153. மனிதம் (காற்றுவெளி - ஆடி 2024)
-ஜூனியர் தேஜ்
மழைக்குக் கூடப் பள்ளியில்
ஒதுங்காதவன் மாபாணன். பார்ப்பதற்கு கட்டு-மஸ்தாக ஆஜானுபாஹுவாக இருந்தான். அவனது இரட்டை
நாடித் தோற்றத்தைக் கண்டதும் ராணுவ அதிகாரியோ என்றுதான் எவரும் எண்ணுவார்கள்.
பிரசவிக்கத் தயாராக இருந்தாள் அந்த நிறைமாதக்
கர்பிணி பூங்குழலி. யாருமற்ற அனாதையாய், தனி மரமாய் நின்றாள் அவள். தன் தலைப் பிரசவத்தைச்
சுயமாய்ப் பார்த்துக் கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தாள். தமிழச்சியின்
அசாத்தியத் துணிவு அவளிடம் தெற்றெனப் பளிச்சிட்டது.
மத, இன, மொழிவெறியின் உச்சக் கட்டமாக, ஊட்டமும்
வனப்புமிக்க கர்பிணிகளைச் சின்னாபின்னமாக்கிய கடந்தகாலக் காம-வெறியாட்டத் தலைப்புச்
செய்திகளெல்லாம் மனதில் ஒன்று திரண்டு அவளை மிரள வைத்தது.
மிரட்சியின் விளைவாய், வியர்வை அருவியாய்க்
கொட்டியது அவளுக்கு. இதயம் பன்மடங்கு அதிகமாய் ‘லப்டப்’பியது. அனற்புயலாய் வீசியது சுவாசம்.
சிங்கத்தை மிக அருகில் கண்ட புள்ளி மானாய்
மிரண்டாள். எங்கு ஓடி எப்படித் தப்பிப்பதென்று யோசித்தது மனது.
அனிச்சையாக பூங்குழலியின் கைகள் இரண்டும்
சேர்ந்து கூப்பிக் கொண்டது. தொழுது யாசித்தது.
‘என்னை விட்ரு...!’- என்று கைக் கூப்பிக் கதறித் தொழுத நங்கையைப் பார்த்து ரசித்து, “ஆஹா, உன் கூப்பிய
கையைப் பார்க்கும்போதே, சற்று நேரத்தில் மலரும் தாமரை மொட்டாய் மினுக்குகிறதே..!” என்று இளித்தபடி அந்தத் தாமரை மொட்டை கசக்கிப் பிழிந்துவிட்டு சக்கையாய் தூக்கியெறிந்த
ராணுவ அதிகாரிகளின் இழிசெயல்களைப் பற்றி கேள்விப்பட்டவன்தான் மாபாணன்.
‘தன்னையும் அப்படிப்பட்டதொரு காம வெறி பிடித்த
அதிகாரியாக நினைத்துவிட்டாளே இந்தக் கர்பிணிப் பெண்?’- வருத்தமாக இருந்தது அவனுக்கு.
இப்படிப்பட்ட அராஜகங்களைக் கண்டித்து நடத்திய
போராட்டங்களும், அதில் போராளிகள் கன்னி வெடிகளில் சிக்கி மாண்ட கதைகளெல்லாம் நிழற்படம்போல்
தோன்றி அவளை மேலும் மேலும் பலஹீனப்படுத்தியது.
எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் என்ற வகையில்
இருந்தது தேசம். எந்த நேரம் எந்தத் திக்குத் திசையிலிருந்து எந்தப் பகுதியில், எந்த
செல்’ விழுந்து என்னென்ன சேதங்கள் ஏற்படுமோ? எத்தனை உயிர்கள்
பலியாகுமோ...?;
இலக்கற்றுத் தப்பியோடும்போது எந்தப் பாதையில்
பதிக்கப்பட்ட கன்னிவெடி எத்தனைபேரை பலிகொள்ளுமோ?;
இப்படியெல்லாம் மனசு முழுதும் திடுக்காட்டம்
பரவ மயங்கிச் சரிந்தாள் அவள்.
