110. மனச்சிதைவு – (சிறுகதை )

 

110. மனச்சிதைவு 
குணசீலத்துக் கதை - 2
                                                                                        -ஜூனியர் தேஜ்
(விகடன் 23 – 02 - 2023)

'திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்'. என்ற நம்மாவாழ்வார் வாக்குப்படி குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம்அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர்பெயர் எல்லாம் மாற்றிகதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது

வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட கதாபாத்திரங்கள் மூலம்மனநல பாதிப்புகளையும்அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம்    என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம்.

-------------.

     

பணியாளர் கொடுத்த கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தார் மனநல ஆலோசகர் வரதராஜன்.

“ரிஸப்ஷன்ல உட்கார வெச்சிருக்கேன். உள்ளே அனுப்பவா..?”- கேட்டார் கவுன்சிலரின் உதவியாளர்.

கல்யாணப் பத்திரிகையில் பெயரைப் பார்த்தார்.

கண் முன் காட்சிகள் விரிந்தன.

***

“கண்கள் கலங்கிய நிலையில் தன் எதிரே நின்ற பெற்றோர்களிடமிருந்து சீட்டை வாங்கினார் வரதராஜன்.

மனச் சிதைவு (Schizophrenia). இனிஷியல் ஸ்டேஜ்.”

மருந்துச் சீட்டின் பின்புறம், மனநல மருத்துவர் நவீனன் சங்கேத மொழியில் எழுதியிருந்ததைப் படித்தார்.

எதிரிலும் பக்கவாட்டிலுமாக இருந்த மூன்று இருக்கைகளில் முறையே மூவரையும் உட்காரச் சொன்னார்.

***

 “ஹாய் ராஜ்குமார்.”

நட்போடு அழைத்தார் வரதராஜன்.

“............................”

நம்பிக்கையற்ற ஒரு வரட்டுப் பார்வை பார்த்தான் ராஜ்குமார்.

‘ நீ என்னடா புதுசா அட்வைஸ் பண்ணப்போறே எனக்கு? ஆளை விடுங்கடா..!’ - என்றது அந்தப் பார்வை.

ராஜ்குமாரின் தற்போதைய நிலையை உணர்ந்த வரதராஜன் தன் கவுசிலிங்’கை உரிய முறையில் தொடங்கினார்.

“ராஜ்குமார் ஈஸ் பர்ஃபெக்டலி ஆல்ரைட்னு சைக்கியாட்ரிஸ்ட் எழுதியிருக்காரு. டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைங்களை முறையாக் கொடுங்க. பிறகு பேசிக்கலாம்.” என்றார்.

இப்படிச் சொல்லும்போது ராஜ்குமாரின் ரியாக்‌ஷன்ஸ் கவனித்தார்.

***

 “உங்க மகன் கிட்டே பேசுவார்’னு சொல்லி டாக்டரய்யா உங்ககிட்டே அனுப்பி வெச்சாரு. நீங்க என்னடான்னா, பிறகு பேசிக்கலாம்னு தட்டிக் கழிக்கறீங்களே சார்...! என்னோட ஒரே மகன் சார். உங்களுக்கு இப்படி ஒரு பைத்தியம் பிடிச்ச மகன் இருந்தா இப்படிச் செய்வீங்களா? ஊரான் பிள்ளைதானே..; அதான் இப்படி அலட்சியமாப் பேசுறீங்க...!”

விடாமல் பேசிக்கொண்டே போனாள் ராஜ்குமாரின் அம்மா.

வரதராஜன் அந்தச் பேச்சைக் கட்டுப் படுத்தவில்லை. தாயார் பேசும்போது, மகன் ராஜ்குமாரின் முகக் குறிப்புகளை உள் வாங்கினார்.

“............................”

ராஜ்குமாரின் முகம் இறுகியது.

***

தனக்குத்தானே வரட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டான் ராஜ்குமார்..

ஒரு முறை கவுன்சிலர் வரதராஜனைப் பாத்தான்.

