142. சுதந்திர ஆளுமையும் சார்பு ஆளுமையும் (குணசீலத்துக் கதை)

 

சுதந்திர ஆளுமையும் சார்பு ஆளுமையும்

(Independent Personality & Dependent Personality

ஜூனியர் தேஜ்

குணசீலத்துச் சிறுகதை

விகடன் - 07.02.2024


‘திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்'. என்ற நம்மாழ்வார் வாக்குப்படி, குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்குக் கட்டுரையாய்ச் சொல்வதை விடக், கதாபாத்திரங்கள் மூலம், மனநல பாதிப்புகளையும், அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம்.

 

'மரியாதை நிமித்தம், வரவேற்புக்கோ, வழியனுப்பலுக்கோ, ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு, வருவதென்ற நடைமுறைகளையெல்லாம் அறவே விரும்பாதவர் சிவகாமிப்-பாட்டி. அதெல்லாம் நேர விரயம் வரட்டு ஜம்பம், என்பது பாட்டியின் கருத்து.

வழக்கம்போல், சிவாகாமிப் பாட்டி, வாசல் திண்ணையில் பைகளை கொண்ட வந்து வைத்தாள். வீதியில் இறங்கினாள்.

தலைக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கிக் குவித்துப், பார்த்தசாரதி-கோவில் கோபுரத்தை தரிசனம் செய்தார்.

கோபுர தரிசனத்துக்காகக் கழற்றிப் போட்டச் செருப்பை மீண்டும் மாட்டிக் கொண்டு, திண்ணையில் வைத்தப்  பைகளை எடுத்துக் கொண்டார். ஒரு ராணுவ வீராங்கணை போல மிடுக்காய் நடந்தார்.

திருவல்லிக்கேணி முத்துக்காளத்தித் தெருத் திரும்பி,  பைக்கிராஃப்ட்ஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் 25B ஏறினார். பேருந்தில் காலியாகத் தென்பட்ட ஒரே ஒரு இருக்கையில் அமர்ந்தார்.

***

நடத்துனரின் விசில் சத்தம் கேட்டுப் புறப்பட்டப் பேருந்து, படிப்படியாக வேகம் குறைந்து, மீண்டும் நின்றது. பின்புறப் படிக்கட்டருகில் அமர்ந்திருந்த நடத்துனர், உடம்பை வளைத்துத் தலையை சாய்த்து வெளியே எட்டிப் பார்த்தார்.

இடுப்பிலும், வயிற்றிலும் குழந்தைகளோடு, முன் படிக்கட்டில் ஒரு பெண் ஏறியதும், வண்டியை எடுத்தார் ஓட்டுனர். நடத்துனரும் தன் பங்குக்கு ஒரு “ரைட்... ரைட்...” சொல்லி, விசிலடித்தார்.

பேருந்தில் ஏறியப் பெண்ணின் கண்கள் மிரள மிரள விழித்தன. உட்கார இடம் தேடி அலைந்தன.  சிவகாமிப் பாட்டி, தன் இடம் விட்டு எழுந்து, அந்தக் கர்பிணியைத் தன் இடத்தில்  அமர்த்திவிட்டு, நின்றபடியேப் பயணம் தொடர்ந்தார்.

*** 

'எழும்பூர்' ரயில் நிலைய நிறுத்தத்தில் இறங்கினார் சிவகாமிப்பாட்டி. பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே இருந்த, மாடிப் படிகளில் ஏறினார்.

ஒளிரும், அறிவுப்புப் பலகையில், தான் பிரயாணம் செய்யவிருக்கும் தொடர் வண்டி இருக்கும் நடைமேடையை உறுதி செய்து கொண்டார்.  ஐந்தாவது நடைமேடையை அடைந்தார்.

நகரும் படிக்கட்டைத் தவிர்த்தார். படியிரங்கினார். படிகளின் அருகில் நின்ற பெட்டி S 10 என்று காட்டியது.

ரயில் எஞ்சின் இருக்கும் திக்கில் தன் பெட்டி நோக்கிக் 'கை லக்கேஜு'டன் 'டக் டக் கெ'ன மிடுக்காய் நடந்தார்.  