தமிழர்களின் வாழ்வா சாவாப் போராட்டங்கள் அனைத்தையும்
அறிந்தவன்தான் மாபாணன். இத்தனை வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நடுவிலும் வாழ்வின் வசந்தங்களை
அனுபவித்ததற்குச் சாட்சியாய் நின்ற அந்தச் சூல் கொண்ட நங்கையைக் கண்டுப் பெருமிதம்
கொண்டான் மாபாணன்.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதில்
நிபுணர்களாயிருந்தார்கள் காய்ந்து கிடக்கிற ராணுவ அதிகாரிகள். பயிர்களை மேய்கிற வேலிகள். தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன் கீழ் பணியாற்றும்
ஊழியர்களை மிரட்டி அவர்கள் மனச்சாட்சியை அழித்து தங்களின் சட்டத்தை, தர்மத்தை மீறிய
செயல்களுக்கு அவர்களைக் காவல் வைப்பார்கள்.
“ராணுவ அதிகாரி இந்தக் குற்றத்தைச் செய்தான்…!” - என்று மனசாட்சி உள்ள ராணுவத் தொழிலாளி எவனேனும் சொல்லிவிட்டாலோ, அவ்வளவுதான்.
குற்றத்தை சொன்னவன்மீதே திருப்பி, அதற்கான சாட்சி ஆவணங்களை உருவாக்கி, அந்த நபரை குறைந்தபட்சம்
ராணுவப் பணியை விட்டோ, மேலதிகமாக, உலகத்தை விட்டோ தூக்கிவிடுவார்கள்.
கமிஷன்டு ராணுவ அதிகாரிக்குத்தான் அரசாங்கமும்
துணை நிற்கும். விலைமதிப்பில்லாத மனித உயிரை உதாசீனப்படுத்தும் அரசியல் அவலம் அழகாய்
அரங்கேறும்.
இப்படிப்பட்டச் சூழலில், படிப்பறிவில்லாத,
உடம்மை மட்டும் வளர்த்துக்கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக ராணுவத்தில் தொழில்புரியும்
தொழிலாளிகளும், நமக்கேன் வம்பு என்று இருந்துவிடுதல் இயற்கைதானே...?
மலைப் பிறப்பும்,
மகப்பேறும் மகாதேவனுக்கேத் தெரியாது என்பார்கள். இப்போதோ அப்போதோ என்றுக் கிடக்கும்
கர்பிணி தனக்குத்தானே சுயப் பிரசவம் செய்துகொள்ளத் துணிந்துவிட்டாள். மருத்துவ உதவி
என்று போகலாம்தான். ஏதாவது அதிகாரிகளின் கண்களில் மாட்டிவிட்டால்...?
‘சுயப் பிரசவத்தில் வாரிசு போனாலும், கற்பாவது
மிஞ்சுமே...! தானே இறந்துவிட்டாலும் கற்புடன் இறக்கலாமே...!’ என்று முடிவெடுத்துவிட்டாள் போலும்.
பூங்குழலியின் கணவனும்
ஒரு போராளிதான். பூங்குழலியின் அண்டைவீட்டுக்காரன்தான் அவன்.
இருவர் வீட்டையும் பிரிப்பது நடுவில் நிற்கும்
தட்டி அடைப்புதான். அடைப்பைத் தாண்டி ஒலிக்கும் அவன் காந்தக் குரலை தெளிவாய் காதில்
வாங்குவாள் பூங்குழலி. வீரப்பிரதாபங்களைச் சொல்கையில் மலரும் முக பாவங்களை தட்டியிடுக்கு
வழியாக, பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து,
பிரமித்துப் பிரமித்து, நாளாவட்டத்தில் மெல்ல மெல்ல அவன் வசமாகி, காதல் செய்து திருமணமே செய்து கொண்டாள் அவள்.
