109. பேரிடருக்கேப் பேரிடராய் ... (கட்டுரை)
109. பேரிடருக்கேப் பேரிடராய்...
ஜூனியர் தேஜ்
விழிப்புணர்வுக் கட்டுரை (விகடன் 15.02.23)
இந்த தினத்தை அனுசரிக்கும் நோக்கம் :– தேசிய பேரிடர் மீட்புப் படையின் பேரிடர் காலச் செயல்பாடுகளை அங்கீகரித்துப் போற்றுவதேயாம்.
‘தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்’ இந்தியாவில் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கபட்ட ஆணையமாகும்.
இந்த ஆணையம், பேரிடர் மேலாண்மைத் தொடர்பான கொள்கைகளை ஏற்படுத்துவதற்கும், திட்டங்கள் தீட்டுவதற்கும், வழிமுறைகள் தெரிவிப்பதற்கும், ஏற்படுத்தப்பட்ட இந்தியாவின் தலையாய அமைப்பாகும். இந்த வழிமுறைகள் மைய அமைச்சகங்களின் துறைகளுக்கும், மாநில அரசுக்கும் திட்டங்களை வகுக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இவ்வாணையம் திட்டம் சார்ந்த துறைகளுக்கு ஆலோசனை அளிப்பதோடு, ஒப்புதலும், நிதி ஒதுக்கீட்டையும் கண்காணிக்கிறது, மேலும் அயல் நாடுகளில் ஏற்படும் பேரிடர் நிகழ்வின் போது தேசிய அளவில் தேவையான உதவிகளை முடிவெடுத்து ஆவன செய்கிறது.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
என்ற குறள் 622 சொல்வதென்ன? வெள்ளம் போல் அளவில்லாமல் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத்துன்பத்தின் இயல்பை ஆராய்ந்து, தீர்வு காண முடியும் என்கிறார் திருவள்ளுவர்.
இடர் என்பது எதிர்பாராதது. இடர் இல்லா இடம் என எதுவுமில்லை. ஓரறிவுப் பூஞ்ஜை முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவரும் தத்தம் இயல்புக்கு ஏற்ப துன்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் திறனை இயல்பாகவே பெற்றள்ளனர் என்பதே உண்மை.
சில விலங்குகள், பறவைகள் எல்லாம் நில நடுக்கத்தை வருமுன்னே அறியும் தன்மையை இயற்கையாகவே தன்னகத்தே கொண்டுள்ளது.
வானியல் நிகழ்வுகளை உற்று நோக்கிய மனிதன் தன் திறமையால் இடர்களிலிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும் தப்பித்து வாழும் திறமையால்தான் மனித இனம் இன்றளவும் உலகில் நிலைபெற்றுள்ளது.
ஆறறிவுள்ள மனிதனின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் அப்பாற்பட்டு உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் உருவாக்கும் இயற்கையின் சீற்றத்தையே ‘பேரிடர்’ என்கிறோம்.
பேரிடர்களின் தன்மைக்கேற்ப புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, உடமைகளையும், விலைமதிப்பில்லா உயிர்களையும் காக்கக் கையாளப்படும் உத்திகளையும் முறைகளையுமே 'பேரிடர் என்கிறோம்.
இயற்கை ஏன் சீற்றமடைகிறது? இயற்கையை அதன் போக்கில் இயற்கையாக இருக்க அனுமதிக்கிறோமா நாம்..? ஒட்டுமொத்த மனித வர்க்கமும் சிந்திக்க வேண்டிய கேள்வி..
பேரிடர் மீட்புப் படை
புவிக் காலநிலை வேறுபாட்டு காரணிகள் (Geo-Climatic factors) ஏற்படுத்தும் பேரிடர்களான புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி மற்றும் கொரோனா.. போன்ற பேரிடர் நிகழும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் , பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளையும் மேற்கொள்கின்றது. 'வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை.
