89.முருங்கைக் கிழங்கு (சிறுகதை)

 

89.முருங்கைக் கிழங்கு (சிறுகதை)

                                      -ஜூனியர் தேஜ்

14.11.2022 மக்கள் குரல்

 

 பெத்த பெருமாள் கோபுஎன்பது அவர் பெயர்.

பெ பெ கோபு என்று சுருக்கி அழைப்பார்கள் .

நல்ல படிப்பாளி.

இரண்டு ஃப்ளோர்கள் கொண்ட வீடு அவருக்கு.

வீடு பூராவும், எங்கு பார்த்தாலும், புத்தகங்கள். வார மாத இதழ்கள், நாளிதழ்கள், எழுதப்பட்ட காகிதங்கள் என, அடுக்கப்பட்டும், மூட்டைமூட்டையாகவும், அண்டா குண்டாக்களில் அடைக்கப்பட்டும் இருக்கும்.

எதையும் எடைக்குப் போடவே மனசு வராது அவருக்கு.

அவர் சார்ந்துள்ள பல்வேறு எழுத்தாளர் குழுமங்களிலிருந்து, “1962ல போஸ்டு கார்டு விலை என்ன...? அதைப் பற்றிச் சொல்லுங்க…!, இதைப் பற்றி குறிப்புத் தாங்க...!” இப்படி யாரேனும் ஏதேனும் அவரைக் கேட்டு மெசேஸ் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

யார் எது கேட்டாலும், சோறு தண்ணீர் இல்லாமல் நாள் முழுவதும் குப்பைகளைக் கிளறிக் கிளறி செய்தியைக் கண்டுபிடித்துவிடுவார்., கேட்டவருக்கு குறிப்புக் கொடுத்துவிடுவார்.

உங்களை எல்லாரும் இப்படி ஏமாளியா நடத்தறாங்க நீங்களும் அதுக்கு இடம் கொடுக்கறீங்க...!”

சிலநேரம் மனைவி மனதில் தோன்றியதைச் சொல்லிவிடுவார்.

நீ மட்டும் என்னவாம் என்னை அப்படித்தானே வெச்சிருக்கே...!”

சொல்லத் தோன்றும் அவருக்கு.

ஆனால் சொல்ல மாட்டார்.

சுதந்திரப் போராட்ட காலத்துல இருந்த  சினிமாக் கொட்டாய்ங்க எண்ணிக்கையை அஜித்னு ஒரு எழுத்தாளர் கேட்டிருக்கார். தேடிக்கிட்டிருக்கேன். என்னைத் தொந்தரவு செய்யாதே..”

என்றுவிடுவார்.

இவரைத் திருத்தவே முடியாது

அலுத்துக்கொண்டே சென்றுவிடுவார் மனைவி.

*****-

பெபெகோபுஎன்ற பெயரில் அவ்வப்போது கதைகளும் எழுதுவார்.

பிரசுரமாகும்.

பாராட்டுவார்கள்.

சன்மானம் மட்டும் தரமாட்டார்கள்.

கதை எழுதினோமா, காசு பாத்தமானு சமத்து இருக்கா...!! வெட்டி வேலை செய்யறதே சிலருக்கு வேலையாப் போச்சு.”

வீட்டில் முனகல் வந்து அடங்கும்.

வேறு வழி.

*****-

பெ பெ கோபுவுக்கு படிப்பது என்பது ஒரு வியாதி போல் இருந்தது.

மளிகைக் கட்டி வந்த கூம்பை விரித்து நீவி சுருக்கம் நீக்கிப் படித்துவிட்டு அதை தன் லைப்ரரியில் பாதுகாத்துவிடுவார்.

பட்டாணி மடித்தப் பேப்பராவது பரவாயில்லை சகித்துக் கொள்ளலாம்.

அவிச்ச கடலை, பஜ்ஜி, மெதுவடை சுற்றின பேப்பரைக்கூட மனிசன் விடுவதில்லை.

நூலக அலமாரிகளில் எறும்புகள் சாரை சாரையாக மேய்வதை வைத்துத்தான் இதைக் கண்டுபிடித்தார் அவர் மனைவி.

இப்படி ஈரப் பேப்பரையும், எண்ணைப் பேப்பரையுமாவது தூக்கிக் போடக்கூடாதா...?”

என்று அழாத குறையாகக் கேட்டு மன்றாடினாள் மனைவி.

ம்ஹூம். ஈரப் பேப்பரை காயவைத்தும், ஆயில் பேப்பரை பிளாஸ்டிக் உரைக்குள் வைத்தும் பாதுகாத்தார்.

அதுவும் மனைவி சொல்லிவிட்டாளே என்று.

*****-

னக்கு ரெண்டுமாச சம்பளம் தீபாவளி போனஸ்ஸா கொடுத்திருக்காங்கப்பா... உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்கித்தரேன் என்றான்..” மகன்.

சின்னவயசுலேந்தே எனக்கு ரொம்பப் பிடிச்ச லட்சுமி வெடி மட்டும் நிறைய வாங்கித்தா...” என்று கேட்டார் பெபெகோ.

மகனும் வாங்கி வந்தார் நிறைய.

