143. மீண்ட சொர்க்கம் (காதலர் தினச் சிறப்புச் சிறுகதை)
ஜூனியர் தேஜ்
(11.02.2024 தினகரன் மகளிர் மலர் ரூபாய் 5000 /- பரிசு பெற்ற
காதலர் தினச் சிறப்புச் சிறுகதை)
“ஆராயி...!”
“என்னாங்க..!”
“நாளைக்கு
என்னா தேதி தெரியுமா? பிப்ரவரி பதினாலு...” – அமாவாசைக் கிழவரின் கண்களில் காதல் வழிந்தது.
“போதுமே...!
யாரு காதுலயாவது வுளுவப்போவுது...!” - வெட்கப்பட்டாள் ஆராயி.
“வுளுந்தாத்தான்
என்னா? பல்லு இருக்கு பக்கடாத் திங்கறோம்...!”
“...................”
– வெட்கினாள் ஆராயி.
“ஒருத்தருக்கொருத்தர்
பிரியமா இருக்கறதைத்தான் காதல்னு செல்லிக்கறானுங்க.!” - இதுதான் ‘காதல்’ என்கிற சொல்லுக்கு அமாவாசைக் கிழவரின் அகராதியில் காணப்படும்
விளக்கம்.
“எல்லா
நாளும் நமக்கு பிரியமான நாளுதான் ஆராயி. இருந்தாலும்...
அதுக்கான நாளா பிப்ரவரி 14 ‘னு வெள்ளைக்காரன் ஒதுக்கி வெச்சதை இங்கேயும் கொண்டாடறானுங்க.
நாமும் சிறப்பாக் கொண்டாடிருவோம்..” - என்று வசீகரமான சிரிப்புச் சிரித்தார் அமாவாசை.
வெட்கத்தால்
நாணிய ஆராயி, சமையல் கட்டுக்குள் புகுந்து கொண்டாள்.
-*****-
அமாவாசைக் கிழவரைப் பார்த்தால், அவருக்கு வயது
எழுபது என்று யாரும் சொல்லிவிட முடியாது. உழைத்து உழைத்து உரமேறிய உடம்பு. ஓங்கு தாங்காய்
அய்யனார் கோவில் வீரன் போல அப்படி ஒருத் தோற்றம்.
தாத்தாப்
பாட்டியோடு இருந்து உள்ளூர் பள்ளிக் கூடத்தில் படிக்கிறான் அவர்களுடைய ஒற்றைப் பேரன்.
“மவன்,
அரசாங்க உத்தியோகம் பாக்குறானாக்கும். அவன் படிச்ச இந்த அரசுப் பள்ளிக்கூடத்துல, என்
பேரனையும் சேர்த்துப் படிக்கவைக்கறேனாக்கும்...!” –பெருமிதத்தோடு அடிக்கடி அனைவரிடமும்
சொல்வார் அமாவாசை.
***
வழக்கம்போலப் பள்ளிக்கூடம் விட்டதும், வீட்டுக்கு
வந்து பாட்டிக் கொடுத்த நொருக்குத் தீனி தின்றுவிட்டு, மைதானத்துக்கு ஓடிப்போய், இரண்டு
மணி நேரம் விளையாடிவிட்டு வந்தான்.
முகம்
கை கால் கழுவியபின், கூடத்தில் உட்கார்ந்து
வீட்டுப் பாடம் எழுதிக்கொண்டு இருந்தான் அமாவாசையின் பேரன்.
“வூட்டுப்பாடம்
முடிச்சிட்டியாக் கண்ணு” - கேட்டாள் ஆராயி.
“செஞ்சிக்கிட்டே
இருக்கேன் பாட்டி”
“சோறு
தின்னுக்கிட்டேச் செய்வியாம்...”- என்று பாசமாகச் சோறு ஊட்டி விட்டாள் பேரனுக்கு.
ஒரு
வழியாக, வீட்டுப் பாடம் எழுதும் வேலை முடிந்தது. தூக்கம் சொக்கியது பேரனுக்கு.
