154 . வாக்கும் வக்கும் (மக்கள் குரல் 20.07.24)
-ஜூனியர் தேஜ்
(மக்கள் குரல் 20.07.24)
“நம்ம புஞ்சைல தலமாரி நிக்கிற ஒரு தென்ன மரத்தையும், நடு கொல்லைல நிழலடிச்சிக்கிட்டு நிக்கிற வேப்ப மரத்தையும் நீங்க கிரயத்துக்குக் கொடுக்கப்போறதா முனியன் சொன்னான்..” – மர வியாபாரி வெங்கடாசலம் பட்டும் படாமலும் கேட்டான்.
சில நொடிகள் அமைதிக்குப் பிறகு “குடுக்கறதுதான்.. தேவையை அனுசரிச்சி ஒண்ணோ, இல்ல ரெண்டையுமோ கொடுப்பேன். அந்நீல உமக்குச் சொல்றேனே..?” – என்றார் சரவணன்.
“நல்லது..” என்று கும்பிட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தார் வெங்கடாசலம்.
சரவணன் வண்டியைப் பூட்டினார்.
“டடக்... டடடக்...டக்...டடக்..” சீரற்ற, குண்டும் குழியுமான கிராமத்துச் சாலையில் பாரவண்டி சென்றது. சரவணன் பார வண்டியை வாகாய்க் களத்தில் நிறுத்தினார்.
நுகத்தடி தூக்கி மாடுகளை விடுவித்தார்.
“புஸ்... புஸ்... ஸென மூச்சு விட்டுத் தரையை மோப்பம் பார்த்து, ஆங்காங்கங்கே நீண்டு கிடந்த நுனிப்புல்களை நாக்கை நீட்டிச் சுழற்றி இழுத்துக் கடித்தது.
வண்டியை முன் காலில் நிறுத்தினார். வண்டி மாடுகளை பிடித்து வந்து, புடைத்துக் கிளப்பிக்கொண்டு கிடந்த அரசமரத்து வேரின் இடுக்கில் தும்பு விட்டுத் தலைக் கயிற்றைச் சுற்றிக் கட்டினார்.
களத்து மேட்டில் குவிந்திருந்த போரிலிருந்து வைக்கோல் பிடுங்கிக் கொண்டு வந்து அவைகளுக்கு முன் வைத்தார்.
புது வைக்கோல் தின்னப் பிடிக்கவில்லை காளைகளுக்கு.
வைக்கோலை பரத்திக் கொண்டு அதன் மேல் படுத்து மெல்ல அசை போட்டன அவைகள்.
போரடிக்காகச் சொன்ன ஆள் படைகளும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் அடித்துக் குவித்து வழக்கம்போல் பொடப்பட்டிருந்த பட்டறை அருகே சென்றார்.
கவனமாகப் பார்த்தபடியே பட்டறையைச் சுற்றி வந்தார்.
பட்டரைத் தலைப்புக்கு வந்து, மேலுக்குக் கிடந்த தாள்களை கவனமாக விலக்கினார்.
சாணிப்பால் குறிகளைச் சோதித்தார். போட்டது போட்டபடி இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டார்.
சரவணனின் முகக் கோடுகளில் ஒரு நிறைவு தெரிந்தது.
சந்தோஷமாய், நெற்குவியலிலிருந்து ஒரு பிடி நெல் எடுத்தார். நெல்லின் ஈரப்பதம் பார்த்தார்.
ஆச்சி பிடிக்-கொழுக்கட்டை பிடிப்பதைப் போல அழுத்திப் பிடித்து, டக்’கென விட்டார். திருப்தியாக இல்லை அவருக்கு.
அப்போது விவசாயக் கூலி சடையன் ஒரு பிடி எடுத்துப் பார்த்துவிட்டு “சரியா பதமாத்தான் இருக்குது. டி பி சி க்கு ஏத்திரலாங்க..” என்றான்.
“இல்லே சடையா.. இன்னொரு கை அள்ளி நல்லாப் பாரு ஒரு ரெண்டு மணி நேரம் காச்ச போட்டுக் கொண்டு போறதுதான் நியாயம்..” என்றார் சரவணன். சொல்லும்போதே ‘சாக்கில் போட்டுக் கட்டி, வண்டியில் ஏற்றி அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஆகும் காலத்தைக் மனதிற்குள் கணக்கு செய்தார்.
‘அடிக்கிற வெய்யிலில் இன்னும் நாலு மணி நேரத்திற்குள் நெல் சரியான பதத்திற்கு வந்துவிடும்..’ மனது கணக்குப் போட்டது.
