155. மாந்த்ரீகம் - (கொலுசு - ஆகஸ்ட் 2024)

 


மாந்த்ரீகம் (சிறுகதை)

ஜூனியர் தேஜ்

(கொலுசு - ஆகஸ்ட் 2024)

விமலாதித்தனுக்குத் தேன்மொழிதான் உலகமே.

சாப்பாடு, தண்ணீர் தேவையில்லை அவனுக்கு. நாள் முழுதும் அவளையேப் பார்த்துக் கொண்டு அமரச்சொன்னால், சந்தோஷமாக அதை நிறைவேற்றுவான்.

அவள் நின்றாலும், குனிந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும் அதில் ஏதோ ஒரு நாட்டிய முத்திரைப் பதிந்திருப்பதாய்த் தோன்றும் அவனுக்கு. அவளைப் பார்க்கப் பார்க்க உடலும் உள்ளமும் பரவசமடைவான்.

காரணம் .. காதல்…

காதல் காதல் காதல்... காதல் போயின் சாதல் சாதல் சாதல்.. என்பதுதான் எத்தனை உண்மை. அதுவும் தேன்மொழியைப் போல அழகி தன் மேல் வைத்திருக்கும் காதலை நினைத்தபோது இறக்கைக் கட்டிப் பறந்தான்.

“தேன்மொழி... தேன்மொழி... என்று இருபத்திநாலு மணிநேரமும் விமலாதித்தனின் நாடி நரம்புகளெல்லாம் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.

தேன்மொழி என்ற பெயரே, மலைத்தேனாய் சுவைக்கும் அவனுக்கு.

***

ண்டிக்காரச் சந்து இறக்கத்தில் இலக்கற்று நின்ற தருணத்தில், தேவதைபோல் எதிரில் வந்து நின்றாள் தேன்மொழி. அவனிடம் காதல் அறிவித்த கணத்திலிருந்து சரியாக நானூறு நாட்கள் தேன்மொழியின் அருகாமையில், அன்பில், அளவலில், அருகில், அஸ்மானகிரியில், அணைப்பில், கிடந்துவிட்டான்.

இந்த நானூறு நாட்களும் அவன் அவனாய் இல்லை. பூலோகத்தில்தான் இருக்கிறோமா, இருப்பது சொர்க்கத்திலா..? என்று சில சமயங்களில் தோன்றும் அவனுக்கு. சொர்க்கம்தான் என்று தீர்மானம் செய்துகொள்வான்.

வாத்ஸ்யாயனரின் காம சூத்ரம் வெறும் அரிச்சுவடிதான் என்பதை விமலாதித்தனால் மட்டுமேச் சொல்ல முடியும்.

***

நானூராவது நாள்.

அஸ்மானகிரியில் தேன்மொழி, தேன்மொழியையே இறுக அணைத்துக் கொண்டே, ஆவேசமாய்ப் புரண்டாள்.   அவள் அழகை அவளே அள்ளி அணைக்கும் காட்சியை அன்றுதான் முதன் முதலில் கண்டான். களித்தான் விமலாதித்தன்.

தேன் மொழியின் உடல் முழுதும் தெப்பலாய் நனைத்திருக்கக் கதறினாள். என்ன செய்வதென்று தெரியவில்லை விமலாதித்தனுக்கு. தெருவில் ஓடி, வைத்தியரை அழைத்து வந்தான்.

நாடி பிடித்துப் பார்த்த வைத்தியர், மாரடைப்பு என்றார். அவசரமாய் அவளை மருத்துவமனைக்கு அழைத்துப் போகவேண்டும் என்றார்.

வாகனம் ஏற்பாடு செய்யப் பரபரத்தான் விமலாதித்தன். அதற்குள் தன் வாகனத்தை அனுப்பிவிட்டான் எமதர்மராஜன். உயிர் மகிஷ வாகனத்திலேறிப் போய்விட்டது. உடல்... தேன்மொழியின் பூத உடல் மட்டுமே ஒய்யாரமாய்ப் படுத்துக் கிடந்தது.

***

ப்படி ஒய்யாரமாய்ப் படுத்த நிலையில், கண்களாலும், முகக் குறிப்புகளாலும், கை அசைப்பாலும், தன்னைத் துவம்சம் செய்யத் தூண்டித் துவளும், தேன்மொழி. தன்னைத் தூண்டாமலே துவண்டுக்கிடப்பதைக் கண்டு நெக்குருகினான். தன் தாங்கவொணாத் துக்கத்தைக் கண்ணீரில் கரைத்தான். அந்த இறுதிகட்ட ஒய்யாரக் காட்சியை மாற்றக் கூட இல்லை. பார்த்துக் கொண்டே இருந்தான்.

