152. கேபிடல் லெட்டர். (மக்கள் குரல் 06.07.2024)

152 . கேபிடல் லெட்டர். (சிறுகதை)

ஜூனியர் தேஜ்

மக்கள் குரல் 6.7.24





ருத்துவர் மருந்துச் சீட்டில் எழுதும்போது, பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகளின் பெயரை ‘கேப்பிடல் எழுத்தில் எழுதவேண்டும்... என்று மருத்துவத்துறை வெளியிட்ட ஆணையைப் பார்த்தது முதல் டாக்டர் கதிரேசனுக்கு ஒரே மன அழுத்தம்.

எல்.கே.ஜி, யு.கே.ஜி..ல் , மிஸ்ஸோடக் கையைப் பிடித்து எழுதிப் பயிற்றுவித்த, கேப்பிடல் எழுத்துக்களை, பலமுறை எழுதி எழுதிப் பார்த்துக் கற்றுக் கொண்டது நினைவில் இருக்கிறது.

மேல் வகுப்புக்கு வர வர கர்சீவ் லெட்டர் கற்றுக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், தொடர்ந்த பயிற்சியால்,  , ஒன்பதாம் வகுப்பு வரை சங்கிலியைக் இழுத்துக் கட்டியதுபோல கோர்த்துக் கோர்த்து எழுதி எழுதிப் பழக்கமாகிவிட்டது.

***

கிராமப்புறத்தில், அரசுப் பள்ளியில் படித்தால், மெடிக்கல் சீட்டுக்கு முன்னுரிமை என்று அரசாங்கம் சொன்னதால் கதிரேசனைக் கொண்டுபோய், ஒரு கிராமத்துப் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கே இவர் எழுதிய கர்சீவ் எழுத்தைத் தூக்கி மூஞ்சியிலேயே அடித்தார்கள்.

“என்னா இது, கோழி நடந்தாமாதிரி, சாதாரணமா எழுது..! என்றார்கள்.

சாதாரணமாக என்றால் ஒன்றோடு ஒன்று கோர்க்காமல் எழுது என்பதே அரசுப் பள்ளி ஆசிரியரின் கோரிக்கை.

எப்படியோ, கஜகர்ணம் போட்டு, ஒன்பது வருஷத்து கர்சீவ் பழக்கத்தை மாற்றிக் கொண்டார் கதிரேசன்.

***

நீட் தேறினார்.

அரசுப் பள்ளியில் படித்ததற்கான முன்னுரிமையும் கைக் கொடுக்க மெடிசின் சேர்ந்தார்.

டாக்டர் படிப்பின்போது, ஒரு ப்ரொபசர் கதிரேசனின் ரெக்கார்டு நோட்டைப் பார்த்துவிட்டு, “என்ன இது பள்ளிக்கூடத்துப் பையனாட்டம்.. எழுதறே..? டாக்டர் படிப்புக்கு ஏத்தமாதிரி எழுது.. என்று விமர்சித்தார்.

அதன் பிறகு, டாக்டர் படிப்புப் படிக்கும் இரண்டாமாண்டு மாணவர்கள் முதல் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் முடிய அனைத்து மாணவர்களின் கையெழுத்தையும் ஸ்டடி செய்தார்.

கர்சீவும் இல்லாமல், ஸ்டேட் போர்டு ரைட்டிங் போலும் இல்லாமல்,  மையமாக ‘ஈசிஜி ரிப்போர்ட் தாளில் கோடுகள் விழுவதுமாதிரி, ஒரு நிலையில், சில எழுத்துக்கள் புரியுமாறும் பல எழுத்துக்கள் புரியாதமாதிரியும் எழுதப் பயிற்சி எடுத்து, அதில் வெற்றியும் கண்டார்.

***

டாக்டர் படிப்பும் முடித்துப், பல்லாண்டுகள் மருத்துவ சேவை செய்து, கைராசி டாக்டர் என்றுப் பெயரும் எடுத்தாகிவிட்டது.

தான் எழுதிய மருந்துச் சீட்டை தானே படிப்பதற்குச் சிரமப்படும் அளவிற்குத் தன் கையெழுத்தில் தேர்ச்சிபெற்ற, டாக்டர் கதிரேசனுக்கு, திடீரென்று இப்படி ஒரு சோதனை.