முன்பதிவில்லாதப் பெட்டிகளில் முண்டியடித்து ஏறியும்; பை, கர்ச்சிப், துண்டு, குடிநீர் குப்பி, செய்தித்தாள்  எனக் கையில் கிடைத்ததை ஜன்னல் வழியாக வைத்தும், தூக்கிப் போட்டும், இடம் பிடித்தவர்களை ஒரு பார்வையாளராகப் பார்த்தார்.

‘என் இடம், உன் இடம்...’ - எனச் சண்டைச் சச்சரவின் முடிவில் வெற்றிவாகைச் சூடியோரைக் கண்டபோது, 'வலியது வாழும்!' என்கிற 'டார்வின் கோட்பாடு’ நினைவுக்கு வந்தது.

       ***

முன்-பதிவு செய்த ரயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படாததால் நடைமேடையில் கிடந்த இருக்கைகளெல்லாம் நிரம்பி வழிந்தன. கிடைத்தவிடத்தில் உட்கார்ந்தார் சிவகாமிப் பாட்டி.

பேச்சும் சிரிப்புமாக, கலகலப்பாக இருந்தது நடைமேடை. அக்கம்-பக்கம் பேசுவோரில், பெரும்பாலோர், 'ஆன்லைன் ரிசர்வேஷன்'ல் சீனியர் சிட்டிஸன்களுக்கு ‘அப்பர்-பர்த்’தும், பதின்ம வயதினர்களுக்கு ‘லோயர்- பர்த்’ அலாட் ஆகிற அற்புதத்தைச் சொல்லிச் சொல்லிச் சிரித்துப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்..

       ***


    சிவகாமிப் பாட்டியின், அருகில் இருந்த பெண் எழுந்து அப்பால் போக, வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்த கர்பிணி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டாள்.

வயது முதிர்ந்த பாட்டி என்பதால், தன் உபாதைகளையெல்லாம் அவரிடம் சொன்னாள். காதல் திருமணம் செய்து கொண்டு இரு பக்கப் பெரியவர்களின் வெறுப்புக்கும் ஆளான அந்த கர்பிணிக்கு, ஒரு தாயாய், தாதியாய் தனக்குத் தெரிந்த அறிவுரைகளைச் சொன்னார் சிவகாமிப் பாட்டி.

***

"S2வில் ஏறினார் சிவகாமிப் பாட்டி.

இருக்கை எண்களை ஒரு முறைக்கு இருமுறைப் பார்த்துத் தன் கம்பார்ட்மெண்ட்தானா என்பதை உறுதி செய்துகொண்டு, ஜன்னலோரத்தில் அமர்ந்தார்.

பெட்டியில் இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தான் பயணிகள் இருந்தனர்.

தன் கம்பார்ட்மெண்ட், 'சைடு லோய'-ரில் 40 வயது மதிக்கத்தக்க ஹிட்லர் மீசை வைத்த ஆசாமி அமர்ந்திருந்தார். எதிர் இருக்கையில் 45 வயது மதிக்கத்தக்க லேசாக மீசை நரைத்த நபர் உட்கார்ந்திருந்தார்.

எதிர் லோயரில் அமர்ந்துள்ள பாட்டி, தங்களிடம் லோயர் பர்த் கேட்டுவிடுவாளோ என்ற பயத்தில் இரண்டு லோயர் பர்த் ஆசாமிகளுமே, தங்கள் கையிலிருந்த நாளிதழில் மூழ்கியிருப்பதைப் போலப் பாசாங்கு செய்வதாகப் பட்டது சிவகாமிப் பாட்டிக்கு.

தனக்குள் சிரித்துக் கொண்டார். 

ரயில் கிளம்புகிற  நேரத்தில், ஏறி வந்தான் ஒரு விடலைப் பையன். ‘சைடு அப்பரி’ல் முதுகுப் பையை இறக்கிவைத்தபின், அவனும் ஏறி வசதியாய் அமர்ந்தான்.

       ***

கைப்பையின் முன் அறையின் ‘சிப்’ திறந்து ‘சார்ஜர்’ எடுத்துச் செருகிக்கொண்டபின் கைப்பேசியை உயிர்ப்பித்தான்.

