கலியன் மதவு பற்றி டெல்லி ஹரிகோபி அவர்களின் விமரிசம்
கலியன் மதவு நாவல் பற்றி மூத்த எழுத்தாளர் திரு டெல்லி ஹரிகோபி சார் அவர்கள்
திரு ஹரிகோபி
அவர்கள்,
மத்திய
ஆயுத காவல்படையிலிருந்து ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி , புதுடெல்லி
அத்தியாயம்-1
கலியன்
மதவு நாவல் முதல் அத்தியாயமே நல்ல விறுவிறுப்புடன் நகர்கிறது. முதல் அத்தியாயத்தின்
ஹைலைட்டான அகிலாண்டக் கிழவியின் ஆளுமையை சிறுசிறு சம்பவங்களால் இணைத்து கண்முன்னே கொண்டு
வந்திருப்பதும், வட்டார வழக்கிலேயே கதாபாத்திரங்களை பேச வைத்திருப்பதும் வாசகனை சம்பவ
இடத்துக்கே அழைத்துச் சென்று கதையோடு ஒன்றச் செய்து விடுகிறது. படித்து முடித்தபின்னும்,
அந்த கிராம சூழ்நிலையிலிருந்து வெளியே வர வெகு நேரமாகிறது, இது கதாசிரியரின் வெற்றி.
அத்தியாயம்-2
‘ஒவ்வொரு
பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம்.
கன்றுகளும் குழந்தைகள்தான். ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள்
அதைப் பார்த்து ஏங்கக்கூடாது...’ என்று நினைப்பவர் அவர். ‘ஒவ்வொரு பசுவையும் தனிக்
கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம். கன்றுகளும்
குழந்தைகள்தான். ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து
ஏங்கக்கூடாது...’ என்ற வரிகளின் மூலம் மாதய்யாவின் தயையும், அவர் வாயில்லா ஜீவன்களையும்
தம் மக்கள் என்றே எண்ணுவது அவரது உயர்ந்த குணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
கிராமிய நடையிலேயே கதையை நகர்த்துவது படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது
அத்தியாயம்-3
தொப்ளான் என்ற மனிதரை
தெய்வ நிலைக்கு உயர்த்திய மாதய்யாவின் சிந்தனைகள் மனதை நெகிழ வைக்கிறது. மரணத்திற்கு
பின் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாய சாங்கியங்களை விரிவாகவும் ஊடே பெரும்பாலான
கிராமங்களில் இப்போதும் அனுபவித்து வரும் வழிப்பிரச்சினையையும் கண்முன்னே கொண்டு
வந்தது.
அத்தியாயம்-4
மாதய்யாவின்
மனதை உறுத்திக்கொண்டிருந்த புடல்கொல்லை ரகசியத்தின் விடை கிடைத்ததும் முன்பை விட
அதிகமாக சஞ்சலம் அடையத் தொடங்கிவிட்டார்.
இடையிடையே
ஊடாடும் மகனைப் பற்றிய நினைவுகளும் அதை விட அதிகமாக மண்ணின் மகத்துவம் அறியாமல் தொலைதூரத்தில்
வேலை செய்யும் மகன் மீது கொண்டுள்ள கோபத்தையும் நன்கு உணரமுடிகிறது.
அத்தியாயம்-5
மாதய்யாவின்
மனைவி குந்தாலம்மாவை சிலாகித்து ஒரு லக்ஷ்மிகரமான உணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள். மகன்
தொலைவில் இருந்தாலும் அவன்மேல் உள்ள பரிவை தனது வாக்குகளாலும், செயல்களாலும் அடிக்கடி
நினைவு கூர்வது தாய்மைக்கே உரிய குணமாகும்
ராமுவுக்கும்
சாவித்திரிக்கும் உண்டான காதலின் நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் இந்த அத்தியாயத்தில்
அலசியிருக்கிறீர்கள். அமரர் தேஜ் அவர்களின் சித்திரங்கள் பிரமைக்க வைப்பதோடல்லாமல்
கதைக் களத்தை கண்முன்னை நிழலாடவிடுகிறது
அத்தியாயம்-6
ராமு-சாவித்திரி
காதல் வெளியுலகிற்கு தெரியவந்ததும் நாவல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து என்ன
என்ற ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது.