பேரிடர் மீட்புக் குழு
பேரிடர் பற்றிய விழிப்புணர்வு
பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வானது, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதுடன், வருங்காலங்களில் பேரிடர்களால் ஏற்படும் பொருட்சேதம் உயிர்ச்சேதம் ஆகியவற்றைக் கணிசமாகக் குறைப்பதோடு பணிகளை மேலும் செம்மைப்படுத்துவதற்கும் இன்றியமையாததாகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையின் ஓர் அங்கமாக 2014 ஆம் ஆண்டு தொடங்கிய "தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை" என்கிற அமைப்பின் சார்பில் மாநில மாவட்ட அளவில் பல்வேறு பயிற்சிக் கருத்தரங்குகள், முன்னெச்சரிக்கை ஒத்திகைகள், கிராமியக் கலைகள், நாடகங்கள், வானொலி மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பொதுமக்களிடையே பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு ‘ஒரு தலைமுறைக்கே’ கற்பித்தலுக்கு இணையாகும் என்பதைக் கருத்தில் கொண்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை திறம்பட நடத்தி வருகின்றன.
இயற்கை பேரிடர்களான நிலநடுக்கம், எரிமலை, சுனாமி, புயல், வெள்ளம், வரட்சி, நிலச்சரிவு, பனிச்சரிவு, இடி, மின்னல்... போன்றவைகறெல்லாம் ஒருபுறமிருக்க, மனிதர்களின் அறியாமையாலும் , கவனக்குறைவினாலும், அலட்சியப் போக்கினாலும், ஏற்படுகின்ற தீ விபத்துகள், கட்டடங்கள் இடிந்து விழுதல், தொழிற்சாலை விபத்துகள், போக்குவரத்து விபத்துகள், கூட்ட நெரிசல் விபத்துகள், திடீர் கலவரங்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் முதலியவற்றால் நாம் இழக்கும் விலைமதிப்பில்லா உயிர்கள்தான் எத்தனையெத்தனை..?.
எந்தப் பேரிடராக இருந்தாலும் அதைச் சமாளிக்கத் தேவை மேம்பட்ட மனித வளங்கள் (Human Resources) மற்றும் பொருள் வளங்கள் (Material Resources), மற்ற வளங்கள் (Other Resources)
மனித வளங்கள் (Human Resources)
• பயிற்சி பெற்ற வீரர்கள்
• தேடுதல் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
• உடனடி நிவாரணம் வழங்கும் துறை அதிகாரிகள்
• சேவை நிறுவனங்களின் ஒத்துழைப்பு
• பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள்
• உள்ளூர் பொதுமக்கள்
பொருள் வளங்கள் (Material Resources)
• ஏணிகள்
• கயிறுகள்
• தீயணைப்பான்கள்
• சிறிய படகுகள்
• கட்டு மரங்கள்
• நீர் இறைப்பு மோட்டார்கள்
• ஸ்ட்ரெச்சர்கள் (Strectchers)
• முதலுதவிப் பெட்டிகள்
• தகவல் தொடர்பு எண்கள் (அதாவது அருகாமை மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் காவல் நிலையங்கள்...).
மற்றவை (Other Resources)
• பாதுகாப்பான தங்குமிடங்கள்
• அரசுக் கட்டடங்கள்
• குடிநீர் ஆதாரங்கள்
• நீர்நிலைகள்
• பாசன நிலங்கள்
• வனப்பகுதிகள்
• மேய்ச்சல் நிலங்கள்
• மருத்துவ வசதிகள்
• குழந்தை நல மையங்கள்
• சாலைகள்
• மாற்றுப் பாதைகள்
• மின்சார டிரான்ஸ்பார்மர்கள்
• தொலைபேசி, தபால், இமெயில் வசதிகள்.
• தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை அலுவலகங்கள்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅர்.
துன்பம் வந்த போது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார். என்பார் திருவள்ளுவர்.
திருவள்ளுவரின் வாக்குப்படி எத்தைகைய பேரிடர் வந்தாலும் குறுகிய கால அவசரத்திற்குள், கைவசம் உள்ள தகவல் மற்றும் வளங்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடம் மற்றும் மக்களை மீட்டு பேரிடருக்கேப் பேரிடராக இருந்து, இந்த வையகத்தைக் காக்கும் ‘தேசிய பேரிடர் மீட்புப் படை’யின் செயல் ஓங்கட்டும்.
ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில் மேலாண்மைக் குழுவை வரவழைத்துப் பள்ளி மாணவர்களுக்கு பேரிடம் மேலாண்மை விழிப்புணர்வை தவறாது ஊட்டி வரும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு என் நன்றி.
கட்டுரையாளர் – உளவியல் ஆலோசகர்
உதவித் தலைமை ஆசிரியர் சபாநாயக முதலியார் இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
Comments
Post a Comment