‘இதுதான் சார் எங்க அம்மா...! இதுதான் அவங்க குணம். ‘தேர்டு பர்ஸ’னான உங்களையே இப்படித் தாறுமாறா எடுத்தெரிஞ்சிப் பேசறாங்களே, அப்போ என்னை எப்படியெல்லாம் ‘டார்ச்சர்’ பண்ணியிருப்பாங்கனு புரிஞ்சிக்க முடியுதா?’ - என்று கேட்டது அவன் பார்வை.

“............................” - சைக்காலஜிஸ்ட் அமைதியாக இருந்தார்.

***

 “ஏன் சார். என் மனைவி கேக்கறதுல என்ன தப்பு. டாக்டர் எங்களை உங்ககிட்டே ‘கவுன்சிலிங்’குக்கு அனுப்பியிருக்காரு. உங்களால முடியாதுன்னா முடியாதுனு சொல்லுங்க. ஊரு ஒலகத்துல நீங்க மட்டும்தான் கவுன்சிலரா? வேற யாருகிட்டயாவது பாத்துக்கறோம்...!” - அடுத்த சீறல் வந்தது அப்பாவிடமிருந்து.

“............................” - ராஜ்குமாரிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. பழையபடி ஒரு பார்வைதான்.

“ஜாடிக்கு ஏத்த மூடி சார் எங்கப்பா.. அம்மா என்ன சொன்னாலும் ஜால்ரா போடுவாரு. இப்பத் தெரியுதா என்னோட நெலம...?” - முறையிட்டது அவன் வரட்டுப் பார்வை.

***

 “நீங்க வாயத் திறக்காதீங்க.! பேரன் பேரன்னுச் செல்லம் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்துக் குட்டிக்சுவராக்கி, என்னோட ஒரே மகனை இப்படிப் பயித்தியமா ஆக்கி வெச்சதே உங்க அப்பாவும் அம்மாவும்தானே...” - சீறினாள்.

சீறலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தாள்.

“பாட்டித் தாத்தா பாசத்துக்காக அவங்ககிட்டே விட்டு வெச்சது தப்பாப் போச்சு. ‘கே ஜி’ லேந்து என் கூடவே வெச்சிட்டிருந்திருக்கணும். அவங்களை நம்பி விட்டேன். குடி கெடுத்துட்டாங்க. மகனை இப்படிப் பயித்தியமாக்கிட்டாங்க. குடி முழுகினதுக்கு அப்புறம் இப்போ நொந்து என்ன செய்யறதாம். எல்லாம் நான் செஞ்ச பாவம். அனுபவிக்கிறேன்...”

“............................” – வாய்க்கு வந்தபடி பேசிய அம்மாவை முறைத்தான் ராஜ்குமார்.

‘பாட்டித் தாத்தா என்னை நல்லாத்தான் வளத்தாங்க. நீதான் என்னை குட்டிச்சுவராக்கினது...!” - அம்மாவைக் குற்றம் சாட்டியது அவன் வெறுப்புப் பார்வை.

***

கவுன்சிலர் பிழைப்பு மிகவும் சிரமமானது.

கத்திமேல் நடப்பதைப் போல நடக்க வேண்டும்.

எந்தக் கிளையண்ட், எப்படி பிஹேவ் செய்வார்கள் என்பதை அனுமானிக்கவே முடியாது.

மனநோயாளிகள், சுய உணர்வோடு பேசுவதில்லை.

வாழ்க்கைப் போராட்டத்தில் சமநிலையை எட்ட முடியாத நிலையில், மன அழுத்தம் அதிகமாகி எப்படிவேண்டுமானும் வினையாற்றிவிடுவார்கள்.

கவனமாகக் கையாளவேண்டும்.

இதுதான் கவுன்சிலின் சைக்காலஜி படிப்போர்க்குப்  பால பாடம்.

