88. ஓ.பீ சீட்டு (சிறுகதை)
88. ஓ.பீ சீட்டு (சிறுகதை)
-ஜூனியர் தேஜ்
ஆனந்த விகடன் 01.11.2022
‘ஓ பி சீட்டு கொடுக்குமிடம்’ என்ற வளாகத்துக்குள் சென்றாள் அவள்.
அறைக்குள் நுழைந்தாள்.
பக்கத்து இருக்கை இளைஞனை அர்த்த புஷ்டியோடு கிறக்கப் பார்வைப் பார்த்தாள்.
தன்
கைப் பையை அவன் பை மேல் வைத்தாள்.
அவன்
முறுவலித்தான்.
“ மகாராணியின் சிஸ்டம் ஆன் பண்ணி வெச்சிட்டேன்….”
அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஆங்கிலத்தில் சொன்னான் அவன்.
பசலைப் படர்ந்தது அவளுக்கு.
கவுண்ட்டருக்கு வெளியில் நோயாளிகளின் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது.
*****-
“லட்சுமீ.....”
“...................”
“லட்....சு....மீ.....”
‘புஸ்.......’
சமையலையில் எகிறிக் கூவிய குக்கர்
விசில் சத்தத்தை மீறி, மாமியாரின் குரல் ஓங்கி ஒலித்தது.
“ லட்சுமீ... லட்சுமீ’னு
தேவநாதன் அந்தக் கத்து கத்துறான். காதுல வுளுவலையா...?”
சமையலறை முகப்பில் நின்று அதட்டினாள் மாமியார்.
“என்னங்கத்தே...?”
“அப்பயேப் புடிச்சிக் உன்னை அளைக்கறாண்டீ...! அவன். சீக்கரம் போ... என்ன ஏதுன்னு
கேளு...!”
குக்கருக்கு அடுத்தக் அடுப்பில் கீரை
மசித்துக்கொண்டிருந்தாள் லட்சுமி.
அத்தை சொன்ன அடுத்த கனம்
அடுப்பை அமர்த்திவிட்டு ஓடினாள்.
*****-
“என்னங்க...!”
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு “ம்.....” என்று முனகித் தவித்தான் லட்சுமியின் கணவன் தேவநாதன்.
“என்னங்க...? நெஞ்சு வலியா...?...”
அருகில் சென்று அதிர்ந்தாள்.
“அத்தே...! அத்தே...!!”
கத்தியபடி ஓடி வந்தாள்.
“என்னடீ...! என்னாச்சு ...?”
“அவுருக்கு , நெஞ்சு வலியாம்...! தவிக்கிறாரு...! நீங்க போய் முதுகு
தடவிவிடுங்க... வெந்நீர் வெச்சுக் கொண்டாரேன்...!”
லட்சுமி சமையலறைக்கு ஓடினாள்.
*****-
“வாயுப் பிடிப்பாத்தான் இருக்கும்...! அவன் அப்பாவைப்
போலவே இவனுக்கும் உருளைக்கிழங்கு சேரமாட்டேங்குது...!”
புலம்பிக்கொண்டே வந்தாள்.
இதமாக முதுகுத் தடவினாள்.
“நேத்து,
உருளைக் கிளங்குத் குருமாத் தொட்டுச் சப்பாத்தித் தின்னியா...! அதான் வாயுப் புடிச்சிக்கிடுச்சு... வெந்நீர் குடிச்சாச் சரியாயிரும்...!”
தேவநாதனின் நெஞ்சைத் தடவியபடி,
சமாதானம் சொன்னாள் அம்மா.
*****-
லட்சுமி, வால்கிண்ணத்தில் தண்ணீர் சுடவிட்டாள்.
செருவாட்டுக் காசுக்
கிண்ணத்திலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தாள்.
சாமி அலமாரியில் வைத்தாள்.
“என்னை எடுத்துக்கோ. அவுரு நல்லா இருக்கோணும். காப்பாத்து...!”
வேண்டிக்கொண்டாள்.