பாய்
தலையணை எல்லாவற்றையும் கொண்டு வந்து கூடத்தில் விரித்தாள் ஆராயி.
“ஏம்
பாட்டி, நாம பெட் ரூம்ல படுக்கலையா?” - கேட்டான் பேரன்.
“இன்னிக்கு
இங்கியே படுப்போமடா..!” - ஆராயிப் பாட்டியின் சொல்லைத் தட்டவில்லைப்
பேரன்.
***
அமாவாசைக்கு
ஆராயிமேல் அப்படி ஒரு காதல். அப்படி ஒரு மோகம்.
கலியாணம்
ஆன புதிதில், ‘பொண்டாட்டி முந்தாணி பிடிச்சிச் சுத்தர பய...!’ – என்று ஊரில் எல்லோரும் சொல்வார்கள் அமாவாசையை.
“என்
பெண்டாட்டி முந்தானி புடிச்சித்தானே சுத்துறேன்...’ – என்பான் அமாவாசை. எல்லோரும் வாயடைத்துவிடுவார்கள்.
“பொண்டாட்டிங்கறவ
நம்மையே முழுமையா நம்பி வந்தவ. கடைசீ மூச்சு வரைக்கும் அவளை படம் அரவணைக்கற பொறுப்பு புருசனுக்கு
இருக்குல்ல...!” – என்பது அமாவாசையின் திடமான சித்தாந்தம்.
எந்த
இடத்திலும் ஆராயியை விட்டுக் கொடுக்கவே மாட்டார். பெண்டாட்டியிடம் பேசும்போது அப்படி
ஒரு இதம் தெரியும்.
***
வழக்கமாய், வீட்டில் வளர்க்கும் ஒற்றைப் பசுவிற்குக்
கல்லுரலில், பருத்திக் கொட்டை அரைக்க ஆராயி உட்காரும்போதெல்லாம் நடக்கும் நடைமுறைதான்
இது. “அடியே... நீயே ஏன் ஒண்டிக்கட்டையா கஷ்டப்பட்டுக்கிடக்கறே...! நானும்
வாரேன் இரு..!” – என்பார் அமாவாசை.
ஆமாம்
பெரிய மெனக்கடாக்கும் இது...! நீயெல்லாம் வாணாம்...!” –ஆராயி சிணுங்குவாள்.
ஆராயி
‘வேண்டாமென்றால்’
‘வேண்டும்!’ - என்று பொருள் கொள்வார் அமாவாசை.
கல்லுரலில்,
குழவியின் தலையில் வைத்திருக்கும் ஆராயியின் புறங்கைமேல் தன் கையைப் போடுவார்.
“இதுக்குத்தான்
ஒத்தாசை பண்ணுதேன்னு வந்தீகளோ..?” - ‘பட்’டென கையை விலக்குவதுபோலப் பாவனைதான் செய்வாள் ஆராயி.
“அட..கைய
வுடுங்க...! பேரப்புள்ள ‘பாத்துக்கீத்து’ப்புடப்
போறான்.!” - சிணுங்குவாள்.
பேரன்
பள்ளிக்கூடம் போயிருப்பதும், அவன் சாயங்காலம்தான் வருவான் என்பதும் நன்கு தெரியும்
இருவருக்கும். பருத்திக் கொட்டை மசியாமல் மாவாட்டல் தொடரும்.
எழுபதும்,
அறுபத்தைந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு , ஒருவர் கை மேல் ஒருவர் போட்டுக்கொண்டு
ஆட்டுவதாகப் பேர் பண்ணினால் பருத்திக் கொட்டை எப்படி மசியும்...? ஆராயிதான், அமாவாசையிடம்
மசிந்துவிடுவாள்.
அரைகுறையாய்
ஆட்டப்பட்டப் பருத்திக் கொட்டை கல்லுரலிலேயேக் கிடக்கும்.