சந்தேகத்துக்கு மற்றொரு முறை நாடி பார்த்துவிட்டு, “சாரி.. என்று சொல்லியபடி விமலாதித்தனின் இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்தார் மருத்துவர்.

அக்கம் பக்கத்தாருக்குச் செய்தி பரவ, வந்தவர்கள் உதவியுடன், தேன்மொழியைக் கட்டையாய் கிடத்தினார் மருத்துவர். முதலுதவிப் பெட்டியிலிருந்து ‘காஸ்துணியைக் கிழித்துக் கை, கால், தாடை அனைத்தையும் முறையாய் கட்டினார்.

இதையெல்லாம் ஒரு சவம் போலப் பார்த்துக் கொண்டிருந்தான் விமலாதித்தான். யார் யாரோ வந்தார்கள். என்னென்னவோ சொன்னார்கள். எதை எதையோ கேட்டார்கள். எதுவும் மனதிலோ மூளையிலே ஏறவேயில்லை.

***

விறகுகளும் வரட்டிகளும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு, வைக்கோல் கூளங்களை இறைத்தப் படுக்கையில் தேன்மொழியைக் கிடத்தி, மூடியிருந்த சிதையின் முன் விமலாதித்தனை நிறுத்தி, அவன் கையில் தீப்பந்தத்தைத் தந்தது கூட விமலாதித்தனுக்குக் கனவு போல இருந்தது.

சுயநினைவற்றுக் கிடந்த விமலாதித்தனைத் தட்டி எழுப்பி அவன் கையில் தேன்மொழியின் அஸ்தி அடங்கிய கலயத்தைக் கொடுத்து, காவிரியாற்றில் கரைக்கவைத்தபின்னும் தேன்மொழியின் இறப்பை நம்பமுடியவில்லை அவனால்.

***

நானூறு நாட்கள் தேன்மொழியோடு வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் விமலாதித்தனை வாட்டி எடுத்தன.

அஸ்தி கரைத்த பிறகு “அய்யோ... மீண்டும் அந்த வீட்டுக்கா..?  - எங்கள் படுக்கையறை, எங்கள் அஸ்மானகிரி மஞ்சம், எங்கள் பட்டு மெத்தை, எங்கள் திண்டுக்களும் தலையணைகளும் ரஜாய்களும், இன்னும் இன்னும் என்னனென்னவோவெல்லாம், சுற்றிலும் கண்ணாடிக் கதவுகளின் பின் அமர்ந்துத் தலைக்காட்டுமே, தேன்மொழியின் வண்ண வண்ண உடைகளும், உள்பாவாடைகளும்... அவளின் உயிர்த்துடிப்பை நினைவூட்டுமே..? இதையெல்லாம் என்னால் தாங்க முடியுமா..? மறுகினான், உறுகினான் விமலாதித்தன்.

***

விமலாதித்தனைத் தாங்கிப் பிடித்தபடியே வந்தார் பக்கத்து வீட்டுக்காரர்.

‘தேன்மொழியின் ஒரு சாய்த்தத் தலையைத் எப்போதும் தாங்கும் இந்த நெஞ்சுக் கூட்டிலிருந்து உயிர் விலகிவிடாதா? தன் ஆவியும் அவள் ஆவியோடு இணைந்துவிடாதா..? என்று ஏங்கினான். இப்படியெல்லாம் என்னென்னவோ ஓடின விமலாதித்தனின் மனசில்.

***

வீடெல்லாம் அலசி விட்டிருந்தார்கள்.

ஆங்காங்கே தேங்கிக் கிடந்த அலசல் தண்ணீர் திட்டுக்களில் தேன்மொழி பளிங்கு போல் சிரித்தாள். ஆங்காங்கே தண்ணீர் காய்ந்தும் காயாமல் கிடந்த தரையில் தேன்மொழியின் ஆயிரக்கணக்கான அங்க முத்திரைகளைக் கண்டான்.