“போரடிக்கு முன்னே பட்டைரையை உடைச்சி சிமெண்டு களத்துல பரத்துங்கடா..” உத்தரவு போட்டார்.
ஆளும் பேருமாக அரை மணி நேரத்தில் களத்தில் பரத்திவிட்டனர். அரைமணிக்கு ஒரு முறை ஓரிரு போரடி ஆட்களை களத்திற்கு அனுப்பித் திராவி விடச் சொன்னார்.
வெயிலையும் நிழலையும் வைத்து மணியைக் கணக்கிட்டார்.
எப்படிப் பரத்தினார்களோ அதுபோலவே ஆளும் பேருமாக சிமெண்டு களத்து நெல்லை, சாக்குமூட்டைகளில் கட்டி பக்குவமாய் பார வண்டியில் ஏற்றிவிட்டனர்.
“ஏய்.. சடையா, பக்கிரி.. நீங்க ரெண்டு பேரும் என் கூட வாங்க, மத்தவங்க போரடியப் பாத்துக்கட்டும்” என்றார்.
கொள்முதல் நிலையத்தின் முன் பாரம் இறக்கினார்கள் சடையனும் பக்கிரியும்.
காய், கிழங்குகளின் தோல்களைச் சீவி எடுப்பதற்கு உபயோகப்படும் ‘பீலர்’ போன்ற ஆனால் மெல்லிய U வடிவப் பட்டையோடு வந்தார் கொள்முதல் நிலைய அதிகாரி.
ஒரு சாக்குமூட்டையில் குத்தி நெல்லை இழுத்தார். அதன் யூ வடிவப் பள்ளத்தில் தங்கிய நெல்லைப் பார்த்தார். பிறகு அதை உள்ளங்கையில் போட்டு ஈரப்பதம் பார்த்தார்.
முதல் மூட்டையிலேயே திருப்தி ஏற்பட்டிருக்கவேண்டும். பிறகு, ஆங்காங்கே வேறுசில மூட்டைகளிலும் சோதித்தார்.
முழுத் திருப்தி அடைந்தவராய் தனக்கு மேலே இருக்கும் ஆபீசரிடம் சென்று ‘எடுத்துக்கலாம்’ என்று அந்த நெல்லைக் கொள்முதல் செய்வதற்காகப் பரிந்துரை செய்தார் அந்த மீனியல்.
நகைக் கடையில் நகையை விற்கப் போகும்போது நீளமான சீட்டு முழுக்க இலக்கங்களாக எழுதி, கூலி, சேதாரம் என்றெல்லாம் குறைத்துக் கூட்டி, 20 காரட், 24 காரட், பத்தரை மாத்து என்ற டெக்னிக்கல் விளக்கங்களால் குழப்பி, மற்ற கடை நகைகளெல்லாம் சுத்தமான தங்கம் அல்ல அதல்லாம் தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை ஆபரணங்கள் என்ற ரேஞ்சுக்கு என்னென்னவோ சொல்லி சில பல மணி நேரங்கள் காக்க வைத்து விட்டு, அந்த நகையை ஏதோ பழைய பித்தளை போல அருவருப்பாகப் பார்த்து கடைசியாக “ இதுல ரொம்ப நிக்காது போல இருக்கே... வேற கடைல பாருங்களேன்...? என்றறெல்லாம் கூறி அலைக்கழித்துவிட்டு “நம்ம ரெகுலர் கஸ்டமர் நீங்க செஞ்சி தரேன்...” என்று முடிப்பார்கள்தானே .
அதுபோல, ஆங்கிலமும், தமிழுமாய்க் கலந்து விவசாயிக்குப் புரிந்துவிடக்கூடாது என்ற தீர்மானத்தோடு நிறைய நிறைய ஏதோதோக் சொன்னார்கள் டி பி சி அதிகாரிகள்.
தேர்வு அட்டை ஒன்றில் கிளிப் செய்து வைத்திருந்த காகிதத்தில் கணக்குப் போட்டார்கள். கால்குலேட்டரில் கூட்டிக் கழித்தார்கள். கடைசியாய் ஒரு முடிவுக்கு வந்தவராய்ப் பேசினார் ஆபீசர்
“ஈரப்பதத்திற்காய் மூன்று கிலோ அதிகம் போடுவோம்.”
நாணயத்தை விட பணத்தின் மதிப்பை உயர்வாகக் கருதிய அதிகாரிகளின் செயலை வேறு வழியில்லாமல் அங்கீகரித்தார் காலை முதல் நான்கைந்து மணி நேரம் அவ்வப்போது திராவிவிட்டுக் காயவைத்து இங்கே கொண்டு வந்த அந்த நாணயமான விவசாயி சரவணன்.