சாமி அலமாரியில் பல்வேறு நீள அகலங்களில்
மாட்டப்பட்ட விதவிதமான சாமி படங்கள்;
சின்னதும் பெரிசுமான பிரதிமைகள்;
சாய்த்துவைக்கப்பட்ட லாமினேஷன் செய்த
விசிட்டிங்கார்ட்டு சைஸ் சாமிகள்.
அனைத்தும் அவள் விருப்பத்தைக் கேட்டபடியும், அவள் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை அமைதியாகப் பார்த்தபடியும் இருந்தன...
******-
ஓபி சீட்டு கொடுக்குமிடத்தில் கும்பல்
இருந்தது.
ஆண்களுக்கென ஒரு வரிசை.
பெண்கள் ஒரு வரிசையில் நின்றார்கள்.
லட்சுமி பரபரப்பாக ஆண்கள் வரிசையில்
சென்றுக் கெஞ்சினாள்.
அவசரம்
அறிந்து அனுமதித்தார்கள்.
ஓபி
சீட்டு கவுண்டரில் இருந்தவள் அடுத்த சீட்டு இளைஞனுடன் ஜாடை மாடையாகப் பேசினாள்.
கண்
அந்த ஆணழகனை ருசித்துக்கொண்டிருந்தது.
பேஷண்டைப்
பாராமலே வாய் “சொல்லுங்க...!” என்றது.
சொன்ன விவரங்களை அரைகுறையாக வாங்கியது
காது.
விரல்கள் கீ போர்ட்டில் மேய்ந்தன.
நாலு சீட்டு கொடுக்க வேண்டிய நேரத்தில்
ஒரு சீட்டு கொடுத்தாள்.
கௌண்டரில்
காத்திருந்தவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை.
பெயருக்கு
ஒரு புகார்ப்பெட்டிக் கூட அங்கே இருந்தது.
என்ற மனோபாவத்தில் இருந்தனர் மக்கள்.
அலட்சியத்தையும், தாமத்ததையும் ஜனங்கள் ஏற்றுக்கொண்டு விட்டதற்குச் சாட்சியாக இருந்தது
அந்தக் காட்சி.
*****-
அர்ஜெண்ட் என்பதால் லட்சுமி அவளை அறியாமல் “ரொம்ப அவுசரம், சீட்டுக் கொடுங்க...!”
கத்திவிட்டாள்.
அவள் கத்தியது ஓப்பி சீட்டு அழகியைக் காயப்படுத்தியிருக்க
வேண்டும்...
கம்ப்யூட்டர் கீ போர்டின் என்டர் பொத்தானை
ஒரு குத்து குத்தினாள்.
மௌஸ் எடுத்து இடதும்,வலதும் மேலும் கீழுமாகத் தேய்த்தாள்.
“பேரு சொல்லு”
‘லட்சுமி.”
‘நோயாளியின் பெயர்’ க்கு
நேராகப் பதிந்தாள்.
டைப் செய்த பெயர் மானீடரில் வரவில்லை.
மீண்டும் பெயர் கேட்டாள்.
“யாரு பேருங்க...?”
கேள்வியில் அறியாமை அப்பட்டமாய்த் தெரிந்தது.
“ஆங்... ஜனாதிபதி பேரு கேட்டேன்...!”
கடுப்படித்தாள்.
பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையே சுவர்
வைத்ததைப் போல இடைஞ்சலாக நின்றது தடித்த கண்ணாடி.
“பேரு கேக்கறாங்க...! சொல்லுங்க.
இறைஞ்சி சொல்லுங்க...”
என்றார் அவளுக்குப் பின் நின்றவர்.
“லெட்சுமி...”
கவுண்டரில் குனிந்து சொன்னாள்.”
டைப் செய்தாள்.
இட்லி வேக்காளம் பார்ப்பதுபோல இரண்டு விரல்களால்
‘என்டரை’ குத்தினாள்.
மீண்டும் டைப் செய்தாள்...
லட்சுமியோ அவசரப்பட்டாள்.
“வயசு...?”
“40”
“என்னா செய்யுது...?”
“நெஞ்சு வலி...”
*****-
அருகாமைச் சீட் இளைஞன் அழகியைப் பார்த்து அர்த்தத்தோடு சிரித்தான்.
