149 சிறிய பெருந்தகைகள் (சிறுகதை)
149. சிறிய பெருந்தகைகள்
(பரிசு பெற்ற சிறுகதை)
-ஜூனியர் தேஜ்
( கொலுசு – ஜூன் - 2024)
“ம்...!”
“வா..........ங்...கறேன்ல...!”
– தோழி, மயூரியின் குரலில் அவசரமும், பதட்டமும் தெரிந்தன.
“இதோ... வந்தேன்...!”
– என்று மயூரியின் அருகில் வந்தாள் ஜனனி.
அழைத்தபோது மயூரியிடம்
இருந்த அவசரம் சற்றே மங்கியது, நாம் செய்வது சரிதானா?, என ஒரு கன யோசிப்பில் சுருக்கிக்
கொண்ட முக ரேகைகள், சரிதான், என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் இயல்பானது.
“அவசரமா அழைச்சிட்டு,
என்னடீ யோசனை மயூரி..?”- ஜனனி இயல்பாகக் கேட்டாள்.
***
ஒளிர்ந்து கொண்டிருந்த கைப்பேசியை
ஜனனியின் கையில் திணித்தாள் – “இதப்பாரு…!” – என்று அவசரப்படுத்தினாள்.
கைப்பேசியில் இருந்த
நிழற்படத்தை இயல்பாகப் நோக்கிய, ஜனனியின் பார்வைச், சடாடெனத் தீவிரமானது. ‘அம்மா, அம்மாவேதான்...!”
உள்ளே ஒலித்தது.
பெரு மற்றும் ஆள்காட்டி
விரல் இரண்டும் அனிச்சையாய்க் குவிந்து, கைப்பேசியின் திரையை ‘விரிவு’ செய்து, அகண்டமாக்கியது.
சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகிவிட்டது. அம்மாவேதான்.
‘இவ்வளவு உரிமையோட,
இடுப்பை வளைச்சிப் பிடிச்சிக்கிட்டு, காதருகேக் குனிந்து, சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டே,
அம்மா; ‘யாரோட, எங்கேப் போவாங்களா இருக்கும்...?’ - எண்ணங்களின் பின்னணியில், ஒரு முறை
மயூரியைப் பார்த்தாள் ஜனனி.
மயூரி, தலைத் தாழ்த்திக்
கொண்டாள். ‘சாரி..!” என்றாள்.
***
மீண்டும் ஜனனியின் பார்வை,
கைப்பேசித் திரையை ஊடுறுவியது.
“யாரா இருக்கும்...?
- இன்னும் அதிகமாக ஸூம் செய்தாள். மேலும் கீழும், பக்கவாடிலும் நகர்த்தி நகர்த்திக்
கூர்ந்தாய்வு செய்தாள்.
ஸ்கூட்டர் வேகமாகச்
சென்றபோது எடுக்கப்பட்ட ஸ்நாப் என்பதால், அலைப் பாய்ந்தாற்போலப் பதிவான பிம்பத்தில்.
ஸ்கூட்டரின் பதிவு எண் சரியாகத் தெரியவில்லை. வாகனத்தின் வண்ணத்தையும் வடிவத்தையும்
பார்த்தபின், ‘அந்த இருசக்கர வாகனத்தை எங்கோ நெருக்கமாகப் பார்த்த நினைவு மட்டும் அவளுள்
சுற்றிச் சுற்றி வந்தது.
‘ யார் வண்டி?’ - என்பதைத்
தீவிரமாக யோசித்தது ஜனனியின் மனம்.
‘யாரா இருக்கும்?’
– அம்மாவை அழைத்துச் செல்லும், ஆசாமியைப் பற்றியும், மனது தொடர்ந்து வினா எழுப்பிக்கொண்டே
இருந்தன. மூளையின் செல்கள், தீவிரமாகச் செயல்பட்டன.
***
“ஜனனி...
சாரிடி... உன் மனசை கஷ்டப்படுத்திட்டேனா..?”- தலை தாழ்த்தியபடி வருத்தப் பட்டாள் தோழி.
“சே...ச்சே.. அதெல்லாம்
இல்ல மயூரி, எங்கே எடுத்தே இந்த ஃபோட்டோ..?”