‘திரும்பவும் ஆரம்பத்துலேர்ந்தா..?’  என்று பிரமித்தார். இது முடியுமா என்று கவலைப்பட்டார். எப்படிச் சமாளிப்பது என ஆற்றாமை வந்தது.  விளைவு...?

மன அழுத்தம் வந்து அவதிப்பட்டார்.

***

நிலைமையைப் புரிந்து கொண்டாள்,  டாக்டர் கதிரேசனின் பேத்தி.  “கவலைப்படாதீங்க தாத்தா. நான் சொல்லித்தரேன்.. என்று கேப்பிடல் லெட்டர்களை ரெப்ஃரஷர் கோர்ஸ் போலச், சொல்லித்தந்தாள்.

டிக்டேஷன் போட்டு, சரியாக எழுதாத வார்த்தைகளைப் பத்து இருபது முறை இம்போசீஷன் எழுதவைத்துச் , சரியாக எழுதும் வரையில் டிரில் வாங்கி, ஒரு வழியாகத் தாத்தாவை தேற்றி விட்டார்.

***

புனர் ஜன்மம் எடுத்தாற்போல், அன்றுதான் முதன் முதலில் முதல் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் போல, அன்றைய முதல் நோயாளியைச் சோதித்தார்.

லெட்டர் பேடை எடுத்து தன்முன்னால் வைத்து, பேனாவைத் திறந்து கொண்டு, மனதை ஒருநிலைப் படுத்தி, பொறுமையாக ஒவ்வொரு எழுத்தாக யோசித்து யோசித்து மருந்துச் சீட்டை எழுதினார் கதிரேசன்.

எழுதி முடித்ததும், மருத்துவர் கதிரேசனுக்கே மனதிற்குத் திருப்தியாக இருந்தது. தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார். மருத்துவத்துறை சொல்வதன் காரணத்தை உணர்ந்து பார்த்தார். ‘உண்மைதான். இப்படி எழுதும்போது படிக்கவும் இலகுவாக இருக்கிறது. எவருமே தவறாகப் புரிந்து கொள்ளுவதற்கு வழியே இல்லை. எந்த நிலையிலும் மருந்தகங்களில் மருத்துவர் எழுதிய மருந்துக்கு மாற்றாக வேறு ஏதேனும் மருந்தைத் தந்துவிடும் வாய்ப்பே இல்லை. என்றெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டு, முதன் முதலாய் கேப்பிடல் எழுத்தில் அழகாக எழுதிய மருந்துச் சீட்டை முகத்தில் பெருமிதம் பொங்க நோயாளியிடம் கொடுத்தார்.

***

 “ரொம்ப நேரமா எழுதினீங்களே டாக்டர் ‘ எதுனாப் பெரிய வியாதிங்களா..?

“வியாதியெல்லாம் பெரிசு இல்லை. முதல் முதலாப், பெரிய எழுத்துல எழுதினேன் அதான் நேரம் ஆயிருச்சு. இந்தாங்க மருந்துச் சீட்டு.. என்று சீட்டை நோயாளியிடம் தந்தார் கதிரேசன்.

முன்பே நர்ஸ் சொல்லியிருந்த , ஃபீஸை டாக்டரிடமேத் தந்துவிட்டு, மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு இயல்பாக எழுந்து வெளியேப் போனார் நோயாளி.

“அய்யா... ஒரு நிமிசம்.. அழைத்தார் டாக்டர் கதிரேசன்.

“எதுக்குக் கூப்பிடறாரு, ஒரு வேளை ஃபீஸ் அதிகமா எதிர்பார்க்கறாரோ...?” – என்பது போல் பார்த்தார் நோயாளி.

“அய்யா, முதல் முதலா, ரொம்ப சிரமப்பட்டு கேபிடல் லெட்டர்ல எழுதித் தந்திருக்கேன். அதைப் பார்த்துப் படிச்சிப் புரியுதானு சொல்லிட்டுப் போகப்படாதா..? என்று முகத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு கேட்டார் டாக்டர் கதிரேசன்.

டாக்டரய்யா, தமிழ்ல என் கையையெழுத்தை மட்டும் போடத்தான் நான் கத்துக்கிட்டேன். நான் படிக்காதவன்ய்யா..! என்று சொல்லிவிட்டு நகர டாக்டர் கதிரேசனுக்கு மீண்டும் மன அழுத்தம் வரத்தொடங்கியது.

***

Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

162. ஆயக்கால் (தினமணி கதிர் 24.11.24)