கதையின் நடையையும்,
சம்பவங்களின் சீரான கட்டமைப்பையும் பார்க்கும்போது ஒரு கைதேர்ந்த எழுத்தாளரின் படைப்பை
அனுபவித்து படிக்கும் சுகம் ஏற்படுகிறது
அக்கிரகாரத்தின்
பழக்க வழக்கங்களை மீண்டும் படிக்கும்போது பழைய கால நினைவுகள் கண்முன்னே வந்து போகின்றன.
கதையின் இடையிடைய காட்டப்படும் ஆங்கில நாவல்களின் மேற்கோள்கள், கதை ஓட்டத்தை குறைப்பதாக
எனக்குப் படுகிறது. படிக்கும் வாசகர்கள் அனைவரும் ஆங்கில நூல்களை படித்திருந்தால் மட்டுமே
அதில் லயிக்க முடியும்.
சில விஸ்தாரணமான வர்ணனைகளையும் தவிர்க்கலாம். நான் கூறிய இந்த குறிப்புகள்
எல்லாம் முதல் சில அத்தியாயங்களில்தான் காணமுடிந்தது. ஆறாவது அத்தியாயம் இந்த குறைகள்
ஏதுமின்றி To the Point ஆக இருப்பதைப் பார்க்கும்போது இதை நீங்களும் உணர்ந்து அவைகளை
களைந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்த நாவல் முடிந்தவுடன் புத்தகமாக பிரசுரிக்க வேண்டும். உங்களை சிறந்த
நாவலாசிரயராக அடையாளம் காட்டக்கூடிய எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு நல்ல சமூக நாவல்
இதுவாக இருக்கும்.
ஜூனியர்
தேஜ் சார், ராமுவும் சாவித்திரியும் காவிரியில் மூழ்கினாலும், அவர்கள் இறந்திருக்க
மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்.
ஹரிகோபி, புதுடெல்லி
அத்தியாயம் - 7
வீரமுத்துவின்
அட்டூழியங்களுக்கு இராணுவ மிடுக்கோடு மாதய்யா கொடுத்த மிரட்டல் சபாஷ் ரகம்
அத்தியாயம்-8
ராமு-சாவித்திரியின்
அவசரமான முடிவு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. நிகழப்போகும் பின்விளைவுகளை எண்ணி
மனம் பதைபதைக்கிறது
அத்தியாயம்-9
இறுதி
ஊர்வலத்திற்காக தனது காணியையே தியாகம் செய்த மாதய்யாவின் செயல் மூட நம்பிக்கைகளை வேறோடு
அறுத்தெறியும் புரட்சிகரமான செயல்.
மாதய்யாவின் வயல் அறுப்பு
நிகழ்வுகள் எங்களை அந்த கிராமங்களுக்கே நேரடியாக கொண்டு சென்றதைப் போல உணரவைத்தது.
அத்தியாயம்-10
அறுவடைக்குப்
பிறகு தானியத்தை சேமித்துவைக்கும் முறைகளையும், பழக்கவழக்கங்களையும் ரசித்து விளக்கியிருக்கிறார்
கதாசிரியர். நகரங்களில் வாழும் எங்களுக்கு இது புதுசு.
அத்தியாயம் - 11
ப்ளாஷ்பேக்காக
துரை ராமனின் பால்ய காலத்தையும், தந்தை மகனுக்கு இடையிலான மன விரிசலின் சம்பவத் தொகுப்புகள்,
மாதய்யா-அருணகிரியின் நட்பின் ஆழத்தையும் சிறுசிறு சம்பவங்கள் மூலம் அருமையான நடையில்
தந்திருக்கிறார் ஆசிரியர் திரு ஜூனியர் தேஜ்.
கிராம வீடுகளை செப்பனிடும்
பணிகளை மிகவும் ரசித்து விளக்கியிருக்கிறார்.
அத்தியாயம் - 12
சொத்து
விஷயத்தில் துரைராமனுக்கு இருக்கும் அறைகுறை விவரங்களால் ஏற்படும் வாக்குத் தர்க்கங்களை
சம்மட்டியால் அடித்து நேர் செய்ததைப்போல குந்தலாம்பாள் ஒரு தேர்ந்த வக்கீலின் மிடுக்கோடு
வாதங்களை எடுத்து வைப்பது சபாஷ் ரகம்.