“தற்செயலா எடுத்த போட்டோ
இல்லை ஜனனி. இவங்களை ஜோடியா, ஸ்டார் ஓட்டல் தேஜாஸ்’ வளாகத்துல ரெண்டு மூணுவாட்டி, இந்த
ஒரு வாரத்துலயேப் பாத்துட்டேன்.
“என்ன சொல்றே மயூரி...?”
“ஆமாம் ஜனனி, மொதல்ல
உங்க உறவுக்காரங்க யாரேனும் இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா, அந்த ஆம்பளையோட, பிகேவியர்,
பாடி-லேங்வேஜ், இரண்டு பேரோட நெருக்கம், தொடுகை, இதையெல்லாம் வெச்சிப் பார்த்தப்போ,
ஏதோ தப்பாப் பட்டுது ஜனனி. என்னை மன்னிச்சுரு ப்ளீஸ். ஒரு நல்ல ஃப்ரெண்ட்டா உன்கிட்டே
பழகறதுனால, கண்டும் காணாமப் போகத் தோணலை. அதான் ஸ்நாப் எடுத்துட்டேன்…!”
“மயூரி, நான் உன்னைத்
தப்பா எடுத்துக்கலை. நீ சந்தேகப்படறது சரிதான்னு படுது. என் அம்மா முகத்துல சந்தோஷம்,
கண்ல காதல், உடம்புல ஒரு சிலிர்ப்பு எல்லாம் தெரியுது பாரு...!” – க்ளோஸப்பில் அம்மாவின்
முகத்தைக் காட்டிச் சொன்னாள் ஜனனி.
இதையெல்லாம் நேரிலேயேப்
பார்த்திருந்த மயூரி தலையைக் குனிந்தபடி நின்றாள்.
“எனக்கு ஃபார்வேர்டு
பண்ணிக்கறேன் மயூரி…” - என்று அனுமதிப் பெற்று, அதை தன் வாட்ஸ் ஆப் க்கு கடத்தினாள்
ஜனனி.
***
ஜனனி, இளநிலை உளவியல்,
இறுதி ஆண்டு படிக்கும் மாணவி.
வகுப்பில் அமர்ந்திருந்தாளேத்
தவிர, மனசு முழுவதும், அம்மாவை மயக்கி. அவள் தாம்பத்ய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அவளைப்
பயன்படுத்திக் கொள்ளும் அந்த ஆள் யார் என்பதையேச் சிந்தித்துக் கொண்டிருந்தது.
நிமிடத்துக்கு ஒரு முறை
அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாள். மீண்டும் மீண்டும் பார்த்தாள்.
உளவியல் மாணவியான அவள்,
வளர்ச்சி உளவியல் உறுதிப்படுத்தியுள்ள உண்மைகள், சித்தாந்தங்களையெல்லாம் தன் தாயின்
செயல் பாட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தாள்.
உயிர் உளவியல்
(Biological Psychology) பாடத்தில், ஹார்மோன்கள் படுத்தும் பாடு பற்றிப் படித்தவளாகையால்,
அப்பாவை இழந்த, அம்மாவின் தனிமைத் தவிப்புப் புரிந்தது அவளுக்கு. அதே சமயம் இப்படிப்பட்ட
சட்ட விரோதமான (இல்லீகல்) உறவு அதற்குத் தீர்வாகாதே..?’ என்றும் யோசித்தது;
மேலும், எவ்வளவுதான்,
பாதுகாப்பாக, அடுத்தவர் கண்களில் மண் தூவித், திரைமறைவில் செய்தாலும், இப்படிப்பட்ட
உறவுகள், ஒரு நாள் அம்பலத்துக்கு வந்து அசிங்கத்தை அப்பிவிடுமே...!” - என மறுகினாள்.
‘ஒவ்வொரு நாளும் சமூக
வலை தளங்களில் பரவும் கள்ளக் காதல் செய்திகளில் தன் தாயும் ஒருத்தியாக வைரலாகிவிடுவாளோ?’
என அஞ்சியது ஜனனியின் மனம்
அம்மா, இப்படித் திரைமறைவு
வேலை செய்வாள் என்று எந்தப் பெண்ணாவது கனவிலும் நினைப்பாளா என்ன?
