93. வெட்டுவா (சிறுகதை)
93. வெட்டுவா (சிறுகதை)
-ஜூனியர் தேஜ்
(விகடன் – 07-12-2022)
அஸ்வினி தன் அம்மா, கண்ணும்- கருத்துமாகச் செய்துக் கொண்டிருந்த முதலுதவியை உற்றுக் கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.
அஸ்வினியின் தாய் ஒரு நர்ஸ்.
அர்ப்பணிப்பு மிக்க செவிலித்தாய் என்று எல்லோராலும் அறியப்படுபவர்.
முதலுதவிப் பெட்டியை சிரத்தையோடு அதன்
இடத்திலிருந்து எடுத்துச் செல்வது முதல்,
முதலுதவி முடிக்கும் வரை அனைத்துச் செயல்பாடுகளையும், அணு அணுவாகக் கூர்ந்துக் கவனித்தாள் அஸ்வினி.
வெட்டுக் காயத்தைப் பஞ்சை வைத்து
லாகவமாகத் தொட்டுத் துடைத்தார்.
டிஞ்சரில் நனைத்தப் பஞ்சை ஒட்டி, அதன் மேல் சதுரமாய் மடிக்கப்பட்ட ‘காஸ் க்ளாத்’ வைத்துச் சுற்றிக் கட்டுப் போட்டார்.
சுற்றி நின்றவர்களுக்கும் எளிதில்
புரியும்படி முதலுதவிச் செய்யும் முறையை விளக்கினார்.
ஒவ்வொரு வீட்டிலும் முதலுதவிப் பெட்டி
இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சொன்னார்.
'நானும் அம்மாவைப் போல
நர்ஸாகத்தான் சேவைச் செய்ய வேண்டும்...!'
ஆசை எழுந்தது அஸ்வினிக்கு.
*****
அஸ்வினிக்கு அன்றுப் பள்ளி
விடுமுறை.
அம்மா ஆஸ்பத்திரிக்குச்
சென்றுவிட்டாள்.
அன்றுக் காலை 10 மணி முதல் அந்தப்
பகுதிக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அறிவித்திருந்தார்கள்.
பராமரிப்புப் பணிகள் ஆங்காங்கே
நடைபெற்றுக் கொண்டிருந்தன.
சப் ஸ்டேஷனில் இருக்கும் சர்வர்களில்,
ஹை ஓல்டேஜ்ஜால் உருகிக் கருகிய பிடிப்பான்களை புதுப்பித்தோ, புதிதாக மாற்றம் செய்துகொண்டோஇருந்தார்கள்.
AE, JE, லைன் மேன் என
மின்வாரிய ஊழியர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
***
'மனிதன் பழக்கத்துக்கு அடிமையாவான்' என்பதுதான் எவ்வளவு
அப்பட்டமான உண்மை.
ஜனங்களுக்கு வீட்டிற்குள் இருக்கவேப் பிடிக்கவில்லை.
ஏசி, மின்விசிறி எனப்
பழகிவிட்டதால், அவைகள் இல்லாமல், எல்லோரும் வாராண்டாவிற்கும்
மொட்டைமாடிக்கும், போர்ட்டிகோவிற்கும், சிட்டவுட்டிற்குமாக அலைப் பாய்ந்தார்கள்.
"ரொம்ப இறுக்கமா
இருக்குல்ல... வீட்டுக்குள்ள இருக்கவே
முடியல. வேகுது!"
"ஷட் டவுன் பண்ணிப்புட்டு அப்படி என்னதான் பண்ணுவாங்களோ? ஆண்டவனுக்குத்தான்
வெளிச்சம்...!"
"வெள்ளைக்காரன் வெச்ச ட்ரான்ஸ்பார்மர வச்சே இன்னும் ஓட்டுறாங்க... அடிக்கடி பராமரிப்புப் பண்ணித்தானே
ஆகணும்...!"
"ஸ்டே வயரை இழுத்து
இறுக்கமா ஒரு முறை கட்டிக் கானகிரீட் போட்டாப் பர்மனன்ட்டா நிக்கும். ஒரு மாசத்துக்குள்ள கலகலத்துக்கற மாதிரி தானே கட்டுறாங்க..."
"ஸோஷல் ரெஸ்ப்பான்ஸிப்ளிடி'ன்னா மீசை என்ன விலை ன் னு கேட்கிற காலமாயிருச்சே!"