கள்ளச் சிரிப்பில் மயங்கினாள் கன்னி.
“கொ...ர்...ர்...ரக்… கொ...ர்...ர்...ரக்…” என்று சத்தமெழுப்பியபடி, சீட்டு வெளியே எட்டிப்பார்த்தது.
பிரிண்டரிலிருந்து கிழித்துக் கொடுத்தாள்.
கூர்ந்து பார்த்தால்தான் படிக்க முடியும்
அளவுக்கு சோகையாக அச்சாகியிருந்த்து ஓ பி சீட்டு.
அந்தச் சீட்டைப் பெற்றுக்கொண்டாள் லட்சுமி.
ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள்.
நெஞ்சில் கை வைத்தபடி, மூச்சுவிடச் சிரமப்பட்டான் புருஷன்.
“ப்..பூ…ஊ.. ப்..பூ…ஊ..”
வாயால் மூச்சு விட்டான்.
சுவற்றில் சாய்ந்து உட்கார வைத்தாள்.
*****-
டெட்டால், பினாயில்,வியர்வை,
யூரின், மருந்துகள்...
அனைத்தும் கலந்து நாறியது வளாகம்.
குடல் புரட்டிக்கொண்டு வந்தது.
ஆங்காங்கே பயிற்சி மருத்துவர்களுக்கு சூட்சுமம்
சொல்லிக் கொண்டிருந்தார்கள் முதிர்ந்த மருத்துவர்கள்.
இத்தனை டாக்டர்கள் வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தாலும், எந்த இடத்திற்குக் கணவனை அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்று
தெரியவில்லை லட்சுமிக்கு.
இளம் மருத்துவர்களை வழிநடத்திக்கொண்டிருந்த
ஒரு சீனியர் மருத்துவரை அணுகினாள்.
*****-
“டாக்டரய்யா...”
லட்சுமியின் அழைப்பில் இருந்த பதட்டத்தைப்
புரிந்துகொண்டார் அந்த சீனியர்.
“அவங்களுக்கு ஏதோ அர்ஜண்ட் போல. அடண்ட் பண்ணு..”
பயிற்சி மருத்துவரை அனுப்பினார்.
அவசரத்தைப் புரிந்து கொண்டு உதவி செய்த
அந்த டாக்டரைக் கையெடுத்துக் கும்பிட்டாள் லட்சுமி.
“ஒலகத்துல அங்கங்கே நல்லவங்களும் இருக்கத்தான்
செய்யறாங்க...!”
தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
*****-
“வூட்டுக்காரருக்கு நெஞ்சு வலிங்க...!”
செய்தி கேட்டுக்கொண்டு உள்ளே சென்று , தெரிவிக்கும் அலுவலக உதவியாளர் போல் செயல்பட்டார் அந்தப் பயிற்சி
மருத்துவர்.
“அந்த லேடீயோட ஹஸ்பெண்ட்க்கு நெஞ்சுவலியாம்...”
“மிஸ்டர்...! நிதானமா வந்து
சேதி சொல்றீங்க...
ஓட்டமும் நடையுமாக வந்தார் தலைமை மருத்துவர்.
“ஸ்ட்ரெச்சர்...!”
“நர்ஸ்...!”
குரல் கொடுத்தார்.
சீனியர் மோஸ்ட் டாக்டரின் குரலுக்கு ஆஸ்பத்திரியே
அடங்கியது.
பயிற்சி மருத்துவர்கள் புடை சூழ ஸ்டெரெக்சர்
வேறு ஒரு வளாகத்துக்கு விரைந்தது.
“இந்தாங்க ஓப்பி சீட்டு...!”
தன் சுருக்குப் பையிலிருந்து எடுத்து நீட்டினாள்.
“எமர்ஜென்சிக்கு அதெல்லாம் தேவையில்லீங்க...”
யாரோச் சொன்னார்கள்.
*****-
ஓபி சீட்டு லட்சுமியின் கைக்குள் நசுங்கியது.
கணவனை உட்கார வைத்த இடத்தில் வெந்நீர், கஞ்சி, காசித்துண்டு, எல்லாம் இருந்த, மஞ்சள் பையை எடுத்து வர ஓடினாள்.