ரயில் ஏறும் முன் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலிருந்து, ஆன் லைன் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடத் தொடங்கினான்.

'இந்தக் கம்பார்ட்மெண்டுக்கு வரவேண்டிய மத்த ரெண்டு பேரும், தாம்பரத்தில் ஏறுவாங்களா இருக்கும்!'  - மனதில் எண்ணிக் கொண்டே, ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தவாரேப் பயணித்தார் சிவகாமிப் பாட்டி.

***

சிவகாமிப் பாட்டிக்கு 70 வயது நிறைந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அவர் சென்னைக்கு வந்து ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன.

சின்ன மகன் , சின்ன மகள்,   பெரிய மகள்   என எல்லார் வீட்டிலும் ஒரு வாரம், பத்து நாள் என மாறி மாறித் தங்கி இருந்தார்.

எழுபதாவது அகவையை, வைதீகமாக, விமரிசையாகக் கொண்டாடுவதைச் சற்றும் விரும்பாத சிவகாமி, வாரிசுகள் எல்லோரும் வற்புறுத்தியதால், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள் எல்லோரும் சூழ, சென்ற வாரம்தான் திருவல்லிக்கேணியிலிருக்கும் மூத்த மகன் இல்லத்தில், வீட்டோடு ‘பீம ரத சாந்தி’யைக் கொண்டாடினார்கள்.

***

அதற்கு மேல் நகரத்தில் இருப்புக் கொள்ளவில்லை சிவகாமிப்  பாட்டிக்கு.  கிராமத்துக்குப் போக வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டது.

“நான் ஊருக்குப் புறப்படறேன்..!”- என்றுத் தன் முடிவை அறிவித்தார். கைப்பேசியில், ஐ.ஆர்.சி.டி.சி 'ஆப்' திறந்தார்., ஆன்லைனில் தனக்கு முன்பதிவும் செய்துக் கொண்டார்.

***

 எழுபது வயதானாலும்  'அப்டேட்'டாக இருப்பவர் பாட்டி.


    பலப்பலப் பாட்டிமார்களைப் போல "அந்தக் காலத்துல...!" என்று ஒருபோதும் நீட்டி முழக்கியதில்லைப் சிவகாமிப் பாட்டி.

நிகழ்காலத்தோடு முழுக்க முழுக்க ஒத்துப் போகிறவர்.

கணினி, கைப்பேசி போன்றவைகளைத் திறமையாகக் கையாளுபவர்.

புதிதுப் புதிதாய்க் கற்றுக் கொள்ளப் பாலினமோ, வயதோ என்றும் தடையில்லையே!

‘தன் கையேத் தனக்குதவி!’ என்பதைத் திடமாக  நம்பினாலும், 'தனக்கு மட்டும்!', என்ற சுயநலமின்றி, அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் பேரன் பேத்திகளுக்குக் கூட அவ்வப்போது 'ரிசர்வேஷன்' செய்து கொடுப்பார்.

*** 

அடுத்தடுத்த வாரிசுகளுக்கு முன்-மாதிரியாக இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். யாரையும் எதிர்ப்பார்க்காமல் 'தன் காரியங்களைத் தானேச் செய்ய வேண்டும்!' - என்ற வைராக்கியமும்  துடிப்பும் உள்ளவர்.

மகன் வீடோ, மகள் வீடோ எங்குச் சென்றாலும், உள்ளே காலடி வைத்ததுமே கரண்டியைக் கையில் எடுத்துக் கொள்வார். 

'கிச்சனை'த் தனது ஆளுகைக்குக் கொண்டு வந்து விடுவார்.

"நான் இருக்கிற வரைக்கும் சமையல் பாத்துக்குறேன். நீங்க உங்க ஆபீஸ் வேலையை பாருங்க; எப்பப் பாத்தாலும் பரபரப்பா  டூட்டிக்கு  ஓடற நீங்க  ரெஸ்ட் எடுங்க.!" - என்று பாசத்தோடு சொல்பவர் பாட்டி.

       ***

தற்போதைய வாழ்க்கை முறையோடு ஒன்றி, உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் மகத்தான பாட்டி அவர். உரிமையோடு எல்லாக் காரியங்களையும் எடுத்து-கட்டிக்கொண்டுச் செய்து முடிப்பவர்.