சின்னக் குழந்தைப் போல ஒவ்வோரு கட்டையும் எடுத்து எடுத்து, இப்படியும் அப்படியும் திருப்பித் திருப்பி உற்சாகமாய், ஆசையாய் பார்த்தார்.

அப்பா பார்ப்பதை மகனும் பார்த்துக்கொண்டே நின்றான்.

எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து லட்சுமி இப்படி வெடீல லெட்சுமிநின்னுக்கிட்டே இருக்காளே.. பாவம்... கால் வலிக்காதா...?”

வாய்விட்டுப் புலம்பினார் பெபெகோ.

புலம்பலைக் கேட்ட மகன்.. “நீங்க இப்படி நினைப்பீங்கனு தோணிச்சு. அதான் இதுவும் வாங்கி வந்தேன் என்று ஒரு பார்சலை அவர் முன் வைத்தான்.

அதைப் பிரித்துப் பார்த்த பெ பெ கோ ஆச்சரியத்தில் உரைந்தார்.

அந்த பார்சலில் இருந்த லட்சுமி வெடிக்கட்டுகளில் உள்ள வெடிகளில் லட்சுமி உட்கார்ந்திருந்தாள்.

*****-

தீபாவளி நாள் வந்தது.

பெபெகோபு சாருக்கு ஒரு வளர்ப்பு மகன் உண்டு.

அவன் பெயர் ராமநாதன்.

வில்லாளகண்டன் அவன்.

அவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு வெடி வெடித்தார்.

முதல் லெட்சுமி வெடியின் திரியைக் கிள்ளினார்.

நடுத்தெருவில் கொண்டுபோய் வைத்தார்.

கரிப் பத்தியின் நுனியில் இருந்த சாம்பலை ஊதினார்.

கனன்ற நெருப்புப் புள்ளியால் திரி நுனியில் தொட்டார்.

நெருப்பு வைத்துவிட்டு ப்ஸ்க்..” என திரி சீரி முன்னேறுவதையேப் பார்த்தபடி, நண்டு போல பக்கவாட்டில் ஓடி வந்தார்.

...மா...ல்...!!!”

வெடித்துச் சிதறியது லட்சுமி வெடி.

*****-

ராமநாதன் ஓடிப்போய் சிதறிய காகிதங்களைத் திரட்டி அள்ளிக்கொண்டு வந்தான்.

அதை ஆராய்ந்தபோது கோபு சாரின் கண்ணில் அது பட அப்படியே புளகாங்கிதமடைந்தார்.

சிதறிய காகிதத் துணுக்கில் தெரிந்தது. மக்கள் குரல் லோகோ.

பரபரப்புடன் தேதியைப் பார்த்தார்.

அட.. நம்மமுருங்கைக்கிழங்குங்கற கதை வந்த பேப்பர்...” மனசு பூராவும் நிறைந்து, துள்ளிக் குதித்தார்.

எழுந்து போய் கையில் இருந்த வெடி கொளுத்தும் பத்தியை நீரில் போட்டு நனைத்து அணைத்தார்.

மற்ற லட்சுமி வெடிகளைஎல்லாம் முன்னே குவித்துக்கொண்டு, வெடியை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பிரித்து சுருளை நீட்டி நீட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

வெடி வெடிக்கும் சத்தம் கேட்கவில்லையே...?’

சந்தேகம் வர வாசலில் வந்து பார்த்த பெ பெ கோவின் மனைவி அதிர்ந்து நின்றாள்.

*****-

ழக்கமாக வீட்டுக்குள் புத்தகங்களையும், பேப்பர்களையும் பரந்து பரந்து, எடுத்து எடுத்துப், பிரித்துப் பிரித்து, விரித்து விரித்து, வெரித்து வெரித்துப் பார்க்கும் இவருக்கு என்னதான் ஆயிற்று...?’

அதிர்ச்சியுடன், புத்தம் புது  வெடிகளை இப்படிப் பிரித்துப் பிரித்து சுருள் சுருளாய் குவித்து வைத்திருக்கும் குவியலைச் சுட்டிக்காட்டி.., “உங்களுக்கு என்னாச்சு...?” கேட்டாள் மனைவி.

முருங்கைக்கிழங்கு...”

என்று தொடங்கினார் பெபெகோ.

மனைவி ஒரு மாதிரியாகப் பார்த்தாள் சிசிகோவை.

பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து அப்பாவுக்குப் பிடிக்குமே என லட்சுமி வெடி பண்டில் பண்டிலாக வாங்கி வந்த மகனும் இந்தச் செயலைக் கண்டு பிரமைபிடித்தாற்போல் நின்றான்.”

முத்திப் போச்சுடா...! மாந்திரீகரை அழைச்சி வா..”

அவசரமாய் மகனை அனுப்பிவைத்தாள் மனைவி.

நிற்கும் லெட்சுமிவெடி பார்சல் முடித்தபின், உட்கார்ந்த லெட்சுமி வெடிப் பார்சலை எடு பிரிப்போம்…!”

ராமனாதன் எடுத்துக் கொடுக்க, முருங்கைக்கிழங்குஎன்ற கதையைத் தாங்கியுள்ள வெடியை சீக்கரம் கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஆசை உந்த வேக வேகமாய்  பிரித்துக்கொண்டிருந்தார் பெபெகோ.

**************************************************************

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)