மூன்று கிலோ அதிகம் போடுவோம் என்றவர்கள் அளக்கும் போது நான்கு கிலோ அதிகம் போட்டார்கள்.
எதிலுமே நேர்மையில்லாத இந்த ஆபீசர்களை நினைத்தபோது, ‘விவசாயி பெருந்தன்மையாகப் போவதை, ஏமாளி என்று நினைத்துக் கொள்கிறார்கள்..’ என்ற என்ற எண்ணம் வர வெயிலும் இருட்டும் ஒரு சேர வந்தாற்போல் கோபமும் நகைப்பும் சரவணனிடமிருந்து வெளிப்பட்டது.
“சார்.. கொஞ்சம் சீக்கிரம் விடுங்க...” என்று இதோடு மூன்று நான்கு முறை கேட்டுவிட்டார் சரவணன்.
ரொம்ப அவசமோ..?
கிண்டலாகக் கேட்டுவிட்டு சரவணன் சரக்கை எடை போட அனுமதித்தார் ஆபீசர்.
எடைபோட்ட மூட்டைகளை குடோன் பணியாளர்கள் இழுத்துப் போட்ட மூட்டைகளை சணல் கோத்த கோணுசியை லாகவமாய்க் குத்தி குத்தித் தைத்து ஒன்றன் மேல் ஒன்றாய் மலைபோல அடுக்கினார்கள்.
ஆபீசருக்குப் பின்னால் மாட்டப்பட்டிருந்த புழுதி படிந்த கடிகாரத்தை அடிக்கடிப் பார்த்துக் கொண்டே இருந்தார் சரவணன்.
சார்.. “.....” என்ன என்பதுபோலப் பார்த்தார் ஆபீசர்.
“பாங்ல நாலரைக்குள்ளார வந்தா பணத்தை வாங்கிக்கிடறேன்னு மேனேஜர் சொன்னாரு. அதான் அவசரப்படுறேன்..” பணிவாகச் சொன்னார் சரவணன்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்.
ஆபீசருக்குள் இரக்கம் சுரந்ததோ, அல்லது மூன்று கிலோ அதிகம் தரக்கேட்டு நான்கு கிலோவாக எடுத்துக் கொண்ட குற்ற உணர்வோ அல்லது இரண்டுமோ, “அய்யாவை சீக்கிரம் அனுப்புங்க..’ என்றார்.
கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்துத் துகையைக் கூறி அதை சரவணனின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துவிட்டு “உடனே போங்க. பணம் கணக்குல ஏறிடுச்சு.” என்றனர்.
வங்கி மேலாளர் சரவணனை வரவேற்று தன் எதிரே அமரச் சொன்னார்.
அமரவில்லை சரவணன்.
‘விவசாயியான நான் ஆபீசர் நாற்காலியின் முன் உட்காரலாமா?’ என்ற தாழ்வு மனப்பான்மையினால் இல்லை. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்தத் தொழிலாளிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு லோன் சாங்ஷன் செய்யும் இந்த ஆபீஸ் நாற்காலியில் உட்காரப் பிடிக்கவில்லை அவருக்கு.
“பணம் கிரெடிட் ஆயிருச்சுங்கய்யா.. பணம் எடுங்கணுங்களா”
“இல்லை.. லோனுக்கு பிடிச்சிக்கங்க..”
“எவ்ளோ?”
“டி பி சிலேர்ந்து வந்த எல்லாத்தையும் பிடிச்சிக்கங்க.. துண்டு விழுவறதை நாளைக்குக் கட்டிடறேன்..”
வங்கியிலிருந்து மீண்டும் களத்துக்குப் போனார். போரடி நெல்மூட்டைகளை பாரவண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்குத் திருப்பினார்.
வழியில் மர வியாபாரி வெங்கடாசலத்தை பார்த்தார்.
“நாளைக்குக் காலைல வந்து ரெண்டு மரத்தையும் வெட்டிக்கோ.. சாயங்காலம் மூணு மணிக்குள்ளே லோன் பாக்கியைக் கட்டுறேன்னு பாங்க் மானேஜர்கிட்டே வாக்கு கொடுத்துருக்கேன்.” என்று சொல்லிவிட்டு “ஹை.. போடா..” என்று மாடுகளின் சப்பைகளைத் தட்டினார் சரவணன்.
000
Comments
Post a Comment