வெறும் பேச்சோடு மட்டுமில்லலாம் சில நேரங்களில் கையில் கிடைத்ததை எடுத்து வீசும் மனிதர்களும் உண்டு என்பதால் கவுன்சிலிங் அறையை அதெற்கெல்லாம் வாய்ப்புத் தராமல் அமைத்துக் கொள்வார்கள் அனுபவமிக்க மன நல ஆலோசகர்கள்.

***

மூளையின் ரசாயன மாற்றத்தால், அதாவது ‘டோபாமின்’ மிகுதியால் மனம் சிதைகிறது என்பது அறிவியல் கூறும் உண்மை.

சமூக நோக்கில் பார்த்தால் குடும்ப, சமூக, உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள்தான் பெரும்பாலும் மனச்சிதைவு நோய்க்குக் காரணமாகிறது.

இதுதான் யதார்த்தம்.

***

குறிப்பாகப் பள்ளி மாணவர்களின் சீரழிவுக்குப் பெற்றோர், பாதுகாவலர்களின் அளவுக்கு மீறிய கண்காணிப்பும், கண்டிப்புமே பிரதானக் காரணமாக அமைந்துவிடுகிறது.

பொதுவாக இது வரட்டு கௌரவத்தில் மூழ்கிக்கிடக்கும் மேல் தட்டுக் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. 

தான், தன் குடும்பம் என்கிற பொஸசிவ்னெஸ்; நாங்க ராயல் ஃபேமிலியாக்கும் என்ற சுப்பீரியாரிடி... இதையெல்லாம் பிஞ்சு உள்ளத்தில் திணிக்கும்போது, பதின்ம வயதினர், பழுதாகிவிடுகிறார்கள் எனைபதை தன் பழுத்த அனுபவத்தில்  நன்கு உணர்ந்தவர் கவுன்சிலர் வரதராஜன்.

கண்முன் காணும், சூழ்நிலையைப் பாத்தபோது, ‘ராஜ்குமாரை ஓரிரு சிட்டிங்களில் சரிசெய்துவிடலாம்...!’ என்று தோன்றியது.

அதோடு, 'அதிக சிட்டிங் எடுத்துக் கவுன்சிலிங் செய்யப்பட வேண்டியது இந்தப்  பெற்றோர்களுக்குத்தான் என்பதும் புரிந்தது அவருக்கு.

***

 ‘சிக்கலான கேஸ்தான்.

‘தயிருக்காகப் பானையைக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம்’.

‘பாட்டியும் தாத்தாவும் நிச்சயமாக நன்றாகத்தான் வளர்த்திருப்பார்கள்.’ - என்று தோன்றியது கவுன்சிலருக்கு.

“ சரிம்மா.! நீங்க ரெண்டு பேரும் வெளீல இருங்க. தம்பி கிட்டே பேசுறேன்..”

“இப்பத் தெரியுதா? இப்படி நான் இப்படி மானாங்கானியாப் பேசலைன்னா வேலை நடந்திருக்குமா?” - வெளியே எழுந்து போகும்போது, பலமாகப் பேசினாள் தாய்.

கவுன்சிலரின் ஸ்டாடஜி எனபது தெரியாமல், ஏதோ தன்னுடைய அதட்டலாலும், கத்தலாலும்தான் மகனுக்குக் கவுன்சிலிங் நடப்பதைப் போல மந்தகாசமாக முகத்தை வைத்துக் கொண்டு வெளியே போனார்கள் பெற்றோர்கள்.

***

ராஜ்குமாரின் அப்பாவும் அம்மாவும் சென்னையில் வேலை பார்க்கிறார்கள்.

அவர்களின் ஒரே மகனான ராஜ்குமாரை, கிராமத்துப் பள்ளியில் சேர்த்து மிகவும் பாசமாகத்தான் பார்த்துக் கொண்டார்கள் பாட்டியும் தாத்தாவும்.

       நான்காம் வகுப்பு வரை ராஜ்குமார் படிப்பு, விளையாட்டு, மற்ற மற்றக் கல்வி இணைச் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் சுட்டியாகத்தான் இருந்திருக்கிறான்.

பால் வேறுபாடுகள் எல்லாம் தெரியாத பருவம் அல்லவா அது.