“கண்ணால் காண்பதும்,
காதால் கேட்பதும் பொய், தீரவிசாரித்து முடிவுக்கு வருதலே மெய்..” என்ற தத்துவத்தில்
தன்னைப் பொறுத்திக் கொண்டு, தனக்குத் தானே ஒரு சமாதானத்தைச் செய்து கொண்டு விசாரணையைத்
தொடங்கினாள் ஜனனி.
***
“அம்மா...!”
“சொல்லுடா...?”
எப்படித் தொடங்குவது
என்று புரியாமல் தலைக் குனிந்து அமைதிக் காத்தாள் ஜனனி.
“என்னடா, எதுக்கு அழைச்சே,
சொல்லு...” – கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் அம்மா.
பெற்றத் தாயிடம் -
‘நீ எவனோ ஒருவனோடு சட்ட விரோதமான உறவு வைத்துள்ளாயா?’- என்று கேட்கக் கூசியது ஜனனிக்கு;
“ஒண்ணுமில்லேம்மா. உடம்பு
ஒரு மாதிரி இருக்கு. இன்றைக்குக் காலேஜூக்கு லீவு போட்டுக்கறேம்மா?” – என்றுப் பேச்சை
மாற்றினாள்.
“அதுக்கென்ன போட்டுக்கோ..!”
“சரிம்மா?” - என்றவள்
ஹால் ஷோபாவில் படுத்துக், கண்களை மூடித் தூங்குவதுபோல பாவனை செய்தாள்.
அம்மாவின் செயல்பாடுகளை
அணு-அணுவாகக் கவனித்தாள்.
***
அம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
ஜனனி கல்லூரிக்குக் கிளம்பும் நேரம் வரை அமைதியாக இருந்தவள், அந்த நேரம் கடந்ததும்,
பரந்தாள், பரபரத்தாள், தவித்தாள். தடுமாறினாள்.
“க்..கீ........க்....கீ............க்...கீ..”
– மூன்று முறை விட்டு விட்டு இரு சக்கர வாகனம் சங்கேதமாக ஒலித்தது.
ஜனனியின் அருகே வந்து
அவள், முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, நன்றாகத் தூங்குகிறாள் என்பதை உறுதி செய்து
கொண்டாள் அம்மா;
‘டக்..” என மலை உச்சியிலிருந்து
உருண்டுத் தரையை நோக்கி விழும் கல்போல் வேகமாகத், தரைத் தளத்துக்கு இறங்கினாள்.
தூங்குவது போல நடித்த
ஜனனி சட்’டென எழுந்து, ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.
இன்றைக்கு வேண்டாம்.
என் மகள் வீட்ல இருக்கா…?’- என்று அம்மா ஸ்கூட்டர் ஆசாமியிடம் சொல்லியிருக்க வேண்டும்.
போன வேகத்தில் சட்டென திரும்பிவிட்டாள்.
***
ஜன்னல் வழியாக ஸ்கூட்டர்
ஆசாமியைப் பார்த்த ஜனனிக்கு அதிர்ச்சி. அவர் வேறு யாருமில்லை. ஜி ப்ளாக்கில் குடியிருக்கும்
விஸ்வத்தின் அப்பா. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவியை ஒரு விபத்தில் பறிகொடுத்தவர்
அவர்.
“இவரா...? இவரா...?”
- என்று ஆற்று-ஆற்றுப்போனாள். அவரை இப்படி நினைத்திருக்கவில்லை ஜனனி.
விஸ்வத்தின் அப்பா இப்படிப்பட்டவரா?
நினைத்து நினைத்துப் புழுங்கியது மனம்.
‘அவரைக் குறை சொல்கிறாயே,
ஊசித்துளை இடம் கொடுத்ததால்தானே நூல் நுழைந்துள்ளது..’ – என்று குத்திக்காட்டியது ஜனனியின்
மனச்சாட்சி.
A முதல் G முடிய பத்து
ப்ளாக்குகளில், மொத்தம் நூறு வீடுகள் உள்ள ப்ரும்மாண்டமான அடுக்ககம் அது. முதலில் உள்ள
A ப்ளாக்கில் ஜனனியின் வீடு.