வாசலில் நின்ற வேப்ப மரத்தில் , அதன் கிளைகளில், இலைகளில், காய்ந்த குச்சிகளில், கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகளின் இறக்கைகளில், அலகுகளில், கண்களில்.. பின்புலமாகத் தெரிந்த மேகங்களில், காம்பவுண்டு சுவற்றில், ஆங்காங்கே காரை பெயர்ந்த சுவர்ப் பொக்கைகளில், தண்ணீர் குழாயில்... இப்படி எங்கெங்கும் தெரிந்தாள் தேன்மொழி.

***

ப்படியோச் சமாளித்து வீட்டினுள் அழைத்துச் சென்று, படுக்கையறையில் போட்டிருந்த சாய்வு நாற்காலியில விமலாதித்தனை அமரவைத்தாயிற்று.

கண்ணாடிக் கதவுக்குப் பின்னாலிருந்த புடவைகள் விமலாதித்தன் கண்களில் ஊடுறுவின. வெளியில் கிளம்பும் முன் இதுவா..? அதுவா..? என மாறி மாறி எடுத்துக் கடைசியில் ஒன்றைத் தெர்ந்தெடுத்துக் கட்டுகிறாள்.

“ப்ளீட்ஸ் வை விமல்.. என வழக்கம்போல வார்த்தைகளில் தேன் குழைத்து அழைக்கிறாள் தேன்மொழி.

ஆசையோடு, ஆவலாதியாய் எழுந்து போகிறான் விமலாதித்தன். வெறுமையில் விக்கித்து நிற்கிறான். பிரமை எனத் தெரிகிறது.

சோர்ந்து மீண்டும் அமர வரும்போது பார்க்கிறான் அந்த முகம் பார்க்கும் கண்ணடியை.

***

தேன்மொழியின் முகத்தை எத்தனை ஆயிரம் முறை உள்வாங்கிப் பிரதிபலித்தக் கண்ணாடி இது.

உள்வாங்கியதை தேக்கி வைத்திருக்கும் சாமர்த்தியம் இந்தக் கண்ணாடிக்கு இல்லையே..?

அய்யோ, வெளியில் கிளம்பும்முன், முகத்தையும், முழு உருவத்தையும், இப்படியும் அப்படியும் திரும்பித் திரும்பி மாறி மாறிப் பார்த்துக் கொள்வதும், ஒப்பனை செய்துகொள்வதும், பின்னால் நிற்கும் விமலாதித்தனுக்குக் கண்ணாடியின் மூலமாக காதல் கணையை வீசுவதும், கண்சிமிட்டுவதும்... நினைவில் எழ, கனவாய்போன காதலியை நினைத்துக் கதறினான்.

***

“நீங்க சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.. எதுனாச்சும் சாப்பிடுங்க.. உணவைத் தட்டில் வைத்துக் கொண்டுக் கெஞ்சினார் அடுத்த வீட்டுக்காரர். செவி சாய்க்கவில்லை விமலாதித்தன்.

“நான் தேன் மொழியோடு பேசணும்.. பேசணும்... என்று அதையே சொல்லிக் கொண்டிருந்தான் விமலாதித்தன்.

“சரி பேசலாம்... மொதல்ல சாப்பிடுங்க.

“பொய் சொல்றீங்க..?

“பொய்யில்லை நிஜம்...

எப்டி?

“மலையாள மாந்திரீகர் இருக்காரு. ஆவிகளோட பேச வைப்பாரு..?

“அவரைக் கூட்டியாங்க சாப்பிடுறேன்..முரண்டு பிடித்தான் விமலாதித்தன்.

***

“உங்கக் காதலி ஆவிகூட பேசலாம்... அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்..என்றார் தாடியும், தாயத்தும், குங்குமப்பொட்டுமாய் எதிரில் நின்ற மாந்திரீகர்.

“ஏற்பாடு பண்ணுங்க..? ஆவல்பட்டான் விமலாதித்தன்.

“இன்னிக்கு முடியாது.. நாளை மறுநாள் பேசவைக்கறேன்.

“ஏன் நாளை மறுநாள் எனத் தள்ளிப் போடுகிறீர்கள்..? இன்றே இப்போதே பேசவேண்டும்..

“சொன்னால் புரிந்து கொள்ளுங்கள். நாளை மறுநாள் அமாவாசை. பருவ நாள். இந்த நாளில்தான் ஆவிகள் தடையின்றி உலவும். என்னை நம்புங்க. இப்போ சாப்பிடுங்க..