பையுடன் திரும்பி வந்து பார்த்தபோது கண்ணைக்
கட்டிக் காட்டில் விட்டாற்போல் உணர்ந்தாள்.
கணவரை எங்கு கொண்டு போனார்கள் என்றே தெரியவில்லை.
வருவோர் போவோரையெல்லாம் தன் கணவனின் நிலையைச்
சொல்லிக் கேட்டாள்.
கண்டுகொள்ளவே இல்லை எவரும்.
ஒதுக்கினார்கள்.
ஒதுங்கினார்கள்.
அலட்சியப்படுத்தினார்கள்.
“தெரியாதும்மா...”
என்றார்கள்.
“‘அந்தக் கவுண்டர்ல கேளுங்க”
என்றான் ஒருவன்.
*****-
கவுண்டரில் ஓ பி சீட்டு கேட்டார்கள்.
சீட்டை பார்த்துவிட்டு, “அதோ அந்த மூணாவது வரிசைல நில்லுங்க...!” என்றார்கள்.
நின்றாள்.
வெகு நேரம் நின்றாள்.
நிற்க முடியவில்லை.
தரையில் உட்கார்ந்தாள்.
கேரியாக இருந்தது.
சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.
உடம்பு என்னென்னவோ செய்தது,
வியர்த்துக் கொட்டியது,
சுருண்டு படுத்துவிட்டாள்.
க்யூ மெல்ல மெல்ல அவளைத் தாண்டிக்கொண்டு
நகர்ந்தது.
*****-
கார்டியாலஜி எமர்ஜென்ஸி வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டான் லட்சுமியின் கணவன்.
இதயத்தில் ஸ்டெத் வைத்து இடது கை மணிக்கட்டை
பார்த்தார் சீனியர் கார்டியாலஜிஸ்ட்.
மற்ற மற்றச் சோதனைகளையும் செய்தார்.
பயிற்சி மருத்துவர்களையும் ஏதேதோச் செய்யச்
சொன்னார்.
இறுதியாக,
“இது சாதாரண வாயுப் பிடிப்புதான்...!”
டைக்னோஸ் செய்தார்கள்.
“ஜெலுசில் போதும்.”
முடிவெடுத்தார்கள்.
‘எதற்கும், ஒரு மணி நேரம்
அப்ஸர்வேஷனில் இருக்கட்டுமே...!’’
பொது வார்டில் வைத்தார்கள்.
*****-
ஓபி வளாகம் பரபரப்பாக இருந்தது.
வளாகத்திலேயே ஒரு பெண் இறந்து கிடந்தாள்.
மார்ச்சுவரிக்கு சென்றது அந்தப் பெண்ணின்
பூத உடல்.
பிரேத பரிசோதனை முறைகளைக் கற்கப் பயிற்சி
மருத்துவர்கள் குழுமியிருந்தனர்.
கார்டியாலஜிஸ்ட், ஃபாரன்ஸிக் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் லட்சுமியின் உடலைச்
சுற்றி நின்றார்கள்.
ஃபாரன்ஸிக் மருத்துவர், மூடியிருந்த பிரேதத்தின் மூடிய கையில் ஏதோ பேப்பர் இருப்பதைப்
பார்த்துவிட்டார்.
விரைத்துப் போன விரல்களைப் பிரித்து அதை
எடுக்கச் சொன்னார்.
ஓபி சீட்டு,
பெயர் - லட்சயா,
வயது – 30
வியாதி. வயிற்று வலி
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
*****-
‘லட்சுமியைக் காணோமே...! எங்கேப் போயிட்டா’
பொது வார்டில் படுத்திருந்த தேவநாதனின்
இதயம் தவித்தது.
இதயம் நின்ற 40 வயது லட்சுமி, 30 வயது லட்சயா என்ற பெயரில்
மார்ச்சுவரியில் அனாதைப் பிணமாகக் கிடந்தாள்.
****-
தேவனாதன் லக்ஷ்மியைத் தேடிக்கொண்டிருந்தான்.
*****-
Comments
Post a Comment