அரைத்து வைத்தச் சாம்பாரும், ரசமும், உசிலியும், அவியலும், பொரியலுமாகப் பழைய மோஸ்தரில் பாட்டியின் கைமணத்தால்    கமகமக்கும் சமையல்.

ரசித்து ருசித்து எல்லோரும் சாப்பிடுவார்கள்.

வீட்டில் இருக்கும்   அம்மிக் கல்லுக்கும், ஆட்டுக் கல்லுக்கும் பாட்டி வந்தால் தான் வேலை.

***  

"அம்மியில் அரை. ஆட்டுக்கல்லில் மாவாட்டு.." - என்றெல்லாம் யாருக்கும் உபதேசம் செய்யும் பழக்கமெல்லாம் அறவேக் கிடையாது பாட்டியிடம் .

"அதென்ன, குளிக்காமலே உலை வைக்கிற பழக்கம்?  எங்கக் காலத்துல குளிக்காம  சமையல் கட்டு வாசப்படி கூட மிதிச்சதில்லை...; 

இதென்ன இங்கிலீஷ்காரியாட்டம், நைட்டிய மாட்டிண்டு.. சகிக்கலை;

ஒரு பூஜை உண்டா ? புனஸ்காரம் உண்டா?;

'கண்டதே காட்சி கொண்டதே கோலம்'னு இந்தக் காலப் பொம்மனாட்டிகள் இருக்கறது நன்னாவா இருக்கு.."

'மற்றமற்றப் பாட்டிமார்களைப்போல், இப்படியெல்லாம் எதற்கெடுத்தாலும் குற்றங்குறைச் சொல்வதோ ; இடித்துப் பேசுவதோ;  கடிந்துகொள்வதோ; கேட்பவர் காது புளிக்க அட்வைஸ் செய்வதோ; வம்புப் பேச்சுப் பேசுவதோ ..."  - அறவேக் கிடையாது பாட்டியிடம்.

***


    ஒவ்வொருவருக்கும் ஒரு 'சுயம்' உண்டு நம்புபவர். அனைவரையும் அவர்கள் குற்றங்குறையுடன் மதித்து ஏற்பவர்; யாருடைய வாழ்வின் தனிமையிலும், தனித்துவத்திலும், அந்தரங்கத்திலும் மூக்கை நுழைக்காதவர்.

'பரோபஹாரம் இதம் சரீரம்!' கொள்கையைச் சிக்கெனப் பிடித்தவர்.

       ***

கிராமத்து வீட்டில் தனியாகத்தான் இருக்கிறார்   சிவகாமிப் பாட்டி.

'தனியாக இருக்கிறோமே !' - என்று மனம் போனபடியெல்லாம் இருக்க மாட்டார். 'வெந்ததைத் தின்று விதி வந்தால் சாக வேண்டும் !' என்பது போன்ற எதிர்மறை எண்ணமெல்லாம் அறவேக் கிடையாது பாட்டியிடம்.

சிஸ்டமாக நடந்து கொள்வார்.

விடிகாலைத் துயிலெழுந்துவிடுவார். வீட்டுக் கொல்லையில் பூத்துக் குலுங்கும் பவளமல்லி, செம்பருத்தி, பொன்னரளி, காசித் தும்பை மலர்களையெல்லாம் கொய்து வருவார்.

குளிர்ந்த நீராடுவார், முறையாகச் சமைப்பார்.

ஸ்லோகங்கள் சொல்லி;  சுவாமி பூஜை செய்து;  நைவேத்தியம் முடித்து;  காக்கைக்கு அன்னமிட்டு;  நேரம் தவறாமல் சாப்பிடுவார்.

***

பகலில் தூங்கும் வழக்கம் அறவேக் கிடையாது பாட்டிக்கு. அப்பளம் இடுவது; வடகம் செய்வது; வற்றல் போடுவது; பருப்புப் பொடி, பிரண்டைப் பொடி, அங்காயப் பொடி என்று  பல்வேறுப் பொடிகள் இடிப்பது; விதவிதமான ஊறுகாய்கள் தயார் செய்வது; இப்படி ஆக்கபூர்வமாகப் பொழுதைப் பயன்படுத்துவார்.