மாந்திரீகரை மலையாய் நம்பினான். சாப்பிட்டான். இரண்டு தினங்கள் இரண்டு நொடிகளாய்க் கடந்தன.

***

மாவாசை சாயரட்சையில் மாந்திரீகர் வந்தார். தரையில் யந்திரம் போட்டு பூஜைகள் தொடர்ந்தார். நள்ளிரவு வரை பூஜைகள் நடத்தினார்.

“மொத்தம் மூணு ஆவிங்ககிட்டேப் பேசலாம். மூணாவதா உன் காதலியோட ஆவியைத் தேர்ந்தெடுத்துக்க..என்ற மாந்திரீகர், பல மணிநேரங்கள் பூஜை போட்ட இடத்தில் விமலாதித்தனை அமர்த்தினார். சில மந்திர உச்சாடனங்களை அவன் காதுகளில் ஓதினார்.

நடுநிசியில், விமலாதித்தனை மட்டும் தனியே விட்டு, கதவை மூடிக்கொண்டு மாந்திரீகர் வெளியேறிவிட்டார்.

***

ன் வாழ்நாள் முழுதும் பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து, ஜனங்களுக்கெல்லாம் நன்மை செய்து, புகழின் உச்சியில் இருக்கும்  நரசிம்மய்யாவின் ஆவியை முதன் முதலில் மனப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்தான்.

மாந்திரீகர் வைத்திருந்த பனை ஓலையில் நரசிம்மய்யா.. என்று மந்திர மையால் எழுதினான்.

நரசிம்மய்யாவின் ஆவி விமலாதித்தன் முன் வந்தது.

***

“ மகா பாவியான என்னிடம் என்ன பேசப் போகிறாய். நான் மிகவும் கீழ்த்தரமானவன். ஜனங்கள் என்னை பரிசுத்தமானவன் என்று  நம்பியதால், வெளியில் அந்த நம்பிக்கை உடையாமல் கடைசீ மூச்சு வரை காப்பாற்றினேன்.. பொல்லாத பெண் பாவங்களை செய்திருக்கிறேன்..என் ஆவி இப்போது இருப்பது நரகத்தில். நரகவாசியிடம் உனக்கென்ன வேண்டுதல் சொல்...

அதிர்ந்தான். ஏமாற்றுக்கார உலகம்.. என்று அடிக்கடிப் பலர் சொல்லக் கேட்டிருந்த விமாலாதித்தன் இப்போது நேரில் பார்க்கிறான். இதற்கு மேல் பேச என்னதான் இருக்கிறது.. ஒன்றுமேயில்லை. அவசரமாய், நரசிம்மய்யா என்ற பெயர் எழுதிய ஓலையைப் பொசுக்கினான். ஆவி அகன்று போனது.

***

டம்பெல்லாம் வியர்த்துவிட்டது விமாலாதித்தனுக்கு. கைகள் நடுங்க நடுங்க ‘செம்பிராட்டி பெயரை அடுத்த ஓலையில் எழுதினான்.

“காலம் முழுதும், பல்வேறு நோயாளிகளுக்குச் சேவை செய்த செம்பிராட்டியம்மா..” - என்று பேச்சைத் தொடங்கினான் விமலாதித்தன்.

எடுத்த எடுப்பில், “விமலாதித்தா.. அதையெல்லாம் நம்பாதே. சேவை என்கிற போர்வையில் நான் செய்ததெல்லாம் பித்தலாட்டம்.. என்றது செம்பிராட்டியின் ஆவி. அவள் செய்த அனைத்துப் பித்தலாட்டங்களைப் பட்டியலிட்டாள். சர்வாங்கமும் நடுங்கினான் விமலாதித்தன்.

அவசர அவசரமாய் அந்த ஓலையையும் பொசுக்கிவிட்டான்.

***

அச்சத்தில் உதறலெடுத்தது விமலாதித்தனின் உடம்பு.

அடுத்த ஓலை அவன் முன் இருந்தது.

“அய்யோ.. வேண்டாம்... வேண்டாம்... – கிலி பிடித்தது விமலாதித்தனுக்கு.

மூன்றாவது ஓலையைக் கையில் எடுத்தான்.  எந்தப் பெயரையும் எழுதாமலே அதைக் கொளுத்தினான். அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் விமலாதித்தன்.

***

Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

162. ஆயக்கால் (தினமணி கதிர் (24.11.24)

153. மனிதம் (காற்றுவெளி - ஆடி 2024)