அதுவும் கிராமங்களில் ஆண் பெண் பாகுபாடின்றி, கல்லாங்காய், தாயக்கட்டை, நொண்டி, பாண்டி என்று கலந்து கட்டித்தான் விளையாடுவார்கள்.

***

ஒரு நாள் பக்கத்து வீட்டு ராகஸ்ரீ, ராகவி ஆகிய இரட்டையர்களோடு, கூடத்தில் உட்கார்ந்து பரம பதம் விளையாடிக் கொண்டிருந்தான் ராஜ்குமார்.

இடி இறங்கியது போல, அவன் முதுகில் ‘படா’ரென்று ஒரு விழுந்தது ஒரு அடி.

சுதாரித்துக் கொண்டுத் திரும்பிப் பார்த்தான் ராஜ்குமார்.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த அம்மாவும் அப்பாவும் பின்னால் நின்றார்கள்.

அம்மாவின் கண்களில் பொறி பறந்தது.

***

அவனை அடித்த அடியில் ராகஸ்ரீயும், ராகவியும் ஓட்டமாய் ஓடிவிட்டார்கள்.

அம்மா சந்நதம் வந்ததைப் போலக் கத்தினாள்.

வயதுக்குக் கூட மரியாதை தராமல், பாட்டியையும் தாத்தாவையும் ஏகமாய்ப் பேசினாள்.

வயதான தாத்தாவும் பாட்டியும், தலைக் குனிந்து நின்று கண்ணீர் விட்டதைச் சொன்னபோது அழுதேவிட்டான் ராஜ்குமார்.

***

பாட்டி, தாத்தா கண்ணிலேயேக் காட்டாமல் அவர்களை ஏங்கி இளைக்கவைத்து, ராஜ்குமாரை நகரத்துச் சூழலிலேயே வைத்திருந்த அம்மாவின் தன்முனைப்பைச் சொல்லும்போது கொலை வெறி தெரிந்தது ராஜ்குமாரின் முகத்தில்.

நகரத்தில் பெயரும் புகழும் பெற்ற பள்ளியில், லட்சக் கணக்கில் டொனேஷன் கொடுத்துப், நிறையப் பணம் கட்டி அட்மிஷன் போட்டாள். கிராமத்துப் பள்ளியில் மிகவும் புத்திசாலி எனப் பெயர் பெற்ற ராஜ்குமார், நகரத்துப் பள்ளியில் சுமாராகத்தான் படித்தான்.

பள்ளிச் செயல்முறைகளில் பின்னடைவைச் சந்தித்தான்.

மருட்சி, எரிச்சல், தன்முனைப்புக் குறைவு, தூங்குவதில் பிரச்சனை, நண்பர்களிடமிருந்தும், குடும்பத்தினரிடமிருந்தும் விலகல்... இப்படிப் பல்முனைத்தாக்குதல்களில் திணறினான் ராஜ்குமார்.

***

மைக்ரா மேனேஜ்மெண்ட் செய்ய ஆரம்பித்தாள் அம்மா.

தினம் தினம் புத்தகப்பையைக் கொட்டிச் சோதித்தாள்.

“அங்கே ஏன் நின்னே?”

“இங்கே ஏன் போனே?”

ஏன் லேட்டு?”

இப்படி ஏதேனும் தூண்டித் துருவிக் (Probing questions) கேள்வி கேட்டு எரிச்சலூட்டுதல் வாடிக்கையானது.

***

முதலில் உண்மையான காரணங்களைத்தான் சொல்லியிருக்கிறான் ராஜ்குமார்.

உண்மையானக் காரணங்களையும், அவனது செயல்களையும் சந்தேகப்பட்டு,  மீளாய்வு செய்து, “ இப்படிச் செஞ்சிருக்கக் கூடாது, இதுமாதிரி சொல்லியிருக்கணும்...” - என்றெல்லாம் சொற்குற்றமும், பொருள் குற்றமும் கண்டு வீசப்பட்டக் கடுமையாக குறுக்குக் கேள்விகளால் குழப்பமானான் அவன்.