கண்மூடித்தனமான, இனப்பற்றாலும், காட்டுமிராண்டித்தனமான
மதவெறியாலும் மதி மயங்கி, தமிழ்க்குடும்பங்களை சின்னாபின்னப்படுத்தும் இழி சம்பவங்கள்
நடைபெறும்போதெல்லாம், உடனடியாக எதிர்வினையாற்றுபவன் அவன். ராணுவ அதிகாரியின் செயலை
வன்மையாகக் கண்டித்துப் போராடப் போகும்போதெல்லாம், சர்வ அதிகாரங்களும் படைத்த ராணுவம்
கொடுக்கும் குடைச்சல்களையும், அதற்கு முழு ஆதரவு தரும் அரசாங்க இயந்திரங்களின் மனோபாவங்களையும், தன் அப்பாவிடம் சுவாரசியமாகச் சொல்வான் அவன்.
பச்சிளம் குழந்தைக்கு உணவு தேடச் சென்ற அபலைத்
தாயைக் கடத்தி, தாய் சேயைப் பிரித்த கொடுமை.
பாதுகாப்புக்காக என்று சொல்லி முகாமில் தங்கவைத்துக்
கற்பைக் களவாடும் கொடுவினை.
மனைவிக்குப் பாதுகாப்பான கணவனையோ, தாய்க்குப்
பாதுகாப்பான மகனையோ, சகோதரிக்குப் பாதுகாப்பான சகோதரனையோ, கொல்வதும், கடத்தித் தனிமைப்படுத்தப்படுவதுமான
இழி செயல்கள்.
இப்படிப் பலப்பல, காதில் வாங்கியிருக்கறாள்
பூங்குழலி.
வத்தை, சலங்கு, தோணி, வள்ளம், கட்டுமரம்,
டிங்கி, மச்சுவா... போன்ற பல்வேறு படகுகளின் செல்லப் பெயர்களை கேட்கும்போது வியப்பாக
இருந்தது அவளுக்கு.
துண்டு துண்டாக வெட்டிப் போட்ட அவயங்களை அள்ளிக்
கொண்டு வந்த நிகழ்வுகளும், துப்பாக்கிக் கலாச்சாரத்தின் துர்பாக்கியமும் சொல்லி, அவனையறியாமல்
கண்கலங்கி, ‘குமுதினி படகுப் படுகொலை’ பற்றி அவன் விவரித்த
விதமும், விஷயங்களின் கோர்வையும் நெஞ்சைப் பிழிந்தது ;
‘கருப்பு யூலை’ என்றழைக்கப்படும் பேரினவாதிகளின் தாக்குதல்களும், அத்தாக்குதல்களின்போது அவன்
பங்கு பற்றியும் சொன்னபோது, அந்த மாவீரனின் மீது காதல் வந்தது.
இவளின் காதல் கதையை யாரேனும் கேட்டால், ஒத்தெல்லோ
அடிக்கடி வீட்டுக்கு வந்து தன் தந்தையிடம் சொன்ன வீரப் பிரதாபங்களைக் கேட்டுக் கேட்டு மையல் கொண்டு காதல் மணம் செய்துகொண்ட ‘டெஸ்டிமோனா’வின் நினைவு வந்தே தீரும்.
இனக்கலவரங்களைக் கட்டுப்படுத்தவேண்டிய
ஜனநாயக அரசு, அதைத் தூண்டிவிடுவதே நகை முரண்.
‘நம்மவர்’ என்ற அரசின் கீழ்த்தரமான நிலைப்பாடும், வன்முறையும்,
வன்புணர்வும் செய்து ஆக்ரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலத்தில் நின்று தான்தோன்றித்தனமாய் அதிகார துஷ்பிரயோகம்
செய்யும் ராணுவ அதிகாரிகளின் போக்கும், தமிழ்ப் பேதை பெதும்பைகளுக்குமே ஆத்திரத்தை
வரவழைக்குமெற்றால் போராளிகளை பற்றிக் கேட்கவேண்டுமா
என்ன?
போராளிகள் ரகசியமாக ஒன்று சேர்வதும், திட்டமிடுவதும்,
தமிழின எட்டப்பன்களாலும், ‘பி’ டீமாகச் செயல்படும்
சிலப் போலிப் போராளிகளாலும், ராணுவத்திற்குத் திட்டம் தெளிவிக்கப்பட்டு, போராளிகளின்
நோக்கம் சிதைக்கப்படும்.