கிராம பழக்க வழக்கங்கள்,
கால்நடைகளை அரவணைப்போடு குடும்ப உறுப்பினராக எண்ணும் மனநிலை, வயலில் வேலைபார்ப்பவர்களை
உடன்பிறந்தவர்களாக நினைக்கும் அணுகுமுறை இவை எல்லாம் ஆழ்மனதில் பதியும் வண்ணம் கதாசிரியர்
திரு ஜூனியர் தேஜ் அவர்கள் அழகாக கூறியுள்ளார்
அத்தியாயம் - 13
வீடிழந்தவர்களுக்கு
தனது நிலத்திலேய வீடு அமைத்து சாசனம் செய்து தருவதாக கூறும் மாதய்யாவின் தாராள குணம்
மகான்களுக்கு மட்டுமே உரியதாகும். மாதய்யாவை தெய்வத்திற்கு இணையாக கருத வைக்கும் நிகழ்வு
இது.
அத்தியாயம் - 14
மாதய்யாவின்
ஆன்மிக ஈடுபாட்டையும் ஓரிரு சம்பவங்கள் மூலம் விவரித்திருப்பது சிறப்பு. ஊர்த் திருவிழாவினை
மிகவும் விரிவாக கண்முன்னே கொணர்ந்தது ரம்மியமாக அதனுடன் ஒன்றி அருள் பெற முடிந்தது
அத்தியாயம் - 15
மாதய்யாவின்
அந்திம நிமிடங்கள் மனதை கனக்க வைத்தது. ஒரு சகாப்தம் ஆடி அடங்கிய வேதனை. கிராம மக்களின்
நண்பனாய், மகனாய், சகோதரனாய், தந்தையாய், உறவினனாய் வாழ்வாங்கு வாழ்ந்த மனித நேயம்
மிக்க மகாத்மாவாய் எல்லோர் மனங்களிலும் நிறைந்து மறைந்த மாமனிதராய் இருந்த மாதய்யா
இன்று இறைவனுக்கு வேண்டியவராய் ஐக்கியமாகிவிட்ட தருணம். மற்ற எல்லாரையும் விட மாதய்யாவின்
நிழலாய் இருந்த கலியனுக்கு இது ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு.
அத்தியாயம் - 16
கணவனின்
ஈமக்கிரியைகள் எவ்வாறு நடக்க வேண்டம் என்று குந்தலாம்பாய் உறுதியோடு ஆணையிடும் சம்பவம்
அவரை பாரதியாரின் புதுமைப் பெண்ணாக எண்ணத் தோன்றுகிறது. துக்கம் ஒரு புறம் இருந்தாலும்
ஆகவேண்டிய காரியங்களை கம்பீரத்தோடு முன்னின்று நடத்தும் அவரது துணிச்சல் பாராட்டத்
தகுந்தது.
அத்தியாயம் - 17
குந்தலாம்பாவின் மூத்த
சகோதரி புஷ்பாவிற்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை எண்ணிக் குமுறுவதும், அத்தகைய நிலை
தனக்கு வரக்கூடாது என்று தீர்க்கமாக எதிர்ப்பதும், பெண்ணினத்திற்கு முன்மாதிரியாயும்,
வருங்காலப் பெண்களின் வழிகாட்டியாகவும் நிற்பதாக காட்டியிருப்பது கதாசிரியர் திரு ஜூனியர்
தேஜ் அவர்களின் புரட்சி சிந்தனையைக் காட்டுகிறது.
அத்தியாயம் - 18
கணவனின் நிறேவேறாத கனவுகளை
கலியன் துணையோடு அவனை ஒரு குடும்பங்கமாக எண்ணி முன் நின்று நடத்த முற்படுவது அவரது
நிர்வாகத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் ஓர் அம்சமே
இது. மேற்பார்வையோடு நிற்காமல் குந்தலாம்பாள் வயலில் இறங்கி வேலை பார்த்தது அவருள்
உள்ள ஒரு சமத்துவவாதியை கதாசிரியர் வெளிக்கொணர்ந்துள்ளார். குந்தலாம்பாள் அய்யாம்மாவாக
பரிமளித்து வேலையாட்களுடன் சகோதரத்துவத்தோடு வேலைவாங்கும் பாங்கு இவை எல்லாம்
She is not only a Boss, she is also a good administrator என்று உணரவைத்தது.
அத்தியாயம் - 19
நிலபுலன்களின் மீதுள்ள
துரை ராமனின் எதிர்மறையான கண்ணோட்டத்தையும், அவனது வியாபார மூளையில் தோன்றப் போகும்
எண்ணங்களையும் கோடிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.