கடைசியாக உள்ள G ப்ளாக்கில்
உள்ளது விஸ்வத்தின் வீடு.
கிருமி வேடன் ‘லூயி
பாஸ்ட்டரை’ ஆதர்ஸமாகக் கொண்டு, முனைவர் பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி
மாணவன் விஸ்வம். ‘மைக்ரோ பயாலஜி’யில் பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்றவன் அவன்.
ஜனனிக்கு, உயிர்-உளவியலில்
சந்தேகம் வரும்போதெல்லாம் விஸ்வத்திடம் கேட்டுத்தான் தெளிவாள்.
‘ஒரு வேளை, விஸ்வத்தோடு,
ஜனனிக்கு காதல் உறவு ஏற்பட்டுவிடுமோ?’ - என்று பயந்தோ என்னவோ, ஜனனியை தனியாக G ப்ளாக்குக்கு
அனுப்பியதேயில்லை அம்மா.
‘என்னைச் சந்தேகப்பட்ட
அம்மா, விஸ்வத்தின் அப்பாவோடு காம வலையில் வீழ்ந்ததை நினைக்க நினைக்கக் குமுறியது ஜனனிக்கு.
***
பொய்யாகப் பாசாங்கு செய்து
கொண்டுப் படுத்திருக்கப் பிடிக்கவில்லை ஜனனிக்கு. ‘ உடனடியாக விஸ்வத்திடம் இந்த ‘இம்மாரல்
செக்ஸ்..’ உறவைச் சொல்லி, உடனடித் தீர்வு காணவேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது மனதில்
.
ஷோபாவிலிருந்து எழுந்தாள்.
கல்லூரிக்குக் கிளம்பினாள்.
“உடம்பு சரியில்லேன்னு
சொன்னியே ஜனனி. ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கப்படாதா?” – அம்மா கேட்டாள்.
“மதியம் முக்கியமான
வகுப்பு இருக்கும்மா..!” - சொல்லிவிட்டு அவசரமாய்க் கிளம்பினாள்.
***
“என்ன பதிலேச் சொல்லமாட்டேங்கறீங்க
விஸ்வம்..?” – ஜனனியின் கேள்வியில் கொதிப்பும், கண்களில் கண்ணீரும் உருண்டன.
“கொதிச்சிப் போறதோ,
குமுறுவதோ, புலம்பறதோ, மற்ற மற்ற எமோஷனல் ரியாக்ஷனோ, எந்த விதப் பிரச்சனைக்கும் தீர்வாகாது
ஜனனி.
பிரச்சனையையும் ஜனனியையும்,
நிதானமாக அணுகினான் விஸ்வம்.
உளவியல் படிக்கும் ஜனனிக்கு
விஸ்வம் சொன்னதெல்லாம் நன்றாகப் புரிந்தது.
“இந்தப் பிரச்சனையை
தீர்க்கணும்னா, நாம ரெண்டு பேரும் மனசால ஒன்றிணையணும்.” – என்று முடித்தான் விஸ்வம்.
பதில் ஒன்றும் சொல்லவில்லை
ஜனனி. மௌனத்தைச் சம்மதமாக்கிக் கொண்டான் விஸ்வம்.
“ஜனனி, நான் சொல்றதைக்
கவனமாகக் கேட்டுக்க.!”- என்றுத் தொடங்கித் தொடர்ந்துத் தெளிவாக அடுத்தடுத்து ஆகவேண்டியதைத்
திட்டமிட்டுச் சொன்னான் விஸ்வம்.
விஸ்வம் சொல்லச் சொல்ல
ஜனனிக்குள் பல ஜன்னல்கள் விரிந்துத் திறந்து கொண்டன. நான்காம் கோணத்தில் கண்டு தெளியும்
விஸ்வத்தின் மேல், பிரமிப்பு மேலும் அதிகமானது அவளுக்கு.
***
அடுத்தடுத்து, திட்டமிட்டப்படி,
விஸ்வம் தெளிவாகக் காய்களை நகர்த்தினான்.
தேஜஸ் நட்சத்திர விடுதிக்கு
அருகில் இருக்கும் காமாட்சியம்மன் கோவிலுக்கு இருவரும் சென்றனர்.