தட்டிக் கேட்கப் புறப்படும் போராளிகளின் பாதைகளில்
கன்னி வெடிகள் புதைத்தும், பந்தோபஸ்து என்னும் போர்வையில் கண்ணீர் புகைக் குண்டுகள்
வீசுவதும், துப்பாக்கிக் சூடு நடத்துவதுமாய் அதகளப்படுத்தும்போது, வறுமையில் வாடும்
அப்பாவி மக்களால் என்னதான் செய்துவிடமுடியும்.
துப்பாக்கிக் குண்டுகளுக்கும், கன்னி வெடிகளுக்கும்
பலியாகும் போராளிகளைவிட, காணாமல் போகும் போராளிகளின் நிலைதான் மிகவும் பரிதாபம். அவர்களை
எப்படியெல்லாம் சித்ரவதைக்குள்ளாக்குவார்கள் என்பதெல்லாம் இராணுவ ரகசியம்.
அப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில், தமிழர்களின் சொத்துக்களை சூரையாடிய அநியாயங்களையும்,
தமிழினப் பெண்களை கற்பழித்துக் கொன்று குவித்த மனிதநேயமற்றச் செயல்களையும் தட்டிக்கேட்கப்
போனபோதுதான் பூங்குழலியின் கணவன் காணாமல் போனான்.
உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே புதிராய்
இருந்தாலும், “உன் அப்பன் சுத்த வீரண்டா... எந்த கிரகத்துல கொண்டு போய் வெச்சாலும்
வந்துருவான்...!” என்று அந்தக் கர்பிணி தன் வயிற்றில் சிசு சுற்றி வரும்போதெல்லாம்
நம்பிக்கையோடுச் சொல்லிக் கொள்வாள்.
சில சந்தர்ப்பங்களில்
ராணுவ அதிகாரிகள் போராளிகளிடம் வசமாய்ச் சிக்கியதும் உண்டு.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதன் முழுப்பொருளை
இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் காண முடியும்.
அமைதியைக் குலைத்து, இனிய குடும்பங்களின்
சமநிலையைக் கெடுத்துக் குட்டிசுவராக்கும் இது போன்ற அதிகாரிகள், பாதிக்கப்பட்டோர் கைகளில்
அகப்பட்டுவிட்டால் எப்படிச் சின்னாபின்னப்படுவார்கள் என்பதற்கும் சில பல உதாரணங்கள்
உண்டுதான்.
ஆனையிறவுச் சமரின்போது தமிழ்ப் போராளிகளால்
சுற்றி வளைக்கப்பட்ட நேரத்தில், முகாமை விட்டுத் தப்பியோடப்பார்த்த, ராணுவ அதிகாரி,
தமிழர்களுக்காக வைத்த கன்னி வெடியில் கால் வைத்துச் சின்னாபின்னமாகிப் போனது மிகப்
பிரபலமானது.
அந்தச் சம்பவத்துக்குப் பின் கொஞ்ச நாள் வாலை
சுருட்டிக்கொண்டுதான் இருந்தார்கள் அதிகாரிகள். அதோடு போராளிகளை இனம் கண்டு ஒழித்துக்
கட்டினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குளிர் விட்டுப் போனது அவர்களுக்கு.
விழுக்காட்டில் மிகக்குறைந்த இதைப்போன்ற சம்பவங்களால்
பெரிய திருப்பங்கள் ஏதும் ஏற்பட்டுவிடுவதில்லையே…!
மயக்கம் தெளிந்த நிலையில்
“அம்மா... அம்மா...” என்று வலியில் முனகினாள் பூங்குழலி.
எதிரேத் தண்ணீர்க் குவளையுடன் நின்ற அவனைப்
பார்த்தாள். மீண்டும் பயம் கவ்விக்கொண்டது அவளை.
“பயப்படாத...!” - என்ற மாப்பாணனை விநோதமாகப் பார்த்தாள் அந்த நங்கை.