இருவரும்
கை கழுவிக் கொண்டு காணாமல் போய்விடுவார்கள்.
-*****-
ஆராயி கொடுத்த ஒரு லோட்டாப் பச்சைத் தண்ணீரைப்
பானகமாய் ருசித்து அருந்திவிட்டு விடிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அமாவாசைக் கிளம்பிவிட்டார்
வயலுக்கு.
“ஆராயி. கௌம்புறேண்டீ...” மண்வெட்டித் தோளில் தொங்க,
ஒரு கையில் அரிவாளைத் தாங்கியபடிக் கிளம்பினார்.
ஓடிவந்து
குடிசைக்கு வெளியில் நின்று சகுனம் பார்த்தாள் ஆராயி.
“டமால்னு
கௌம்பு. எதுக்க யாரும் வரலை...” - என்றாள்.
-*****-
“பாட்டி! ராத்திரிக்கு கூடத்துல தான படுத்திருந்தேன்.
எப்ப என்னை பெட்ரூம்ல படுக்க வெச்சே...”
துயிலெழுந்த
பேரன் கேட்டுக் கொண்டே, ஆராயியை நோக்கி சமையல் கட்டுக்கு வந்தான்.
“தொண
தொணனு கேள்வி கேக்காம போடாலே... போயிப் பல்லு வௌக்கிட்டு சீக்கரம் வா; வயலுக்குப் போயி
தாத்தாவுக்கு வவுத்துக்குக் கொடுத்துட்டு வருவோம்...”
பேரனை
மடை மாற்றினாள் ஆராயி.
-*****-
வேடு கட்டி வைத்திருந்த, பழைய சோற்றுப்-பானை, சோற்றுப்பானையின்
கழுத்தில் அப்பியிருந்த கெட்டித் துவையல்,
சம்புடத்தில், உரித்த வெங்காயம், கையகல மாக்கல் சட்டியில், எலுமிச்சை ஊறுகாய்,
எல்லாம் இருந்த கூடையை இறக்கி வைத்தாள் ஆராயி.
பம்ப்
செட்டில் கை கால் சுத்தம் செய்து கொண்டு வந்து உட்கார்ந்தார் அமாவாசை.
வேடு
பிரித்து பழைய சோற்றில் கை விட்டுப் பிசைந்தார்.
ஒரு
வெங்காயத்தை எடுத்து ஆராயி கையில் கொடுத்துக் கடிக்கச் சொன்னார்.
சோறு
பிழிந்து ஆராயி கையில் போட்டார்.
பேரன்
வியப்பாகப் பார்த்தான்.“...................”
‘பாட்டி
சோறு பிசைஞ்சி எனக்கு ஊட்டுவாங்க, பாட்டிக்கு தாத்தா பிசையராரே...!’
“என்னடா அப்படிப் பாக்குறே... பாட்டிக்கு நான் பிசைஞ்சி
போட்டாப் பிடிக்கும்டா...!” - என்றார் தாத்தா.
-*****-
“ஐ...
தட்டாம்பூச்சி...”
- பேரன் அதைத் துரத்திக் கொண்டு
ஓடினான்.
அமாவாசை,
ஆராயியைக் கண்களால் துளைக்க , உள்ளங்கையிலும், உதட்டோரமும் சோற்றுப் பருக்கை ஒளிர,
வெட்கத்தில் மண் பார்த்தாள்.
அவள்
இடது கை ஆள்காட்டி விரல் தரைப் புற்களை வருடியது.
பளீரென்று
பசலை படர லஜ்ஜையானாள் ஆராயி.
ஆதாமும்
ஏவாளும் உயிர்த்தெழுந்து மீண்டும் ஈடன் தோட்டத்தில் வேலை செய்வதைக் கேள்விப்பட்ட, சூரியன்,
அந்த
அழகைக் காண அவசரமாய் கிழக்கு வானில் தலை நீட்டினான்.
-*****-
![]() |
Comments
Post a Comment