அர்ச்சகரைத் தனியே அழைத்து,
அவரிடம் தெளிவாக விபரம் சொன்னான் விஸ்வம். சாட்சியாக அருகில் நின்றாள் ஜனனி.
“பேஷாப் பண்ணிடலாம்
வாங்கோ...! எனக்கு ஒண்ணும் பிரச்சனை வராதோன்னோ?” – என்று மட்டும் தற்காப்புக் கேள்வியைக்
கேட்டுக் கொண்டார் குருக்கள்.
***
ஜனனிக்கு இரவு முழுதும்
தூக்கம் வரவில்லை.
மறுநாள் எந்தத் தடையும்
இல்லாமல் எல்லாம் நடக்க வேண்டுமே என்கிற கவலை மட்டுமே மனதை ஆக்ரமித்திருந்தது.
நகைக்கடையில் தாலி வாங்கும்போது
விஸ்வம் சொன்னதையெல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்து நினைத்து, விஸ்வத்தின் தெளிவை
வியந்தாள்.
***
விஸ்வமும், ஜனனியும் கல்லூரிக்குச்
செல்லவில்லை. நேரே காமாட்சியம்மன் கோவில் சென்றனர்.
முதல் நாள் விஸ்வம்
கொடுத்த தாலிச்சரட்டை காமாட்சியம்மன் பாதங்களில் வைத்திருந்தார் அர்ச்சகர்.
போர்த்தப்பட்டிருந்த
வாழையிலை கட்டுக்குள்ளிருந்து விடுதலையாகி, மலர்ந்து சிரித்த ரோஜா மாலைகள் தாம்பாளத்தில்
தயாராக இருந்தன.
கையில் தயாராக வைத்திருந்தத்,
திருமண ஒப்பந்தப் பத்திரத்தை ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் படித்துப் பார்த்தான்.
கோவில் முகப்பிலிருக்கும்
அர்ச்சனை சாமான்கள் கடையின் உரிமையாளரிடம், சாட்சிக் கையொப்பமும் பெற்றான். அவரும்
மகிழ்சியுடன் ஒப்பமிட்டார்.
***
ஜனனியும் விஸ்வமும் எதிர்பார்த்த
வேளை வந்துவிட்டது.
விஸ்வத்தின் அப்பா தன்
ஸ்கூட்டரை தேஜஸ் லாட்ஜ் வாசலில் நிறுத்தினார்.
ஜனனியின் அம்மா, அவர்
இடுப்பிலிருந்து கையை விடுவித்துக்கொண்டு, கீழே இறங்கினாள்.
சாலையோர பூக்காரியிடம்,
மல்லிகைப் பந்தை பெற்றுக்கொண்டு, லாட்ஜ்க்குள் செல்லக் காலடி எடுத்து வைத்தனர் இருவரும்.
***
“அப்பா….” அம்மா…” – என்று
விஸ்வமும், ஜனனியும் ஏக காலத்தில் குரல் கொடுக்க, திடுக்கிட்டுத் திரும்பினர் இருவரும்.
குற்ற உணர்வில் புழுங்கிய,
இருவர் முகமும் இருண்டுவிட்டது.
“கொஞ்சம் வரீங்களா...!
ஒரு பத்து பதினைந்து நிமிஷம் எங்களோட இருந்து, செய்ய வேண்டியதைச் செஞ்சிட்டு, நீங்க
வழக்கம்போல என்ஜாய் பண்ணுங்க..!” - என்றான் விஸ்வம். அவன் குரலில் உறுதி இருந்தது.
கையும் களவுமாய்ப் பிடிபட்டக்
கள்வர்கள்போல் தலைகுனிந்தபடி இருவரும் தங்கள் குழந்தைகளை நோக்கி வந்தனர். தலை ஒடிந்துத்
தொங்கியது..
“வாங்கோ… நீங்கதான்
இந்த ரெண்டுக் குழந்தைகளோட, தாயார் தகப்பனாரோ…!”- கேட்டார் அர்ச்சகர்.