‘நடிக்கிறானா? வன்புணர்வாற்றாமல், மென்புணர்வுக்காக
என்னைத் தயார் செய்கிறானா?’
“பயத்தை விடு தங்கச்சி, நானிருக்கேன்...”
“அவன் சொன்ன உறவுமுறை அவளுக்கு ஒரு நம்பிக்கையைக்
கொடுத்தது. நீ ஆபீசரில்லையாண்ணே...?” - சற்றே தைரியமாகக் கேட்டாள்.
இல்லையென்று தலையாட்டினான் மாபாணன்.
“சர்வே பண்ண வந்தேன். அடுத்தபடியா ராணுவ அதிகாரி
வருவாரு..”
“அய்யோ... அதிகாரி வருவானா...?”
“பயப்படாதே... அம்மே...! அம்மே..” ன்னு புலம்பு. ஆபீசர் வந்தாக்கா, நம்ம இனப் பொண்ணுனு கண்டுக்காத போயிருவான்.”
“தம்பீ...” - அழைக்கும்போது குரல் உடைந்து வந்தது. கண்களும் உடைந்து பாய்ந்தன.
ராணுவத் தொழிலாளியான தன்னை முதன் முறையாக
ஒரு பெண் ‘தம்பீ’ என்று அழைத்ததில் நெகிழ்ந்துபோனான் மாபாணன்.
பிறந்த கனத்திலேயே தாயை இழந்தபின், பாசத்தோடு
தனியாளாய் நின்று வளர்த்த தந்தை இப்படித்தான் தன்னை ‘தம்பீ’ என்று அழைப்பார் என்பதை நினைத்தபோது மேலும் நெகிழ்ந்தான்.
அப்பாவின் சாவு மனதில் திரையிட, அரசாங்க இயந்திரத்தின்மீது
கடும் கோபம் வந்தது.
‘நம் இனம், நம் மதம்,
நம்மொழி என்று பேசும் அரசு யந்திரம் அதே இனத்தின் பிரதிநிதியான என் தகப்பனுக்கு எந்த
வகையில் நன்மை செய்தது?
‘என்னதான் இனம், மொழி, மதம் என்றாலும், பணம்
காசு இருந்தால்தானே ஏறிட்டுப் பார்க்கிறது இந்த உலகம். அன்றாடங்காய்ச்சி, ஏழை என்றறிந்தவுடனே,
எப்படியெல்லாம் அலட்சியம் செய்யப்பட்டார் என் அப்பா..?
மருத்துவ உதவிக்கு எனச் சென்றபோது, வார்டுகள்
எல்லாம் காலியாக இருந்தாலும், வராண்டாவிலல்லவா
கிடத்தினார்கள். முறையான சிகிச்சைகூட அளிக்கப்படவில்லையே...?
இறந்தபின்னும் அடக்கம் செய்துவைக்க ஒரு நாதியில்லையே...!
‘
கடந்துபோன கசப்பான நாட்கள் நினைவிற்கு வந்தன
மாபாணனுக்கு.
“தம்பீ... சாப்டு...!” - எதிரில் தட்டுடன் நின்றாள் அந்த கர்பிணி.
அப்பாவின் சாவுக்குப் பின் பல வருடங்கள் கழித்து,
“தம்பீ... சாப்டு...!” என்ற விளி மகிழ்ச்சியைத்
தந்தது.
சாப்பிட்டான்.
சாப்பிடும்போதே அவள் பேசினாள். “தம்பீ...
என்னை அம்மானு புலம்பாதே, அம்மே..னு புலம்புன்னு சொல்றியே..! தாயும், மகளும்கூடப் பொம்பளைதானே...?”
மாபாணனுக்குச் சுரீர்’ என்று மனதில் குத்தியது.
“அம்மா’ன்னேக் கத்து தங்கச்சி. நான் பாத்துக்கறேன்..!” – என்றான் மாபாணன் உணர்ச்சிப் பெருக்குடன்...