அத்தியாயம் - 20
துரையின் புதிய வியாபாரத்தின்
வீரியம் ஒரு சில நாட்களிலேயே வெளுக்கத் தொடங்கி தான் தவறான வழியில் செல்கிறோமோ என்ற
ஐயத்தின் விதையை மெல்ல விதைக்கத் தொடங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது
அத்தியாயம் - 21
திடீர் வெள்ளப் பெருக்கால்
விளையும் நஷ்டங்கள், கஷ்டங்கள் துரை ராமனுக்கு பாடம் புகட்டிவிட்டது. கிட்டாவய்யாவின்
சுயரூபத்தை மெல்லமெல்ல உணரத் தொடங்கியதும், கலியன் பால் ஈர்க்கப்படும் துரை ராமனின்
மன ஓட்டம் நன்கு காட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் - 22
மாதய்யாவின் பழைய நினைவுகளை
கிளறிவிட்டதால், அவரின் மறைவு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தினுள், மாதய்யாவுடன்
நாமும் பயணிக்கிறோம்.
அத்தியாயம் - 23
அகிலாண்டக் கிழவியின் திருத்தப்பட்ட
அறிவுறுத்தலின்படி மாதய்யாவின் சேஷிப்புகளை கலியன் தாயத்தாக கட்டிக்கொண்டது கண்களை
பனிக்கச் செய்தது. 'அந்தக்கனம் முதல் மாதய்யாவை நெஞ்சுக்குள் மட்டுமின்றி நெஞ்சுக்கு
வெளியேயும் விசுவாசத்துடன் சுமக்கத் தொடங்கினான் கலியன்' என்ற வரிகள் நெஞ்சை கனக்க
வைத்தது
அத்தியாயம் - 24
வக்கீல் வாதிராஜனின் யதார்த்தனமான
நடைமுறை வியாக்கியானங்கள் தொய்ந்து போயிருந்த துரை ராமனை மேலும் துவண்டுபோக வைப்பதாக
கதாசிரியர் கூறுவது நூறு சதவிகிதம் சரி. சாட்சிக் காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின்
காலில் விழுவதே நலம் என்பதை மறுப்பதற்கில்லை.
அத்தியாயம் - 25
குந்தலாம்பாளின் காய் நகர்த்தல்களில்
ஒரு சாணக்கியத்தனத்தை காண முடிகிறது. தனது பதியின் கடைசிகால ஆசையான கலியனுக்கு நல்லது
செய்யவேண்டும் என்பதை நனவாக்க முயல்வது அவரது உதார குணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
அத்தியாயம் - 26
கலியனுக்கு நல்லது செய்யவேண்டும்
என்ற நோக்கில் குந்தலாம்பாள் சாதுர்யமாக களத்தை அமைத்துக் கொடுக்க கலியனும் அதில்
கச்சிதமாக விளையாடி எதிர்பார்த்தபடியே கோலடித்துவிட்டான்.
அத்தியாயம் - 27
கலியன்
தனக்குக் கிடைத்த காணியை பொதுச்சொத்தாக்கி தனது கிராம மக்களுக்கு செய்த நன்மை பாராட்டுக்குரியது.
பணம் படைத்தவர்கள் சுயநலம் மிக்கவர்களாகவும், ஏழைகள் பொதுநலம் பேணுபவர்களாகவும் இருப்பதால்தான்
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள்.
CONCLUSION
கலியன்
மதவு என்ற சமூக நாவலை படைத்த திரு ஜூனியர் தேஜ் அவர்களின் பல்வேறு துறைகளிலும், களங்களிலும்
அவருக்குள்ள நுண்ணறிவை கதை முழுவதும் விதைத்திருக்கிறார். ஒரே சமயத்தில் மூன்று நான்கு
நாவல்களை படித்த திருப்தி.
அத்தியாயங்கள்
நீண்டு பல்வேறு நிகழ்வுகளுக்குள் செல்வதால் படிப்பவருக்கு அயற்சியை ஏற்படுத்துகிறது.
எனவே சிறுசிறு அத்தியாயங்களாகப் பிரித்து கதையை திருத்தியமைத்து புத்தகமாக வெளியிடலாம்.
சித்திரங்களை
தானே வரைந்தும், போதிய நிழற்படங்களையும் உள்ளடக்கி ஒரு வண்ணமயமான, உணர்வுபூர்வமான,
காலத்தை வெல்லும் சமூக நாவலை படைத்த திரு ஜூனியர் தேஜ் அவர்களுக்கு எனது இதயபூர்வமான
வாழ்த்துகள்.
ஆர். ஹரிகோபி, புது டெல்லி
Comments
Post a Comment