“பராமரிப்புன்னு ஒரு நாள்
நிறுத்தினாத்தான், நிறைய அடிக்கலாம் அதுக்கு தான்
இவ்வளவும்..!"
"பராமரிப்பு
செய்யறேன்னு நம்ம வீட்டு ஒயர கட் பண்ணி விடாமல் இருக்கணும்...!"
“பராமரிப்புனு சொல்றதெல்லாம் சும்மா ஐ
வாஷ்…”
மொட்டை மாடியிலும் வராண்டாவிலும்
உட்கார்ந்துக் கொண்டு இப்படி வாய்க்கு வந்தபடிப் பேசினார்கள்.
*****
"ஸேப்டி ரோப் எமனையும் வெல்லும்' மின்வாரிய ஆபீஸ்
சுவத்துல எழுதியிருக்கறது உனக்காகத்தான்.. சேப்டி ரோப் கட்டிக்கிட்டு மரத்துல ஏறு...!"
'ஜே ஈ' லயன் மேனுக்கு எச்சரிக்கைச் செய்தார்.
கம்பத்தின் மேல் நின்ற லயன் மேனுக்குக் கீழிருந்துக் கட்டிங் பிளேயர்.
ஃபியூஸ் எல்லாம் ரோப் மூலம் மேலேச் சென்றன..
கட்டிங் பிளேயரை வைத்து அலுமினியக் கம்பியை நன்குச் சுற்றித் திருகி ஜம்பர் அடித்தார் லயன்மேன்.
"ஃபீடர்ங்களை செக்
பண்ணி பாரு.”
“பீங்கான் குப்பியோட டைப்
பண்ணி கட்டு."
'ஜே. இ 'கீழிருந்து ஆலோசனைச் சொல்லச் சொல்ல மேலே நின்று லைன் மேன் சரி செய்தார்.
சப்ளை ஒயரெல்லாம் குருவிக்கூடுப் போல
இருக்குப் பாரு… சரிப் பண்ணி விடு என்றார் ஜே. இ.
தெருவின் கடைசிக் கம்பம் நோக்கி எல்லா
லைன் மேன்களையும் அழைத்துச் சென்றார் ஜே இ.
அருகாமைக் கட்டட வேலைக்கான
அஸ்திவாரத்துக்கு நோண்டியபோது கம்பம் லேசாக சாய்ந்திருந்தது.
அலுமினிய ஒயர்களை எல்லாம்
அவிழ்த்து விட்டு தாம்புக் கயிறு கட்டி எல்லோருமாகச்
சேர்ந்து அதை நிமிர்த்தினார்கள்.
எதிர்வசத்தில் ஸ்டே வயர் போட்டு இறுகக்
கட்டினார்கள்.
சின்னக் குட்டியானை லாரியில் கொண்டு வந்த
முக்கால் ஜல்லியைப் போட்டுச் சிமெண்ட் கான்கிரீட் தயார் செய்து அதில் கொட்டினார்கள்.
******
வராண்டாவில் உட்கார்ந்துக் கொண்டு
தெருவில் நடக்கும் வேலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அஸ்வினி அதிர்ச்சியில்
உறைந்தாள்.
இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்க்கவில்லை அவள்.
சரேலென்று உள்ளே ஓடினாள்.
முதலுதவிப் பெட்டியோடு வெளியே வந்தாள்.
சொறி பிடித்த கையும் அறிவாள் பிடித்த
கையும் சும்மா இருக்காது என்பார்கள் அல்லவா...
கையில் இருந்த அறிவாளால் மானாவாரியாகக்
கொத்திப் புண்படுத்திக் கொண்டிருந்தக் காண்ட்ராக்ட் லேபர்,
சிறுமியின் வருகையைப் பார்த்து அங்கிருந்து நகர்ந்தான்.
பசுமையாக
வளர்ந்து நிற்கும் அந்தச் சிறியப் புங்கன் மரத்திற்கு அருகே வந்தாள்
அஸ்வினி.
மிகவும் அருமை ஐயா. மனிதன் பழக்கத்துக்கு அடிமையானவன் என்ற மேற் கோளுடன், சிறுமி அஸ்வினி அன்னையை போன்ற மருத்துவ சேவை அற்புதம் ஐயா.