“பக்கத்துலயே இருண்ணே..!” – என்றவள், “இந்தப் புள்ள மூணு மாசமா இருக்கும்போது காணாமப்போன என் புருசனை என்கிட்டேக்
கொண்டுவந்து நீ சேர்ப்பியாண்ணே...?; நோவு அதிகமெடுக்குது..!” - என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். அம்மா அம்மா என்று அரற்றினாள்.
உடன்பிறந்தவனாகவே மதித்து தன்னிடம் உதவி கேட்கும்
அவள் கைப்பிடித்து அந்தக் குடிலில் கிடந்த
கட்டிலில் பாங்காய் அமரவைத்து, தலையணைகளை அண்டை கொடுத்தான்.
“தங்கச்சி.. பெத்து எடு... இதோ வந்துடறேன்...” - அவசரமாக வெளியில் வந்தான்.
பாறை முடுக்கில் வைத்த கன்னி வெடி மூட்டையை
எடுத்துக் கொண்டான். ஆபீசரோடு சர்வே செய்தபோது, அவர் காட்டிய ஆபீசர் வரும் பாதையை நன்கு
உள் வாங்கினான்.
குடிசைக் கதவு திறக்கும் முன், ‘கண்டேன் சீதையைப் போல’ - “பயப்படாதே தங்கச்சி… நான்தான்…!” என்று குரல் கொடுத்தான் மாபாணன். நல்லா பாதுகாப்பு செஞ்சிட்டேன். எதுக்கும் பயப்படாம
பிள்ளையப் பெத்துப் போடு… என்றான்.
“அம்மா... அம்மா... அண்ணே... அண்ணே...” – உரத்துப் புலம்பினாள்.
“வெடிச்சத்தம் ஏதும் கேட்டா பயப்படாதே தங்கச்சி...!” – தட்டிக்கு வெளியிலிருந்து எச்சரித்தான் மாபாணன்.
“நீ இருக்கயில எனக்கென்ன பயம்...?”
தேசப்பாதுகாப்புக்காக இருக்கவேண்டிய ராணுவ
அதிகாரிகள் சேதப்படுத்துவதற்காக முற்படும்போது அவர்களுக்குக் காவலாக இருப்பதை விட ஒரு
அபலைக்குப் பாதுகாப்பாளனாக இருப்பதில் பெருமை அடைந்தான் மாபாணன்.
“டமார்... டமார்...” - கன்னி வெடிகள் வெடித்தன. சிதைக்க வந்த ராணுவ அதிகாரி சிதைந்தான்.
வெவ்வாய் ஓரி முழவாக, விளித்தார் ஈமம் விளக்காக...
மயானத்தில் சீவகன் பிறந்தாற்போல...
கன்னி வெடிச்சத்தமே முழவாக, வெடிப் பிழம்பே
விளக்காக ஏழைக் குடிசையில் பிறந்த மகனிடம் . “மாமாப் பாரு...” என்று அறிமுகப்படுத்தினாள் பூங்குழலி.
இத்தனை நாள் வாழ்ந்த அர்த்தமற்ற வாழ்க்கையிலிருந்து
விடுபட்டு, அர்த்தமுள்ள ஒரு வாழ்வைத் தொடங்கிய மாபாணன் அந்தப் பச்சிளங்குழந்தையை உச்சி
மோர்ந்தான்.
காணாமல் போன தன் மச்சானை விரைவில் கண்டுபிடித்து
அழைத்துவரவேண்டும்,,’ என்ற வைராக்கியம்
மாபாணனுக்குள் எழுந்தது.
అఅఅఅఅఅఅఅఅ
Fact அருமை
ReplyDeleteநன்றி இளங்கோ..
Deleteமிகவும் வித்தியாசமான நடையில், மாறுதலாக தாங்கள் எழுதிய கதை.
ReplyDeleteஎப்படி தாங்களால் இப்படியும் எழுத முடிகிறது என்று நான் ஆச்சரியப்பட்ட கதை. கதை களம், சம்பவங்கள் எல்லாமே நம்மை அந்த இடத்திற்கே கொண்டு செல்கிறது.
தங்களது இந்த கதைக்கு பாராட்டுகள் சார்.
-சின்னஞ்சிறு கோபு சென்னை
👌👌👌
ReplyDelete