“ரொம்ப சிரேஷ்டமான,
பெரிய மனசுள்ள பிள்ளைகளைப் பெத்துருக்கேள். குழந்தைகளோட மனசைப் புரிஞ்சிக்கிட்டு காலா
காலத்துல கல்யாணம் பண்ணி வெச்சிக் கால்கட்டுப் போடறது பெத்தவாளோட கடமைனு சொல்லுவா!”;
குற்றமுறு நெஞ்சோடுக்
கூனிக் குறுகினர், விஸ்வத்தின் அப்பாவும் ஜனனியின் அம்மாவும்.
“உட்காருங்கோ..!”- என்று
எதிரில் போடப்பட்ட நாற்காலிகளைக் காட்டினார் அர்ச்சகர். அவரைத் தொடர்ந்து, உட்காருங்கப்பா...!
என்றான் விஸ்வம். உட்காருங்கம்மா..! என்றாள் ஜனனி.
***
மாலையை எடுத்துத் தகப்பனார்
- தாயார் கைல கொடுங்கோ..!” - என்று ஜனனியையும் விஸ்வத்தையும் வழி நடத்தினார் அர்ச்சகர்.
கூனிக் குறுகிய பெற்றோர்களின்
கைகள் நடுக்கம் கண்டன. பெற்ற குழந்தைகளுக்கு முன், தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை
அவர்களால்;
***
தங்கள் தந்தையின் வயதொத்த
அந்த வயதான அர்ச்சகரைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள்;
பெற்ற செல்வங்களின்
கண்களைக் காண்பதற்கேக் கூசினார்கள்.
“அடுத்து ஆக வேண்டியதைப்
பாருங்கோ...! முகூர்த்த நேரம் நெருங்கிடுத்து. மாலை மாத்திப் போட்டுக்கோங்கோ…”
அவர்கள், மாலை மாற்றிக்
கொள்ளும்போது, உள்ளத்தால் உயர்ந்த விஸ்வத்தின் கண்களை, மரியாதையுடன் நோக்கினாள் ஜனனி.
தட்டுத் தேங்காய்மேல்
சுற்றி வைக்கப்பட்டத் தாலிக் கொடியை கையில் எடுத்துப் பிரித்து, இறைவனைப் பிரார்த்தித்துக்
கையில் கொடுத்த அர்ச்சகர் “மாங்கல்யம் தந்துநாநேன...” - என்று மந்திர உச்சாடணம் முழங்கினார்.
கர்ப்பக் கிருஹத்தில்
எழுந்தருளி, அருள் பாலிக்கும் காமாட்சி அம்மனும். ஆங்காங்கே எழுந்தருளி அருளும் சுற்றுத்
தேவதைகளும், வண்ண வண்ணமாய் ஜொலிக்கும் கோபுர பொம்மைகளும் வாழ்த்த, சுப மூகூர்த்த வேளையில்
விஸ்வத்தின் அப்பா, ஜனனியின் அம்மாவின் கழுத்தில் தாலியைக் கட்டினார்.
“சாரி ஃபார்த டிஸ்ட்டர்பன்ஸ்மா..,
நீங்க இனிமே ரைட்-ராயலா எதுவும் செஞ்சிக்கோங்க..!” – என்றுப் பொதுவாகச் சொன்னான் விஸ்வம்.
“அண்ணே, பெத்தவங்களுக்கு
நாம செய்யவேண்டியக் கடமைகளைச் செஞ்சிட்டோம்....! காலேஜுக்குப் போலாமா? – ஜனனியின் குரலில்
சகோதர பாசம் தொனித்தது.
ஜனனியுடன் கல்லூரிக்குப்
புறப்பட்டான் விஸ்வம்.
***
பெற்றவர்களின், உள்ள உணர்வுகளையும்
உடல் தேவைகளையும் புரிந்து கொண்டு, அவர்கள் நெருக்கத்தை ஏற்று, தம்பதிகளாக்கிவிட்டு, தாய் தந்தையை வணங்கி ஆசி பெற்றுக்
கல்லூரிக்குச் செல்லும் அந்தச் சிறிய பெருந்தகைகளான
விஸ்வத்தையும், ஜனனியையும் நம்மைப் போலவே பாசத்துடனும், மரியாதையுடனும் பார்த்து வாழ்த்திக்
கொண்டே இருந்தது, அர்ச்சகர் மட்டுமல்ல. ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அனைத்து தெய்வங்களும்.
***
Comments
Post a Comment