“அம்மா... நீ சொன்னா மாதிரிதான் சொன்னேன்.”

சமாளிக்கத் தொடங்கினான்.

சமாளிப்பதற்காகச் பொய் சொல்லத் தொடங்கி, நாளாவட்டத்தில், பொய் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்ட ராஜ்குமார், பொய் சொல்வதில் நிபுணன் ஆகிவிட்டான்.

***

ராஜ்குமார் சொன்ன பொய்களை, உண்மை என நம்பிப் பள்ளியில் போய் ஆசிரியர்களை விசாரிக்கும்போது, அப்படி ஏதும் நடக்கவேயில்லை என்பதை அறிந்தார்கள்.

ராஜ்குமாரின் பொய்யும் புரட்டும் அம்பலமானது.

பள்ளியில் அவன் பேர் ரிப்பேரானது.

‘பிக் அப் ஆகி விடும்...’ - என்று ஒவ்வோர் ஆண்டாகத் தள்ளித் தள்ளி இப்போது பள்ளியிறுதிக்கு வந்துவிட்டான் ராஜ்குமார்.

பிரச்சனைகள் அதிகமானதால், அவன் மனநலத்தைக் காக்க ட்ரீட்மெண்ட், கவுன்சிலிங் என்றெல்லாம் செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது.

***

பள்ளியில் , நண்பர்களுக்கு மத்தியில், பெற்றோர்களிடத்தில், அக்கம்பக்கத்தில் என அனைத்து இடங்களிலும் மதிப்பை இழந்துவிட்டபின், இழந்த மதிப்பீடுகளை மீட்டுக் கொணர முடியாமல் தவித்த தவிப்பையும், சங்கடங்களையும் ராஜ்குமார் சொன்னபோது, ஒரு புது அனுபவமேக் கிடைத்தது கவுன்சிலர் வரதராஜனுக்கு.

கவுன்சிலரின் அப்ரோச் பிடித்துப்போனதால், உள்ளத்தில் உள்ளதை உடைத்துச் சொல்லிப் பகிர்ந்துகொண்டதால் ராஜ்குமாருக்கு மனசு லேசானது.

பள்ளி இறுதிப் படிக்கும் அவனுக்குப் பொறுப்புகளையும் கடமைகளையும் புரிய வைத்தார் வரதராஜன்.

அதுமட்டுமில்லலாமல், எதிர்காலத்தில் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளும் வழங்கினார்.

***

ராஜ்குமாரை வெளியில் அமரச் சொல்லிவிட்டு, பெற்றோர்களிடம் பேசினார்.

நடத்தை மாற்று ஆலோசனை;

சிந்தனை மாற்று ஆலோசனை;

கலைவழி ஆலோசனை;

நாடகவழி ஆலோசனை ;

தொழில்வழி ஆலோசனை

இப்படிப் பலவிதமான ஆலோசனை முறைகளில் இவர்கள் பிரச்சனைக்குப் பொருத்தமானவைகளை வைத்து கவுன்சிலிங் நடத்தினார்.

***

நான்கைந்து சிட்டிங்களில் ராஜ்குமாரும், பத்து பதினைந்து சிட்டிங்களுக்களில், பெற்றோர்களும் ஓரளவு சமநிலைக்கு வந்து விட்டனர்.

அதன் பிறகு குடும்ப வழி ஆலோசனை என்கிற Family Therapy’ ஐ பாட்டி தாத்தா உட்பட அனைவரையும் வரவழைத்து நடத்தினார்.

குடும்ப ஒருங்கிணைப்பு உறுதியாகும் வரை கவுன்சிலிங் தொடர்ந்தது.

***

 “இறுதியாக,  இது மன நோயே அல்ல என்றும், ஆளாளுக்கு, அதீதமான அன்பின் வெளிப்பாட்டால் ராஜ்குமாருக்கு ஏற்படுத்தப்பட்டக் குழப்பம்தான் இது என்றும், அதன் பொருட்டு, மனசு பாதிக்கத் தொடங்கிய நிலையில் ஏற்பட்ட ‘மனச் சலனம்’தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். இதை வளரவிட்டிருந்தால் நிச்சயம் மனநோயாகத்தான் மாறியிருக்கும் என்பதையும் . குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கினார் வரதராஜன்.