 குடும்ப உறுப்பினர்களில் யார்-யாருக்கு, எது-எதுத் தேவையெனப் கைப்பேசி மூலம் கேட்டுத், தேவையானதைப் பக்குவமாகக் 'காட்டன்' அட்டைப் பெட்டிகளில் நேர்த்தியாகப் ‘பாக்’ செய்துக் கொரியர் மூலம் அனுப்பிவைப்பார்.

இப்படி,  வருடம் முழுக்கப் 'பிஸி'யாகத்தான் இருப்பார் பாட்டி. துடைத்து வைத்தக் கண்ணாடி போல், பளிச்’செனக் கிளிக் கொஞ்சும் சிவகாமிப் பாட்டியின் கிராமத்து வீடு.

***

'டிடிஆர்' தங்கள் கம்பார்ட்மெண்ட்டுக்கு வருமுன்பேச் சிவகாமிப் பாட்டி  எழுந்துப் போய் அவரிடம்   கைப் பேசியில் இருந்தத் தன் பயணச்சீட்டையும் , ஆதார் அட்டையை ஆதாரமாகவும் காட்டினார். 

'தான் அமர்ந்திருந்த 'லோயர்-பர்த்'தைக் டி.டி யிடம் காட்டிக் ஆப்ளிகேஷன் கேட்டார்.  

"  சரி, ஓகே."   என்பதைப் போல இருந்தது டிக்கெட் பரிசோதகரின் தலையசைப்பும் உடல்மொழியும்.

       ***

நன்றி சொல்லிவிட்டு, சிவகாமிப்பாட்டி, 'வெஸ்டிப்யூல்' வழியாகக் கடந்து அடுத்த பெட்டிக்குச் சென்றாள்.

S1பெட்டியில், ‘பரிசோதகர் எப்போது வருவார்?’ என்று காத்துநின்ற பெண்ணருகேச் சென்று அவளை வாஞ்சையோடுத் தோள் தொட்டு அழைத்து விவரம் சொன்னார்.

அந்தப் பெண்ணின் சுமைகளைக் கையில் எடுத்துக் கொண்டு, "என்னோட வா!" - என்று அந்த கர்ப்பிணிப் பெண்ணை S2 க்கு மெதுவாக அழைத்துச் வந்தார் பாட்டி.

***


    மிடில் பர்த்’தை தூக்கி மாட்டிவிட்டுத் 'தன்னுடைய லோயர் '  பர்த்' தில் அந்த கர்பிணியை அமர வைத்தார்.'

"மியூச்சுவல் ட்ரான்ஸ்ஃபர்'க்கு ‘டிடி’ கிட்ட சொல்லிட்டேன். படுத்துக்கோ; ஏதாவது தேவைன்னா என்னைக் கூப்பிடு!" - அந்தக் கர்பிணியிடம், ஆறுதலாகச் சொல்லிவிட்டு தன் கை 'லக்கேஜை' எடுத்துக் கொண்டு 'S1 கோச்' சென்றாள்.

***

 SRCTC , நிறை மாத கர்ப்பிணிக்காக   அலாட் செய்த 'S1 கோச்'சின் 'அப்பர் பெர்த்'தில் ஏறிய  சிவகாமிப் பாட்டி, இப்போது மனசு நிறைவாய் உணர்ந்தாள்.

‘நிறைமாதக் கர்பிணி தங்களிடம் லோயர் சீட் கேட்டுவிடுவாளோ...?’ என்ற எண்ணத்தில் அவளை தவிர்க்கத் தங்களுக்கு ‘அலாட்’ ஆன லோயர் பர்த்துகளில் மல்லாக்கப் படுத்தபடி, கண்களை மூடித், தூங்குவதுபோல் பாசாங்கு செய்த இளைஞர்கள் மூவரும், தன் லோயர் பர்த்தை கர்ப்பிணிக்குத் தந்துவிட்டு அநாயாசமாக அப்பர் பர்த்தில் ஏறியமர்ந்த,  சிவகாமிப் பாட்டியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தார்கள்.

***



Comments

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை