சொல்லி நமஸ்கரித்தாள்.
மாட்டுத் தொழுவம் சென்றாள்.
வீரன்
காளைக்குத் தீனி கலந்து வைத்தாள்.
சூல்
கொண்ட கோதாவரிப் பசுவுக்குத் தீவனம் வைத்தாள்.
கிட்டத்தட்ட
பதினைந்து மாடுகள் கட்டிக் கிடந்த மாட்டுத் தொழுவம். ஒவ்வொரு மாடும்
ஒவ்வொரு மாதிரியும், வெவ்வேறு வேகங்களிலும் அசையும்போது ஒவ்வொன்றின் கழுத்துச்
சலங்கையும் ஒவ்வொருவிதமாக ஒலிக்கும்.
சலங்கை
ஒலிகள் எல்லாம் சேர்ந்து ஒலிக்கும்.
தாளவாத்தியக்
கச்சேரிபோல பல சலங்கைகள் ஒலித்த அந்த மாட்டுத் தொழுவம் இன்று வெறிச்சோடி இருந்தது.
அதைப்
பார்க்கும்போது, பல தலைமுறைகள் கூட்டுக்குடி இருந்த அரண்மணை போன்ற பிரும்மாண்டமான
வீட்டில், கணவனும் மனைவியும் மட்டும் தனிக்குடித்தனம் நடத்துவது
போல இருந்தது.
--00000--00000--00000--
ஜீவபுரம் டாக்டர் அருணகிரிதான் “கமிட்மெண்ட்ஸ்ஸை
குறைச்சிக்கோ மாதவா...!” என்றார்.
மாதய்யாவுக்கு
மனசு கஷ்டப்பட்டாலும், முதல் வயலை கிரயம் செய்தபோது மனசு தளர்ந்து
கிலேசப்பட்டது.
“யாதெனின் யாதெனின்
நீங்கியான்...”
என்ற
திருக்குறளைச் சொல்லித் மாதய்யாவைத் தேற்றினார் டாக்டர் அருணகிரி.
போகப்
போக அருணகிரி சொன்னதுதான் சரியெனப் பட்டது.
மாடுகளையெல்லாம்
விற்க முடிவு செய்தபோது கோனார்
கிருஷ்ணன் ஆட்கள் கொண்டு வந்தான்.
மாடு
பற்றி அறியாதவனும், பல் பிடிக்கத் தெரியாதவனும் மாட்டுத் தரகுப் பேச வந்தபோது மாதய்யா
மனம் குமுறினார். ஆத்திரப்பட்டார்.
“மாடு கொடுக்கறதுக்கில்லை...”
என்று அனுப்பிவிட்டார்.
அக்கம்பக்கத்
தெருக்களில் மாடு கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் கொடுக்க மனம் ஒப்பவில்லை.
பார்த்துப்
பார்த்துச் செய்நேர்த்தி செய்த பசுக்களைத் தீனி போடாமல் எலும்பும் தோலுமாக உலவ விடுவார்கள்.
பால்
மறத்த மறுநாள் காளைக்குச் சேர்ப்பார்கள்.
மாடு
என்பது அவர்களுக்கு வெறும் வருமானம் மட்டுமே.
மாடுகளை
மிகவும் நேசிக்கும் மாதய்யா, பணம் காசு கூடத் தேவையில்லை, தன் போல மாடுகளை நேசிப்பவருக்கே அதைக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாய் இருந்தார்.
--00000--00000--00000--
ஜீவபுரம் அருணகிரி மூலம் ஒரு
இடம் வந்தது.
மாட்டுப்
பண்ணை வைத்திருப்பதாகத் தெரிந்தது.
வந்தவர்கள்
மாடுகளைப் பார்த்தப் பார்வையிலேயே காருண்யம் தெரிந்தது.
மாடுகளைத்
தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.
கறவை
எவ்வளவு என்று கேட்கவில்லை.
சுழி
பார்த்துச் பிசிறவில்லை.
பல்
பிடித்து யோசிக்கவில்லை.
துண்டு
போட்டு மூடிக்கொண்டு பேரம் பேசவில்லை.
தங்கள்
பண்ணையில் சமீபத்தில் எடுத்த புகைப்படம் காட்டினார்கள்.
மனசு
திருப்தியாக இருந்தது மாதய்யாவுக்கு.
கோதாவரிப்
பசுவையும் வீரன் காளை தவிர, மற்ற அனைத்தையும் மகிழ்ச்சியோடு லாரியில்
ஏற்றி அனுப்பினார் மாதய்யா.
--00000--00000--00000--
மலரும் நினைவுகளில் மாட்டுத்
தொழுவத்திலேயே மயங்கி நின்றாள் குந்தலாம்பாள்.
மரப்பலகையால்
ஆன தீனி தொட்டியை ‘வரக்...வரக்...’ என
வீரன் காளையும், கோதாவரிப் பசுவும் நக்கும் சத்தத்தில் சுய உணர்வுக்கு
வந்தாள்.
பசி
வயிற்றைக் கிள்ளியது.
விடிகாலையில்
காப்பி குடித்துவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டாள். ஏதும் சமைக்கவில்லை.
ஸ்வாமி
நிவேதனத்துக்குத் தட்டிய நான்கு வடைகளும், ஒரு டம்ளர் பாயஸமும்தான்
இருந்தது.
பிள்ளையார்
எறும்புகளை நளினமாய்த் தட்டிவிட்டு அதைச் சாப்பிட்டாள்.
அரிசிப்
பானையில் போட்டு வைத்த பேயன் வாழை பழுத்துப் பதமாய் இருந்தது.
அதில்
இரண்டு உரித்துத் தின்றாள்.
எட்டு
மணிக்கெல்லாம் படுத்தவள்தான் அடித்துப்போட்டாற்போல் அப்படி ஒரு தூக்கம் வந்து அவளைத்
தழுவிக்கொண்டது.
தொடரும்...
Comments
Post a Comment