ReplyDeleteதங்களின் உடனடி விமர்சனத்திற்கு மிக்க நன்றி சார்.
ReplyDeleteஜூனியர் தேஜ்
'நூலைப் போல சேலை; தாயைப் போல பிள்ளை' என்பார்கள்!
ReplyDeleteநர்ஸ் அம்மா செய்யும் செயல்களைப் பார்க்கும் அஸ்வினிக்கு மரத்தை வெட்டும் காண்ட்ராக்ட் லேபரின் செயலைப் பார்த்ததும் முதலுதவி செய்யத் தோன்றுவதில் வியப்பேயில்லை.
ஆரம்பத்தில்
அஸ்வினி தன் அம்மா செய்யும் மருத்துவ உதவிகளைப் பார்க்கிறாள்.
கடைசியில் தானும் அதேபோல செய்கிறாள்.
இதற்கிடையில்,
மின்வெட்டு நாள் என்பதும் மக்கள் புலம்புவதும் ஜேஈ, லைன்மேன் ஆகியோர் வேலைகள் பார்ப்பதும் ஆகிய சம்பவங்கள் இந்தக் கதைக்குள் தேவையில்லையே சார்?
அஸ்வினி தன் அம்மாவைப் போல பணி செய்வதற்கு ஒரு கதை களன் வேண்டுமல்லவா... அந்த வகையில் சிந்தித்துப் பாருங்கள் சார். கதையைப் படித்து விமர்சித்ததற்கு நன்றி வணக்கம்.
Deleteஜூனியர் தேஜ்
அஸ்வினிக்கு நர்சிங் பணியில் ஈடுபாடு ஏற்பதை விளக்கிவிட்டு, மின்வாரியத்தின் அன்றாடப் பணிகளை நுணுக்கமாக விவரித்து, பின் இரண்டையும் இணைத்து ஒரு குழந்தையின் பார்வையில் பெரும் விஷயத்தை சட்டெனச் சொல்லிச் சென்றது அசத்தல்.
ReplyDeleteவாசித்து, மிகவும் பிடித்துப்போன சிறுகதைகளில் இதுவும் ஒன்று. பிரமாதம்.
அஜித் சார். உங்கள் பிரமிக்கத்தக்க எழுத்துக்களில் நான் மனசு பறிகொடுத்தவன் சார். நீங்கள் ஒரு படம் இயக்கினாலும் உலகம் முழுவதும் அந்த சினிமாவை கொண்டாடும். நீங்கள் டைரக்டராகும் நாளை ஒவ்வொரு நாளும் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் விமர்சனம் கண்டு மிக மிக மகிழ்ச்சி சார். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். ஜூனியர் தேஜ்
Deleteஅஸ்வினி மனதில் அம்மா மாதிரி
ReplyDelete'எந்த உயிரினத்துக்கும் முதல் உதவி செய்யவேண்டும்..!'
என்கிற கருத்து என் மனதிலும் பதிந்தது.
நல்ல சிந்தனை
மற்றும் EB சம்பந்தமான நுணுக்கங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
பாராட்டுக்கள்
ஆனந்த சீனிவாசன்
எழுத்தாளர்
ஆனந்த சீனிவாசன் சார் தங்கள் மனம் திறந்த விமர்சனத்திற்கு மிக்க நன்றி. ஜூனியர் தேஜ்
ReplyDeleteஜூனியர் தேஜ் சார், தங்களது 'வெட்டுவா' என்ற சிறுகதையை படித்தேன். இந்த கதை ஒரு குழந்தையின் அன்பான மனசை வெளிப்படுத்தும் வகையில் அழகாக இருந்தது. 'தாயைப்போல பிள்ளை' என்பதற்கு இந்த சிறுகதை நல்லதொரு உதாரணம்.
ReplyDeleteமின்வெட்டு, மின்சார வாரியத்தின் பராமரிப்பு வேலைகள் நடைபெறும் விதம், அதைப்பற்றிய மக்களின் மனநிலை என்று பலவித தகவல்கள் இந்த கதையை மிகவும் மேன்மையாக்கி, கதையோடு ஒன்ற வைக்கிறது
பாராட்டுகள்.
-சின்னஞ்சிறுகோபு.
தங்கள் அன்பான விமர்சனத்திற்கு மிக்க நன்றி சார்.
Deleteஜூனியர் தேஜ்