***

உடலில் ஏதாவது சின்னக் கோளாறு என்றால், மருத்துவரைப் பார்ப்பதைப் போலவே, நடவடிக்கைகளில், செயல்பாடுகளில், பழக்கவழக்கங்களில், உறவு முறைகளில், மனோபாவங்களில், ஏதாவது மாறுதல் தெரிந்தால், உடனடியாக மனநலமருத்துவரை அணுகத் தயங்கக் கூடாது என்பதையும் உணரவைத்தார் கவுன்சிலர்.

குடும்ப உறுபினர்கள் அனைவரின் உள்ளத்திலும் இருந்த பனிக்கட்டிகள் உடைபட்டன ( Breaking the ice ).

உடைந்துக் கிடந்தக் குடும்பம் ஒன்று சேர்ந்தது.

சிதைந்துகிடந்த மனங்கள் சீராகின.

புயல் அடங்கித் தென்றல் தவழ்ந்தது வீட்டில்.

***

 “சார் உங்களை உள்ளே வரச் சொன்னாரு..” -  கல்யாணப் பத்திரிகையை கொடுத்தனுப்பிவிட்டு, சைக்காலஜிஸ்ட்டின் அழைப்புக்காக ரிஸப்ஷனில் அமர்ந்திருந்த ராஜ்குமாரின் பெற்றோர்களைப் பார்த்துச் சொன்னார் கவுன்சிலரின் உதவியார்.

ராஜ்குமாரின் கல்யாணப் பத்திரிகையை பார்த்தபடியே, எதிரே நின்ற தம்பதியரிடம் “அவசியம் வந்துடறேன்” என்றார் கவுன்சிலர் வரதராஜன்.

பெற்றோர்களின் கண்கள் பனித்தன.

இது ஆனந்தக் கண்ணீர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



    

Comments

  1. Cause and effect அடிப்படையில் பார்த்தால் நம் வாழ்வின் எல்லாவிதமான சறுக்கல்களுக்கும் காரணம் நாமாகவே இருப்போம். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை சைக்காலிக்கலான விவரிப்புடன் எழுதப்பட்ட கதை.

    ReplyDelete
  2. அருமை ஐயா! மன சிதைவு பற்றி அதிகம் அறிந்து கொள்ளாத எனக்கு புரியும் படி இருக்கிறது மனச்சிதைவு' சிறுகதை. நன்றி
    தமி தரணி, எழுத்தாளர், சென்னை.

    ReplyDelete
  3. மனச்சிதைவு கதை படித்தேன். நீங்கள் மன நல ஆலோசகர் என்பதை எல்லா வரிகளிலும் நிரூபிக்கிறீர்கள். மனிதர்களுள் என்ன வகையான ஆளுமைகள் உள்ளன என்ற விபரங்கள் அருமை. நன்று வாழ்த்துக்கள்.
    இளவல் ஹரிஹரன். எழுத்தாளர், சென்னை.

    ReplyDelete
  4. மனச் சிதைவு சிறுகதையை வாசித்தேன். கற்பித்தலில் இதுவும் உண்டா ஐயா? இவ்வளவு விவரமாக எழுதியுள்ளீர்களே எப்படி? மனநல மருத்துவர், கவுன்சிலிங் ஆலோசகர் போன்று தாய், தந்தை, மகன் என்று ஒவ்வொருவரைப் பற்றியும் சலிப்பு தட்டாமல் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.தங்களின் பன்முகத் திறமையை வெளிப்படுத்திய அருமையான சிறுகதை.பாராட்டுகள்.நல் வாழ்த்துகள்! 🌸💐🪷🌺🌹 அன்புடன் மயிலாடுதுறை ராஜசேகர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை